கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 12,711 
 

அப்பாவுக்கு முஸ்லீம்களைப் பிடிக்காது. அதற்கு ராமரோ, பாபரோ காரணமல்ல. அப்பா புதிதாக வீடு கட்டுகிறபோது, தெருவை மறித்து, சாக்கடையை அடைத்து அட்டூழியங்கள் செய்தபோது, சித்திக் பாய் தான் அதைக் கண்டித்தார். வேறு யாராவது நியாயம் கேட்டிருந்தால், அப்பா மல்லுக்கு நிற்பார். அல்லது அப்போதைக்கு மௌனமாக இருந்து விட்டுப் பிற்பாடு தனது “ஆட்களிடம்“ சொல்லி நியாயம் கேட்ட ஆளை ஒரு வழி பண்ணி விடுவார். சித்திக் பாய் அப்படி ஏதுவும் செய்ய இயலாத தோற்றத்தில் இருந்தார். அவரது உடையும், தாடியும் வெண்மையில் ஒன்றோடொன்று போட்டி இட்டது. இளஞ்சிவப்பு நிறமும், கருணை ததும்பும் கண்களும், கன்னங்கரிய கூட்டுப் புருவங்களும், நெற்றியில் தொழுகை தந்த தடமும் அப்பாவை அடக்கி விட்டது. தொழுகை செய்த தடம் பிறை போல இருந்தது பேரழகு இதையெல்லாம் விட, சித்திக் பாய் அப்பாவை விடப் பணக்காரர் என்கிற காரணமே அப்பா அடங்கி விடப் போதுமானதாக இருந்தது.

தன் வஞ்சகமெல்லாம் சாதுர்யமென்றும், பொய்களெல்லாம் உபாயங்களென்றும் பொருத்திக் கொண்டார் அப்பா. அவருக்குள்ளேயே பொய்களை உருவாக்குவதில் நடந்த போட்டிதான் அவரை வாழ்வில் வெற்றி பெற வைத்திருக்கிறது என்று திடமாக நம்பினார். எங்களைத் தேடி நண்பர்கள் யார் வீட்டுக்கு வந்தாலும், அவர்களைப் பற்றிய முழுமையான ஆய்வை அப்பாவே செய்வார். “உங்க வீடு எங்க இருக்கு?“ “சொந்த வீடா, வாடகை வீடா?“ “உங்கப்பா என்ன வேலை பாக்குறாரு“ “மொத்தம் எத்தனை குழந்தைங்க?“ “என்ன ஆளுங்க?“ “சொந்த ஊரு எது?“ கேள்விக்கான விடையில் தான் நட்பு தீர்மானிக்கப்படும். நண்பர்கள் ஏழைகளாக இருந்து விட்டால், “பத்துப்பைசா பெறாத நாதாரிங்க கூடல்லாம் இது சேருது பாரு“? என்று அம்மா மீது விழுந்து புடுங்குவார். வசதியான குடும்பத்துப் பையன்களுக்கு உபசரிப்பும், கரிசனையும் வீடே மலைத்துப் போகும். எங்கள் நண்பர்கள் யாரும் முஸ்லீமாக இருக்கக் கூடாது. வீட்டில் யாரும் லுங்கி கட்டக் கூடாது. இதில் அப்பா சமரசமே செய்து கொண்டதில்லை. சித்திக் பாய் மீதான அவரது கோபம், முஸ்லீம்களின் மீதான கோபமாகத் திரிந்திருந்தது. முஸ்லீம்களின் மீதான கோபமோ, லுங்கியின் மீதான கோபமாகச் சிதைந்திருந்தது.

அப்பா, அண்ணா, தம்பி என மூன்று பேருமே நாலு முழ வேட்டிக்குப் பழகி இருந்தார்கள். எனக்கோ, அது எப்போதும் ஒரு சவாலாகவே இருந்தது. இரவெல்லாம் அது விலகாமல் கவனமாக இழுத்து விட்டுக் கொண்டே இருப்பதும், விடியற்காலையில் அது ஒரு புறமும், நான் ஒரு புறமுமாகக் கிடப்பதும் வாடிக்கையாகி விட்டது. என் உறுதிமொழிகளை ஒருநாலு முழ வேஷ்டி பொருட்படுத்தவேயில்லை. அண்ணனும், தம்பியும் போட்ட இடத்தில், போட்டபடி படுத்துக்கிடப்பார்கள். அம்மா இன்னும் விசேஷம். ஒட்டுகிற பொட்டு அல்ல வைத்த பொட்டு வைத்தது மாதிரி எழுந்திருக்கிற மகாலட்சுமி. அப்பா சொல்லி வைத்தது மாதிரி இரண்டு முறை புரண்டு படுப்பார். இதுவும் போதாதென்று, எந்தக் கோடையிலும் ஒரு போர்வையை மார்புவரை போர்த்திக் கொள்கிற பழக்கமும் வீட்டில் எல்லோருக்கும் இருந்தது.

எனக்குப் போர்வை ஆகாது. வியர்த்துக் கொட்டிவிடும். மொத்தத்தில், லுங்கியைப் போல மானம் காக்கிற ஆடை எதுவுமில்லை. இஸ்லாம் இந்தியாவுக்குக் கொண்ட வந்த அற்புதங்களில் லுங்கியும் ஒன்று. பாவாடைக்கும், லுங்கிக்கும் பெரிய வேறுபாடுகள் கிடையாது. பெண்களின் கற்புக்குக் காட்டிய தீவிரத்தை தமிழர்கள் ஆண்களின் கற்புக்குத் தரவில்லை என்பது ஒப்புக் கொள்ளப்படத்தான் வேண்டும். லேசாக அழுக்குப் பட்டாலும் வேஷ்டி காட்டிக் கொடுத்துவிடும். லுங்கி அப்படியில்லை. இரண்டொரு நாள் காப்பாற்றும். தண்ணீர்ப்பஞ்சம் தலை விரித்தாடுகிற ஊரில் இருந்தால் தான் இதன் அருமை தெரியும்.

பகலில், காலேஜ் ஹாஸ்டலில் நண்பர்களின் அறையில் ஓரிரு முறை லுங்கி கட்டிக் கொள்ளக் கிடைத்திருக்கிறது. அதெல்லாம் போதுமானதாக இல்லை. ஒரு இரவு முழுவதும் கட்டிக் கொண்டு உருளுவதற்கு மனசு ஏங்கிக் கிடந்தது. இரவில், வெளியில் தங்குவதற்கு அப்பா ஒரு நாளும் அனுமதிப்பதேயில்லை. பொழுது சாயத் துவங்கியதும், பிள்ளைகள் மூன்று பேரும் வீடு திரும்பி விட வேண்டும். ஒரு விலங்கின் தவிப்பும், பறவையின் பதற்றமும் அவருக்குள் மீதமிருந்தது. எல்லாக் குற்றங்களும் இரவில் மட்டுமே நிகழ்வதாக அப்பா நம்பினார். அப்பாவின் மூர்க்கங்களுக்குப் பின்னே ஒரு குழந்தைத்தனமும், நிதானங்களுக்குப் பின்னே ஒரு பசித்த விலங்கும் இருந்தது புரிந்து கொள்ளவே இயலாத முரண். சாப்பிடுகிற போது கூட்டையோ, பொறியலையோ சோற்றுக்குள் வைத்துப் புதைத்து மறைத்துச் சாப்பிடுகிற பழக்கம் அப்பாவுக்கு இருந்தது. அவர் என்ன நினைக்கிறார் என்பதைக் கண்டறியவே முடியாது, என்பதற்கு அம்மா அதைத் தான் உதாரணமாகக் காட்டுவாள். ஒரு இரவு கூட, எங்களைப் பிரிந்து அப்பா இருந்ததேயில்லை.

வேலை கிடைத்து, சாத்தூரில் போய் வேலைக்குச் சேருகிற வரை இந்த நிகழ்ச்சி நிரலில் மாற்றமே இல்லை. சாத்தூருக்கு வந்த முதல் மூணு நாளும் நிஜாம் லாட்ஜில் கூடத் தங்கி இருந்து, தங்க வைப்பதற்கு இடம் தேடி, ஊரெல்லாம் விசாரித்து விட்டு, மணி சங்கர் பவனில் தங்க வைத்தார் அப்பா. வீடு என்றும் ஒப்புக் கொள்ள முடியாத, லாட்ஜ் என்றும் நிராகரிக்க முடியாத அமைப்பில் இருந்தது மணி சங்கர் பவன். எதிர் எதிரே முகம் பார்த்தது மாதிரி கிழக்குப் பார்த்து ஆறும், மேற்கு பார்த்து ஆறுமாக பன்னிரெண்டு குட்டி வீடுகள். வேறு வேறு நிறுவனங்களில் வேலை பார்க்கிற, எல்லா வயது ஆண்களும் குடியிருந்தார்கள்.

தெற்கு வடக்காக நடந்தால், எல்லா வாசலுக்கும் அழிக்கம்பிகள் போட்டு, சின்னச் சிறைச்சாலை போல இருந்தது தான் அப்பாவைக் கவர்ந்திருக்க வேண்டும். மூணு நாளும், அப்பா புத்திமதிகள் சொல்லிக் கொண்டேயிருந்தார். சாயங்காலம் ஆபீஸ் முடிந்ததும் அறைக்குத் திரும்பி விட வேண்டும். இரவில் எங்கும் திரியக்கூடாது என்பதை, முதலிலும் கடைசியிலும் மறக்காமல் சேர்த்துக் கொள்வார். முதல் சம்பளத்திற்கு இன்னும் இருபத்தி மூன்று நாட்கள் இருந்ததால் கைச் செலவுக்கு காசும் கொடுத்தார். “நீ சம்பாதிச்சு என்னைக் காப்பாத்த வேணாம், உன்னைக் காப்பாத்திக் கிட்டாபோதும்“ என்று எல்லா அப்பாக்களும் சொல்லும் வார்த்தையைக் கடைசியாகக் கண் கலங்க சொல்லி விட்டு, ஊருக்குப் போனார்.

முதல் சம்பளம் வாங்கியதும் அம்மா அப்பாவுக்கு அனுப்புவது, குல தெய்வத்திற்குக் காணிக்கை போடுவது போன்று ஒவ்வொருவருக்கும் ஒரு நேர்த்திக் கடன் இருக்கவே செய்யும். எனக்கானால், ஒரு லுங்கி வாங்க வேண்டும். அப்பா கொடுத்த காசில் லுங்கி வாங்க ஒப்பவில்லை. சம்பளம் வாங்கியதும், வெளிநாட்டுச் சாமான்கள் விற்கிற அந்தோணி கடையில், தொண்ணூறு ரூபாய்க்குப் பாலியஸ்டர் லுங்கி வாங்கி, இந்தியன் டெய்லரிடம் கொடுத்து மூட்டி, அறைக்கு வந்து குளித்து விட்டு லுங்கி கட்டிக்கொண்ட சுகத்தை, எழுத்தில் கொண்டு வர முடியாது.

கோழி முட்டையின் ஓட்டை ஓட்டினாற்போல இருக்கும் மெல்லிய சவ்வாக லுங்கி வழுக்கியது. வெளிநாட்டு சோப்புகள், வாசனைத் திரவியங்கள் பட்டதால், லுங்கிக்கு ஒரு வசீகரமான மணம் வேறு இருந்தது. இரண்டு நாளும் ஆபீஸ் நேரம் போக, மீதி நேரமெல்லாம் லுங்கிக்குள் தான் இருந்தேன். துவைக்க மனமில்லை. மெஸ்ஸுக்குச் சாப்பிடப் போகிறபோதெல்லாம் எல்லோரும் அதைப் பார்ப்பதாகத் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை. ஒன்றிரண்டு பேர் தொட்டுப் பார்த்து, விலையும் கேட்டது ரொம்ப நிறைவளித்தது. லுங்கிக்குள் படுத்திருந்ததும், அது விலகும் என்கிற கவலையின்றி உருண்டு படுத்து உறங்கியதும் சுயசரிதையில் எழுத வேண்டிய செய்திகள். எவ்வளவு உருண்டு படுத்தும், மானம் காத்தது லுங்கி. வேட்டிய கட்டிய நினைப்பில், கைகள் அதை இழுத்து விடப் போவதும், பிறகு மெல்லிய புன்னகையுடன் விரும்பிய திசைக்கு உருண்டு படுத்துக் கொண்டதும், இரண்டு இரவுகளிலும் நடந்தது.

மூன்றாவது நாள் காலை லுங்கியைத் துவைத்தேன். முறுக்கிப் பிழியவில்லை. பாலியஸ்டர் துணிகளை முறுக்கிப் பிழியக் கூடாது என்கிற நடைமுறை விஞ்ஞான அறிவு எனக்கும் இருந்தது. அதிகம் வெயில் படாத இடமாகத் தேர்ந்தெடுத்து, காயப்போட்டேன். மூன்று கிளிப்புகளைச் சரியாக இடைவெளி கொடுத்து மாட்டினேன். ஆபீஸில் இருந்த போது, காற்றிலாடியபடி அது காய்ந்து கொண்டிருக்கும் காட்சி இரண்டொரு முறை கண்ணில் தெரிந்தது. மாலையில் அறைக்குத் திரும்பியதும் மொட்டைமாடிக்குத் தான் போனேன். போட்ட இடத்தில் லுங்கி இல்லை. எல்லா இடத்தில் தேடியும், எல்லோரிடமும் கேட்டும் லுங்கி கிடைக்கவேயில்லை. மணி சங்கர் பவனில் இருக்கிற எல்லோர் மீதும் சந்தேகம் வந்தது. தொலைந்தது நமது பொருளாக இருந்தால், யாரையும் சந்தேகிக்கிற அளவு புத்தி தாழ்ந்து போய் விடுகிறது. லுங்கி தொலைந்ததை விடவும், இந்த எண்ணம் மிகுந்த துயரமளித்தது. மறுநாள் வேறு ஒரு லுங்கி வாங்கினாலும், அந்த லுங்கியை மறக்கவே முடியவில்லை.

சாத்தூருக்கு வந்த புதிதில், பெருமாள் வாத்தியார் தான் மணி சங்கர் பவனில் இடம் பிடித்துக் கொடுத்தார். அப்பாவுக்கு யார் மூலமாகவோ அறிமுகம். வாத்தியாரிடம் நெருங்கிப் பழக வேண்டாம் என்று அப்பா சொல்லியிருந்தார். ஏதாவது அவசரம், தேவை என்றால் மட்டும் அவரைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதும் அப்பா சொன்ன ஆலோசனை. நல்ல உயரத்தில், கம்பீரமாய், செதுக்கப்பட்ட மாதிரியான முகவெட்டுடன், வித்தியாசமான புன்னகையுடன் இருந்தார் பெருமாள் வாத்தியார். அரசியல், இலக்கியம், தத்துவம், பூகோளம், பொருளாதாரம், மதம், சாதி என்று எதைப் பற்றியும் விரிவாக, ஆழமாக, முற்றிலும் புதியதாகப் பேசினார் வாத்தியார். அவரைச் சுற்றி எப்போதும் ஒரு கிடைக்கூட்டம் இருந்து கொண்டே இருந்தது.

ஒரு தாய்க்கோழி எட்டு பத்து குஞ்சுகளுடன் இரை தேடிப் போவது மாதிரி தான் வாத்தியார் வருவதும் போவதும் நடக்கும். அப்பா “சொன்னதற்காகவே“ அவரிடம் நெருங்கிப் பழக ஆரம்பித்தேன். உண்மை ஒளிரும் அவரது சொற்களால், அவர் விதைத்ததெல்லாம் வியப்பட்டும் சித்திரங்கள். ஊருக்கே பொதுவாக ஆறு ஓடினாலும், ஆற்றுக்குள் குளிப்பதற்கு சாதிவாரியாக உறைகள் (ஊற்றுக்கண்) போடப்பட்டிருப்பதை அவரே காட்டினார். தான் சாதி கெட்டவர்களுக்கென்று தனி உறை போட்டிருப்பதையும், “புத்திக்குள்ள சாதி இல்லாதவங்க“ அதுல குளிக்கலாமென்றும் சொன்னார். அந்த ஊரில் மட்டுமே இருந்த நிப்புத் தொழில் பற்றி நிறையப் பேசினார்.

நூற்றுக்கணக்கான நிப்புத் தொழிலாளிகளின் தலைவிதியை பால் பாயிணட் பேனாக்களின் வருகை மாற்றி எழுதி விட்டதையும், ஆறே மாதத்திற்குள் முப்பதுக்கும் மேற்பட்ட நிப்புப் பட்டறைகள் மூடப்பட்டதையும் மெஸ்ஸுக்குப் போகிறபோது காண்பித்தார். போதாக்குறைக்கு, முழுக்க முழுக்க இயந்திரத்தால் செய்யப்படும் மெழுகுத் தீப்பெட்டிகளின் வருகை வீடுதோறும் கையால் தீக்குச்சிகளை அடுக்கி, மருந்து முக்கித் தரும் சிறு தொழிலை பிரித்துப் போட்டதும் ஊரில் நிலவும் வறுமைக்குக் காரணம் என்றார். மழை அறியாத அந்தக் கந்தக பூமியில், ஒரே வருடத்திற்குள் ஆயிரக்கணக்கானவர்கள் வேலை இழந்து, மாற்று வேலையும் கிடைக்காது வீதிக்கு வந்து விட்டதை, அவ்வப்போது நடக்கும் சிறு திருட்டுக்கள் உறுதி செய்வதாக, கண்கள் பனிக்க வாத்தியார் பேசிக் கொண்டேயிருந்தார். லுங்கி காணாமல் போனது கூட இதன் தொடர்ச்சியே என்றும், துணிகள் திருடுகிற அளவு வறுமை வலுத்திருப்பது துயரமளிக்கிறது என்றும் திருகிய குரலில் சொன்னார் பெருமாள் வாத்தியார்.

பதினைந்து நாளாகிறது லுங்கி தொலைந்து. தொடர்ந்த எனது துப்பறியும் வேலைகள் எந்தப் பலனும் தரவில்லை. உலகில் எத்தனையோ சமூக பிரச்சனைகள் இருந்தபோதும், என் லுங்கி தான் எப்போதும் என் புத்தியில் நின்றது. லுங்கியை மறப்பது என் அறிவை விசாலப்படுத்தும் என்பது தெரிந்தும், நினைப்பு நீங்கவேயில்லை. இரவு மெஸ்ஸில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, அதற்குக் கூட வழியில்லாத, வகையில்லாத ஒருவன்தான் அதைத் திருடியிருக்க வேண்டுமென்று பெருமாள் வாத்தியார் சொன்ன கணத்தில், புத்தி மடை மாறி ஓடியது. “எடுத்துக் கொண்டவனே அதை சந்தோஷமாக அணிந்து கொள்ளட்டும்“ என்று ஒரு குரல் எனக்குள் கேட்டது. என் வளர்ப்பிற்கு, வாழ்க்கை முறைக்கு எனக்குள் இருந்து, இப்படியொரு குரல் வந்தது எனக்கே திகைப்பளித்தது. மனதை லேசாக்கி இருந்தது. இரவு உறங்கிப்போன போது லுங்கியின் நினைப்பில்லை. காலையிலும் கூடத்தான். ஆற்றுக்குக் குளிக்கப் புறப்பட்ட போது, பதினைந்து நாட்களுக்குப் பிறகு பாரமின்றி, ஊசலாடாமல், சமநிலைக்கு வந்து நின்றது புத்தி. உடம்பின் கனம் குறைந்து போனது போலத் தெரிந்தது.

ஆற்றுக்குள் இறங்குகிற பாதைக்குப் போன போது, எதிரே மேடேறி வந்து கொண்டிருந்த என் வயதொத்த பையனின் இடுப்பில் மடித்துக் கட்டியிருந்த லுங்கி… என்னுடையது தான். இருவருமே, ஒருவரையொருவர் பார்த்து திகைத்து நின்றோம். கையில் இருந்த வாளியைக் கீழே வைத்துவிட்டு மடித்துக் கட்டியிருந்த லுங்கியைக் கீழே இறக்கிவிட்டு, தலை குனிந்து அங்கேயே நின்றான் அவன். லுங்கி என்னுடையதே தான். கோபம் தலைக்கேற அவனை நோக்கி விரைந்தேன். வாத்தியார் சொன்னது நினைவில் புரண்டது. அருகில் போய், குனிந்து வாளியை எடுத்து அவன் கையில் கொடுத்துவிட்டு, அவனது மெலிந்த தோளை மென்மையாகத் தொட்டு, “லுங்கி உனக்கு நல்லா இருக்கு…“ என்று சொல்லிவிட்டு வேகமாக ஆற்றுக்குள் இறங்கினேன். ஆற்றுக்குள் போகிற பாதை இறக்கமாக இருந்து மேலும் இழுத்தது. எனினும் ஊற்றுக்குப் போகிற பாதை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *