ராஜாப் பல்லி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 13, 2015
பார்வையிட்டோர்: 9,868 
 

ஒற்றைப்பனை மரத்தடி நிறுத்தத்தில் இறக்கி விட்டுவிட்டு, பேருந்து நகர்ந்து விரைந்தது. மனைவி, குழந்தை மற்றும் பைகளுடன் நின்று சுற்றிலும் பார்வையைச் சுழலவிட்டேன். பனைமரங்கள் வரிசையாய் நின்றிருந்தன. இந்தப் பக்கம் நெடுங்கரை; அந்தப் பக்கம் ஊட்டியாணி; பின்னால் சுபத்திரியம்; எங்கு பார்த்தாலும் வரப்புகளில் பனைமரச் செரிவுதான்.
இதில் எந்தப் பனை அந்த ஒற்றைப்பனை? அது இருக்கிறதோ, இல்லையோ அந்தப் பெயர் நிலைத்து நின்றுவிட்டது. ஆறு, வாய்க்கால்களில் தண்ணீர் இல்லாததால் வயலெல்லாம் பொட்டல் வெளிகளாய்க் கிடந்தன. இதே நேரத்திற்குத் தண்ணீர் வந்திருந்தால், இன்னேரம் பச்சைப் பசேல் என்று கம்பளம் விரித்தாற் போல் எத்தனை ரம்யமாய் இருந்திருக்கும்? பெட்டி, பையை மனைவி எடுத்துக்கொள்ள, பையனைத் தோளில் சாய்த்துக் கொண்டு பெரிய பையைத் தூக்கிக் கொண்டு நடக்க ஆரம்பித்தேன்.

ஒற்றையடிப் பாதையில் நடக்க நடக்க என் ஊர் என்ற பெருமையும், ஒட்டுதலும் கூடுதலாய் ஒட்டிக் கொண்டன. வெண்ணாற்றுத் தீரத்திற்கே உண்டான வளமையும், செழுமையும் எங்கள் ஊருக்கு உண்டு. பெருமாள் கோயில், சிவன் கோயில், வேம்படி மாரியம்மன், வெண்ணாற்று மரப்பாலம், திட்டானிமோடு, பெரியகுளம், எங்கள் தெரு; ராஜலிங்கம் மாமா வீடு, அந்த மாமி, அவரது நான்கு பெண்கள், ஒரே பையன் சிவா என்று இருபத்திரண்டு வருடங்களுக்கு முன் மனது குதித்தோடியது.

எங்கள் தெருச் சிறார்களுக்குப் பள்ளி நேரம் போக மீதிப் பொழுது ராஜலிங்கம் மாமா வீட்டில்தான் கழியும். அந்தக் காலத்து நான்கு கட்டு வீடு அவருடையது. மூன்று உள் முற்றங்களும், முற்றத்துக்கு ஒன்றாக மூன்று கிணறுகளும் வீட்டினுள்ளேயே இருந்தன. எங்கள் தெருக் கல்யாணங்களெல்லாம் பெரும்பாலும், அந்த வீட்டில்தான் நடக்கும்.

மாமாவிற்கு நிலம், சாகுபடி, குத்தகை என்று வரவு செலவு அதிகம். நெல்லும் நவதானியங்களும் வதையழியும்; வைக்கோல் போரும், கொட்டில் கொள்ளா மாடுகளும், தென்னந்தோப்புமாய், பெரிய பணணை நிர்வாகம். அந்த வீட்டுப் பெண்கள் எல்லோரும் எங்கள் பிராயத்தை ஒத்தவர்கள். என்னுடனோ, அக்காவுடனோ ஒரே வகுப்பில் வருடத்திற்கொருவர் அவர்கள் வீட்டிலிருந்தும் படிப்பர். அதனால் அவர்கள் வீட்டினுள் எந்தத் தயக்கமுமின்றிச் சென்று வருவோம்.

அபிராமி, அங்கையற்கண்ணி, மங்கையர்க்கரசி, மணிமேகலை. சிவலிங்கம் என்று ஐந்து குழந்தைகள் பெயரும் முறையே அபி, அங்கை, மங்கை, மேகலா, சிவா என்று எங்கள் வசதிக்காகச் சுருக்கி இருந்தன. எங்கள் ஊர் அத்தனைக் கோவில்களுக்கும் பரம்பரை தர்மகர்த்தா மாமாதான். கோயில் நகைகள், ஐம்பொன் சிலைகள் எல்லாம் மாமா வீட்டு இரும்புப் பெட்டகத்தில்தான் பத்திரமாய் இருக்கும்.

விழாக் காலங்களில் கோவிலுக்குக் குழுவாய் வந்து எடுத்துச் செல்வர். திருவிழா முடிந்ததும் திரும்பவும் மாமா வீட்டுக் காப்பகத்திற்கு வந்துவிடும். ஊரில் கரகம், கொப்பரை எல்லாம் முதலில் மாமா வீட்டிற்கு வந்து முதல் மரியாதை பெற்றுக் கொண்டுதான் மற்றவர் வீட்டுக்குப் புறப்படும். ஒரு சொல்லால் ஊரையே கட்டுப்படுத்தும் அந்த ஆளுமை மாமா ஒருவருக்கே சாத்தியம். அந்த மாமி பெயர் யோகாம்பாள். யோகம் யோகம் என்றுதான் பெரியவர்கள் கூப்பிடுவார்கள். சாதுப் பசு போல அத்தனை பதவிசு; பாந்தம், சிரித்த முகம்; பணிப்பெண்ணிடம் கூட அதிர்ந்து பேசமாட்டார்.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலையும் சர்க்கரைப் பொங்கல் நிவேதனத்துடன் வீட்டுத் தெய்வத்தைக் கும்பிடுவார். அப்பொழுது எங்கள் கைகொள்ளாமல் பொங்கலும் சில சமயங்களில் உளுந்துவடையும் சேர்ந்து கிடைக்கும். மாமி பூஜையறைப் படங்களுக்குச் சாம்பிராணி காட்டிய பின் நிலைப்படிகள், பத்தாயம், ஊஞ்சல், பணப்பெட்டி, கோயில் நகைகள் இருக்கும் பெட்டகம் என்று ஒவ்வொரு இடமாக விசிறியால் விசிறியபடி சாம்பிராணிப் புகை காண்பித்து வருவார். நான் தூள் செய்யப்பட்ட சாம்பிராணியைக் கூடவே எடுத்துக் கொண்டு ஓடுவேன்.

சிவா என் பின்னால் சிறு பித்தளை மணியை அடித்துக் கொண்டே வருவான். அன்று எல்லா இடத்திற்கும் காண்பித்த பின், மாமி மாடிப் படிக்குக் கீழ் இருக்கும் ஜன்னல் கதவிற்குப் பின்புறம் எட்ட நின்று தூபக்காலைக் காட்டினார். இதற்கு முன் நான் அந்த இடத்திற்குச் சாம்பிராணி டப்பாவுடன் வந்ததில்லை.

என்னவாய் இருக்கும் என்று எட்டிப் பார்த்த நான் யம்மாடி! என்று அலறிவிட்டேன். ஜன்னல் கதவு, சுவரோடு பொருத்தாமல் முட்டிக் கொண்டிருக்கும் அங்கே சுவரில் முக்கால் முழ நீளத்திற்கு ஒரு பல்லி ஒட்டிக் கொண்டிருந்தது. மாமி அதற்குச் சாம்பிராணிப் புகை காட்டினார். நான் பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன்.

தூபக்காலையும், விசிறி மட்டையையும் என்னிடம் கொடுத்த மாமி, அதன் வால் பகுதிக்குக் கீழே இரு கைகளாலும் சுவரைத் தொட்டு தன் கண்களில் ஒற்றிக் கொண்டார். பின்பு மறுமுறை தொட்டு என் கண்களிலும் சிவா கண்களிலும் ஒற்றிவிட்டார். பின்பு வந்த வழியே திரும்பினோம். என்னா மாமி இவ்ளோ பெரிசா இருக்கு? என்றேன் மாமியிடம்.
இதுதான் ராஜாப் பல்லி. பாக்க பயம்மா இருக்கும்; ஆனா பரம சாது; இது எல்லார் வீட்லயும் இருக்காது. ரொம்ப அதிர்ஷ்டம்பாங்க; இது இருக்கற வீட்ல எல்லா ஐஸ்வர்யமும் நிறைஞ்சு இருக்கும்னு சொல்வாங்க! என்றாள் மாமி.

மறு நாளிலிருந்து எனக்கு இந்த வேலைதான் – ஒரு நாளைக்கு இரண்டு தடவையாவது, மாடிப் படிக்குக் கீழே, ஜன்னலருகில் சென்று, எட்ட நின்று அந்த ராஜாப் பல்லியைப் பார்த்துவரத் தவறுவதில்லை. நீண்ட நாட்கள் வரை அப்பல்லி அதே இடத்தில் இருந்தது. ஒரு சிறு அசைவுகூடக் கிடையாது. என்ன சாப்பிடும்? என்ன குடிக்கும்? எப்படி உயிர் வா-ழ்கிறது? எதுவும் தெரியவில்லை எனக்கு. எங்கள் வீட்டிலும், பள்ளியிலும் ராஜாப் பல்லிப் பேச்சுதான் எனக்கு. என்ன, ஊர் வந்தோன்ன கட்னவளையே மறந்தாச்சா? பேச்சையேக் காணோம்? என்றாள் என் மனைவி.

என்ன? என்று ஆழ்சிந்தனையிலிருந்து வெளியே வந்தேன். ஐந்தாம் மதகையும் தாண்டி இருந்தோம். வாங்க வாங்க எத்தினி வருஷமாச்சு கிராமத்துக்கு வந்து. ஹரியானா, கவுகாத்தின்னு போயிட்டே இருந்தா, பொறந்த ஊரை மறந்துடனும்னு இருக்கா?

இப்பக்கூட இந்த சாமிக்குக் குலதெய்வம் கோயில்ல முடி எடுக்கிற நேர்த்திக்கடன் இல்லாட்டா வந்திருக்கப் போறதில்லை போலிருக்கே? என்னா ஓட்டம் என்னா பறப்பு? நிதானமா ஒக்காரக்கூட முடியாம எதுக்கு இந்த ஓட்டம்? வீட்டில் வரவேற்பு பலமாய் இருந்தது. சிரித்துச் சமாளித்துக் குளித்து, சாப்பிட்டு வாசல் திண்ணையில் உட்கார்ந்தேன்.

கிராமத்து வீட்டுத் திண்ணைக்கு உதாரணம் தாய்மடிதான். எத்தனை ஆனந்தமாய், எத்தனைப் பாதுகாப்பானதாய் இருக்கிறது? கிறங்கிப் போய் அனுபவித்தவன், சற்று நிமிந்து பார்த்தேன். எதிரே எப்பொழுதும் கோயில் போலக் கம்பீரமாகக் காட்சி தரும் மாமாவின் வீடு, ஒரு கூடாரம் போல் இருந்தது. ஒவ்வொரு வருடமும் பொங்கலுக்குப் பத்து நாட்களுக்கு முன்பே புத்தம் புதிது போல் வெள்ளையடிக்கப்பட்டு, பளபளவென்று இருக்கும் மாமா வீடு. மாதாமாதம் பண்ணையாட்களால் ஒட்டடைத் தட்டப்பட்டு எத்தனை நறுவிசாய் இருக்கும்? இப்பொழுது பார்த்தால் பாசி புடித்துப் போய்ச் சிதிலமடைந்து…

ஏம்மா, மாமா வீட்ல என்ன? என்னவோ போல இருக்கே? என்றேன். எங்களுக்குச் சொந்தமோ, தூரத்து உறவோகூடக் கிடையாது. ஆனாலும் மாமா, மாமி என்ற ஒட்டுதலும், உரிமையும் எப்பொழுதும் உண்டு.

வாழ்வாங்கு வாழவும் வேண்டாம்? இப்படி வதையழிஞ்சி, சீரழியவும் வேண்டாம்; ம்! எல்லாம் விதி; வேற என்ன சொல்ல?

ஏம்மா. அந்த அபிராமி கல்யாணம்கூட ஜாம்ஜாம்னு நடந்துச்சே? அப்பல்லாம் நாங்கூட இங்கிருந்தனே?

அதுதான் அவங்க வீட்ல நடந்த கடைசிச் சுபகாரியம். அந்த அபி மட்டும் தஞ்சாவூர்ல நல்லபடியா, கௌரவமா இருக்கு. மத்த புள்ளைங்க எதுவும்… ம்? என்று உதட்டைப் பிதுக்கினாள் அம்மா.

ஒரு வெள்ளை ஆம்னி வந்து நிற்க, அதிலிருந்து மூணு பெண்களும், இரண்டு ஆண்களும் இறங்கி எதிர்வீட்டின் உள்ளே சென்றனர்.

அடுத்த பொண்ணு அங்கைக்கு வரன் தேடிட்டிருந்தப்போ, அது தன்னாலேயே ஒருத்தனை அழைச்சுகிட்டு வீட்டை விட்டுப் போச்சு. ஆறே மாசத்துல திரும்பி வந்துச்சு; கேட்டதுக்கு அவன் ஒத்து வரலைன்னு வீட்டோட இருந்துச்சு. ஒரு வருஷம் கழிச்சு அவனை விவகாரத்துப் பண்ணிட்டுத் திரும்பவும் வந்துச்சு; அதுக்கப்புறம் அது போக்கே மாறி போச்சு; யாராரோ அதைத் தேடி வர ஆரம்பிச்சாங்க. பெண் நடத்தை சரி இல்லைங்கறது அவங்க அம்மாவுக்குப் புரிஞ்சு போச்சு.

இதுனாலேயே அடுத்த பொண்ணுங்க கல்யாணம் தடைபட ஆரம்பிச்சுது.
அந்த அண்ணன் கேட்டதுக்கு இப்படித்தான்; என் பங்கைப் பிரிச்சுக் குடு சொத்துல; எனக்குக் கல்யாணம் முறைப்படி பண்ணிவச்சிருந்தா எவ்ளோ செலவாகி இருக்கும்? அதைக் கொடு, அக்காவுக்குப் போட்டாப்ல நகை போடு! என்று என்னன்னவோ பேசி, பிரச்சினையாயிடுச்சு. எத்தனைப் பேருக்குப் பஞ்சாயத்துப் பண்ணி வைப்பாங்க அந்த அண்ணன். அவங்க வீட்டுப் பிரச்சினை ஊர் சிரிக்க ஆரம்பிச்சுது.

அந்த அண்ணனோட ஒத்த வார்த்தைக்கு ஊரே கட்டுப்படும். ஆனா அவங்க பொண்ணோ, எதுத்து அசிங்கம் பண்ண ஆரம்பிச்சா, அன்னைக்கு வாய் மூடினவங்கதான். நியாயப்படி அடுத்த மூணு பிள்ளைகளும் பெத்தவங்க பக்கம் பலமா நின்னிருக்கணும். நேர்மாறா, அவகூட சேர்ந்துகிட்டு இதுகளும் ஆட ஆரம்பிச்சுது.

மங்கை என்னவோ, அழகுக்கலைப் படிப்புப் படிச்சுட்டு வீட்லயே பியூட்டி பார்லர் நடத்துது. கடைசிப் பொண்ணு மேகலா, பொட்டு, பூகூட வச்சுக்காம, மதம் மாறி, ஊர் ஊரா எங்கெங்க கூட்டம் நடக்குதோ, அங்கெல்லாம் போய்த் தொண்டூழியம் பாத்துகிட்டு இருக்கு.

அந்த அண்ணி உத்தமி; இதெல்லாம் தாங்கற சக்தி அந்த நல்ல மனசுக்கு இல்லை. வீட்டை விட்டு வெளியகூட வந்தவங்க இல்லை; பிள்ளைகளால, சித்த சுவாதீனம் இல்லாமப் போயி, ஒரு நாள் மூணாங்கட்டுல இருந்த முற்றத்து உள் கிணத்துலயே மிதந்தாங்க!

ஐயய்யோ! என்று அலறிவிட்டேன். எப்பேர்ப்பட்ட புண்ணியவதி. ஐந்து முகம் ஏற்றிய குத்துவிளக்கு, நடந்து வருவதுபோல், வீட்டையே எப்படிப் பிரகாசிக்கச் செய்தார். அவர் கையால் வாங்கிச் சாப்பிட்ட சர்க்கரைப் பொங்கலை நினைத்தேன். துக்கம் தொண்டையை அடைத்தது.
ஏம்மா, அந்த சிவா?

நல்ல அப்பா, அம்மாவுக்கு அந்தத் தறுதலை புள்ளையாவே பொறந்திருக்க வேண்டாம். தியேட்டர் கட்றேன்னு இருந்த நிலம், நீச்சையெல்லாம் வித்தான். அதையும் ஒழுங்கா நடத்தவும் இல்லை. இருந்து ஒழுங்கா நிர்வாகம் பண்ணாதான? அப்பா, அம்மா ரெண்டு பேர்லயும் ஆரம்பிச்ச ராஜ யோகம் தியேட்டர் ஒரு வருஷத்துலயே நடத்த முடியாம வித்துட்டான்; வித்த பணம் வாங்கின கடன் பாதியைக்கூட அடைக்கலை. குடிக்க ஆரம்பிச்சான். கடன்காரங்க வீடு தேடி வர்றதும், பிரச்சனை பண்றதுமே பொழைப்பாப் போச்சு என்று அம்மா சொல்லிக் கொண்டிருக்கும்போதே, எதிர்வீட்டு வாசலில் ஓர் ஆட்டோ வந்து நின்றது. அதிலிருந்து இரண்டு பெண்கள் லிப்ஸ்டிக்கும், பௌடருமாய் சரிய, சரிய இறங்கி உள்ளே சென்றனர்.

இவங்கள்லாம் யாரு? என்பதைப் போல அம்மாவைப் பார்த்தேன்.

பியூட்டி பார்லர் நடக்குதுல்ல? அதுக்குத்தான். ஊர்ல எல்லாருக்கும் தெரிஞ்சுதான் இருக்கு; அங்க பியூட்டி பார்லர் நடக்கலை. வேற அசிங்கம்தான் நடக்குதுன்னு. வர்றவங்களுக்குப் பாட்டில் சப்ளை சிவாதான். போலீஸ் வந்தா பணம் கொடுத்து அனுப்பி வைக்கிறதும் அவன்தான் என்று அம்மா சொல்லிவிட்டு உள்ளே சென்றாள்.

எனக்கு வாழ்க்கை மேல் நம்பிக்கை வறட்சியே ஏற்பட்டுவிட்டது. ஒரு பன்னிரண்டு வருடத்திற்கு, இத்தனை சக்தியா? இப்படியா புரட்டிப்போடும்? சூறைத் தேங்காய் உடைத்தது போல் ஒரு குடும்பத்தை இப்படிக்கூட சின்னாபின்னப் படுத்த முடியுமா?

கொஞ்ச நேரத்தில் காப்பி டம்ளருடன் வந்தாள் அம்மா. ஏம்மா, அந்த மாமா? என்றேன்.

இருக்காங்க! என்று முடித்துக் கொண்டாள்; அதற்கு மேல் இந்தப் பேச்சைத் தொடர அம்மாவிற்கு இஷ்டமில்லை என்பது தெரிந்தது. நான் எதிர்வீட்டையே வெறித்துக் கொண்டிருந்தேன். எத்தனை மேளச்சத்தம், எத்தனை ஆயிரம் பேர் சாப்பிட்ட இடம்? சுதந்திர தினம், குடியரசு தினத்திற்குக் கொடியேற்றிவிட்டு, பள்ளி ஆசிரியர்களும், சீருடையில் மாணவர்களும் வருவார்கள். மாமா வீட்டு வாசலிலும் கொடியேற்றுவார்கள். மிட்டாய் விநியோகம் கிடையாது. அதற்குப் பதில் வடை, பாயசத்துடன் அத்தனைப் பேருக்கும் சாப்பாடு நடக்கும். அந்த வீடுதானா இது?

துணிச்சலை வரவழைத்துக் கொண்டு, எதிர்வீட்டிற்குச் சென்றேன். வீடா அது? விடுதி போல் இருந்தது. கல்யாணக் கூடம் பிளைவுட்டால் சிறுசிறு அறைகளாகத் தடுக்கப்பட்டு உருக்குலைந்திருந்தது. நல்ல வேளை; அந்த மாமிக்கு மூன்றாம் கட்டில் இருந்த கிணறு கை கொடுத்தது. இந்த ஆபாசக் கூத்தை எல்லாம் பார்க்கவில்லை. மாமா எப்பொ-ழுதும் இருக்கும் மாடி அறைக்கு ஏறினேன். படிகளெல்லாம், இற்றுப்போய் நொடித்தன. மெதுவாய் மேலே சென்றேன். விஸ்த்தாரமான அந்த அறை, இந்த உச்சிவேளையிலும் இருளாய்க் கிடந்தது.

மாமா, மாமா என்று நான்கைந்து முறை கூப்பிட்டேன். பதிலில்லை. உள்ளே சென்று மின்விளக்குப் பொத்தானை அழுத்தினேன். கட்டிலில் அந்த முதியவர் உட்காந்திருந்தார்.

ராஜலிங்கம் என்ற பெயருக்கேற்றாற் போல், ராஜ கம்பீரத்துடன் இருந்த மாமாவா இது? பத்து வருடங்களில் நூறு வயது கூடி இருந்தார். அப்பொழுதுதான் கவனித்தேன். கண் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவர் போல், கண்ணைச் சுற்றி வெள்ளைத் துணியால் ஒரு கட்டு. வாயைச் சுற்றியும் அதேபோல் ஒரு கட்டு. இரண்டு காதுகளையும் துணிக் கிழிசலை வைத்து அடைத்திருந்தார்.

மாமா என்னைக் கண்ணால் பார்க்கவில்லையே தவிர, இன்னார் என்று உணர்ந்து கொண்டார். அருகில் சென்றேன். நடுங்கும் கரங்களால் என் தலையைத் தொட்டார். உச்சந்தலையில் அப்படியே ஆசிர்வதிப்பதைப் போல் கரத்தை வைத்திருந்தார். ஆயிரம் வார்த்தைகள் விளக்காததை, அந்த ஒற்றைத் தொடுதல் உணர்த்திற்று எனக்கு. மாமாவின் கண்களிலிருந்து தாரை வழிந்து, கட்டி இருந்த துணிகளைத் தாண்டி மூக்கோரம் வழிந்தது. எனக்கு அதற்கு மேல் அங்கு இருக்க முடியவில்லை.

சுக்கு நூறாய் உடைந்து, அலற ஆரம்பித்து விடுவேன் போலிருந்தது. எழுந்து விளக்கை அணைத்துவிட்டு இறங்கினேன். எங்கோ படித்திருக்கிறேன் – ஜைன மதத்தில் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக் கொள்ளக் கூடாது என்று முடிவெடுத்தவர்கள், இப்படிப் புலன்களை எல்லாம் ஒடுக்கிக் கொண்டு வெளி உலகத்திலிருந்து தங்களைத் துண்டித்துக் கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாய் சமாதி நிலையை அடைவார்களாம். மாமாவும் அதுபோல விட்டு விலகி எங்கோ உயரத்திற்குப் போய்விட்டார். இன்னும் கொஞ்சம்தான் பாக்கி.

இறங்கி வரும்போது நினைவு வந்தது. மாடிப் படிக்குக் கீழே, அந்த ஜன்னல் இருந்தது. படியாத கதவும் இருந்தது. நன்றாகப் பார்த்தேன். அந்த ராஜாப் பல்லியைத்தான் காணவில்லை. பின் நினைவுக்கு வந்தது & அதுதான் மாடி அறையில் இருக்கிறதோ கண்ணைக் கட்டிக் கொண்டு?

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *