கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 11,743 
 

கோபால்ராவ் ரயில் பெஞ்சில் வந்து உட்காரும்போது நீங்கள் உங்கள் கடிகார முள்ளை மாலை 5 மணிக்கு திருப்பிவைத்துக் கொள்ளலாம். ரயில் பெஞ்சுக்கு சரியாக 5 மணிக்கு வந்துவிட வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருப்பார். அவர் ஒரு ரிட்டயர்டு முனிசிபல் கமிஷனர்.

அவருடைய ரயில்பெஞ்சு நண்பர்களில் மிகவும் தாமதமாக வருகிறவர்களை “”ஏன் லேட்டு?” என்று கேட்காமல் இருக்கமாட்டார். அவர் அதிகாரியாக இருந்தபோது கீழே வேலை பார்த்தவர்களை இப்படிக் கேட்டுக் கேட்டு அந்தப் பழக்கம் அவரைத் தொற்றிக் கொண்டுவிட்டது. அவர் ஓய்வு பெற்று 20 ஆண்டுகள் ஆகிவிட்டன.

இந்த ரயில்பெஞ்சுக்கு சில வருஷங்களுக்கு முன் சுப்பையா என்பவர் வந்து சேர்ந்தார். இவர் கோபால்ராவிடம் தபேதாராக வேலை பார்த்தவர். தலையில் வெள்ளை டர்பன் நெஞ்சில் குறுக்காக வெள்ளைச் சீருடையில் பித்தளை வில்லை சகிதம் கோபால்ராவை குனிந்து வணங்குவார். இப்போது இரண்டு பேரும் பக்கத்துப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள்.

கோபால்ராவ் அசப்பில் காந்தி மாதிரி இருப்பார். கையில் எப்போதும் ஒரு குடை. கோபால்ராவ் ஸ்டேஷனுக்கு “வாக்’ போகிற வழியில் தான் ரங்கராஜன் வீடு இருந்தது. அவர் ஓய்வு பெற்ற தமிழாசிரியர். சரியாக நாலே முக்காலுக்கு ரங்கராஜன் வீட்டுக்கு வந்துவிடுவார் கோபால்ராவ்.

அப்போது பார்த்துதான் ரங்கராஜன் பாத்ரூம் போவார். அந்த ஐந்து நிமிட தாமதத்தைக்கூட கோபால்ராவால் பொறுத்துக் கொள்ள முடியாது. ஆங்கிலத்தில் பொரிந்து தள்ளிவிடுவார்.

கோபால்ராவின் பேச்சு அப்படியே ஒரு பிரபலமான ஆங்கில தினசரியைப் படிப்பதுபோல் இருக்கும். நேர்த்தியான ஆங்கிலம்; அவருக்கு ஆகாரமே வேண்டாம், அந்த ஆங்கில தினசரி போதும்.

காலையில் படித்த செய்தி அவருக்குள் புயலைக் கிளப்பிவிட்டிருக்கும். ரங்கராஜன்தான் புயலின் முதல் இலக்கு. அரசியல் நிலவரம் பற்றி கூர்மையான ஆங்கிலத்தில் வரும் கேள்வியில் அப்படியே தடுமாறிப் போவார் ரங்கராஜன். தர்மசங்கடமாக சிரிப்பார்.

“”நான் சொல்வது அர்த்தமாகிறதா?”

என்ற வேறு ஆக்ரோஷமாக கேட்பார் கோபால்ராவ். ரங்கராஜன் ஓணான் மாதிரி தலையாட்டுவார். ரயில் பெஞ்சுக்குத் தினசரி லேட்டாக வருபவர் ராகவன்தான். வரும்போதே மருமகள் பற்றிய புதிய புகாரோடு வந்து சேர்வார். “”இன்னிக்கு கோதுமை அரைச்சுகிட்டு வரச்சொல்லி மாவு மெஷினுக்கு அனுப்பிச்சுட்டா” என்பார். அவர் மருமகள் மீது சொல்கிற புகார்களை எல்லோரும் அனுதாபத்துடன் கேட்பார்கள். அப்படிக் கேட்பதுதான் ராகவனுக்கு கிடைக்கும் ஒரே ஆறுதல். இந்த ஆறுதலுக்காகவே மருமகள் மீது சொல்ல வேண்டிய புதிய புகாரை யோசித்து வைத்துக்கொள்வார். அது எவ்வளவு அற்பமாக இருந்தாலும் சரி.

கோபால்ராவும் சுப்பையாவும் ஒண்டிக் கட்டைகள். கோபால்ராவின் மகன், மகள்கள், மருமகள்கள் எல்லோரும் பக்கத்து ஊரில்தான் வசித்தார்கள். ஆனால் கோபால்ராவ் தன் கிராஜூவிட்டி, பிராவிடண்ட் பண்டு பணத்தில் கட்டிய வீட்டில் தனியாகத்தான் வசித்தார்.

“ஏன் தனியாக இருந்துகொண்டு கஷ்டப்படுகிறீர்கள்?’ என்று யாராவது கேட்டால், “”இங்கே நான் சுதந்திரமாக என் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு இருக்கிறேன். அவர்கள் வீட்டுக்குப் போனால் நான் இன்னொரு மர நாற்காலியாய் அங்கே இருக்க வேண்டி வரும். யாரோடும் பேசமுடியாது. அவர்கள் வீட்டில் ஏற்கெனவே போதுமான மரச்சாமான்கள் இருக்கின்றன. நான் வேறு எதற்கு?” என்பார் கோபால்ராவ்.

ரயில் பெஞ்சுசுப்பையா கல்யாணமே செய்து கொள்ளவில்லை.ஒருவகையில் சைக்கிள்தான் அவர் மனைவி. எங்கே போனாலும் சைக்கிள்தான். சைக்கிளில்தான் ரயில் பெஞ்சுக்கு வருவார். ரயில்வே ஸ்டேஷனில் இருந்து 2 கி.மீ. தொலைவில் ஒரு வீட்டின் பின்பகுதியில் கைவிடப்பட்ட ஓடு வேய்ந்த ஒரு சிறு கட்டிடம். அதில் ஏதோ சொற்ப வாடகையில் குடியிருந்தார்.

ராகவன் சமீபகாலமாக ரயில்பெஞ்சுக்கு வருவதில்லை. இவர் மருமகள் பற்றி குறை பேசுவதை யாரோ அவளிடம் சொல்லிவிட்டார்கள். அவருடைய பையன் “இனிமேல் ரயில்பெஞ்சுக்கு போகக்கூடாது’ என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டான்.

வாழ்க்கையின் விளிம்பில் நிற்பவர்களுக்கு விழுந்து விடுவோமோ என்ற பயம் எப்போதும் இருக்கிறது. அவர்களுக்குப் பற்றிக்கொள்ள ஏதோ ஒன்று தேவையாய் இருக்கிறது. அதையும் பிடுங்கிக்கொண்டு விட்டால் அதலபாதாளம்தான்!

ராகவனின் விஷயத்திலும் அதுதான் நடந்தது. ராகவனின் மரணத்திற்கு டாக்டர்கள் வேறு ஏதோ காரணம் எழுதினார்கள். உண்மையான காரணம் அவர் ரயில்பெஞ்சுக்கு வராததுதான் என்று ரயில்பெஞ்சு நண்பர்களுக்குப் புரிந்தது.

“”எப்படி மாமா எங்களைவிட்டுப் போக மனசு வந்தது?” என்று மருமகள் பெரிதாகப் பிலாக்கணம் வைத்தாள். ரயில் பெஞ்சு நண்பர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.

ரயில் பெஞ்சில் ராகவனின் இடம் காலியாக இருந்தது. அதற்கு புதிதாக ஒருவர் வந்து சேர்ந்தார். அவர் பெயர் ரகுராம். வயது எண்பதுக்கும் மேல் இருக்கும். அவரைப் பார்த்தால் ஒரு நாரை நடந்து வருவதைப் போல இருக்கும். பெரிய பெரிய காதுகள்; பல வருஷங்கள் கேரளாவில் வசித்ததால் பேச்சில் மலையாள சாயல் இருந்தது.

அவருக்கு மூன்று பையன்கள், இரண்டு பையன்கள் வடக்கே எங்கோ நல்ல உத்யோகம், கடைசிப் பையன் மட்டும்தான் இவருடன் வசித்தான். அவனுக்கு புத்தி சுவாதீனமில்லை. எப்போது பார்த்தாலும் ஒரு துண்டைக் கட்டிக்கொண்டு மொட்டை மாடியில் உட்கார்ந்து இருப்பான். வாலிபப் பிள்ளை; ஆனால் சித்தபிரம்மை காரணமாக அவனுடைய செய்கைகள் விபரீதமாக இருந்தன.

ரகுராமைப் பார்த்து ரயில்பெஞ்சு நண்பர்கள் தங்கள் நிலைமை எவ்வளவோ தேவலை என்று நினைத்துக் கொண்டார்கள்.

“”என் குழந்தைகளில் இவன்தான் இப்படி வீணாகிவிட்டான்!” என்று சொல்லித் துக்கிப்பார் ரகுராம்.

மனசுக்குள் இப்படி ஒரு பாரத்தை சுமந்துகொண்டு இருந்தாலும் ரகுராம் உற்சாகமாகவே இருந்தார். பழைய தமிழ் சினிமாப் பாடல்களை பாவத்தோடு பாடுவார். எல்லாம் காதல் கீதங்கள்.

அவர் வீட்டில் ஒரு பழைய கால கிராமஃபோன் பெட்டி இருந்தது. அதனோடு ஒரு பெரிய பூ விரிந்த மாதிரி ஸ்பீக்கர். அபூர்வமான பழைய கிராமஃபோன் தட்டுகள். தட்டுகளின் சுழற்சி தடைபடும்போது மிக அருமையான காதல் கீதமும் ஒப்பாரியாக மாறிவிடும். ரகுராம் ஒருநாள் பாத்ரூமில் தடுக்கி விழுந்து பின் மண்டையில் பலமான அடிபட்டுவிட்டது. அவரைத் தாம்பரத்தில் ஒரு மருத்துவமனையில் அவசரசிகிச்சைப் பிரிவில் சேர்த்தார்கள். ரகுராமிற்கு நினைவு திரும்புவது கஷ்டம் என்று சொல்லிவிட்டார்கள்.

சித்த சுவாதீனம் இல்லாத அவர் மகன்தான் தலைமாட்டில் உட்கார்ந்து இருந்தான். அந்தண்டை இந்தண்டை நகராமல் ஆங்கிலக் கதை ஒன்றில் அப்பா சொன்னார் என்பதற்காக நெருப்பு பற்றியபோதும் அப்படியே உட்கார்ந்திருந்த காஸôபியாங்கா மாதிரி உட்கார்ந்து இருந்தான். என்ன சொல்லியும் வீட்டுக்குப் போகவில்லை. பீங்கான் நிரம்பியதும் டாய்லெட்டில் இவனே கொண்டுபோய் கொட்டிவிட்டு வருவான். அப்பாவின் உதட்டோரம் வழிந்துகொண்டே இருந்த உமிழ்நீரை துடைத்துக்கொண்டே இருப்பான்.

வெளிமாநிலத்தில் இருந்த இரண்டு பிள்ளைகளும் விமானத்தில் வந்தார்கள். மருத்துவமனையில் ஒரு பெரும் தொகையைக் கொடுத்து அப்பாவை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுமாறு சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள். இருபது நாட்கள். ரகுராமிற்கு ஆச்சரியப்படும் விதத்தில் குணமாகிவிட்டது. அவருக்குப் பக்கத்து படுக்கைக்காரர்கள் அவருடைய சித்தப்பிரமை பிடித்த மகன் செய்த சிச்ருஷைகளைப் பற்றி அவரிடம் சொன்னார்கள். ரகுராம், அவன் கையைப் பிடித்துக்கொண்டார். அவன் தாடையைத் தடவிக்கொடுத்தார். கன்னங்களில் கண்ணீர் வழிய டாக்டர்களிடம் எல்லாம் “மை சன்! மை சன்!’ என்று அறிமுகப்படுத்தினார். ரகுராம் பிழைத்துவிட்டார். மெல்ல ரயில்பெஞ்சுக்கும் வர ஆரம்பித்துவிட்டார். அவர் மகன் பழையபடி மொட்டை மாடிக்குப் போய்விட்டான்.

அன்றைக்கு ரயில்பெஞ்சில் ரகுராம் சன்னமான குரலில் ஏதோ பாடிக்கொண்டு இருந்தார். குரலில் ஏக்கம் இழைந்தது. வார்த்தைகளே இல்லாத “ஹம்மிங்’ நிறைவேறாத காதலின் சோகம் நிரம்பிய கானங்கள் அவை.

“”தெரிந்த பாட்டாகத் தோன்றுகிறது. ஆனால்…” என்ற கோபால்ராவ் ரகுராமைப் பார்த்து, “”அடடா, கண்ணெல்லாம் கலங்கி இருக்கே. என்ன விஷயம்?” என்றார்.

“”திடீரென்று அவள் ஞாபகம் வந்துட்டுது…”

“”உங்கள் மனைவி ஞாபகமா?”

“”இல்லை…இல்லை…அவளுக்கு முன்னால் ரொம்ப சின்ன வயசில் நான் நேசித்த பெண்…அவ பேரு வள்ளி…”

“”இப்ப என்ன திடீர்னு அவள் ஞாபகம்?” கிளறினார் கோபால்ராவ். கரி அடுப்பை விசிறி விடுவது மாதிரி இருந்தது அவர் செய்கை.

“”அப்போது நான் கேரளாவில் மூணாறில் டீ எஸ்டேட்ல மேனேஜரா இருந்தேன்…” என்றார் ரகுராம்.

ரகுராம் எப்போது பேச ஆரம்பித்தாலும் “அப்போது நான் கேரளாவில் மூணாறில் டீ எஸ்டேட்ல மேனேஜரா இருந்தேன்’ என்றுதான் ஆரம்பிப்பார்.

“”எனக்கு வயசு 25 அல்லது 26 இருக்கும். என் முதலாளி ஒரு வெள்ளைக்காரன்! என்னை நம்பி ஒரு பெரிய டீ எஸ்டேட்டை நிர்வகிக்கும் பொறுப்பை ஒப்படைச்சிருந்தான். எனக்கு ஒரு மோட்டார் பைக் வாங்கிக் கொடுத்து இருந்தான். அதை வைத்துக்கொண்டு எஸ்டேட் முழுவதும் சுற்றி வருவேன்…”

“”அப்போதுதான் அந்தத் தமிழ்க் குடும்பத்தோடு பரிச்சயம். கூலித்தொழிலாளர்கள். அவர்களுக்கு எப்படி ஒரு ராஜகுமாரி மகளாகப் பிறந்தாளோன்னு அதிசயப்பட வைக்கும் அழகு…ஆனா விவரம் தெரியாத சின்ன மான்குட்டி…பெயர் வள்ளி…அவளோடு தோப்புகளிலும், மலை அடுக்குகளிலும்…”

ரகுராமின் தொண்டை கம்மியது.

“”அந்தப் பாவம்தான் என் மகனுக்கு இப்படி ஆயிட்டுதோ என்னமோ” என்றார் கரகரத்த குரலில்.

ஒரு நீண்ட கூட்ஸ் வண்டி முடிவே இல்லையோ எனும்படியான பெட்டிகள் வந்து கொண்டே இருக்க கடைசியில் ஒரு சின்ன வராந்தாவுடன் கூடிய வீடு போன்ற கார்டு பெட்டி மெல்ல நகர்ந்தது. கையில் பச்சைக் கொடியை அவர் அசைத்த விதம் ஏதோ நாட்டிய முத்திரை போல் இருந்தது.

ரங்கராஜன் தொண்டையைக் கனைத்துக் கொண்டார்.

“”50 வருஷங்களுக்கு முந்தைய கதையைச் சொல்கிறேன்…அப்போது போர்டு ஹைஸ்கூல் வாத்தியாராக இருந்தேன். வயது 24 அல்லது 25 தான் இருக்கும். அங்கே கிராம சேவகியாக வந்து சேர்ந்த பெண்ணுக்கும் என் வயதுதான் இருக்கும். நல்ல களையான முகம்…ஆனால் நெற்றி பாழ்! கல்யாணமான மூன்றே மாதத்தில் புருஷன் ஒரு விபத்தில் செத்துப் போய்விட்டானாம்!”

“”அடடா…!”

“”என் மேல் ரொம்பப் பிரியம்…ஒரே ஸ்டோரில் எதிர் எதிரே குடியிருந்தோம். என் பெற்றோர் வெளியூரில்…ஓட்டல் சாப்பாடு ஒத்துக் கொள்ளாமல் எனக்கு உடம்பு ரொம்ப முடியாமல் போய்விட்டது. கூடவே இருந்து கவனித்துக்கொண்டது அந்தப் பெண்…அந்தப் பெண்ணுக்கு தமிழ் இலக்கியம் சொல்லிக் கொடுத்தேன். அது எனக்கு இந்தி கற்றுக்கொடுத்தது…எங்கள் நெருக்கம் அதிகமாகிக் கொண்டே வந்தது…”

“”உங்களிடம் ஒரு விஷயம் சொல்லணும்…” என்று அந்தப்பெண் ஆரம்பிக்கும்.

“”சொல்லுங்க…” என்பேன்.

“”நாளைக்குச் சொல்றேன்…” என்று சொல்லிவிட்டுப் போய்விடும்.

“”நான் கூட ஒரு விஷயம் சொல்லணும்!” என்று ஆரம்பிப்பேன்.

“”என்ன? என்ன?” கண்கள் விரியக் கேட்கும்.

“”நாளைக்குச் சொல்றேன்” என்று சொல்வேன்.

இரண்டு பேரும் சிரித்துவிடுவோம்.

இரண்டு பேருக்குமே ஒருவரையொருவர் விரும்புவதை வெளிப்படையாகச் சொல்ல தைரியம் வரவில்லை.

தைரியம் வந்தபோது காரியம் கைமீறிவிட்டது.

என் கல்யாணப் பத்திரிகை அச்சடித்து வந்தது. கை வலிக்க வலிக்க அந்தப் பெண்தான் அட்ரஸ் எல்லாம் எழுதியது.

கல்யாணத்தன்னிக்கு அந்தப் பெண் முகத்தை என்னால் பார்க்க முடியவில்லை. கண்ணைத் துடைச்சு துடைச்சு விட்டுக்கொண்டு இருந்தது. ஹோமப் புகைன்னு நினைச்சேன். நான் ஒரு முட்டாள்…”

ரங்கராஜன் கதையைக் கேட்டு ரயில் ஒன்று பெருமூச்சு விட்டுக்கொண்டு போயிற்று.

அடுத்து கோபால்ராவ் தொண்டையைச் செருமினார். பேச்சு வரவில்லை. அவர் காதலைச் சொல்ல சங்கோஜமாக இருந்தது.

இப்போது கூட தஞ்சாவூர் போனால் மேலவீதியில் அந்த குறிப்பிட்ட சந்துக்கு முன்னால் கொஞ்ச நேரம் நிற்பார்! அங்கேதான் சித்ரா குடியிருந்தாள்!

இருட்டிக்கொண்டு வந்தது. எல்லோரும் புறப்பட்டார்கள்.

“”இப்ப எங்க இருக்காளோ?” தூரத்தில் வந்து கொண்டிருந்த ரயிலைப் பார்த்து மனசுக்குள் சொல்லிக்கொண்டார் கோபால்ராவ்.

ரயில்பெஞ்சு நண்பர்கள் கடைத் தெருப்பக்கம் மெல்ல நடந்தார்கள். பாலாஜி பவனில் வடை போட்டுக்கொண்டு இருந்தான். ஆளுக்கு ஒரு வடை. பேப்பரை சதுரத் துண்டுகளாகக் கிழித்து அதில் வைத்துக்கொடுத்தான். சாப்பிட்டதும் அந்த எண்ணைத் தாளைப் பார்த்துச் சிரித்தார் சுப்பையா.

“”என்ன சார் ஜோக்கா?”

“”இதோ பாத்தீங்களா? சிந்துபாத் கதை! நான் சின்னவயசிலிருந்தே இந்த சித்திரக் கதையைப் பார்த்துக்கொண்டு வருகிறேன்! சிந்துபாத் இன்னும் காதலியைத் தேடிக்கொண்டுதான் இருக்கான்! நம்பளைப் போல!”

எல்லோரும் சிரித்துவிட்டு கை அலம்பப் போனார்கள்.

கோபால்ராவ் மட்டும் வடையை சாப்பிடாமல் அப்படியே வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார். ஏதோ மிகவும் கனமான பொருளை கையில் வைத்துக்கொண்டிருப்பது போல் அவர் முகபாவம் இருந்தது.

எத்தனையோ வருஷங்களுக்கு முந்திய ஒரு ஞாபகம் அவரை அலைபோல் தாக்கியது!

சித்ராவுக்கு வடை என்றால் மிகவும் பிடிக்கும்!

– தஞ்சாவூர்க் கவிராயர் (மார்ச் 2012)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *