ரயிலோடு போன கதைகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 29, 2012
பார்வையிட்டோர்: 9,037 
 

ரயிலுக்கும் எனக்கும் அப்படியொன்றும் பெரிய சிநேகிதமில்லை;கல்யாணத்திற்குப் பிறகு தான் இரண்டே இரண்டு முறை ரயில் பயணம் செய்ய நேர்ந்தது ,ரயிலோடு சிநேகிதமில்லாவிட்டாலும் ரயிலைப் பற்றிச் சொல்ல சில கதைகள் எனக்கும் இருக்கக் கூடுமில்லையா?!

முதன்முதலாக ரயிலை எப்போது தெரியும் எனக்கு?

மூன்றாம் வகுப்போ நான்காம் வகுப்போ படிக்கையில் ஊர்ப் பொங்கலுக்கு இரவில் ஊர் மடத்தில் திரை கட்டிப் படம் போட்டார்கள்,தங்க மலை ரகசியம்,கர்ணன்,அப்புறம் கிழக்கே போகும் ரயில்.நல்ல வேளை கிழக்கே போகும் ரயில் அப்போதைக்கு புது படம் என்று அதை தான் முதலில் திரையிட்டார்கள்.இல்லாவிட்டால் நான் அன்றைக்கு ரயிலைப் பார்த்திருக்க சாத்தியமே இல்லை.முதல் படம் பாதி முடியும் முன்பே தூக்கத்தில் மூழ்கி படமே கனவில் பார்த்தார் போல மறுநாள் காலை சொல்லத் தோன்றும் அலாதியான வயது அது,மனதில் போட்டு உழப்பிக் கொள்ளவும் குழப்பிக் கொள்ளவும் காரணங்கள் இல்லா வயதல்லவா !அப்படி ஒரு தூக்கம் தழுவிக் கொள்ளும்.

படத்தில் பாவாடை குடையாய் விரிய பாஞ்சாலி “பூவரசம் பூ பூத்தாச்சு பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு ” பாடிக் கொண்டே ஆடி கிறு கிறு வெனச் சுற்றி தண்டவாளத்தில் விழுவாள் இல்லையா ?! அந்த தண்டவாளத்தில் ஓடிய ரயில் தான் நான் பார்த்த முதல் ரயில்.அது தான் நான் பார்த்த முதல் தண்டவாளமும் கூட.

ஏழாம் வகுப்பு கால் பரீட்சை விடுமுறைக்குப் பின் அம்மாவின் பணி நிமித்தம் மானாமதுரையில் சில காலம் வாழ நேர்ந்தது.அப்பா வார விடுமுறையில் வந்து போவார்.ஒரு வருடம் கூட முழுமையாக அங்கே இருந்திருக்க மாட்டோம்,ஆனாலும் அந்த நாட்கள் ஒரு பச்சை மரத்தின் இளம் கொழுந்துகள் போல நினைக்கும் போதே மனதோரம் ஜில்லிப்பானவை.

மானாமதுரையை அடுத்த சிப்காட்டில் வீடு தேசிய நெடுஞ்சாலையின் மீதே இருந்தது ,வீட்டின் எதிரே நெடுஞ்சாலை அதைத் தாண்டி பெரிய பொட்டல் வெளி,அங்கெல்லாம் அப்போது வீட்டுக்குள் குழாய் தண்ணீர் வராது,கிணறுகள் தான்.எல்லா வீட்டுக்கும் தனித்தனி கிணறுகள்.சணல் கயிறுகள் கை சிராய்க்க இறைத்து இறைத்து தான் குடிக்க,குளிக்க,துவைக்க,கழுவி கவிழ்க்க தண்ணீர் எடுக்க வேண்டும் .

கூடவே சில வீடுகளில் யூகலிப்ட்டஸ் மரங்கள் வேறு வளர்ப்பார்கள்.அதனால் தான் அங்கே நிலத்தடி நீர் வற்றி சில கிணறுகளில் நீர் மட்டம் அதல பாதாளத்தில் இருந்ததோ என்னவோ!?அந்த யூகலிப்ட்டஸ் மர வீடுகள் நாங்கள் இருந்த வீட்டின் பின்புறம் சில அடி தூரத்தில் இருந்தது.அதைத் தாண்டினால் அப்புறம் ரயில் தண்டவாளம் தான் கண்ணில் படும் ,அதையும் தாண்டி ஒன்றுமே இருக்கவில்லை,கண்ணுக்கு எட்டிய தூரம் வரை செம்மண் வெளி பறந்து விரிந்து பவளப் பொடிகள் போல் செம்மண் துகள்கள் காற்றில் பறக்கும்.

சிப்காட் அப்போது புறநகர் பகுதி அங்கொன்றும் இங்கொன்றுமாக நெருக்கடி இல்லாமல் சின்னச் சின்ன கான்கிரீட் வீடுகள் ஜோசியக்காரன் களைத்துப் போட்ட சோழி போல சிதறித் தெரியும். நாங்கள் படித்த பெண்கள் பள்ளி மானாமதுரையில் இருந்ததால் தினமும் சிப்காட்டில் இருந்து மூன்று கிலோமீட்டர்களாவது பாரதிஅக்கா,சியாமளா,சௌமியா ,ஹேமா,மும்தாஜ்,பானு தங்கம் இவர்களோடு நானும் என் தங்கையும் நடந்தே போய் நடந்தே வீடு திரும்புவோம்.

அப்படிப் பட்ட நாட்கள் ஒன்றில் தான் மும்தாஜ் இந்த ரயில் கதையை என்னிடம் சொன்னாள்.

நஹீம் அண்ணாவுக்கும் நர்கீஸ் அக்காவுக்கும் லவ் ,நஹீம் அண்ணாவின் வாப்பா நகரத்தின் மிகப் பெரிய மர வியாபாரி.அவர்களது மிகப்பெரிய பங்களா டவுன் நடுவில் தலைக்கனம் போல நிமிர்ந்து நிற்கும் ,ஒருவரேனும் கவனியாது நகர்ந்து விட முடியாது.நர்கீஸ் அக்கா நஹீம் அண்ணாவின் வீட்டில் எடுபிடி வேலை பார்க்கும் அகமதுவின் மகள் .நர்கீஸ் அக்கா எலுமிச்சை நிறம்,அவளை வெறுமே தொட்டாலே தொட்ட இடம் கன்றிப் போகும் அளவுக்கு அத்தனை மென்மையான சருமம் அவளுக்கு.என்ன இருந்தென்ன அத்தனை பணக்காரரான நஹீம் அண்ணாவின் வாப்பா தன் எடுபிடியின் மகளை மருமகளாக ஏற்றுக் கொள்வாரா என்ன? நஹீம் அண்ணாவுக்கு டவுனில் தன்னை ஒத்த பணக்காரரான நூர்ஜகான் தியேட்டர் முதலாளியின் மகள் நூரியை நிக்காஹ் செய்து வைக்க நாள்
குறித்தார்கள்.நிக்காஹ் நாளன்று பேப்பரில் செய்தியானார்கள் நஹீம் அண்ணாவும் நர்கீஸ் அக்காவும் .

நர்கீஸ் அக்கா எங்கள் பெண்கள் பள்ளியில் தான் பத்தாவது வரையிலும் படித்தாளாம்,நான் அங்கு படிக்கப் போகையில் அவள் இல்லை,நஹீம் அண்ணாவோடு ரயிலில் விழுந்து செத்துப் போய்விட்டதாகச் சொன்னார்கள்.இருந்திருந்தால் இந்நேரம் பிளஸ் டூ பரீட்சைக்குப் படித்துக் கொண்டிருப்பாள் என மும்தாஜ் சொல்லிக் கொண்டிருப்பாள்.

அப்போது வீட்டில் கிரைண்டர் எல்லாம் கிடையாது ,சொன்னேனில்லையா யூகலிப்ட்டஸ் வீடுகள் என்று அதில் ஒன்று ஹேமா வீடு,அவளது அம்மா காசுக்கு கல்லுரலில் மாவு ஆட்டித் தருவார்கள்.அம்மா ஒவ்வொரு ஞாயிறும் மதியமே இட்லிக்கு மாவு ஆட்டக் கொடுத்து விட்டு மாலை மங்கியதும் என்னைப் போய் அந்த மாவுத்தூக்கை வாங்கி வரச் சொல்வார்கள்.அந்த வீடு ரயில் தண்டவாளத்தை ஒட்டி இருக்கும்.மெல்லிய இருட்டில் யூகலிப்டஸ் வாசம் மூக்கைத் துளைக்க தொலைவில் தட தடக்கும் ரயிலோசை ,எனக்கு அப்படியே தலை நிறைய மல்லிகை பூ சூடி ,நகங்களில் பளீர் சிவப்பு கியூடெக்ஸ் பூசி நர்கீஸ் அக்கா வெள்ளை நிற சல்லாத் துணியால் முகத்தை மறைத்து என் பின்னோடு நடந்து வருவது போலவே கற்பனை கரை புரண்டு ஓடி இதயத் துடிப்பை எகிற வைக்கும் ;இத்தனைக்கும் நர்கீஸ் அக்காவை நான் போட்டோ வில் கூட பார்த்ததில்லை தெரியுமா?!

இந்த தண்டவாளத்தின் தொடர்ச்சி அப்படியே நீண்டு கொண்டு போய்க்கொண்டே இருக்குமே…இதன் தொடர்ச்சியில் தான் ஏதோ ஒரு இடத்தில் நஹீம் அண்ணாவும் நர்கீஸ் அக்காவும் விழுந்து இறந்தார்கள, என்னை அவர்களுக்கு தெரியுமா? மும்தாஜை நர்கீஸ் அக்காவுக்கு தெரியுமே ,அவள் என் தோழியாயிற்றே,அவள் மூலமாக என்னையும் நர்கீஸ் அக்காவுக்குத் தெரிந்து போய் ஆவியாக என்னுடன் வீட்டுக்கு வந்து விடுவாளோ !!! இந்த நினைப்பில் பலநாட்கள் ஞாயிறு இரவெல்லாம் தூங்காமல் அவதிப்பட்டு அம்மாவையும் அவஸ்தைப்படுத்தி இருக்கிறேன்.அது ஒரு காலம். இது தான் எனக்குத் தெரிந்த முதல் ரயில் கதை.

அடுத்து அம்மா பணி மாற்றலாகி தேனிக்கு வந்த பின் ஒவ்வொரு விடுமுறைக்குமே மதுரை வழியாக சாத்தூருக்குப் போவோம்,மதுரையைக் கடக்கையில் திருப்பரங்குன்றத்திற்கு அருகில் ஒரு பெரிய பாலத்தின் அடியில் பஸ் கடக்கும் போது கீழே குறுக்கும் நெடுக்குமாக பல ரயில் தண்டவாளங்கள் பின்னிப் பிணைந்து செல்வதைப் பார்த்திருக்கிறேன்,இன்னும் அது எந்த இடம் என்று விசாரித்ததே இல்லை நான்.பின்னாட்களில் கல்லூரி விடுமுறையில் நா.பார்த்தசாரதியின் “பொன்விலங்கு” நாவலை வாசிக்கையில் கதையின் நாயகன்
சத்யமூர்த்தி மதுரையில் இதே போன்றதொரு பாலத்தில் நின்று கொண்டு கீழே ரயில் தண்டவாளத்தை வேடிக்கை பார்ப்பான் எனும் வரிகளை வாசிக்கையில் அவன் பார்த்த தண்டவாளமும் நான் பார்த்த இடமும் ஒன்றே தானோ என்ற சந்தேகம் வந்ததுண்டு.அப்போதும் அந்த இடத்தின் பெயரை அறியும் ஆர்வமே வந்ததில்லை.

அடுத்த ரயில் அனுபவம் என்றால் அது சாத்தூர் என்.ஜி.ஒ காலனியில் தான்.மிகக் குழந்தைத்தனமான செயல் தானென்றாலும் அங்கிருந்தவரை மறக்காமல் ஒவ்வொருநாளுமே செய்யத் தவறியதே இல்லை .என் சித்திக்கு ஒரு மகன், அவனுக்கு அப்போது ஐந்தாறு வயதிருக்கும் ,சித்தியிடம் ஒரு டி.வி.எஸ் சாம்ப் இருந்தது,காலையா நண்பகலா என்று ஞாபகமில்லை ஆனால் தினமுமே நான் என் சித்தி மகனை டி.வி.எஸ் சாம்ப் பின்னால் உட்கார வைத்துக் கொள்வேன் ,இருவரும் வீட்டுக்குப் பின்னால் இருபதடி தூரத்தில் இருந்த ரயில் தண்டவாளம் வரை செல்வோம். திருவனந்தபுரத்துக்கோ,தூத்துக்குடிக்கோ போகும் ரயில்களில் ஏதோ ஒன்று எங்களைக் கடக்கும் வரை அதன் ஜன்னல்களிலும் வாயிலிலும் தெரியும் மனித முகங்களுக்கு டாட்டா காட்டிக் கொண்டே இருப்போம், அப்படி ஒரு வினோதமான விரதமோ என்னவோ! ரயில் தன் முழு உடலையும் நெளித்து சுளித்து மறையும் வரை இது நித்தியக் கடமையாக இருந்தது அப்போது. அந்த இடத்தில் தண்டவாளம் கடக்க முயன்ற ஒரு சித்த சுவாதீனமில்லாத பெண் ரயிலில் அடிபட்டு இறந்த கதை கேட்ட
பின் அந்த சின்னஞ்சிறு குதூகலம் அளவற்ற பீதியோடு முற்றுப் பெற்றது.

அதற்கடுத்த ரயில் அனுபவம் தான் எனது முதல் ரயில் பயணம்.

பாப்பு பிறக்கும் முன்பு ஏழாம் மாதம் அம்மா சீமந்தம் செய்ய சிவகாசிக்கு அழைத்துப் போக வந்தார்கள்.தேவ் பிறந்த ஊர் சிவகாசி தான்.அனந்தபுரி எக்ஸ்பிரசில் இரண்டு லோயர் பெர்த் ஒரு அப்பர் பெர்த் டிக்கட்டுகள்.தேவ்க்கு அப்பர் பெர்த் ,அம்மாவுக்கும் எனக்கும் லோயர் பெர்த்.எதிர் மிடில் பெர்த்தில் ஒரு நடுத்தர வயது நபர்,மற்றவர்கள் ஞாபகமில்லை.

ரயில் கிளம்பியதும் அந்த மிடில் பெர்த் நபர் பொதுவாகத் தான் பேச ஆரம்பித்தார் ,மதுரையில் இறங்கப் போகிறவராம்,பார்க்க ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி போன்ற தோற்றம்.தேவ்க்கு மிடில் பெர்த் ஏன் கிடைத்திருக்கக்கூடாது என்ற சலிப்போடு தேவ் இடம் என் பக்கத்திலேயே உட்கார்ந்திருக்கச் சொல்லிக் கொண்டிருந்தேன்.சீமந்தம் முடிந்ததும் நான் இல்லாமல் தேவ் மட்டும் தனியே சென்னைக்கு திரும்ப வேண்டும்,குழந்தை பிறந்த பிறகு ஐந்தாம் மாதம் தான் இனி சென்னைக்கு அனுப்புவார்கள் எனத் தெரிந்ததால் ஒரே சோகமாகி
விட்டது எனக்கு.இந்த மனிதர் இப்போதைக்கு மிடில் பெர்த் சீட்டை இழுத்து விடாமல் இன்னும் கொஞ்ச நேரம் எதையாவது பேசிக் கொண்டே இருந்தால் தேவ் இப்படியே உட்கார்ந்திருக்கலாமே என்று யோசித்துக்கொண்டிருந்தேன்.

அதற்கேற்றார் போல என் பக்கத்து மிடில் பெர்த்துக்கு உரிய அந்த நடுத்தர வயது மனிதர் எங்களோடு பேச ஆரம்பித்தார்.சாதரணமாக பேச ஆரம்பித்தவர் தான்;பாவம் என் அம்மா கொஞ்சம் இரக்க சுபாவி அவர் பேசுவதை சுவாரஸ்யமாகக் கேட்க ஆரம்பிக்கவே ,அங்கே இங்கே தாவி அவரது சொந்தக் கதையையையும் சொல்ல ஆரம்பித்தார்.அவருக்கு ஆண் ஒன்றும் பெண் ஒன்றுமாக இரண்டு குழந்தைகளாம்.இருவருமே யுனிவர்சிட்டி ரேங் ஹோல்டர்ஸ் ,மனைவி வங்கி மேலாளராம்,அருமையான குடும்பம் ,சந்தோசமாக வாழ்ந்திருக்கிறார்கள்.

நகரத்தின் செல்வாக்கான பகுதியில் ஒரு பங்களா,உபயோகத்துக்கு காஸ்ட்லி கார்,இரண்டு பிள்ளைகளாலும் சமூகத்தின் முன்னிலையில் கிடைத்த கௌரவமிக்க பார்வை,இன்னும் பணி ஓய்வு பெறாது சர்வீசில் இருக்கும் தம்பதிகள் மணியான இரண்டு பிள்ளைகள்,சொந்தங்களின் மத்தியில் கிடைத்த ஆரவாரமான வரவேற்பு.எல்லாவற்றுக்கும் மகுடமிட்டது போல மகன் கேம்பஸில் செலக்ட் ஆகி வேலைக்காக அமெரிக்கா போகப் போகிறான் என்றதும் சொல்லி மாளவில்லை சந்தோசத்தை.

நாளை அதிகாலை விமானமேற வேண்டிய மகன்,முதல் நாள் இரவு வீட்டு குளியலறையில் இசகு பிசகாக வழுக்கி விழுந்து மண்டையை உடைத்துக் கொள்வான் என இவர்கள் எதிர்பார்த்திருக்க முடியுமா?!அப்படியே விழுந்தவன் மீண்டும் பழைய படி எழுந்து வரவே போவதில்லை என்பதையும் தான் பாவம் இவர்கள் எதிர்பார்த்திருக்க முடியுமா என்ன?! அமெரிக்க விமானம் ஏற வேண்டிய மகன் அடுத்தொரு மூன்றே மாதத்தில் சொர்க்க விமானம் ஏறுவான் என பாவம் அந்த பெற்றோர் அறிந்திருக்கத் தான் இல்லை. விழுந்த நாள் முதல் கோமாவில் இருந்தவன் கதையை விதி இப்படி முடித்து வைக்க,பெற்றவள் மனம் புழுங்கிப் புழுங்கி சிதைந்ததில் அவளுக்கு முழுதாக இன்னும் 7 வருட சர்வீஸ் மீதமிருக்கையில் அந்த அம்மாள் கட்டாய ஓய்வு பெற்று வீட்டு நர்ஸ் துணையில் காலத்தை ஓட்டி கடமையே என ஒரே வருடத்தில் புத்தி பிசகி நினைவிழந்து உருக்குலைந்து அவளும் இவரிடமிருந்து ஒரேயடியாய் விடை பெற இப்போது கல்யாணமாகாத ஒரே மகள் பணி நிமித்தம் அமெரிக்காவில் இருக்க.

தினம் வீட்டுக்குப் போய்த்தான் ஆக வேண்டும் எனும் கட்டாயமே அற்றதொரு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பதாக தன் கதையை எங்களிடம் அவர் சொல்லச் சொல்ல எனக்கு என் தம்பியும் அப்பாவும் ஞாபகம் வரவே கண்கள் கலங்கி விட்டன. மகனை வைத்து தான் கண்ட கனவுக் கோட்டைகள் எல்லாம் சரிந்து சின்னா பின்னமானத்தில் அந்த மனிதருக்கு துக்கம் இன்ன அளவென்றில்லை.கதையை சொல்லி முடித்து கையில் இருந்த கர்சீப் பிழியும் மட்டும் அழுது தீர்த்தார்.நாளை மகள் வருகிறாளாம்.அவள் வருகையில் வீட்டில் அவளை வரவேற்க யார் இருப்பார்கள்? இருவரைப் பறிகொடுத்த பின் அந்த வீட்டுக்குப் போக மனமில்லாமல் சென்னையே கதி என்று தான் கிடந்தாலும் இன்று மகளுக்காக அங்கே போவதாக சொல்லி சன்னமான தேம்பலுடன் அமைதியானார்.

அந்தப் பயணத்தில் இப்படி அந்த மனிதரும் அவரது சோகமும் ரயிலோடு இணைந்து இன்றளவும் அது மறக்க முடியாத சம்பவமாகி விட்டது

இவை எல்லாம் தாண்டி எனக்குப் பிடித்த ரயில் கதை இப்போதும் எங்கள் ஊர் பக்கங்களில் வழக்கத்திலிருக்கும் ஒரு ஹாஸ்யம் தான் .

முதன் முதலில் ரயிலில் ஏறிய கிராமத்து ஆசாமி ஒருவர் ரயில் பயணம் முடிந்ததும் ஊர் மந்தையில் உட்கார்ந்து பெருமையாகச் சொல்லிக் கொண்டாராம்.

“இந்த ரயிலிருக்கே ரயிலு …அத ஓட்டறது என்ன ஒரு சுலு தெரியுமாடா?! டிரைவர் வெள்ளத் தொப்பிய போட்டுகிட்ட ரயிலு டான்னு கிளம்பிடுது,அவரு வெள்ளத் தொப்பியைக் கழட்டுனா டபால்னு நின்னுடுது,இம்புட்டுத் தான் ரயிலு ஓட்டறது,என்னா சுலுவுங்கர?! ”

மந்தையில் இருந்த ஆட்களெல்லாம் “அம்புட்டுத் தானா “என்ற ரேஞ்சில் அந்த மனிதர் சொன்னதை நம்பிக்கையோடு கன்னத்தில் கை வைத்து கேட்டுக் கொண்டிருந்தர்கலாம் ஒரு காலத்தில்.அப்போ நானெல்லாம் பிறக்கலைங்க நிஜமாவே நம்புங்க.

ரயிலின் தாலாட்டு பிடித்திருந்தாலும் கூட சென்னை டூ தேனிக்கு ரயிலை விட தனியார் விரைவுப்பேருந்தே சாலச்சிறந்ததென்ற முடிவில் இருந்ததால் பல முறைகள் ரயில் பயணங்களை தவற விட்டிருக்கிறேன் நான் . என்னைத் தவிர குடும்பத்தில் எல்லோருமே ரயிலோடு மிக்க சிநேகிதமானவர்களே.

தாத்தா சொன்ன ரயில் கதை :

அப்பா வகை உறவில் தாத்தா ஒருவர் அந்த கால ரயிலில் டி.டி.ஆர் .ஒரு முறை அவர் டிக்கட் பரிசோதிக்கச் சென்ற ரயில் பெட்டியில் பிரபல வாடியா குரூப் அதிபர் முஸ்லி வாடியா குடும்பம் பயணம் செய்ததாம்.அவரது பேரனோ மகனோ ஞாபகமில்லை அந்தச் சிறுவன் தூங்கும் போது கூட பள்ளிக்கு எடுத்துச்செல்லும் புத்தக பேக் ஒன்றை முதுகில் சுமந்தவாறு தூங்கிக்கொண்டிருந்தானாம் அங்கே ,அதைப் பார்த்து அதிசயத்து “ஏன் இப்படி ?” என்று இவர் கேட்க ,வாடியா ” அவனுக்கு அப்படியே பழகி விட்டது…பழக்கப் பட்ட
ஒன்றை அவனுக்கு விருப்பமான தொல்லைகள் ஏதும் இல்லாத ஒரு செயலை நாம் ஏன் தடுக்க வேண்டும் அதனால் பேசாமல் விட்டு விட்டோம் ” என்றாராம்.குழந்தைகள் தமக்கு விருப்பமானவற்றை செய்யும் போது நமது அசௌகரியங்களைக் கணக்கில் கொண்டு பலவற்றை நாம் தடுப்பது ஞாபகம் வந்தது எனக்கு.

குஷ்வந்த் சிங் சிறுகதை ஒன்றில் வரும் ரயில் கதை :

குஷ்வந்த் சிங் சிறுகதை தொகுப்பு ஒன்று தேவ் வைத்திருந்தார்.படிக்க புத்தகம் கிடைக்கா விட்டால் அப்புறப்படுத்த மறந்த போன வருடத்திய கல்யாண பத்திரிகைகளை கூட திரும்பப் (மீள் படிப்பு) படிக்கும் பழக்கமுள்ள நான் இதை மட்டும் விட்டு விடுவேனாக்கும்! எடுத்தேன்..படித்தேன் அதிலொரு நையாண்டியான ரயில் கதை ;

குஷ்வந்த் சிங் ரயிலின் அப்பர் பெர்த்தில் பயணம் செய்கிறார்,அப்போது அதே பெட்டியில் ஒரு பெங்காலி புதுமணத் தம்பதிகள் ஏறுகிறார்கள்,அவர்களுக்கு லோயர் பெர்த் என்று ஞாபகம்,கதை வாசித்து ஏழெட்டு ஆண்டுகள் இருக்கும்,குஷ்வந்த் சிங் எழுதியதை அப்படியே சொல்கிறேன் ;

அவர்களுக்கு அன்றைக்கு காலையில் தான் திருமணம் ஆகியிருந்தது என்பது அவர்களை வழி அனுப்ப வந்த உறவுக் கூட்டத்தின் பேச்சுக்கள் மூலம் தெரிந்தது.,பையன் பெங்காலி பேராசிரியராக இருக்கக் கூடும்,பெண்ணும் நல்ல முதிர்ச்சியுடன் தான் இருந்தாள்,இருவருக்குமே அன்றைக்கு தான் சாந்தி முஹூர்த்த நாளாயிருக்க வேண்டும்,ஆனால் இந்நேரம் ரயிலில் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்,அதற்காக அவர்கள் எதையோ இழந்து விட்டார்கள் என்று சொல்லி விட முடியாது. மொத்தமுள்ள நான்கு சீட்களில் அவர்களுக்கான சீட்களைதவிர இன்னும் மூவர் இருந்தோம் நான் மேலே எனக்கு எதிர் மேலே இன்னொருவர்.கீழே அவர்கள் இருவரும்.நாங்கள் தூங்கி விட்டோம் என நினைத்து அந்த பெங்காலி பேராசிரிய மாப்பிள்ளை தன் சாந்தி கல்யாண வேட்கையை ஓடும்
ரயிலில் இன்னும் சிலர் அங்கே இருக்கிறார்களே எனும் இங்கிதமே இல்லாமல் அங்கேயே தீர்த்துக் கொள்ளத் தொடங்கி இருந்தான்.அந்தப் பெண்ணும் அதைத் தடுத்தார் போலெல்லாம் தெரியவில்லை.இருவருக்கும் ஊர் போய் சேரும் முன்அப்படி என்ன அவசரமோ! இந்தியத் திருமணங்களும் …முதலிரவுகளும் இப்படிஓடும் ரயிலில் அவசர அவசரமாய் நடந்து முடிவதைக் கண்டால் நகைக்காமல் என்னசெய்வதாம்?!

இப்படி முடிகிறது குஷ்வந்த் சிங்கின் கதை ;

ரயிலில்பயணம் செய்தது இரண்டே முறை தான் என்றாலும் ரயிலைப் பற்றிச் சொல்ல பார்த்தது,கேட்டது,படித்தது என நிறையக் கதைகள் இருக்கத்தான் செய்கின்றன என்னைப் போலவே ஒவ்வொருவருக்கும்.

– அக்டோபர் 15th, 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *