கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 22, 2014
பார்வையிட்டோர்: 10,186 
 

மாரி, கொல்லையில் செழித்து வளர்ந்திருந்த முருங்கை மரத்திலிருந்து அலக்கு கழியால் பறிப்பதை கீழே மண்ணில் விழாமல் இலாவகமாகப் பிடித்துக் கொண்டிருக்கிறாள் அவன் மனைவி காசாம்பு.

கைப்பிடியளவு இனுக்குகள் சேரச் சேர கத்தையாய் கட்டி விரித்திருக்கும் ஈர சாக்குத் துண்டில் அடுக்குவதும் அவளே. வயதின் முதிர்வு இருவரையும் சீக்கிரமே சோர்வாக்கியது.

“எத்தனை கட்டு தேறுது புள்ள?” தலைக்கு மேல் தூக்கித் தூக்கி துழாவிய அலக்கு தந்த தோள்வலியோடு, கழியை கீழிறக்கி தரையில் அண்டை கொடுத்து தோளில் சாய்த்துக் கொண்டே மாரி கேட்கிறான்.

“இத்தோட பதினெட்டு ஆவுது… போதாது…?” காசாம்புவுக்கும் உட்கார்ந்தால் தேவலை என்ற அசதி ஒலிக்கிறது குரலில்.

“போதும் போ… பதினெட்டஞ்சி தொண்ணூறு… பேரத்துல பத்திருபது கொறஞ்சாலும் பாதகமில்ல. சுள்ளான் மண்டியில கடன் சொல்லி வாங்கியாந்த காய்கறிங்க இருவது கிலோயிருக்கு. இதுங்களை வித்து முதலாக்கி வூடு வந்து சேர்ந்தாலே போதுமாச்சே. போய் எனக்கு ஏதாச்சும் நீராகாரமிருந்தா எடுத்து வெய். அந்தக் கண்ணியோரமா துளுத்துக் கெடக்குற வல்லாரையையும், மொடக்கத்தானையும் ஆய்ஞ்சினு வாரேன். சுண்டக்காய் பறிச்சு வெச்சியா?”

“ம்ம்… காலையில வாய்க்காலுக்கு போய் வாறச்சேயே அங்கொண்ணும் இங்கொண்ணுமாயிருந்த செடிங்கள்ல பறிச்சாந்தேன். முக்கா படியாவது தேறும்.” சொல்லிக்கொண்டே குடிசையின் பின்வாசல் தட்டியை நோகாமல் நகர்த்தி உள்ளே போகிறாள் காசாம்பு.

இவளுக்கு முன் பிய்ந்த கீற்று வழியே உள்நுழைந்து அடுப்பருகே கவிழ்த்துக் கிடக்கும் பாத்திர பண்டங்களை முகர்ந்து கொண்டிருந்த நாய் சந்தடியில் சுதாரித்து இன்னொரு ஓட்டை வழியே வெளியே பாய்ந்தது. “அட நாசமத்து போவோ… வெச்சிருக்கிற ஒருவாய் கஞ்சிக்கும் வேட்டு வெக்கப் பாத்தியா திருட்டு நாயே…” வைதபடி கையில் கிடைத்த உரிமட்டையை எடுத்து அது ஓடிய திசையில் எறிந்து விட்டுப் பரபரப்பாக கஞ்சிக் கலயத்தின் பத்திரத் தன்மையை ஆராய்கிறாள்.

“அப்பாடி… இன்னும் செத்த கழிச்சு வந்திருந்தா வயித்துக்கு ஈரத் துணிதான்.” அவனுக்கு ஒரு கலயத்தில் சற்று திடமாகவும், தனக்கொரு கிண்ணியில் நீர்க்கவும் கரைத்து புளித் துவையலை வழித்து கலயத்தின் விளிம்பில் ஒட்ட வைத்தாள்.

மடக் மடக்கென பாதி கஞ்சியைக் குடித்து மூச்சு விட்டுக் கொண்டான். ஏழரை கட்டை சுருதியில் ஏப்பம் ஒன்று வந்தது அவனிடமிருந்து. “பதினாறு வகையும் பதமா சாப்பிடறவங்களாட்டம் ஏப்பத்தைப் பாரு” கழுத்தை வெட்டி நொடித்தவள், “இன்னைக்கு ஈரங்கி… கோர்ட்டாண்ட போயி மவனைப் பார்த்துட்டு வர்றியா?” என்றது தான் தாமதம்…

“அடி செருப்பால…” என்று ஆவேசமாக எழுந்தவன் கீழிருந்த கஞ்சிப் பாத்திரத்தை எடுத்து வீசியடித்தான். நெளிந்து நகர்ந்தவள், “என்னுமோ கெரக வாட்டம்… தறுதலையாயிட்டான். அதுக்காக பெத்த வயிறு துடிக்காம இருக்குமா?” என்றபடி தட்டாமாலை சுற்றிக் கொண்டிருந்த பாத்திரத்தை எடுக்கக் குனிந்தவள் இடுப்பில் எட்டி விட்டான் ஒரு உதை. தரையெல்லாம் சிதறிக் கிடந்த கஞ்சிப் பருக்கைகளின் மேல் அலங்கோலமாக விழுந்தாள்.

“இந்த வயசிலும் உழைச்சு ஓடாகனுமுன்னு எனக்கும் கெரகச்சாரம்தானா? மனுசனை ஒருவாய்க் கஞ்சி நிம்மதியா குடிக்க வுடுறியா? இனிமேட்டு இந்தப் பக்கம் அவன் தலை வெச்சுப் படுக்கக் கூடாது. சேக்காளிங்க கூடவே கெட்டழியட்டும். புள்ளையே பொறக்கலைன்னு இருந்துட்டுப் போறேன். நான் யாவாரத்துக்குப் போன நேரத்துல கூப்பிட்டு வெச்சுக் கொலாவினே… மவளே உனக்கும் சேர்த்துப் பாலுதான்” உறுமிவிட்டு கொடிக்கழியில் கிடந்த துண்டை எடுத்து உதறி தலையில் முண்டாசாக்கிக் கொண்ட வேகத்தில் சில்லரைப் பையை எடுத்துக் கொண்டு வெளியேறினான்.

ஊருக்கு வெளியேயிருக்கும் புறம்போக்கு குடிசையிலிருந்து வெயிலுக்கு முன் மாரியின் தள்ளுவண்டி வியாபாரத்துக்குக் கிளம்பிவிடும். சைக்கிள் மிதிக்க முடிந்தவரை காய்கறிகள் நிரம்பிய கள்ளிப்பெட்டியை பின்னால் வைத்துக் கட்டி நாலு மிதி மிதித்தால் ஊரையடைந்து விடுவான். இரண்யா வந்து தர்மாஸ்பத்திரி வைத்தியத்துக்குப் பின் சைக்கிளை விற்று விட்டான். இந்தத் தள்ளு வண்டியை ஒரு சலவைக்காரரிடம் அழிந்த விலைக்கு வாங்கி தட்டிகொட்டி சீராக்கிக் கொண்டான். டயர் வைத்து தைத்த செருப்பு ‘சரட் பரட்’டென சப்தமெழுப்பியபடி உடன் வந்தது. கழற்றினானென்றால் முன்னும் பின்னும் வளைந்து கப்பல் போலாகிவிடும். இந்த லட்சணத்தையும் அந்த எடுபட்ட நாயிடமிருந்து பாதுகாக்க குடிசையின் எரவானத்தில் செறுகியாக வேண்டும் மறக்காமல் தினம்தினம்.

மனசின் வேகம் கையிலும் காலிலும் கசிய வழக்கத்தை விட சீக்கிரமே ஊருக்குள் வந்தாயிற்று. தன் வீட்டு வாசலைக் கூட்டிக் கொண்டிருந்த பெண்,

“கீரை எப்படிங்க?” என்றாள்.

“கத்தை ஐஞ்சு ரூவா. முத போனி… பேரம் பேசாம வாங்கிக்க”.

“மூணு கத்தை பத்து ரூவாக்கு வருமா?”

“ம்ம்… சரி…சரி, கொண்டா.” வாங்கிய ரூபாயுடன் கைநீட்டி வண்டியிலிருக்கும் காய்கறிகளை மூன்று சுற்று சுற்றி நெட்டி முறித்து சில்லரைப் பையில் போட்டுக்கொண்டான்.

உச்சி உறுமத்துக்கும் ஐந்தாறு தெருதான் சுற்றி வர முடிந்தது அவனால். கடன் சொல்லி வாங்கி வந்த காய்களுக்கு தரக்கூட காசு தேறவில்லை. இவன் மனசு போலவே வாடி வதங்கின அவையும். அங்கங்கு காய் விற்கும் வீடுகளில் குடிக்க தண்ணீர் கேட்டு தனக்கும் காய்களுக்குமாக ஈரமாக்கிக் கொண்டும் தீராத வறட்சிக்கு ஒரு நன்னாரி சர்பத் கேட்டுக் கெஞ்சியது தொண்டை. “அய்யோ… அது ஆகுமே ஐஞ்சு ரூபா!” மலைத்துப் போனவனுக்கு வயிற்றில் பால் வார்ப்பது போல் எதிர்ப்பட்டாள் தயிர்க்காரப் பொன்னம்மா.

“என்னாய்யா… யாவாரமெல்லாம் நல்ல ஓட்டமா?” என்றவளிடம்,

“ம்க்கும்… சாண் ஏறினா மொழம் சறுக்குற பொழைப்பு தானே நமக்கெல்லாம்…”.

“நூறு தக்காளியும், அரைகிலோ சின்ன வெங்காயமும் கொடேன்.”

“இந்தா… பையப் பிடி. பதினோரு ரூவா அம்பது பைசா எடு”.

“அய்ய… ஒம்பதே முக்கால் தானிருக்கு. நாள பின்ன தரட்டா மீதிய…?”

“ம்ம்ம்… மோர் கீர் மீதியிருக்கா?”

“ம்… ஒரு தம்ளர் தரவா?”

தவணையும் தாகமும் தீர்ந்தது மாரிக்கு.

ஒவ்வொரு தெருவிலும் வாடிக்கை வீடுகளில் நின்று குரல் கொடுத்தான் மாரி. ஒருவாறாக வண்டி பாரம் குறைந்தது. இன்னும் மதுரைக்காரம்மா வீடுதான் பாக்கி. எப்படியும் மிச்ச மீதியை விற்று விடலாமென நம்பிக்கையும் தெம்புமாக நடக்கிறான்.

மதுரைக்காரம்மா வீட்டில் மளிகை வியாபாரம். வீட்டைய்யாவின் வியாபாரத் தேர்ச்சியில் ஊரையே வளைக்குமளவு சொத்து சேர்ப்பு. சொந்த ஊரிலிருந்து வியாபாரத்துக்கு ஒத்தாசையாக ஏழெட்டு பொடிப் பையன்களை தருவித்திருக்கிறார்கள். அவர்களுக்கும் சாப்பாடு இவங்க வீட்டில் தான் என்பதால் எப்போதும் காய்கறிகளை சற்று அதிகமாகவே வாங்குவது வழக்கம். மிஞ்சியவற்றை ஒரு குத்துமதிப்பாக விலை போட்டு அவர்களிடமே தள்ளிவிட்டு வெறும் வண்டியை உருட்டிப் போவது மாரிக்கு பெரும்பாலான நாட்களில் நடப்பது தான்.

நினைத்தபடி மதுரைக்காரம்மா எல்லா காய்களையும் விலை கட்டிட்டாங்க.குடித்த மோர் செரித்துப் போக வயிறு குரலெழுப்பியது. காலையில் வீறாப்பாய் விசிறியடித்த பழஞ்சோறு மனதுள் பல்லிளித்தது.“பெரியம்மா… காசு எடுத்துட்டு வர்றப்ப கொஞ்சம் தண்ணி கொண்டாங்க… நீராரமாயிருந்தாக் கூட தேவலை”என்றான் காய்களை அள்ளி அவரது கூடையில் போட்டபடி. பசியென்று வந்து நிற்பவர்களுக்கு பசியாற்ற ஏதாவது தருவதில் கணக்கு பார்ப்பதில்லை அந்தம்மா என்பதை அறிந்தவன் தான் மாரியும்.

“நைனா… நைனா” என்று குரல் வந்த திக்கில் திரும்பினான். அவன் மகன்தான். சற்று தொலைவாகவே கூட்டாளிகள் நின்று கொள்ள மகன் மட்டும் நெருங்கினான்.

“யாரு மாரி அது?” என்றார் பெரியம்மா. “எல்லாம் எனக்குன்னு பொறந்த எமன் தான்… ” சலிப்புடன் சாக்கை உதறி மடித்துப் போட்டான். மாரிக்கான அனுதாபமும், அவன் மகனுக்கான அருவருப்பும் கலந்திருந்தது அந்தம்மா பார்த்த பார்வையில்.

வந்தவன், அந்தம்மா வீட்டுக்குள் போகும்வரை தலை சொறிந்தபடி நிற்க,

“வெளிய வுட்டுட்டாங்களா… இனியாச்சும் ஒழைச்சுப் பொழைங்கடா” கடுகடுத்தான் மாரி.

“நைனா… வக்கீலுக்கு காசு தரணும்….” இழுத்தான் மகன்.

“போடா போக்கத்தவனே… நான் நாயா அலைஞ்சு நாலு காசு பார்க்கிறேன். வெட்டியா சுத்தறதுமில்லாம வீண் வம்பு செஞ்சு உள்ள போயிட்டு வர்ற… தர வேண்டிய காசுக்கு வக்கீல் வீட்டுல ஏதாச்சும் வேலைக்கு சேர்ந்துக்கோ… மிச்ச காலத்துக்காவது உருப்படற வழியப் பாரு.”

“தரமாட்டியா… தரமாட்டியா நீ” என்று பல்லைக் கடித்தவன் சில்லரைப் பையை வண்டியிலிருந்து எடுக்க முயன்றான். மாரி அவன் கையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, “இத சுள்ளான் கடைக்கு தராட்டி நாளைக்கு யாவாரத்துக்கு காய் கெடைக்காதுடா”என்றான் பதற்றமாக.

உள்ளிருந்து காய்கறிக்கான பணமும், மாரிக்காக சொம்பு நிறைய கம்பங்கூழும் எடுத்து வந்தார் மதுரைக்காரம்மா. “டேய், பெத்த அப்பன்கிட்ட என்னா போக்கிரித்தனம்? போடா போடா…” என்றார் விரட்டலாக.

சடாரென சில்லரைப் பையை விட்டுவிட்டு அந்தம்மாவின் கழுத்து சங்கிலியைக் குறிவைத்துப் பாய்ந்தான் அவன்.

நடுநடுங்கிப் போனான் மாரி. கைகாலெல்லாம் வெலவெலத்துப் போனது. அந்தம்மாவின் கூக்குரல் கேட்டு உள்ளிருந்து சிலர் ஓடிவந்தனர். அடுத்த சில நிமிடங்களில் தகவலறிந்து மளிகைக்கடைக்காரரும் வந்து விட்டார். நசுங்கிக் கவிழ்ந்து கிடந்த சொம்பிலிருந்த கடைசி சொட்டுக் கூழும் மண்ணோடு ஐக்கியமானது.

எல்லோருக்கும் நடுவில் கூனிக்குறுகி நிற்கிறான் மாரி. நாலு காய் விற்றுப் பிழைத்தவன் தன்மானத்தையும் விற்க வேண்டிய நேரம். எந்தத் திக்கும் இடமளிக்கவில்லை அவன் நகர. மளிகைக் கடைக்காரரின் வியாபார மூளை அவரின் குரல்வழி ஓங்கியது. அவனது புறம்போக்குக் குடிசையில் ஒரு மளிகைக் கடை முளைக்கப் போகிறது. மேலுமிரு எடுபிடிகள் கிடைத்தனர் மளிகைக்கடைக்காரருக்கு.

– நவம்பர் 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *