யாவரும் வெல்லலாம்!

0
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 8,796 
 

காலையில் காபியுடன் நாளிதழை பிரித்த சண்முகம், தலைப்புகளை பார்வையிட்டபடி, பக்கங்களைப் புரட்டினார்.
புரட்டும் போது, அதனுள் இருந்து, பிட் நோட்டீஸ் ஒன்று, சரிந்து விழுந்தது; எடுத்தார். அதில், “வருக… வருக…’ என்ற அழைப்போடு, அச்சாகியிருந்த விளம்பரம், அவர் கவனத்தை பிடித்து நிறுத்தியது.
காபி டம்ளரை தள்ளி வைத்துவிட்டு, அந்த விளம்பரத்தை வாய்விட்டு படித்தார்.
“உங்கள் நல்லாதரவுடன் சோளிங்கர் ரோட்டில், கிளை திறப்பு விழா. அனைவரும் திரளாக வருக. கடைத் திறப்பை முன்னிட்டு, எல்லா ரக துணிகளுக்கும், 20 சதவீத தள்ளுபடி. இச்சலுகை மூன்று நாட்களுக்கு மட்டுமே… கடை திறப்பாளர் மதிப்பிற்குரிய சட்டசபை உறுப்பினர் மனோகர். இப்படிக்கு மணி அண்டு மாணிக்கம் – உரிமையாளர்கள். தேவதை ஜவுளிக்கடை, பள்ளிப்பட்டு!’
படித்துவிட்டு, பக்கத்தில் இருந்த மனைவி தெய்வானை மற்றும் மகன் பரணியை ஏறிட்டுப் பார்த்தார். அவரை
யாவரும் வெல்லலாம்!போலவே, அவர்களும் வியப்பில் ஆழ்ந்தனர்.
சில ஆண்டுகளுக்கு முன் வரை, மணி, கணக்கில் இல்லாத ஒரு அனாமத்து.
கிழிந்த ட்ரவுசரை போட்டு, மூக்கு ஒழுக சுற்றிக் கொண்டிருந்தான். பெற்றோர் கிடையாது. தாய் வழி பாட்டி பொங்கிப் போட்டுக் கொண்டிருந்தாள். படிப்பு ரொம்ப சுமார். எட்டாவது பெயில். யார் கூப்பிட்டாலும், போய், சொன்ன வேலையைச் செய்து கொடுத்து, காசை வாங்கி, போடும் சாப்பாட்டை தின்பான். பெரும்பாலும், சண்முகம் வீட்டில்தான் இருப்பான். பரணியின் பழைய சட்டை, ட்ரவுசர்களைத்தான் வாங்கி போட்டுக் கொள்வான். வேடிக்கையாய் பேசுவான்.
“ஏம் மாமா… நானும் உங்கள மாதிரி பணக்காரனாகணும். அதுக்கு வழி என்னன்னு சொல்லுங்க…’ என்பான்.
“அதெல்லாம் பூர்வ ஜன்ம புண்ணியமிருக்கணும். அப்பன், ஆத்தா சம்பாதிச்சு வைச்சிருக்கணும் அல்லது சுயபுத்தியும், சாமர்த்தியமும் இருக்கணும். ஆண்டிக்கு எதுக்கு அம்பாரக் கணக்கு. உனக்கு தேவை ஒருபிடி சோறு, ஒரு கந்தை. அதோடு திருப்தியாய் இரு…’ என்பார்.
“போய் பிச்சை எடு அல்லது கொள்ளை அடி. இப்ப அதுலதான் நல்ல பணம்…’ என்பான் பரணி.
“சேச்சே… ஒரு காசுன்னாலும், நேர்மையாய் சம்பாதிக்கணும்…’ என்று சொல்லி வளைய வந்து கொண்டிருந்தான்.
திடுதிப்பென்று, அவனைக் காணவில்லை. வயலுக்கு குப்பை சுமக்க ஆள் தேடியபோது, “மணி, பக்கத்து டவுன்ல வேலைக்குப் போறான்மா…’ என்றாள் கிழவி. “என்னமோ துணிக்கடைன்னு சொன்னான். மாசம் முன்னூறு தர்றாங்க…’ என்றபோது, துளி ஆச்சரியம். இவனுக்கும், ஒருத்தன் வேலை கொடுத்திருக்கானே என்று!
கொஞ்ச நாள் கழித்து, ஒரு நாள் தேடி வந்து, “மாமா… சொந்தமா பிசினஸ் செய்யலாம்ன்னு இருக்கேன். பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல, தன்சிங் டாக்டர் வீட்டுக்கு போற வழியில, ஒரு கடை பார்த்திருக்கேன். பரணிய பார்ட்னரா சேர்த்து விடுங்க. ஒரு இருபதாயிரம் போட்டிங்கன்னா போதும். அவனும், படிச்சுட்டு சும்மா இருக்கான். சினிமா, டிராமான்னு சுத்திக்கிட்டிருக்கான். பரணியை பார்ட்னராய் சேர்த்து விடுங்க. நான், அவனைக் கவனிச்சுக்கறேன். அவனுக்கும், பொறுப்பு வந்தாப்ல இருக்கும். என்ன சொல்றீங்க?’ என்றான் மணி.
திகைத்துதான் போனார் சண்முகம்.
மகன் பொறுப்பில்லாமல், எந்த வேலைக்கும் போகாமல், ஊர் சுற்றுவதில் அவருக்கு கவலை தான். அதை, இந்த மணியின் வாயால் சொல்லக் கேட்பதில், அவருக்கு என்னவோ போலிருந்தது. “யார் யாரை விமர்சிப்பது? என்ன இருந்தாலும், பரணி வசதியான வீட்டு வாரிசு. இந்த மணி, ஒரு அனாமத்து. இவனெல்லாம், ஒரு வார்த்தை சொல்கிற அளவுக்கா நம் நிலமை இறங்கி விட்டது?’ என்று, மனம் ஒருகணம் சீறியது. மணியை தீர்க்கமாகப் பார்த்தார்.
இருபத்தைந்து வயதுக்குரிய வளர்ச்சி இருந்தாலும், முகத்தில் மந்தம். கொஞ்சம் கலராய் சட்டை பேன்ட் போட்டு, கழுத்தில் கர்ச்சிப் கட்டிக்கொண்டு, சினிமா கொட்டகையில் தரை டிக்கெட் எடுத்து, விசிலடிக்கும் பையன் போலிருப்பவனுக்கு பேச்சில் எவ்வளவு திமிர்.
கசப்பை உதட்டுக்குக் கொண்டு வந்து, “மணி… நம்ம ஊர்ல ஒரு பழமொழி உண்டு. கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானம் ஏறி வைகுண்டம் போனானாம். அப்படி இருக்கு நீ சொல்றது. துணிக்கடைல வேலை செய்யறது வேற. துணிக்கடை நடத்துறது வேற…’ என்றார்.
“என்ன மாமா அப்படிச் சொல்லிட்டிங்க… இன்னைக்கு வானத்துல ப்ளேன் ஓட்றவங்களும், ராக்கெட் ஓட்றவங்களும், எந்தக் கூரை ஏறி கோழி பிடிச்சாங்க?’ என்றான்.
அவர் முகம் சுருங்கி விட்டது.
அந்த நேரம் எங்கிருந்தோ வந்த பரணி, மணி தன் அப்பாவுக்கு சமமாக திண்ணையில் நேருக்கு நேர் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்து வெகுண்டான். இழுத்து கீழே தள்ளப் பாய்ந்தான். தடுத்தார் சண்முகம்.
“விடுடா… அவன் பழைய மணி இல்லை. பெரிய முதலாளி. பிசினஸ் பார்ட்னரா உன்னை இருக்கச் சொல்லி கேட்டு வந்திருக்கான். நியாயமா அவனை உள்ளே சேர்போட்டு உட்கார வச்சிருக்கணும். நீயானால், அவன் திண்ணையில் உட்கார்ந்ததுக்கே கோவிச்சுக்கறியே…’
“ஓஹோ…’ என்று வியந்தான் பரணி.
“அவ்வளவு பெரிய ஆளாயிட்டானா மணி?’ என்றாள் தெய்வானை.
அவர்கள் தன்னை பரிகாசம் செய்கின்றனர் என்பதைக் கூட உணராதவனாய், தான் வைக்கப் போகும் கட் பீஸ் கடையைப் பற்றியும், தான் கற்றுக் கொண்ட வியாபார நுணுக்கம் பற்றியும், உற்சாகமாகப் பேசத் துவங்கினான்.
“அய்யா மணி… நீ பெரிய விஷயம் பேசற. அதை புரிஞ்சுக்கற அளவுக்கு எங்களுக்கு அறிவில்லை. நாங்கள் எல்லாம் பிசினசுக்கு லாயக்கில்லை. அதெல்லாம், உன்னை மாதிரி திறமைசாலிக்குத் தான் பொருந்தும். நீ வேற பார்ட்னரை பாருப்பா…’ என்று விரட்டி விட்டனர்.
சிறிது நாள் கழித்து வந்தான்.
“கடைத் திறந்துட்டேன் மாமா…’ என்றான்.
“அப்படியா?’ ஆச்சரியப்பட்டார்.
“தையல்காரர் ஒருத்தர் பார்ட்னரா கிடைச்சார். கடைல துணி வாங்கறவங்க, வாசல்லயே தைச்சு போட்டுக்கிட்டு போலாம். தனியா டைலரைத் தேடி அலைய வேண்டியதில்லை. வாடிக்கையாளருக்கு சவுகரியம் எந்த அளவுக்கு செய்து தர்றமோ, அந்த அளவுக்கு வியாபாரம் பெருகும். இப்பவே, வியாபாரம் சூடு பிடிச்சிருச்சி!’
“அடேங்கப்பா… நீ சொல்றதைப் பார்த்தால், சீக்கிரமே பெரிய கடை முதலாளியாகி, நிறைய வசதி வந்து, காரு, பங்களா எல்லாம் வாங்கிடுவ போலிருக்கே…’ என்று கண்களை விரித்து ஆச்சரியமாக கேட்க, “உங்க வாய் முகூர்த்தம், அப்படித்தான் நடக்கட்டுமே மாமா…’ என்றான்.
“அது சரி… இன்னைக்கு சின்னதா ஆரம்பிச்சுட்டிங்க. நாளைக்கு பெரிய ஜவுளி கடையாயிட்டால், உங்களால நிர்வாகம் பண்ண முடியுமா? லட்ச லட்சமா பணம் புரளும். வரவு, செலவு பார்க்கணும்; வரி கட்டணும், லொட்டு லொசுக்குன்னு ஏராளமா பிரச்னை வருமே… அந்த தையல்காரர் படிச்சவரா… இதையெல்லாம் சமாளிப்பாரா?’
“நானாவது எட்டாவது… தையல்காரர் ஆறாவதுதான். ஆனால், நீங்கள் சொல்றது ஒரு பிரச்னையே இல்லை மாமா. படிச்ச திறமைசாலிகளை வேலைக்கு வச்சு, தேவையான சம்பளத்தைக் கொடுத்தால், அவங்க பார்த்துக்கறாங்க. எல்லார்க்கும் எல்லாம் தெரியணும்ன்னு இருக்கா என்ன?’ என்றான்.
“பார்த்துக்கோ… நீயோ நல்ல பையன். அப்பாவி. அந்த தையல்காரர் எப்படி? ஏமாத்திடப் போறான்…’ என்றதற்கு, “மாமா… புத்திகெட்டு நானே அப்படி செய்தாலும், செய்வேனே தவிர, டெய்லர் மாணிக்கம் செய்ய மாட்டான். அவன் மனசாட்சிக்கு பயந்தவன்…’ என்றான்.
சண்முகத்துக்கு நா எழவில்லை.
ஆனால், அவன் சரியான பாதையில்தான் போகிறான் என்பது மட்டும் விளங்கியது.
பரணிதான் டவுனில் சினிமா பார்க்கப் போய்விட்டு, திரும்பி வரும்போது சொன்னான்…
“பஸ் ஸ்டாண்ட் போற வழியில, சந்து முனைல, ஒரு இடத்துல கடை போட்டிருக்கான். பெட்டிக்கடைகூட பெருசா இருக்கும். இது, அந்த அளவு கூட இல்லை. நீட்ட நீட்டமா இரண்டு துணிகளைத் தொங்கவிட்டுருக்கான். ஒருத்தர் ரெண்டுபேர் வந்து போறாங்க. மத்தபடி ஈ காக்கை இல்லை…
“அவனும், அந்த பார்ட்னரும் உட்கார்ந்து கதை பேசிகிட்டிருக்காங்க. இந்த லட்சணத்துல, என்னைப் பார்த்ததும், என்னமோ, பெரிய முதலாளி மாதிரி கூப்பிட்டு பேசினான். நான், அவன் கூட சேரலைன்னு ரொம்பவே வருத்தப்பட்டு, எனக்கு, “அட்வைஸ்’ பண்ண ஆரம்பிச்சுட்டான். ரொம்ப அவசியம் தான்னு நினைச்சுக்கிட்டேன்…’ என்று சிரித்தான். அவன் சிரிப்பை ரசிக்க முடியவில்லை.
“அவனாவது கடைன்னு ஒண்ணை ஆரம்பிச்சிருக்கான். இங்கே ஒன்னையும் காணோமே…’ என்றார்.
முறைத்தான் பரணி. அவன் அம்மா ஒருபடி மேலே போய், சண்டைக்கு வந்தாள். “அந்த மணியை மனசுல வச்சிகிட்டு, என்பிள்ளைய மட்டம் தட்டற வேலய செய்யாதீங்க. சிறு பிள்ளை வெள்ளாமை வீடு வந்து சேராது. அந்த மணி, தத்துபித்துன்னு உளர்றத வச்சு, கணக்கு போடாதீங்க. சீக்கிரமே ஊத்தி மூடிட்டு, அஞ்சுக்கும், பத்துக்கும் பழையபடி நம்மகிட்ட கையேந்துவான் பாருங்க…’ என்று கொதித்தாள்.
பிறகு வந்த நாட்களில் வேறு மாதிரியான செய்திகள் வரத் துவங்கின…
“கட்பீஸ் வியாபாரம் சூடு பிடிச்சிருச்”… நம்ம ஊர்க்காரங்க எல்லாம், ஜாக்கெட் பிட்டு, சர்ட் பிட்டுன்னு அங்கதான் போய் எடுக்கறாங்க. கொஞ்சம் விலை குறைச்சும் கொடுக்கறான். அங்கயே நிமிஷமாய் தைச்சு கொடுத்துடறாங்க. மணி, ஆள் பார்க்க ஒருமாதிரின்னாலும், அவன் பேச்சும், சிரிப்பும், ஆளுங்கள இழுத்துடுது. அவன் வியாபாரம் பண்ற விதமே அசத்தலா இருக்கும். பிழைச்சுகுவான்…’ என்று.
கட்பீசுடன், நவீன ரக ரெடிமேட் ஆடைகளை தோரணம் கட்டினர் மணியும், தையல்காரரும். சாதாரண நாளிலேயே கூட்டமிருந்தது. இரண்டு பெண்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்தனர்.
கல்யாண மண்டம் பிடித்து, சேலை கண்காட்சி விற்பனை நடத்தினர். ஊருக்கு புதுசாக இருந்தது.
“அப்படி என்னதான் செய்றானுங்க?’ என்று, பார்க்கப் போனார் சண்முகம்.
கல்யாணக் கூட்டம் தான் மண்டபத்தில். “நூறு ரூபாய்க்கு இரண்டு புடவை. நாலு புடவை வாங்கினால், ஒன்று இலவசம்!’ என்று, பையன்கள், பிட் நோட்டீஸ் வினியோகம் செய்தனர்.
சண்முகத்தை பார்த்து மகிழ்ந்து, வரவேற்றான் மணி. இரண்டு புடவைகளை பார்சல் செய்து, “அத்தைகிட்ட கொடுங்க மாமா…’ என்றான்.
ஆள் முன்னைக்கு இப்போது தெளிவாக இருந்தான். பங்குதாரரான தையல்காரரை அறிமுகப் படுத்தினான் பெருமையாக.
“மாணிக்கம்ன்னு பேரு. நல்ல ராசிக்காரர். என்னை விட கடுமையான உழைப்பாளி மாமா…’
தையல்காரர் கூச்சப்பட்டு, “அதெல்லாம் ஒண்ணுமில்லிங்க. எல்லாம் மணிதான். அவன் யோசனைகள் தான்…’ என்று, அடக்கமாகச் சொல்லிவிட்டு, வியாபாரத்தைக் கவனிக்கப் போனார்.
“சந்தேகமில்லை இது வெற்றிக் கூட்டணிதான்!’ என்று நினைக்கும் போது, அயர்ச்சியாக இருந்தது அவருக்கு.
இலவசமாக கொடுத்த துணியை கொண்டு வந்து வீட்டில் கொடுத்த போது, “பரவாயில்லையே… வாழ்நாளில் இப்பதான் முதல் முதலா எனக்கு பிடிச்ச மாதிரியான புடவை வாங்கி வந்திருக்கிங்க…’ என்று, மனைவி சொன்னதும், அவர், மேலும் கொஞ்சம் அசந்துதான் போனார்.
“மணிக்கு படிப்புதான் குறையே தவிர, வியாபார விஷயங்கள் நன்றாகத் தெரிகிறது. பெண்களுக்கு அவர்கள் மனதுக்கு பிடித்தது போல, உடையை தேர்ந்தெடுக்கிறது மிகப் பெரிய கலை. அது, அந்தப் பையனுக்கு கை வந்திருக்கிறது… நாம் சாதாரணமாக நினைத்து விட்டோமே. கார் பங்களா வாங்கிடுவே என்றது, நிஜமாகவே நடந்தாலும், ஆச்சரியப்படுவதற்கில்லை போலிருக்கே…’ என்று உள்ளுக்குள் வியந்தார்.
“என்ன அப்படி யோசனை… இது என்ன விலைன்னு கேட்டேனே?’ விழித்தார்.
“தெரியல. கொண்டு போய் அத்தைகிட்ட கொடுங்கன்னான். காசு வாங்க மறுத்துட்டான்!’
“பரவாயில்லையே… என் கையால் சாப்பாடு போட்டதை மறக்காம, நன்றியோடு இருக்கான்…’ என்றபோது, “என்ன பரவாயில்லை… கேவலம் அவன் கொடுத்தான்னு சும்மா கைநீட்டி வாங்கிட்டீங்களே. அசிங்கமாயில்லை?’ சீறினான் மகன்.
“வெறும் ரோஷம் போதாது பரணி… திறமையோ, அதிர்ஷ்டமோ… அவன் இப்ப ஜெயிக்கிற குதிரை. அன்னைக்கு ஒரு இருபதாயிரம் கொடுத்திருக்கலாம்ன்னு தோணுது…’ என்றார் சண்முகம்.
“என்ன தலையெழுத்து… கோடி வந்தாலும், அவனோடு சேர்ந்து வியாபாரம் பண்ண முடியாது என்னால. இன்னிக்கு ஏதோ பளிச்சுன்னு தெரியுதுன்னு, அவன் பக்கம் பேசாதிங்க. கொஞ்ச நாள் பொறுங்க. குயவன் எள்ளு பயிர் வச்ச கதையாகி, பழையபடி அஞ்சுக்கும், பத்துக்கும் மணி இங்கே வந்து நிக்கத்தான் போறான். அவன் கேட்டான்னு பணத்தைக் கொடுத்துடாதீங்க. கடை திவாலாச்சுன்னா, நையா பைசாக்கூட திரும்ப வராது…’ என்று எச்சரித்தான்.
மகனின் பேச்சு, மறுபடியும் அவருக்கு உவப்பாக இல்லை. அவனுக்காக பரிந்து பே”ம் மனைவி, இந்தமுறை மவுனமாய் நிற்பதையும் அவர் கவனிக்கத்தான் செய்தார்.
பார்த்துக் கொண்டிருக்கும் போதே, மேலும் சில வருஷங்கள் ஓடி, அந்த கட் பீஸ் கடை இப்போது துணிக்கடல். இப்போது கிளையும் துவங்குகிறான்.
“”தெய்வானை வெந்நீர் போடு. குளிச்சுட்டு திறப்பு விழாவுக்கு போய்ட்டு வர்றேன்,” என்றார் சண்முகம்.
“”அவன் வெத்தல, பாக்கு வச்சு கூப்பிட்ட மாதிரியில்ல கிளம்பறேங்கறீங்க?”
“”ஒரு நேரத்தில் அவன் வருந்தி வருந்தி கூப்பிட்டான்… போனோமா? இப்ப கடை திறப்பு வேலைகள் அதிகமிருக்கும். எதிரியாக இருந்தாலும், வெற்றி பெற்றால் பாராட்ட வேண்டும், அங்கீகரிக்க வேண்டும். இவனோ உறவுக்காரன். ஊரே கொண்டாடும் போது, நாம் ஒதுங்கிக் கொண்டால், நாம் பொறாமை கொண்டு, ஒதுங்கி இருப்பதாக பேச்சு வரும். அதை தவிர்க்கவாவது, போக வேண்டும்,” என்று எழுந்தார்.
“”நானும் வர்றேன்,” என்று, பரணியும் கிளம்ப, “”வேணாம். உனக்கும், அவனுக்கும் ஒத்துப் போகாது. அங்கே வந்து அவனை ஏதாவது சீண்டுவே. இப்ப அவன் பழைய மணி இல்லை. பேசினாலும், திட்டினாலும், கேட்டுக்கறதுக்கு. முதலாளி. அந்த நிஜத்தை ஜீரணிச்சு நடந்துக்க முடியாது உன்னால். வழக்கம் போல, வேளைக்கு சாப்பிட்டுட்டு, சினிமா, டிராமான்னு இரு. நான் மட்டும் போய் வர்றேன்.”
“”நானும் மனுஷந்தான். தவறை திருத்திக்கறதுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கக் கூடாதா? அந்த மணி இவ்வளவு வளர்ந்த பின், அவனை பகைச்சுக்கற அளவுக்கு நான் ஒண்ணும் முட்டாள் இல்லை. அவனுக்கு வாழ்த்து சொல்லத்தான் வர்றேன்னேன். அப்படியே, எனக்கொரு வாய்ப்பு கொடுக்கச் சொல்லி கேட்கப் போறேன். உங்களுக்கு ஆட்சேபனை இல்லையே?” என்று கேட்டான். மகனின் மன மாற்றம் பிடித்திருந்தது.
“”சரி… நீ போய் முதலில் குளி,” என்றார் சண்முகம்.

– எஸ். பன்னீர் செல்வம் (செப்டம்பர் 2012)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *