கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 21, 2015
பார்வையிட்டோர்: 12,358 
 

மின்தூக்கி செயல்படாததால், பதினாறாவது மாடி ஏறி முடித்தபோது அன்னா சற்று நின்று மூச்சு வாங்கினாள். அடுக்ககத்திலிருந்து அரிதாகவே அம்மா வெளியே வருவதில் வியப்பே இல்லை. அவள் நின்ற தளத்துக்கு மேலாகவும் அறுபது வயது கடந்தவர்கள் வீட்டுக்குள்ளேயே கிடந்தார்கள். இங்கு கடைசியாக அவள் வந்த தருணத்திலிருந்து இதுவரை வண்ணப் பூச்சு பெறாத கதவைத் தட்டும் முன்பாக தயங்கினாள்.

தளர்வுற்ற, தலைநரைத்த, தலைமுதல் கால் வரை கறுப்பு ஆடை அணிந்திருந்த பெண்மணி கதவை, சில அங்குலம் மட்டுமே திறந்து பார்க்கும் வரை அவள் காத்திருந்தாள். தாயும் மகளும் ஒருவரையொருவர் வெறித்தார்கள். எல்சா பெட்ரெசு திடீரென்று கதவை விரியத் திறந்து தனது மகளை இருகரம் நீட்டித் தழுவினாள். அவளது தோற்றத்தைப்போலவே மூப்படைந்த குரலில், “”அன்னா அன்னா அன்னா” என்று அரற்றினாள். தாயும் மகளும் கண்ணீர் வடித்தனர்.

யாது உம் ஊரேஅன்னா பிறந்த அந்த வீட்டுக்குள், அவளது கைகளைப் பற்றியது பற்றியபடியே உள்ளே அழைத்து சென்றாள் அந்த முதியவள். வீடு அப்படியே மாறாமல் இருந்தது. அன்னாவால் எல்லாவற்றையும் நினைவு கொள்ள முடிந்தது. ஏனென்றால் எதுவுமே மாறியிருக்கவில்லை. தாத்தா பாட்டி விட்டுச் சென்ற சோபா, நாற்காலிகள், சட்டம் போடாத கறுப்பு வெள்ளையிலான குடும்ப நிழற்படங்கள், பின்னல் வகைப்பாடு தெரியாதபடி தேய்ந்து போன தரைவிரிப்பு எதுவுமே மாறியிருக்கவில்லை. அந்த அறையில் கூடுதலாக சேர்க்கப்பட்டிந்த ஒன்று- அங்கே வெற்றுச்சுவரில் மாட்டப்பட்டிருந்த அப்பாவின் ஓவியம். அப்பாவின் ஓவியத்தை வியந்து பார்த்தபோது, கலை மீதான ஆர்வம் எங்கு தொடங்கியிருந்தது என்பதை அது அவளுக்கு உணர்த்தியது.

“”அன்னா, அன்னா, உன்னைக் கேட்பதற்கு என்னிடம் நிறைய கேள்விகள்! எங்கிருந்து தொடங்குவேன்?” அம்மா பேசினாள். இன்னமும் கையைப் பிடித்துக் கொண்டிருந்தாள்.

அம்மாவின் கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் பதில் சொல்லி முடிக்கும் முன்பாக சூரியன் அஸ்தமித்தது. அன்னா மீண்டும் கெஞ்சினாள். “”அம்மா, தயவு பண்ணி நீ என்னோட அமெரிக்கா வந்து இரும்மா”

“”முடியாது” அம்மா இணங்காமல் சொன்னாள். “”எனக்கு எல்லா சிநேகிதர்களும் எல்லா நினைவுகளும் இங்கேதான் இருக்கு. புதிய வாழ்வை தொடங்க எனக்கு வயதில்லை”

“”அப்ப இதே ஊர்ல வேறு இடத்துக்கு வீட்டை மாத்திலாமே. உனக்கு கீழ்தளத்தில் வீடு பார்க்க என்னால் முடியும்…”

“”இந்த வீட்லதான் எனக்கு கல்யாணம் ஆச்சு.,” அம்மா நிதானமாகச் சொன்னாள். “”இங்கதான் நீ பொறந்த, இங்கதான் உன் அப்பாவோட முப்பது வருஷம் வாழ்ந்தேன். ஆண்டவன் கட்டளையிட்டா… இங்கேயே சாவேன்”

அம்மா மகளைப் பார்த்துச் சிரித்தார்.

நவநீதம் புத்தகத்தை, அதன் பக்கங்களில் வலது ஆள்காட்டி விரல் சிக்கிக்கிடக்க, மூடினாள். இதுபோன்ற சம்பவங்கள் கதைகளில் எதிர்படும்போது அவளால் மேற்கொண்டு படிக்க முடிவதில்லை. அவள் எந்த இடத்தில் இருந்தாலும், எத்தனைப் பேர் சுற்றி இருந்தாலும் மிகப்பெரும் தனிமையில் தள்ளப்பட்டு, யாருமற்ற வெளியில் தான் மட்டுமே நிற்பதான தோற்றம் விரிகிறது. தன்னைச் சுற்றிக் கிடக்கும் மெüனத்தின் சுமை ஒரு வெண்ணெய்யில் சரிந்த கத்தியொன்று மெல்ல மெல்ல அழுந்திக் கிழிப்பதுபோல இறங்குகிறது.

புத்தக அட்டையில் உப்பியெழுந்த எழுத்துகளை – ஜெப்ரி ஆர்ச்சர்… ஃபால்ஸ் இம்பிரஸன்- அவள் இடது பெருவிரல் தடவிக் கொண்டிருந்தது. எனக்கு எல்லா சிநேகிதிகளும் எல்லா நினைவுகளும் இங்கேதான்…. இதைப்போல நவநீதம் சொல்லிக்கொள்ள முடியாது. திருமணத்துக்குப் பிறகு கணவரின் இடமாறுதல்களுக்கு ஏற்ப எத்தனை ஊர்களைப் பார்த்தாகிவிட்டது. மிக நல்ல அனுபவம்தான். ஆனால் எல்லா நட்பும் எல்லா நினைவுகளும் ஒவ்வொரு ஊரிலும் அந்தந்தப் பொழுதுகளில் உதிர்ந்து கொண்டே இருந்தன.

சொல்வார்கள். “”நவநீதத்துக்கென்ன, தமிழ்நாட்டில எந்த ஊரு போனாலும் நாலு சிநேகிதிகள் உண்டு”

மறுக்கச் சொல்லும் மனம். சிரிக்கும் உதடுகள்.

உண்மை வேறானது. எல்லா சிநேகிதிகளிலும் இன்றும் பேசுபவர்கள் இரண்டு பேர் மட்டுமே. இருபது நான்கு ஆண்டுகளில் இவ்வளவுதான் மிச்சம். ஒவ்வொரு ஊரைவிட்டு வெளியேறும்போதும் விடை கொடுக்க ஓடிவரும் நட்புகள், மெல்ல மெல்ல பின்னகர்கின்றன. தொலைபேசி அழைப்புகள் குறைகின்றன. எண்கள் உபயோகத்தில் இல்லாமல் ஆகின்றன. தகவல்கள் முற்றிலும் இல்லாமல் ஆகின்றன. ஒவ்வொருவருக்கு ஒரு வகை மாற்றம். சில மாற்றங்கள் மிகவும் எதிர்பாராத உயர்வுகளை அளித்திருக்கும். சில மாற்றங்கள் நினைத்துப் பார்க்க முடியாத பள்ளத்தில் தள்ளியிருக்கும். கேட்பதற்கு பொறாமை கொள்ளும் அல்லது வேதனை கொள்ளும் தொலைவில்தான் நட்பு நின்றது.

மீண்டும் மீண்டும் அதே ஊருக்கு திரும்பி வந்தபோதும்கூட அதே நட்புகளை புதுப்பிக்க முடியவில்லை. வாழ்க்கையின் மேடும் பள்ளமும் ஒவ்வொரு குடும்பத்தையும் ஒவ்வொரு திசையில் வீசியிருந்தது.

“”நவநீ என்ன இங்க?”

“”டிரான்ஸ்பர் ஆகி வந்து ஒரு வருஷம் ஆவுது”

“”ஐயோ எனக்கு தெரியவே தெரியாதே..”

தெரிந்த பிறகும் பெரிய மாற்றம் ஏற்பட்டுவிடவில்லை. அவர்கள் மாறியிருந்தார்கள். அத்தை அத்தை என்று ஆசை ஆசையாய் ஓடிவந்து, வீடு திரும்ப மறுத்த குழந்தைகள் இன்று வளர்ந்து நிற்கிறார்கள். “”ஆன்ட்டிய தெரியலையா!, எப்பவும் அவங்க வீட்டுலதானே இருப்ப…” சொல்ல வேண்டியிருக்கிறது. இப்போது ஒவ்வொரு குடும்பத்தின் தேவைகள் வேறாக இருந்தன. கவலைகள் வேறாக இருந்தன. தேடல்கள் வேறு. இதில் சங்கிலித் தொடர் அறுபடாமல் நீடிக்க முடிந்த நட்புகள் சிலவாகவே முடிந்தன.

எத்தனை ஊர்கள். எத்தனை வீடுகளில் வசித்தாகிவிட்டது. எத்தனையோ நட்புகள் தோன்றி, நெருங்கி, விலகிச் சென்றன. ஆனாலும் முதலில் தோன்றாத கவலைகள் இப்போது தோன்றுகின்றன. கணவருக்கு வயது 54 முடிந்துவிட்டது. அதிகபட்சம் இன்னும் 4 ஆண்டுகள். 1460 நாள்கள். அதற்குள் ஆண்டவன் கட்டளை வராதிருந்தால்…அதன் பிறகு?

“”எங்க செட்டில் ஆகிறதா உத்தேசம்?”

“”வீடு நிலம் வாங்கியிருக்காரா?”

“”பையன் என்ன வேலைக்குப் போறான்?”

இந்தக் கேள்விகளை எதிர்கொள்ளும் சக்திகூட இல்லாமல் போனது.

சின்ன வயதில் அவளது மகன், வீட்டுக்கு வரும் அப்பாவின் நண்பர்கள் அவனிடம் பேசத் தொடங்கும் முன்பாக இரண்டு நிபந்தனைகள் போடுவான்.

“”அங்கிள், ரெண்டுவிஷயம் கேக்காதீங்க. எப்படி இப்படி உசரமா வளர்ந்துட்ட? கிளாஸ்ல எத்தனாவது ரேங்க்! இத மட்டும் கேக்காதீங்க பிளீஸ்”

அவர்களும் கடகடவென்று சிரிப்பார்கள். ஆனால் ஏதும் கேட்கமாட்டார்கள். இந்த இரண்டைத் தவிர அவர்களிடம் பேச்சைத் திறக்கும் சாவி ஏதும் இருப்பதில்லை. இவளுக்கும் பல நேரங்களில் மனசுக்குள் தோன்றும். இந்த மூன்று கேள்விகளையும் முதலிலேயே சொல்லிவிட்டு, வேறு ஏதாவது கேளுங்கள் என்று சொல்லத் தோன்றும். ஒரு சிறுவனால் கேட்க முடிந்ததை அவளால் கேட்க முடிவதில்லை. வாழ்க்கை அவளை வேறு கட்டங்களில் நிறுத்தி, வேறு வல்லமையில் விளையாடச் சொல்கிறது.

கணவரிடம் சொல்வாள். “”எங்க செட்டில் ஆகறதா உத்தேசம்னு அந்த அக்கா கேட்டாங்க?”

“”மண்டைய போடுற இடம்தான் செட்டில் ஆகிற இடம். அது காடோ புறந்திண்ணையோ…”

“”பட்டினத்தாருக்கு அது சரி ”

“”எல்லாருக்கும் அதான்”

கணவரிடம் இதற்கு மேல் வாதம் செய்யமாட்டாள். தொடர்ந்து பேசினால், “ஒரு இடம் வாங்கி வீடு கட்டணும்னா பணம் வேணும். இருக்கா?’ என்ற கேள்வி வரும். வீட்டில் இருக்கும் பொம்பளையப் பார்த்து சம்பாதிக்கிற ஆம்பள கேட்கும் ஒரு நக்கலான கேள்வி இது. அவளுக்குச் சலித்துபோன ஒன்று.

பணம் இல்லை என்பது உண்மைதான். ஆனால் புத்திசாலித்தனமும் இல்லாமல் போனதுதான் நெஞ்சைப் புண்ணாக்குகிறது. சென்னையில் குடியிருந்தபோது பக்கத்து வீட்டுக்கு வந்துபோகும் தேவகி அக்கா, அவங்க வீட்டுக்கு பக்கத்துலே பிளாட் விற்கிறார்கள் என்று சொன்னார்கள். சும்மா போய் பார்ப்போம் என்று ஒரு ஞாயிற்றுக்கிழமை, ரயிலில் திருநின்றவூரில் இறங்கி, வேப்பந்தட்டை பக்கத்தில் இருந்த தேவகி அக்கா வீட்டுக்கு குழந்தையுடன் ஆட்டோவில் போனாள். டீ சாப்பிட்டு கொஞ்சம் பேசிவிட்டு, அந்த பிளாட்டையும் பார்த்தாள். இருபதுக்கு அறுபது. அன்றைய தேதியில் ரூ.55000 சொன்னார்கள். சேமிப்புக் கணக்கில் ரூ.25,000தான் இருந்தது. கணவர் தனது நண்பரிடம் கேட்டார். அவர் இப்போது பணம் இல்லை என்றதும் திட்டம் கிடப்பில் போனது. ஆனால் இப்போது ஆயிரம் கேள்விகள் தோன்றுகின்றன. ஏன்,வங்கிக் கடன் வாங்கியிருக்கலாமே.. நகைகளை விற்றிருக்கலாமே… மாமாவிடம் கடன் கேட்டிருக்கலாமே… ஏகப்பட்ட மே மே மே மே… இன்று வேப்பந்தட்டையில் அந்த இடத்தின் விலை குறைந்தது ரூ.20 லட்சம்! கேட்கிறபோது மனசு மறுகுகிறது. எவ்வளவு முட்டாளாகவே இருந்திருக்கிறோம்.

மறுபடியும் கோவைக்கு மாற்றலானபோது, குறைந்த வாடகைக்கு நல்லதாக ஒரு வீடு தேடி, கடைசியாக சரவணம்பட்டியில்தான் பிடிக்க முடிந்தது. முதலில் இந்த ஊரில் இருந்த நாளில் சரவணம்பட்டி வெறும் தோப்பும் தொரவுமாகத்தான் இருந்தது. அன்றைய தேதியில் அப்போதைய சம்பளத்துக்கு கட்டுப்படியான விலையில் இடம் வாங்கியிருக்க முடியும். செய்யவில்லை. இரண்டாம் முறையாக கோவைக்கு வந்தபோது சரவணம்பட்டியில் மனை விலை பத்து லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக இருந்தது. இப்போது அந்த அளவுக்குப் பணம் இல்லை. ஒருவேளை பத்து லட்சம் ரூபாய் வசதி ஏற்படும்போது மனை அல்லது அடுக்ககத்தின் விலை கோடி ருபாயாக உயர்ந்து இருக்கும்.

கானல் நீர் நோக்கி ஓடி ஏமாறும் மான் போலத்தான் அவளது வாழ்க்கை. ஓடி, ஓடி, ஓடி கடைசியில் நா வறண்டு, அல்லது ஆண்டவன் கட்டளைப்படி..

ஆரம்பத்தில் அவள் கணவர் நையாண்டி செய்வார். FOOLS BUILD HOUSE FOR THE WISE TO LIVE IN.

பெர்னாட் ஷா சொல்லியிருக்கான். வாடகை கொடுத்தா வீடு என்பார். ஆனால் பின்னாளில் அந்த வாய் அதைப் பற்றி பேசவில்லை. “நமக்கு புத்தியில்ல அவ்வளவுதான்’ என்று முணுமுணுப்பாக மாறியது.

ஒரு கட்டத்துக்குப் பிறகு அவள் நட்புகளை தவிர்க்கவும், புதிதாக நட்புகளை உருவாக்கிக் கொள்ளாமல் இருக்கவுமே விரும்பினாள். இந்த மூன்று கேள்விகளுக்கும் அவளுக்கு விடை தெரியாதபோது, அந்தக் கேள்விக்கான விடையை எதிர்பார்க்கிறவர்களிடம் எப்படிப் பழக முடியும்? அவர்கள் இந்தக் கேள்வியைக் கேட்கும்போது அவள் ஒரு வகுப்பறையில் நூறு மாணவிகளுக்கு நடுவே, ஆசிரியை கேட்ட கேள்விக்குப் பதில் தெரியாமல் அவமானத்துடன் நிற்பதுபோன்ற தோற்றம்தான் மனதில் எழும். பேந்தப் பேந்த நிற்பாள். பக்கத்து வீடு, அதற்கு அடுத்த வீடு, அந்த தெருவில் உள்ளோர் எல்லாரும் இந்த கேள்விக்கான விடைக்காக, பாப்பாயீ கார்ட்டூனில் வருவதுபோல, காதுகளை மட்டும் வெளியே நீட்டிக் கொண்டு இருப்பதாகத் தோன்றும். அவள் பதில் தெரியாத மாணவியைப் போல நிற்பாள். பிறகு இந்த கேள்விகள் பழகிப் பழசானபோது, பதில் சொல்லாததற்காக ஓர் ஆசிரியை போல யாரும் பிரம்பால் அடிக்கப்போவதில்லை என்ற உண்மை புரிந்தபோது, இவற்றை ஒரு புன்னகை செய்து தள்ளிவிட முடிந்தது.

இந்தக் கேள்விகள் அல்லாமல், ஆனால் விடைகளை மட்டும் கண்டறியும் மாற்றுக் கேள்விகளும் இந்த உலகத்தில் இருக்கவே செய்கின்றன.

“அடிக்கடி டிரான்ஸ்ஃபர்ங்கிறதாலே ஊர்ல வாங்கிப் போட்டிருப்பீங்க!’

“அப்பா ஊர்ல என்ன பண்றார்? பிசினஸா?’

இன்னும் வேறுமாதிரியாக எடை போடுபவர்களையும் அவள் அறிவாள்.

“நாத்தனார் வீட்டு கல்யாணத்துக்குப் போகணும். லாக்கர்ல நகை எடுக்க வாங்கன்னு அவருக்கு எத்தனை தடவ போன் பண்றது! பேங்க் மானேஜர் 2 மணிக்கு மேல வீட்டுக்குப் போயிட்டா அவ்வளவுதான். நீங்க எந்த பேங்க்ல லாக்கர் வச்சிருக்கீங்க?’

எப்போதும் நகை போட்டு பார்த்ததில்லையே என்ற கேள்வியை இதைவிட நாசுக்காக கேட்க முடியாது. நவநீதம் அந்தக் கேள்விக்கான பெண்ணின் சாதுர்யத்தை மெச்சுவாள். வேண்டுமென்றே அவளை உசுப்பேத்த, “சாரு எல்லா நகையையும் வித்து ஷேர்ல போட்டிருக்கார்’ என்பாள். பொய்தான். ஆனாலும் சுகமான பொய்கள்.

கொஞ்சம் கூடுதல் வாடகை போய்த் தொலைகிறது என்று நல்ல ஏரியாவில் வீடு பார்த்துப் போனால் இத்தகைய சாதூர்யங்களை சந்திக்க வேண்டியிருந்தது. அவளுக்குச் சலித்துப் போனது. இனி வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுவிடப் போவதில்லை. இவர்களுக்கு பதில் சொல்லி ஆக வேண்டியதும் இல்லை. வீட்டுக்குள்ளேயே இருப்பாள். அவர்களாக கதவைத் தட்டி பேசினால் பேசுவாள். பதில்களும் ஓரிரு வார்த்தைகளில் முடியும்.

எல்லாக் கேள்விகளும் பாதாள கொலுசாகவே இருந்ததால் அவளது மனக்கிணறு வற்றிப்போய்க் கிடந்தது.

நாளிதழோடு இணைக்கப்பட்டு விழும் அனைத்து விளம்பரத் துண்டு பிரசுங்களும் வீட்டு மனைகள் பற்றியதாக இருக்கின்றன. முதலில் ஆர்வமாக ஒவ்வொன்றையும் படிப்பது வழக்கமாக இருந்தது. சில நேரங்களில் அதில் உள்ள தொடர்பு எண்ணுக்கு போன் செய்து விசாரிப்பாள். விலை வழக்கம்போல, சக்திக்கு மீறினதாக இருக்கும். இருந்தாலும் கணவரிடம் சொல்வாள். இப்போதாவது வங்கிக் கடன் என்று ஏதாவது வாங்கி, வீட்டு மனை வாங்கலாமா என்று பார்ப்பாள்.

“வேண்டாம்பா’ என்பதுதான் கணவரின் வாதமாக இருந்தது. “எட்டு லட்சம் ரூபாய் கடன் வாங்கி மனை வாங்கினா பின்னால விலை உயரும்தான். நல்ல முதலீடுதான். பணம் இருக்கிறவனுக்கும், லஞ்சத்துத்துல புரள்றவனுக்கும்தான் இது கட்டுப்படியாகும். சம்பளத்துல இருந்து மாசம் எட்டாயிரம் ரூபாய் வட்டி கட்டறது நமக்கு சாத்தியமா? ரெண்டு வாடகை மாதிரி ஆகிடாதா?’

அவர் சொல்வதும் நியாயம்தான். நேர்மையாக சம்பளத்தை மட்டுமே நம்பியிருப்பவனுக்கு வீட்டுக் கடன் ஒரு பெரிய சுமை. அவருக்கும் தன் கவலைகள் உண்டு என்பது புரிந்திருப்பதால் அவள் சும்மா இருந்துவிடுவாள். வெறும் சம்பளத்தை மட்டுமே நம்பிக்கொண்டு, வேறு சாதுர்யங்கள் இல்லாமல் இருக்கும் மனிதனிடம் தனக்கு கிடைத்துள்ள இந்த சவுகரியங்களே மிக அதிகம்.

இப்போதெல்லாம் அவர் புதிய வசனம் சொல்லத் தொடங்கியிருக்கிறார். “எல்லாம் உன் பையன் சம்பாதிச்சு உனக்கு நல்ல வீடு வாங்கித் தருவான்.’

“நான் பையனை நம்பி இல்ல. அவனாச்சு அவன் பொண்டாட்டியாச்சு. நான் போய் ஹோம்ல சேர்ந்துப்பேன்.’

“அப்ப நானு?’

“முதல்ல உன் தொல்லை கூடாதுன்னாதானே ஹோமுக்கு போறேன்’ என்று சிரிப்பாள். அவர் அடிக்க வருவதுபோல நடிப்பார். வலிகள் சிரிப்புகளில் முடங்கும்.

அவள் பிரார்த்தனை செய்யும்போது கடவுளுக்கு நன்றி சொல்லத் தவறியதில்லை. தான் ஆசைப்படுவது வேறாக இருந்தாலும், இதுவரையிலும் நல்ல வீட்டில் வாடகை கொடுத்து வாழும் சக்தியை கொடுத்திருக்கிறார் கடவுள். குறையொன்றும் இல்லை. இதற்காக நன்றி சொல்லத்தானே வேண்டும்.

ஆனாலும், புத்தகங்களில் இதுபோன்ற இடங்கள் வரும்போது மனநலிவுக்கு ஆளாகிறாள். கொஞ்ச நேரத்துக்கு எதையும் செய்யவோ, சிந்திக்கவோ முடிவதில்லை. மிகப் பெரிய சோர்வு. தாங்க முடியாத அதன் கனத்தாலோ என்னமோ, இத்தகைய வேளையில் அவளது இடது தோள் ஒரு நூறு கிலோ எடையைத் தூக்கியதுபோல வலிக்கிறது. ஆர்க் ஜெல் தேய்த்துக் கொண்டு சற்று கண்ணை மூடித் தூங்க முயலுவாள். தூக்கம் வராது. வெறுமை! ஆழிப்பேரலை எழுந்து, விழுங்கி, பின்னகர்ந்து, தன் இயல்பு திரும்பிய அமைதிப்பொழுதில் கடற்கரையில் தான் மட்டும் தனித்து நடப்பதுபோன்ற வெறுமை!

கணவரோடு பணிபுரியும் சீனியர் ஒருவர் நேற்று வீட்டுக்கு வந்திருந்தார். கிளம்பும்போது, அதே கேள்வி: “என்ன! எங்க செட்டில் ஆகப் போறீங்க?’

அவளிடம் பாடும் பட்டினத்தார் பாடல்களை சீனியரிடம் பாட முடியாமல் கணவர் நெளிந்தார். “தெரியல’ என்றார்.

“என்னய்யா, நாயகன் கமலஹாசன் மாதிரி!. இட் இஸ் ஐ டைம் யு பவுன்ட் ஏ பிளேஸ்’… படிகளில் இறங்கியவரைத் தொடர்ந்த அவளது கணவர், “”யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று சொல்லி சமாளிப்பது கேட்டது.

கணியன் பூங்குன்றனாரின் அந்த வரிகளில் வேறு ஒரு கோணமும் இருந்தது. தஞ்சைப் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் ம.ராசேந்திரன் ஒரு மேடையில் சொல்லித்தான் அவளுக்கு அந்த கோணம் தெரிந்தது.

“”அதில் ஒரு கேள்வியையும் கவிஞன் வைத்திருக்கிறான். யாது உம் ஊரே? யாவர் உம் கேளிர்? அதற்கான பதிலும் அதுவே. யாதும் ஊரே யாவரும் கேளிர்”

புத்தகத்தைத் திறந்து மீண்டும் அந்த வரிகளைப் பார்த்தாள்.

எனக்கு எல்லா சிநேகிதிகளும் எல்லா நினைவுகளும் இங்கேதான்….

கணியன் பூங்குன்றனாரின் கேள்வி மட்டும் அவளிடம் எஞ்சி நின்றது.

யாது என் ஊர்? யாவர் என் சிநேகிதிகள், உறவுகள்?

– ஜூன் 2014

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *