தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 19, 2016
பார்வையிட்டோர்: 8,980 
 

நேற்றிலிருந்தே வினிதாவின் மனதில் கலக்கம் குடி கொண்டு விட்டது. அவளின் கணவருக்கு வங்கியில் புரமோஷன் கிடைத்துள்ளது. ஒரு மாதத்திற்குள் டிரான்ஸ்பர் என்று கூறியிருந்ததுதான் அவளின் கவலைக்குக் காரணம். நல்ல விஷயம் தானே? கணவர் உற்சாகத்தில்தான் உள்ளார். என்றாலும், அந்த உற்சாகத்தில் துளி கூட வினிதாவிற்கு டிரான்ஸ்பர் ஆகவில்லை.
கல்யாணம் ஆனதிலிருந்து பத்து வருடங்கள் இந்த ஊரிலேயே இருந்து விட்டார்கள். உத்தியோகஸ்தர்களின் வருடாந்திர பிரச்னைகளான புது வீடு பார்ப்பு, வாடகை ஒப்பந்தம், பள்ளி சேர்க்கை, புது மனித சிநேகம், பஸ் ரூட் என்ற கவலைகளில்லாமல் வாழ்ந்து விட்டார்கள்.
குமாஸ்தாவிலிருந்து மேலதிகாரியாகப் பதவி உயர்வு கிடைத்திருப்பதால், முதலில் வட நாட்டிற்குப் பணி மாறுதல் செய்வதுதான் வழக்கம்.

மொழி

சிறு வயதிலிருந்து வினிதாவிற்கு பிடிக்காத இந்தி, இப்போது பிரம்மாண்டமான பிரச்னையாக அவள் மனதில் நிற்கிறது. யார் இந்தியில் பேசினாலும் பிடிப்பதில்லை. அவள் வீட்டு டிவியில் இந்திச் சேனல்கள் கடைசியில் தள்ளப்பட்டிருக்கும். கல்லூரியில், அவள் தோழிகள் கயாமத் úஸ கயாமத் தக், தில்வாலே துல்ஹனியா என்று இந்தி சினிமாக்கள் பார்ப்பதும், அக்ஷய் குமார் மாதிரி, சல்மான் கான் மாதிரி நடித்துக் கொண்டே பீட்டர் விடுவதும் – “”பீட்டர் விடுவதற்கு இந்தியில் என்னதுப்பா?” – அவளுக்கு எரிச்சலை உண்டு பண்ணும்.
அதனால்தான் இந்தி பேசும் நபர்களுக்கு நடுவே காலத்தை ஓட்ட வேண்டும் என்ற எண்ணமே மலைப்பாக இருந்தது. காலையில் இருந்து எந்த வேலை செய்யவும் பிடிக்கவில்லை. மேக்கப் செய்யப் பிடிக்கவில்லை. சிந்து பைரவி சீரியலைப் பார்க்க பிடிக்கவில்லை. எப்படி சமாளிக்கப் போகிறோம் என்ற கவலைதான் முகத்தில் இருந்தது.
என்சிசி கேம்ப்பிற்காக தில்லி சென்றிருந்த சம்பவங்கள் அவள் நினைவுக்கு வந்தன. ஒரு வார கேம்ப். பல மாநிலங்களில் இருந்து வந்திருந்த பெண்களை ஒரே பள்ளியில் தங்க வைத்திருந்தனர். இவளோடு வந்திருந்த தோழியரோ இந்தி பேசக் கூடியவர்கள் என்பதால், புதுப்புது பெண்களோடு அரட்டை அடிக்கச் சென்று விட்டனர். இந்தி இல்லையெனில் இங்கு பேசாமடந்தைதான் என்பதை விரைவில் உணர்ந்து கொண்டாள். ஆங்கிலத்தில் பேச முற்பட்டாலும், இந்தியில்தான் பதில் சொன்னார்கள். அவள் நகர்ந்ததும் அவளைப் பற்றி கிண்டல் அடிப்பதும், சிரிப்பதுமாய் இருப்பதாக வினிதாவிற்கு தோன்றியது. ஏழு கடல், ஏழு மலை தாண்டி உள்ள ஒரு சின்னஞ்சிறு தீவில், அவளை மட்டும் சிறை வைத்திருப்பதைப் போல தனிமையை உணர்ந்தாள். இதில் ஒருநாள் அவர்களோடு இந்தி சினிமாவிற்குச் சென்று நொந்து போய் விட்டாள். அது ஏதோ காமெடி படமாம். ஒவ்வொரு டயலாக்கிற்கும் தியேட்டரே சிரித்தது. இவள் மட்டும் தியேட்டரில் சிரிப்பவர்கள் எத்தனை எத்தனை விதங்களில் சிரிக்கின்றனர் என்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். டயலாக் புரியாமல் காமெடி படம் பார்ப்பது எவ்வளவு கொடுமையான விஷயம் என்பதை அனுபவித்து பார்த்தால்தான் புரியும்.
தனக்கு இந்தி தெரியாதது பற்றிய பயத்தை காலையிலேயே கணவரிடம் கூறினாள். அவள் கணவருக்கோ அது ஒரு முக்கிய விஷயமாகவே படவில்லை.
“”கவலைப்படாதே மனைவியே…… ஒரே மாசம்தான் இந்தியை ஈஸியா கத்துக்குவே…”
எளிதில் சொல்லிவிட்டார். ஏனென்றால் அவருக்கு இந்தி நன்றாகத் தெரியும். பிரவீன் முடித்துள்ளார். கல்யாணத்திற்கு முன்பு மூன்று வருடங்கள் புனேயில் வேலை பார்த்துள்ளார். வினிதாதானே பால்காரன், வேலைக்காரி, பசங்க ஆட்டோ, ஸ்கூல் மிஸ் என்று பலரிடம் அல்லாட வேண்டும்.
கணவரின் கூற்றுப்படி ஒரு மாதத்தில் இந்தி கற்றுவிடலாம் என்றே வைத்துக் கொண்டாலும், அந்த ஒரு மாதத்தை தள்ளுவது எப்படி? மேலும் இயல்பாகவே வினிதாவிற்கு மொழி ஆர்வம் கிடையாது. கணிதம், அறிவியலில் உள்ள ஈடுபாடு, மொழிப் பாடங்களில் இருக்காது. வினையாலணையும் பெயர், உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை போன்ற இலக்கணங்கள் அவளிடம் பட்ட பாடு…. அப்பப்பா…. எனவே தன் கணவர் கூறுவது போல ஒரு மாதத்திற்குள் இந்தி புரிந்து, கற்று, பேசுவது எல்லாம் தன்னால் முடியாது என்றே வினிதா நினைத்தாள். அவளின் மனதில் இத்தனை குழப்பங்கள் கோச்சடையான் தாண்டவமாடிக் கொண்டிருந்தபோது, வாசலில் யாரோ நிழலாடுவது தெரிந்தது.
“”திதீ……திதீ….” என்று ஒரு குரல்.
“”யாராய் இருக்கும்”
வாசலில் ஒரு சுரிதார் பெண், துப்பட்டாவால் தலையை முக்காடிட்டு நின்று கொண்டிருந்தாள். பார்த்தாலே வடநாட்டுப் பெண் என்று தெரிந்தது.
“”தீதி…. மை அகலா கர் மே நயா ரஹ்தி தீ. முஜே தர்காரி துகான் மே ஜானா சாஹியே…” என்று இந்தியில் ஆரம்பித்தவளை, “”வெயிட் வெயிட்” என்று நிறுத்திய வினிதா, “”எனக்கு இந்தி தெரியாது. ஆங்கிலத்தில் பேசு. ஸ்பீக் இன் இங்க்லீஷ்” என்றாள்.
“”ஆங்கிரேஸி…. முஜே ஆங்கிரேஸி நஹி மாலும் ஹை… ப்ளீஸ்” என்று கொஞ்சலோடும் தயக்கத்தோடும் பேசினாள்.
பதிலுக்கு வினிதாவும் அவளின் கொஞ்சல் நடையிலேயே, “”எனக்கும் இந்தி நஹி மாலுமியே…. என்ன செய்ய?”
ஒரு மாதத்திற்கு அப்புறம்தான் தனக்கு இந்தி மொழிப் பிரச்னை வரப்போகுதுன்னு நினைத்தால், இப்போதே வீடு தேடி வந்து விட்டதே…. கடன்காரி மாதிரி காலையிலேயே இந்தியில் கடுப்படிக்கிறாள். என்ன சொல்கிறாள்? இவள் யாராக இருக்கும்?
சைகையில் கேட்டதற்கு, அவளும் சைகையில் பக்கத்து வீட்டை காண்பித்து காண்பித்து பேசினாள். வினிதாவிற்கு சற்றுத் தெளிவானது.
இரண்டு நாட்களுக்கு முன்பு பக்கத்து வீட்டிற்கு புதிதாக குடிவந்தவர்கள். அன்று அவளைச் சரியாகவே பார்க்கவில்லை.
“”இந்திக்காரியா நீ? இது தெரியாமல் போய் விட்டதே”
“”என்ன வேண்டும்?” அடுத்த சைகை கேள்வி.
பலவித அபிநய போராட்டங்களுக்குப் பிறகு, அவள் கூற வருவது வினிதாவிற்குப் புரிந்து விட்டது. மார்க்கெட் போக வேண்டுமாம். அவளுக்கு மொழிப் பிரச்னை எனக்கு இந்தி தெரியாதது மாதிரி, அவளுக்குத் தமிழ் தெரியாது. ஆங்கிலமும் தெரியாது. காய்கறி வாங்குவதற்கு கூட வந்து உதவி செய்ய சொல்கிறாள்.
இவளும் தன்னைப் போலதான் என்பதை உணர்ந்ததும் வினிதாவிற்கு அவள் மீது பற்றுதல் ஏற்பட்டு விட்டது. மொழி வேறுபாடு என்பது இந்தியா முழுதும் உள்ளது. அவரவர் இடத்தில் இருக்கும் வரையில் இவ்வேறுபாடு பிரதானமாகத் தெரிவதில்லை. ஆனால் ஒரே இடத்தில் வாழ்வை நடத்துவதென்பது இன்றைய சூழலில் இயலாத காரியம். வெவ்வேறு மாநிலங்களுக்கு வேலை நிமித்தமாய்ச் செல்ல வேண்டியது கட்டாயமாகி விட்டது. உலகமே இவ்விஷயத்தில் கையளவிற்கு சுருங்கி விட்ட பிறகு, இந்தியா மட்டும் விதி விலக்கா? இதற்கு பயந்து, கவலைப்பட்டுக் கொண்டிருப்பதை விட, இந்த வேறுபாட்டை வெற்றி கொள்வதுதான் புத்திசாலித்தனம். சர்வைவல் ஆஃப் தி ஃபிட்டஸ்ட்.
வினிதாவிற்கு தன் பிரச்னையைத் தீர்க்க தெய்வமே ரேஷ்மாவை… ஆம், அவள் பெயர் ரேஷ்மாவாம்…. அனுப்பியதாகத் தோன்றியது. கொஞ்சம் கூட பரிச்சயம் இல்லாத நபர்களுக்கு நடுவில் தட்டுத் தடுமாறி, தமிழும், ஆங்கிலமும், அபிநயமும் கலந்து பேசி, இந்தியை கற்றுக்கொள்ள வேண்டியதிருக்கும் என்று வினிதா எண்ணியிருந்தாள். அதைவிட நம்முடைய தமிழ் சூழ்நிலையில் ரேஷ்மாவிற்கு தமிழ் கற்றுக் கொடுப்பதன் மூலம், தானும் எளிதில் இந்தி கற்றுக் கொண்டுவிடலாம் என்று தோன்றியது. அவளை மார்க்கெட்டிற்கு அழைத்துச் சென்ற வினிதா, பேரம் பேசி, பைங்கன், பியாஜ், கோபி என்று ரேஷ்மாவின் கூடையை நிரப்பினாள். அப்படியே தன் தலைக்குள் சில இந்தி வார்த்தைகளையும் நிரப்பினாள்.
ரேஷ்மாவும், வினிதாவும் நெருங்கிய தோழிகளாகி விட்டனர். வினிதா வீட்டில் அம்மா, ஆடு, இலை பாடமும், அனார், ஆம், இமலி பாடமும் ஜரூராக நடந்தது. ஒரு கட்டாயம் ஏற்பட்டுவிட்டால், மொழி எப்படி எளிதாக வசப்படுகிறது. அடுத்து வந்த தினங்களில் ரேஷ்மா தமிழ் கற்றுக் கொண்டு வந்தாள். வினிதா இந்தி சீக்தி கொண்டு வந்தாள். ஒரு மாதத்திற்குள் தடங்கல் இல்லாமல் பேசப் பழகி விட்டாள். இந்தி சீரியல்களைப் பார்த்து ரேஷ்மாவுடன் அளவளாவவும் ஆரம்பித்து விட்டாள். வட இந்தியா, வினிதாவை இனி பயமுறுத்தப் போவதில்லை.
ஒருநாள், ரேஷ்மா கேட்ட கேள்வியால், வினிதா ஆச்சர்யமும், சங்கடமும் அடைந்தாள்.
“”உங்கள் மாநிலத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் நடந்ததாமே? தமிழ் நாட்டில் என்னை கவனமாக இருக்கும்படி என் பிதாஜி எச்சரிக்கை செய்துள்ளார்”
இந்தி எதிர்ப்புப் போராட்டங்களை , அவள் தந்தை இத்தனை நாட்கள் ஞாபகத்தில் வைத்துள்ளது ஆச்சர்யம். அதனை அடுத்த தலைமுறைக்கும் கூறி, தமிழக மக்களிடம் எச்சரிக்கையாக இருக்கும்படி கூறியது சங்கடம்.
“”ஏன் உனக்கு இங்கு பயமாக உள்ளதா?”
“”நயி நயி திதீ…. நம்ம நாட்டில் எனக்கு என்ன பயம்? ஆனால் நீங்கள், …. அதாவது உங்கள் மாநில மக்கள், இந்தி மீது எதிர்ப்பை காட்டுவது ஏன்?”
“”மொழித் திணிப்பு தவறுதானே ரேஷ்மா?”
“”பல மொழிகள் உள்ள நம் நாட்டில் ஒரு இணைப்பு மொழி அவசியம் தானே அக்கா? அது ஏன் அதிக மக்கள் பேசும் இந்தியாக இருக்கக் கூடாது?”
“”ஏன் இருக்கக் கூடாது கேள்வி கேட்பது எளிதுதான். புதிய மொழியைக் கற்றுக் கொள்வதில் உள்ள கஷ்டங்கள், அது நம் மொழியை நசித்து விடுமோ என்ற பயம், என்று பல காரணங்கள் உள்ளன”
“”ஆங்கிலத்தை நீங்கள் இணைப்பு மொழியாக ஏற்க மறுக்கும் அத்தனை காரணங்களும், இதற்கும் உண்டு அல்லவா?” பதில் கேள்வி கேட்டாள்.
ரேஷ்மா சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்தாள். ஒரு சிறிய அமைதிக்குப் பிறகு பேசினாள்.
“”நீங்கள் கூறுவதை ஒத்துக் கொள்கிறேன் அக்கா. இந்தியை வலுவில் திணிப்பது தவறுதான். அட்லீஸ்ட் நீங்களாவது, ஆங்கிலம், இந்தி என்று மற்ற மொழிகளை கற்க முயற்சிக்கிறீர்கள். ஆனால் நாங்களோ வேறு மொழிகளை தெரிந்து கொள்ளவே மாட்டேன்கிறோம். எங்களிடமும் தவறுகள் உள்ளன. எனக்கு ஒரு யோசனை. குழந்தைத்தனமாக உள்ளது என்று கிண்டல் செய்ய மாட்டீர்களே…”
“”ச்சே… ச்சே…”
“”இந்தியா முழுவதும் பத்தாம் வகுப்பு வரை, வருடத்திற்கு ஓர் இந்திய மொழியை கட்டாயப் பாடமாகச் சொல்லிக் கொடுக்க வேண்டும். நம் நாட்டில் உள்ள மொழிகளில் குறைந்த பட்சம் பத்து மொழிகளாவது பரிச்சயம் ஏற்படும் அல்லவா? எந்த மாநிலத்திற்கு செல்வதற்கும் தயக்கமே ஏற்படாது அல்லவா?”
ரேஷ்மாவின் கருத்து வினிதாவை யோசிக்க வைத்தது. உதட்டில் தெரிந்த புன்னகை, வினிதாவின் ஆமோதிப்பை வெளிக்காட்டியது. அச்சமயம் அவளின் செல்போனும் ரீங்காரமிட்டு உற்சாகக் குரலெழுப்பியது.
போனில் வினிதாவின் கணவர். அவரோ பதட்டத்தில் பேசினார்.
“”வினி.. எனக்கு டிரான்ஸ்பர் ஆர்டர் வந்து விட்டது. குண்டூர் அருகில் பொன்னூர்னு கிராமம். ஆந்திரா”
“”ம்ம்”
“”என்ன வெறும் “ம்’ சொல்ற? உனக்கு அதிர்ச்சியாக இல்லையா? உன்னோட இந்தி பாடம் பயனில்லை. இனி தெலுங்கு கத்துக்கணும். எனக்கும் தெலுங்கு தெரியாது. ரூரல் ஏரியா வேறு. தெலுங்கில்தான் பேசியாகணும். என்ன செய்யப் போகிறேனோ?”
கணவரின் டென்ஷன் கொஞ்சம் கூட வினிதாவிற்கு இல்லை. அமைதியாக பதில் கூறினாள்.
“”கவலைப்படாதீர்கள் கணவரே….. ஒரே மாசம்தான்…. தெலுங்கை எளிதில் கற்று விடலாம்”

– ஸ்ரீ தேவி (அக்டோபர் 2014)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *