கதையாசிரியர்:
தின/வார இதழ்: வீரகேசரி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 22, 2014
பார்வையிட்டோர்: 7,175 
 

லிஃப்ட் இல்லாத மாடிப்படிகளில் ஏறி மூன்றாவது தட்டுக்கு வந்து கோலிங் பெல்லை ஒலித்தபோது வழக்கம்போல அப்பாதான் கதவைத் திறந்தார். இதை அவளுக்காக மனமுவந்து செய்யும் ஒரு உதவிபோல, இதற்காகவே காத்துக்கொண்டிருப்பவர்போல பெல் ஒலித்த மாத்திரத்திலேயே கதவைத் திறந்து கண்களால் இரக்கமாகச் சிரித்துக்கொண்டு தோன்றுவார். அவருக்கு இதயத்திலிருந்து சுரந்து வரும் இந்த இரக்கத்தை தவிர வேறு எதையும் தரமுடியவில்லை. குடும்பத்தில் மூத்தவளாகப் பிறந்த இந்தப் பெண் நாற்பது வயதாகியும் இன்னும் ஒருத்தனுக்கு வாழ்க்கைப்படாமல் தன் குடும்பத்துக்காக உழைத்துப் போடுகிறாளே என அப்பா இரக்கப்படுவது போலிருக்கும்.

அலுவலகத்தில் நாள்முழுவதும் காய்ந்த அலுப்பு, பஸ் நெரிசல்களில் நசுங்கிய சினம், மாடிப்படிகளில் ஏறிவந்த களைப்பு எல்லாம் அப்பாவின் முகத்திலுள்ள கருணையைக் கண்டதும் பறந்துவிடும். அவர் முகதரிசனத்தைப் பெற்றுக்கொண்டே வீட்டினுள் நுழையும்போது ஒரு புத்துணர்சி கிடைக்கும்.

உள்ளே வந்ததும் கதவை ஓசைப்படாது சாத்திவிட்டு வந்து அப்பா கதிரையில் அமர்ந்துகொள்வார். நாள் முழுவதும் அந்தக் கதிரையே அவருக்குத் தஞ்சம். அதனால்தான் அதற்கு ‘அப்பாவின் கதிரை’ எனப் பெயர் வந்தது. வெளிக்கேட்காது அடங்கிப்போகும் குரலில் அடிக்கடி செருமுவார். யாருடனும் பேசுவது குறைவு. அப்படி இருந்தவாறே எத்தனை விடயங்களுக்காகக் கவலைப்படுகிறாரோ? வரிசையாகப் பெற்றெடுத்த ஐந்து பெண்களுக்கும் உரிய காலத்தில் கல்யாணம் செய்துவைக்க முடியவில்லையே என்ற கவலையில் தோய்ந்து, அவரது முகம் எப்போதும் மன்னிப்புக் கோருவது போன்றதொரு பாவனையில் மாறிப்போய்விட்டது.

அறையுட் சென்று மேஜையிற் கைப்பையைப் போட்டாள். செருப்பை ஒரு பக்கம் கழற்றிவிட்டு கட்டிலில் நீட்டி நிமிர்ந்து படுத்தாள். அது டபிள் பெட். இரவில் அந்தக் கட்டிலில் தங்கைகளில் ஒருத்தி சேர்ந்து பகிர்ந்துகொள்வாள்.

அம்பிகா பக்கத்தில் படுத்தாளென்றால் தொல்லைதான். உறக்கம் வரும்வரை அலுப்புக் கொடுப்பாள். வயதுக்குரிய பக்குவம் இல்லாதவள்போல சிறு பிள்ளைமாதிரி விளையாடும் பெண். இந்த வயதிலும் விளையாட்டும் வேடிக்கையும் இவளுக்கு வேண்டியிருக்கிறது. இப் பூவுலகில் முப்பத்தைந்து வருடங்களைக் கழித்த பெருமை இவளுக்கு உண்டு. அப்பாவுக்கு மூன்றாவது செல்வம்.

அம்பிகாவைப் பார்த்தால் ஆச்சரியமாயிருக்கும். இவளது நெஞ்சைக் கவலைகளே நெருடுவதில்லையா? படுத்திருக்கும்போது கொஞ்சுவாள். ‘ஆருக்கோ கிடைக்க வேண்டிய சான்ஸ் எல்லாம் எனக்குக் கிடைக்குது” என்று கூறிக்கொண்டே அவளைக் கட்டியணைத்துப் படுப்பாள்.

‘அக்காதான் எங்களுக்கு அம்மா..!” என அம்பிகா அடிக்கடி சொல்வாள். அம்பிகா சொல்வதைக் கேட்கும்போது சந்தோசமாகவும் இருக்கும். வேதனையாகவும் இருக்கும். உரிய காலத்தில் மணமுடித்திருந்தால் அவள் இப்போது மூன்று நான்கு குழந்தைகளுக்குத் தாயாகியிருக்கலாம். கற்பனைகளுக்கு ஓர் எல்லையில்லைப் போலிருக்கிறது. கல்யாணத்துக்கே ஒரு வழியைக் காணவில்லை. அதற்குள் நான்கு குழந்தைகள் என்ற கணக்கு வேறு. அந்தக் கணக்கை நினைத்து மனதுக்குள் சிரித்தாள். அதுதான் அவளுக்கு மிகவும் சாத்தியமான காரியம். மனதுக்குள் சிரிக்கமுடியும். மனதுக்குள் உரத்து அழமுடியும். மனதுக்குள் நினைத்துத் துடிக்க முடியும். பொங்கிக் குமுற முடியும் – வெளியே வேறு விதமாகக் கீறிய ஒரு முகத்தைக் காட்டியபடி!

எட்டாமற்போன இல்லற வாழ்வு நினைவில் வருகையில் ஒரு வேதனையின் கொந்தளிப்பு மனதில் மோதுகிறது. அடுத்த கணமே மனம் சமாதானமும் அடைகிறது. அவள் மணமுடித்துக்கொண்டு போயிருந்தால்.. வாழ்வு இவர்களிலிருந்து பிரிந்து ‘தானும் தனது குடும்பமும்’ என்றாகிப் போயிருக்கும். பிறகு இந்தப் பெண்களை யார் ஆதரிப்பார்கள்? அம்பிகா அவளை அம்மா என்று சொல்லுகிறாள். குடும்பத்தில் மூத்தவள் என்பதற்காக அப்படியொரு ஸ்தானத்தைத் தருகிறாளா? அல்லது துணையற்ற தங்கள் வாழ்வில் அக்காதான் ஆதரவாகவும் துணையாகவும் இருக்கமுடியும் என நம்புகிறாளா? கடவுளே இந்தப் பெண் ஜென்மங்களுக்கென ஒவ்வொருத்தன் வந்து வாய்க்கமாட்டானா?

தனக்கென இனி ஒருவன் வரமாட்டான் என்பது அவளுக்குத் தெரியும். இந்த வாடிப்போன முகமும் ஒட்டிய கன்னங்களும் குழிவிழுந்த கண்களும் யாருக்குத் தேவை?

‘அக்கா கொஃப்பி!”

திரும்பியபோது கையில் கோப்பியுடன் சாந்தா – அவளுக்கு நேர் இளையவள். பெண் என்ற பெயருக்கு இலக்கணமாக இந்தச் சிலையை செதுக்கிய சிற்பி ஒரு தவறுதலையும் செய்துவிட்டான். இதன் முகத்தில் சோகத்தை மட்டுமே வடித்து வைத்துவிட்டான். இது சிரிக்காதா என்று மீண்டும்.. மீண்டும் இதன் முகத்தைப் பார்க்கத் தோன்றும். இது சிரிக்காமலே குசினிக்குப் போய்விடும். அலுவலகத்தையும் குசினியையும் தவிர வேறு எதையுமே இது கண்டதில்லை. ஓய்வு ஒழிச்சல் இதுக்குத் தேவையில்லை. இதன் முகத்தில் வார்க்கப்பட்டுள்ள சோகத்தைத் துடைத்துச் செப்பனிட ஒரு கை வந்து சேராதா?

‘வைச்சிட்டுப் போம்மா! பிறகு குடிக்கிறன்.”

‘கொஃப்பி ஆறப்போகுது. கெதியிலை எழும்பிக் குடியுங்கோ!” மேஜையில் கோப்பியை வைத்துவிட்டு வெளியேறினாள் சாந்தா.

முகத்தை அலசிக்கொண்டு வரலாம் என எழுந்தாள். தண்ணீர் பட்டால் கொஞ்சம் உற்சாகம் ஏற்படும். கண்ணாடியின் முன்னே சென்று தலையைக் கோதிவிட்டாள். தலைமுடி நரைப்பதற்கு இது ஒரு வயதல்லத்தான். ஆனால் கவலைகளும் பிரச்சினைகளும் கூடினால் முடி நரைக்குமாம்!

பிரச்சினைகள் வாழ்க்கையுடன் இரண்டறக் கலந்து வருகின்றன. இருபத்தொரு வயதிலேயே குடும்ப பாரத்தைப் பகிர்ந்து சுமப்பதற்காக உத்தியோகம் பார்க்கக் கொழும்புக்கு வந்தாள். உத்தியோகம் பிரச்சினைக்குத் தீர்வா.. அல்லது பிரச்சினையா என்று இப்போது புரியவில்லை. உத்தியோகம் பணத்தைத் தருகிறது! எல்லாப் பிரச்சினைகளின் அடிப்படையே அதுதானே! அப்பாவிடம் ‘அது’ இருந்திருந்தால் அவளைச் சம்பாதிக்க அனுப்பியிருக்கமாட்டார். நேர காலத்துக்கு ஒருத்தனின் கையிலை பிடித்துக் கொடுத்திருப்பார். பணப் பிரச்சினையைத் தீர்க்கலாமென நுழைந்த உத்தியோகம் இப்போது பிரச்சினையாகத் தெரிகிறது. அதிகாலையிலேயே எழுவது, அசதி தீர முன்னரே அவதி அவதியாகச் சமைப்பது, பைப்பில் தண்ணீர் நின்றுபோக முதல் அல்லது அரை குறைத் தண்ணீரில் குளிப்பது, அந்த நேரப் பற்றாக்குறையில் உடுதுணிகள்.. பாத்திர பண்டங்கள் கழுவவேண்டியது.. மதியத்துக்கான சாப்பாட்டைப் பார்சலில் எடுத்துக்கொண்டு, எதையாவது வாயிற் போட்டு விழுங்கியது பாதி விழுங்காதது பாதியாக மெசினைப்போல ஓடவேண்டும். பஸ்சிற்குள் முதுகை முறித்துக்கொண்டு நிற்கவேண்டும். அலுவலகத்தில் கண்டவனுக்கெல்லாம் புன்சிரிப்பில் முகஸ்துதிக்க வேண்டும். தனக்குச் சம்பந்தமேயற்ற பைஃல்களையெல்லாம் தலையில் போட்டுக் கிழிக்கவேண்டும். இவையெல்லாம் பணத்துக்காகத்தானே? மாலையில் வந்தால் திரும்பவும் சமையலும் துவையலும் காத்துக் கிடக்கிறது. சீ.. இவையெல்லாம் என்ன சுமை?

இவை ஏன் தனக்குச் சுமையாகப் படுகிறது என யோசித்திருக்கிறாள். அன்றாட கடமைகள்.. வாழ்வின் தேவைகள் என்பதை அறிவாள்.

உத்தியோகம் மனதில் ஒரு பாகத்தை நிறைவு செய்துகொண்டிருக்கிறது என்பதும் உண்மை. மற்றவர்களில் தங்கியிருக்காமல் தனது தேவைகளுக்குத் தானே சம்பாதிப்பது..

ஆனால் பூஞ்செடிகளைப்போலவும் புள்ளினங்களைப்போலவும் அவளையும் இயற்கைதான் இவ்வுலகுக்குத் தந்தது. பூப்பதையும் காய்ப்பதையும் இயற்கை அவளுக்குமாகத்தான் அளித்திருக்கிறது. கொஞ்சிக் குலாவும் பறக்கும் இயல்புகளை இயற்கை அவளுக்கும் சேர்த்துத்தான் கொடுத்திருக்கிறது! நெஞ்சுக்குள் அனன்று அனன்று எரியும் இந்த அக்கினியை எப்படி அமுக்கி வைத்திருப்பது? இப்படி எரியும் ஜுவாலையை நெஞ்சுக்குள் சுமந்துகொண்டு வேறு கடமைகளில் ஈடுபடுவது எப்படி?

அவளுக்குத் தெரியும்.. தங்கைகளும் சலித்துப்போனார்கள் என்று! அவர்களுக்கும் உத்தியோகம் சலித்துப்போய்விட்டது. ஐ_வாலை நெஞ்சுக்குள் மட்டுமில்லை.. உடலிலும் பற்றிக்கொண்டு எரிகிறது. அதை அணைத்துக்கொள்ள.. கல்யாணம் ஒரு தீர்வாயிருக்கலாம். கல்யாணம் தேவைப்படுகிறது என்று எந்தப் பெண்தான் வாய் திறந்து சொல்வாள்?

அப்பாவுக்கு அவர்களைக் கரை சேர்த்திடவும் முடியவில்லை.. ஒரு கரை காணும்வரை படிக்கவைக்கவும் முடியவில்லை. அப்பாவின் செல்வாக்கு அவர்களுக்கு ஏதோ சிறு சிறு உத்தியோகம் வாங்கிக் கொடுக்கத்தான் போதுமானதாக இருந்தது. அப்பா ஆரம்ப காலத்திலிருந்தே கொழும்பு உத்தியோகக்காரனாகத்தான் இருந்தார். ஒரு கிளறிக்கல் சேவன்ற் ஆக இருந்துகொண்டு, கொழும்பில் தனது சீவியபாட்டையும் பார்த்து.. ஊரிலே குடும்ப செலவினங்களுக்கும் ஈடுகொடுக்க முடியவில்லை. அந்த இக்கட்டிலும் ஏன் ஐந்து பெண்களைப் பெற்றெடுத்தார் என்ற இரகசியம் அவருக்குத்தான் தெரியும். அல்லது அந்த இரகசியம் அவருக்குத் தெரியாதோ என்னவோ!

பாவம் அப்பா தன் பிள்ளைகளுக்காக உழைத்துழைத்தே உருக்குலைந்துபோனார். அரச சேவையிலிருந்து ஓய்வெடுத்த பின்னரும் தனியார் கொம்பனிகளில் அறுபத்தேழு வயது வரை வேலை செய்தவர். பிறகு, யாருக்கும் அவரைத் தேவைப்படாமற் போயிற்று! பிள்ளைகளுக்குத் தனது துணை தேவைப்படுமென கொழும்பிலேயே தங்கிவிட்டார்.

வெளியே, முன்கூடத்தில் அப்பா செருமிக்கொண்டே படுத்திருப்பதைப் பார்த்தால்.. தங்களுக்குக் காவலுக்காகப் படுத்திருப்பது போலிருக்கும். அந்தச் செருமல் இரவில் மட்டும் – தனது பிரசன்னத்தைத் தெரியப்படுத்துவதுபோல சற்று உரத்து.. ஆனால் யாருடைய உறக்கத்தையும் இடையூறு செய்யாத மாதிரிக் கேட்கும். அப்பா இரவில் உறங்குவதில்லைப்போலிருக்கிறது. என்ன, இந்தப் பெண்களை யாராவது வந்து இழுத்துக்கொண்டு போய்விடுவார்கள் என்றா உறக்கம் கெடுகிறார்? அப்படி இழுத்துக் கொண்டு போனாற்தான் என்ன?

அம்பிகா ஒரு தடவை பச்சைப்படியே சொன்னாள்.

‘பெட்டையளுக்கு வயது வந்துவிட்டால் துணைக்கு மாப்பிளையைத் தேடிக் குடுக்கிறதை விட்டிட்டு.. அப்பா இன்னும் எங்களுக்குக் காவல் இருக்கிறாh.!”

அம்பிகா இப்படி அப்பாவைக் குறை சொல்வதுபோலக் கதைத்தது உறக்கங்கள் தடைப்பட்டுப்போன ஓர் இரவிற்தான் – கட்டிலிற் படுத்திருந்தவாறே அலுவலகக் கதைகளைச் சொல்லிக்கொண்டிருந்தாள்.. சிலர் திருமணம் முடித்த கதைகளும் வந்தன. இவள்மேல் ஒரு கண் வைத்திருந்த நேசன் பின்னர் இன்னொருத்தியை நேசித்து முடித்துக்கொண்டான். அம்பிகாவை அது பெரிய இழப்பாக வருத்தியது. தனக்கு மூத்த அக்காமார் இருக்கும்போது தான் எப்படிச் செய்வது என்று அவனிடம் கேட்டாளாம்!

‘மடைச்சி! என்னட்டை ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமே? இப்பிடி ஒராளை ஒராள் பார்த்துகொண்டிருந்துதான்.. எல்லாரும் கிழவியாய்ப்போறீங்கள்! வலிய வந்ததை வீணாய் விட்டிட்டியே!”

‘இல்லையக்கா! அந்தாளுக்குத் தேவையான காசைக் குடுக்க உன்னட்டை வழியிருக்கோ? சீதனத்தைப் பற்றிக் கவலைப்படாமல் ஒருத்தன் வந்தால் அது அற்புதமெல்லோ!”

அவள் வாயடைத்துப்போனாள். பக்கத்திற் படுத்திருந்தபடியே அம்பிகாவின் தலையைத் தடவிக்கொடுத்தாள். மென்மையான குரலில்.. ‘அப்பா பாவம்!… நீ அவரைப் பேசாதை!” என்று மட்டும் சொன்னாள். அப்போது அம்பிகா மூக்கை உறிஞ்சி விம்மத் தொடங்கினாள். அந்த அழுகை அப்பாவைக் குறை சொன்னதற்காகவும் இருக்கலாம்.

அப்பா கோபம் கொள்ளப்பட வேண்டியவரல்ல என்பது அம்பிகாவுக்கு தெரியுமெனவும் அவளுக்குத் தெரியும். அம்பிகா ஆற்றாமையுணர்விற்தான் அப்படிப் பேசியிருக்கிறாள். அப்பா தங்களுக்காக அலையாத அலைச்சலில்லை. ‘இந்தப் பிள்ளைகளை ஒவ்வொருத்தன்ர கையில் பிடிச்சுக் கொடுக்க வேணும்’ என இராப்பகலாக உறக்கமின்றித் திரிந்தவர்! அவரது தூரதிஷ்டமோ.. அல்லது அவளது தூரதிர்ஷ்டமோ.. மாப்பிள்ளை தேடத் தொடங்கியபோது அவளது வயது முப்பதை எட்டியிருந்தது. கொஞ்சமாவது பொருள் பண்டத்தைச் சேர்க்காமல் எப்படிக் கல்யாணம் பேசுவது? பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை – இவ்வுலகில் மாப்பிள்ளையும் இல்லை!

அவளுக்குத் தேவையான வயதில் மாப்பிள்ளை தேடியபோது பணம் அதிகமாகத் தேவைப்பட்டது. பணம் குறையக்கூடிய இடங்களில் அவளைவிட அவளது தங்கைகள் தேவைப்பட்டது. அவள் இருக்கும்போது அவளுக்குப் பின்னே வந்தவர்களுக்கு எப்படிச் செய்வது என்பது அப்பாவின் வாதம். இப்படியே காலங்கள் கரைய பெண்களின் வயதும் அதிகரிக்க.. இப்பிடி.. இப்பிடி.. பல சாட்டுகள்.. கல்யாணச் சந்தையில் அவர்களது தகுதியை குறைத்துக் குறைத்துத் தடங்கல்களை ஏற்படுத்தி விட்டன. இப்போ, அப்பாவும் ஓய்ந்து போனார்.

முகத்தை அலசிக்கொண்டு வந்து கோப்பியை எடுத்தாள். அது ஆறிப்போயிருந்தது. ஆறிய கஞ்சி பழங் கஞ்சியாம்., அது போலத்தான் கோப்பியும்! எல்லாமே அப்படித்தான்.

ஆறுவதற்கு முன்னரே குடிக்காமல் விட்டது அவளது தவறுதானே? குடிக்கக் கிடைக்காமலே போவதைவிட ஆறிய பிறகாவது கிடைக்கிறதே என ஆறுதலடைய வேண்டியதுதான். விரும்புவது கிடைக்காவிட்டால் கிடைத்ததை விரும்பலாம்.

கோப்பியை அருந்தியவாறு ஜன்னலூடு வெளியே பார்த்தாள். பறந்து போகக்கூடிய வானவெளி தெரியவில்லை. அடுக்கடுக்காக நெருக்கமாகக் கட்டப்பட்ட மாடிக் கட்டிடச் சுவர்கள்தான் தெரிந்தன.

சில பழைய கட்டிடங்களில் சிற்பங்கள்கூடச் செதுக்கியிருக்கிறார்கள். நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு நிற்கும் பெண் சிற்பங்கள். அவர்களுக்குச் சிறகுகள் கூட இருக்கிறது. அகல விரித்துப் பறப்பதுபோல.. கட்டிடங்களின் உச்சியிலே! முற்காலத்தில் பெண்கள் பறந்திருப்பார்களோ? ஏன்.. இப்போதும்தான் வீதிகளில்.. அலுவலகங்களில்.. கடற்கரைகளில்.. வாகனங்களில் எல்லாம் பறக்கிறார்கள். அவர்களைப்போல் ஏன் அவளுக்கும் பறக்க முடியவில்லை?

அந்த மாடிகளின் உச்சியில் இலையுதிர்ந்த அன்ரனா மரங்கள்! அவற்றில் மலர்ந்திருக்கும் பறவைகள்! சிறு மொட்டுகளாக அமர்ந்திருக்கும் சிட்டுக்குருவிகள். காற்றில் வெடித்துப் பறக்கும் பூம்பஞ்சுகளைப் போல, ‘ஒன் யுவர் மாக் – கெற் – செற் – ரெடி – கோ!’ சொல்லி ஒரே நேரத்தில் அவையைல்லாம் எழுந்து பறக்கின்றன! அவற்றைப்போல ஏன் அவளுக்கும் பறக்க முடியவில்லை?

‘அகிலா!”

அப்பாவின் குரல் – திரும்பினாள்.

அறைக்கதவை நீக்கியபடி நின்றார். அவள் எப்போது வெளியே வருவாள் எனப் பார்த்துப் பார்த்து.. பொறுமை கொள்ளாமல், தேடி வந்தவர் போல.. திறந்த கதவினூடு தோன்றினார். என்ன அலுவலாயினும் அப்பா யாரையும் தேடி அறைக்கு வந்ததில்லை. தேவையானவர்கள் போய்த் தென்படும்வரையில் முன்கூடத்தில் அவரது கதிரையிலேயே தவமிருப்பார்.

‘இந்தாம்மா!” நீட்டிய அவர் கையில்.. கடிதம்!

கடிதமென்றதும் நெஞ்சு ஒருமுறை திடுமென அடித்தது – ஊரிலிருந்து வந்திருக்கக்கூடும்., அம்மா எழுதியிருப்பாள் – அம்மாவின் கடிதங்களெல்லாம் பொருளாதாரப் பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டதாகத்தான் இருக்கும். அதனாற்தான் முதற் ‘திடும்’. ஒவ்வொரு கடிதங்களிலும் தவறாமல் ‘இந்தப் பிள்ளைகளெல்லாம்.. யாரிட்ட சாபமோ.. நித்திய கன்னிகளாகவே இருக்கிறார்களே..!’ என அழுது ஓய்வாள். அம்மா எழுதுவதைப் பார்த்தால்.. இந்தக்குறைகளைத் தீர்க்க ஒரு மார்க்கம் புரியாமல் அவளிடம் முறையிடுவதுபோலவும் இதற்கெல்லாம் அவள்தான் ஒரு வழிகாட்டவேண்டும் என்பதுபோலவும் இருக்கும். வாசித்து முடித்ததும் பெருஞ்சுமை மனதில் ஏறி வருத்தும்.

ஊரில் அம்மாவுடனிருக்கும் கடைசிப் பெண்களிருவரும் தங்கள் வல்லமைக்கெட்டியவாறு ஏதோ சம்பாதிக்கிறார்கள் – பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பது.. தையல்வேலை.. இப்படி.. அவர்கள் பாட்டைப் பாத்துக்கொள்ளக்கூடிய அளவுக்கு! எனினும் அம்மாவுக்கு இங்கிருந்தும் மாதாந்தம் அனுப்பிவைக்கவேண்டும். சற்று தாமதித்தாலும் கடிதம் வந்துவிடும். அம்மா சீட்டு பிடிக்கிறாளாம். பிள்ளைகளுக்காகத்தான் சேமிப்பு. இந்தப் பெண்களை யாராவது ஒவ்வொருத்தனுடைய கையில் கொடுத்துக் கரை சேர்த்துவிடலாம் என்ற நம்பிக்கை அம்மாவுக்கு இன்னும் இருக்கிறது! அப்படியொரு நம்பிக்கை தங்கைகள் எல்லோருடைய மனங்களிலும் ரகசியமாக இருக்கிறது என்பது அவளுக்குத் தெரியும். குருவிகளைப்போல அவர்களும் சேகரிக்கிறார்கள் – பாங்க் புத்தகங்களில் கொஞ்சம் கொஞ்சமாக! அந்தக் கட்டளையை அவள்தான் அவர்களுக்கு இட்டவள்.

‘உழைக்கிறதையெல்லாம் செலவுகளுக்கெண்டு கொட்டாமல்.. உங்களுக்குங்களுக்கு எண்டும் ஏதாவது சேமிச்சு வையுங்கோ.. ஒரு நேரத்திலை உதவும்.”

அவர்களெல்லாம் கனவு கண்டுகொண்டிருக்கும் அந்த அற்புதமான ‘ஒரு நேரம்’ எது என்பதைக் கடவுளும் மறந்து விட்டாரோ என அடிக்கடி யோசித்திருக்கிறாள். அதனால் தனக்கென்று ஒரு பாங்க் புத்தகத்தைப் பற்றி அவள் எண்ணியதுமில்லை.

கடிதத்தை வேண்டுவதற்கே பயமாக இருந்தது. அப்பா அறைக்கே தேடி வந்தபடியால் செய்தி பாரதூரமானதாக இருக்கலாம். அதைத் தாங்கிக்கொள்ளும் தைரியத்தை முதலில் மனதில் ஏற்றிக்கொள்ளவேண்டும். எல்லோரும் பெரியவர்கள் ஆகும்போது ஏன்தான் குடும்பத்தில் பிரச்சினைகள் பெருகுகின்றனவோ? அப்பா உழைத்துச் சாப்பாடு போட, மூக்கு முட்டும் வரை பிடித்துப்போட்டு சிறு பிள்ளைகளாக விளையாடித்திரிந்த நாட்கள் எவ்வளவு ஆனந்தமானவை! பருவம் மலர்ந்தபோது.. எங்களுக்கும் ஒரு வாழ்க்கை வரும் என்று.. எங்கள் குடும்பம் இப்படி அமையும் என்று கனவு கண்ட நாட்கள் எவ்வளவு இனிமையானவை. அந்த நாட்களெல்லாம் கனவுகளாகவே போய்விட.. இப்போது ஒவ்வொரு நாட்களும் ஏதோ பிரச்சினையைக் கொண்டுவருவதுபோலிருக்கிறது. கடிதம் வந்தால் வாசிக்க முதலே.. ஊரில் என்ன பிரச்சினையோ.. ஊரில் உள்ள தங்கைகள் ஏதாவது ஏறுக்குமாறான காரியம் செய்திருப்பார்களோ என்றெல்லாம் திடும்! திடும்!

அப்பா அவளிடம் கடிதத்தைக் கொடுத்தபோது அவரது கைவிரல்கள் நடுங்கின. அவரது கண்களில் நீர் ததும்பி சுருக்கமடைந்த கன்னங்களில் ஓட முடியாது நின்றது.

‘இந்தாம்மா!.. சதானந்தன் எழுதியிருக்கிறான்!”

அவளுக்குப் புரியவில்லை.

‘எந்த?”

‘என்னம்மா.. சதானந்தனை மறந்திட்டாயா..? நடராசன்ர மகன்.. பிரான்சுக்குப் போனான்..”

‘ஓ..!”

அப்பாவின் நண்பர் நடராஜாவின் மகனை அவள் மறந்துதான்போனாள். பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்பிருந்தே அவனது பழக்கமும் தொடர்பும் விட்டுப்போயிற்று. ஊரில் அவர்களது வீட்டுக்கு அண்மையிற்தான் சதானந்தனின் வீடும் இருந்தது. விருத்தெரிந்த பருவம் முதலே அவர்கள் வீடே தஞ்சமெனக் கிடந்தவன். சேர்ந்து விளையாடுவான். ஒன்றாகச் சாப்பிடுவான். இந்த வீட்டில் ஒரு ஆண்பிள்ளை இல்லாத குறையைத் தீர்த்து வைத்தவன் என்றும் சொல்லலாம். வீட்டுக்குத் தேவையான சகல உதவிகளையும் செய்வான். கடை கண்ணிக்குப் போய் வருவான். பெண்கள் ஏதாவது அலுவலாக வெளியிடங்களுக்குப் போகும்போது அவனும் துணையாகப் போய்வருவான்.

அப்போது அவளுக்கு வயது இருபதாக இருக்கலாம் என்று ஞாபகம். ஒரு மழை நாள் பொழுது.. இருண்டுகொண்டிருந்த நேரம். ஒரே குடையில் அவளை நனையாது அழைத்து வந்த அவனது கை, ஒழுங்கையின் தனிமை வந்ததும் முதுகுப் பக்கமாக வளைந்து அவளது இடையை அணைத்தது.

இந்த வித்தியாசத்தை உணர்ந்ததும் அவள் சிலிர்த்துப்போனாள். நடுக்கத்துடன் அவனை விட்டு விலகி மழையில் விரைவாக நடக்கத்தொடங்கினாள். அவளை அழைத்துக்கொண்டே சதானந்தன் பின்னே ஓடிவந்தான். அந்த சம்பவத்துக்கு அன்றோடு முற்றுப்புள்ளி ஏற்பட்டது. அது அவர்களிருவருக்குமிடையில் மட்டும் இரகசியமாக இருந்து மறைந்தது. அதற்குப் பிறகு அவள் அவனைத் தவிர்த்துக்கொள்கிறாள் என்பதை உணர்ந்ததும் அவனும் விலகிக்கொண்டான். அவன் வழக்கம் போலவே வீட்டுக்கு வந்து போனாலும் அவர்களுக்கிடையில் ஓர் இடைவெளி விழுந்திருந்தது.

இது நடந்து இரண்டொரு வருடங்களின் பின் மீண்டும் அந்தப் பூதம் கிளம்பியது. அவள் கொழும்புக்கு வேலைக்காக வந்த புதிதில், சதானந்தன் தனது நிலைப்பாட்டை பூரணமாக விபரித்து ஒரு கடிதம் எழுதியிருந்தான். அவளை மனப்பூர்வமாகக் காதலிப்பதாகவும்.. கல்யாணம் செய்ய விரும்புவதாகவும்.

அவள் குழம்பிப்போனாள். சதானந்தனுக்கும் ஏறக்குறைய அவளுடைய வயதாகவே இருக்கும். ஏற்கனவே நடந்த சம்பவம் அவ்வப்போது அவளுக்கு உள்ளக் கிளர்ச்சியைத் தந்ததும் உண்மையே. எனினும் அதற்கு அவனது வயதுக் கோளாறுதான் காரணமென பெரிசுபடுத்தாமல் விட்டிருந்தாள். சதானந்தனின் காதற் கடிதம் மனப்போராட்டங்களில் மூழ்கடித்துத் தடுமாற வைத்தது.

சிறுபராயம் கடந்து யுவப்பருவத்தில் காலடி எடுத்து வைக்கும் அந்தக் காலகட்டத்தில்தான் அவள் குடும்பப் பொறுப்புக்களையும் சுமைகளையும் உணரத் தொடங்கியிருந்தாள். வீட்டில் எல்லோருக்கும் வயிராறச் சாப்பாடு போடுவதற்கே தனது உழைப்பு போதாது திண்டாடுகிறார் அப்பா. ஐந்து பெண்களையும் மடியில் நெருப்புப்போல கட்டி வைத்துக்கொண்டு அழுது தீர்க்கிறாள் அம்மா. இதையெல்லாம் கவனியாது அவள் சுயநலங்கொண்டவளாக ஒருவனோடு தன் பாட்டைப் பார்த்துக்கொண்டு போய்விடலாமா? அவளது ஆருயிர்த் தங்கைகள் திசையே தெரியாத ஒரு பாதையில் நிற்பதைப் போலிருக்கிறது. இந்நிலையில் அவர்களைப் பிரிவதென்பது முடியாத காரியம். காதலாவது கல்யாணமாவது..

அவள் உழைக்கவேண்டும். இந்தக் குடும்பத்தின் நிலையை சற்றேனும் சீர்செய்து எல்லோருக்கும் ஒரு வாழ்க்கையை நிச்சயப்படுத்திக் கொள்வதற்கு அப்பாவோடு சேர்ந்து அவளும் உழைக்கவேண்டும்.

தனது முடிவை அவனுக்கு எழுதிவிட்டாள். பின்னர் அவன் தனது உத்தியோக நிமித்தம் கொழும்புக்கு வந்தபோது சொன்னது ஞாபகமிருக்கிறது..

‘எண்டைக்கெண்டாலும் நீங்கள் ஓமெண்டு சொல்லுறவரை நான் காத்திருப்பேன்..’

இரண்டோ மூன்று வருடங்களின் பின்னர் சதானந்தன் பிரான்சுக்குப் போய்விட்டதாக அறிந்தாள். இப்போது சதானந்தனின் கடிதம் அப்பாவுக்கு வந்திருக்கிறது!

கடிதத்தின் சாரப்படி, பிரான்சில் நன்றாக உழைத்து தனது குடும்பப் பொறுப்புக்களையெல்லாம் தீர்த்து வைத்துவிட்டதாகவும் இப்போது நல்ல வசதியாக இருப்பதாகவும் எழுதியிருந்தான். வீட்டில் பழகிய பழைய நாட்களை நினைவுகூர்ந்து எல்லோரையும் சுகம் விசாரித்திருந்தான்! ‘அப்போது என்னை உங்கள் மகன்போலக் கருதி நீங்களெல்லாம் என்மேல் அன்பு செலுத்தியதை மறக்க முடியாது. அப்படி நெருக்கமாகப் பழகியதாற்தான் உங்கள் கஷ்ட நஷ்டங்களையும் உணர்ந்திருக்கிறேன். நீண்ட நாட்கள் தொடர்புகள் இல்லாவிட்டாலும் நண்பர்கள் மூலம் உங்கள் குடும்ப நிலைமைகளையும் அறிவேன். மகன்போலக் கருதிய என்னை மருகனாக நீங்கள் ஏற்றுக்கொண்டால் இந்நிலையில் உங்களுக்கு உதவி செய்ய முடிந்ததே என்று சந்தோசமடைவேன். எனக்கும் வயது நாற்பதாகிறது. எனது எதிர்காலத்தைப் பற்றியும் சிந்திக்கவேண்டும். பிரான்சை விட்டு இன்னும் ஒரு மாதத்தில் வரத் தீர்மானித்துள்ளேன். கல்யாணம் செய்துகொண்டு ஊரோடு தங்கும் எண்ணம். எனது விருப்பத்துக்கு உங்களுக்கோ, அல்லது வீட்டில் வேறு யாருக்குமோ மறுப்பிருக்காது என்ற நம்பிக்கையுடன் சீக்கிரம் வந்து சந்திப்பேன்!|

அவளது மெய் சிலிர்த்தது.

சற்று நேரம் மூச்சு வாங்க மறந்தவள்போல நின்றாள். ‘யூ ஆர் கிரேட்!’ என இதயத்திலிருந்து மூச்சு வெளிப்பட்டது. வறண்டுபோயிருந்த இதழ்களை ஈரமாக்கினாள். மனம்.. காற்றில் வெடித்தது. பூம்பஞ்சாய்ப் பறந்தது. ‘ஒன் யுவர் மார்க்-கெற்-செற்-ரெடி-கோ!’ சொல்லி வானவெளியில் பறந்து போனது.

குளிக்கும்போது பாட்டு வந்தது. பாடிப்பாடிக் குளித்தாள். ஷவரைத் திறந்துவிட்டு ஆனந்தமாக நின்றாள். ‘அப்பாவோட இதைப்பற்றிக் கதைக்க வேணும்..’ அவளுக்குச் சங்கடமாயிருந்தது. அப்பா எதுவானாலும் அவளோடு கலந்து பேசி, அவளுடைய ஆலோசனையைக் கேட்டுத்தான் ஒரு தீர்மானம் எடுப்பார். அதுபோலத்தான் அவளும். ஆனால் இதைப்போய் எப்படி அவரிடம் கதைப்பது? ஒருவேளை அவராகவே அவளது விருப்பத்தைக் கேட்பாரோ? கேட்டால் நல்லதாகிப்போய்விடும். ‘சரி உங்கட விருப்பப்படி செய்யுங்கோ!’ என்று சொல்லிவிடலாம். கரும்பு தின்னக் கூலியும் வேண்டுமா – அப்பாவுக்கு! அவளுக்குச் சிரிப்பு வந்தது. அந்தச் சிரிப்பு மனதிலிருந்து உடைந்து மிக இயல்பாக உதிர்ந்தது. நெடுநாளைக்குப் பிறகு இப்படியொரு நிஜமான சிரிப்பு. சுகமான சிரிப்பு.

இரவில் கட்டிலில் அம்பிகா அவளை அணைத்துப் படுத்தபோது கவலையாயிருந்தது. அம்மா மாதிரியாம்! அம்மாமாதிரிப் பெண்ணுக்குக் கல்யாணம்! கடிதம் வாசித்தவேளை முதல்.. புதுசாகப் பூத்த மலர்போல தன்னிடத்தில் பிறந்திருந்த புத்துணர்வையும் உற்சாகத்தையும் எண்ணி வெட்கமடைந்தாள். ஆசை யாரைத்தான் விட்டுவைத்தது? மந்திரவித்தைபோல, அந்தக் கடிதம் ஏன் தன்னை இளமை திரும்பச் செய்தது என எண்ணினாள். இந்தப் பிள்ளைகளெல்லாம் எப்படியாவது போகட்டும் என்று கைவிட்டுப் போகலாமா?

அன்றைய இரவு உறக்கத்தைத் தர மறுத்தது. பல இரவுகளில் பல காரணங்களுக்காக உறக்கம் கெடுவதுண்டு. மனம் ஒடிந்து கவலையில் மூழ்கும் இரவுகள். என்னடா வாழ்க்கை.. என்னடா வாழ்க்கை என விரக்தியில் விழிக்கும் இரவுகள். கற்பனை நினைவுகளில், குருட்டு எண்ணங்களில் ஏங்கும் இரவுகள். அன்றைய இரவு சதானந்தனைப் பற்றிய பலவித நினைவுகளைத் தந்தது.

எவ்விதமாக யோசித்தாலும் கல்யாணத்துக்குச் சம்மதம் சொல்லுவதுதான் புத்திசாலித்தனம் எனத் தோன்றியது அவளுக்கு! அவள் மணமுடிக்காமல் இருக்கும் காரணத்துக்காகவே தங்கைகளின் சம்பந்தங்கள் பலமுறை தடைப்பட்டிருக்கின்றன. இப்போது வரும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அவள் முடித்துக்கொண்டால், தங்கைகளுக்கு வழி விட்டதாகவும் இருக்கும். சதானந்தன் நல்ல வசதியாக இருப்பதாக எழுதியிருக்கிறார். ஒருவேளை அவர்கூட தங்கைகளின் கல்யாணங்களுக்கும் உதவி செய்யக்கூடும். எல்லாவற்றுக்கும் மேலாக, அவளுக்காக இருபது வருடங்களாகக் காத்திருப்பவரின் காதலை எப்படி உதாசீனம் செய்வது?

நாட்கள் ஒன்றிரண்டெனக் கடந்துகொண்டிருந்தன. அப்பாவோ இதுபற்றி மூச்சுத்தன்னும் விடவில்லை. கடிதத்தை அவளிடம் கொடுத்ததோடு சரி. தனது கடமை முடிந்துவிட்டது என்பவர்போல் மௌனியாக இருக்கிறார். அவளால் இருப்புக்கொள்ள முடியவில்லை. இது அவளது கடைசி பஸ். இதையும் தவற விட்டுவிடலாமா?

மாலையில் வேலையை விட்டு வேளைக்கே வீட்டுக்கு வந்தாள். அறைக்குள்ளே அடைந்து கிடக்காமல் அப்பாவுடன் அடிக்கடி பேச்சுக் கொடுத்தாள். அப்பா கடிதத்தை வாசித்தபிறகுதானே அவளிடம் தந்தவர்.. அதுபற்றி தனது அபிப்பிராயத்தை, இன்னது இப்படி என்றாவது சொல்லலாமே?

அப்பா எத்தனையோ சம்பந்தங்களைப் பேசிப் பேசி.. எதுவுமே நிறைவேறாமல்போனதால் மனமுடைந்துபோனவர். ‘நான் ஒரு துரதிஷ்டக்காரன். நான் பேசிக்கொண்டு வந்து இந்தப் பிள்ளையளுக்கு ஒரு நன்மையான காரியமும் ஒப்பேறவில்லை. இனிமேல் இந்த விஷயத்தில நான் தலையிடப் போறதில்லை!’ என முன்னொருமுறை சொல்லியிருக்கிறார். அதுதான் காரணமாக இருக்கலாம். அப்படியானால்.. அப்பாவுடன் தானாகவே இவ்விடயத்தை பேசுவதும் கூடாதுதானே என்றும் அவள் மனம் பேதலித்தது.

இப்படியே சொல்லிக்கொண்டிருந்தால் யார்தான் இதைப் பேசி முடிவெடுப்பது? அப்பா இயலாத் தன்மையினால் முன்னர் அப்படிக் கூறியிருக்கலாம். பிள்ளையின் கல்யாணமென்றால் அப்பாவுடன் பேசாமல் வேறு யாருடன் பேசுவது? முதலில் அவரது சம்மதத்தையும் பெற்றுக்கொள்ளவேண்டும். அப்பாவின் மனப்பூர்வமான ஆசீர்வாதம் கிடைக்காமல் அவள் எதையும் செய்யமாட்டாள். சரி!.. அப்பாவுடன் பேசலாம் என்றால் யாரைத் தூதுக்கு அனுப்புவது? தங்கைகளிடம் இதைச் சொல்லவே கூச்சமாக இருக்கிறது. ‘இந்தப் பூனையும் பால் குடிக்குமா..!’ என அம்பிகா சீண்டுவாள். வேறு வழியில்லையென்று தானாகவே போய் அப்பாவின் கால்களில் விழுந்து விடுவோமா? ‘எனக்கு இது வேண்டும்.. இது விருப்பம்.. அது விருப்பம்..’ எனச் சிறு பராயத்திற்கூட அப்பாவிடம் கேட்டதில்லை! என்னால் முடியாதப்பா.. அவரே வந்து அப்பாவுடன் கதைத்துக்கொள்ளட்டும்! மாமனும் மருமகனும் பட்டபாடு! எனத் தன்னைச் சமாதானப்படுத்துவதுபோல மனதுக்குள்ளாகச் சொன்னபோது அவளுக்கு ஒருவித இன்பக் குமுறல் ஏற்பட்டது.

0

அலுவலகம் முடிந்ததும் சில நாட்களில் மார்க்கெட்டுக்குப் போய் தேவையான பொருட்களை வேண்டி வரும்பொழுது இரவாகிவிடும். அசதியுடன் மாடிப்படிகளில் ஏறி பெல்லை ஒலித்தபோது கதவைத் திறந்தது வழக்கத்துக்கு மாறாக ஒரு புதுமுகம்! கண் இமைத்து மூடிய கணப்பொழுதில்.. முன்னே புன்சிரிப்புடன் தோன்றுவது புதுமுகமல்ல.. சதானந்தன் என்பது அவளுக்குப் புரிந்தது.

மின் ஒளியில் சதானந்தனின் ‘சேவ்’ செய்யப்பட்ட முகம் பளிச்சென ஜொலித்தது.. ‘ஹலோ!” தடுமாற்றத்துடன் ஒரு புன்னகையை வலிந்து உதிர்ந்துவிட்டு விடுக்கென அறையுள் நுழைந்தாள்.

நாடி நரம்புகளில் துடிப்பு உடலெங்கும் மின்சாரம்போல் பரவியது. கதிரையில் அமர்ந்தாள். மூச்செடுக்கும் வீச்சு நெஞ்சைப் பிளந்துகொண்டே வெளிவரும் போலிருந்தது. நன்றாகக் கதிரையிற் சாய்ந்து கண்களை மூடி, நிதானமாகக் காற்றை உள்ளிழுத்து இலகு நிலையடைய முயற்சித்தாள். உடல் நடுங்குவதுபோலவும் ஓருணர்வு தட்டியது.. கையிரண்டையும் சேர்த்து இறுகப் பொத்தினாள். ‘ரிலாக்ஸ்.. ரிலாக்ஸ்!’ என மனதுக்குக் கட்டளையிட்டாள்.

என்ன இது? கடிதத்தைக் கண்ட நாள் முதல்.. ‘சதா’ எப்போது வருவார்.. என்றுதானே அவள் ஏங்கிக்கொண்டிருந்தாள். அல்லும் பகலும் அலுவலகத்திலும் வீட்டிலும் படுக்கையிலும் அவரது நினைவுகளில்தானே ஊறிப்போயிருந்தாள். அவர் வந்ததும் எப்படி எப்படியெல்லாம் பேசவேண்டும் என்ன பேசவேண்டும்.. என்ன மாதிரி ‘ட்றெஸ்’ செய்துகொள்ளவேண்டும் என்றெல்லாம் கற்பனை செய்திருந்தாள். இப்போது ஏன் இந்தத் தடுமாற்றம்? கதவைத் திறந்து ‘ஹலோ’ என்று சொன்னவருக்கு ஒரு வார்த்தைகூடப் பேசாமல் உள்ளே வந்துவிட்டாளே! ‘இவள் பழைய அதே திமிர் பிடிச்ச அகிலாதான்..’ என்று எண்ணியிருப்பாரோ? இல்லை! அகிலாவுக்குத் திமிரில்லை என்று அவரிடம் யாராவது சொல்லமாட்டார்களா?

‘அக்கா கொஃப்பி!”

திரும்பிப் பார்த்தபோது சாந்தா தொடர்ந்து கேட்டாள்.

‘வந்திருக்கிற ஆளைத் தெரியுமோ?”

‘தெரியும்| என்பதுபோல அவள் தலையசைத்துப் புன்னகைத்தாள். ‘கள்ளி’ என்பது போல ஒரு சிரிப்பு சாந்தாவிடம் மலர்ந்தது. அந்தச் சோகமான முகத்திலும் ஒரு சிறிய மலர்வு நிகழ்ந்திருப்பதைக் காண முடிந்தது.

“அப்பா உங்களைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறார்!” என்றவாறு சாந்தா வெளியேறினாள்.

‘ஐயோ என்னால் முடியாதப்பா..’ எனத் திரும்பவும் நடுக்கம். சூடான கோப்பியை எடுத்து மடமடவெனக் குடித்தாள். பாத்றூமுக்குட் சென்று குளிக்க ஆரம்பித்தாள். தன்னை மறந்து உடுத்த புடவையுடனே நெடுநேரமாகக் குளித்துக்கொண்டு நின்றாள். எவருடைய முகத்திலும் விழிப்பதே இயலாத காரியம்போற் தோன்றியது. வெளியே வரப் பயமாக இருந்தது. யாராவது வந்து கதவைத் தட்டுவார்களோ?

இந்த நேரத்தில் அம்மா கூட இருந்தால் எவ்வளவு ஆறுதலாக இருக்கும். உணர்ச்சிக் குமுறல்களைக் கொட்டி ஒருமுறை அம்மாவைக் கட்டிப்பிடித்து அழுது தீர்க்கலாம். அம்மா அவளை அணைத்து.. அழைத்துப் போவாள்.

ட்ரெஸ் செய்துகொண்டு.. வெளியே போகலாமா? அல்லது அப்பா கூப்பிட்ட பிறகு போகலாமா எனச் செய்வதறியாது நின்றபோது அம்பிகா அறையுள் வந்தாள்.

‘அப்பா.. எவ்வளவு நேரமாய்ப் பார்த்துகொண்டிருக்கிறார் போங்கோ.”

வயது எத்தனையானாலும் கல்யாணமென்றதும் புதுமணப் பெண்ணுக்குரிய நாணமும் பக்குவமும் வந்துவிடும் போலும்! வலிந்து இயல்பை ஏற்படுத்தியவாறு முன்னே சென்று சதானந்தனுக்கு நேசமான புன்முறுவலை மலர்த்தி, கதிரையில் பவ்யமாக அமர்ந்தாள்.

சதானந்தன் முதலில் கதையை ஆரம்பித்தார்.

பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்னர் பார்த்த சதானந்தன் அல்ல அவர். முன்னைய துருதுருப்பு, குறும்புத்தனம் எல்லாம் காணாமற் போயிருந்தது. மிக நிதானமாகக் கதைத்தார். முகத்தில் அமைதியான ஆதரிக்கும் கண்கள்.

அவளால் நிறையப் பேசமுடியவில்லை. தலையசைவில் அல்லது சுருக்கமாகச் சம்பாசித்தாள். கதைகள் வளர்ந்து விடயத்துக்கு வந்தார் சதானந்தன்.

‘நான்.. அப்பாவோடை எல்லாம் கதைச்சிட்டன். அவருக்கு விருப்பம்தான். ஆனால் உங்களோடை கதைச்சு முடிவெடுக்கட்டாம்.”

அவள் பதிலளிக்கவில்லை. இதில் இனி முடிவெடுக்க என்ன இருக்கிறது என மனதுக்குள் நினைத்தாள்.

‘பழைய சம்பவங்களை நினைக்கிறீங்கள் போல இருக்கு..! அதெல்லாம் ஒரு விளையாட்டுப் புத்தி. அதை பெரிசுபடுத்தமாட்டீங்கள் எண்டு நினைக்கிறன்!” எனச் சதானந்தன் சொன்னதும் அவள் அசந்து போனாள். உண்மையில் அச்சம்பவம் நினைவில் வந்துதான் ‘இனி முடிவெடுக்க என்ன இருக்கிறது’ என எண்ணிக்கொண்டிருந்தாள்.

‘நோ.. நோ..” எனச் சிரித்து தனது நேசத்தை உணர்த்தினாள்.

‘உங்களுக்குத்தான்.. என்னைப் பிடியாதே..? அதுதான் கதைக்க யோசனையாயிருக்கு..”

இது என்ன சீண்டுதல்? புதுமணப் பெண்ணின் நாணம் திரும்ப வந்த தலையைக் குனித்தது. சதானந்தனும் மௌனமாக இருப்பதை உணர்ந்து மீண்டும் நிமிர்ந்தாள். ‘சொல்லுங்கோ.!”

‘நான் அனுப்பின கடிதம் பாத்தனீங்கள்தானே?” அவனது கண்கள் அபிநயித்தன.

‘இனியும் காலத்தைக் கடத்தாமல்.. ஒரு கலியாணம் செய்து.. நானும் குடும்பம், பிள்ளை குட்டி எண்டு வாழவேணும்.. உங்கட குடும்பக் கஷ்டமும் எனக்குத் தெரியும்.”

அந்த முகத்தை நன்றி பெருகப் பார்த்துக்கொண்டேயிருந்தாள்.

‘உங்களுக்கு ஆட்சேபனை இல்லையெண்டால்.. நான் அம்பிகாவைக் கட்டலாமெண்டு நினைக்கிறன்.”

மின்தடை ஏற்பட்டு விளக்குகள் அணைந்தன. ஒரே கும்மிருட்டு. ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க முடியவில்லை. ஒருவரையும் தெரியவில்லை. ஒரே ஒரு கணம்தான்.. மீண்டும் மின்சாரம் வந்து வெளிச்சமேற்பட்டது.

சடுதியாக இருளைப் பார்த்து அந்தக் கணத்திலேயே வெளிச்சத்தைப் பார்த்தால் அது இன்னும் பிரகாசமாக இருப்பதுபோலப் பிரமையாகவுமிருந்தது.

அதிர்ச்சியில் உறைந்துபோன முகத்தில் மலர்ச்சியைக் கீறினாள்.

– வீரகேசரி 1992 – தெரியாத பக்கங்கள் (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: பிப்ரவரி 1997, மல்லிகைப்பந்தல் வெளியீடு, யாழ்ப்பாணம்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *