முள்வீடு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 29, 2014
பார்வையிட்டோர்: 13,666 
 

வெளியே ஊரே அட‌ங்கி விட்டாச்சு. அம்ம‌ணி ம‌ட்டும் பாப்பு தூங்க‌ல‌னு தொட்டில் ஆட்டிக்கிட்டு இருக்கிறாள்.இன்னும் க‌ணேச‌ன் வ‌ர‌ல‌.அம்ம‌ணி முக‌த்துல‌ தூக்க‌ க‌ல‌க்க‌த்தோட‌ இருந்தா கூட‌, தொட்டில‌ ஆட்டுற‌ கை ம‌ட்டும் எதேச்சையா இய‌ங்குற‌ மாதிரி இருக்கு.

ப‌ர்வ‌த‌ம் இருந்த‌ வ‌ரைக்கும் இப்ப‌டி என்னை அநாத‌ர‌வா விட்ட‌தில்லை. வெள்ளிக்கிழ‌மைனா ம‌ஞ்ச‌ள் தெளிச்சு வாச‌ல்ல‌ பெரிசா இழைக் கோல‌ம்லாம் போடுவா. நீள் நீள‌மா செதுக்கி பிழிஞ்ச‌ கைமுறுக்கா இழையும் கோல‌ம். சாத்தான்குள‌த்துலருந்து வ‌ர்ற‌ ராசுமாமா பாம்பு நெளிஞ்சாப்ல‌ இருக்கு ந‌ம்ம‌ ப‌ர்வ‌த‌ம் கோல‌ம் போட்டானு சொல்லுவார்.

ராசு மாமா முன்ன‌லாம் இப்ப‌டி தான் இடியாப்ப‌ம்னா வாழ்க்கை மாதிரி இருக்கு பாருனுலாம் சாப்பிடுற‌ப்ப‌ சொல்லி சிரிப்பார். அவ‌ர் கூட‌ எப்ப‌டியாச்சும் அவ‌ர் பொண்ணு ர‌ம்யா வ‌ரும். பேர் என்ன‌மோ பேச்சிய‌ம்மாள்னு தான் வ‌ச்சாங்க‌. முத‌ல் வ‌ச‌ந்த‌ம் ப‌ட‌ம் மாமா திருநெல்வேலி வ‌ந்து பால‌ஸ் டி வேல்ஸ்ல‌ பார்த்து ர‌ம்யானு பொண்ணு பேர‌ மாத்திட்டார்.

ர‌ம்யா சும்மா மொட்டு மொட்டு க‌ண்ணோட‌ பாக்க‌ அழ‌காதானிருக்கும். அதுக்கு க‌ல்யாண‌ம் கூட‌ இங்க‌ தான் பேசினாங்க‌. க‌ணேச‌னோட‌ ப்ர‌ண்டு தான்னு சொல்லி பேசி முடிச்சாங்க‌. க‌ல்யாண‌த்துக்கு முன்னால‌ க‌ணேச‌னே அந்த‌ப் பைய‌னைக் க‌ல்யாண‌ம் ப‌ண்ண‌ வேணாம்னு சொல்லிட்டான்.

அப்ப‌ எல்லாருக்கும் க‌ணேச‌னுக்கு ர‌ம்யாவைக் க‌ல்யாண‌ம் ப‌ண்ணிக்க‌ ஆசைனு எண்ண‌ம் வ‌ந்துறுச்சு. ராசு மாமா கூட‌ ஒரு ப‌க்க‌மா த‌லையை சாச்சிக்கிட்டு நிலைப்ப‌டில‌ நின்னுக்கிட்டு.. “ஏன்டாப்பா க‌ணேசா இப்ப‌டி க‌ல்ல‌த் தூக்கி போடுற‌”னு கேட்டார்.

‘வேணாம். ர‌ம்யா ந‌ல்ல‌துக்கு தான் சொல்றேன்’னுட்டு க‌ணேச‌ன் காலை விர‌ச‌லா விரிச்சி நிலையை தாண்ட‌ப் போனான்.

“உன‌க்கு ம‌ன‌சுல‌ வேற‌ ஆசைலாம் இருக்கதால‌ இப்ப‌டி சொல்லுறியா “னு மாமா கேட்டார் அவ‌னோட‌ தோளைத் தொட்டு. உன‌க்கு ம‌ன‌சுல‌ வேற‌ ஆசைலாம் இருக்கதால‌ இப்ப‌டி சொல்லுறியா “னு மாமா கேட்டார் அவ‌னோட‌ தோளைத் தொட்டு..அவ‌னோட‌ தோள் ஒருமுறை புல்ல‌ரிச்சிப் போச்சு.

“அப்ப‌டினா நான் நிச்ச‌ய‌தார்த்த‌ம் முன்னாடியே சொல்லிருபேன். அப்புற‌ம் உங்க‌ இஷ்ட‌ம்..”

நிலையைக் க‌ட‌ந்து போனான். ராசு மாமாவுக்கு கோப‌ம் வ‌ந்து கைல‌ருந்த‌ செம்பை தூக்கி எரிஞ்ச‌துல‌ நிலைப்ப‌டி ஓர‌த்துல‌ இருக்குப் பாருங்க‌ நெளிச‌ல்.. அது ஏற்ப‌ட்ட‌து அப்ப‌ தான். ச‌ரியா தெரிய‌லையா.. இருங்க‌. க‌ணேச‌ன் இப்ப‌ வ‌ந்திருவான். அப்ப‌ ஒருசாய்த்து க‌த‌வு திற‌க்கிற‌ப்ப‌ வெளிச்ச‌ம் வ‌ரும் .அப்ப‌ பாத்துக்கோங்க‌.

அப்ப‌றமா அடுத்த‌ நாள் தான் ஒரு பெண் த‌ய‌க்க‌மா வ‌ந்து க‌ணேச‌னைப் பாக்க‌ணும்னு சொல்லிச்சு. அவ‌னை ஒரு பெண்லோல‌னா இந்த‌ இட‌த்துல‌ உங்க‌ளுக்கு தோணுறாப்ல‌ தான் என‌க்கும் அன்னிக்கு தோணுச்சு. ஆனா அந்த்ப் பொண்ண‌ நேரா ர‌ம்யாட்ட‌ பேச‌ கூட்டிட்டுப் போனான். அவ‌ங்க‌ ரெண்டு பேரும் பேசிட்டு வ‌ந்த‌ப்ப‌ அந்த‌ப் பொண்ணு கையை ர‌ம்யா பிடிச்சிருந்தா.

” அப்பா.. க‌ணேச‌ன் சொல்ற‌து என் ந‌ல்ல‌துக்கு தான். க‌ல்யாண‌த்தை நிறுத்திடுங்க‌ “னு
என்ன‌ ந‌ட‌ந்த்துனு ரொம்ப‌ நாளா என‌க்குப் புரிப‌ட‌வே இல்ல‌. க‌த‌வை வேற‌ சாத்திக்கிட்டே பேசிக்கிட்டாங்க‌. அப்புற‌மா சீத‌ப்ப‌ற்ந‌ல்லூர்ல‌ருந்து மாரி வ‌ந்த‌ப்ப‌ தான் ர‌ம்யா சொன்னா.. ந‌ல்ல‌வ‌ன்டி க‌ணேச‌ன்.. அப்பா கூட‌ ச‌ந்தேக‌ப்ப‌ட்டுருச்சு. பாவ‌ம்டி. அந்தாளு அந்த‌ப் பொண்ணு கூட‌ க‌ன்னியாகும‌ரிலாம் போயிட்டு வ‌ந்திருக்கானாம் நுட்டு மாரி காதுல‌ கிசுகிசுனு ஒரு ஆஸ்ப‌த்திரி பேரையும் சொல்லிச்சு.

ந‌ட‌ராஜ‌னுக்கு எப்ப‌வுமே மாப்பிள்ளை ம‌வுசு குறைஞ்ச‌தில்ல‌. முத‌ல்வாரிசா காலேஜுக்குப் போய் ப‌டிச்ச‌ப் ப‌ய‌னு அவ‌ங்க‌ அப்பா கொடுத்த‌ செல்ல‌ம். அப்ப‌ ப‌ண்ம‌ செழிப்பா இருந்த‌ கால‌ம். கைசொடுக்கினா பொண்ணுங்க‌ க‌டைக் க‌ண் பார்வை கிடைச்சிது. கொடைக்கு ஊர் போன சிறுக்கி ம‌க‌ சீக்கிர‌ம் வ‌ருவானு நினைக்காம‌ உல‌கு கூட‌ வீட்டுல‌ அதோ அந்த‌ முக்கு அறைல‌ இருக்கிற‌த‌ பாத்துப்புட்டா.

பாட்ட‌ப்ப‌த்து பாட்டி ம‌டில‌ ப‌டுத்து அம்மா அழுத்து க‌ணேச‌னுக்கு இன்னும் ம‌ன‌சில‌ இருக்க‌லாம். ந‌ட‌ராஜ‌ன் செத்து இந்த‌ முற்ற‌த்துல‌ வ‌ச்சிருந்த‌ப்ப‌ கூட‌ அவ‌ க‌ண்ணுல‌ருந்து வ‌ந்த‌ க‌ண்ணீர்ல‌ வ‌ன்ம‌ம் க‌ல‌ந்திருந்தாப்ல‌ தானிருந்துச்சு.

அப்ப‌ப்ப‌ என்னையும் புதுசாக்குவாங்க‌. பொங்க‌லுக்கு ஒரு வாட்டி அம்மா க‌ம்ம‌லை அட‌கு வ‌ச்சி கூட‌ வெள்ளைய‌டிச்சான் க‌ணேச‌ன். எப்ப‌ தொழில் ந‌லிஞ்சிதோ அப்ப‌வே எல்லாம் போச்சு. இடைல‌ அம்ம‌ணியைக் க‌ல்யாண‌ம் ப‌ண்ணிக்கிட்டான். சொன்ன‌ ந‌கையைக் கூட‌ அவ‌ அப்ப‌ன் போட‌ல‌னு க‌ரைஞ்சு க‌ரைஞ்சே அவ‌ன் அம்மாவும் குர‌லைத் தொல‌ச்சிப்புட்டா.

மூல‌க்க‌ல் வ‌ச்ச‌ கால‌த்துல‌ருந்தே இந்த‌ வீட்டுல‌ வாழ‌ வ‌ந்த‌ எந்த‌ப் பொண்ணும் அழாம‌ இருந்த‌தில்ல‌. அம்ம‌ணியோட‌ க‌தையும் வேறா எப்ப‌டி இருக்க‌ முடியும்? க‌ணேச‌னுக்கு த‌லை சீவ‌ எண்ணைல‌ருந்து சாப்பாடு வ‌ரைக்கும் வ‌ச்சிக் கொடுத்திட்டு ப‌ழைய‌தை எடுத்து வ‌ச்சி சாப்பிட‌ணும்.இல்ல‌னா.. இம்புட்டு ப‌ழ‌ய‌து இருக்கு.. சுடுசோறு கேக்குதானு அம்மாக்காரி க‌த்துவா. அம்ம‌ணி ந‌ல்லா ச‌மைக்கும். அது கைப்ப‌க்குவ‌ம் அப்ப‌டி. என்னை சுத்தியே வாச‌மா இருக்கும்னா பாருங்க‌ளேன். ஆனா சூடா எதையும் சாப்பிட‌ முடியாது. வாயில‌ ருசிப் பாக்குற‌ நேர‌ம் அம்ம‌ணி ஆசையா க‌ர‌ண்டியை உச‌த்திப் பிடிச்சி சொட்டு சொட்டா குழ‌ம்பு விட்டுக்கிற‌தைப் பாக்குற‌ப்ப‌ த‌லைவாழை இலைப் போட்டு அவ‌ளை சுடுசோறு சாப்பிட‌ வைக்க‌ வேணும்னு தோணும்.

ஒரு நாள் அம்ம‌ணி குழ‌ம்பு வைக்கிற‌ப்ப‌ அம்மாகாரி வாச‌ல்ல‌ நின்னுக்கிட்டு எல்லா குழ‌ம்பையும் ஒரே ச‌ட்டில‌ போட்டு வ‌க்க‌ கூடாது. ஆட்டுக்கறிக்கு த‌னி ச‌ட்டி வைனு சொன்னா. ஆனா கூட‌ தின‌ம் அம்ம‌ணி எந்த‌ ச‌ட்டில‌ குழ‌ம்பு வைக்குதுனு ச‌ட்டியை மோந்து மோந்து பார்ப்பா. அவ‌ பாக்குற‌து அம்ம‌ணிக்கு அவ‌ சின்ன‌ப் புள்ளைல‌ வ‌ள‌ர்த்த‌ ஜிம்மி ஞாப‌க‌ம் வ‌ந்துருச்சு போல‌. அது செத்து முருங்கைக‌ன்னுக்கு கீழ‌ புதைச்ச‌து ஞாப‌க‌ம். ம்றுஜென்ம‌ம் நாய்க்கும் உண்டானு யோசிச்ச‌துல‌ கொல்லுனு சிரிச்சித் தொலைச்சிட்டா அம்ம‌ணி.

அவ‌ளோ தான். கைல‌ வ‌ச்சிருந்த‌ பாத்திர‌த‌தை அவ‌ மேல‌ வீசி எறிஞ்சா அம்மாக்காரி. அது என் மேல‌ விழுந்து ட‌பாட‌பானு ஓடி சுவ‌ர்ல‌ முட்டி நின்னுச்சி. அப்புற‌மா தான் அம்ம‌ணி அவ்வ‌ள‌வு நாள் ம‌வுன‌த‌தைலாம் க‌ண்ணாடி வ‌ச்சிக் கிழிக்கிற‌ மாதிரி கிழிச்சி ச‌த்த‌ம் போட்டா. அம்மாக்காரியும் கோவ‌த்துல‌ மீதி இருந்த‌ பாத்திர‌த்தையும் அம்ம‌ணி மேல‌ எறிஞ்சா. சுவ‌ர் பூராவும் கெட்ட‌ வார்த்தையா வ‌ந்து ஒட்டிக் கொண்ட‌ன‌ .

ராத்திரி க‌ணேச‌ன் வ‌ர்ற‌ வ‌ரைக்கும் ரெண்டு பேருமே பாத்திர‌த்தைலாம் எடுத்து வைக்க‌வே இல்ல‌.அவ‌ன் வ‌ந்தோன‌யே அம்மா ஓனு அழுதா. நானே வாய்ல‌ ம‌ண்ண‌ அள்ளிப் போட்டுட்டு ஓர‌மா இருக்கேன். என்ன‌ போய் என்ன‌லாம் சொல்லுதானு அழுதா.

” நானே க‌ட‌ன‌ங்கார‌ன்ட்ட‌ ம‌ல்லுக்க‌ட்டிட்டு வ‌ர்றேன். ஏன் உசிர‌ எடுக்கீக‌”னுட்டு அவ‌ன் ப‌ங்குக்கு அம்ம‌ணியைப் போட்டு அடிச்சான். முக‌ம்லாம் அம்ம‌ணிக்கு வீங்கிப் போச்சு. அம்மாக்காரி ஒரு திருப்தியோட‌ ஆவ்வ்வ்னு ச‌த்த‌மா ஏப்ப‌ம் விட்டா.

அம்ம‌ணி குப்புற‌ ப‌டுத்த‌மாதிரியே அழுதுட்டு கிட‌ந்தா. ம‌ன‌சுக்குள்ள‌ குழி வெட்டி த‌ம்பிக்கார‌ன் ஜிம்மிய‌ குப்புற‌ போட்டு குழியை மூடின‌து தான் ஞாப‌க‌ம் வ‌ந்துச்சுது.

காலைல‌ எந்திரிச்ச‌வ‌ளுக்கு க‌ணேச‌ன் காப்பி போட்டுக் கொடுத்தான். அவ‌ அப்ப‌ தான் கும‌றி கும‌றி அழுதா. ” அம்மாவ‌ அண்ணன் வீட்டுக்குப் போக‌ சொல்றேன்..”னான்.

” க‌ட‌ன் வாங்கியிருக்கீக்க‌ளா “னு ப‌திலுக்கு கேட்டா அம்ம‌ணி. அவ‌ன் அமைதியா இருந்தான்.
” த‌ல‌க்கு மேல‌ போயிட்டு..வீட்டை வித்துற‌லாம்னு இருக்கேன் “னான்.என‌க்கு த‌லை சுத்துற‌ மாதிரி இருந்துச்சு.இது புரியாம‌ என்ன‌மோ ந‌வ‌ண்டுச்சோனு அம்ம‌ணியைக் கேட்டான். அவ‌ முக‌ம் இருண்டு போய் முழிச்சா.

” அம்மா கூட‌ல்லா பிர‌ச்னை ப‌ண்ணும்”னா. பாத்துக்க‌லாம்ங்கிற‌ மாதிரி த‌லையாட்டினான் க‌ணேச‌ன். அவ‌ளுக்குத் தெரியாத‌ ப‌க்க‌ங்க‌ள் அவ‌ன் கிட்ட‌ நிறைய இருக்குங்கிறாப்ல‌ அவ‌ அவ‌னையே வெறிச்சுப் பார்த்தா.இது தெரியாம‌ அம்மாக்காரி கொத்த‌ம‌ல்லித் துவைய‌ல் வ‌ச்சி க‌ஞ்சி எடுத்திட்டு வ‌ந்தா. நீயே குடினான் க‌ணேச‌ன்.” அட‌ப் பாவி என்ன‌ சொல்லிப்புட்டான். ராத்திரியோட‌ மாறிப்புட்டானே “னு க‌ஞ்சி ச‌ட்டியை கீழ‌ ப‌த்திர‌மா வ‌ச்சிட்டு அழ‌ ஆர‌ம்பிச்சா.

அன்னிக்கு ராத்திரி ஒரு ஏழு ம‌ணி வாக்குல‌ யாரையோ என்னைப் பாக்க‌ கூட்டிட்டு வ‌ந்தான்.அந்தாளு ஆயிர‌ம் கேளிவி கேட்டான்.அம்மாக்காரி ” ஐயோஒ.. விக்க‌ப் போறியா.. இத‌ப் பாக்க‌ அந்த‌ப் பாவி ம‌னுச‌ன் இல்லியே..”னு ஒப்பாரி வ‌ச்சா.

” ஆமா… உல‌கு பெரிம்மையோட‌ அப்பா இருந்த‌த‌ பாட்ட‌ப்ப‌த்து ஆச்சிட்ட‌ அழுத‌ க‌தைலாம் பாத்துட்டேனா’னு க‌ணேச‌ன் திருப்பிக் கேக்க‌ அமைதியா புல‌ம்ப‌ ஆர‌ம்பிச்சா.. இந்த‌ மூதி வ‌ந்த‌ வேளை தான்னு ந‌ங்குந‌ங்குனு அவ‌ த‌லையை பார்த்து பார்தது சுவ‌ர்ல‌ அடிச்சிக்கிட்டா. என‌க்கு தான் அம்ம‌ண‌மா நிக்கிற‌ மாதிரி இருந்துச்சு.

இந்த‌ அம்மாகாரிக்கும் என‌க்கும் என்ன‌ வித்தியாச‌ம்? அவ‌ வாக்கப்ப‌ட்டு வ‌ந்த‌ மாதிரி தான் ந‌ட‌ராஜ‌னோட‌ அப்ப‌ன் என்னை பார்த்து பார்த்து க‌ட்டினார். க‌ல்யாண‌த்தை க‌ட்டு.. வீட்டைக் க‌ட்டுனு தானே சொல்லுவாங்க‌… அப்படினா நானும் இந்த‌ குடும்ப‌த்துக்கு வாக‌க்ப் ப‌ட்டு வ‌ந்த‌வ‌ தானே?

என‌க்குனு ம‌ன‌சுலாம் இருக்குனு தெரியாதைக்கு என் உட‌ம்பை ம‌ட்டும் புதுசாக்கி ஆக்கி விட்டுடுறாங்க‌. நேத்திக்கு வ‌ந்த‌ புரோக்க‌ர் கூட‌ ” வீட்டுக்கு வெள்ளைலாம் அடிச்சி விட்டுருவீங்க‌ல்லே”னு கேட்டான். க‌ணேச‌ன் ஒரு நிமிஷ‌ம் யோசிச்சு அட்வான்ஸ் வ‌ந்தோன்ன‌ முடிச்சி தாரேன்னான். எல்லார்ட்ட‌யும் கேக்கியே..எங்கிட்ட‌ கேக்க‌ப்ப‌டாதா.. நானும் உங்க‌ கூட‌யே இருக்கேன்ப்பானு சொல்ல‌ நெஞ்சு கிட‌ந்து துடிக்குது.

இனிம‌ எந்த‌ பாவி வ‌ந்து வாங்கி என்ன‌லாம் ந‌ட‌க்க‌ப் போகுதோ தெரில‌? ப‌க்க‌த்து வீட்டை ஒரு நாலு அஞ்சு வ‌ருஷ‌த்துக்கு முன்னால‌ இடிச்சி த‌ள்ளி ப்ளாட்ஸ்னு க‌ட்டிப்புட்டாங்க‌. அந்த‌ மாதிரி நினைக்கிற‌வ‌ன் கைல‌ சிக்கினா சாவு தான். வ‌ற‌ட்சியா ம‌ன‌சுக்குள்ள‌ ஒரு வெப்ப‌ம் தோணுது. யார்ட்ட‌யும் ப‌கிர்ந்துக்காம‌ ம‌ன‌சுக்குள்ள‌யே வ‌ச்சி வ‌ச்சி சுத்தி முத்தி ந‌ம்மை மைய‌ப்ப‌டுத்தி பிர‌ச்னையும் முடிவும் எடுக்க‌ப்ப‌டுது. கொடைல‌ ப‌லி கொடுக்க‌ப்ப‌டுற‌ ஆடு மாடு கோழி மாதிரி. ஏன் சில‌ இட‌ங்க‌ள்ல‌ பொம்ப‌ளைங்க‌ மாதிரி.

அம்ம‌ணி க‌த‌வைத் திறக்குறா. நான் எங் க‌வ‌லைல‌ க‌ணேச‌ன் க‌த‌வை த‌ட்டின‌து கூட‌ காதுல‌ விழ‌ல‌னு நினைக்கேன். க‌த‌வு திற‌க்கிற‌ப்ப‌ ச‌ட்டுனு கூர்மையா பாருங்க‌. ராசு மாமா செம்பு எரிஞ்சி வ‌ளைஞ்ச‌ நிலை தெரியும். ஆங்.. அந்த‌ இட‌ம் தான். ப‌ர்வ‌த‌ம் கோல‌ம் போடுற‌ முற்ற‌ம் இது தான். அவ‌ ம‌ஞ்ச‌ காமாலை வ‌ந்து செத்த‌ப்ப‌ இந்த‌ அம்மாகாரி குலிப்பாட்டி எடுத‌த‌து இந்த‌ கோடிவாச‌ல் தான். அம்ம‌ணி குழ‌ந்தை பெத்து வ‌ந்த‌ப்ப‌ ஓன்ஙி சாத்தின‌ வாச‌க் க‌த‌வு இது தான்.

ப‌ட்..க‌த‌வை பூட்டி விட்டா அம்ம‌ணி.”சாப்பிடுறீங்க‌ளா..என்னாச்சு” . ரெண்டு கேள்வில‌ எதை முத‌ல்ல‌ கேக்குற‌துனு தெரியாம பின்னிப் பின்னி ரெண்டையும் கேட்டா அம்ம‌ணி.

அவ‌ன் மொள்ள‌மா ” நாளைக்கு வ‌ர்றாங்க‌ அட்வான்ஸ் கொடுக்க‌ “னான்.அவ‌னை அப்ப‌டியே அம்ம‌ணி முன்னாலேயே க‌ட்டிப் பிடிச்சி அழ‌ணும் போல‌ருந்துச்சு. ஒரு பூனை நாய் வ‌ள‌ர்த்திருந்தாலாச்சும் கூட‌யே கூட்டிப் போயிரருப்பார்க‌. இல்ல‌னா என‌க்குத் துணையா விட்டுப் போயிருப்பாங்க‌.

புதுப் புது கால‌டிக‌ள். ம‌னித‌ர்க‌ள். உட‌ல் ஒருமுறை கூசி சுருங்கிற்று.

க‌ணேச‌ன் சுவ‌ரெல்லாம் வ‌ருடின‌ப‌டி இருந்தான்..

– ஜூலை 2009

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *