முதியவரின் இறுதி நேரம்

3
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 23, 2018
பார்வையிட்டோர்: 9,555 
 

வேகமாக நடந்து செல்லும் இந்த முதியவரின் வயது 80. இன்று இவர் வாழ்க்கையின் இறுதி நாள், அதற்கான மேலிட உத்தரவு என் கையில் உள்ளது. அதற்கு டிக்கெட் என்பர் இவ்வுலகில். டிக்கெட்டில் ஜனவரி 21 1964 என தேதி குறிப்பிட்டுள்ளது. அந்த தேதி தான் இன்று, இருவுலகிலும்.

தன் உயிரை ரயில் முன்னே குதித்து மேலோகம் செல்ல தான் இந்த வேகமாக நடந்து செல்கிறார். அவருக்கு இன்று மேலோகம் செல்ல எப்படியும் டிக்கெட் கொடுக்கபட்டுள்ளது என்று அவருக்கு தெரியாது. பின் எதற்காக இந்த வேகம்? ஏன் இந்த அவசர முடிவு?

அவருக்கு உறவினர் என பலர் இருக்கிறார்கள். ஆனால், பல ஆண்டுகளாக யாரும் அவரை கண்டு கொள்வதில்லை. கையில் பணமும் குறைந்து விட்டது. அவர் வாழ்க்கையில் தன் நம்பிக்கையை இழந்துவிட்டார். அதான் இந்த முடிவு.

அவரை தன் நம்பிக்கை எனும் தேரில் அமர்த்தி, இன்று சூரியன் மறையும் முன்பே மேலோகம் கூட்டி செல்லவதே எனக்கு தரப்பட்ட உத்தரவு. ஆனால், அவர் வேகமாக செய்யும் செயலால் அவரை தன் நம்பிக்கை தேரில் அமர்த்த எனக்கு நேரநெருக்கடி.

நேரம் இப்பொழுது காலை 10 மணி. அவரின் ரயில் நிலையம் நோக்கிய வேகமான நடை குறைவதாயில்லை. ஒரு நாளுக்கு இரண்டு முறை தான் ரயில் இவர் கிராமத்திற்கு வரும். தெற்கே செல்லும் ரயில் காலை 6 மணிக்கே போய்விட்டது. காலை 11.30க்கு வரும் மெட்ராஸ் மெயில் ரயிலுக்கு தான் இவர் இந்த நடை போடுகிறார்.

ரயில் நிலையம் முன் இருக்கும் பிள்ளையார் கோவிலுக்கு கடைசியாக ஒரு முறை சென்று சாமி கும்பிட்டு, கையில் உள்ள பணத்தையெல்லாம் உண்டியலில் போட்டார். ஏதோ தெரியவில்லை, நடையில் திடீர் என வேகம் குறைந்துவிட்டது. பணதின் பலம் எனக்கு இப்போது புரிந்தது.

ரயில் நிலையம் உள்ளே நுழைந்தார் நம் முதியவர். நிலையத்திற்குள் ரயில் நுழையும் பொழுதே நடைமேடையிலிருந்து குதித்துவிடுவதுதான் முதியவரின் திட்டம். மேலோகம் சென்று மறைந்த அப்பா, அம்மா, மற்றும் மனைவியாரை காணவே இவர் இப்படி குதிக்கிறார். அர்த்தமில்லாமல் குதிப்பது மனிதர்களின் தொட்டில் பழக்கம் தானே!

நேரம் காலை 11.30 ஆனது. ரயிலைக் காணும். ஒரு மணி நேரம் காத்து இருந்தபின், ஒலிபெருக்கியில் ஒரு அறிவிப்பு வந்தது.

முதலில் ஆங்கிலத்தில் அறிவித்தார்கள். ரயில் நிலையத்திலுள்ள யாருக்கும் புரியவில்லை. இப்பொழுது இந்தியில். கிராமத்திலுள்ள யாருக்கும் புரிந்து இருக்காது என முதியவர் கருதினார். பின், தமிழில், ரயில் 3 மணி நேரம் தாமதமாய் வந்து கொண்டு இருக்கிறது என்றார்கள். வாழ்க்கையே கடைசியில் தான் புரியும் என்று முதியவர் தனக்குள் முனுமுனுத்தார்.

பிற்பகல் மணி 3 ஆகிவிட்டது. ரயிலைக் காணும். முதியவருக்கு பசி வாட்டியெடுத்தது. சட்டை பையை தடவிப் பார்த்தார். சில சில்லறை தேறியது. நிலையத்தில் உள்ள பழ வியாபாரியிடம் ஒரு வாழைப்பழம் கேட்டார். ஒரு பழத்திற்கு கூட இவர் காசு தேறவில்லை. வியாபாரி பழம் தர மறுந்தார். தற்செயலாக அங்கு பழம் வாங்க வந்த இளைஞன் ஒருவன், முதியவரின் பழத்திற்கு காசு தர முன்வந்தார். பழத்தை வியாபாரி முதியவரிடம் கொடுக்கவே, இளைஞன் ஒரு காசு நோட்டை முதியவரிடம் கையை பிடித்து மறுப்பு தெரிவிக்கவிடாமல் திணித்துவிட்டார். தருமம் தலைகாக்கும் திரையரங்குகளில் வசூல் செய்து கொண்டு இருந்த நேரம் இது.

நான் புதியதாக கல்யாணமாகி புதுப்பெண்னுடன் திருப்பதி செல்கிறேன் என சொல்லி இளைஞன் பழக்கடையை விட்டு சென்றான்.

முதியவர் தூரத்திலிருந்து புதுப்பெண்னை பார்த்தார். மஞ்சள் புடவையும் மல்லிகை பூவும் தான் இவருக்கு தெரிந்தது. தான் மணமான புதிதில் இப்படி மனைவியுடன் திருப்பதி சென்றது ஞாபகத்திற்கு வந்தது. முதியவர் மனம் நெகிழ்ந்தது. அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது, இந்த ரயிலும் ஏன் இப்படி என சலித்துக்கொண்டார்.

பிற்பகல் மணி 4 ஆகிவிட்டது ரயில் சற்று நேரத்தில் வந்தடையும் என்று அறிவிப்பு வந்தது. ரயில் நிலையத்தில் நுழையும் திசையிலுள்ள நடைமேடைக்கு சென்று தயார் ஆனார். அவசரத்தில் மனிதர்கள் ஏன் நம்பிக்கையை இழக்கிறார்கள் என்று என் மனதில் ஓடியது.

கூ கூ என ரயிலின் ஓசை பிரமாண்டமாக ஒலித்தது. முதியவரும் தயாரானார். குதிக்கும் இடத்தையும் குறித்துக்கொண்டார். ரயில் நிலையத்தை நெருங்கியது.

முதியவர் ரயில் தடத்தை நோக்கி குதிக்க விரைந்தார். கைக்கு எட்டும் அருகில் ரயில் வருகையில் ஆ ஓ ஓ ஆ என காத்திருக்கும் பயணிகள் கதறும் சத்தம் கேட்டது. நானே அதிர்ந்தேன். பார்த்தால், மஞ்சள் புடவை அணிந்த புதுப்பெண் தற்கொலை முயற்சியில் ரயில் தடத்தில் குதித்துவிட்டாள்.

அவளை காப்பாற்ற அந்த மாப்பிள்ளை இளைஞனும் மற்றும் ஒருவனும் குதித்தார்கள். ரயில் என்ஜின் பெட்டி முதியவர் குறித்துவைத்த இலக்கை கடந்தது, புதுப்பெண் குதித்த இடத்தை நோக்கி விரைந்தது. புதுப்பெண்ணை காப்பாற்ற சென்ற இருவரும் தடத்தின் அப்புறம் பெண்ணை இழுத்துக் கொண்டார்கள். ரயில் புதுப்பெண் குதித்த இடத்தையும் கடந்தது. திருமண வாழ்க்கையில் குதித்தவருக்கு ஆயுள் அதிகம் என்பார்கள்.

ஓடும் வேகம் குறைந்து கொண்டு இருக்கும் ரயிலின் பெட்டிகளின் வாசல், ஜன்னல், சக்கரம் மற்றும் ரயில் பெட்டிகளின் இடைவெளி வழியாக, தடத்தின் அப்புறம் இருக்கும் புதுப்பெண்னின் நிலையை நடைமேடையில் அதிர்ச்சியிலிருக்கும் பயணிகள் பதற்றத்துடன் கவனித்தார்கள்.

ரயில் நின்றது. ரயில்வே காவலர்கள் இருவர் விரைத்து புதுப்பெண்ணை நடைமேடைக்கு கொண்டு வந்து, மருத்துவமனைக்கு அனுப்பினார்கள்.

முதியவர் புதுப்பெண்ணை அருகில் சென்று அடையாளம் கண்டுகொண்டார். தனது சிறுவயது நண்பனின் பேத்தி என அறிந்தார். அந்த நண்பனும், நண்பனுடைய ஒரே மகளும் சுதந்திர போராட்டத்திற்கு உயிர் திறந்தவர்கள். அவர்களின் ஒரே வாரிசான இந்த பெண்னிற்கும்மா இன்னிலை என்று வருந்தினார்.

மாப்பிள்ளையையும் புதுப்பெண்யையும் அவர்கள் வீட்டில் சந்தித்து பேசலாம் என திட்டம் திட்டினார். புதுப்பெண்ணிடம் பேசி நம்பிக்கை ஊட்டுவது தன் கடன் என்று முதியவர் வாழ்க்கையில் ஒரு பிடிப்பு ஏற்பட்டது.

ரயில் நிலையம் வெளியில் உள்ள பிள்ளையார் கோவிலுக்கு மீண்டும் சென்று கும்பிட்டார். கொஞ்சம் பிரசாதத்தை கையில் வாங்கி, கோவில் மரத்தடியில் அமர்ந்து யோசித்தார். புது தன் நம்பிக்கை அவர் வாழ்க்கையில் பிறந்தது. மேலுலகம் அவர் தகுதி பெற்றுவிட்டார். எனக்கு கொடுக்கப்பட்ட உத்தரவை நிறைவேற்றும் நேரமும் வந்துவிட்டது.

சில நேரத்தில் அசந்து உறங்கிவிட்டார். அவருக்கு வந்த புது தன் நம்பிக்கை தான் அவரின் தேர். அத் தேரில் அவரை நான் மேலுலகம் அழைத்து சென்றேன். அவரின் அப்பா, அம்மா, மனைவி அவர் வருகையை எதிர்பார்த்து கொண்டு இருந்தனர்.

இவ்வுலத்திலும் அவ்வுலகத்திலும் நினைத்தது நடக்க தன் தன் நம்பிக்கை எனும் தேரே போதும். அது கடைசி வரை வாழ்க்கையை தடம் புரலாமல் ஓட்ட உதவும்.

Print Friendly, PDF & Email

3 thoughts on “முதியவரின் இறுதி நேரம்

  1. Lively and lovely ! We did not know that such a gresat storyteller is living indide you !! Congrats Ganesh ! GOD bless you !!!

  2. உங்கள் வாழ்த்துகளுக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சங்கரன் அங்கிள்.

  3. மிகவும் அருமை .நம்பிக்கைக்கு தரும் விளக்கம் சொன்ன
    விதம் அருமை. தொடருங்கள் .வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *