முதலிரவு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 28, 2012
பார்வையிட்டோர்: 13,475 
 

இன்று காலையில்தான் சங்கரனுக்குக் கல்யாணம் முடிந்தது. முருகன் கோவிலில் வைத்து, மிகவும் நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே அழைக்கப்பட்டு நடந்த கல்யாணம். சுருக்கமாக சொல்லியே ஏகப்பட்டக் கூட்டமாகிவிட்டது. நெருங்கிய சொந்தத்தில் என்று சொன்னால்கூட, ஒருத்தருக்குச் சொல்லி இன்னொருத்தருக்குச் சொல்லவில்லையென்றால் மனச்சடவுதான் வரும் ஊருக்குள்ளே. கல்யாணத்திற்கு வந்தவர், விஜயாவின் மாமாவை பார்த்து கேட்டார்,

“ ஏம்பா, வீரபாகு, பையன் கல்யணத்தை சுருக்கமா எடுக்கேனு சொல்லிப்புட்டு, தடபுடலா நடத்துறியே. நல்லதுதான் …………நடக்கடும்…..நல்லபடியா”

இதற்கு மாமா பதில் எதும் சொல்லாமல், சிரித்துக்கொண்டே,
“வணக்கம் மாப்பிள்ளே. யெங்கப்பா …..தங்கச்சிய காணோம்?, நீ மட்டும்தான் வந்தையா?” என்றார்.

”இல்லப்பா. சேர்ந்துதான் வந்தோம். அந்தா நின்னு பேசிக்கிட்டிருக்கா பார். வழியில் ஒவ்வொருத்தர்ட்டையும் நின்னு பேசி பேசி …..முகூர்த்தம் முடிவதற்குள் வந்திருவாள்னு நினைக்கேன்” என்று சொல்லி வாசல் அருகில் நிற்கும் தன் மனைவியை காண்பித்து, ஏதோ பெரிய ஜோக் சொன்னமாதிரி பலமாய் சிரித்தார் கனகராசு. விஜயாவின் மாமா வீரபாகுவும் கனகராசுவும் சமவயதை ஒத்தவர்கள். மாமன் மச்சான் முறை. இருவரும் சந்தித்துக் கொண்டால், கேலி கிண்டலுக்கு குறைவே கிடையாது.

”வாங்கண்ணே. இப்பதான் வர்ரேகளாக்கும்?” வந்தவரைப் பார்த்து கேட்டார் விஜயாவின் அத்தை கோமதியம்மாள். வந்திருந்தது, விஜயாவின் முகவூர் பெரியப்பா.

”அப்பவே வந்துடேன்மா. கல்யாணம், முருகன் கோயில்லேனு சொன்னயா, நான் பாட்டுக்கு பெரிய முருகன் கோயிலுக்கு போயிட்டேன். அங்கதான் சொன்னாக கல்யாணம் இந்தக் கோயில்லனு. சரி….. வந்ததே வந்துட்டோம்னு பெரிய முருகன் கோயிலுக்குப் போயி சாமி கும்பிட்டுகிட்டு, அப்படியே அம்மன் கோயிலுக்கும் போயிட்டு, அங்கிருந்து நடந்து வர்ரேன்.”

”சரிதான். வெள்ளிகிழமையும் அதுவுமா மூணு கோயிலுக்கும் போனால், புண்ணியம்தான். வாங்கண்ணே, மண்டபத்தில் போயி ஒரு கப் காபி குடிச்சிட்டுவாங்க” கோமதியம்மாள் சொன்னார்.

”அட நீ வேற…….முகூரத்தத்திற்கு நேரமாச்சிலே……கல்யாணம் முடிஞ்சதும் சாப்பிடுகிறேன்” முகவூர் பெரியப்பா.

”ஆமா இருந்து சாப்பிட்டுவிட்டுதான் போவணும். முகூர்த்தத்திற்கு இன்னும் நேரம் கிடக்கு. ஏய்…செல்வராசு…..பெரியப்பாவ பந்திக்கு கூட்டிட்டுபோயி இரண்டு இட்லியும் காப்பியும் பரிமாருடாப்பா” என்று அங்கு வந்துகொண்டிருந்த செல்வராசுவிடம் சொன்னார் கோமதியம்மாள். முகவூர் பெரியப்பாவும் சொல்வராசுடன் பேசிக்கொண்டே மண்டபத்துக்கு சென்றார்.

சிலபேர், முகவூர் பெரியப்பா மாதிரி அன்று மூன்று கோயிலுக்கும் போய்வந்து புண்ணியம் தேடிக் கொண்டார்கள். ஸ்ரீவில்லிபுத்தூரில் இரண்டு முருகன் கோவில் உண்டு. ஒன்று சின்ன முருகன் கோவில், மற்றது பெரிய முருகன் கோவில். மதுரை ரோட்டிலிருந்து பைபாஸ் ரோடு பிரிகின்ற இடத்தில், பிள்ளைமார் கல்யாண மண்டபத்திற்குப் பக்கத்தில் இருப்பதுதான் சின்ன முருகன் கோவில். கோவில் பெரியதுதான், ஆனால் சுற்றுப் பிரஹாரம் சின்னது, அதனால்தான் சின்ன முருகன் கோவில்னு பேர். பொதுவா கல்யாணத்தில் தாலிகட்டை மட்டும் கோவிலில் வைத்துக்கொண்டு, சாப்பாடு, ரிசப்ஷன் எல்லாம் பக்கதிலிருக்கும் மண்டபத்தில் வைத்துக்கொள்வர்கள். பெரிய முருகன் கோவிலுக்கு பைபாஸ் ரோடுலேயே கொஞ்ச தூரம் போகணும். மாரியம்மன் கோவிலுக்குப் பக்கத்தில் இருக்கும். ரோட்டுக்கு ஒரு பக்கத்தில் முருகன் கோவில், மறு பக்கத்தில் மாரியம்மன் கோவில். விஜயாவுக்கு கல்யாணம் பெரிய முருகன் கோவிலில் வைத்துத்தான் நடந்தது. விஜயாவின் இஷ்ட தெய்வமும் முருகன் தான். அவள் மிக மிக ரகசியமாக வைக்கும் வேண்டுகோள்கள் எல்லாம் முருகனிடம்தான். பரிட்சையில் பாஸானது, நல்ல கணவர் அமைந்தது …இப்படி சில நிகழ்வுகள், அவளுக்காக முருகன் நிறைவேற்றிய கோரிக்கைகள்தான். அதுபோல் வாழ்க்கையில் உள்ள குறையைச் சொல்லி அழுவதும் முருகனிடமே.

கோமதியம்மாளிடம், கோயில் பூசாரி சந்தனம் கேட்டார். கோமதியம்மாள், விஜயாவிடம், சந்தனம் மண்டபத்தில் மணப்பெண் அறையில் இருக்கின்றது என்றும், போய் எடுத்துவரச்சொல்லி சந்தன கும்பாவைக் கொடுத்தார். சந்தன கும்பாவுடன் மணப்பெண் அறைக்கு விஜயா சென்றாள். மணப்பெண் சரசுக்கு அலங்காரம் முடிந்து, அவளின் தோழிகள் ஜடைநாகத்தை ஹேர்பின் வைத்து கூந்தலில் மாட்டிக்கொண்டிருந்தார்கள்.

”பொண்ணுக்கு அலங்காரம் முடிந்ததா? ” என்று கேட்டாள் விஜயா. கொஞ்சம் கோணலாகியிருந்த நெத்திச்சூடியை சரி செய்து, சுமார் இரண்டு அடி பின்னால் சென்று பார்த்த விஜயா,

”ம்…..இப்பத்தான் நெத்திச்சூடி சரியாயிருக்கு” என்றாள்.

விஜயாவின் சொந்த சித்தி மகள்தான் சரசு. அக்கா…அக்கானு….எப்பவும் கூடயேதான் கிடப்பா. மாநிறம், ஒல்லியான தேகம். கட்டியிருந்த நீல நிற பட்டுப்புடவை நல்ல பொருத்தமாய் இருந்தது. பூசாரி சந்தனம் கேட்டது ஞாபகம் வந்தவளாய், அதைத் தேடி எடுத்தாள். வாழை இலையில் மடித்து வைத்திருந்த சந்தனத்தைக் கும்பாவில் விட்டு கரைத்தாள். நல்ல மணம். இவ்வளவு வாசனையுள்ள சந்தனம், ஸ்ரீவில்லிபுத்ததூரிலேயே சிவனாண்டி பூக்கடையில்தான் கிடைக்கும். நன்றாகக் கரைத்து முடித்தவள், விரலில் ஒட்டியிருந்த சந்தனத்தைக் கும்பாவின் விளிம்பில் வழித்தாள். அப்படியும் போகவில்லை.

கை நிறைய ஒட்டியிருந்த சந்தனத்தை ”சரசு, கைய காட்டு…” என்று சொல்லி, அவள் கையில் தேய்த்துவிட்டு, மண்டபத்தை நோக்கி நடந்தாள். இவள் கல்யாணத்திலேயும், இப்படித்தான், சிவனாண்டி பூக்கடையிலிருந்துதான் சந்தனம் வாங்கியிருந்தார்கள். உடன் இருந்த தோழிகள், இவள் கையில் சந்தனம் பூசிவிட்டார்கள். அப்போது ஒருத்தி,

”ஏய்….நிறய பூசாதீங்கடி…..அப்புறம்…..மாப்பிள்ளை விஜயாவை பார்த்து மயங்கிட்டு, சந்தன வாசனையில்தான் மயங்கிட்டேனு சொல்லிருவாருடி….” னு சொல்லி கிண்டல் செய்தாள். அந்த நினைப்பில், அவளுக்கு வெட்கமும், சிரிப்பும்தான் வந்தது. அப்போதுதான், சாப்பிட்டு கை கழுவ வந்த முகவூர் பெரியப்பாவை பார்தாள்.

”வாங்க பெரியப்பா” என்றாள்.

நிமிர்ந்து பார்த்த பெரியப்பா, அனிச்சையாக, “எப்படிமா இருக்கே விஜயா?” என்றார்.

”நல்லா இருக்கேன் பெரியப்பா” என்று பதில் சொல்லிவிட்டு, கோவிலை நோக்கி நடந்தாள். அவளையே பார்த்து கொண்டே, “ம்ம்…… நல்லா இருக்கேனு சொல்லிட்டுப்போவுது இந்த புள்ள…..” என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டார்.

முகூர்த்தம் நல்லபடியாக முடிந்தது. கடைசி பந்தியில்தான் சாப்பிட்டாள் விஜயா. கொஞ்சமாய்த்தான் சாப்பிட்டாள். சாப்பாடு ருசியாகத்தான் இருந்தது, ஆனால் அவளால்தான் சாப்பிட முடியவில்லை. கனகா அத்தையுடன் சேர்ந்து, மண்டபத்தைக் காலிபண்ணிவிட்டு வீட்டுக்கு வரும்போது சாயங்காலமாகிவிட்டது. குழந்தைகள் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தார்கள். எல்லாம் கல்யாணத்திற்கு வந்தவர்கள்தான். இன்னும் ஒரிரு நாட்களுக்கு வீடு இப்படித்தான் இருக்கும். ஆனால் எல்லா பிள்ளைகளும் விஜயா சொன்னபடி கேட்பார்கள். விஜயாவிடம் நல்ல ப்ரியமும் கூட. விஜயா சித்தி, விஜயா அத்தைனு ஒண்ணு மாத்தி ஒண்ணா வந்து அவளிடம்தான் கேப்பார்கள். அவ்வளவு ஏன்?, அவர்களுக்குள் சண்டை வந்தால் கூட, விஜயாவிடம்தான் வருவார்கள். பிள்ளைகள் அடித்த லூட்டியில், நேரம் போனதே தெரியவில்லை. குழந்தைகள் எல்லோரும், கல்யாண மாப்பிள்ளையும் பெண்ணுடன் சேர்ந்தே சாப்பிட்டார்கள். பிறகு, பெரியவர்கள் எல்லாம் சாப்பிட்டு முடித்தனர்.

கோமதியம்மாள், ”விஜயா, அந்த பித்தளை விளக்கை கொஞ்சம் கழுவி வைய்மா” என்றார். பின்னர், சரசு பக்கம் திரும்பின கோமதியம்மாள்,

“சரசு, அக்கா விளக்கை கழுவி எண்ணெய் போட்டு தருவாள். உங்க ரூமில வைத்து விளக்கேத்துமா”

”சரி அத்தே” எனறு சொல்லி தலையாட்டினாள்.

”பிள்ளைகளும் பெண்களும், முன்னால் ஹாலில் ஜமுக்காளம் விரித்துப் படுங்க. நேரமாவுது” என்று சொல்லிவிட்டு, சொல்வராசுவைக் கூப்பிட்டு, பாய்களை எடுத்து மொட்டை மாடிக்கு ஆம்பிள்ளைகள் படுக்க கொண்டுபோகச்சொன்னார். ஹாலில் விஜயாதான் ஜமுக்காளத்தை விரித்தாள். அவளும், ஒரு ஓரத்தில் வலது கையை மடக்கி தலைக்குவைத்து சுவத்துப் பக்கமாய்ப் பார்த்து படுத்துக்கொண்டாள். சிறிது நேரத்தில் கோமதியம்மாளும், புது பொண்ணு, முதலிரவு அறைக்குள் சென்றபின், ஹாலுக்கு வந்து லைட்டை அணைத்துவிட்டு படுத்துக்கொண்டார். விஜயாவிற்குத் தூக்கம் வரவில்லை. ஆறு வருடங்களுக்கு முன்பு நடந்த அவளின் முதலிரவுதான் நினைவிற்கு வந்தது.

அறைக்குள் நுழையும் போது சந்தோசமும், புதிரும், படபடப்பும் கலந்த ஓர் உணர்வுதான் இருந்தது விஜயாவுக்கு. புது அனுபவமாயிருந்தது. பிடித்துமிருந்தது. கணவர்தான், “நீ நல்லா பேசுவேனு சொன்னாங்க” என்று சொல்லி, அவளின் கன்னத்தை தொட்டு அவர் பக்கமாய் திருப்பினார். கணவரின் விரல்கள் பட்டதும், அவளுக்கு அந்த ஸ்பரிசத்தில் உடம்பெல்லாம் புல்லரிதத்து. அவளுக்கும் பேசவேண்டும் போலத்தான் இருந்து. ஆனால் முடியவில்லை. அவளைப் பார்த்து,

”நான் பேசுவதாவது பிடித்திருக்கா….” என்று கேட்டதற்கு.
”ம்..” னு பதில் சொன்னாள்.
”பதில் சொல்லுறத பாத்தா…….பேசிக்கிட்டிருக்கிற ஆளத்தான் பிடிக்கல போல”
” பேசிக்கிட்டிருக்கிற ஆள புடிக்கும்…………….” அன்று சொல்லிவிட்டு, பொருள் அறிந்து வெட்கப்பட்டாள்.
”யப்பா……முத்து…முத்தாய் கொட்டுதுப்பா………நல்லாதான் பேசுதா…” னு கிண்டல் செய்தார்.

அவர் அருகில் இருப்பதே சுகமாய் இருந்தது. அவரின் பேச்சு, அவளை இயல்புக்கு கொண்டு வந்தது. இருவரும் வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். அன்றிலிருந்து, இன்றுவரை கணவரின் அன்பு குறைந்ததே இல்லை. எதற்கெடுத்தாலும், “விஜயா….விஜயா” னு மூச்சிக்கு முன்னூறு தடவை கூப்பிட்டுக்கிட்டிருப்பார். பேச்சுக்கும், மூச்சுக்கும் மட்டுமல்ல விஜயா. குடும்பத்தில் எடுக்கும் முடிவுகளுக்கும், விஜயா வேண்டும். வளமாயிருந்த வாழ்க்கையை மாற்றியது ஒரு பூச்சி. ஆமா… பூச்சியால்தான் வாழ்க்கையே மாறிப்போனது. அது விசப்பூச்சிஇல்லை. அது கொட்டியதாலோ, கடித்ததாலோ வரவில்லை எந்த தீங்கும். வந்த பிரச்சினை வராததால் வந்தது. கல்யாணமாகி மாதங்கள் ஓடியும்……ஒரு புழு….பூச்சிகூட தங்கவில்லை அவள் வயிற்றில். அந்தா இந்தானு ஐந்து வருடங்கள் ஓடிவிட்டன. முருகன் கோவிலில் ஆரம்பித்து, போகாத கோவில் இல்லை. அவளின் மாமியாருக்கும் மன வருத்தம்தான். ஆணோ பெண்ணோ, ஒரு குழந்தை வேண்டும். திருமணமான இரண்டு மூன்று ஆணடுகள் கோயில் கோயிலாகவும் ஆஸ்பத்திரி ஆஸ்பத்திரியாகவும் சுற்றினாள். கடவுளும் கண்திறக்கவில்லை, வைத்தியமும் பலன் அளிக்கவில்லை. வருடம் செல்ல செல்ல மனம் அழுது ஒய்ந்தது. நான்காம் ஆண்டில் நம்பிக்கைகூட அவளைவிட்டு நகர்ந்து சென்றது. கொஞ்சம் கொஞ்சமாய் மனதைத் தேற்றிக்கொள்ள பழக்கிக்கொண்டாள்.

அவளின் மாமியார்தான், மகனுக்கு மறுமணம் பற்றிய பேச்சை எடுத்தார்கள். அதைக் கேட்டு, அவளைவிட அவளின் கணவனே துணுக்குற்றான். மறுதலித்தான். மனம் ஒப்பாமல், விஜயாவிடம் ஒரு நாள் அழுதேவிட்டான். விஜயாதான், இரண்டாம் கல்யாணம் செய்வது ஊர் வழக்குதானே என்று சமாதானம் சொன்னாள். என்னதான் ஊர் வழக்கு என்றாலும், அவனுக்கு விஜயாவைவிட்டுவிட்டு இன்னொரு பெண்ணுடன் வாழ்வது மனதிற்கு சரியெனப் படவில்லை. ஒரு வழியாக வீட்டிலிருந்த எல்லோரும் சொல்லி அவனை மறுமணத்திற்கு சம்மதிக்க வைத்தார்கள். அதில் பெரும் பங்கு விஜயாவிற்கே. தெரிந்த பெணணாய்ப் பார்த்து பேசி முடித்து, கல்யாணமும் நடந்தேறியது. அவள் கணவன் சங்கரனுக்கும், சித்தி மகள் சரசுக்கும் இன்றுதான் முதலிரவு. அவர்களை அனுப்பிவைத்துவிட்டு விஜயா இங்கு படுத்திருக்கின்றாள். இவளுக்கும் இது முதலிரவுதான். ஆம், கணவனை இன்னொரு பொண்ணுடன் பகிர்ந்தளித்த முதல் இரவு. அவளையறியாமல் அவள் கண்களிலிருந்து வழிந்த வெதுவெதுப்பான கண்ணீர் பட்டு விஜயா, சுய நினைவுக்கு வந்தாள். யாராவது பார்த்திருப்பார்களா? என்று திரும்பி பார்த்தாள். அந்த இருண்ட இரவில் எல்லோரும் தூங்கிப் போயிருந்தார்கள், இவளைத் தவிர.

– 14 பெப்ரவரி 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *