முதலிரவுக் கதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 7, 2016
பார்வையிட்டோர்: 11,190 
 

எச்சரிக்கை: உங்களுக்கு ஐக்மோபோபியா என்றால் இந்தக் கதையைப் படிக்காதீர்கள். சில இடங்களில் ரத்தம் இருக்கலாம்!

“இதுக்கு முன்னாடி எப்பவாவது இந்த மாதிரி மயக்கம் வந்திருக்கா?”

டார்ச் லைட் ராதாவின் கண்களைக் கூசச் செய்ய, ‘இல்லை’ என்பது போல அவள் லேசாகத் தலையை அசைக்க

முரளி “இது தான் முதல் தடவை டாக்டர்… போன வாரம் பில்லா படம் பார்க்கும் போது” என்று தொடர்ந்தான்..

“ஓ”

“படத்தில் ரத்தம் வரும் சீன்ல எல்லாம் குழந்தை மாதிரி முகத்தைத் திருப்பிக்கிட்டா… படம் முடிந்து திரும்ப வரும் போது ஷி வாஸ் நாட் நார்மல்.. அப்படியே மயங்கி என் மேல விழுந்துட்டா டாக்டர்”

டாக்டர் பல்ஸ் பிடித்துப் பார்த்தார்.

“பீரியட்ஸ் எல்லாம் எப்படி?”

“நார்மல் தான் டாக்டர்…”

“டேட்?”

“ம்… போன மாசம் 20”

“கல்யாணம் ஆகி எத்தனை மாசம் ஆச்சு?” என்று டாக்டர் கேட்ட போது முரளிக்குக் கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது.

“நாலு மாசம்” என்றான்.

புதிதாகத் திருமணம் ஆன அடையாளங்கள் களைகட்டியிருந்த முகத்தில் ஓர் இனம்புரியாத பதட்டம் குடிகொண்டிருந்ததை டாக்டர் சதாசிவம் கவனித்தார்.

“மிஸ்டர் முரளி, நான் இவங்க கிட்ட கொஞ்சம் தனியா பேசனுமே!”

ஒரு கணம் தயங்கிய பின் “ஸ்யூர் டாக்டர். நான் வெளியே வெயிட் பண்றேன்” என எழுந்து சென்றவனைச் சில நிமிடங்களுக்குப் பின் அவர் உள்ளே அழைத்தார்.

“சரியான காரணத்தைக் கண்டுபிடிக்க உங்க மனைவியை நான் ஹிப்னோஸிஸ் பண்ண நீங்க அனுமதிக்கனும்.”

மார்பிள் தரையைப் பார்த்தவாறு மௌனமாக உட்கார்ந்திருந்த ராதாவைப் பார்த்துக் கொண்டே “ஓ.கே டாக்டர்” என்றான். அவள் பார்வையில் பயம் தெரிந்தது.

உடனே இன்டர்காமில் யாரையோ அழைத்துப் பேசினார் டாக்டர்.

“இன்னும் ஒரு ஒரு மணி நேரத்துல டாக்டர் சம்பத்தைப் பாருங்கள். ஐந்தாவது மாடி, எக்ஸ்ரே பக்கத்துல இருப்பார். நத்திங் டு வொரி.. இந்த விஷயத்தை அப்படியே மறந்துட்டு ஒரு காபி சாப்பிட்டுட்டு மேலே வந்துடுங்க… ஐ வில் ஆல்சோ பி தேர்”

ஐந்தாவது மாடியில் கூட்டம் அதிகமாக இல்லை. யாரோ இரண்டு பேர் எக்ஸ்ரேவிற்குக் காத்துக் கொண்டிருந்தார்கள். ஒருவர் கையில் இருந்த குமுதத்தில் மடங்கிய திரிஷா சிரித்துக்கொண்டு இருந்தார்.

“Dr.SAMPATH, MBBS,M.D.,C.Ht.” என்ற பெயர்ப் பலகையைத் தாண்டி உள்ளே சென்றார்கள்.

“குட் மார்னிங் டாக்டர்” என்றவுடன் நிமிர்ந்து பார்த்த டாக்டர் சம்பத் ஒரு புன்னகையுடன் அவர்களை வரவேற்றார். கலர் இல்லாத பஞ்சு மிட்டாய் போல இருந்தது அவர் தலை. டாக்டர் சதாசிவம் அவர்களுக்கு முன்னரே அங்கு வந்திருந்தார்.

டாக்டர் சம்பத் அடுத்த புன்னைகையுடன் “எப்பலேர்ந்து இந்த மாதிரி?” என்று ஆரம்பித்தார்.

“இப்ப தான் டாக்டர் கொஞ்ச நாளா…” என்றான் முரளி.

“இவங்க சொல்லட்டும்.. இவங்க தான் இப்ப பேசணும்…”

“ம்… எனக்கு எப்போ இந்த மாதிரி பயம்வரத் தொடங்கிச்சுனு தெரியல டாக்டர். ஆனா ரொம்ப நாளாவே இருக்கு. இப்ப இரண்டு மூன்று மாசமா கொஞ்சம் அதிகமா இருக்கு”

“எப்போலாம் வருது?”

“கத்தி, பிளேடு, ஊசி இதெல்லாம் யூஸ் பண்ணிட்டுத் தான் இருக்கேன். அப்படி ஒன்னும் பெருசா பயம் இல்ல. ஆனா இப்ப கொஞ்ச நாளா…”

“சொல்லுங்க”

“கத்தியைப் பார்த்தா உடம்புல ஏதோ ஒரு இடத்துல வெட்டுற மாதிரி தோணுது. ஊசியால துணி தைக்கும் போது அது கண்ணுல வந்து குத்திருமோனு பயமா இருக்கு. பிளேடுங்கற வார்த்தையைக் கேட்டாலே பயமா…”

அவள் சொல்வதை எந்தச் சலனமின்றிக் கேட்டுக் கொண்டிருந்தார் டாக்டர் சம்பத்.

“இன்னிக்கு காலையில நடந்தத சொல்லு” முரளி குறுக்கிடவும் ராதா தொடர்ந்தாள்.

“காலையில தூக்கக் கலக்கத்துல எழுந்து பால் பாக்கெட் கட் பண்ணலாம்னு கத்திரியைத் தேடினேன், கிடைக்கல. சரினு பக்கத்துல இருந்த காய்கறி வெட்டுற கத்தியை எடுத்து கட் பண்ணும் போது விரலை வெட்டிட்டேன். ரத்தம் கொட்ட ஆரம்பிச்சிருச்சு. அப்படியே பாலோடு பாக்கெட்டைக் கீழே உதறிட்டு கையைத் தண்ணில காட்டினேன்” அதற்கு மேல் தொடர முடியாமல் நிறுத்தினாள்.

“ம்.. ரிலாக்ஸ். என் கூட வாங்க… முரளி.. நீங்க வேணும்னா இங்கேயே இருக்கலாம்.. உங்க சாய்ஸ்”

“நானும் வரேன் டாக்டர்” என்று அவசரமாகச் சொன்ன முரளியிடம் ஒருவித பதட்டம் தெரிந்தது. எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்த டாக்டர் சதாசிவம் அமைதியாக அவர்களைத் தொடர்ந்தார்.

ஒரு சின்ன அறை. சாய்வாக அமைக்கப்பட்ட ஒரு நாற்காலிப் படுக்கை. மிதமாகக் குளிரூட்டப்பட்ட அறையில் ரம்மியமான வெளிச்சம். புத்துணர்வு தரும் நறுமணம் என்று எழுத்தாளர்கள் வர்ணிக்கும் அழகு எதையும் ராதாவால் அச்சூழலில் கவனிக்க முடியல்லை.

டாக்டர் சொன்னவாறு அந்தச் சாய்வு நாற்காலியில் அவள் படுத்துக்கொள்ள மெல்ல முனுமுனுப்பாய் ஏதோ ஒரு தேவியை நினைத்துக்கொண்டாள்.

அவள் நிதானமாக செட்டில் ஆவதற்கு அவகாசம் அளித்த டாக்டர் மெதுவாக பேசத் தொடங்கினார்.

“க்ளோஸ் யுவர் ஐஸ்.. நான் பத்துல இருந்து ஒன்னு வரைக்கும் எண்ணுவேன். மெதுவா… ரொம்ப மெதுவா.. உனக்குப் பிடிச்ச தனிமையான ஒரு இடத்தை மனசுல உருவகிச்சிக்கோ.. யாருமே இல்லாத ஒரு கடற்கரைல இருக்குற மாதிரியோ.. வானத்துல பறக்குற மாதிரியோ… தனியா ரிலாக்ஸ்டா… ரிலாக்ஸ்.. டென்ல இருந்து நான் ஒன் எண்ணும்போது நீ அந்த இடத்துக்குப் போயிருக்கனும். டென்… நைன்.. எயிட்.. செவென்.. ரிலாக்ஸ்.. சிக்ஸ்.. ஃபைவ்.. ஃபோர்.. ரிலாக்ஸ்.. ரிலாக்ஸ்.. த்ரீ.. டூ… ஒன்… ரிலாக்ஸ்… ராதா.. யூ ஆர் அலோன்.. ஸோ ரிலாக்ஸ்ட்.. ஃப்ரீ.. ஃப்ளையிங் இன் த ஏர்… ரிலாக்ஸ்”

அறை முழுதும் ஒரு அமைதி நிலவியது.. முரளிக்கு இதெல்லாம் புதிதாக இருக்க, ராதா அப்படியே ஆழ்ந்த உறக்க நிலைக்குச் சென்றிருந்தது தெரிந்தது.

“ராதா..”

டாக்டர் ராதாவிடம் மேலும் பேசப் பேச ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாத பல கதைகள் வெளிவந்தன. அவ்வப்போது உணர்ச்சிவசப்பட்ட அவளை அடிக்கடி அமைதிபடுத்த வேண்டியிருந்தது.

“தியேட்டர்ல படம் பார்த்தியா ராதா.. பில்லா..”

“டாக்டர்.. கத்தியால அவ கழுத்தை அறுத்தாங்க… டாக்டர்… எனக்கு மயக்கமா வருது.. அவ மயங்கிட்டா… செத்துட்டா… நான் மயங்குறேன்.. முரளி..”

“ராதா.. யூ ஆர் ஆல்ரைட்.. விஆர் வித் யூ”

“நான் ப்ளட் டொனேட் பண்றேன்.. பாவம் அவங்க. என் ரத்தத்தை ஒரு பாட்டில்ல எடுக்குறாங்க. எனக்கு மயக்கமா வருது. ”.

“யூ ஆர் ஆல்ரைட்.. ராதா.. வலிக்கிதா?”

ராதா மெதுவாக ஒவ்வொரு வார்த்தைக்கும் நீண்ட இடைவெளி விட்டுப் பேசிக்கொண்டிருந்தாள்.

“ஆமா. தம்பிக்கு ஆக்ஸிடெண்ட். பெட்ல படுத்திருக்கான். நர்ஸ் அவனுக்கு ஊசி போடுறாங்க. வலியில அவன் முகத்தை ஒரு மாதிரி பண்றான். வெளியே கூட்டிட்டுப் போங்க… இப்பவே என்னை வெளியே கூட்டிகிட்டு போங்க ப்ளீஸ்!”

“ரிலாக்ஸ்… எங்க வலிக்கிது உனக்கு? ராதா.. எங்க இருக்க?”

“நான் ஐ.சி.யூ.ல இருக்கேன்”

“என்ன ஆச்சு உனக்கு?”

“ஒருத்தன் பெட்ல படுத்திருக்கான். ஒடம்பெல்லாம் கட்டு போட்ருக்காங்க. மூக்குல.. மூக்குல…

“மூக்குல என்ன ?”

“ரத்தம் வடிஞ்சிருக்கு. தண்ணி கேட்குறான் டாக்டர்.. வலியில கத்துறான்.. ப்ளீஸ் தண்ணி கொடுங்க…”

“உனக்கு ஒன்னும் ஆகல. ரிலாக்ஸ்.. ராதா.. வலிக்கல பாரு”

“வலிக்கிது டாக்டர். பிளேடு கையில வெட்டிருச்சு. ஸ்ஸ்ஸ்… ரத்தம் கொட்டுது.. அம்மா காப்பித்தூள் வச்சு அமுக்குறாங்க. எனக்கு வலிக்கிது….”

“ரிலாக்ஸ்.. ராதா… எல்லாம் ஆறிடுச்சு. யூ ஆர் கம்ப்ளீட்லி ஆல்ரைட். ஒன்னுமே இல்ல. பத்திரமா இருக்க”

“ராதா”

“…”

“ராதா… வலி போயிருச்சு உனக்கு… பிளேடு பார்த்தா பயமாயிருக்கா? சொல்லு கத்தியைப் பார்த்து ஏன் பயப்படுற? ராதா..”

“ஆமா… டாக்டர்… கத்தி… கத்தி இருக்கு…”

“சொல்லுமா.. எங்க இருக்கு?”

“டாக்டர்.. ஃபர்ஸ்ட் நைட்ல… ஆப்பிள்… கத்தி…”

“சொல்லும்மா.. கத்தி யார் கையில இருக்கு?”

“கையில இல்ல டாக்டர்.. வாயில”

“………”

“ரூம் முழுசும் பூவா இருக்கு. பூமாலை நிறைய தொங்குது.. காத்தாடி வேகமா ஓடிட்டு இருக்கு… அவரு…”

உறைந்து போயிருந்த முரளியைத் திரும்பிப் பார்த்தார் டாக்டர்.

“சொல்லும்மா…”

“அவர்.. கோபமா ஒரு ஆப்பிளை எடுத்து அதைச் சரசரனு வெட்டித் தரையில போட்டு.. அதுல ஒரு துண்டை அப்படியே கத்தியில குத்தியெடுத்து வாயில வெச்சு……” ராதாவின் குரல் கம்மி தொண்டையை அடைத்தது.

“சொல்லு”

“வாயை மூடிட்டுக் கத்தியை அப்படியே இழுக்குறார்… டாக்டர்………….” அப்போது ராதா போட்ட சத்தம் அந்த அறையையே அலற வைத்தது.

டாக்டர் சம்பத் முரளியை வெறித்துப் பார்க்க, டாக்டர் சதாசிவமும் எதையோ கண்டுபிடித்துவிட்டது போல் முரளியை நோக்க, ராதா இன்னும் விம்மியபடி இருந்தாள்..

“……”

“டாக்டர்.. கத்தி… கத்தி அவரோட ரெண்டு லிப்ஸையும் கிழிச்சு… ரத்தம் சட்டையில வடிஞ்சு…………” அப்படியே மயங்கிப் போனாள்.

டாக்டர் சதாசிவம் முரளியை பார்க்க, டாக்டர் சம்பத் “பயப்பட ஒன்றும் இல்லை, சில வருடங்களுக்கு முன் ‘புது புது அர்த்தங்கள்’ படம் பார்த்ததால் ஏற்பட்ட விளைவு. நான் கூட போன வாரம் டிவியில் பார்த்தேன் என்றார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *