கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 14, 2015
பார்வையிட்டோர்: 9,654 
 

சம தளத்திலும் சற்றே இறக்கமான பகுதிகளிலும் அவ்வளவாகத் தெரியவில்லை. சற்று மேடான சாலைப் பகுதிகளில் மட்டும் மிதிப்பதற்கு நிறைய சிரமமாக இருந்தது.

“”வேண்டாண்டா உன்னால முடியாது”ன்னு சொன்ன பாபு கிட்ட, “”முடியும்டா”ன்னு சொல்லி சைக்கிளை வாங்கினது நான்தான். இப்ப முடியலைன்னு குடுத்தா ப்ரெண்ட்ஸ் கிட்ட இதைச் சொல்லியே ஒரு வாரம் ஓட்டிட்டு இருப்பான். அதனால தம் பிடிச்சு மிதிச்சிட்டிருந்தேன்.

வீட்ல இருந்து இரண்டு கிலோ மீட்டர் மேல தாண்டி வண்டி போய்ட்டிருந்தது.

“”ரொம்ப தூரம் போவாதீங்கடா, கிடைக்கலன்னா வந்துருங்க, சாயந்திரம் ஆபீஸ்ல இருந்து அப்பா வரும்போது எப்படியும் பேப்பர் வாங்கிட்டு வருவாரு, அதில பார்த்துக்கலாம்” என்று கிளம்பும்போதே அம்மா ஒண்ணுக்கு ரெண்டு தடவை சொல்லியிருந்தாள்.

முடிவு

அப்படியெல்லாம் விட்டு விட முடியுமா? என்ன? ஒரு மணி நேரம் முன்னாலயே சுதாகர் அவங்க அண்ணனோட கிளம்பி மெüன்ட் ரோடு போய் விட்டான். அங்கெல்லாம் மூணு நாலு மணிக்கே பேப்பர் வந்துடுமாம்.

முதலில் எங்களுக்கும் இப்படி கிளம்பும் உத்தேசம் ஏதும் இல்லை. கிள்ளி தாண்டு விளையாடிக் கொண்டிருந்தோம். பாபுதான் திடீரென்று, “”நாமளும் போய் கொளத்தூர்ல பேப்பர் கிடைக்கும் பார்த்துட்டு வரலாம்டா” என்றான்.

“”என் சைக்கிளிலேயே போய்ட்டு வரலாம்டா” என்றான்.

சைக்கிளை எடுக்கப் போகும்போது பாபுவின் அம்மாவும் அதே அறிவுரைகளை திரும்பத் திரும்ப சொன்னார். பாபுவின் வீட்டு முன்புறம் ஓலையால் மூடப்பட்டு டீக்கடை நடத்தி வந்தார்கள். பாபுவின் அப்பா தேவைப்படும் பொருட்கள் வாங்க மார்க்கெட்டுக்கு போயிருந்தார். வரும்போது பேப்பர் கிடைத்தால் வாங்கி வருவதாகச் சொல்லிப் போயிருந்தார்.

கொளத்தூர் நாங்க இருந்த ஏரியாவிலிருந்து மூணு கிலோ மீட்டர் போகணும்.

ஆனால் மணி நாலு ஆகியும் கொளத்தூரில் பேப்பர் வந்திருக்கவில்லை. நாங்கள் கிளம்பி வந்து அரை மணிக்கு மேல் ஆகி இருந்தது.

“”ரிசல்ட் வர்ற பேப்பர் எத்தனை மணிக்கு வரும் அண்ணாச்சி?” என்று கேட்டான் பாபு.

நான் கடையில் தொங்க விடப்பட்டிருந்த பெரிய பேப்பர்களில் இருந்தவற்றைப் படித்துக் கொண்டிருந்தேன்.

“”டென்த் ரிசல்ட் வர்ற பேப்பரா தம்பி, இங்க வர எப்படியும் ஆறு ஆறரை ஆகும்பா. பெரம்பூர் போனா அஞ்சு மணிக்கே கிடைக்கும்” என்றார் கடைக்கார அண்ணாச்சி.

பெரம்பூர் அங்கிருந்து இன்னும் ஓர் அரைமணி நேரம் சைக்கிளில் போக வேண்டும்.

“”திரும்பிப் போயிடலாண்டா, எங்கப்பா சாயந்திரம் ஆபீஸ்ல இருந்து வரப்ப பேப்பர் வாங்கிட்டு வருவாரு, அதுல பாத்துக்கலாம்” என்றேன் நான்.

“”இங்கிருந்து இன்னும் நாலு கிலோ மீட்டர் தாண்டா, நான் வேணா ஓட்டுறேன்… கொண்டா” என்று சைக்கிளை என்னிடமிருந்து வாங்கினான் பாபு.

உள்ளுக்குள் ரிசல்ட் பார்த்துவிடும் ஆசை உந்த பின் பக்கம் தாவி உட்கார்ந்தேன்.

என்னைப்போல அவ்வளவு சிரமம் இல்லாமல் சைக்கிளை மிதித்துக் கொண்டிருந்தான் பாபு. எங்கள் வகுப்பிலேயே கொஞ்சம் ஆஜானுபாகுவானவன் பாபு. கடோத்கஜன் என்றொரு செல்லப்பெயர் வைத்திருந்தோம் அவனுக்கு.

பெரம்பூர் சர்ச் எதிரே இருந்த ஒரு கடை வாசலில் கூட்டமாக இருந்தது. சைக்கிளை ஓர் ஓரமாக நிறுத்திய பாபு, “”பிடிச்சிக்கிடா” என்று என்னைப் பார்த்து சொல்லிவிட்டு, கூட்டத்தில் புகுந்து உள்ளே போய், ஒரு பேப்பரோடு வந்தான்.

எல்லாப் பக்கங்களிலும் எண்கள், எண்கள்.

படபடப்போடு, இருவர் நம்பரையும் தேடினோம். பாபுவுக்குதான் முதலில் தட்டுப்பட்டது என்னுடைய நம்பர்.

“”டே, நீ பாஸூடா” என்றான் பாபு.

“”உன் நம்பரை கண்டு பிடிப்போம்டா, இரு” என்றேன் நான்.

என் நம்பரை அவன் கண்டுபிடித்தது போல், அவன் நம்பரை எப்படியாவது முதலில் நான் கண்டுபிடிக்க வேண்டும் என்று மும்முரமாய் கண்களை இங்கும் அங்கும் அலைய விட்டு தேடிக் கொண்டிருந்தேன். பாபுவும் பேப்பரின் இன்னொரு பக்கம் பார்த்து கொண்டிருந்தான்.

பார்த்த பக்கங்களையே மாற்றி மாற்றிப் பார்த்தோம்.

ம்ஹூம், பாபுவின் நம்பரைக் காணவில்லை.

“”என்னடா, உன் நம்பரை காணோம்”

“”பெயிலா இருக்கும்டா” என்றான் பாபு.

“”இருடா, இன்னொரு பேப்பர் வாங்கிப் பார்ப்போம்” என்று சொல்லிவிட்டு, நான் போய் இன்னொரு பேப்பர் வாங்கி வந்தேன். அதிலும் இல்லை.

“”நான் சொல்லல. பெயிலாகி இருக்கும் டா” என்றான் பாபு மறுபடியும்.

நான் அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

“”இப்ப என்னடா செய்யறது?” என்றேன்.

“”முதல்ல வீட்டுக்குப் போவோம், சாயந்திரம் எங்கப்பா வாங்கிட்டு வர பேப்பர்ல இருக்கும்டா ஒருவேளை” என்றேன்.

அப்போது எங்கள் ஊருக்குப் போகும் பஸ் நாங்கள் நின்றிருந்த நிறுத்தத்தை நோக்கி வந்து கொண்டிருந்தது.

“”டே, உன்கிட்ட காசு இருக்கில்ல, நீ பஸ்ல வந்துருடா, நான் பின்னாடியே சைக்கிள்ல பாலோ பண்ணிட்டு வரேன்” என்றான் பாபு.

“”வேண்டாண்டா, உங்க வீட்ல திட்டுவாங்கடா, வந்த மாதிரியே சைக்கிள்ள போயிருவோம்” என்றேன் நான்.

“”வரும்போது மிதிச்சது காலெல்லாம் வலிக்குதுடா, நீ போய் ஏறு. நான் பின்னாடியே வரேன்” என்று என்னை ஏறக்குறைய தள்ளியபடி பஸ்ஸூக்குள் ஏற்றி விட்டான் பாபு.

பஸ் காலியாக இருந்தது. ஜன்னலோரம் இருக்கையில் உட்கார்ந்தபடி பாபு சைக்கிளில் வருவதை எட்டிப் பார்த்தபடியே இருந்தேன். எங்கள் ஊர் வரை ஏழு எட்டு நிறுத்தங்கள் இருக்கும். முதல் இரண்டு நிறுத்தங்கள் வரை கூடவே வந்து கொண்டிருந்த பாபு, மூன்றாவது நிறுத்தத்திற்கு முன், டிக்கட் கொடுக்க, வண்டியை ஓரங்கட்டியபோது, பேருந்தைத் தாண்டிப் போனான்.

நமக்கு முன்னாலேயே அவன் போய்ச் சேர்ந்து விடுவான் என்று நினைத்துக் கொண்டே, கூடவே, அடுத்த வகுப்பு, போகப் போகும் புதுப் பள்ளிக்கூடம், யார் யாரெல்லாம் அங்கு வந்து சேருவார் என்றெல்லாம் யோசித்தபடி வந்ததில் ஊர் வந்திருந்தது. இறங்கினேன்.

நிறுத்தத்தை ஒட்டியிருந்த பாபுவின் வீட்டிற்கு போய், “”பாபு எங்க, வந்துட்டானா?” என்றேன்.

“”என்னப்பா சொல்ற? ரெண்டு பேரும் ஒண்ணாத்தானே போனீங்க, எங்க அவன்?” என்றார் பாபுவின் அம்மா.

“”நான் பஸ்ல வந்தேன். அவன் சைக்கிள்ல வரேன்னான்”

“”இன்னும் வரல்லியே, ரிஸல்ட் என்னாச்சு, பார்த்தீங்களா?”

“”நான் பாஸ்” என்றேன்.

“”பாபு?”

“”அவன் நம்பரைக் காணோம்” என்று கையில் இருந்த பேப்பரை நீட்டினேன்.

பேப்பரை வாங்கிய பாபுவின் அம்மா புரட்டி புரட்டிப் பார்த்தபடியே, “”அவன் நம்பரக் காணோம்னு தெரிஞ்சும் எப்படி அவனைத் தனியா விட்டுட்டு வந்த?” என்று என்னைப் பார்த்துக் கேட்டார்.

“”நான் சைக்கிளிலேயே போலாம்னுதான் சொன்னேன். அவன்தான் கால் வலிக்குது, நீ பஸ்ல போ, நான் பின்னாடியே பாஸ்ட்டா வரேன்னான்” என்றேன்.

கொஞ்சம் கொஞ்சமாக பாபு அம்மாவின் குரல் உயர ஆரம்பித்ததில், கூட்டம் கூட ஆரம்பித்தது. நாலு வீடு தள்ளியிருந்த எங்கள் வீட்டையும் விஷயம் எட்டி, அண்ணா ஓடி வந்தான்.

“”என்னாச்சு?” என்றான். சொன்னோம்.

“”இப்ப எங்க போய்ப் பார்க்கறது?” என்றான் அண்ணா பாபுவின் அம்மாவிடம்.

“”தனியே விட்டுட்டு வந்து நிற்கிறானே, அவனைக் கேளு” என்றார் பாபுவின் அம்மா.

எதுவரைக்கும் போனோம், எல்லாம் விவரமாகக் கேட்ட அண்ணா, தன் சைக்கிளை எடுத்தபடி, “”ஏர்றா, பின்னால, போய்ப் பார்த்துட்டு வரலாம்” என்றான்.

கொஞ்ச தூரம் தான் போயிருப்போம். தூரத்தில் பாபு சைக்கிளில் வருவது தெரிந்தது.

நெருங்கியவுடன், ஓடிப்போய் “”ஏன்டா இவ்ளோ லேட்?” என்றேன்.

“”அங்க ஒரு கடையில கலர் குடிச்சேன், பாக்கி சில்லறை நாலணா இல்லை, வரும் வெய்ட் பண்ணுன்னு சொல்லி இப்பதான் தந்தான். ஏன் என்னாச்சு?” என்றான் பாபு.

– ஜூலை 2014

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *