முக்கோணம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 22, 2019
பார்வையிட்டோர்: 6,271 
 

டமார் , தலையில் இடிவிழுந்தது போல ஓர் உணர்வு .சட்டென ,விழிப்புத் தட்டியது ,திடுக்குற்ற மோகன் , கண்ணை உருட்டி நிலைமையை உணரத் தலைப்பட்டான் . என்ன சத்தம் நான் நன்றாகவே இருக்கிறேன் . ஆகவே என் தலையில் எதுவும் விழவில்லை .மேலே வீடும் உடையவில்லை .அப்படியானால் இவ்வளவு பெரிய சத்தம் எங்கிருந்து எப்படி வந்தது ,விழிகளை சுழற்றி நோடமிட்டான் .

மூலையில் மழையில் நனைந்த கோழிபோல ,ஒடு ங்கியபடி வதனி நின்றிருந்தாள் .ஆகா , வீட்டுக்குள் தான் இடி , இடி த்திருக்கிறது அதற்கு வதனியும் ஓர் காரணம் .நிலைமையை உணர்ந்து சோபாவிலிருந்து எழுந்து உட்கார்ந்தான் மோகன் .அவன் உடல் நிலை காரணத்தாலும் இன்று சனிக்கிழமை என்பதாலும் ,மதிய உணவின் பின் சோபாவில் சிறிது கண்ணயர்ந்திருந்தான் .இந்த வேளையில் தான் தலையில் இடிவிழுந்த உணர்வில் கண் விழித்தான் ,இப்போது மெதுவாக எழுந்து இரண்டு அடி வைத்து எங்கே ? என்ன ? எப்படி ? நடந்ததென நிலைமையை புரிந்து கொள்ள முயன்றான் :கூடத்தின் முடிவில் அனுவின் அறை வாசலில் அவள் உடைகளும் ;அலங்காரப் பொருட்களும் ;புத்தக ங்களும் சிதறுண்டு கிடந்ததை கண்ணுற்ற மோகன் ; ஒன்றும் ஒன்றும் இரண்டு என்பது போல ;நிலைமையை ஊகித்துக் கொண்டு மெதுவாக வதனியை அழைத்தபடி தன் அறையை நோக்கி நடந்தான்.கண்கள் கலங்கிச் சிவந்து ;உதடுகள் துடிக்க கைகளைப் பிசைந்தபடி நின்ற வதனி பின்னே வந்தாள் .அறைக் கதவை மெதுவாக மூடி என்ன நடந்த தென வதனியை வினாவினான் .

விக்கி விக்கி அழுதபடி ,கண்களிலிருந்து நீர் பெருக்கெடுத்து ஓட ,வதனி சொன்ன விடயத்திலிருந்து மோகன் உள்வாங்கியது ,தோய்த்து அயன் செய்த உடைகளை ,அனுவின் அறைக்குள் சென்று கட்டிலில் வைத்து இருக்கிறாள்,வதனி. .அறைக்குள் கதவை தட்டாமல் வந்ததிற்கு திட்டி ,நாகரிகம் தெரியாதவள், என அவமதித்து, அவள் கொண்டு வந்து வைத்த ஆடைகளையும், தனது சில பொருட்கள், புத்தகங்களையும் ,அள்ளி வீசி ஆத்திரத்துடன் வெளியே எறிந்திருக்கிறாள் அனு. தான் உடைகளை தோய்க்கப்போட்டு , அயன் செய்து வைத்ததை உதவியாகவே எண்ணி எடுத்துச் சென்றிருக்கிறாள் , பிள்ளைகள் அறைக்குள் அனுமதி கேட்டு செல்ல வேண்டும் என்ற நாகரீகத்தை அவள் அறிந்திருக்கவில்லை ,என்பது உண்மை தான் .

வதனி தாய் நாட்டில் பிரபல பெண்கள் பாடசாலையில் அதிபராகக் கடமையாற்றியவள் ஒரு பட்டதாரி . வெளிநாட்டிற்கு வந்து ஆறு மாதங்களே ,ஆகியிருந்தது ,அதனால் இன்னும் இந்த ஐரோப்பிய வாழ்க்கைக்கு மாறவில்லை ,மாறவில்லை இல்லை இன்னும் கொஞ்சமும் புரிந்து கொள்ளவில்லை என்பதே உண்மை .அவள் எங்கள் தாய் நாட்டு வழக்கப்படி ,குடும்ப உறவுகள் என்றால் ,எப்படி இருப்பார்களோ .அப்படியே தன அன்பைச் சொரிந்தாள் ,அதுவும் தன் சகோதரிகளின் குழந்தைகளுடன் இருந்து விட்டு அவர்களின் பிரிவை மறக்க ,இந்தக்

குழந்தையில் தன் அன்பைச் சொரிந்தாள் .தன் வீடு என்ற உணர்வோடும் கடமையோடும் ,பொறுப்போடும் ,வேலைகளைச் செய்தாள் .மோகனும்

சந்தற்பம் கிடைக்கும் போதெல்லாம் எதை எப்படிச் செய்யவேண்டும் என சொல்லிச் சொல்லிப் புரியவைத்தான் ,ஆனால் புரியவைக்க முடியாத ஒன்று இருக்கிறதல்லவா ?அதுதான் மனங்கள் ;பிள்ளைகள் மனங்களை புரியவைக்கவும் ;புரிந்து கொள்ளவும் முடியவில்லை ;மோகனும் தடுமாறி ;தவித்து ;வதனியையும் வருத்தப்பட வைக்கிறார்கள் பிள்ளைகள் : வதனி பாவம் ஊரிலே நல்ல குடும்பத்திலே பிறந்து நல்ல தொழிலும் பார்த்தவள் தான் ; விதி யாரை விட்டது ;அவள் குடும்பத்தில் அவள் ஐந்தாவது பெண்ணாகப் பிறந்ததுதான் அவள் செய்த குற்றமோ ?

வதனியின் தந்தை சிவம் ஓர் ஆசிரியராகக் கடமையாற்றியவர் ;தாய் பார்வதி குடும்பத்தைக் கவனித்துக் கொண்டு வீட்டிலேயே இருந்தாள் :தன் கணவனின் வருமானத்தில் கெட்டித்தனமாய் குடும்பத்தை கொண்டு நடத்தினாள் பிள்ளைகள் நீங்கள் ஐந்து பேரும் பெண்கள் ,எங்கள் காலத்திற்குப் பின் உங்கள் காலில் நிக்கவேணும்அதற்கு நல்ல கல்வி வேணும் நான் என்னால் முடிந்தவரை உங்களை படிக்க வைப்பன் என்று கூறி கல்வியின் உயர்வை எடுத்துக் கூறுவார் :ஆண் துணை இல்லை என்று எதற்கும் தயங்கக் கூடாது ;உங்கள் காரியங்களை நீங்களே செய்ய வேண்டும் ;திருமணம் உங்களைத் தேடி வரவேண்டும் என்று கூறுவார் : சொன்னபடி :சிவம் ஐந்து பெண்களையும் உயர் கல்வி கற்கவைத்து நல்ல நிலைக்கு உயர்த்தி விட்டார் .எல்லோரும் நல்ல தொழில்களிலும் அமர்ந்து விட்டனர் சிவமும் பார்வதியும் பெயருக்கேற்றபடி இணைந்து குடும்பத்தை குதூகலமாய் கொண்டு சென்றனர் ஊரே பாராட்டும் வண்ணம் தன் காலத்திலேயே இரண்டு பெண்களுக்குத் திருமணம் முடித்து வைத்து கண் மூடி விட்டார் ;அவர் கண் மூடிய பின் மற்ற இரு பெண்களுக்கும் மிச்சம் மீதி சொத்துப் பத்து எனத் திரட்டி ஒருவாறு கரை சேர்த்தாள் பார்வதி : பின் எஞ்சியது ,வாழ்ந்த வீடும் ,பென்சன் பணமும் தான் .

வதனி கை நிறையச் சம்பாதித்தாலும் அவளுக்கு நல்ல வரன்கள் அமையவில்லை. பார்வதியும் ஓர் நாள் கண் மூடி விட்டாள் .இப்போது வதனி தனித்துப் போனாள் ,நாடு இருக்கிற நிலையில் தனியே இருக்க வேண்டாம் ,வீட்டை வாடகைக்கு விட்டு தங்களுடன் இருக்கும் படி கேட்கும் சகோதரிகளின் சொல்லை தட்டமுடியாமலும்,நாட்டின் சீர்கேட்டினாலும் வதனி வீட்டை வாடகைக்கு விட்டு மூத்த சகோதரியின் வீட்டில் குடி புகுந்தாள் .அங்கிருந்தே பாடசாலைக்கு சென்று வந்தாள் .சகோதரிகள் அறிந்தவர் ,உறவுகள் என அனைவரும் அவளுக்கு வரன் தேடினாலும் ,எதுவுமே சரியாக அமையவில்லை .அவளுக்கு இப்பொது வயது நாற்பது ,வதனி இப்பொது ஓர் முதிர் கன்னி ,அவளுக்கு திருமணத்தில் மனம் ஒப்பவில்லை ,சற்றும் பொருந்தாத மணமகன்களை ,மணம் செய்ய வேண்டும் என்ற ஒரு காரனத்திற்கா ஏற்றுக்கொள்ள அவள் மனம் ஒப்பவில்லை .,சகோதரிகளும் சளைக்காமல் வரன் தேடியபடியே இருந்தனர்,வதனியும் தானும் தன் தொழிலும் அதன் பொறுப்புகளுமாய் காலத்தைக் கழிக்கப் பழகி விட்டாள். காலை ஏழு மணிக்கு வீடு விட்டுப் புறப்பட்டு மாலை வீடு வர ஐந்து ஆறு மணியாகிவிடும் .இப்படியே காலம் விரைந்தது ,இப்படி அவளும் நாற்பத்தி நான்கு வயதை அடைந்து விட்டாள் .

இந்த வேளையில் தான் அவளுக்கு வெளிநாட்டு மாப்பிள்ளை ,அதுவும் இரண்டாம் தரம் ,வளர்ந்த இரு பிள்ளைகள் ,தாய் இறந்து விட்டாள் ,தந்தை பிள்ளைகள் விருப்பத்துடன் மறுமணம் செய்ய விரும்புகிறார் ,என்ற தரகரின் தகவல்களுடன் வந்த சாதகம் நன்கு பொருந்திவிடவே ,

சகோதரிகள் நால்வரும் விடாப்பிடியாக நச்சரித்து ,நீ என்னும் எத்தனை நாளைக்கு இப்படி தனியே வாழப் போகிறாய் ,உனக்கும் ஒரு வாழ்க்கை வேணும் ,எங்களுடன் எத்தனை காலத்துக்கு இருக்கப் போகிறாய் ,நாட்டு நிலையில் தனிய வாழ முடியாது ,வாழ்க்கையில் நல்ல மாற்றம் சந்தோசம் வரும் .பிள்ளைகளும் வளர்ந்திட்டினம் ,பிக்கல் பிடுங்கல் இல்லை, வேலையை விட்டுப் போட்டு வாழ்க்கையை வாழப் பார் என அவளை ஓர் நிர்ப்பந்தத்தில் தள்ளி விட்டார்கள் .முடிவில் அவர்கள் அன்புத் தொல்லை ,நச்சரிப்பு தாங்க முடியாமல் சம்மதித்து, மோகன் வந்து திருமணமும் முடிந்து இன்று ஜெர்மனிக்கு வந்து எட்டு மாதங்களும் முடிந்து விட்டது ,

உணவு உடை ,மொழி பழக்கவழக்கம் ,காலநிலை அனைத்திலும் மாற்றம் ,வந்து இறங்கியபோது மோகனின் பிள்ளைகள் இருவரும் ஐரோப்பிய முறைப்படி பூச் செண்டுடனும் ;பரிசுப் பொருட்களுடனும் வந்து இன் முகத்துடன் கட்டியணைத்து வரவேற்றார்கள் : “,யது “பதினெட்டு வயது ;”அனு “ பதினைந்து வயதுப் பெண் :அனுவிற்கு ஓர் வழிகாட்டியாய் ;அனுசரணையாக வளர்க ஓருவர் தேவை ,மோகன் நோய் வாய்ப்பட்டு அவனை கவனிக்கவும் ஓர் துணை தேவைப்பட்டதாலும் பிள்ளைகளே முன் நின்று ;அப்பாவை மறுமணம் செய்ய வைத்தார்களாம் ,பெரிய பையன் சர்வகலாசாலையிலேயே தங்கிப் படிக்கிறான் . வார விடுமுறையில் வீட்டிற்கு வந்து போகிறான் “அனு “ஒன்பதாம் வகுப்பு படிக்கிறாள் :வீட்டிலேயே இவர்கள் மூவரும் தான் அனு எப்போதும் தன் அறைக்குள் முடங்கிக் கொள்வாள் ,பாடசாலை ,வீடு வந்தால் தன் அறை ,சாப்பிடக் கூப்பிட்டால் வந்து ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவாள்,அந்த வேளைகளில் தந்தையுடன் ஜெர்மன் மொழியிலேயே உரையாடுவாள் .அனு எதுவும் புரியாமல் தவிப்பாள் ,.

நாட்கள் மாதங்களாக வீட்டிற்குள் சங்கடங்கள் அதிகரித்தது .வதனி எதிலாவது தன் விருப்பத்தை வெளியிட்டால் ,அனு சரியில்லை ,பொருந்தாது ,இதுதான் சரி என முடிப்பாள்.வதனியின் ரசனைகளும் தெரிவுகளும் பட்டிக்காட்டுத்தனம் என்பதுபோல் தந்தை யுடன் விவாதிப்பாள் . .வெளியே புறப்பட்டால் தான் வீட்டில் இருப்பதாகவும் ,இவர்களைப் போய் வரும்படியும் தவிர்ப்பாள் ,அனுவுக்கு துணையாக அவள் பேசிப்பழகி கலகலப்பாக இருக்கவேண்டும் என்பதற்காகவே வெளியே ஒன்றாகப் போய்வருவோம் என புறப்பட்டு ,மோகன் கழுதையை சுமந்த கதையாய் வதனியுடன் தனியே போவதா ? வீட்டிலேயே இருப்பதா என தடுமாறி நிற்பான்.இதனால் யாரும் வெளியே செல்லமுடியாமல் போகும் .அவர்களுக்குப் பிடித்த ஐரோப்பிய உணவுகள் வதனிக்கு செய்ய முடியவில்லை .வதனி சமைக்கும் உணவுகள் அவர்களுக்குப் பிடிப்பதில்லை,மோகனே அவர்களின் சாப்பாட்டை தயாரிக்க வேண்டும் ,இப்படி

சிக்கல்கள் முரண்பாடுகள் அடிக்கடி ஏற்பட்டது ,தந்தை தனித்து விட்டார் அவருக்கு ஓர் துணை அவசியம் என பிள்ளைகள் வற்புறுத்தி மறுமணம் செய்ய வைத்ததாய் மோகன் கூறினார்.ஆனால் நிலைமை வேறுவிதமாய் ,இருந்தது .ஓர்நாள் மோகனின் மனைவி சுதாவின் சேலை ஒன்றை மோகன் வதனிக்கு கொடுத்திருந்தான் .அதை வதனி உடுத்திருந்ததை கண்ட அனு வெறுப்புடன் என் அம்மாவின் சேலையை நீங்கள் எப்படி உடுக்கலாம்? .உங்களை யார்எடுக்கச் சொன்னதென படபடவென பொரிந்து தள்ளிவிட்டாள் .அந்த நொடி கலங்கிய வதனி மறுகணம் சுதாகரித்துக் கொண்டாள் .அவளுக்குதாயின் நினைவு, துன்பத்தை தரலாமென எண்ணி உடனே மாற்றி விட்டாள் .அனால் அது சேலையில் மட்டுமல்ல வீட்டுப் பாவனைப் பொருட்களை வதனி கையாண்டாலும் ,இது அம்மா ஆசையாக வாங்கியது , இதை தொடாதீர்கள் ,.,இது அம்மாவின் தெரிவு இதை மாற்றாதீர்கள் என எப்போதும் தடைபோடுவாள் .நாள்பட நாள்பட “அனு! வெறுப்பை காட்டுவது நன்கு புரிந்தது அவள் ஐரோப்பிய வாழ்வு வாழ்ந்தாலும் அவளால் முழுதாய் மேல் நாட்டுப் பெண்ணாய் மாற முடியவில்லை :தன் தாயின் இடத்தில் தந்தையுடன் இன்னொரு பெண்ணை வைக்க அவள் மனம் மறுத்து அடம் பிடிக்கிறது ;இது அவள் தவறுமல்ல ;அவள் வீட்டில் ஒரு வாழ்வும் வெளியில் ஒரு முகமுமாக அவதிப்படும் பெண்தானே ! அதனால்தால் அடிக்கடி முரண் படுகிறாள் தந்தையுடனும் வாயாடுகிறாள் :ஒருநாள் அனு கைத் தொலைபேசியில் அதிக நேரம் செலவிடுவதை கண்ட வதனி அனு !உங்களுக்கு இந்த வாரம் பரீட்சை இருக்கிறதல்லவா? படிக்கவில்லையா? எனக்கேட்டதிற்கு ; என் வேலை எனக்குத் தெரியும் :நீங்கள் உங்கள் வேலையைப் பாருங்கள் என எடுத்தெறிந்து பேசினாள் :இதைக் கேட்டுக் கொண்டிருந்த மோகன் மிகஉரத்த குரலில் அனுவைக் கண்டிக்க மகளும் தொடர்ந்து டொச்மொழியில் கத்த அன்று வீட்டில் பெரும் பிரச்சனையாகி விட்டது. அதிலிருந்து அனு தந்தையுடன் பேசுவதையும் தவிர்த்தாள் :

வதனி அனு வின் விடயங்களில் தலையிடப் பயந்தாள். ஆனால் நான் வந்ததே அவளை வழிநடத்தத் தானே எனவும் தன்னைத் தானே கேட்டுக்கொள்வாள் :இப்போதெல்லாம் அனுவுடன் பேசாமலே வீட்டு வேலைகளை கடமைகளை முடிப்பாள் .இந்த நேரங்களில் அவள் மனம் முன்னைய நாட்களில் எத்தனை பிள்ளைகளை வழிநடத்தி இருப்பேன் ;எத்தனை நிகழ்வுகளை வெற்றிகரமாய் முடித்திருப்பேன் ,எத்தனை பேர் என் சொல்லிற்கு கட்டுப்பட்டார்கள் ஒரு பொருள் விழுந்தால் எடுத்துத்தர எத்தனை பிள்ளைகள் காத்திருந்தார்கள் .இன்று ஒரு சின்னப் பெண் என்னை இப்படித் தூக்கி எறிகிறாளே மனம் மறுகும் .எல்லாவற்றையும் விட்டு விட்டு என்வீடு தேடி ஓடிவிடமுடியாத ? என மனம் அழும் ;ஆனால் அறிவு அடக்கிவிடும் :சகோதரி நல்ல வாழ்வு வாழ்வதாய் எண்ணி இருக்கும் குடும்மத்தினரை வேதனைப்பட வைக்கவண்டாம் ;என் தலை விதி இப்படி இருக்கிறது ;இதற்கு யாரை குறை சொல்லமுடியும் :மோகனுக்கும் குற்ற உணர்வாகவே இருந்தது ;ஓர் படித்த மரியாதைக்குரிய பெண்ணைக் கொண்டு வந்து அவள் முடக்கி துன்பப் படுத்தி விட்டேனோ ? என் பெண்ணுக்கு வழிகாட்டியாய் இருப்பாளென எண்ணி ஓர் ஆளுமை கொண்ட பெண்ணை அடிமையாக்கி விட்டேனோ ?என உள்ளுக்குள்வருந்தினான் :இப்படி மூவரும் மூன்றுவித மன உளைச்சலில் போராடினார்கள் ,

எல்லோரும் ஒரே வீட்டில் இருந்தாலும் ;தனித் தனி தீவுகளாகவே வாழ்ந்தார்கள்:;வதனிக்கு தொலைக்காட்சிமொழி புரியாது ;அயலவரோடு பேச முடியாது. தனிமை தனிமை. என் பெற்றோர் எனது இந்த நிலையை கனவாவது கண்டிருப்பார்களா ?என் கல்வி எல்லாம் ஊமை கண்ட கனகனவாகி விட்டதே என மறுகினாள். மோகனுக்கும் எதுவும் புரியவில்லை. ”இருதலைக்கொள்ளி எறும்பின்” நிலையில் அலைந்தான்

மகளுடனும் முரண்பட முடியவில்லை ;அனுவின் போக்கும் பிரச்சனையாகவே இருந்தது ;இறுக்கிப் பிடித்தால் எல்லாம் பிழைத்துவிடும் ;நிலைமை மாறவேண்டும் என அமைதியாகவே இருந்தான் :இன்று,வதனி கதவை தட்டிவிட்டுவரவில்லை என்ற ஒரே காரணத்திற்காய் அத்தனை பொருட்களையும் சிதறடித்து வதனியை அவமதித்து இருக்கிறாள் .அனு “ ,என்ன செய்வது? யாருக்காக? யாருடன் பேசுவது எதுவுமே புரியவில்லை. மோகனுக்கு தலையை பிடித்தவாறு அமர்ந்து இருந்தான். வதனியும் விம்மி விம்மி அழுதபடி அமர்ந்திருந்தாள். அனுவம் தவறெல்லாம் இவர்களுடயதே என்பதுபோல கதவை அடைத்து தனித்திருந்தாள்.கடவுளே இப்போ எல்லாம் தலைகீழாய் போய்விட்டதே ,வாதனை வருமுன் அனு அப்பா அப்பா என்று சுற்றிவருவாளே, இப்போ என்னுடனும் கோபப்படுகிறாளே, நான் அவசரப்பட்டுவிட்டேனோ?. ”பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காய் “என்பார்களே, அந்த நிலையில் அழகாய் அமைதியாய் இருக்கும் வீட்டுக்குள் முக்கோனப்போராட்டத்தில் புழுங்கியபடி மனங்கள்.

– 14-08-2015

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *