முகக் கோலம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 1, 2013
பார்வையிட்டோர்: 10,582 
 

“முகூர்த்தநாள் என்பதால் பஸ்ஸெல்லாம் ஒரே கூட்டமா வருது. என்னால பஸ்ல ஏறவே முடியல்ல, கொஞ்சம் வந்து அழைச்சுட்டுப் போயிடுங்களேன்” என்று செல்பேசியில் மனைவியின் முகம் அழைத்தது.

“தோ… வந்துட்டேன் ஒரு பத்து நிமிஷம் அங்கேயே இரு. நிற்க சிரமமா இருந்தா லாங்கு பஜாருக்கா நடந்து போய் வீட்டுக்கு ஏதாவது பழம் அல்லது கேக் வாங்கி வை.” என்று பதிலளித்த உடனே சட்டென்றுதான் புறப்பட்டேன்.

நான்கு திசைகளிலும் மக்கள் நடப்பதும் ஓடுவதுமாக உள்ள பரபரப்பான சிஎம்சி பேருந்து நிறுத்தத்திற்கு நான் வந்து சேர்ந்தபோது மனைவி ஆப்பிள் பழக் கவருடன் உம்மென்று முறைத்தபடி நின்றிருந்தாள். தேமே என்று காத்திருப்பைத் தாங்கிக் கொள்ள முடியாத கோபமும் எரிச்சலும் அவள் பார்வையில் தெரிந்தது.

“பஜாருக்கு போயிட்டு வந்தும் எவ்ளோ நேரம் நிக்குறது? உங்களல்லாம் நம்பினால் அவ்ளோதான், பேசாம ஆட்டோலயாவது வந்துடலாமான்னு பார்த்தேன்.” என்று முகம் சுளித்து சலித்துக் கொண்டாள். வாகனத்தை நோக்கி நடந்து வராமல் நின்ற இடத்திலேயே நின்று கொண்டிருந்தாள். உடன் நின்றுகொண்டிருந்த மற்ற இருவரும் மனைவியுடன் அலுவலகத்தில் ஒன்றாக பணிபுரியும் தோழிகள். இவர்களைத் தவிர பேருந்துக்கு காத்திருப்போர் கூட்டமும் அநியாயத்திற்கு அதிகமிருந்தது.

“டிராபிக்ல வரவேண்டாமா? இருபது நிமிடம்தானே ஆயிருக்கு ?”என்றேன் கம்மிய குரலில் அதே எரிச்சலுடன்.

நிலைமையின் தீவிரத்தைக் குறைக்க நினைத்த மனைவியின் தோழிகளில் ஒருத்தி, “என்னங்க சார் திடீர்னு பழம், கேக்குன்னு மட்டும் வாங்க சொல்லியிருக்கீங்க. பூ வாங்கலையா?” என்றாள் விஷமத்துடன்.

“அதை மட்டும் சாரே வாங்குவாருடி” என்றாள் இன்னொருத்தி.

புன்னகைக்கும் அவர்களின் அழகிய முகம் பார்த்ததும் எனக்குள்ளிருந்த அவஸ்தை குறைந்து நிம்மதி பரவியது. கலகலப்பாகத் தொடங்கிய அத்தோழிகளின் அபிநய முகங்களை ரசித்த நான், “வீட்ல விருந்தாளி மேடம்!. யாரோ இந்தம்மாவைத் தேடிக்கிட்டுத்தான் வந்திருக்காங்க” என்றேன் மனைவியின் மீளாத முகத்தைச் சுட்டிக்காட்டி.

“என்னைத் தேடிக்கிட்டா ? அது யாருங்க உங்களூக்குத் தெரியாமல் எனக்குத் தெரிஞ்சவங்க?” வியப்பு மனைவியின் முகத்திலும் குரலிலும் ஒலித்தது.

“அதெல்லாம் எனக்குத் தெரியலப்பா!. மணிமாலாவைப் பார்க்கணும்ணு, வந்தவர் உம்பேரைச் சொன்னார். கூப்பிட்டு உள்ள உட்கார வைச்சு கொஞ்ச நேரம் பேசிக்கிட்டிருந்தேன். உன் போன் வந்ததும் உடனே புறப்பட்டு வந்துட்டேன். அதுக்கே நீ உம்முனு மூஞ்சை தூக்கி வைச்சுகிட்டே, வீட்டுக்குப் போய் விலாவரியா அவரைப்பற்றி விசாரிச்சுக்கலாம் விடு.” என்றேன்.

“பசங்க வந்துட்டாங்களா” என்று கேட்ட மனைவியின் முகத்தில் திடீரென கட்டுக்கடங்காத கோபமும் படபடப்பும் தெரிந்தது.

“இன்னும் அவங்க இரண்டு பேரும் வரலை. டியூசன் ஏழுமணிக்குத்தானே முடியும்?” என்றேன் சாந்தமாக ஏதும் புரியாமல்.

“பாருங்க மேடம்! இப்படிக்கூடவா இந்தகாலத்துல ஓரு ஆம்புள்ள இருப்பாங்க!” என்று முகவாயில் கையை வைத்து பரதநாட்டிய பாவனையிலான கேள்வியை எள்ளும் கொள்ளும் வெடிக்கும் பார்வையுடன் மனைவி என்னை நோக்கி வீசினாள். மாலை நேரம் என்றாலும் வீசிய காற்றில் முகஉஷ்ணம் சற்று அதிகமாகவே இருந்தது.

மனைவியின் உதடுகளில் உதிர்ந்த கேள்வியை ஆச்சர்யத்துடன் கவனித்துக் கொண்டிருந்த தோழிகளில் ஒருத்தி , “அய்யோ! மணிமாலா மேடம், ஒங்க கதையை ஊருக்கே தண்டோரா போடப்போறீங்களா? கொஞ்சம் கம்முனு இருங்க” என்று மனைவியை சமாதானப்படுத்த முயன்றாள்.

“அட போங்க மேடம்….! இந்த கூறுகெட்ட மனுஷன், முன்பின் தெரியாத யாரோ ஒருத்தர வீட்டுல உட்கார வைச்சுட்டு வந்திருக்காரு. அவருக்குப் போயி நீங்க பரிஞ்சுகிட்டு பேசவேற வரீங்க?” என்று சாடிய முகத்தில் ஏளனம இருந்தது..

இந்த விஷயத்தில் தாங்கள் தலையிடுவது நன்றாக இருக்குமா என்ற தயக்கத்துடன் நின்ற மற்ற இருதோழிகளும், “என்னது!” என்று மனைவிக்காக ஓர் ஆச்சரியத்தையும் “அப்டீங்களா சார்?” என்று எனக்காக ஒரு பரிகாசப் பார்வையையும் பதிலாக்கி சட்டென மெளனம் காத்தனர்.

கேள்வியில் நூறுசதம் நியாயம் இருப்பதை நான் அந்தக் கணத்தில்தான் புரிந்து கொண்டேன். பதிலேதும் பேசமுற்படாமல் உதட்டை வெறுப்புடன் கடித்துக்கொண்டு நீண்ட பெருமூச்சை அசட்டுத்தனமாக வெளியேற்றினேன். என்முகம் ஒரு கணம் அவமானத்தினால் குன்றியது. யாரென்று விசாரிக்காமல் எப்படி அவரைத் தனியாக வீட்டில் விட்டுவிட்டு வந்தேன் என்று நினைத்துப் பார்த்தால் என் முட்டாள்தனத்தின் தீவிரம் புரிந்தது. அசாதாரணமாக நிகழ்ந்துவிட்ட இச்செயலால் என் மனதில் விழுந்த பயம் புற்றாக வளர ஆரம்பித்தது.

“ஏங்க, இந்தகாலத்துல இப்படி ஒரு அப்பாவியா இருக்கீங்க? கொஞ்சம் கூட யோசிக்கமாட்டீங்களா ? ஏந்தான் இப்படி என்னை சித்ரவதை பண்றீங்களோ!” மூக்கைச் சிந்திக்கொண்டே அடுத்தடுத்து வெளிவந்த தொடர்ச்சியான கேள்விகளில் மனைவியின் துக்கமும் இகழ்ச்சியும் மாறிமாறி காட்சியளித்தன.

“இரண்டு பேரும் பேசிக்கிட்டே நிக்காதீங்க. சீக்கிரமா புறப்பட்டுப் போய்ச் சேருங்க. இருபது நிமிஷத்துல ஒன்றும் நிகழ்ந்திருக்காது, பயப்படாம போங்க. வீட்டுக்குப் போய் போன் பண்ணு மணி” என்று தோழி ஒருத்தி எங்களை ஆறுதல்படுத்தி சம்யோசிதமாக துரிதப்படுத்தினாள்.

“பணம் ஏதும் வீட்ல இல்லை. நகையெல்லாம் லாக்கர்லதான் இருக்கு. அதனால அங்க பயப்படுறதுக்கு ஒன்றுமில்லை. ஆனால், இந்த மனுஷனுக்கு ஏந்தான் இப்படி புத்தி மங்கி போதோன்னுதான் கவலையா இருக்கு!” என்ற மனைவியின் கவலை உச்சம்தொட்டது.

“கெளம்புங்க” என்று என்னை நோக்கி அதிகாரத் தோரணையில் உத்தரவிட்டாள். நான்கைந்து முறை கிக்கரை உதைத்த பிறகுதான் என் வாகனம் கிளம்பியது. பின்னால் ஏறி உட்கார்ந்து கொண்ட மனைவி ,”வரேம்பா”என்று தோழிகளை நோக்கி கையசைத்தாள்.

“ஆத்திரத்துல கன்னா பின்னாண்ணு ஓட்டாதீங்க, ரோட்டைப் பார்த்து ஒழுங்கா வண்டியை ஓட்டுங்க” என்று கடுமையைக் குறைத்துக்கொள்ளாத குரல் என்னை எச்சரித்தது.

கடவுளே, வீட்டுக்கு வந்த அந்த கந்தசாமி திருடனாயிருக்கக் கூடாது என்று சகல தெய்வங்களையும் வேண்டிக்கொண்டு நான் இருசக்கர வாகனத்தை நகர்த்தினேன். மனைவியின் முகம் தெரியாதவாறு இரண்டு கண்ணாடிகளையும் சரி செய்தேன். வந்த பாதையிலேயே என்னுடைய வகனம் ஓட ஆரம்பித்தது. உட்கார்ந்திருந்த மனைவிக்கு பயத்தினால் நெஞ்சு உலர்ந்து போயிருக்க வேண்டும். வழக்கத்திற்கு மாறாக அவள் மெளனமாக என்னுடன் பயணம் செய்தது கவனமாக வாகனத்தை ஓட்ட உதவியது..

காயம்பட்ட என் மனம் இருசக்கர வாகனத்தை செலுத்திக் கொண்டே மாலையில் வீட்டுக்கு வந்த அந்த அறிமுகமில்லாத விருந்தாளியின் முகத்தை நினைவுபடுத்திக்கொண்டு நிகழ்ச்சிகளை அசைபோட்டது.

‘இருபது சித்தர் பாடல்கள்’ என்ற புத்தகத்தை சாய்வு நாற்காலியில் சாய்ந்து மாலையில் நான் படித்துக் கொண்டிருந்த போதுதான் டிவிங்…டிவிங்…என்று இடைவிடாமல் வீட்டு வாசலில் அழைப்புமணியை அந்த கந்தசாமி ஒலித்தான்.

கூடிய பொய்களைச் சொல்லாதே பொல்லாக்/ கொலை களவுகள் செய்யாதே / ஆடிய பாம்பை யடியா தேயிது / அறிவுதானடி வாலைப்பெண்ணே! என்று நான் ஆழ்ந்து படித்துக்கொண்டிருந்த வாலைக் கும்மி வரிகள் இடம்பெற்றிருந்த பக்கத்தில் ஓர் அடையாள அட்டையை சொருகி புத்தகத்தை மூடிவிட்டு அழைப்பது யாராக இருக்கும் என்ற கேள்வியுடன் மெல்ல எழுந்துபோய் வாயிற்கதவைத் திறந்தேன்.

முன்பின் அறிமுகமில்லாத அந்த கந்தசாமி, வீட்டுக் கதவைத் திறந்து வெளிப்பட்ட என் கண்களை நேருக்கு நேராகச் சந்தித்து, “சார், நான் மணிமாலா மேடத்தைப் பார்க்கனும்” என்றான். சித்தர் பாடல்களில் இலயித்திருந்த எனக்கு, யார் நீங்க? என்ன விஷயமாக அவங்களைப் பார்க்க வந்தீங்க என்ற முக்கியமான கேள்வியை அவரிடம் கேட்கத் தோன்றவில்லை.

“மேடம் வருகின்ற நேரந்தான். உள்ள வந்து உட்காருங்க சார்.” மரியாதை நிமித்தமாக அவரை வீட்டுக்குள் அழைத்தேன். மறுப்பேதும் சொல்லாமல் கந்தசாமி என் பின்னாலேயே வீட்டிற்குள் வந்து உட்கார்ந்து கொண்டான்..

கண் இமைக்கும் கால அளவேயான நேரத்தில் வரவேற்பு மேசையை கண்களால் மேய்ந்த அவன், “படிச்சிட்டு இருந்தீங்க போல” என்று பேச்சை துவக்கிவிட்டான்.

“ஆமாங்க சார்! சித்தர் பாடல்கள்” என்றேன்.

“புத்தகம் பாக்குறதுக்கு ரொம்ப பழைய பதிப்பா தெரியுதே! எந்த வருஷம் வெளியானது?” என்றான். அவனுடைய முகத்தில் ஆர்வமின்னல் சட்டெனெ தோன்றி மறைந்தது.

“ஆர்ஜி. பதி கம்பெனி, சென்னைல 1968லயே வெளியிட்டிருக்காங்க சார்” புத்தகத்தின் ஏடுகளை புரட்டிப் பார்த்துச் சொன்னேன்.

“அரிய புத்தகமாச்சே! . உங்களுக்கு எப்படி கிடைச்சது?” அவனுடைய குரலில் வியப்பு தெரிந்தது.

“திருவண்ணாமலையைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி என்ற ஆசிரிய நண்பரிடம் இரவல் வாங்கிட்டு வந்திருக்கேன் சார். படிச்சிட்டு கொடுத்துடுவேன்.” என்றேன்.

“புத்தகம் வாசிப்பது சிறந்த பழக்கம். அதைவிடச் சிறந்தப் பழக்கம் வாங்கிய புத்தகத்தை திருப்பிக் கொடுப்பது” என்று பஞ்ச் டயலாக் சொன்ன அவன் நாகரிகமாகச் சிரித்தான்.

“சித்தர்களிடத்தில் உங்களுக்கு ஆர்வமா அல்லது அரிய புத்தகமென்பதற்காக படிக்கிறீர்களா?” என்று அடுத்த கேள்வியை அவன் தொடர்ந்தான். அவனுடைய கேள்விகள் கவனிப்பாரற்றுக் கிடந்த என் உணர்வுகளை விரல் பிடித்து அவனுக்கருகில் அழைப்பது போல இருந்தது..

“இரண்டும் தான் சார்! ஆனால் ஒரு மாசமா திரும்ப திரும்ப படிக்கிறேன், ஒரு சித்தரையும் முழுசா புரிஞ்சிக்க முடியலைங்க சார்” என்றேன்.

“பேராசைங்க சார் ஒங்களுக்கு! முற்றிலும் துறந்து பிரபஞ்ச ரகசியத்தை ஆராய்ந்து அறிந்தவர்கள் சித்தர்கள். அவர்களுடைய இரகசியத்தை ஒரு மாதத்திற்குள் புரிஞ்சிக்க முடியலையேன்னு வருத்தப்படுவது நியாயமா சார்?” என்று கேட்டுவிட்டு அவன் மேலும் தொடர்ந்தான்.

“மனத்துக்கண் மாசு இலன் ஆதல் என்பதுதான் சார் சித்தர்களின் தத்துவம். உண்மையும் பரிபூரணமும் நம்பிக்கைக்கு துணையாக நின்றால்தான் ஒவ்வொரு தத்துவமாக நமக்கு புரிய ஆரம்பிக்கும். சித்தத்தை கட்டுப்படுத்தி இயற்கையை உணர்வதுதான் பக்தி. அந்த பக்தி வெறும் முரட்டுத்தனமானதாக போயிடக்கூடாது. மாறாக ஏழை மக்களுக்கு பசிதீர்க்க உதவுவதாக இருக்கவேண்டும் என்பதுதான் சித்தர்களின் வாழ்வு நமக்கு உணர்த்தும் பாடம். இந்த சிம்பிள் லாஜிக்கைத்தான் பாம்பாட்டியார், பட்டினத்தார், குதம்பையார், சிவவாக்கியார் பாடல்களெல்லாம் நமக்கு வலியுறுத்துகின்றன” என்று என் ஆதங்கத்தினை சுருக்கமாக ஆற்றுப்படுத்தினான்.

இப்பொழுது நினைத்துப் பார்த்தாலும் கம்பீரமான அவன் முகம் குணாம்சமுள்ள ஒரு கனவானின் முகமாகவே எனக்கு காட்சியளிக்கிறது. நினைவில் நின்ற அவனது பார்வை நல்லவிதமாக ஏற்றுக்கொள்ளக் கூடிய யோக்யவானாகவே அவனைக் காட்டியது. என்னுடைய வாகனம் வீட்டிற்கு அருகில் சமீபித்தபோது, நிச்சயம் அவன் ஓர் திருடனாக இருக்க முடியாது என்ற நம்பிக்கை என் மனதிற்குள் வந்து விட்டிருந்தது.

வேகமாய் வீட்டிற்கருகில் வந்து பைக்கை காம்பவுண்டு சுவரோரமாக நிறுத்தினேன். இருவரும் அவசர அவசரமாய் படிகளில் ஏறி வீட்டுக்குள் நுழைந்தோம். அங்கே அவன் இன்னமும் உட்கார்ந்து அமைதி தவழும் முகத்துடன் சித்தர் பாடல்களைப் படித்துக் கொண்டிருந்தான். பின்னாலேயே வந்து கொண்டிருந்த மனைவியை பார்த்து நான் வெற்றியாக புன்னகைத்தேன்.

அவரை நோக்கி, “சாரிங்க சார் கொஞ்சம் லேட்டாயிடுச்சி” என்றேன் கந்தசாமியைப் பார்த்து. அவன் ஏதோ சொல்ல வாயெடுத்த நொடியில் முந்திக்கொண்ட என் மனைவி “சார் யாருன்னு தெரியலைங்களே” என்று கேட்டுக்கொண்டே தன்னுடைய கூந்தலை அவிழ்த்து தொங்க விட்டாள். கூந்தலும் அவளுடைய கண்களும் பார்ப்பதற்கு பத்ரகாளி ஓவியம் போல என்னையே பயமுறுத்தியது. ஆனால் அந்தக் கந்தசாமி எதற்கும் பயப்படாமல் மனைவியை நோக்கி பேச ஆரம்பித்தான்.

“மேடம் சிறுகதைப் போட்டிக்காக நீங்க எழுதிய சிறுகதைக்கு முதல் பரிசு கிடைச்சிருக்கு. நான் கணையாழி பத்திரிகைல இருந்து உங்ககிட்ட ஒரு பேட்டி எடுக்கலாம்ணு வந்துள்ளேன்” என்றான்.

“அய்யோ, அது நானில்லைங்க சார்! எங்க சார்தான் புனைப்பெயர்ல கதை எழுத ஆரம்பிச்சுருக்கார்” என்று தன் இயல்பான முகத்துடன் மனைவி என்னைச் சுட்டிக்காட்டினாள். இனம்புரியாத மகிழ்ச்சி அவள் முகத்தை சிவக்கச் செய்திருந்தது. நுட்பம் புரிந்த எனக்கு வீடு ஆளரவமற்று தனித்திருப்பதாகத் தோன்றியது.

– நவம்பர் 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *