மீண்டும் மருமகள்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 23, 2013
பார்வையிட்டோர்: 10,967 
 

மாடியில் பாட்டு சத்தம் கேட்டு கொண்டிருந்தது. என்ன இவர்கள் இன்னும் கீழே வரவில்லை என யோசித்த சுமதி காபியை எடுத்துக்கொண்டு மாடிக்கு சென்றாள். சுமதியின் ஒரே மகன் விஜய்க்கு திருமணமாகி இருபது நாட்கள்தான் ஆகிறது.

சுமதி மருமகள் தீபாவை பாசத்துடன் கவனித்துக்கொண்டாள்.
கதவை தட்ட நினைத்த சுமதி , தன்னை பற்றி பேச்சு அடிபடவே, நின்று காது கொடுத்து கேட்டாள்.

” இத பாருங்க.. ஆபிசுக்கும் போயிட்டு சமைச்சி வைச்சிட்டு போனா .. உங்கம்மா இருக்காளே கிழவி நேத்து சாம்பார்ல உப்பு இல்ல.. உறைப்பு இல்லன்னுது. எனக்கு கோவமா வருது. என்னை குறை சொல்லாம அனுசரிச்சி போனா இங்க இருப்பேன் இல்லைன்னா தனிக்குடித்தனம்தான்.”

” செல்லம்.. பெரியவங்கன்னா அப்படிதான் இருப்பாங்க.. கோவிச்சுக்காத, என்னை இவ்வளவு தூரம் படிக்க வைச்சவங்களை விட்டுட்டு எங்க போறது..? உனக்குதான் நான் இருக்கேனே டியர்…” கொஞ்சினான் விஜய்.

” ஆமா.. கொஞ்சல் எல்லாம் வேணாம் .. உங்கப்பா உங்க பாட்டியை கிராமத்திலேயே விட்டுடலை? நாம மட்டும் என்ன ப்ரீயா இருக்க கூடாதா?

மேற்கொண்டு கேட்க பிடிக்காமல் சுமதி கீழே இறங்கி விட்டாள்.
அன்று இரவு சுமதிக்கு தூக்கமே வரவில்லை. நாம் செல்லமாய் வளர்த்த ஓரே பையன் நம்முடன் இருக்க வேண்டும் என்று பார்த்து பார்த்து மருமகளை தேர்ந்தெடுத்தாள். .. வந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை கிழவி என்று ஓரம் கட்ட நினைக்கிறாளே அவள்?

” என்ன சுமதி தூக்கம் வரலையா? பரிதாபமாய் கேட்டார், அவளது கணவர் சீனிவாசன். பதில் பேசாமல் திரும்பி படுத்துக்கொண்டாள்.
காலையில் சீனிவாசனுக்கு டிபன் எடுத்து வைத்த சுமதி, ” என்னங்க நீங்க குளிச்சிட்டிருந்தப்ப அத்தை போன் பண்ணியிருந்தாங்க.. நாலு நாளா ஆஸ்துமா அதிகமாயிடுச்சாம். வேலைக்காரி வேற வரலையாம். பாவம் நாம போய் அத்தையை கூட்டிட்டு வந்திடலாமா??” என்றவளை ஆச்சரியமாய் பார்த்தார் சீனிவாசன்.

சுமதியா இது..? இரண்டு மாதங்களுக்கு முன் வரை அம்மாவிடமிருந்து போன் வந்தால் கத்துவாள். ” சும்மா உங்க புள்ளைய சென்னைக்கும் , கிராமத்துக்கும் அலைய விடாதீங்க.. அதான் மாசமானா சம்பளம் தந்து வேலைக்காரி வைச்சிருக்கோம்ல, அவளை கூட்டிகிட்டு ஆஸ்பத்திரிக்கு போய்ட்டு வாங்க எல்லாம் சரியாயிடும்.” என்பாளே இந்த வெறுப்பை தாங்க முடியாமல்தானே அம்மா கிராமத்திற்கே போய்விட்டாள். இப்பவாவது அவளை அழைக்க புத்தி வந்ததே.. என்று நினைத்த சீனிவாசன் மனதிற்குள் தீபாவிற்கு நன்றி கூறினார்.

பின்னே.. ” மாமா அத்தை எனக்கு நல்ல மாமியாரா பாசத்தை பொழியறாங்க, அவ்ங்களை போய் நான் எப்படி திட்டுவது ? என்னால் முடியாது என்று மறுத்தவளை, சுமதி உனக்கு நல்ல மாமியாரா நடந்துக்கிறா.. ஆனா எங்கம்மாவிற்கு நல்ல மருமகளா நடந்துக்கலையே..? அம்மாவோட இந்த தள்ளாத வயசுல கூட நான் அவங்களை நான் கவனிச்சுக்கலைன்னா வேறு பாவமே வேண்டாம்மா என கெஞ்சியதால் அல்லவா தீபா அப்படி நடித்தாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *