மிஸ்டர் டெய்லர் அன்ட் மிஸஸ் குமார்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 1, 2016
பார்வையிட்டோர்: 8,028 
 

பங்குனிமாதக் குளிர் காற்று காதைத்துளைத்துக் கொண்டு உடலின் இரத்தத் துணிக்கைகளை உறைய வைத்து விட்ட உணர்ச்சி. திருமதி குமார் தனது கம்பளிக் கையுறைகளை போட்டுக்கொண்டாள்.கம்பளி மவ்ளரால் காதை மறைத்துச் சுற்றிக் கொண்டாள்.கால்களுக்குக் கம்பளிக் காலுறைகளைப் போட்டுக்கொண்டாள்.

தள்ளுவண்டியில் அமர்ந்து, தன் பாட்டியைப் பார்த்துக்கொண்டிருந்தாள் திருமதி குமாரின் பேத்தியான அனுஷா. மூன்று வயதான அனுஷாவின் பட்டுக்கன்னங்கள் குளிரில்ச் சிவந்துபோய், யாழ்ப்பாணத்துக் கறுத்தக்கொழும்பான் மாம்பழத்தை நினைவுறுத்தியது.

முதலாவது தலைமுறைப் பாட்டி மூன்றாவது தலைமுறைப் பேத்தியைத் தள்ளுவண்டியில் வைத்துக் கொண்டு, வீட்டை விட்டு வெளியே இறங்கி வண்டியைத் தள்ளிக்கொண்டு நடந்தாள்.

திருமதி குமார் லண்டனுக்கு வந்து இதுதான் முதலாவது வருடம். இலங்கைத் தமிழர்களுக்கு அரசால் எந்த விதமான மனித உரிமைகளும் மறுக்கப் பட்டபோது,தமிழர்கள் ஒவ்வொருத்தராகவும், சிலர் குடும்பங்களாகவும்,உலகத்திலுள்ள எழுபத்தியேழு நாடுகளுக்கு அகதிகளாகத் தஞ்சம் கேட்டுப் போனபோது,தான் பிறந்த தாய் மண்ணைவிட்டு நகரமாட்டேன் எனற திருமதி குமாரின் பிடிவாதம், போன வருடம்வரையும் நின்று பிடித்தது.

திருமதி குமார் குழந்தையைக் கவனமாகத் தள்ளிக்கொண்டு வீதியில் நடந்தாள். இந்த நேரம்,லண்டன் தெருவெல்லாம் பல தரப்பட்ட இன,மத,மொழிபேசும் தாய்கள் பாடசாலைக்கு,நேர்சரிக்குக் கொண்டுபோகும் தங்களின் சிறார்களுடன் தெருவை நிறைத்திருப்பார்கள்.

‘ஹலோ ஆன்டி,’தூரத்தில் திருமதி நடராஜா வந்து கொண்டிருந்தாள்.திருமதி நடராஜாவுக்கு முப்பந்தைந்து வயதிருக்கும். இப்போது அவள் வண்டியிற் தள்ளிக் கொண்டுவரும் குழந்தைதான் அவளின் முதற்குழந்தை.

‘என்ன செய்ய, எங்கட தகுதிக்கு மாப்பிள்ள வர்ற வரைக்கும் கலயாணத்திற்குக் காத்திருக்கத்தானே வேணும்?’

திருமதி செல்வமணி செந்தில்குமார்,கமலா நடராஜனிடம் அவளைப் பற்றி எதும் கேட்கமுதலே கமலா தானாக, ஒருநாள் ஒரு பெருமூச்சுடன திருமதி குமாருக்குச் சொன்னாள்.

செல்வமணி, ஒருகாலத்தில்,அவள் இளமையின் மொட்டாகப் பதினாறுவயதாகவிருக்கும்போது,தனக்குத் ‘தகுதியற்ற’ அழகிய வாலிபன் செந்தில் குமாரிற் காதல் வயப்பட்டாள். அதெல்லாம் ஐம்பது வருடங்களைத் தாண்டிய சரித்திரங்கள்.

‘இவளுக்குச் சரியான சுகமில்லை பாருங்கோ, இந்த இளவு பிடிச்ச குளிர்ல யார்தான் சுகமாக இருக்கமுடியும்?’

கமலா நடராஜன் வானத்தைப் பார்த்துத் திட்டிக்கொண்டு வந்தாள்.

திருமதி குமார் தனது மவ்ளரைச் சரி செய்து கொண்டாள்.’என்ன செய்ய?, அநியாயம் பிடிச்ச சிங்களவரால எங்கட தலைவிதி இப்படியாய்ப் போச்சு’ கமலா தன்பாட்டுக்குச் சொல்லிக் கொண்டுவந்தாள்.

கமலா தனது மகளை நேர்சரியில் கொண்டுபோய்ச் சேர்த்துவிட்டு வேலைக்குப் போவாள். பகல் பன்னிரண்டு மணிக்கு நேர்சரி முடிந்ததும், அவளின் சினேகிதி தனது பிள்ளையுடன்,கமலாவின் குழந்தையையும் சேர்த்துக் கூட்டிக்கொண்டுபோய் கமலா வேலையால் திரும்பும்வரை வீட்டில் வைத்திருப்பாள்.

‘ஹலோ கமலா,ஹலோ மிஸஸ் குமார்’ மிஸஸ் பார்னட் இவர்களுடன் வந்து சேர்ந்தாள்.அவள் தள்ளிக் கொண்ட வந்த இரட்டைத் தள்ளுவண்டியில் அவளின் இரட்டைக் குழந்தைகள் இரண்டும் ஒன்றையொன்று சீண்டிக்கொண்டிருந்தன.

நேர்ஸரி வந்து விட்டது.’ரெயின்போ’ நேர்ஸரி அழகான வர்ண வேலைப்பாடுகளுள்ள வாசலைக்கொண்டது.குழந்தைகளுக்குப் பிடித்த அழகிய வர்ணங்களில் மிருகங்கள், பறவைகள்,மலர்கள்,வாவிகள்,மனிதர்கள், குழந்தைகள் போன்றவை சித்திரங்களாகத் தீட்டப்பட்டிருந்தன.

வாசலையண்டியதும்,திருமதி குமாரின் கண்கள் வழக்கம்போல் அந்த நேர்சரி வாசலைத் திரம்பிப் பார்த்ததன.ஏமாற்றம் அவள் கண்களில் நிழலாடியது.

ஓருநாளும் நேரம் தவறாத மிஸ்டர் டெய்லர் இன்னும் வரவில்லை.ஆங்கில மனிதர்களில் மிகக் கண்டிப்பான பழக்கவழக்கங்களிலொன்று குறிப்பிட்ட நேரம் தவறாமை. அது திருமதி குமாருக்குத் தெரியும்,அவள் யாழ்ப்பாணத்தில் பிரபல கல்லுர்ரியொன்றில் ஆங்கில ஆசிரியையாகவிருந்து ஓய்வு பெற்றவள்.

நேர்சரி ஆசிரியை மிஸஸ் வால்ட்ர்ஸ் மிகவும் கொழுத்துப்போன தன் உடலை அசைத்தபடி வெளியேவந்து,குழந்தைகளுடன் வந்திருக்கும், தாய்தகப்பன்மார், பாட்டி பாட்டன்கள், அல்லது பணக்கார வீடுகளில் குழந்தைகளைப் பார்க்கும் ஆயாக்கள் எல்லோருக்கும் ‘குட்மோர்ணிங்’ சொல்லிக்கொண்டிருந்தாள்.

கமலா நடராஜன்,குழந்தையை நேர்சரியில் சேர்த்த அடுத்த நிமிடங்களில,வேலைக்குப் போவதற்காகப் பக்கத்திலிருக்கும் பாதாள ரெயின் எடுக்க வேண்டிய அவசரத்தில் விரைந்து கொண்டிருந்தாள்.

திருமதி குமார் நேர்சரிக்குள் நுழையும் பேத்திக்கு,’பை பை’ சொல்லி விட்டு வீடுசெல்லத் திரும்பினாள்.லண்டன் தெருக்கள,; காலை ஏழேமுக்கால் மணியிலிருந்து ஒரு மணித்தியாலத்திற்குப் பாடசாலைக்குச் செல்லும் மாணவர் பட்டாளத்தால் நிரம்பி வழியும்,அத்துடன் ஆபிசுக்குப்போகும் ஆண்கள் பெண்களும் நிறைந்திருப்பார்கள். அதன்பின் ஒன்பது மணிக்குப்பின், இரண்டு வயதிலிருந்து ஐந்து வயதுவரைக்குமுள்ள இளம் சிறார்களை நேர்சரிகளில் கொண்டுவிடுபவர்களால் அல்லோலகல்லோலப்படும். குழந்தைகளைக் கொண்டுவரும்,தள்ளுவண்டிகள் தெரு எங்கும் நிரம்பிவழியும்..

திருமதி குமார்,நேர்சரி வாசலைத்தாண்டியதும்,அந்தக்கார் கிறீச் என்ற சத்தத்துடன் சட்டென்று நின்றது.

‘மோர்ணிங்..மோர்ணிங் மிஸஸ் குமார்’ மிஸ்டர் டெய்லர்,மூச்சிழைக்க அவசரமாகக் காரால் இறங்கினார்; காரின் பின் சீட்டில் பாதுகாப்பாகக் கட்டி வைத்திருக்கும்,அவருடைய மூன்று வயதுப்பேரன்,’குட்மேர்ணிங் மிஸஸ் குமார்’ என்று அழகிய மழலையில் காலைவணக்கம் சொன்னது.

ஓருசில நிமிடங்களுக்குமுன், திருமதி குமாரின் மனதில் ஏற்பட்ட ஏமாற்றம்,சட்டென மறைந்து அவள் முகம் மலர்ந்தது. ‘குட்மோர்ணிங் மிஸ்டர் டெய்லர்’ வழக்கமன காலை வணக்கத்தைப் பரிமாறிக்கொண்டாள்.

‘ உனது குரல் இனிமையானது’என்று ஒருநாள் மிஸ்hரர் டெய்லர் அவளுக்குச் சொன்னபோது அவளது அறுபத்தியாறு வயதையும் தாண்டி அவள் முகம் வெட்கத்தால் சிவந்து விட்டது.

அவரின் வருகையைக் காணாமல் ஏமாந்த அவளின் முகபாவத்தை அவள் மறைத்துக்கொள்ளவில்லை.

‘எனக்குக் கொஞ்சம் சுகமில்லை,அதுதான் லேட்டாகிவிட்டது.’ இவள் கேட்கமுதலே அவர் லேட்டாக வந்ததற்கு விளக்கம் சொன்னார்.

தன் உடம்பைத் தேவையில்லாமல்,கெடுத்துக்கொண்டதற்காகத் தன்னைத் தானே சிலவேளைகளில் அவர் நொந்துகொள்வார்.இளம் வயதில்,அவர் ஒரு’பார்’ மனேஜராக இருந்த காலத்தில் நிறையக் குடிப்பாராம்.அளவுக்கு மீறி புகை பிடிப்பாராம். இப்போது அதன் பிரதிபலிப்புத் தெரிகிறது.

அவர் அவசரமாகத்தன் பேரனைக்கொணடு போய் நேர்சரியிற் சேர்த்தார். நேர்சரிப் பொறுப்பாளர்,மிஸஸ் வால்ட்டர்ஸ் மிஸ்டர்; டெய்லரில் மிகவும் மதிப்பு வைத்திருக்கிறாள்.அவர் பல்லாண்டுகளாக இந்த நேர்சரியின் வளர்ச்சிக்குப் பாடுபடுகிறார்.

அவர் அடிக்கடி, நேர்சரிக்காகப் பழைய உடுப்புக்கள், பழைய விளையாட்டுச் சாமான்கள்,மலர்ச் செடி கொடிகள். பலதரப்பட்ட சாமான்களைச் சேர்த்து மலிவு விற்பனை செய்து பணம் சேர்த்துக் கொடுப்பார். அப்படி ஒரு விற்பனை நாளிற்தான் திருமதி குமாருடன்; மிஸ்டர் டெய்லர் முதற்தரம் பேசினார்.

இந்திய உபகண்டத்தைச் சோர்ந்தவர்களைக் கண்டால், அதிலும் வயது போன ஆசியர்களைக் கண்டால்,தெரியாத மாதிரி முகத்தைத் திருப்பும் அல்லது அலட்சியம் செய்யும் ஒரு சில வெள்ளையர்கள்களால் மனத்துன்பப் பட்டவள் திருமதி குமார். வாழ்க்கையின் கடைசிக் காலத்தில், நாட்டைவிட்டு ஓடிவந்து இப்படியா அவமானப்படவேண்டும் என்று பெருமூச்சு விடுவாள்.

லண்டனுக்கு வந்து சொற்ப நாட்களில்,அன்று ஒருநாள், நேர்சரியில் நடக்கும் மிஸ்டர் டெய்லரின் மலிவு விற்பனைக்கு வந்திருந்தாள். ஆசிரியையாக இருந்த அனுபவம், எதையும் ஆராயும், தெரிந்து கொள்ளவேண்டும் என்ற மனப் பான்மையை அவளுக்குக் கொடுத்திருந்தது.

‘ஹலோ’,பழைய சாமான்களை விற்றுக் கொண்டிருந்த மிஸ்டர் டெய்லர், வழக்கம்போல் வாடிக்கையாளர்களை வரவேற்பதுபோல் அவளையும் வரவேற்றார்.

‘என்ன, எங்கள் நேர்சரிக்கு உங்கள் பேரப் பிள்ளையைச் சேர்த்திருக்கிறீர்களா?’

திருமதி குமார் ஆமாம் என்பதற்கு அடையாளமாத் தலையாட்டிக் கொண்டாள்.

‘நான் இந்த நேர்சரியுடன் கடந்த பத்து வருடமாகத் தொடர்பாக இருக்கிறேன்..எனது மகளின் மூத்த பையன் தொடக்கம் அவளின் மூன்று குழந்தைகளும் இந்தப் பாடசாலையிற் படிப்பைத் தொடங்கினார்கள். இப்போது,நான்காவது,கடைசிப் பையன் நேர்சரியிலிருக்கிறான’ அவர் தன்னைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போனார்.

அவள் மௌனமாகக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

‘பைத வேய்..எனது பெயர் மைக்கல் டெய்லர்’.அவர் தன்னை அவளுக்கு அறிமுகம் செய்து கொண்டார்.

‘ஹலோ மிஸ்டர் டெய்லர் எனது பெயர் செல்வமணி செந்தில் குமார்’அவள் தன்னை அறிமுகம் செய்துகொண்டாள்.

இவளது நீண்டபெயர்,அவருக்குத் தர்மசங்கடத்தையுண்டாக்கியிருப்பது அவரின் முகத்திற் தெரிந்தது. பெரும்பாலான ஆங்கிலேயர்கள்,இந்திய,இலங்கையர்களின் பெயர்களைச் சரியாக உச்சரிக்கத் தெரியாமல்,திண்டாடுவதை அவள் அறிவாள்.

‘நீங்கள் மிஸஸ் குமார் என்று சொல்லாம்’ என்று அவள் சொல்ல அவர் நிம்மதியுடன் சிரித்தார்.

அதன் பிறகு,இரண்டு கிழமைக்குப் பின் அவள் தனது பேத்தியை நேர்சரியிற் சேர்த்துவிட்டுத் தெருவில் இறங்கியபோது சட்டென்ற தொடங்கிய மழையில் தெப்பமாக நனைந்து விட்டாள்.

அப்போது நேர்சரியாற் திரும்பிக் கொண்டிருந்த, மிஸ்டர் டெய்லர்,’ உனக்கு ஆடசேபணையில்லையென்றால் எனது காரில் வரலாம்’ அவர் தனது கார்கதவைத் திறந்து விட்டார்.அவள் பதினாறு வயதுப்பெண்போலத் தயங்கினாள்.

அவருக்குச் சிரிப்பு வந்திருக்க வேண்டும.;

‘நான் கடத்திக் கொண்டுபோக மாட்டேன்’ அவர் பெரிதாகச் சிரித்தார். அவள் தயக்கத்துடன் ஏறிக் கொண்டாள்.

அதன்பின்,அவர் நேர்சரிக்குப் பக்கத்திலுள்ள காப்பிக் கடைக்குக் காப்பி சாப்பிடக் கூப்பிட்டபோதும் அப்படியே தயங்கினபள்.

அங்குபோனதும் மிஸ்டர் டெய்லருக்குப் பல வயதுபோன ‘சினேகிதிகள்’இருப்பது தெரிந்தது. வயது போன பலர் காப்பி காப்பிச் சேருமிடமது. அங்கிருந்த பலருக்கு அவரைத் தெரிந்திருந்தது.

எழுபது வயதாகும் அவர்,தனது மனைவி பத்து வருடங்களுக்கு முன் இறந்து விட்டதாகச் சொன்னார். அதன்பின்,மகன் மகளுடன் தனது இறுதிக் காலத்தைச் செலவழிப்பதாகக் கூறினார்.

அவள் தன்னைப் பற்றியதிகம் சொல்லவில்லை. அவள் தனது நாற்பது வயதில் திருமணம் செய்து, திருமணமாகி நான்கு வருடங்களிலேயே, சிங்கள இராணுவத்தின் கொடுமையால், விதவையான துயரைச் சொல்ல முயன்றால் அழுது கதறி விடுவாளோ என்ற பயம் அவளுக்கு. தானும் ஒரு விதவை, ஒரே ஒரு மகள், அவள் குழந்தைதான் அனுஷா என்று மட்டும் சொல்லி வைத்தாள்.

‘எங்காயாவது போய்க் கொஞ்சம் நல்ல காற்றை உள்வாங்கினால் நன்றாக இருக்குமென்று நினைக்கின்றேன்’ அவர் இருமியபடி சொன்னார். அவருக்கு மூச்சுவாங்கிக் கொண்டிருந்தது.

அவள் அவரின் காரின் பின் சீட்டில் ஏறியுட்கார்ந்தாள்.’எங்கேயாவது ஒரு பார்க்குக்குப் போவோமா?’ அவர் அப்படிச் சொன்னதை அவள் எதிர்பார்க்கவில்லை. வழக்கமான,முதியோர் காப்பிக்கடைக்குப் போவதுதான் அவள் சிந்தனையிலிருந்தது.

பார்க்குக்கு அவருடன்’சோடியாகப்’ போவதை அவள் எதிர்பார்க்கவில்லை.

‘ஹாம்ஸ்ரட்ஹீத் பாhக் இங்கிருந்து பத்து நிமிட தொலைவிலிருக்கிறது. லண்டனிலேயே உயரமான இடமென்றபடியால் நல்ல காற்ற வீசும்’அவருக்கு மூச்சு வாங்கியது. அவர் குரலில்,’தயவு செய்து என்னோடு வருவாயா’என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

மதியம் பன்னிரண்டு மணிக்கு, நேர்சரிக்கு வந்து அனுஷாவை எடுக்கவேண்டும். இப்போது பத்து மணி. பார்க்குக்குப் போகவும் வரவும் இருபது நிமிடம்தானெடுக்கும்;, அங்கு களைப்பாறிக் காற்று வாங்க ஒரு மணித்தியாலம் எடுத்தாலும்,நேரத்துக்கு நேர்சரிக்கு வந்து விடலாம்.

அவள் மறுமொழி சொல்லவில்லை.கார் அவள் வீட்டைத் தாண்டிப் போய்க்கொண்டிருந்தது.அவள் விரும்பியிருந்தால் காரை நிறுத்தச் சொல்லி இறங்கிப் போயிருக்கலாம்.அவள் பார்க்குக்கு வரமாட்டேன் என்னை இறக்கி விடு என்று சொல்லவில்லை.

கார் பார்க்கை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது.

அவர் கார்க் கண்ணாடியில் அவளைப் பார்த்து புன்முறுவல் செய்வது அவளுக்குத் தர்மசங்கடமாகவிருந்தது.

‘நாங்கள் வயது வந்த மனிதர்கள்,இன்றோ நாளையோ இந்த உலகை விட்டுப் பிரியப் போகிறவர்கள்’ மிஸ்டர் டெய்லர் சட்டென்று சொன்னார்.இந்த வயதிலும் இவள் தன்னைச் சிறையில் வைத்திருப்பதை அவரால் விளங்கிக் கொள்ள முடியவில்லை.

‘மற்றவர்கள் பார்த்து எதும் சொல்வதற்கு நாங்கள் எந்தக் குற்றமும் செய்யவில்லை’அவர் சொன்னார்.அவள் மறுமொழி சொல்லவில்லை.

அவள் ஞாபகம் எங்கோ பறந்தது.

யாழ்ப்பாணத்து சைவ வேளாள குடும்பத்திற் பிறந்து, மிகக் கட்டுப்பாடாக வளர்க்கப் பட்டும் தகப்பனுக்குப் பிடிக்காதவனின்; காதலில் விழுந்தததைக் கண்டித்த அவள் தகப்பனுக்கு, செல்வமணி தனது இருபத்தியிரண்டாம் வயதில் இப்படித்தான் சொன்னாள்.

தனது ஒரே ஒரு மகள்,தங்கள் சாதியைவிடக் குறைவான கோவியப் பையனை விரும்புகிறாள் என்று தெரிந்த சாதித் திமிர் பிடித்த அவள் தகப்பன் வைத்தியலிங்கம் எரிமலையாகக் குமுறினார்.

‘ஊர் உலகம் எங்களைப் பார்த்துச்சிரிக்கும்’ என்று கர்ச்சித்தார். சாதித் திமிர் அகங்காரம் அவர் குரலில் வெடித்தது.

அப்போது,செல்வமணி ஆங்கில ஆசிரியாகப் படிப்பித்துக்கொண்டிருந்தாள்.

அவளின் இளவயதில், பதினாறுவயதில்,அவளின் இருதயத்தில்,அவள் மனதில் குடியேறிய அடுத்த தெரு செந்திலவேல், அவள் ஆசரியையாகப் படிப்பித்துக் கொண்டிருந்தபோது,அவன் கொழும்பில் அரசாங்க உத்தியோகத்திலிருந்தான்.

‘என் உடம்பில் எனது உயிர் இருக்கும்வரை நீ அவனைச் செய்யவிடமாட்டேன். என்ர சொல்லை மீறி நீ அவனைச் செய்தால் உங்கள் இரண்டுபேரையும் சமாதி வைப்பன்’ வைத்தியலிங்கத்தின் சபதத்தை அவளுக்குத் தெரியும். தகப்பனைவிடப் பிடிவாதம் பிடித்தவள் அவள். ஓரே இரத்தத்தின் பிரதிபலிப்பு.

செல்வமலருக்கு அவள் காதலித்தவனைக் கை பிடிக்கமுடியாமல்,அவனுடனான கற்பனையில் காலத்தை நகர்ந்தினாள். அவளின் வயதுச் சினேகிதிகள் திருமணமாகி அவர்களின் குழந்தைகளும் காதலிக்கத் தொடங்குமளவு காலம் நகர்ந்தது. செல்வமலர் பொறுமையுடன் காத்திருந்தாள்.

அவளின் நாற்பதாவது வயதில் அவளின் தகப்பன் இறந்தபின், அவளின் அன்பன் செந்தில் குமாரைப் பதிவுத் திருமணம் செய்து கொண்டாள். அவளின் உற்றார் உறவினர் யாரும் வந்து அவளை ஆசிர்வதிக்கவில்லை.ஆனால் அவளின் அன்பனின் அணைப்பில் உலகத்தையே மறந்தாள். உலகம் சொர்கலோகமாகத் தெரிந்தது.

கொழும்பில் அவளுக்கு வேலை செய்ய விருப்பமில்லை. இருவரும் இலங்கையின் மத்திய பகுதியில் வேலையெடுத்துக் கொண்டுபோய்த் தொடங்கிய காதல் வாழ்வின் பிரதிபலிப்பாக 1975ம் ஆண்டு அருந்ததி அவர்களின் அன்பு மகளாகப் பிறந்தாள்.

செல்வமலுருக்குத் தன்வாழ்க்கையின் பூரண திருப்தி.அன்பான கணவன் அழகிய மகள் என்று அவள் சந்தோசப் பட்டாள்.

எழுபத்தியேழாம் ஆண்டு,சிங்கள தேசியவாதம் எல்லை மீறித் தமிழர்களை வேட்டையாடியபோது, எத்தனையோ தமிழ் உயிர்கள் காவு கொள்ளப் பட்டன.தமிழர்கள் இரத்தம் ஆறாக ஓடியது.செல்வமணியின் தாலி அதில் அழிந்தது.

‘என்ன மௌனமாக இருக்கிறாய்? பார்க்குக்கு வரப் பிடிக்காவிட்டால் திரும்பிப் போவமா’ மிஸ்டர் டெய்லர் கேட்டார்.

‘வேண்டாம் நான் ஏதோ யோசித்துக் கொண்டிருந்து விட்டேன். அவள் குரல் பழையஞாபகங்கள் தோய்ந்த துயரத்துடன் கரகரத்தது.

அந்தக் காலை நேரத்தில், ஹாம்ஸ்ரட்ஹீத் பார்க் மிகவும் அமைதியாகத் தெரிந்தது. பார்க்கின் நடுவிலுள்ள குளத்தில் அன்னங்கள் அலங்காரப் பவனி வந்து கொண்டிருந்தன்.

லண்டனுக்கு வந்து இதுவரையும் அவள் இப்படி ஒரு அழகான இடத்திற்கு வரவில்லை.அவள் நினைவில் யாழ்ப்பாணம் சுப்பிரமணியம் பூங்காவும், கொழும்பு விக்டோரியாப் பூங்காவும் ஞாபகத்தில் வந்து மறைந்தன.

இலங்கையின் அழகிய நகரமான கண்டியில் உள்ள பார்க்கில், மகளுடனும் தனது கணவருடனும் கடைசியாகச் சென்ற ஞாபகத்தை அவள் விலைமதிப்பிட முடியாத ஞாபகச் சின்னமாக அவள் இருதயத்தில் சுமக்கிறாள்.அந்த நினைவ வந்ததும் அவள் கண்கள் பனிக்கின்றன.

ஏன் இன்னும் மௌனமாக வருகிறாள் என்று திரும்பிப் பார்த்த மிஸ்டர் டெய்லர், அவளின் நீர் படிந்த கண்களைக்கண்டு பதறிவிட்டார்.

‘ஐயாம் சொறி, நான் இங்கு அழைத்து வந்ததற்கு மிகவும் மன்னிப்புக் கோருகிறேன்’அவர் அவசரத்துடன் சொன்னார்.

‘உங்களில் ஒன்றும் எனக்குக் கோபம் இல்லை. எனது கணவரின் ஞாபகம் வந்தது.’ அவள் வாய்விட்டழுதுவிட்டாள்.

என்றோ இறந்த அவளின் கணவரைப் பற்றி இன்றைய புது சினேகிதனுக்குச் சொன்னபோது அவள் துக்கம் பெருக்கெடுத்தது.

‘ஐயாம் சொறி மை டியர்’ அவர் ஒரு பெஞ்சில் உட்கார்ந்தார்.

‘இந்த மனிதனுக்க எப்போதாவது தனது இறந்த காலத்தைப் பற்றிச் சொல்ல முடியுமா?

அவள் அழுகையைத் துடைத்து விட்டு மௌனமாகவிருந்தாள்.

அவர்களைச் சுற்றிய உலகம் புனிதமாகத் தோன்றியது. அமைதியான அந்தச் சூழ்நிலையில்,அவளுக்குத் தன்னைச் சுற்றிய உலகம் யதார்த்தமற்றதாகத் தெரிந்தது.இது அவளுக்குப் புதிய அனுபவம். வாடிய வயதில் வளைய வரும் இந்த வாழ்க்கையை அவள் எதிர்பார்க்கவில்லை.அந்த சூழ்நிலை அவளின் பழைய நினைவுகளைக் கிண்டுவதை அவளாற் தடுக்க முடியவில்லை.

பக்கத்தில் உட்கார்ந்திருந்த மிஸ்டர் டெய்லர் இருமினார்.

‘ கொஞ்சம் தடிமல் இருமாக இருந்தாலும் குளிரில் திரியக் கூடாது’ அவள் பரிவுடன் சொன்னாள்.

அவர் அவளை ஏறிட்டுப் பார்த்தார். இருமலால் அவர் முகம் களைத்துக்காணப் பட்டது. அவரின் நீல விழிகள் அவளை அளவெடுத்தன.

‘ஏதோ ஒரு வருத்தம் கெதியாக வந்து, மற்றவர்களுக்கத் துயர் கொடுக்காமல் இந்த உலகத்தை விட்டுப் போனால் நல்லதில்லையா?”

அவரின் குரலின் தெரிந்த விரக்தி அவளின் ஆத்மாவைக் குலுக்கியது.

‘எங்கள் பேரப் பிள்ளைகள் நேர்சரிப் படிப்பை முடித்துவிட்டு அடுத்த பள்ளிக் கூடத்திற்குப் போகத் தொடங்கினால், எங்களுக்கும் அவர்களுக்குமுள்ள தொடர்பு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து விடும். ஓடித் திரிவதற்கு இனி என்ன எங்களுக்கு இருக்கிறது?’

அதாவது, அவரின் பேரனின் நேர்சரிக்காலம் முடிந்ததும் அவர் அந்த நேர்சரியுடன் பெரிய தோடர்பாக இருக்கமாட்டார். அங்கு வரவே மாட்டார்!

அவள் மறுமொழி சொல்லவில்லை. அவளின் மகளும் மருமகனும், வேலைக்குப் போனபின் அவளின் நேரம் அவளின் பேத்தியார் அனுஷாவுடன் கழிகிறது.

மகள் அருந்ததி.தனக்கு இன்னுமொரு பிள்ளை வேண்டாமென்ற சொல்லி விட்டாள்.

அனுஷா முழுநேரப் படிப்பைத் தொடங்கியதும் அவள் என்ன செய்வாள்?

எத்தனையோ தமிழ் முதியவர்கள்போல், தெருக்களில் குளிரில் நடந்து பொழுதைப் போக்குவாளா?

‘ யாரும் பார்க்க முடியாத நிலையில் முதியோர் இல்லத்துக்கப் போவாயா?’அவர் கேட்டார்.அவரின் குரல் அடைத்திருந்தது. வாழ்க்கையின் கடைசிக்கால நிகழ்வுகள் அவரைத் துன்பப் படுத்துகிறது என்று அவள் புரிந்து கொண்டாள்.

லண்டனில் முதியோர் இல்லங்கள் பற்றி அவளுக்குத் தெரியாது. எதிர்காலத்தைப் பற்றிய நினைவுகள் அவளின் நெஞ்சை அடைக்கின்றன. கொடுமை கொடுமை முதுமை கொடுமை, தனிமையான முதுமை அதிலும் கொடியது.

‘அறுபத்தைந்து வயது தாண்டியதும்; வாழ்க்கை கிட்டத்தட்ட வெறுமையாகிவிட்டது.’அவர் தூரத்தில் பார்வையைப் பதித்துக்கொண்டு சொன்னார்.அவர் குரலில் அப்படி ஒரு விரக்கிதியை அவள் அவருடன் பழகத் தொடங்கி இவ்வளவு நாளும் கிரகிக்கவில்லை.

பார்க்கில் ஒன்றிரண்டு இளம்சோடிகள் கைகோர்த்துக் கொண்டு அவர்களைத் தாண்டிப்போய்க்கொண்டிருந்தார்கள்.

இவர்களும் ஒருகாலத்தில் சோடியிழந்த தனிமையில் தனியாக வந்து இந்தப் பார்க்கில் உட்கார்ந்திருப்பார்களா?

அதன் பின் இருவரும் அதிகம் பேசிக் கொள்ளவில்லை;.மௌனமாக வந்து காரில் ஏறிக் கொண்டார்கள்.

அதற்கடுத்தடுத்த நாட்களில், மிஸ்டர் மைக்கல் டெய்லர் நேர்சரிப்பக்கம் வரவில்லை.அவர்கள் இருவரும் காப்பி சாப்பிடும் ஷொப்புக்குப் போக நினைத்தாள்.அவரின் சினேகிதர்களுக்கு அவருக்கு என்ன நடந்தது என்று தெரிந்திருக்கும். அவர் உடல் சுகத்துடன் இருந்தால் ஓரிடத்தில் இருக்காமல் ஓடித்திரிவார் என்ற அவளுக்குத் தெரியும்.

அடுத்தகிழமை, மிஸ்டர் டெய்லரின் மகள் தனது மகனை நேர்சரிக்குக் கொண்டுவந்தாள்.

‘எப்படி உன் தகப்பன்’ மிஸஸ் குமார் ஆர்வத்துடன் கேட்டாள்.

இந்தப் பெண் அவளின் தகப்பனைப் பற்றிக் கேட்டால் எதும் நினைப்பாள் என்பதை மிஸஸ் குமார் நம்பவில்லை.ஆங்கிலேயர் அப்படியில்லையே?

‘ஓ நீங்களா அப்பாவின் சினேகிதியான மிஸஸ் குமார்?’ மிஸ்டர் டெய்லரின் மகள் அவளின் தகப்பன் மாதிரியே மிகவும் அன்பான பெண்ணாகவிருந்தாள்.

ஆமாம் என்பதுபோல் தலையாட்டினாள்.

‘ஐயாம் சொறி, அப்பா தான் ஹாஸ்பிட்டலில் அட்மிட் பண்ணி இருப்பதை உங்களிடம் சொல்லச் சொன்னார்.வேலைக் கஷ்டத்தில் மறந்து விட்டேன்.

‘பரவாயில்லை.. அப்பா எந்த ஹாஸ்பிட்டலில் இருக்கிறார்?’ தனது படபடப்பைக் காட்டிக் கொள்ளாமல் அவரின் மகள் கொடுத்த விலாசத்தை எடுத்துக் கொண்டு வந்தாள்.

அவள் ஹாஸ்பிட்டலுக்குப் போனதும், ஒரு கிழமைக்கு முதல் தன்னைப் பார்க்குக்கு அழைத்துப் போன மனிதனாக அவர் தெரியவில்லை. நோயின் கொடுமை அவரின் உருவையே மாற்றியிருந்தது.

‘ எப்படியிருக்கிறார் மிஸ்டர் டெய்லர்?’ அவர் அடுத்த பக்கம் திரும்பியபோது அங்கு வந்த நேர்ஸிடம்,அவள் மெல்லமாகக் கேட்டாள். ‘அவரின் நிலமை சரியில்லை. நேர்ஸின் குரலில் சோகம்.

இந்த மனிதருடன் அவள் கழித்த ஒன்றிரண்டு மாதங்கள் நினைவில் நிழலாடின.

அன்றைக்குப் பார்க்கிலிருந்து வந்து அவளை வீட்டில் சேர்க்கும்போது,’ஏன் என்னை மிஸ்டர் டெய்லர் என்றே சொல்கிறாய். மைக்கல் என்று கூப்பிடலாம்’ என்று அவர் சொன்னது அவளுக்க ஞாபகம் வருகிறது.

உத்தியோக தோரணையற்ற உறவையுண்டாக்க அவர் குரலில் இருந்த தாபத்தை அவள் உணர்ந்தாள்.

செயற்கைக் குழாய்களுடன் மூச்செடுக்கும் மைக்கலை அவள் நீண்ட நேரம் பார்த்துக்கொண்டு நின்றாள்.

வாழ்க்கை எவ்வளவு விசித்திரமானது,

இந்த மனிதனின் சுகத்திற்குப் பிரார்த்திக்குமளவுக்கு இந்த மனிதனுடன்; எனக்கென்ன தொடர்பிருக்கிறது?

ஓரு நல்ல சினேகிதனின் சுகத்திற்கு ஏன் பிரார்த்திக்க் கூடாது?

‘குட்பை மைக்கல்’ அவள் நீர் வழிந்த கண்களுடன் வீடு திரும்பினாள்.

வீடு வெறுமையாகத் தெரிந்தது.பேரப் பிள்ளை அனுஷா நல்ல நித்திரை.

மகள் அருந்ததி வந்தாள்.

டெலிவிஷனைப் போட்டாள்.

‘ 2030ம் ஆண்டு காலகட்டத்தில் சாதாரண மனிதரின் ஆயள் காலம் 110-120 ஆண்டுகளாக இருக்கும்’ விஞ்ஞான நிகழ்ச்சி அறிவிப்பாளர் சொல்லிக் கொண்டிருந்தார்.

‘மிஸ்டர் டெய்லருக்கு எழுபது வயதுதான்’ அவள் தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள்.

‘ஆயுள் நீண்டுபோய் வாழ்ந்து மற்றவர்களுக்க ஏன் பிரச்சினைகளைக் கொடுக்கவேண்டும்?’ அவள் வாய்விட்டு அந்தக் கேள்வியைக் கேட்டுக் கொண்டாள். அவள் மகள் அருந்ததிக்கு அது கேட்டது.

மற்றவர்களுக்குத் துயர் கொடுக்காமல் இந்த உலகத்தை விட்டுப் போகவேண்டும் என்பதுதுதான் மைக்கலின் ஆசை என்று அவளுக்குத் தெரியும்.

மற்றவர்களின் தயவில் வாழ்வதை மைக்கல் விரும்பவில்லை.

‘அம்மா நான் உங்களப் பார்த்துக் கொள்வேன்’ அருந்ததி பாசத்துடன் சொன்னாள்.

செல்வமணி மறுமொழி சொல்லவில்லை

‘எனக்குக் கை கால் ஓடாத நிலை வந்தால் அருந்ததி எவ்வளவு காலம் லீவு எடுப்பாள்?

அருந்ததி சம்பளமில்லாத லீவ எடுத்தால் அவளின் குடும்பப் பொருளாதார நிலை என்னவாகும்?

கஷ்டம் தலைக்குமேலால் போகும்போது,அருந்ததி தனது தாய் செல்வமலரை முதியோர் நிலையத்திற் சேர்க்க மாட்டாள் என்று என்ன நிச்சயம்’?;

மனம் பேதலித்த, ஞாபகங்கள் தொலைந்து விட்ட முதியோர்களுடன் அவளின் வாழ்க்கை முடியப் போகிறதா?

அடுத்த நாள் அவள் பேத்தியாருடன் நேர்சரிக்குப் போய்க் கொண்டிருந்தபோது, மைக்கலின் சினேகிதக் கிழவர் ஒருத்தர் வந்து கொண்டிரந்தார்.

‘ஹலோ மிஸஸ் குமார்…கிழவர் நெருங்கி வந்தார்.மைக்கலின் நிலை பற்றிச் சொன்னார்.

‘மைக்கலுக்கு உன்னில் பெரிய விருப்பம் தெரியுமா?’கிழவர் சொன்னார்.

செல்வமணி முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

‘என்னை மைக்கல் என்று கூப்பிடேன்’ என்று மைக்கல் சொன்னபோது,அவரின் குரலிற் தொனித்த எதிர்பார்ப்பு அவளுக்குத் தெரியும்.

கமலா நடராஜன் தனது குழந்தையுடன் வந்து கொண்டிருந்தாள். மனிதர்களின் ‘தராதரம்’ பார்த்து உறவுகளை வளர்த்துக் கொள்பவள் அவள்.

செல்வமணிக்கும் மைக்கலுக்கும் உள்ள சினேகிதமான உறவு பற்றி கமலாவால் விளங்கிக் கொள்ள முடியாது.விளங்கினாலும்,அவள் ‘தராதரம’; பார்த்துக் கேலி செய்வாள். மைக்கல் தமிழன் இல்லையென்பது அவளது ‘தராதரக் கோட்பாட்டுக்குள்’ வராது.

நேர்சரிக்குப் பேத்தியைச் சேர்த்துவிட்டு செல்வமணி மைக்கலைப் பார்க்க ஹாஸ்பிட்டலுக்குப் போகவேண்டும்.

மைக்கல் ஒரு நல்ல நண்பன். அவர் நீண்ட காலம் பிழைக்க மாட்டார் என்று செல்வமணிக்குத் தெரியும்.ஆனாலும் மைக்கல் உயிரோடு இருக்கும் வரையும் அவருக்கு அன்பையும் ஆதரவையும் காட்டுவதுதானே ஒரு நல்ல சினேகிதத்தின் அடையாளங்கள்?

– ‘இந்தியா டுடேய்’ பிரசுரம்

(யாவும் கற்பனையே)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *