மின்மினி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 8, 2014
பார்வையிட்டோர்: 8,473 
 

அந்த அறைக்குள் நுழைந்தவுடனேயே கண்ணைக்கட்டி நிறுத்தியது, அறைக்குள் வீற்றிருந்த அந்த அலங்காரக் கண்ணாடி தான். இதுவரை இப்படி ஒரு கண்ணாடியை சோமசேகரன் பார்த்ததே இல்லை. முற்றிலும் நூதன வடிவில், மேலே கூம்பி, நடுவில் பரந்தும், அடிப்பாகத்தில் மீண்டும் கூம்பியுமாக,யாராக இருந்தாலும் ஒரு நிமிடம் நின்று பார்க்கத் தோன்றும் அமைப்பில் இருந்தது அந்தக்க்கண்ணாடி. அறைக்குள் தன் உடமைகளை வைத்துவிட்டு, குளிக்கப்போன சேகரனுக்கு உடம்பெல்லாம் கூச்சத்தில் நெளிந்தது..இப்படி ஒரு கூச்சம் அவன் அனுபவித்தறியாதது.

குளித்து தலை துவட்டிக்கொண்டே அறைக்குள் நுழைந்தபோது, யாரோ அறைக்குள் அவனைப் பார்ப்பதுபோன்ற ,உள்ளுணர்வை தவிர்க்கவே முடியவில்லை. அறைக்குள் அவனைத்தவிர, ஒரு சுடுகுஞ்சு இல்லை. அபத்த யோசனையைத்தரும் உள்ளுணர்வைத் திட்டிக்கொண்டே,, உடை மாற்றிக்கொண்டு வெளியே வந்தபோது, வீட்டு உரிமையாளர் திரு.லிம்.ஹாலில் உட்கார்ந்திருந்தார். அறைக்கான வாடகைப்பணம், டெபாசிட் எல்லாமே முன்கூட்டியே கொடுத்துவிட்டாலும், அறை எப்படி செளகரியமாக இருக்கிறதா,என்ற முகமனோடு பேச ஆரம்பித்தார், சுத்தமாகவும், சுகாதாரமாகவும், அறையை எப்படி எப்படியெல்லாம் வைத்துக் கொள்ளவேண்டும், என்ற அவரது உபதேசம் அவனுக்கு சிரிப்பை வரவழைத்தது. என்னமோ காலம் காலமாய் இவன் என்னமோ இங்கேயே குடித்தனம் இருக்கப்போவது போலல்லவா இருக்கிறது அவரது பேச்சு. உபதேசம் கொடுத்துக்கொண்டே, அறைக்குள் நுழைந்த ,திரு.லிம்,அந்தக்கண்ணாடியருகே தான் போய் நின்றார்.

வாத்சல்யத்தோடு அதை தடவிக்கொடுத்துக்கொண்டே, ”இதை சைனாவிலிருந்து வரவழைத்தேன், தெரியுமா?” என்று பெருமையோடு சொல்லிக்கொண்டார். ”தினமும் மறவாது கண்ணாடியைத் துடைத்து, சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும், என்ன புரிந்ததா”?என்று திரும்பத் திரும்ப, கேட்டுக்கொண்டே, பரிவோடு கண்ணாடியைப் தடவிக்கொண்டு நின்ற திரு.லிம்மைப்பார்த்து, மீண்டும் சிரிப்புதான் வந்தது. அதுவரை தான் அனுபவித்த ஒரு பொருளை,மற்றவருக்கு விட்டுக்கொடுக்கும் போது வரும் நெகிழ்ச்சியே அது , என்று தன்னையே கற்பித்துக்கொண்டாலும் கூட ஒரு ஜடப்பொருள் மீது இப்படியும் கூட நெகிழமுடியுமா என்று ,திகைக்காமல் இருக்கமுடியவில்லை. சூழ்நிலையை மாற்றவேண்டி, ”உங்கள் மனைவி, குழந்தைகள்,பற்றி சொல்லுங்களேன்,”என்று சேகர் கேட்டுமுடிக்கவில்லை.

”மனைவியே தங்கவில்லை. பிறகு குழந்தைகள் எங்கிருந்து?” என்று அலட்சியமாகச் சொன்ன, திரு.லிம், தொடர்ந்தார்.

“என்ன அப்படிப் பார்க்கிறீங்க? கலயாணமாகி மூன்று மாசம் ஒழுங்காத்தான் குடும்பம் நடத்தினா? ஆனா, இந்த மின்மினி , வந்தபிறகுதான் , என்னைப்பிடிக்கலேன்னு சொல்லி ஓடிப்போயிட்டா? நீங்களே சொல்லுங்க, ஒரு ஜடப்பொருள் மீது சந்தேகப்படறவளோடு மனுஷன் வாழமுடியுமா? ஆனால் எனக்கொண்னும் நஷ்டமில்லை.பீடை ஒழிஞ்சதுண்னு நிம்மதியாத்தானிருந்தேன். அதுக்குள்ளதான், ”’—- என்றவர், சட்டென்று சுதாரித்துக்கொண்டு, ”அப்ப நான் வரேன், ஆ, மின்மினி வறேன்” என்று , கண்ணாடியிடமும் சொல்லிக்கொண்டு, விறுவிறுவென்று வெளியேறிவிட்டார். இந்தக் கண்ணாடியைத் தான் மின்மினி என்கிறாரா? சோமசேகரன் இப்பொழுதும் சிரித்துக்கொண்டான்.

சிங்கப்பூருக்கு அலுவல் நிமித்தம் அனுப்பிவைக்கப்பட்ட சோமசேகரன், மலேசியாவைச்சேர்ந்தவன்.சிங்கப்பூரில் ஒரு மாதம் தங்குவதற்கான ஒருஅறை தேடியபோது, நண்பர் ஒருவரால் பரிந்துரை செய்யப்பட்டு, திரு லிம்மின் வீட்டுக்கு குடி புகுந்திருந்தான். 32 வயது கட்டைப்பிரம்மச்சாரி. ஏனோ அவனுக்கு வாழ்வில் உயர இன்னும் லட்சியங்கள் பாக்கி இருந்தது.வீட்டில் அம்மா, அக்கா, அண்ணன்,என எல்லோருமே அவனது திருமணம் பற்றிப் பேசத்தொடங்கி, இவனது கோபம் கண்டு, ஒரு கட்டத்தில் அதுபற்றி பேசுவதையே நிறுத்திக்கொண்டார்கள். ஆனால் சேகரின் அம்மா மட்டும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் துர்க்கைக்கு எலுமிச்சை விளக்கு போடுவதை நிறுத்தவில்லை.திருமணம் என்ற பேச்சே சேகருக்கு வேம்பாய்க் கசந்தது.தொழில் துறையில் சாதிக்க இன்னும் எவ்வளவோ விஷயங்களிருக்க, ” ச்சே, கலயாணமாம், அந்தக்கருமத்தை நினைக்கவே அவனுக்குப் பிடிக்கவில்லை. சிங்கப்பூரிலிருந்து புதிய ப்ரொஜெக்ட்டுக்கான ஆர்டர் வந்தபோதே, தன்னுடைய பெயர்தான் தெரிவு செய்யப்படும் என்பது சேகருக்கு உள்ளூரத்தெரிந்தே இருந்தது.அப்படி உழைத்திருந்தான் அலுவலகத்தில். அவனது உழைப்பில் அபார நம்பிக்கை இருந்தது அவனுக்கு. அதனாலேயே அவன் அலட்டிக்கொள்ளவில்லை. நண்பர்களின் வாழ்த்துக்களைக்கூட, வெறும் ஒரு புன்னகையோடே கடந்து செல்லமுடிந்ததும் கூட, சோமசேகருக்கு அவன் மீதிருந்த அவனது அசாத்திய நம்பிக்கையே. அம்மா மட்டும் அவன் புறப்படும்போது, ஒரு சின்ன டப்பியில் [அம்மன் கோயில்] திருநீறு போட்டு, அவன் கைப்பைக்குள் வைத்தாள். நேரடியாகக்கொடுத்தால் சேகர் முகம் சுளிப்பான்.அல்லது பட்டென்று நிதானிக்காமல் எதையாவது சொல்லிவிடுவான்.அம்மா பார்வதிக்கும் சேகருக்குமிடையே பல விஷயங்களில் இந்த பூடகம் தான் செளகரியமாக இருக்கிறது.

வீட்டு உரிமையாளர் லிம் புறப்பட்டுப்போய், ரொம்ப நேரத்துக்கு எதையும் யோசிக்கவும் நேரமின்றி ,அலுவலக வேலையில் அமிழ்ந்திருந்தான் சேகர். திடீரென்று புளோக்கின் கீழேயே ”ஹாவ்க்கர் செண்டர்”, இருப்பது , ஞாபகத்துக்கு வர, அப்பொழுது தான் பசியே நினைவுக்கு வந்தது. அணிந்திருந்த பெமூடா, டீ ஷர்ட்டிலேயே கீழேபோய், சைனீஸ் ”சிக்கன் ரைஸை” சுவையாக ருசித்து, கோக்கை உறிஞ்சி, நாவும் வயிறும் , நிரம்பிய மகிழ்வில் சாப்பாட்டை முடித்துவிட்டு,அறைக்குள் வந்தபோது மனசு உல்லாசமாக இருந்தது. அதற்குப்பின் அலுவலக வேலையைத் தொடர மனசு லயிக்கவில்லை.

அப்படியே படுக்கையில் சாய்ந்துகொண்டு இசை கேட்கலாம் என்று , கட்டிலில் சாய்ந்தது தான் தெரியும்.. கண்ணை அப்படி இழுத்துக்கொண்டு போய் விட்டது.அந்த மெல்லிய ஸ்பரிஸம் எவ்வளவு நேரம் அவனில் இழைந்துகொண்டிருந்ததோ தெரியவில்லை. ஒருகட்டத்தில் குலுக்கிவிட்டாற்போல் அவனை உலுக்கியெழுப்பியபோது, பஞ்சுப்பட்டாய் அவன் முகத்தை மெல்ல வருடிக்கொண்டிருந்தது. அதைவிட மென்மையாக அவனுடைய தலைமுடியைக் கோதியது..அவனது மீசையை மெல்ல மெல்ல நீவிவிட்டது.தாடியை வழித்து விட்டது. அப்படியே மார்பில் அந்த கைகள் படர்ந்தபோது, அதற்குமேலும் தாங்கமாட்டாமல், ”யார் நீ” ,என்று கேட்க,சோமசேகரன் வாயை அப்படியே அந்த விரல்கள் கப்பென்று பொத்திவிட்டது. சில்லென்ற ஐஸ் கட்டிபோல் அந்த விரல்களின் ஸ்பரிசத்தில், உடல் சிலிர்த்தாலும், அந்த இன்பத்தை, —— அதற்குமேல் நடந்த எதையுமே அவனால் தவிர்க்கமுடியவில்லை. இப்படி ஒரு பரவசம், அவன் வாழ்நாளில் அனுபவித்தறியாத ஒன்று. இப்படி ஒரு புளகாங்கிதத்தில்,ஒருநாள் கூட அவன் உடல் மெய்ம்மறந்ததில்லை, என்று சேகர் பிதற்றத்தொடங்கியபோது, அறைக்குள் சூரியோதயம் வந்துவிட்டது.

கண்விழித்தபோது உடம்பு இருந்த கோலத்தைப் பார்க்க அவனுக்கே வெட்கமாகப் போய்விட்டது. பிழிந்து எடுத்தாற்போல் உடம்பில் அப்படி ஒரு அசதி.சுதாரித்துக்கொண்டு எழுந்து நின்றபோது , எதிரில் நின்ற கண்ணாடியில் இரண்டு பளிங்குக்கண்கள் கண்சிமிட்ட, அப்படியே ஆறத் தழுவணும்போல் மனசு பரபரத்தது.

”உஷ்ஷ், அதெல்லாம் வேண்டாம், முதலில் போய் குளித்துவிட்டு வாருங்கள்,” என்று தேன்குரல் ஒன்று கிசுகிசுப்பாய், காதில் மிழற்ற, கட்டின பசுவாய் சோமசேகரன் குளியலறை நோக்கிப்போனான். ஈர டவலும் வெற்று மார்புமாய், கண்ணாடிமுன் வந்து நின்றபோதுதான் அந்த சீப்பைப் பார்த்தான். முதல்நாள் கண்ணில் படாத அந்த சீப்பு, இப்பொழுது எங்கிருந்து முளைத்தது, என்று திகைத்துப்போய் பார்த்தான். தங்கக் கலரில், கூர்கூரான பல்லால், பிடி நீண்ட அந்த சீப்பிலிருந்து ஒரு முகம் தோன்றியது..சோமசேகரனுக்கு ஒருவினாடி தன் கண்களையே நம்பமுடியவில்லை. அந்தப்பெண் களுக்கென்று சிரித்தாள்..சீப்பை கையில் எடுத்தபோது, அது தலைமுடியிடம் போகவில்லை.தன்னிச்சையாய் உடல் முழுவதும் வருடத் தொடங்கியது. சீப்பைப் பிடுங்கக் கை முனைந்தும் சீப்பு அசங்கவில்லை. என்ன தோன்றியதோ, அப்படியே பச்சக்கென்று நெஞ்சில் அணைந்துகொண்டது சீப்பு. சீப்பை சோமசேகரனால் நெஞ்சிலிருந்து பிடுங்கவே முடியவில்லை.எவ்வளவுநேரம்தான் அப்படி நின்றான் என்பது தெரியவில்லை. உணர்வு வந்தபோது வியர்வையில் குளித்து, மீண்டும் உடல் பிழியும் அசதி.. விருட்டென்று துணிகளை கையில் அள்ளிக்கொண்டு, மீண்டும் போய் குளித்தான்.அரக்கப்பரக்க உடையணிந்து கொண்டு, அதிவிரைவாய் டேக்சி பிடித்து, அலுவலகம் வந்தபோது அப்படி ஒரு அதிர்ச்சியை அவன் எதிர்பார்க்கவில்லை.அலுவலகம் பூட்டியிருந்தது.அலுவலகம் மட்டுமல்ல. அக்கம் பக்கம் எந்த அலுவலகமுமே, திறக்கப்படவில்லை. ஒரு மனித நடமாட்டம் கூட இல்லை.வேறு ஏதாவது முகவரிக்குத்தான் வந்துவிட்டோமா, என்று மீண்டுமொருமுறை முகவரியைப் பார்த்தபோது,முகவரியில் தவறில்லை.சரியான முகவரியில் , அவனது அலுவலகம் முன்புதான் நின்றுகொண்டிருந்தான்.ஆனால் எதேச்சையாக எதிரிலிருந்த மணிக்கூண்டைப் பார்த்தபோது,தான் அதிர்ந்து போனான். விடியல் நாலரை மணியா? அப்படியானால் அறைக்குள் வந்த சூர்யோதயத்துக்கு என்ன அர்த்தம்? உடனே கைக்கடியாரத்தைப் பார்க்க கடிகாரம் ஓடவே இல்லை.முதல்நாள் நேரத்திலேயே உறைந்து போய் நின்றிருந்தது. அலுவலகம் எட்டரை மணிக்குமேல்தானே? அதுவரை, இங்கா நின்றுகொண்டிருப்பது? வீட்டுக்குத்திரும்பிப்போகும் நினைப்பே அவனுக்கு பரவசத்தைத் தந்தது. வீட்டிற்குப்போய் லுங்கிக்குள் மாறி, கட்டிலில் சாய்ந்தால்,—சோமசேகரன் கிறுகிறுத்துப்போனான், ஆனால் அறைக்குள் நுழைந்தபோது அந்த சீப்பைக் காணவில்லை.கண்ணாடி கல்லாய் ஓய்ந்துபோய் நின்றது.அருகே சென்றதும். ”தொடாதே,” என்று காதோரம் சீறியது. ”ஏன் என்னை விட்டுப்போனாய்”, என்று முறைத்துக்கொண்டது.சோமசேகரனால் அதற்குமேலும் தாங்கமுடியவில்லை. ஆவேசம் வந்தாற்போல் ஒற்றி, ஒற்றி, உதடு வலிக்க வலிக்க,கண்ணாடியை முத்தமிடத்தொடங்கினான்.

அய்யோ, போதும் ,போதும், போதுமே, என்று கெஞ்சக் கெஞ்ச,——- மதியம் அலுவலகத்தினுள் நுழைந்த சோமசேகரனை, பலரும் வியப்போடு பார்த்தார்கள்.தலை கலைந்து, உடை சீரின்றி, , ஆனால் அதுபற்றிய பிரக்ஞையே இன்றி,விடுவிடுவென்று அறைக்குள் போனவன் , சில நிமிஷங்கள் தான் வெறித்துப்போய் அமர்ந்திருந்தான்.அடுத்த கணமே , சுதாரித்துக் கொண்டு, மின்னல் வேகத்தில் வேலை செய்யத்தொடங்கினான். உடல் தான் அசதியாக இருந்ததே தவிர மூளை படு உஷாராக இருந்தது.தாமதமாக வந்ததற்கு அவன்மீது கோபம் கொண்டிருந்த அவனது மேலதிகாரியே அவன் வேகம் கண்டு,மகிழ்ந்துபோனார்.மலேசியாவிலிருந்து மிகப்பொருத்தமான தேர்வாளரைத்தான் , தேர்வு செய்திருக்கிறோம் என்று தனக்குள்ளேயே மகிழ்ந்து கொண்டார்.

காலையிலிருந்து ஒரு சொட்டுத்தண்ணீர் அருந்தவில்லை. ஒரு கவளம் சாதம் சாப்பிடவில்லை.என்றாலும் சேகரால் மாய்ந்து மாய்ந்து வேலை செய்யமுடிந்தது. எல்லாம் மாலை ஐந்து மணி வரை தான்.சரியாக மணி ஐந்தடித்ததும் அவனுள் அலாரம் கிணுகிணுத்தது. செவியோரம் கிண்ணாரம் சொல்லும் மிழற்றல் சிணுங்கியது. சோமசேகரன் பரிதவித்துப் போனான். அதற்குமேலும் பொருந்தி அமர்ந்து வேலை செய்யமுடியவில்லை. கோடடித்தாற் போல் டேக்சியைப் பிடிக்க ஓடினான். ஆனால் வீட்டை அடைந்தபோதோ, கதவைத் திறக்கவே முடியவில்லை. வாசலில் சாவியைத் திருகித், திருகி, எவ்வளவு முயன்றும், கதவு திறக்க மறுத்தது. உள்ளூர தாழ்ப்பாள் போட்டிருந்தாலொழிய, கதவு திறக்காமலிருக்க வழியில்லை.சோமசேகரனுக்கு ஒருவினாடி, என்ன செய்வதென்றே புலப்படவில்லை.பஞ்சதந்திரக்கதைகளில் வருவதுபோல் இது என்ன மாயம், என்று ஒரு கணம் திகைத்துப்போய் நின்றான். வேறுவழியின்றி வாசலிலேயே நிற்கத்தயங்கி, கீழே ஹாக்கர் செண்டரில் போய் ஏதாவது சாப்பிட்டாவது வரலாம், என்றெண்ணி நடந்தான். மீ கோரேங்கும்,காப்பிக்கும் ஆர்டர் கொடுத்துவிட்டு,கைப்பையைத்திறந்தபோது, பொட்டென்று கீழே உருண்டது அந்த டப்பி. அம்மா கொடுத்த திருநீறு மடித்த அம்மன் கோயில் விபூதி. டப்பியைத் திறந்த வினாடியில் ,அவனது உடலிலிருந்த ஏதோ கனம் அவனை உருட்டிவிடாத குறையாக, அவனை தள்ளிவிட்டு ஓடியது. திக்குமுக்காடிய சோமசேகரனுக்கு உடம்பெல்லாம் வியர்வையில் குளித்து, பிரம்மை போய் பிரமை வந்தாற்போல் நிதர்சனம் முகத்தில் அறைந்தது. அவ்வளவு தான், விபூதியை அள்ளி நெற்றியில் பூசிக்கொண்டான். இப்பொழுது தான் உடம்பே லகுவாயிற்று. நிலைமை என்னவென்று புரியும் போல் கூட தோன்றிவிட்டது. சாப்பாட்டுக்கான காசை மேசையில் வைத்துவிட்டு, அவசரம் அவசரமாக வீட்டைப்பார்க்க ஓடினான். வீட்டுவாசலில் லிம்மின் செருப்புக்கள் கிடந்தது. அப்படியே வெலவெலத்துவிட்டது. கெத்து கெத்தென்று வந்தது அவனுக்கு. அறை வாசலில் காது வைத்துக்கேட்டபோது வந்த சப்த ஜாலங்களில்,சகலமும் நடுங்கியது அவனுக்கு. .வந்தவேகத்திலேயே, தடதடவென்று படிக்கட்டுகள் வழியே தலைதெறிக்க ஓடினான். அவனது உடமைகள் , லுங்கியும் , உள்ளாடையும் கொஞ்சம் துணிகள் மட்டுமே அறைக்குள் இருந்தது.அதைப்பற்றி சிந்திக்கவும் நேரமின்றி ,சிங்கை விமான நிலையத்தில் , மலேசியாவுக்கு பயணச்சீட்டு வாங்கியபிறகே அவனுக்கு மூச்சு வந்தது.அப்போதும் உடல் நடுக்கம் நிற்கவில்லை. சோமசேகரன் ,முதன்முறையாக அம்மாவை அழைத்தான். உடனே தனக்கொரு பெண்பார்க்கும்படி கூறியபோது அம்மா பார்வதியால் மகிழ்ச்சியைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. விமானம் உயரப் பறந்துகொண்டிருந்த போது, திடீரென்று யாரோ செவியோரம் மிழற்றினாற்போலிருக்க ,அதிர்ந்துபோய், திடுக்கிட்டு நிமிர்ந்த , அவனது உதடுகள், அவனையுமறியாமல், ”மின்மினி ”என்றுதான் முணுமுணுத்தது.

– நவமபர் 2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *