மாற வேண்டிய மனங்கள்!

1
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 20, 2019
பார்வையிட்டோர்: 26,997 
 

தஞ்சாவூரில் இருந்து, கண்டியூர் வழியாக, திருக்காட்டுப்பள்ளி செல்லும் பஸ்சில் பயணித்து, வரகூரில் இறங்கினேன்; வரகூர், ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில் உறியடி உற்சவம், மிக பிரசித்தம். ஆண்டிற்கு ஒரு முறை, பெருமாளை தரிசிக்க வந்து விடுவது என் வழக்கம். கோவில் சிறியது தான்; ஆனால், கீர்த்தி பெரிது. பஸ் நிறுத்தத்திலிருந்து, 20 நிமிஷம் நடந்து, கோவிலை அடைந்தேன்.

குருவாயூர் கோவில் போன்று, இங்கும் ஆண்கள் சட்டை அணியாமல், வேட்டியுடன் தான் கோவிலுக்குள் செல்ல முடியும். அதனால், கோவிலுக்கு பக்கத்தில் உள்ள வீட்டுத் திண்ணையில் அமர்ந்து, கைப் பையை திறந்து பேன்டிலிருந்து, எட்டு முழம் வேட்டிக்கு மாறினேன்; பஞ்சாயத்து குழாயில், கை, கால், முகத்தை கழுவி, நெற்றியில், ஸ்ரீ சூர்ணம் இட்டுக் கொண்டேன். எனக்கு தெரிந்த, ஆழ்வார் பாசுரங்களை சொல்லியபடி, கோவிலை நோக்கி நகர்ந்த போது, ”சார்…” என்று யாரோ அழைக்கும் குரல் கேட்டு, திரும்பினேன்.

முப்பது வயது மதிக்கக்தக்க இளைஞன் ஒருவன் நின்றிருந்தான்.

”தொந்தரவு செய்யறதுக்கு மன்னிக்கணும்… என் பெயர் ராமச்சந்திரன்; சுவாமி தரிசனம் செய்ய வந்தேன். சம்பிரதாயம் தெரியாதுங்கிறதால வேட்டி கொண்டு வரல; கொஞ்சம் உதவி செய்ய முடியுமா…” பணிவான குரலில் கேட்டான்.

”அதுக்கென்ன தரேனே…” என்று கூறி, கைப் பையிலிருந்து, நாலு முழம் வேட்டியும், துண்டும் எடுத்துக் கொடுத்தேன்.

உடை மாற்றி வந்தான் ராமச்சந்திரன்; இருவரும் கோவிலுக்குள் சென்றோம்.

”வாங்கோ… வாங்கோ…” வரவேற்றார் பட்டர்.

அடிக்கடி வருவதால் அவருக்கு பரிச்சயம் ஆகிவிட்டேன்.

கற்பூர ஆரத்தியில், பெருமாளின் அழகில் மனம் லயித்தது.

”வழக்கம் போல, தயிர் சாதம் நைவேத்யம் ஏற்பாடு செய்யலாமா?” என்றேன், பட்டரிடம்!

”ஓ பேஷா… பக்கத்துல இருக்கிற வேத பாடசாலையில, தளிகை செய்ற மாமிகிட்ட சொல்லுங்கோ… அரை மணியில தயார் செய்திடுவா…” என்றார்.

கோவிலுக்கு போனா, ஏதாவது பிரசாதம் நைவேத்யம் செய்து, வினியோகம் செய்யணும் என்பது, என் அம்மாவின் வழக்கம்; அதையே, நானும் கடைப்பிடித்தேன்.
”திண்ணையில உக்காருங்கோ; இதோ, அரை மணியில செய்துடுறேன்,” என்றாள், மாமி.

நானும், ராமச்சந்திரனும், திண்ணையில் அமர்ந்தோம். ராமச்சந்திரனின் கண்கள் கலங்கி இருந்தன; மனபாரத்தால், வாடி இருந்தது, முகம்.

”என்னப்பா ஏன் வாடிப் போய் இருக்கே… பெருமாளை தான் சேவிச்சாச்சே… எல்லாம் நல்லதே நடக்கும்; கவலைப்படாத…” என்று ஆறுதல் சொன்னேன்.

சில நிமிடங்கள் மவுனமாக இருந்தவன், ”உங்ககிட்ட சொல்றதுக்கு என்ன சார்… எனக்கு பெண் குழந்தை பிறந்து, மூணு மாசம் ஆச்சு; இன்னும் போய் பாக்கலே…” என்றான், கண் கலங்க!

”ஏன்… என்ன ஆச்சு?” என்றேன், அதிர்ச்சியுடன்!

”என் மனைவிய விவாகரத்து செய்துடலாம்ன்னு, எங்கம்மா சொல்றாங்க. அப்பா இல்லாத என்னை கஷ்டப்பட்டு வளர்த்து, ஆளாக்கியிருக்காங்க. அவங்கள மீறி, என்னால ஒண்ணும் செய்ய முடியாது. என் நண்பன் தான், ‘வரகூர் போயிட்டு வா; தெளிவு கிடைக்கும்’ன்னு சொன்னான். அதான் வந்தேன்,” என்றவன், தன் குடும்ப விஷயங்களை என்னிடம் பகிர்ந்து கொண்டான்…

கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றுகிறான், ராமச்சந்திரன். காலேஜ் பக்கத்தில், தாம்பரத்தில், சிறிய ப்ளாட்டில் வாசம்; பேங்க் லோன் போட்டு வாங்கினது; வீட்டில், அவன் அம்மாவுடன், இலவச இணைப்பாக, கணவனை இழந்த அத்தை. அம்மாவும், அத்தையும், பல பெண்களை தட்டி கழித்தப் பின், ஒருவழியாக, ரம்யாவை ராமச்சந்திரனுக்கு திருமணம் செய்து வைத்தனர். மென்பொருள் நிறுவனத்தில் அவளுக்கு வேலை; நல்ல சம்பளம்.

ரம்யாவுக்கு, டைடல் பார்க்கில் ஆபீஸ்; கம்பெனி பஸ் உண்டு. அலைச்சலும், வேலை அழுத்தமும் சேர்ந்து, வீட்டுக்கு வரும் போது, படுத்து தூங்கினால் போதும் என்ற நிலை அவளுக்கு! காலையில், ஏதாவது வீட்டு வேலை செய்தாலும், மாலையில் ஒன்றும் செய்ய முடியாது; சில நாட்கள், அலுப்பில் இரவில் சாப்பிடக் கூட மாட்டாள்.
இது, இரண்டு, ‘சீனியர் சிட்டிசன்’களுக்கும் பிடிக்கவில்லை. ‘எல்லாம் மருமகள் செய்வாள்; நாம் சீரியல் பார்த்தபடியே பொழுது போக்கலாம்…’
என்று, கனவு கண்டவர்களுக்கு, ஏமாற்றம்.

சிறிய வாக்குவாதங்கள், பேதங்கள் சண்டையில் முடிந்தது. அத்தையும், அம்மாவிடம், ரம்யாவை பற்றி போட்டுக் கொடுத்தபடியே இருந்தாள். ராமச்சந்திரன் நிலை, இருதலை கொள்ளி எறும்பு போல ஆனது.

இந்நிலையில், தாய்மை அடைந்தாள், ரம்யா. வேண்டாத மருமகள் என்பதால், சீர், செனத்தி கேட்டு வம்புகள் செய்ய, ஒருநாள் பதிலடி கொடுத்தாள் ரம்யா. அவ்வளவு தான்… ‘விவாகரத்து செய்துடு… நானா, அவளா முடிவு செய்துக்கோ…’ என்று இரட்டை நாயனம் ஒலிக்க, ராமச்சந்திரனின் சமாதான முயற்சிகள் அத்தனையும் வீணாகின.

பிறந்த வீட்டுக்கு சென்று விட்டாள் ரம்யா. குழந்தை பிறந்த தகவல் சொல்ல வந்த அவளின் அப்பாவை அவமானப்படுத்தி அனுப்பினர், இரண்டு கிழவிகளும்!
விவாகரத்து நோட்டிஸ் அனுப்பவில்லை ராமச்சந்திரன்; அனுப்பியதாக பொய் சொல்லி விட்டான். குழந்தையை பார்க்க, போக தைரியம் இல்லை.

இதையெல்லாம் அவன் கூறக் கேட்ட போது, மனசுக்கு கஷ்டமாக இருந்தது.

”தப்பா நினைச்சுக்காதே… நான், சில கேள்வி கேட்கலாமா…”

”பெரியவர் நீங்க; தாராளமா கேளுங்க.”

”உங்க அத்தைக்கு குழந்தைகள் இல்லயா?”

”ஒரே பையன்; அமெரிக்காவில் நல்ல வேலையில இருக்கான். திருமணமும் ஆகிருச்சு. ‘கடல் கடந்து போக மாட்டேன்… முதியோர் இல்லத்துக்கும் போக மாட்டேன்’னு அடம்பிடிக்கிறாங்க, அத்தை. பையன், நிறைய பணம் அனுப்புறான்; எப்பவாவது வந்து பாத்துட்டு போவான்.”

”அத்தை, வீட்டு செலவுக்கு பணம் ஏதாவது கொடுக்கிறாங்களா…”

”வாங்க கூடாதுன்னு சொல்லிட்டாங்க, அம்மா. சிறு வயதிலிருந்தே, அவங்க ரெண்டு பேரும் பிரண்ட்சுக.”

அவனுக்கு, சில ஆலோசனைகள் சொன்னேன். பின், பிரசாதம் வினியோகம் முடிந்து கிளம்பினேன். போன் நம்பரோ, விலாசமோ வாங்கிக் கொள்ளவில்லை.

ஒரு ஆண்டுக்கு பின் —

பெருமாளின் திவ்ய தரிசனத்துக்கு, கோவிலுக்கு வந்திருந்த நான், கண்களை மூடி, அவன் அழகு திருக்கோலத்தை மனதில் தியானித்தேன்.

தீப ஆரத்தியை கண்களில் ஒற்றியபடியே, எதிர்வரிசையில் பார்த்தால், ஒன்றே கால் வயது பெண் குழந்தையுடன், ராமச்சந்திரன்! ரோஜா புஷ்பம் போல சிரித்தது, குழந்தை; பக்கத்தில் ரம்யா.

கண்ணீருடன் கை கூப்பினர், நன்றி சொல்லும் பாவனையில்!

வழக்கம் போல், வேத பாடசாலையில் பிரசாதம் தயாரிக்கச் சொன்னோம். நான் தயிர் சாதம்; ராமச்சந்திரன் சர்க்கரை பொங்கல்.

ரம்யாவும், ராமச்சந்திரனும் நமஸ்காரம் செய்தனர்.

”மாமா… நீங்க தான் எனக்கு…” என்று ஆரம்பித்த ரம்யாவை தடுத்து, ”எல்லாம் வரகூர் பெருமாள் அனுக்ரஹம்,” என்று கூறி, குழந்தையை தூக்கினேன். அது, என் வழுக்கை தலையை தடவி, கள்ளமில்லாமல் சிரித்தது.

”அம்மா வரலை?”

”முழங்கால் வலி; நீங்க போயிட்டு வாங்கன்னு சொல்லிட்டா,” என்றவன், ”சார் நீங்க சொன்னபடி செஞ்சேன்; அத்தையோட பையன் கிட்ட நாசூக்கா பேசி, அவங்கள அமெரிக்கா அனுப்பிட்டேன். அம்மாவிடம், ‘இந்த ப்ளாட் வாஸ்துப்படி இல்ல’ன்னு பொய் சொல்லி, வீட்டை வாடகைக்கு விட்டு, ரம்யா அலுவலகத்துக்கு போய் வர வசதியாய், அவள் அலுவலகத்துக்கு பக்கத்துல வீடு பார்த்து, ‘ஷிப்ட்’ செஞ்சேன்.

”ரம்யா திருச்சியில பிறந்த வீட்டில் இருந்த போது, கோவிலுக்கு போவோம் என்று சொல்லி, அம்மாவ கூட்டிட்டு, திருச்சி போனேன். கோவிலுக்கு போன பின், ரம்யா வீட்டுக்கு போனோம். முன்னாடியே, நாங்க வரப் போறதா அவளுக்கு, ‘இ – மெயில்’ அனுப்பியிருந்ததால, அவங்க வீட்டுல அம்மாவுக்கு ராஜோபசாரம். குழந்தை, பாட்டி ஜாடைன்னு சொன்னதும், அம்மாவுக்கு பரம சந்தோஷம். நல்ல பொண்ணை படுத்திட்டோம்ன்னு சொல்லிச் சொல்லி, மாஞ்சு போய்ட்டாங்க.
”இப்ப எல்லாரும் சந்தோஷமா இருக்கோம்; ‘மனைவி வேலைக்கு போனா, கணவனும் உறுதுணையா எல்லா வேலையிலும், ‘ஷேர்’ செய்துக்கணும். இந்த காலத்தில், பெண்கள் வேலைக்கு போறது தவிர்க்க முடியாதது; அதுக்கு ஏத்தாப்போல எல்லாரும் மாறணும்’ன்னு நீங்க சொன்னது போல, இப்ப நானும், ரம்யாவுக்கு உதவி செய்றேன்; அம்மா குழந்தையை பாத்துக்கறா; முடிஞ்ச வேலையும் செய்றா. எல்லாம் உங்க, ‘அட்வைஸ்’ தான்.”

மறுபடியும் நமஸ்காரம் செய்தனர்.

எனக்கு பரம சந்தோஷம்.

யாருடைய விவாகரத்து பற்றியாவது கேள்விப்படும் போது, வருத்தமாகவும், காலம் இன்னும் முழுமையாக மாறவில்லையோ என்ற சந்தேகமும் வரும். இப்போது, என்னால் சிறிய புரிதலை ஏற்படுத்த முடிந்ததை நினைத்து மனம் ஆனந்தப்பட்டது.

பெருமாளை சேவித்து, அவர்களிடமிருந்து விடை பெற்ற போது, நாவில், சர்க்கரைப் பொங்கல் இனித்தது.

– ஜூலை 2017

Print Friendly, PDF & Email

1 thought on “மாற வேண்டிய மனங்கள்!

  1. அருமையான கதை,ஆரோக்கியமான அறிவுரை 🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *