மாமனிதர்கள்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 23, 2021
பார்வையிட்டோர்: 5,083 
 

Mamanitharkalஎங்க எங்க இருந்தோ அள்ளிகினு வந்ததையும், நசுங்கி போனதையும், செதஞ்சு போனதையும், நாக்கு தள்ளுனதையும், கண்ணு பிதுங்குனதையுமுலாம் அறுத்து பார்த்த கையி. அப்போலாம் கூட எந்த உணர்ச்சியும் இல்ல ஒரு மண்ணுமில்ல. எங்க இருந்துடா குமாரு வந்துச்சு இம்மாம்பெரிய ஃபீலிங்கு. ஆனா சும்மா சொல்ல கூடாதுடா குமாரு நீயும் காதல் மன்னன்டா யப்பா.

எத்தனையோ பேரு அழுதுகினும் கத்திகினும் வந்து பாத்திருக்கேன், ஆனா அவ அழுதது மட்டும் என்னைய இன்னா பண்ணுச்சுனு தெரில. அவ அழுதது எனக்கு கஷ்டமா, இல்ல அவ கண்ணு அழுதது எனக்கு கஷ்டமா. ஒருவேளை பொணத்து கூட ஒரே பொண்ணா வந்த நால நமக்கு ஃபீலிங்கா, சே சே அதெல்லாம் இல்ல அவட்ட என்னமோ இருந்துச்சு ஆனா என்னனு தான் சொல்ல முடியல.

சரிடா யப்பா எதோ இருந்துச்சு, அவங்க அப்பனை போஸ்ட்மாடம் பண்ணி அடக்கம் பண்ண உதவி பண்ணுனேன், அதுக்குலாமா காதல் வரும். அப்போ அவட்ட நீ பார்த்த மாதிரி என்னமோ உன்னாண்டயும் அவ பார்த்திருக்கா நைனா. சரி சரி அப்புறம் எங்க பார்த்தேன் அவள. அடுத்தநாள் ரோட்டுல மயங்கி கிடந்தா. கன்னம் ரெண்டும் ஒட்டி போயி கிடந்துச்சு. இந்த கையி பாசமா தொட்ட மொத கன்னம் அதான்.

அப்புறம் வீட்டாண்ட இழுத்துனு போயி ரெண்டு இட்லி வாங்கி குடுத்தேன். அதுக்கும் சொந்த குடிசை இருந்துச்சு, அதோட போயிருக்க வேண்டிய தான. நீ எங்கடா விட்ட பேமானி. அதான் என்ன ஏதுனு விசாரிச்சு ஒரு வழி பண்ணிட்டியே. ஆமா நான் விசாரிச்சா மட்டும் காதல் பொத்துக்கினு வந்துடுமா. அவளுக்கும் நம்பிக்கை இருந்துறுக்கு மேன், அதுனால தான் என்னைய கட்டிக்கினா.

என்னா அழகு அவோ. அவோ அழகுக்கு அவோ வாழ்க்கைல எத்தன ஹீரோ வோணா இருந்துறுக்கலாம், ஆனா எனக்கு அவோ தான் மொத ஹீரோயினி. என்ன கட்டிக்குனு வந்த கொஞ்ச நாளுலே கும்தானு ஆயிட்டா என் நீலமயிலு. அவ அப்பன் கீஞ்ச வாயன் இருந்தா கூட அவள இம்மா நல்லா பாத்துருப்பானா. அவன் இன்னா பாத்தான் சோமாரி, எங்க போயி இன்னா பேசுனானோ அவன் வாய கீச்சி கொன்னுட்டாங்கோ. எப்படியோடா சாமி நீ செத்த நால தானே அவோ என்னாண்ட வந்தா. இல்லை நீ சொந்த குடிசையும் வசிக்கினு இந்த போஸ்ட்மாடம் பண்ற பயலுக்கு உன் பொண்ண குடுத்திருப்ப? நல்லா குடுத்திருப்ப, மயிருல குடுத்திருப்ப. சரி விடு குமாரு போயிட்டு போறான் வெட்டிப்பய, இப்போ எதுக்கு அந்த கீஞ்ச வாயன் பேச்சு.

என்னோட நீலமயிலு அந்த மொத நாலு ராத்திரில கையில சொம்போட வந்து வெளக்கு வெளிசத்துல நின்னு வெட்க பட்டுச்சு பாரு. ஐயோ சாமி! ஒம்போது வருஷமா நானும் இந்த சென்னைல வந்து ஒவ்வரு தியேட்டரா ஏறி எறங்குறேன், ஒருத்தி காட்டலயே அந்த ஜாலத்த. இன்னைக்கு நைட்டு கனவுல வந்து வெட்க படுவா, நான் வோணா சிபாரிசு பண்றேன் வந்து நடிக்க கத்துக்கோங்கடீ எல்லாரும்.

அவோ காதல் வந்து முட்டுன நாலயோ என்னமோ தெர்ல, அன்னைக்கு என்னை அறியாம அந்த அஞ்சு வயசு பொண்ணு ரேப் கேஸ் ஒடம்பை தொடுற அப்போ கையெல்லாம் ஒதரிடுச்சு. கண்ணு அதும்பாட்டுக்கு சாரையா ஊத்துது. அரிப்புக்கு பொறந்த கம்முனாட்டிங்கோ. வெளிய நிக்குற பெத்ததுங்கள நெனச்சி பார்த்து, முடியலனு சொல்லிட்டு கெளம்பவும் மனசு இல்ல. அந்த முனுசாமி பேமானியும் குடிச்சுட்டு அன்னிக்கு லீவ் போட்டுட்டான். நானும் எம்பாட்டுக்கு விட்டுனு போயிருந்தா இன்னும் கூட ஒருநாள் ஆயிருக்கும் பாவம். முடிச்சு குடுத்துனு அவங்க சொந்தத்துட்ட பாப்பா பேரு இன்னானு கேட்டேன், “திரௌபதினு” சொன்னாங்கோ. அதே நெனப்புல உம்முனு வீட்டுக்கு போனா சரியா கண்டுபுடிச்சாலே என் மயிலு.

இன்னாயா உன்னாண்ட நல்ல விஷயம் சொல்லலாம்னு வந்தா உம்முனு இருக்க அப்படினு கேட்டா. அவங்க அப்பன் கீஞ்ச வாயனுக்கே சுருண்டு விழுந்தவ அவோ, நல்லதா என்னமோ சொல்ல வந்தானு சப்பக்கட்டு கட்டி மூடிட்டேன் அந்த விஷயத்த. சரி இன்னாடி மேட்டர்னு கேட்டா, மூனு மாசம் முழுகாம இருக்கேன்னு சொன்னா. அன்னைக்கு அதே மொத ராத்திரில பார்த்த வெட்கம், நானும் அதே மாதிரி பாயோட சுருட்டி போட்டுகிட்டனே. ஆனா அடுத்த நாளு அவளாண்ட கண்டிஷனா சொல்லிபுட்டேன், பொண்ணு பொறந்தா நிச்சயம் திரௌபதி தான் பேருனு. அவளும் பதிலுக்கு போயா எனக்கு பையன் தான் பொறப்பான், அவனுக்கு கண்டிப்பா நான் தான் யோசிச்சு பேரு வைப்பேன்னு சொல்லிபுட்டா. சரி பகல் கனவு காங்காதனு சொல்லிட்டு வந்தேன்.

அடுத்தநாளு சாயங்காலம் வாங்கிட்டு போன சுவீட் ஓட சாறு, அவ உதட்டோரம் வடிய அதவிடவா டேஸ்ட் வேணும், இன்னும் என் நாக்கு இனிக்குது. நீ கமலுக்கே டஃப் குடுப்படா குமாரு. அப்படியே என்ன அழகான லவ் ஸ்டோரி போச்சு நமக்குள்ள. அந்த பத்தாமாசம் மழை காலத்துலயா வரணும். மழைய காரணம் சொல்லி நம்ம காலனிகுள்ள ஒரு ஆம்புலன்ஸ் காரனும் வர முடியாதுனு சொல்லிட்டானேடீ. நானும் முடிஞ்ச வர பீட்டர இழுத்துனு வந்து ஆட்டோல உன்னையும் திரௌபதியவும் வேகமா தானேடீ கூட்டினு போனேன். என்னால ஒன்னும் பண்ண முடியலயேடீ என்று தனக்குத் தானே புலம்பிக் கொண்டு கண்களில் அடைமழை பெய்ய அதை துடைத்தவாறே அருகில் இருந்த குப்பை மூட்டையை மீண்டும் எடுத்து சுமந்தவாறு குப்பைகளை பொறுக்கிய வண்ணம் கடலோர சாலையில் சென்று கொண்டிருந்தான்.

அவன் நடந்து சென்ற பாதையில் அவனுடைய மெலிந்த முகத்தையும், அடர்ந்த தாடியையும், வெட்டாத சடை முடியையும், கிழிந்த ஆடையையும் கண்டு வழியில் சென்ற யோக்கியவான்கள் அனைவரும் அவனை விட்டு இரண்டடி தள்ளிச் சென்று மரியாதை கொடுத்து நடந்து சென்றனர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *