மான பங்கம்

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 22, 2013
பார்வையிட்டோர்: 12,131 
 

வகுப்புத் தோழன் குண்டனை காலை – அந்தக் கோலத்தில் – கண்டதில் இருந்து நந்தனின் மனம் திக் திக் என்று இருந்தது.

நந்தன் இதற்கு முன் தேங்காய் பாதியை கடித்து விட்டு தங்கச்சியை சாட்டி விடுவது , தான் வலிய அவளுக்கு அடித்து விட்டு அவள் அழுதால் ‘தங்கச்சிதான் முதல் அடிச்சவள்’ என்று கதையை மாற்றி விடுவது என முட்டையாலவெளிய வந்த சின்னச் சின்ன குஞ்சுப் பொய்கள் சொல்லி இருக்கிறான். ஆனால் இன்று காலை செய்தது வித்தியாசம் . இது பொய்யை விட பெரிசு களவைவிட சின்னன் .

அது வன்னி மண்ணில் உள்ள மன்னார் மாவட்டதின் ஒரு சிறு கிராமம். உப்புக்காற்றும் , பூவரசு மரமும் , புழதி மண்ணும் மட்டுமே கொண்ட பின்தங்ஙிய பகுதியான அங்கேதான் இருக்கிறது இந்த ஐந்தாம் வகுப்பு வரையே உள்ள இலுப்பைக்கடவை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை. ஆனாலும் ஆசிரியர்களின் அயராத உழைப்பால் ஆண்டுதோறும் குறைந்தது நான்கு அல்லது ஐந்து மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து கொண்டு இருந்தார்கள்.

இன்று நந்தனின் வகுப்பு ; நாலாம் ஆண்டு மாணவர்களுக்கான சுகாதாரப் பாடம் பரீட்சை.-கை கால் நகம் , தலை முடி , உடுப்பு போன்றவற்றின் சுத்தம் பார்த்து புள்ளி வழங்குவார் ஆசிரியர்.

நந்தன் நன்றாக குளித்து முழுகி , நகங்கள் வெட்டி , சுத்தமான ஆடை அணிந்து னொண்டுதான் பாடசாலைக்கு வந்தான்.

ஆனால் இதோ நிக்கிறானே பக்கத்தில மாமிச மலைமாதிரி ஒரு குண்டன் . இந்த ஊரின் ஒரே வைத்தியர் விஜயரட்ணத்தின் மகன் . இவன் அழுக்குச் சட்டையோடு பாடசாலைக்கு வந்ததை பார்த்ததில் இருந்து நந்தனின் மனம் இப்படி நடுங்க ஆரம்பித்து விட்டது .

குண்டனுக்கு பெயரும் ஒன்று இருந்தது ஆனால் அவனின் உடம்பு அதையும் மறைத்து விட்டது. ஊர் பெரிய புள்ளியின் மகன் என்பதால் யாரும் அவன் முன் குண்டன் என பேசமாட்டார்கள்.

“இப்படி குண்டன் என்று அவன் இல்லாத போது மட்டும் ஏன் பேசுகிறார்கள் ? “என நந்தன் தந்தையிடமே கேட்டு விட்டான். அதற்கு அப்பா சொன்ன பதிலான

அந்த “ கண்டால் கட்டாடி காணாவிட்டால் வண்ணான்” என்ற பழமொழிதான் நந்தனுக்கு அடிக்கடி ஞாபகம் வரும்.

சுகாதாரப் பரீட்சை பற்றி குண்டன் அக்கறை கொள்வதாக தெரியவில்லை. இறுதியில் நந்தனே அவனிடம் சென்று .

“ஏன்டா இந்த ஊத்தை சட்டையை போட்டுக் கொண்டு வந்தாய் ? ” என்றான்.

“உன்ர அப்பாட்டத்தான் தோய்க்க கொடுத்தது இன்னும் கொண்டு வர வில்லை” என்று ஒரே மூச்சில் மூஞ்சிக்கு நேர சொன்னான் குண்டன்.

“இருந்த எல்லாச் சேட்டையும் வெளுக்கப் போட்டிட்டியா வீட்டில வேற சேட்டு இல்லையாடா ?”

“இருக்கு… ஆனா இண்டைக்கு சோதனை எண்டதை மறந்து போட்டன்” என்றபடி அருகில் இருந்த அப்புராணி பையன் மீது சாய்ந்து யானை போல் அமத்தினான். பையன் கிட்டத்தட்ட கும்புடு பூச்சி போல இருப்பான். இவனை விலக்கி ஒதுங்கி இருந்து கொண்டான்.

குண்டனுக்கு அனேகமான மாணவர்கள் பயம். அவன் ஆசிரியர்களின் செல்லப் பிள்ளை என்பது மாணவர்களின் நினைப்பு.

“ நகத்தை கடிச்சு எண்டாலும் துப்படா , தலையை சீவடா ” என சொல்லிக்கொடுத்து குண்டனும் ஓரளவு புள்ளி எடுக்க ஏற்பாடு செய்து கொண்டு இருந்தான் நந்தன் . ஆனாலும் சட்டை ஊத்தை போதாக் குறைக்கு ஏதோ பழரசம் கொண்டு வந்து குடித்து சட்டையில் ஊற்றி இருந்த வெள்ளை நிறத்திற்கும் மஞ்சள் அள்ளி வைத்துக்கொண்டு இருந்தான்.
குண்டனுக்கு சேட்டுப் போட்டால் முதல் பட்டன் அறுவதம் முதல் ஊத்தையாவதும் அவனின் வண்டியடில் தான்.

அடிக்கடி பொக்குள் – சேட்டை விலக்கி எட்டிப் பார்த்து சேட்டைவிட்டுக்கொண்டு இருக்கும்.

சுகாதார பாட ஆசிரியர் வகுப்புக்கு வந்து விட்டார்.

நந்தன் ஒரு முறை தனது உடை நகம் போன்ற வற்றை சரி பார்த்துக் கொண்டான்.

நந்தனிடம் இருப்பது ஆக ஒரு சேட்டும் இரண்டு காற்சட்டையும் தான். சனி ஞாயிறு நாட்களில் காற்சட்டையும் , பாடசாலை நாட்களில் காற்சட்டையோடு அந்த சேட்டையும் போடுவான். ஞாயிறு அம்மா தோய்த்து போடுவா. திங்கள் தொங்கல் வெள்ளையில் வலம் வருவான். செவ்வாய் பறவாய் இல்லை. புதன் அதன் நிறம் திரும்ப ஆரம்பிக்கும் . வியாழுன் வேறு ஒரு நிறத்தில் இருக்கும். வெள்ளி சொல்லி வேலை இல்லை. இந்த சீத்துவத்தில சுகாதாரப்பாடப் பரீட்சையை வேற இன்று வெள்ளிக்கிழமை வைத்தவிட்டார் ஆசிரியர் . பாடசாலை முடிந்து ஏரி ,குளம் ,குட்டை ,பாறை ,பறுகு எல்லாவற்றையும் நலம் விசாரித்து வீடு போக ஐந்து மணி யாகும் அதன் பின் தோய்த்தால் காயாது . அம்மாவிடம் சொன்னால்.

“வியாழன் பள்ளிக்கூடம் போகாம சேட்டை தோச்சுப்போட்டு வெள்ளி போட்டுக்கொண்டு போ” என்று சொல்லுவார் . வியாழனும் பரீட்சை இருந்ததால் வாயே திறக்காமல் இருந்து விட்டான்.

இன்று விடியத்தான் அவனுக்கு அந்த யோசனை வந்தது.

அப்பா தோய்த்து அயன் பண்ணி அடுக்கி வைத்து – பல நாட்களாக யாரும் வந்து எடுக்காமல் – இருந்த ஒரு உடுப்புக் கட்டில் இருந்து யாருக்கும் தெரியாமல் ஒரு வெள்ளை சேட்டை உருவி போட்டுக் கொண்டு வந்து விட்டான். பாதி தூரம் வந்த பின் தான் சேட்டு பெரிதாக இருப்பதைக் கண்டு ஒரு சந்தேகம் வந்தது ‘ ஒரு வேளை குண்டனின் சேட்டாக இருக்குமோ.. ? ‘ என்று.

இப்போது சந்தேகம் உறுதியானது.

குண்டனை இப்படி – குழியில் விழுந்த குட்டியானை – கோலத்தில்
கண்டதும் .
அப்பா ; கெதியாக் கொடுக்காததாலதான் மகனின் புள்ளி குறைந்த விட்டது ‘ என்று வைத்தியர் அப்பாவின் மேல் குறை கூறுவார் என்பது ஒரு புறமும் , எங்கே இந்த சேட்டை அவனது சேட்டு என்று கண்டு பிடித்து விடுவானோ என்ற பயமும் நந்தனை ஆட்டிப் படைத்தது.

ஆசிரயர் பெண்களின் பக்கம் இருந்து சோதனையை ஆரம்பித்தார். ஒவ்வொருவராக எழுந்து அவரின் முன் சென்று கை ,கால், நகங்களை காட்டி விட்டு வந்து கொண்டு இருந்ததார்கள். நந்தனின் வளமையான இருப்பிடம் முதல் வரிசையில் மூன்றாவது கதிரை ஆனால் குண்டனை அலங்கரிக்க வந்து குண்டனோடு நடு வரிசையில் மாட்டிக் கொண்டான்.

பெண்கள் முடிந்து ஆண்களின் பக்கம் திரும்பினார் ஆசிரியர். முதல் வரிசை முடிந்து இரண்டாவது வாங்கு ஆரம்பித்தது. குண்டனுக்கு அரகில் இருந்த மெல்லிய சூவால் எழும்பி போய் காட்டி விட்டு வந்து அமர்ந்தான்.

“எத்தின புள்ளியடா ?” என்றான் குண்டன்.

“அவரையோ அவர் போட்ட புள்ளியையோ எங்கே நான் பாத்தன் . என் விரல் சுத்தமா இருக்கா ? என்று நான் பாத்து முடிக்கிறதுக்குள்ள சரி போய் இரு என்று சொல்லிவிட்டார்” என்றான் அவன்.

“அடுத்தது ஆள் எழும்பு” என்றார் ஆசிரியர்.

குண்டன் எழும்பினான். எழும்பும் போதே நந்தனை உரசிக் கொண்டு எழும்பினான் .

” என்னடா நகம் இது ?”
“…… …….. …….. …….”
“என்ன கோலம் இது ?”

“…… …….. …….. …….”

நான் கேக்கிறன் பதில் ஒண்டையும் காணேலல் என்ன கோலமடா இது ?”

“அலங்கோலம்” என்றான் குண்டன்.
“அதுதான் ஏன் ?.”

“வெட்ட மறந்து போயிற்றன்”.
“ஏன் சேட்டு வெளிய வந்து கிடக்குது?”

இப்போது அந்த கும்புடு பூச்சிப் பையன் பதில் சொன்னான்.

“ எனக்கு மேல வேணுமெண்டு விழுந்தவன் சேர் ”
“ஏனடா தோய்த்த சேட்டு போடாம வந்தாய்.? ”

“நந்தன்ர அப்பாட்ட வெழுக்க கொடுத்தது இன்னும் வரேல்ல சேர்” . என்றான் நந்தனை பார்த்தபடி.

ஆசிரியர் எதும் பேசவில்லை .

“ என்னடா இது மஞ்சள் . நீலம் போட்டு தோய்க்கிறதக்கு பதிலா மஞ்சள் போட்டு தோச்சனியோ..?” என்றார் ஆசிரியர். மாணவர்கள் சிரித்து பின் கையால் வாயை பொத்தி அடக்கினார்கள்.

நந்தனுக்கு ஆசிரியர் மேலும் போபம் வந்தது . ‘இருக்கிறத பார்த்து புள்ளியை போடாம ஒருதரையும் கேக்காத கேள்வியை ஏன் இவனை மட்டும் கேக்கிறார் ?’

“ சரி சரி போய் இரு” என்றார் .

குண்டன் அதுக்குள்ளயும் எத்தனை புள்ளி என்று பாத்து விட வேண்டும் என்று நின்றான். ஆசிரியர் வெறுப்புடன் “ இருபது புள்ளி போய் இரு “ என்றார் . அடுத்து நந்தன்.

“சுத்தம் என்றால் இப்படித்தான் இருக்கவேணும் . எல்லாரும் நந்தனை ஒருக்கா பாருங்கோ “ என்றார் ஆசிரியர்.
இதற்கு முன் யாரும் நந்தனை பாராதவர்கள் போல் விழுந்து விழுந்து பார்த்தார்கள்.
“ நந்தன் இப்படித்தான் ஒவ்வொரு நாளும் வரவேணும் . சரி போய் இரு “ என்றார்.

நந்தன் தான் முதல் இருந்த வாங்கை னோக்கி இருக்க போனான். “எங்க போறாய் ?” என்றார் ஆசிரியர்.

“என்ர இடத்தில்ல இருக்கப் போறன் சேர் ”
“பிறகேன் பின்னுக்கு போன நீ…? இப்ப அந்த இடத்திலயே இரு சோதினை முடிஞ்சாப் பிறகு மாறி இரு” என்றார்.

மீண்டும் நந்தன் குண்டனுக்கு அருகில் வந்தான். குண்டன் நந்தனையே பார்த்துக்கொண்டு இருந்தான். கிட்ட வந்ததம் அவனின் சேட்டை பிடித்து வம்புக்கு வெளியே இழுத்து விட்டான் . குண்டனுக்கு தன்னை விட யாரும் நல்ல பெயர் எடுத்தால் பிடிக்காது . நந்தன் அதை கண்டு கொள்ளாமல் இருந்து விட்டான். ஆசிரியர் ‘அடுத்தது யார் ‘என்றார்.

“சேர் …சேர் … நந்தன் போட்டிருக்கிறது என்ர சேட்டு சேர். தோய்க்கக் கொடுத்த என்ர சேட்டில கீழ் மடிப்புக்குள்ள – நான் பென்சில் வைக்க வட்டாரியால போட்ட ஓட்டை – இவன் போட்டிருக்கிற சேட்டில இருக்கு சேர், இந்த சேட்டு நந்தனுக்கு அளவில்லாம பெரிசா இருக்கு சேர் , நான் சொல்லுறது பொய் எண்டால் நந்தனைக் கூப்பிட்டு பாருங்கோ சேர் , முறைப்படி அந்த சேட்டுக்குள்ள நான் தான் இருந்திருக்க வேணும் . அந்த சேட்டுக்காக போட்ட புள்ளியை எனக்கு போடுங்க சேர் ” என்று கத்தினான் குண்டன்.

நந்தன் செய்வதறியாது திகைத்தான்.

மாணவர்கள் நந்தனையும் அவன் சேட்டையும் மாறி மாறி பார்த்தனர். சற்று முன் பெருமையாக பார்த்தவர்கள் இப்போது ஒரு புழுவைப் போல் பார்த்தார்கள். எது நடக்கக்கூடாது என்று நினைத்தானோ அது நடந்து விட்டது. தலையை குனிந்தபடி கடைக்கண்ணால். மாணவர்களைப் பார்த்தான் பின் கண்களை மூடிக்கொண்டான்.

ஆசிரியர் சற்று குழம்பி விட்டார். இப்படி ஒரு சூழ்நிலையை இதற்கு முன் அவர் எதிர்கொண்டதில்லை. குண்டன் சொல்வது போல் சேட்டு நந்தனுக்கு பெரிதாகத்தான் இருந்தது. அதுமட்டுமல்லாது நந்தன் வெள்ளிக் கிழமையில் வரும் கோலம் அவருக்கு தெரியும் . நந்தனின் அப்பா டோபி என்பதும் வீட்டில் வறுமை என்பதும் அவருக்கு நன்றாக தெரியும். நந்தனின் ளெனமும் அவரின் சந்தேகத்தை வலுப்படுத்தியது. ஆனாலுல் – குண்டனின் சந்தேகம் சரியாக இருந்தாலும் குண்டன் நடந்து கொண்ட முறை ஏற்றுக்கொள்ள முடியாதது.

இதற்காக குண்டனை தண்டித்தால் வைத்தியரின் மனைவி உண்மையை கண்டறியும் பட்சத்தில் பிரச்சனை மேலும் சிக்கலாகி விடும் . குண்டன் கெட்டிக்காறன் இல்லை . ஆனால் அவனின் தாய் விடைத்தாள் திருத்தம் , புள்ளி வழங்கல் போன்றவற்றில் குறை பிடிப்பதில் கெட்டிக்காறி.

பேசாமல் அதிபரிடம் அனுப்பிவிடலாமா ? என்றால் அந்த மனுசன் ஈரைப் பேனாக்கி பேனை பெருமாளாக்கி விடும் ஒரு ஞானசூனியம். குண்டனை கண்டித்து சமாளித்து விடுவோம் என யோசித்தபடி
குண்டனைக்கூப்பிட்டார்.
குண்டன் எழும்பிப் போய் அவர்முன் நின்றபடி நந்தனை பார்த்தான்.

நந்தன் எழுந்து ஆசிரியரைப் பார்த்து.

“ சேர் இது என்னுடைய சேட்டு ” என்றான் தீர்மானமாக.

“ அப்ப அந்த ஒட்டை ? ” குண்டன் கேட்டான்.

ஆசிரியருக்கு குண்டன் மேல் கோபம் வந்தது . வறுமையின் வலியை கிண்டிப்பார்க்க வேண்டாம் என தான் அமைதியானாலும் இவன் விடமாட்டான் போலிருக்கிறதே ? ஆனாலும் நந்தனின் பக்க நியாயத்தை அறிந்த பின் முடிவெடுக்கலாம் என்று அமைதியாக இருந்து விட்டார்.

“ இது நான் போட்ட ஓட்டை” என்றான் நந்தன்.

“ உனக்கு அளவில்லாத சேட்டா இருக்கு நீ இதை போட்டதை நான் ஒருக்காலும் காணவில்லை ” என்றான் குண்டன்.

“அளவில்லை அதுதான் நான் போடுறதில்லை”

“ அளவில்லாம ஏன் தைச்சனி ?”

“வளர வளர போடலாம் எண்டு அம்மாதான் சொல்லி தைச்சவா ”

இப்போது மாணவர்கள் குண்டனை ஏற இறங்க பார்த்தனர். குண்டனும் ஒரு கணம் நிலை தடு மாறி விட்டான். அனாலும் பின்வாங்க வில்லை
“என்ர சேட்டு என்பதற்கு அந்த ஓட்டை இருக்கிற மாதிரி உன்ர சேட்டு என்பதற்கு உன்னிட்ட ஏதாவது அடையாளம் இருக்கா? ” என்றான் குண்டன் .

நந்தன் காற்சட்டையினுள் விட்டிருந்த சேட்டின் பகுதியை வெளியே எதுத்து கீழ் பக்கத்தில் ’ ட’ வடிவில் கிழிந்திருந்த பகுதியை காட்டி

“ இது பூவரசமரம் ஏறேக்க கொப்பு குத்தி கிழிச்சது உன்ர சேட்டிலயும் இப்படி கிழியல் இருந்ததா ? நீதான் மரமே ஏறமாட்டியே ” என்றான் நந்தன்.

குண்டன் குனிந்தபடி வந்து இருந்து விட்டான்.
தந்தை தோய்க்கும் போது கல்லு குத்தி இரண்டு உடுப்பு கிளிந்து விட்டதாக அம்மா சொன்னது இந்த மான பங்கத்தில் இருந்து காப்பாற்றி விட்டது.

பாடசாலை விட்டது.

மாணவர்கள் முண்டி அடித்துக் கொண்டு வெளியேறினார்கள்.

‘இனி இந்த விசப் பரீட்சை வேண்டாம்’.

‘அல்லா …! , பிள்ளையாரப்பா… !! , யேசு நாதரே…!!! எல்லாருமாக சேர்ந்து இந்த முறை மட்டும் என்னை காப்பாற்றி விடுங்கோ…. நானே இதை மீண்டும் தோய்த்து குண்டனின் அம்மாவிடம் கொண்டு போய் கொடுத்து நான்தான் தோய்ச்சனான் தோய்க்கேக்குள்ள சலவைகக்ல்லு குத்தி கிளிஞ்சுபோச்சு , அப்பாட்ட சொல்லாதேங்கோ அடிப்பார் . இதையே பள்ளிக்கும் போட்டுக் கொண்டு போயிற்றன் என்னை மன்னிச்சுக்கொள்ளுங்கோ தெரியாம செய்து போட்டன் ” என மன்னிப்பும் கேட்டு விடுகிறேன். அவர் மிகவும் பொல்லாதவர்.

“கீழ்சாதிக்காரர் உடுத்தினதை என்ர பிள்ளை போடுறதோ..?” என்று திட்டி குப்பையில தூக்கி எறிவார் அதுக்காக “எங்கிட கையால தோய்க்கிறது , புளியிறது , ஏன் புளிங்சதை தோள்ள போட்டுக் கொள்ளவது எல்லாம் தீட்டு இல்லை உடம்பில போட்டாத்தான் தீட்டா?” என்று கேட்கவா முடியும். வீட்ட சொல்லிப் போடாதேங்கோ எண்டு காலில வேணுமெண்டாலும் விழுந்து விட வேண்டும். குண்டன் இரண்டு அடி எண்டாலும் அடிக்கட்டும் வேண்டிக் கொள்கிறேன் ஆனா அப்பா அம்மாவிட்ட சொல்லி விடாம நீங்கள் தான் பாத்துக் கொள்ள வேண்டும் கடவுளே… ‘என வேண்டியடி பாடசாலையை விட்டு வெளியே வந்தான்.

பின்னால் நடந்து வந்த குண்டன் திடீரென இவனை விலத்திக் கொண்டு ஓடினான். சற்று தூரம் போன பின் திரும்பி இவனையே பார்த்துப் பார்த்து ஓடினான். நந்தனுக்கு ஒன்றும் புரியவில்லை.
‘ தாயிட்ட சொல்லப் போறானா ? இல்லை தகப்பனை கூட்டிவரப் போறானா ? ‘ தடுமாறினான்.

பின்னால் வந்த பெண் பிள்ளைகள்.

“அண்ணா குண்டன் உங்கிட சேட்டில மை அடிச்சுப் போட்டு ஓடுறான். சேட்டின் கதை சரி ” . என்றார்கள்.

கையால் தடவிப்பார்த்தான் நீல மை – வெள்ளாவி வைச்சு கஞ்சி போட்டு தேச்சாலும் இந்த மை போகாது. குண்டன் திரும்பி பார்த்தபடி ஓடிக்கொண்டிருந்தான்.

நந்தனுக்கு ஆத்திரம் தன்மேலும் வந்தது. குண்டன் விசமத்தனமாகத்தான் இப்படி செய்திருக்கிறான். இனி குண்டனின் தாயிடம் சமாதானம் பேச முடியாது . விடையம் வீட்டிற்கும் தெரிய வந்து விடும் . அப்பா வைத்தியரின் முன்னால் விட்டு அடிப்பார். என்னை மன்னிப்பு கேக்கச் சொல்லி கேட்பார்.

பிரச்சனை கைமீறி போய்விட்டதை உணர்ந்து. தன் இயலாமையை எண்ணி வெம்பினான். கண்ணில் இருந்து சில துளிகள் முன் பக்க சேட்டிலும் விழுந்து புரண்டது

கால்களில் வீட்டின் படலை தட்டுப்பட்டது . பேய் பிடித்தவன் போல் வீட்டினில் நுழைந்தான். சமையல் அறையில் அம்மா நின்றார். குனிந்த படி சாமி அறைக்கு சென்றான். ஆனால் தாய் அவனின் பின்புறத்தை அவதானித்து விட்டார்.

அங்கிருந்த வாறே

“இப்படி பிரச்சனை வரும் எண்டுதான் “கிழிஞ்ச சேட்டு எங்களுக்கு வேண்டாம்” எண்டு வைத்தியர் அம்மா திருப்பி தந்தும் கொஞ்சக் காலம் போகட்டும் எண்டு உனக்கு தராம வைச்சிருந்தனான்” என்றார் அம்மா.

Print Friendly, PDF & Email

2 thoughts on “மான பங்கம்

  1. வணக்கம் அனோஜன் .
    ஈழ எழுத்தாளர்கள் மேல் நீங்கள் கொண்ட அக்கறைக்கு நன்றி ,சிறுகதைகள் மேல் கொண்ட விருப்புக்கு வாழ்த்துக்கள் .நீங்களும் ஒருவகையில் ஆயிரத்தில் ஒருவர் என தோன்றுகிறது – வாசிப்பத்தோடு நின்று விடாமல் ஒரு படி மேல் சென்று பதில் எழுதியவகையில் .இது நிச்சயமாக என்போன்ற ஆரம்ப எழுத்தாளர்களுக்கு மிகவும் உற்சாகமான ஊக்குவிப்பு . ‘மான பங்கம் ‘ எனது மூன்றாவது சிறுகதை .எனது வாசகனாக நீங்கள் தொடர்ந்து இருக்க எழுத முயல்கிறேன் .நன்றி .இவ்வண்ணம் .பசுந்திரா -சசி

  2. இலங்கை எழுத்தாளர்களிடம் இப்படி ஒரு நவீன நடையை காண்பது அரிது.உங்கள் நடை சுவாரசியப்படுத்துகின்றது. தற்கால ஈழ சமுதாயத்தின் பேச்சு வழக்கு ரொம்பவே மாறிவிட்டது. அதை பிரதிபலிக்கும் வகையில் தொடர்ந்தும் கதைகள் பின்ன வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *