மாத்திரை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 15, 2014
பார்வையிட்டோர்: 14,227 
 

மருத்துவர் கொடுத்த மாத்திரையைமுந்தானை முனையில் முடிந்துகொண்டு அம்மா கேட்டாள் “ டாக்டர்…………..இந்த மாத்திரை அலோபதியா,ஹோமியோபதியா, யுனானியா ? ”

மருத்துவர் அம்மாவை ஒரு புதிர்போல பார்த்தார்.“ பரவாயில்லையே ! உனக்கு இத்தனைமருத்துவமும் தெரிஞ்சுருக்கே! நீ என்னம்மா படிச்சிருக்கே?” என அவர் கேட்கும் பொழுது அம்மா முகம் பூச்சொரிந்து வியாபித்தது.

“ பனிரெண்டாவது டாக்டர் ”

“ அதுக்கு மேல ஏன் படிக்கல?”

அதற்கான பதிலை அம்மாஉதட்டை பிதுக்கி்க் காட்டினாள். படிக்க வைக்கவில்லை, பிடிக்கவில்லை. படிப்பின் அருமை தெரியவில்லை,…. என எத்தனையோ இல்லை அவளது உதட்டு பிதுக்கல் சொன்னது.

“ அந்த மாத்திரை பாதி அலோபதி, பாதி தன்வந்திரினு சொல்லலாம். அமெரிக்க- ஜெர்மனி மருத்துவர்கள் சேர்ந்து கண்டுப்பிடிச்சது. இந்த மாத்திரை கண்டுப்பிடிச்சு பல வருசமாச்சு. கிழக்கத்திய நாடுகள்ல பரவலா இந்த மாத்திரைக்கு எதிர்ப்புக்கிளம்ப அமெரிக்க அரசு விற்பனைக்குத் தடை விதிச்சிருந்தது. இப்பசந்தைக்கு வந்திருக்கு”எனச் சொல்லிக்கொண்டே அவர் ஒரு நோயாளியின் நாடித்துடிப்பை கணக்கிட்டுக்கொண்டிருந்தார். அப்போதுதான் நான் கேட்டேன் .“ மேம் …………இந்த மாத்திரையாலபக்க விளைவு எதுவும் வராதுல?”.

மருத்துவர் நோயாளிடமிருந்து பார்வை எடுத்துஎன் மீது குவித்தார்.வழக்கத்திற்கு மாறாக கண்களைச் சிமிட்டினார். பிறகு ஒரு கணம் கண்களை இறுக மூடித் திறந்தார். என்னை மிக அருகினில் அழைத்து கன்னங்களை வருடிக்கொடுத்தார்.

“ எந்த மாத்திரையில்தான் பக்க விளைவு இல்ல? சொல்லுடியம்மா……?” எனச் சொல்லிவிட்டு என்னுடைய பதிலுக்காக கொஞ்ச நேரம் காத்திருந்தார்.அவருடைய கேள்விக்கு என்னால் பதில் சொல்லமுடியவில்லை.நான் விரல்களை பிசைந்தபடி அமைதியாக நின்றுகொண்டிருந்தேன்.

“ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஒரு பொண்ணு வந்திட்டுப்போனதை நீ பார்த்தேள ?”

“ பார்த்தேன் மேம்”

“அவள் பனிரெண்டாவது படிக்கிறாளாம்.படிக்கிறதெல்லாம் மறந்து போயிடுதாம்.மாத்திரைக்கேட்டாள்.கொடுத்தேன். எனக்கு முன்னாடியே அந்த மாத்திரையை வாயில் போட்டுக்கிட்டு தண்ணீர் கொஞ்சம் ஊத்திக்கிட்டு ‘ நான் வாறேன் மேடம் ‘ எனச் சொல்லிவிட்டு கிளம்பிட்டாள். அவளுக்கு இப்ப தேவை மார்க் !வீட்ல எதிர்ப்பார்க்கிறதை விடஆயிரத்துக்கு மேல வாங்கணும்.இந்த மாத்திரையால பக்க விளைவு வருமா, வராதா என யோசிக்க அவளுக்கு மாத்திரை அளவிற்குக் கூட கால அவகாசம் கிடையாது”

என்னுடைய இமைகள் இழுத்து விடப்பட்ட வில் போல ஏறி இறங்கியது.

“ மேம் …………..தமிழ் இலக்கணம் பேசுறீங்க ?”.தமிழ் இலக்கணத்தில் ஒரு மாத்திரை என்பது ஒரு முறை கண் இமைக்கும் நேரம் என்பதை விளக்கும் விதமாக அவர் ஒரு முறை இமைகளை படக் கென மூடித்திறந்தார். பிறகு மருத்துவர் பார்வை அம்மா மீது பாய்ந்தது. “ பொண்ணுக்கு கற்பூரப்புத்தி. நல்லா வருவா.நல்லா படிக்க வையுங்க” என்றார். அதை அவர் மெலிதான அதிகார தோரணையில் ,கண்டிப்பு, வேண்டல், கெஞ்சல் கலந்த சொற்களால் அதை சொல்லியிருந்தார். என்னை பெருமைப்படுத்தி பேசியதை அம்மா பெரிதும் ரசித்தாள்.என் தோள்களைப்பற்றி உச்சி முகர்ந்தாள்.‘ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனை சான்றோன் எனக்கேட்டத்தாய் ‘ என்கிற திருக்குறள் என் நினைவில் நிழலாடியது . அந்தக்குறள் ஆண் மகனுக்கென்றுஇயற்றப்பட்டது என்றாலும் சான்றோன் என்கிற சொல்லுக்குள் பெண்ணாகிய நான் மெல்ல பொருந்திப்போயிருந்தேன்.

“ மேம் …….. நீங்க சொல்வதைப் பார்த்தால் இந்த மாத்திரையால் பக்க விளைவு வரும்.அப்படித்தானுங்களா……………?”

“பக்கவிளைவு வந்தால் என்னவாம்? அதுக்கும்தான் மாத்திரை இருக்கே…………..” என சொல்லிக்கொண்டே மூக்கு கண்ணாடியைக் கழட்டி மேசை மீது வைத்தார்.

“ உனக்கு இந்த மாத்திரை சாப்பிட விருப்பமா ? இல்லையா? முதலில் அதைச்சொல்லு”.

“ இல்ல மேம்”

அம்மா சட்டென என் வாயைப்பொத்தினாள்.இடையில் புகுந்தாள்.“ அவள் கெடக்கிறாள் டாக்டர். அவளுக்கு என்னத்தெரியும்?அவளுக்குலட்சக்கணக்கில் செலவு செய்து படிக்க வைக்கிறது நான்.அவளுக்கு இந்த மாத்திரையை கொடுக்கத்தான் வேணும் ”

“ அப்படினா உங்க மகளை சம்மதிக்க வையுங்க ” எனச்சொல்லிவிட்டு கழட்டி வைத்த கண்ணாடியை துடைத்து மாட்டிக்கொண்டார்.

அம்மா என்னை ஒரு தனியறைக்கு அழைத்துச்சென்றாள். அரை மணி நேரத்திற்கு மேலாக பேசி என் மூளையை சலவைச்செய்தாள். பிறகு நான்,அம்மா கிழித்த கோட்டில் நின்றேன்.

”மாத்திரையை இன்னைக்கு கொடுக்கட்டுமா? இல்ல நாளைக்கு கொடுக்கட்டுமா
டாக்டர் ?” இதுஅம்மாவின் அடுத்தக்கேள்வி.

மருத்துவக் குறிப்பு எழுதுவதில் வேகம் காட்டிருந்த அவர் சற்று எரிச்சலுடன் அம்மாவை நிமிர்ந்து பார்த்தார். அவருடைய கழுத்து நரம்புகள் விடைத்திருந்தன. குரல்வளை பள்ளம் ஏறி இறங்கியது.உதட்டை நெழித்து வாடிக்கையாளர்க்கென்று ஒரு சிரிப்பு இருக்குமே அந்தச்சிரிப்பால் அம்மாவை கோர்த்து இழுத்தார்.“ ஏன்…………. இன்னைக்கு என்னவாம் ? இப்பவே கொடுக்கலாமே” என்றார்.

அம்மா சற்று தயங்கினாள்.கைகளை பிசைந்தாள்.முந்தானையை கைகளில் அள்ளி கசக்கினாள்.“ டாக்டர் இன்னைக்கு நல்ல நாள் தானுங்களா? ”

அம்மாவின் கேள்வியை மருத்துவர் சட்டை செய்யவில்லை.ஒரு நோயாளியின் நாக்கை நீட்டச்சொல்லியும் , இமைகளை கீழே இறக்கியும் டார்ச் விளக்கின் ஒளியைப் பாய்ச்சி இரத்த நரம்புகளைப் பார்த்துகொண்டிருந்தார்.

“ டாக்டர்……………..இன்னைக்கு நல்ல நாள் தானுங்களா?” முதலில் கேட்டக்கேள்வியையே அம்மா மறுபடியும் கேட்டாள். சட்டென நிமிர்ந்த மருத்துவரின் தலை பிறகு குனியவில்லை.

“ மருத்துவத்துறையை பொறுத்தவரைக்கும் எல்லா நாளும் நல்ல நாள் தான்”
மருத்துவர் அதை சற்று கோபத்துடன் அழுத்தம் திருத்தமாக சொன்னதால் அம்மா அந்த ஒரு நொடி ஆடி போனாள். அவளுடைய நெற்றியில் வியர்வை அரும்பின. உதட்டின் மேல் மீசைப்போல வியர்வைத்துளிகள் மொட்டுட்டிருந்தன. அதன்பிறகும் அம்மா மருத்துவரை விட்டு வருவதாக இல்லை.

“ இந்த மாத்திரை எத்தனை மணி நேரத்திற்கு பிறகு வேலை செய்யும் டாக்டர்?”

“எப்படியும் நாலு மணி நேரம் ஆகலாம் ”

“ அவ்ளோ நேரம் ஆகுமா?”

“பின்னே!மாத்திரை செறித்து ரத்த ஓட்டத்தில் கலந்து தைராய்டு சுரப்பியைத் தூண்ட வேண்டாமா?கரு முட்டையை வளர்த்து உடைக்க வேண்டாமா?ஈஸ்ட்ரோஸன் சுரக்கவேண்டாமா?” மருத்துவரின் இமைகள் ஏறி இறங்கியது.

அம்மா‘ உச் ‘ கொட்டிக்கொண்டாள். மூச்சை பொசுக், பொசுக் கென வெளியே கக்கினாள்.“மணி இப்பவே ரெண்டு ஆச்சு . நாலு மணி நேரத்திற்கு பிறகுதான் வேலை செய்யுமுனா அப்ப மணி ஆறு ஆயிடும்.இரவு நல்லதில்லைங்களே… ”

“ இந்தாம்மா……………!” அம்மா மீது மருத்துவர் வெடுக்கென விழுந்தார். அவர் அப்படி அதட்டியது எனக்குதிடுக்கென இருந்தது.அனிச்சையாக உடம்பை ஒரு குலுக்கு குலுக்கினேன். அம்மா மரம் போல ஆடாமல் ,அசையாமல் எந்தவொரு சலனமும் இல்லாமல் நின்றுகொண்டிருந்தாள்.

“ உனக்கு எத்தனை வயசுலம்மா கல்யாணமாச்சு?”

“ இருபது வயசுல டாக்டர் ”

“ எத்தனை வயசுல குழந்தை பெத்துக்கிட்ட?”

“ ம்……….. இருபத்து மூனு வயசுல ”

“ எத்தனை வயசுல நீ பெரியப்பொண்ணானே?“

“ பதினாலு வயசுல ”

“ அப்ப நீ எத்தனையாவது படிச்சே ?”

“ ஒன்பதாவது டாக்டர் ”

“ உனக்கு இப்ப எத்தனை பிள்ளைங்க?”

“ ரெண்டு பிள்ளைங்க”

“ இவள் மூப்பா ? இளமையா ?”

” மூத்தவள்”

“ அடுத்து ?”

“ அடுத்தும் பொண்ணுதான்”

“ இவள் எத்தனையாவது படிக்கிறா?”

“ ஒன்பதாவது”

“ சின்னவள்?”

“ ஏழாவது”

மருத்துவர் கேட்ட அடுக்கடுக்கான கேள்விகளுக்கு அம்மா மின்னல் வார்த்தைகளில் பதில் கூறி அசத்தினாள். அம்மா சொன்ன பதிலில் மருத்துவர் கொஞ்சம் போல மிரண்டு போயிருந்தார். பிராண வாயுவை கப , கபவென்று உள்ளே இழுத்து நெஞ்சுக்கூடு ஏறி இறங்க வெளியேற்றினாள். கொஞ்ச நேரம் அமைதியாக வீற்றிருந்தார்.கையில் வைத்திருந்த துண்டுச்சீட்டில் எதோ எழுதியிருந்தது.அதை படிப்பதைப்போல பாவனைச் செய்தார்.

“உன் மகளுக்கு இந்த மாத்திரையை நீ வாங்கிக்கொடுக்காட்டிதான் என்னவாம்?”

“ லட்சக்கணக்கில செலவு செஞ்சி புள்ளைய படிக்க வைக்கிறேனே டாக்டர்”

“ அதனாலே ?”

“ என்னோட ரெண்டு பொண்ணுக்கும் நல்ல எதிர்க்காலத்தை அமைச்சிக்கொடுக்க நினைக்கிறேன் டாக்டர். அப்படி நினைப்பது தப்பா?”

“ எதனாலே அப்படி நினைக்கிறீங்க?”

“ எனக்கு ரெண்டுமே பொண்ணு டாக்டர் . ரெண்டு பொண்ணையும் மகன்களை மாதிரி வளர்க்க ஆசைப்படுறேன் டாக்டர்.மகன் இல்லாத குறையை மகள்கள் ரெண்டுபேரும் போக்கணுமென நினைக்கிறேன்”

“ மகள்கள என்ன படிக்க வைக்க நினைக்கிறீங்க?”

” மூத்தவள உங்களைப்போல டாக்டர்”

“ அடுத்தவள?”

” போலீ்ஸ்”

“ ஏன் ரெண்டு பேரையும் டாக்டருக்கு படிக்க வைக்க நினைக்கலாமே?”

“ ஆசைதான். ஆனால் முடியாது.”

” ஏன்……………?”

“மூத்தவள் படிப்பில சுட்டி. அடுத்தவள் தகிடதத்தம்”

“இருக்கட்டும் . அதுக்கு ஏன் மூத்தப்பொண்ணுக்கு இந்த மாத்திரையை கொடுக்க நினைக்குறீங்க?இயற்கைக்கு முரண் இல்லையா?”

“ நான் திருமணம் முடிஞ்சி அஞ்சு வருசம் ஜெர்மனியில இருந்திருக்கேன். அங்கே இந்த மாத்திரை நம்ம ஊர் பாரசிட்டமால் மாதிரி.”

“ அது சரிம்மா . உங்க பொண்ணுக்கு ஏன் இந்த மாத்திரை?”

“அடுத்த வருசம் பத்தாம் வகுப்பு. பொதுத்தேர்வு எழுதணும்.அவள் மாவட்ட அளவில் முதலிடம் வரணும்.எப்படியும் நானூத்தி எண்பதுக்கு மேல மதிப்பெண் வாங்கணும்.அப்பதான் பதினொன்னு, பனிரெண்டாம் வகுப்பு படிக்க நல்ல இடம் கிடைக்கும். அதுக்காக அவள் முயற்சி செய்கிறப்ப இயற்கை உபாதை , சடங்கு, சம்பிரதாயம் எதுவும் அவளைக்குறுக்கிடக்கூடாது இல்லைங்களா……….! . அதனாலே தான் டாக்டர்”

மருத்துவரின் நெற்றி வியர்த்திருந்தது.கைக்குட்டையால் அதை ஒற்றி எடுத்து கொண்டார்.மேசை மீது கழட்டி வைத்திருந்த கண்ணாடியை எடுத்து துடைத்து மாட்டிக்கொண்டார்.கொஞ்சம் தண்ணீர் குடித்துக்கொண்டார்.

“ கெஞ்சி, அடம் பிடித்துதான் அந்த மாத்திரையை வாங்கிட்டீங்க. பிறகென்ன மாத்திரையை இன்றைக்கு இல்லாட்டியும் நாளைக்குகொடுக்க வேண்டியதுதானே”

“ நல்ல நாள் , நல்ல நேரம் பார்க்க வேண்டாமா?”

மருத்துவர் என்னை பாவமாக பார்த்தார்.முகத்தைச்சுழித்து இவளுடன் எப்படி வாழ்கிறாய்? நீ பாவம் ……..!என்பதைப்போல முகத்தால் பாவித்தார்.பிறகு மெல்ல எழுந்தார்.நாட்காட்டியை பார்த்தார்.“ இன்னைக்கும், நாளைக்கும் அஷ்டமி இல்ல. அப்படினா நல்ல நாள் தானே?”

“ அது மட்டும் பார்த்தால் போதுமா டாக்டர்? சஷ்டி, சப்தமி, பிரதமை, பிரதோசம், சதூர்தசி, புதன், முற்பகல், இதெல்லாம் பார்க்க வேண்டாமா? ”

அம்மா அப்படி சொன்னதும் மருத்துவர் முகம் வாடிப்போனது.“ இந்தாம்மா….. நீ என்ன படிச்சவள் மாதிரியா பேசுறே.நான் தசமி அன்னைக்குத்தான் பிறந்தேன்.அஸ்டமி அன்றைக்குத்தான் பெரிய பெண்ணானேன் .நான் டாக்டர் ஆகலையா?எனக்கு டாக்டர் ஒருத்தர் கணவான கிடைக்கலையா?”

“ இருக்கலாம் டாக்டர். ஒருவேளை நீங்க அன்றைய தினத்தில பிறக்காம, பெரிய பெண்ணாகாம இருந்திருந்தால் நீங்க கலெக்டராகிருப்பீங்களே”

அம்மாவின் பேச்சுக்குள் மருத்துவர் விழுந்துவிட்டிருந்தார்.அவருடைய மௌனம் அதைத்தான் காட்டியது.கீழ் உதட்டை பற்களால் கடித்து வருடிக்கொண்டிருந்தார். அவருடைய கழுத்தில் கிடந்த ஸ்டெதஸ்கோப்பை எடுத்து மேசையின் மீது வைத்தார். “ அம்மாடி உன்னக்கிட்ட பேசி என்னால ஜெயிக்க முடியாது. நீ இடத்த காலிப்பண்ணு”

“ டாக்டர்……………… நாளைய நாள் எப்படினு உங்க காலண்டர்ல பார்த்துக்கிறட்டுமா?”
மருத்துவர் நாள்காட்டியை ஆணியிலிருந்து எடுத்தார். அம்மா கையில் கொடுத்து “ இதை நீயே வச்சிக்கோ. இடத்தை விட்டு நகரு” என்றார் எரிச்சலுடன்.

அம்மா நாட்காட்டியை முன்னும் பின்னும் பார்த்தாள்.பிறை அளவிற்கு சிரித்தாள்.“ டாக்டர் நாளைக்கு நல்ல நாள். புதன் கிழமை . சஷ்டி தினம் .எட்டு மணியிலிருந்து நல்ல நேரம் ”

“ பிறகென்ன . மாத்திரையை அதிகாலையில , வெறும் வயித்துல நாலு மணிக்கெல்லாம் கொடுத்திடுங்க….”

சந்தோசப்பெருக்கில் “ சரிங்க டாக்டர்” என்றபடி என்னை அழைத்துக்கொண்டு வெளியேறினாள் அம்மா.

மறுநாள் காலை பொழுது அம்மா எதிர்ப்பார்த்தபடி இருந்திருக்கவில்லை.அம்மா ஒன்று நினைக்க காலம் திருவிளையாடல் நடத்திருந்தது. அம்மா அதிர்ச்சியில் நீர்ப்பிண்டமாய் உருகிஉறைந்து போயிருந்தாள்.பல்லியைப்போல சுவற்றில் ஒடுங்கிப்போயிருந்தாள்.தலையில் அடித்துக்கொண்டு அழுதுக்கொண்டிருந்தாள். என்னையும், தங்கச்சியையும் மாறி மாறிப்பார்த்து தன்னைத்தானே திட்டிக்கொண்டாள். மொத்தத்தில் அம்மாவைப் பார்க்கபாவமாக தெரிந்தாள்.

கொஞ்ச நேரத்தில் அலைப்பேசி சிணுங்கியது. மருத்துவர் அழைப்பில் வந்துகொண்டிருந்தார்.அம்மா எடுத்து பேச விரும்பவில்லை.தலை விரிக்கோலமாக உட்கார்ந்திருந்தாள்.உடைந்துப்போன கண்ணாடி போல அவளுடைய முகம் இருந்தது.அவளை எங்கேயோ ஓரிடத்தில் தொலைத்துவிட்டு வெறும் சடமாக , பூதமாக உட்கார்ந்திருந்தாள். ஐந்து அழைப்புகள் மருத்துவரிடமிருந்து வந்திருந்தது.அதே எண்ணுக்கு நான் அழைப்பு விடுத்தேன்

“ மேம்……………… ”

“ யாருடாம்மா?”

“ நான் ரஞ்சினி பேசுறேன் மேம்”

“ ரஞ்சினிதான் பேசுறீயா. பெரியப்பொண்ணான உனக்கு என் வாழ்த்துக்கள்”

” நோ மேம்”

“ ஏன்? என்னாச்சு……….!”

” உங்க வாழ்த்துகளைஎன் தங்கச்சிக்கு சொல்லுங்க ”

“ என்னடாம்மா சொல்றே?”

“அம்மா மாத்திரையை ஆள் மாத்தி கொடுத்திட்டாள்”

“ அடடே! எப்படி ஆள் மாத்திக்கொடுத்தாளாம் ? எங்கே அம்மாக்கிட்ட போனைக்கொடு”

“ அம்மாயாருடனும் பேச மாட்டேன்கிறாங்க மேம்”

“ என்ன நடந்து போச்சுனு உன் அம்மா இப்படி உடைஞ்சிப்போய் உட்கார்ந்திருக்காள். அவளைக்கிளம்பி உடனே கிளினிக் வரச்சொல்லு. உன் தங்கச்சியை நார்மலாக்க வேறொரு மாத்திரை இருக்கு . அதைக் கொடுத்துவிடுறேன். எல்லாம் சரியாயிடும்…………..”.

அதற்கும் ஒரு மாத்திரையா !எனக்கு தலைச்சுற்றியது!.

நன்றி (http://akaramblogspot.blogspot.com)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *