கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 5, 2013
பார்வையிட்டோர்: 8,853 
 

தனத்துக்கு காய்ச்சல் முழுவதுமாக விட்டுருந்தது. ஊர்பட்ட போக்கிரித்தனத்தை பண்ணிட்டு இந்த புள்ளைங்க தூங்கறப்பதான் எம்புட்டு அழகு!! கணேசன் அவனையும் அறியாமல் அவளது பிஞ்சு கால்களைப் பிடித்துவிட்டான். காய்ச்சல் கண்ட வேகத்துல உலர்ந்துபோன உதடுகள் காய்ந்து வெளுத்துப்போயிருந்தது. தேய்க்கும்போது தீய்ஞ்ச துணிமாதிரி வானம் கறுத்துக்கிடந்தது.

இருட்டட்டும் ஒரு பாட்டம் ஆடித்தீத்துப்புடலாம்னு கறுவங்கட்டிகிட்டுத் திரியிற குடிகாரப்பய மாதிரி மேகம் அங்குமிங்குமாக அலைந்து திரிந்துகொண்டிருந்தது.

கணேசனுக்கு அடுப்படி பக்கம் திரும்பிப் பாக்கவே பயமாக இருந்தது. மேல்கூரை பிஞ்சி அங்கங்கே நட்சத்திரம் போல பொத்தலாகத்தெரிந்தது.கால் அடிப்பட்ட குருவி பறக்கப்பிரயாசைப்பட்டு தவ்விக்குதிப்பதுப் போல ஒன்றிரண்டு கீற்றுத்துண்டு காற்றில் படபடத்தது. இடைவெளியில்லாமல் கொஞ்சம் நெருக்கமாக வேயப்பட்டிருந்த கூரைக்கு கீழே தேவானை தூங்கிக்கொண்டிருந்தாள்.

ஈர்க்குச்சி செருகப்பட்ட அவளது காதுத்துளை கணேசனது மனதைப் பிசைந்தது. போனவாரம் வரை அதில் மின்னிக்கொண்டிருந்த ஒத்தக்கல் தோடு இப்ப காசி பேங்கர்ஸ் கடையில் …. வெழலடிக்க எப்படியும் ஆயிரத்தைநூறு ஆகும்னுதான் அத அடகு வச்சான். இந்த தனம் குட்டி இப்படி மழயில நனஞ்சு காய்ச்சல வாங்கிட்டு வருவான்னு யாரு கண்டா….?

‘சுர வேகத்துல புள்ளைக்கு தூக்கிப்போடறப்ப என்னுமா கையை இறுக்கிப்புடிச்சு காசைக்கட்ட முடியும்’ அப்படின்னு வாய்விட்டு சொல்லி தன்னைத்தானே நியாயப்படுத்தி, யாரும் கேக்காமலே யாருக்கோ சொல்வதுபோல சொல்லிக்கொண்டான் கணேசன்.

கூரப்போனாப்போவுது புள்ள உசுருப் போனா வருமான்னு பிரைவேட்ல சேத்தான். மூணு நாளைக்கு அப்புறம்தான் அன்ன ஆகாரமே உள்ளப்போச்சு தனத்துக்கு.மாத்திரை, மருந்து ஊசின்னு அது ஆச்சு எண்ணூத்து அம்பது. ஒசக்க பாத்தான் கணேசன், எப்பிடியும் பத்து பன்னண்டு கட்டு கீத்து ஆயிடும்போல இருக்கு. பிஞ்சத மட்டுமா மாத்தமுடியும்? கட்டு இருநூத்தி முப்பது சொல்றான். அத நெனச்சாதா ஒரே வெசனமா இருக்கு கணேசனுக்கு.

ஒத்தாசைக்கு எதுக்கும் இருக்கட்டும்னு சம்முவத்துக்கிட்ட சொன்னப்ப, அவந்தான் சொன்னான் ‘அது ஏண்ணே ஒத்தைக்கு ரெட்டி வேல, காத்தடிகாலத்துல கெளப்பிகிட்டு கோராமையா பூடும். கூட அஞ்சு பத்தானாலும் போவுதுன்னு வெழலடிச்சுடுவொம்னான். அதுவும் சரிதன்னு பட்டுது. எல்லா நாயத்தையும் சரிகட்டிப்புடலாம்தான்…. காசிருந்தா… ஒரு ஒரு கஷ்டத்துக்கும் ஒவ்வொண்ணா உருவி மூளியாப்போயிட்டா தேவானை.

என்னுமோ ரெண்டு மாசத்துல காசு பொரண்டடிச்சு கொல்லக்கதவ பேத்துகிட்டு வந்துடும்கறாப்ல எல்லாத்தையும் வீம்பா அடகு வச்சுடறது. அப்புறம் அடுத்த கஷ்டம் வந்தப்புறம், முன்னது வச்சது வச்சபடி இன்னமும் மூக்காம இருக்கறது நாவகம் வரும்.

எல்லாபக்கமும் கரண்டு பொட்டி வச்சு தேய்க்கற பசங்க கெளம்பி ஈசலு கணக்கா பெருத்தப்புறம், அடுப்புக்கரியை ஊதி, ஊதி தேய்க்கற கணேசனுக்கு யாவாரம் படுத்துடுச்சு.

கால்ல வெந்நித் தண்ணிய கொட்டிகிட்டு அவதிகொல்லைன்னு அவசரப்படற ஆளுங்களுக்கு எதிலயும் பொறும இல்ல. வேல சுத்தம் பத்துன கவலையில்ல. கணேசன் ஒரு தரம் தேச்சா கல்லணை பாலத்து செவுரு கணக்கா நூல் புடிச்சாப்புல மடிப்பு நீட்டா இருக்கும்னு செவலோகம் வாத்தியாரு அவ்வளவு ஒசத்தியா சொல்லுவாரு. இப்பல்லாம் அந்த மாரி ஆள எங்க பாக்க முடியுது?

சோத்துக்கையால குடுத்துட்டு ஆச்சா, ஆச்சான்னு பீச்சாங்கைய நீட்டறான். குத்துக்காலிட்டு தந்தரையில உக்காந்திருந்த கால் மரத்துப்போயிருந்தது. தாங்கறவனுக்குதான் இந்த சாமி அடுக்கடுக்கா கஷ்டத்த குடுக்கும்.

வெளியே தலைய நீட்டி ‘ ஏ மானங்கெட்ட மானமே ஏன் இப்பிடி பேயாட்டாம் பேஞ்சி என் பொழப்ப கெடுக்கற? இப்ப நீ பேயலன்னு யாரு அழுதா? நாசமாப் போவ’ அப்பிடின்னு சாபம் வுட்டான்.

தனத்தோட கொட்டம் வர வர தாங்க முடியல. அதுக்காவ அந்த புள்ளைய வய்யவா முடியுது? ரொம்பவும் வாயாட ஆரம்பிச்சிட்டா. பச்ச வெங்காயத்த கடிச்சுக்கிட்டு பழஞ்சோறு திங்கறாப்புல அம்புட்டு ருசியாத்தான் இருக்கும் அவ பேச்சு. எல்லா கஷ்டத்தையும் அவளோட ஒரு சொல்லு கரைச்சு எடுத்துட்டு போயிடுது.

தலையாரி வூட்டு டவுன்கார மருமக ‘அயன்காரரே, அயன்காரரே’ அப்பிடின்னு கூப்புட்டது நாளடவுல ‘அயனாரே’ன்னு ஆயிப்போச்சு .அத பாத்து குசும்பா ‘ அய்யனாரே, அய்யனாரே’ன்னு தனம் குதியாளம் போட்டுகிட்டு கணேசன கூப்புட, கூர கொள்ளா சிரிப்பு அம்புட்டு பேருக்கும்.

‘அய்யனாரே, அய்யனாரே குதிர இல்லியா அளுக்குத்துணி தூக்க ஒரு களுத இல்லியா’ன்னு பாட்டு வேற…. ஒரு கைய இடுப்புவரைக்கும் மடக்கி, இன்னொரு கைய கக்கத்துல வச்சி அடிச்சி, அடிச்சி பாடறப்ப கண்ணுல தண்ணி வர வயத்த புடிச்சுகிட்டு சிரிக்கற அந்த நிமிசத்துக்கு எத வேணாலும் அடகு வெக்கலாம்.

‘தை,தை’ன்னு ஒவ்வொருதாட்டி அவ ஆடும்போதும், அந்த காலுக்கு முத்து வச்ச கொலுசு வாங்கிப்போடணும்னு கொள்ள ஆசை தேவானைக்கு. தனத்தோட காதுகுத்தி நடந்தப்ப மாமன் சீர்ல கொலுசு வந்துடும்னு ரொம்பவும்தான் ஆசையா இருந்தா தேவானை. ஒரு நூறு ரூவா நோட்ட கவர்ல போட்டுட்டு நோவாம கெளம்பிப்போன அண்ணங்காரன் மேல அம்புட்டு கோவம் தேவானைக்கு.

‘பொருளா வந்துருந்தா கொஞ்ச நாளைக்காவது அவ கால்ல கெடந்துருக்கும். கடைக்குப்போய் வாங்குனா எங்க இன்னும் நூறு கிழியும்னு பணமா வச்சிடறேன்னு அந்த கூமுட்டதான் சொல்லிச்சுன்னு, கைசெலவுக்கு ஆவும்னு தலய தலய ஆட்டிகிட்டு இந்த குந்தாணி சரின்னுட்டா வரும்? பணம் காசு கய்யில வந்ததான் பஞ்சு முட்டாய் கணக்கா கரஞ்சி போவுதே. இது மட்டும் என்னாவும்? கொலுசு காசு கரிமூட்டையா போச்சே’ன்னு நெஞ்சு கொள்ளா கோவத்துல சமயங்கெடைக்கறப்பல்லாம் பொருமுவா தேவானை.

அவ அண்ணங்காரன் மட்டும் என்ன பண்ணுவான்? திரும்பி வரும்னு தெரிஞ்சாதானே சீரும் நெறக்க வரும்? உருப்பிடி போட்டவன் எண்ணி குடுத்துட்டு, எடுக்க வர்றச்ச சரிபாக்கற மாரிதான மனுசன் வாழ்க்க அள்ளு புள்ளிகணக்கா பூட்டுது.. ஈசான மூலையில இடி இடிக்கற சத்தம் மண்டைய பொளக்கற மாதிரி இருந்தது.

காளிமுத்து முந்தா நாளு வூட்டுக்கு மின்னாடி நின்னுகிட்டு, வாய்க்கு வந்தபடியெல்லாம் ஏசிட்டுப்போனதும் இப்படிதான் மண்டைய இடிக்கற மாதிரி இருந்தது. மளிகை பாக்கிய நெனச்சா மறுவேளை கவளம் வயத்துக்குள்ள எறங்காது போல இருந்தது. இனும காளிமுத்து கடையில சரக்கு வாங்க முடியாது. துணிக்கடை பாய்கூட மின்ன மாதிரி மொகங்குடுத்து பேசறதில்ல.

ஆச்சு தீவாளி வரப்போவுது.வருசத்துக்கு ஒண்ணாச்சும் எடுத்துக் குடுக்கலன்னா என்னுமாதான் பொம்பள புள்ளைவோ சொச்ச நாள ஓட்டுவாங்க? வெளுத்துப்போன துணி மறுதாட்டி சலவைக்கு வந்தா உடையவங்கிட்ட மொள்ளப் பேசி வாங்கிடலாம்தான். அவ வயசு பசங்க துணி அடிக்கடி வர்றதில்லியே. என்ன பொழப்புடா இது?

கட்டிக்க ரவ துணியும், கொட்டிக்க பருக்க சோறும் சம்பாதிக்க துப்பில்லாம என்னத்த வாழ்ந்து என்னத்த கிழிக்கப்போறோம்னு அலுப்பா இருந்தது கணேசனுக்கு. ஆவணி முடிஞ்சு பொரட்டாசி பொறந்தாச்சு இன்னும் ரெண்டு மாச மழக்காலத்த எப்பிடி தள்றதுன்னு நெனச்சா பகீர்னு வயித்த புடிக்குது.

ஈச்சங்குடி அய்யனாரே, எப்பிடி இந்த வூட்ட காவந்து பண்ணப்போறேன்? மண்ணுத்தர இப்பமே ஓதம் காத்து உப்பிட்டு கெடக்குதே, மேக்கூர இல்லாம மொத்த மழயும் உள்ளப் பேஞ்சா எத்தினி பாத்திரத்த வச்சு புடிக்கறது? பொரட்டாசின்னதும்தான் நெகா வந்தது கணேசனுக்கு.

ஆஹா… போன வருசத்துக்கு முந்தின வருசம் கார்த்திகையிலதானே புள்ள வளவி ரெண்ட காசி கடயில அடகு வச்சது. கய்யில இருந்த காச பரபரன்னு எண்ணினான் கணேசன். அரநூத்தி முப்பத்தி ஆறு ரூவா இருந்தது.. ஆத மூட்டு திலுப்பி வித்தோம்னா சேதாரம் அது இதுன்னு தள்ளுனாலும் ஒரு ஆயிரத்து எரநூறு தேறும். என்னுமோ அவசரத்துக்கு ஐநூறுக்கு வச்ச நாவகம் கணேசனுக்கு…

“ தேவானை, தேவானை” பரபரன்னு எழுப்பினான் கணேசன்.

“ அட, இப்ப என்ன அவதிகொல்லன்னு இப்பிடி போட்டு பொறாண்டுற”

“ அடி கெழகாளி, மானம் குமுத்துகிட்டு வருது. அடுப்புக்கு நேரா கீத்து கெளப்பிகிட்டு கெடக்குது. என்னாடி அப்பிடியாப்பட்ட தூக்கம் ஒனக்கு.”

திகிலோடு ஒசக்கப்பாத்த தேவானை, “ என்னாய்யா பண்றது, வச்சிருந்த காசும் கொஞ்சம் கொஞ்சமா கரையுது. இது மெரட்டறத பாத்தா கண்ணு முளிப் பிதுங்குது. ஏ! பச்ச வாழி அம்மா ஒனக்கு கருணை இல்லியா?” ரெண்டு கையையும் நெஞ்சுக்கு நேரா நீட்டி கண்கலங்கினாள்.

“ அது செரி… இந்த தனம்குட்டி வளவி ரெண்டை காசி கடயில வச்சமே,அது போன வருசத்துக்கு முந்தின வருசம் கார்த்திகயிலதானே?”

“ ஆவணின்னு நெனக்கிறேன்யா. ஒன் தங்கச்சி மவ சடங்கானப்போ, மொறை செய்ய காசில்லாமத்தான வச்சோம்”

“ என் வூட்டுக் காரியம்னா ஒனக்கு கல்லுல அறைஞ்சா மாதிரி அம்பது வருசம் ஆனாலும் நாவகம் இருக்குமே”

“ இல்லாததையா பொனைஞ்சு சொல்லிப்புட்டேன். அண்ணங்காரன் கஸ்டப்படறானேன்னு கொஞ்சமாச்சும் இது இருந்துச்சா அவளுக்கு? பட்டுப்புடவ எடுத்து, பதினோரு தட்டு வரிசையும் வச்சாதான் தனக்கு கவுரதன்னு மூக்கால மூணு பாட்டம் அழுததுலதான் எம்மவ வளவி அடிச்சுகிட்டு போயி அடகு கடயில அடஞ்சி கெடக்கு, அது மட்டும் வாகா மறந்துடுமே ஒனக்கு”

“ அத வுடு, எம்மானுக்கு வச்சோம் அத?”

“ ஆயிரத்து முந்நூறுக்கு வச்சி, சீட்டு காசு மொதமாச வட்டி எல்லாம் போவ ஆயிரத்து சொச்சம்தானே எடுத்துட்டு வந்தே”

“ கிழிஞ்சுது போ, நா ஐநூறுக்கு வச்ச நாவகத்தில, அரநூத்தி சொச்சம் கயில இருக்கே மூட்டு யார்கிட்டயாவது ஒரு ரெண்டாயிரத்துக்கு வித்தா வெழலடிக்க தேத்திப்புடலாம்னு பாத்தேன்”

“ மூக்கர எண்ணம் இருந்தாத்தானெ ஒனக்கு எம்மானுக்கு வச்சோம்கற நெகா இருக்கும்? இப்பமாச்சும் வந்துச்சே. காசிதான் பழய நகைய வாங்கிக்கறனாமே, அவங்கிட்டயே வெலப்பேசி வித்துட்டு கெடச்சத வாங்கிட்டு வா. மிச்சத்த பெரட்டிக்கலாம் ”

“ செரி, சாமி படத்துக்குப் பின்னாலே வச்ச ஜவ்தாளு பைய எடு. அதுலதான அம்புட்டு சீட்டும் இருக்கு” சாமியெல்லாம் சந்தோசமாக சிரித்துக்கொண்டிருந்தார்கள். சாமி வெளக்கின் சுடர் காற்றில் துடித்தபடி இருந்தது. படத்துக்குப் பின்னாடி இருந்த ஜவ்தாளை எடுக்க கை நீட்டியபோது சட்டெனப்பட்ட வெளக்கின் சூடு தேவானைக்கு இதமா இருந்தது. சுடரின் நுனியைப்பிடித்து நீவிவிட வேண்டும்போல ஒரு ஆசை அவளுக்குள் எழுந்து அடங்கிப்போனது.

தூறல் வலுக்க ஆரம்பித்தது. கணேசன் வெளியேப்போய் ஒரு மணி நேரமாவது ஆகும். இன்னும் வரக்காணோமே. பணம் வராட்டிப்போவுது, மனுசன் நல்லபடியா வந்தாப்போதும்னு இருந்தது தேவானைக்கு.

ஒவ்வொருதாட்டி கணேசன் வெளியப்போறப்ப திரும்பி வர வரைக்கும் இருப்புக்கொள்ளாது அவளுக்கு. தனம் இன்னும் தூங்கியபடியே இருந்தாள். பாவாடை மேலேறி கெண்டைக்கால் கண்டுகண்டா பாக்க அழகாக இருந்தது. அதிலயும் படுத்திருந்த பாயின் வரிகள் படிந்திருந்தது இன்னும் அழகாக இருந்தது. எழுந்ததும் சுத்திப்போடணும் புள்ளைக்கு நினைத்துக்கொண்டாள் தேவானை.

அடுப்பங்கரையில் மழத்துளி பொட்டு பொட்டாக விழுந்தது . ‘இன்னும் வலுத்தா அடுப்பும் நனஞ்சு, தரையும் நசநசத்துப்போயிடுமே, என்னப்பண்ணுவேன் மாரியாத்தா, விடிஞ்சதும் நாலணாவுக்கு சூடம் ஏத்திடறேன். மழய நீ பாத்துக்க’என்றாள் வாய்விட்டு.

‘சாமிதான் எத்தினி நாளு பாத்துக்கும்? மழய கட்டற மந்திரத்தை எவனாவது ஒரு மந்திரவாதி காதுக்குள்ளார சொல்லிட்டு போவக்கூடாதா? போன வருச மழயில செவுரு வுளுந்து மேலத்தெரு ரேணுகா செத்துப்போனா. நல்லவங்க இருக்கறதுனாலதான் ஊருக்குள்ள மழப்பேயுமாமே. எல்லா நல்லவங்களையும் எல்லை தாண்டி வுட்டுடு மாரியாத்தா.’ கன்னத்தில் போட்டுக்கொண்டாள் தேவானை.

வானத்துக்கு மேல உரல் உருண்டது மாதிரி இடி இடித்ததில் தனம் தூக்கம் கலைந்து புரண்டாள். மழையின் வேகம் படமெடுத்த பாம்பின் ஆக்ரோஷம் போல அதிகரித்தது.

சட்டென்று ஏதோ தோன்றியவளாக மரஸ்டூலை எடுத்து குளிக்கவும், துணி துவைக்கவும் என வீட்டின் மேற்கு மூலையில் சிமெண்ட்டால் வரம்பு கட்டி ஒதுக்கி வைத்த இடத்தில் போட்டாள். அதற்கு மேலே பச்சை ட்ரங்க் பெட்டியைப் போட்டாள். அதன் மீது ஏறி நின்று பார்த்த போது உயரம் கூரையைத் தொட சரியாக இருந்தது. அதிலிருந்து நல்ல கீற்று நான்கை பாலைக்கயிறை அறுத்து உள்பக்கமாய் இழுத்தாள்.

மறுபடி ஸ்டூலையும், ட்ரங்க் பெட்டியையும் இடம் மாற்றி அடுப்புக்கு பக்கம் போட்டாள். அதன் மீதேறி அதற்கு நேராக பிய்ந்துப்போன கீற்றை அலக்காக மேலே தூக்கி, நல்ல கீற்றை செருகினாள். பாலைக் கயிறால் பலமாக கட்டினாள். மழத்தண்ணி விழுவது மட்டுப்பட்டது.

‘குளிக்கற எடம்தானே ஒளுவுனாப்போவுது. அடுப்படி தப்பிச்சது’ என தனக்குள்ளே சொல்லிக்கொண்டு பெருமூச்சுவிட்டாள். மறுபடியும் வாசல்கதவருகே வந்து வெளியே எட்டிப்பார்த்தாள். கணேசன் ஓட்டமும் நடையுமாக ஓடி வருவது தெரிந்தது. கறுப்பு முகம்தான் என்றாலும் தண்ணி பட்டு வழிந்தது அழகாக இருந்தது.

” உள்ள வாய்யா, உள்ள வா! செத்த நின்னு வரக்கூடாது?” கடிந்தபடி முந்தானையை எடுத்து அவன் தலையை துவட்டினாள்.

“ இருக்கட்டும் இருக்கட்டும், நீ மொதல்ல உள்ள போ, வெல்லக்கட்டியா நானு நனஞ்சா கரைஞ்சுப்போவ?” எனக்கேட்டபடி சட்டென்று கூரையை நிமிர்ந்துப் பார்த்தான்.

“ அட, அதுக்குள்ளாற இப்பிடி ஐடியா பண்ணிட்டியா? இதுவும் சரிதான்” “ என்னப் பண்ணச்சொல்ற அடுப்ப எப்பிடி காப்பாத்துறது? அது செரி, வளவிய வித்துட்டியா?”

இடி இன்னும் பலமாக இடித்து அங்கும் இங்கும் ஓடி யாரையோ துரத்துவது போல ஆட்டம்காட்டியது. சப்தம்கேட்டு விழித்த தனத்தின் பார்வையில் வீட்டின் உள்ளே குளிக்கிற இடத்தில் பெய்த மழைதான் கண்ணில் பட்டது.

‘அய்’ என்று துள்ளி எழுந்து சிமெண்ட் வரம்புக்குள் குளம் கட்டி நின்ற தண்ணீரில் ஓடி நின்றாள். தேங்கியநீரில் ‘ப்ளக், ப்ளக்’கென்று விழுந்த துளிகள் அவளுக்கு வேடிக்கையாக இருந்தது. கைதட்டி தன் ரசிப்பை வெளிப்படுத்தியவள், பாவாடையை தூக்கி சிறுவட்டமாக ஆக்கி, மழ அடிக்குது, மழ அடிக்குது இடியும், மின்னலும் சேந்து மழ அடிக்குது தெப்பக்குளம் போல தண்ணி தேங்கி நிக்கிது சீமத்துரையப்பாக்க நாம கப்பல் வுடலாம் மழ அடிக்குது, மழ அடிக்குது… ஆட்டமும் பாட்டுமாக குஷியாக குதித்தாள்.

தேவானை கோவத்துடன் நகர்ந்து அவளை நோக்கி கிளம்ப, கணேசன் வலுவாக அவள் கையைப்பிடித்து நிறுத்தி ‘போகட்டும் விடு’ என்பது போல சைகை காட்டினான்.

குதுகூலமாக மூன்று வட்டம் சுற்றியவள் அனிச்சையாக வாசல் பக்கம் பார்க்க, அங்கே கணேசனும் தேவானையும் நிற்பதைப்பார்த்து பயந்து நிறுத்தினாள். குறும்பாக சிரித்தபடி முன்னே வந்த கணேசன், கயிலிருந்த பேப்பரை கப்பல் போல செய்து தண்ணீரில் விட்டபடி… கப்பல் ஓடுது …கப்பல் ஓடுது… வீட்டுக்குள்ள கப்பல் ஓடுது எங்க தனத்துக்குட்டி காலடியில கப்பல் ஓடுது… என்று புதிதாக பாட்டுக் கட்டி தனத்தின் கையைப் பிடித்து சுற்றினான்.

“ நல்லாருக்கு அப்பனும் மவளும் பண்ற கூத்து. இப்பதான் அவளுக்கு காய்ச்ச வுட்டுருக்கு. அந்த நெகா இல்லாம என்ன ஆட்டம் மழத்தண்ணியில..?” என்று பொய்யாக கோபத்தைக்காட்டியபடி அவர்களருகே வர, தேங்கிய நீரிலிருந்து தன் பிஞ்சுக்கையால் அவள் முகத்திலடித்தாள் தனம்.

“ வர்றேன், வர்றேன் களுத அப்பன் கூட இருக்கற தகிரியமா?” வரம்புக்குள் உற்றுப்பார்க்க, கப்பலாக நகர்ந்து நகர்ந்து சென்றது காசிக்கடை ரசீது மாதிரி தெரிந்தது. ஒரு கணம் திகைத்தவள் கணேசனைப்பார்த்து கண்களால் கேட்டாள். அவன் ஒசக்க கை காண்பித்து தலையில் தண்ணீர் தெளித்தான்.

‘முழுவிடிச்சா’ என்று சைகையால் கேட்டாள். அவன் மெல்ல தலையசைக்க, அவளது வயிற்றில் துக்கம் உருண்டு திரண்டு தொண்டையை அடைத்தது.

எதுவும் அறியாத தனம் அவள் கைப்பிடித்து வரம்புக்குள் இழுக்க, ஏற்கனவே பலகீனமாய் நின்ற தேவானை சுலபமாய் உள்ளே நகர்ந்தாள்.

‘தைய தைய’ என்று குதித்த தனத்தின் சிறு பாதம் தெறித்த நீர் அவளை சற்றுத் தணிக்க, அந்த ஒரு கணத்தில் எல்லாம் மறந்து போக, தேவானையும் ஆட்டத்தில் சேர்ந்துகொண்டாள். மழத் தண்ணி கரித்துக்கொண்டு ஓடியது

– ஜூலை, 2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *