மழைத் துளிகளை பரிசளித்தவன்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 29, 2012
பார்வையிட்டோர்: 11,116 
 

இருளின் சாயம் மெள்ள மெள்ள கரைந்தது. விடியலை விரும்பாமல் மனமும் உடலும் போர்வைக்குள் சுருண்டுகிடந்த நேரம், நீல வானத்துப் பறவைகளும் மஞ்சள் விரித்த பாலைவனத்தின் ஒட்டகங்களும் கண்ணுக்குள் மிதந்தன. பன்னீர்ப் பூக்களைப் போல ஈரங்களுடன் சிதறியிருந்த அதிகாலை மயக்கம். விழித்துக்கொண்டாலும் திறக்க மறுத்தன கண்கள். மனநிறைவில் சந்தோஷமும் அமைதியும் அப்பிய அரைத் தூக்கம். நினைவுச் சுருள் எங்கும் அவன் வியாபித்து, உணர்வுகளைச் சொடுக்கி உயிரைப் பிழிந்தெடுத்தான்.

‘உன் தூரமும் சுகமாகவே இருக்கிறது’ – வாய்விட்டுச் சொன்னது மனம். தனிமையும் குளிரும் உறவுகொண்டு இருந்த நீண்ட தெருக்களில் அவன் என்னைச் சுமந்து திரிவதாகக் காட்சி விரிந்து சுருங்கியது. அவன் முகம் சற்றே வாடி களைப்பைச் சூடியிருந்தது. ஆனாலும், சாரலில் சங்கமித்துக் கூத்தாடிக்கிடந்த நீல மலர்களின் அழகை அவன் தரித்திருந்தான்.

வேலை நிமித்தமாக மலைப் பிரதேசத்துக்குத் தன் சின்ன கறுப்புப் பையைத் துணைக்கு வைத்துக்கொண்டு அவன் பயணித்து ஒரு வார காலமாகிவிட்டது. கிளம்பும்போது அவன் கைக்கடிகாரத்தைக் கழற்றி என் வலக்கையில் கட்டிச் சென்றான். காற்றடித்தது போல் உப்பியிருந்த பேருந்தின் பஞ்சு இருக்கையில் தன்னைப் புதைத்துக்கொண்டவன் பேருந்து புறப்படும் வரை என்னை நிமிர்ந்து பார்க்கவில்லை. எனக்குப் புரிந்தது… அவன் துக்கமாயிருக்கிறான். நேசிப்பவர்களைப் பிரிக்கும் காலத்தையும் சூழலையும் அவன் சபிக்கிறான். ஒரு முறை தலை நிமிர்த்திப் பார்ப்பானா?

பேருந்து நகர்ந்து அடர்ந்த இரவைச் சுமந்து கம்பீரமாக நின்றிருந்த ஒற்றைத் தூங்குமூஞ்சி மரத்தைக் கடக்கும்போது, தலையை வெளிநீட்டிச் சிரித்துக் கையசைத்தான். தூங்குமூஞ்சி மரப் பூக்களின் நயமற்ற வாசத்தைச் சுமந்திருந்த வெளி அவன் கையசைவில் கலங்கித் தழும்பி நகர்ந்து என்னிடம் வந்து ஒட்டிக்கொண்டது. அதை இறுக்கமாகப் பற்றியபடியேதான் வீடு வந்து சேர்ந்தேன்.

அவனை எப்படி அறிமுகப்படுத்துவது? நிறமில்லாத குளிர் அப்பிக்கிடக்கும் டிசம்பர் மாதத்தில் என்னை நேசிப்பாயா என்ற வேண்டுதலோடும் மழைத் துளிகளோடும்தான் எனக்கு நெருக்கமாக அறிமுகமானான். ஆயிரமாயிரம் பட்டாம்பூச்சிகளும் தட்டான்களும் சாம்பல் நாரைகளும் உள்ளுக்குள் முட்டி மோதிய ரம்மிய கணம் அது. வெயில் சுட்டு சுருண்டு மரத்து உதிர்ந்த நிலப்பரப்பில் சீறிப் பாய்ந்த நதியலையாய் நனைத்தன அவன் வார்த்தைகள். ஒருவர் தன்னை நேசிப்பது தெரிந்தால், மனம் ஏன்தான் இவ்வளவு தடுமாற்றத்தோடு கர்வப்பட்டுக்கொள்கிறதோ தெரியவில்லை. ‘வார்த்தைகளில் நம்பிக்கையற்றவன் நான். எதுவாக இருந்தாலும் மூன்றாண்டுகள் கழித்துச் சொன்னால் போதும்…’ என்று அவன் சொல்லும்போதே, மழை சொட்டுச் சொட்டாக இறங்கி, எங்களை முழுவதுமாக நனைக்கத் தொடங்கியது. அந்தச் சூழலா… அவன் உருவமா… வார்த்தைகளா… எது உந்தித் தள்ளியது என்று தெரியவில்லை. அடுத்த மூன்றே நிமிடங்களில் அவன் கைகளைப் பற்றி சிறு புன்னகையில் என் நேசத்தை உறுதி செய்தேன். மழை தீவிரமடையத் தொடங்கியபோதும் கால்களுக்கு வேர்கள் முளைத்தது போல நாங்கள் அங்கேயே நின்றிருந்தோம். இரு கை நீட்டி மழை பிடித்து, ‘இது என் பரிசு’ என்று சொல்லி, என் கைகளில் ஊற்றினான். இவ்வுலகில் யாரிடம் யார் அன்பைச் சொல்லும்போதும் மழை பெய்ய வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.

என்னுள் பிரபஞ்சம் மிகப் பெரியதாக விரிந்தது. புதிதாக ஒரு நேசம், மிகப் புதிதாக வித்தியாசமாக கானகத்தின் அடர்த்தியுடன். தனிமையை ரசனையோடு சுமந்து பழகிய வாழ்வில் அழகான மாற்றங்களை ஏற்படுத்தப்போகும் பகிர்தலோடு வரும் ஒருவனை இணைத்துக்கொள்வது சாதாரணமல்ல. இனி இரண்டு பேருக்காக வாழ வேண்டும். எது செய்தாலும் இரண்டு முறை யோசிக்க வேண்டும். இனி இரண்டு ஒன்றாக வேண்டும். என் வழியில் அவன் பயணிப்பதா… அவன் வழியில் நான் தொடர்வதா என்றெல்லாம் வாதாடாமல், வசந்தம் குடிகொண்டு இருக்கும் புதிய பாதை ஒன்றை உருவாக்கி, அதில் கை பிடித்து நடக்க வேண்டும்.

இந்த அன்பு என்ன அத்தனை புதியதா? வித்தியாசமானதா? முக்கியத்துவம் வாய்ந்ததா? மழையைப் பரிசளித்துத் தொடங்கிய நேசம் எங்களுடையது என்றாலும் நாட்கள் நகர நகரத்தான் அதன் வீரியம் கூடியது. எண் ஒன்றிலிருந்து தொடங்கி இன்று எண்ணற்றதாக வளர்ந்துகொண்டே இருக்கிறது. நாங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமான நாள் முதலே என்னைக் கவனிப்பதை ஒரு பொழுதுபோக்காகவோ, வேலையாகவோ வைத்திருந்தான். இதை நான் அறிந்தே இருந்தேன். எந்த நேரமும் அவன் அன்பைச் சொல்லிவிடக்கூடும். அதனால் வெளியில் சொல்ல முடியாத ஒரு தகிப்பும் காத்திருப்பும் ஏற்கெனவே தொடங்கியிருந்தது. உன்னிடம் பேச வேண்டுமென்று அவன் என்னைத் தனியே அழைத்தபோது, எந்தப் பதற்றமும் ஆட்கொள்ளாதவளாக ‘வா பேசலாம்’ என்றேன் கண்கள் பார்த்து. ‘இதைச் சொல்ல ஏன் இவ்வளவு நாள்?’ – மனசு லயித்துப்போய் என்னிடமிருந்து விழுந்த ஒரே வரி இதுதான்.

இதோ… தவிக்கத் தவிக்க இருவரும் நேசிக்கிறோம். வெடி வைத்துத் தகர்த்தாலும் சிதறிப்போகுமே தவிர, அழிந்துபோகாத பாறையைப் போல உறுதியாயிருந்தது அவன் நேசம். மனக் காடு முழுவதும் விதைத்ததை வளர்த்துவிட இறைத்து இறைத்து தண்ணீர் ஊற்றினான். எனக்குள் மிக நிதானமாகப் பூத்த ஒவ்வொரு பூவும் அவனது வாசனையையே சுமந்திருந்தது. பௌர்ணமிக்காக எம்பிக் குதிக்கும் அலை அவன். அந்த அலைபாய்தல் எப்போதுமே அவனைச் சோர்வாக்கியதில்லை. வெயிலில் காய்ந்து என் பகல்களையும், குளிர் சுமந்து என் இரவுகளையும் நிரப்பினான். பதிலுக்கு நான் என்ன செய்வேன்… அன்புக்கு எதை இணையாகக் கொடுத்தால் தகும்? அவன் என்னிடம் எதிர்பார்த்தது ஒன்றுதான், அன்பு. இரவுகளில், பகல்களில், மனம் துள்ளும் மழை நாளில், மர நிழலில் தேங்கிப்போகும் தருணங்களில், ரசித்து ரசித்து ஒரு கவிதை எழுதிவிட்டு காண்பிக்கத் துடிக்கும் பொழுதுகளில் நான் வேண்டும் அவனுக்கு. என்ன வேலையிருந்தாலும் அவனை மறக்கக் கூடாது. எங்கே சென்றாலும் அவனிடம் திரும்பிவிட வேண்டும். எங்கோ மலைப் பிரதேசத்தில் வேலைகளின் அழுத்தத்தில் இப்போது திணறினாலும், என்னைப்பற்றிய சிந்தனைதான் அவனை இயக்கிக் கொண்டு இருக்கும்.

பிரிவு, வலிமைமிக்க நோவுதான் எனினும் சின்னஞ் சிறிய பிரிவுகள் சுகமானவை. எப்படி வாழ்ந்திருக்கிறோம் என்று புரட்டிப் பார்த்துக்கொள்ளும் அவகாசத்தைப் பிரிவுகளே தருகின்றன. ஜன்னல் வழி குளிர் காற்று வரும் அறையில் போர்வைக்குள் கிடந்தபடி கண்களை மூடி அதைத்தான் செய்கிறேன். இந்த ஒரு வார காலமும் அவனைப் பற்றியே நினைத்துக்கொண்டு இருக்கிறேன். திரும்பத் திரும்ப… அத்தனை சுகமாக இருக்கிறது. இனிமையான தருணங்களை நினைத்துப் பார்ப்பது வேறெப்படி இருக்கும்! ஆனால், மிகச் சிறிய பிரிவுகள்கூட அவனுக்குப் பெரும் வலியைத் தந்தன. விலகியிருப்பது சுகமென்றும், அது நெருக்கத்தை அதிகரிக்குமென்றும் அவன் நம்பத் தயாராக இல்லை. எங்கே கிளம்பினாலும் சுவரில் அடித்த பந்தைப் போன்று உடனே என்னிடம் திரும்பி விடவே அவன் விரும்பினான்.

அவனற்ற இது போன்ற பொழுதுகளில் அவனுக்கு மிகப் பிடித்தமான விஷயங்களையும் பொருட்களையும் என்னருகில் வைத்துக்கொள்வேன். அவை அவன் பிரிவை ஈடுசெய்யும் என்றல்ல… சிறு பொருள்களுக்கும் அவன் சிறப்பான கதைகளைச் சொல்லிவைத்திருந்தான். அவன் பயன்படுத்தும் எந்தப் பொருளையும் எளிதாகத் தொலைத்துவிட முடியாது. ஒரு பொருளைத் தொலைப்பது ஒரு கதையைத் தொலைப்பதற்குச் சமம். சாலையோர புத்தகக் கடையில் அவன் வாங்கி வரும் புத்தகங்கள் எங்கள் படுக்கைஅறையில் நிறைந்திருந்தன. எப்போதும் கதகதப்பு கூடியிருக்கும் எங்களுக்கான அந்த அறையை நாங்கள் வடிவமைத்தது ஓர் ஓவியத்தைப் பார்த்து.

பழைய ரஷ்ய நாவல் ஒன்றின் பிரதியை அவன் பத்திரப்படுத்தி வருகிறான். கறுப்பு மையினால் கோடுகளாகத் தீட்டப்பட்ட ஓவியம் ஒன்று அந்த நாவலின் பக்கங்களில் இருக்கிறது. அது ஒரு வீட்டின் படுக்கையறை. மரத்தாலான கட்டிலில் கனமான போர்வை கலைந்துகிடக்கும். ஓரமாக மரத்தட்டிகளில் புத்தகங்கள் அடுக்கிவைக்கப்பட்டு இருக்கும். மரத்தட்டிக்கு மேலே மரத்தாலான விளக்குக் கூண்டு தொங்கும். கட்டிலை ஒட்டிய மரச் சன்னல் திறந்துவிடப்பட்டு, திரைச்சீலை பாதியளவு ஒளியை அறைக்குள் அனுமதிக்கும். வெளியே வெகு தொலைவு வரை மரங்கள் தெரியும். மிக அழகான ஓவியம் அது. மனிதர்கள் அந்த ஓவியத்தில் வரையப்படவில்லை என்றாலும், அன்பு நிறைந்த அறையாகவே அது பார்ப்பவர் கண்களுக்குத் தெரியும். தனிமையையும், அமைதியையும், ஒருவித நெருக்கத்தையும் உணர்த்தக்கூடிய தன்மை அதற்கு இருந்தது. ‘இப்படி ஒரு வீட்டை நாம் உருவாக்க வேண்டும்’ என்று அவன் சொன்னபோது, ‘நாம் வாழும் எந்த வீடும் இப்படித்தான் இருக்கும்’ என்று பதில் சொன்னேன். அவன் சிரித்துக்கொண்டான்.

எங்களுக்கென உருவாக்கிய வீட்டின் எல்லா அறைகளிலும் அவன் என்னையும் நான் அவனையும் உணர்கிறோம் என்றாலும், நான் படுத்துக்கிடக்கும் இந்தப் படுக்கையறை, பிரத்யேகம். நாங்கள் இல்லாத பொழுதிலும் அந்த ஓவியத்தில் உள்ளது போல சளைக்கச் சளைக்க நேசிக்கும் இரு உயிர்களின் இருப்பை அந்த அறையில் நீங்கள் உணர முடியும்.

ஒருவரின் இருத்தல் உங்களை எந்த மனநிலைக்குத் தள்ளுகிறதோ, அதுதான் அவர் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பின் அளவும். எதுவுமே பேசாமல் அவரவர் வேலையைப் பார்த்தபடி கழியும் பொழுதுகளில்கூட நாங்கள் நெருக்கத்தை விட்டுக்கொடுப்பதில்லை. வாழ்வின் கடைசி நாள் வரை தனி அறையில் அடைந்துகிடக்க வேண்டிய நிலை வந்தால், அவனுடைய ஒரே கோரிக்கை ‘கூட நான் வேண்டும்’ என்பதாகவே இருக்கும். உலகம் முழுக்க நடந்தே சுற்றி வா என எனக்கு யாராவது கட்டளையிட்டால் என்னுடைய வேண்டுகோள் ‘அவனும் கூட வர வேண்டும்’ என்ற ஒன்றுதான்.

நாங்கள் அருகருகே இருக்கும்போது சுருங்கிய அறை பிரமாண்ட உலகமாகவும், பெரிய உலகம் சிறிய அறையாகவும் மாறுகிறது. தன் அன்பை அவன் எப்போதும் நீருக்குத்தான் ஒப்பிடுவான். வற்றி ஆவியாகிப் போய்விடக் கூடியதல்லவா நீர்? அவன் சொன்னான்… நீருக்குப் பல பெயர்கள் உண்டு. நீர் இல்லை என்றால் இந்த உலகம் இல்லை. உனக்கான என் அன்பு இல்லாமல் போகும் நாள், நான் இல்லாமல் போகும் நாளாகவே இருக்கும்.’

உலகம் மனிதர்களால் நிறைந்திருக்கிறது. ஆனால், எங்கள் உலகில் நாங்கள் இருவர் மட்டுமே. இந்த உலகில் வேறு மனிதர்களே இல்லாததைப் போல மிக அழகான தனிமைகளை எப்போதும் அனுபவிக்கிறோம். அவன் அன்பு மிகக் கூர்மையானது. ஆயுதத்தைப் போல அல்ல. புத்தியைப் போல. அன்பை ஆயுதமாக்கி அவன் என்னைக் காயப்படுத்தியதும் இல்லை. அதே அன்பை வேலியாக்கி ஒருபோதும் நான் அவனைக் கட்டுப்படுத்தியதும் இல்லை.

ஒரு நாள் அலைகள் நிறைந்த கடல் நோக்கி நடந்துகொண்டு இருந்தோம். பகல் முழுவதும் காய்ந்த புற்களை மேய்ந்துவிட்டு மாலையில் மனிதர்களைச் சுமந்த அலுப்பில் குதிரைகள் மணலில் புரண்டுகிடந்தன. வாய் திறந்து ஒலியெழுப்பி கால்களை மேல் தூக்கி அவை சோம்பல் முறிப்பதைப் பார்க்கும்போது, சுமைகளற்ற இரவை அவை வாழ்த்தி மகிழ்ந்திருப்பதாகத் தோன்றியது. முழு வட்ட நிலாவிலிருந்து அலைகடல்பரப்பில் ஒளி சரசரவென வழியும் நேரம். பௌர்ணமி நாளின் அற்புதக் காட்சி அது. கரை நெடுக நடக்கும்போதுஅலை ஓடி ஓடி வந்து கால்களைத் தொட்டுச் செல்வது எத்தனை சுகம்!

வெகு நேரம் நாங்கள் எதுவுமே பேசிக்கொள்ளவில்லை. அங்கிருந்த யாருமே பேசிக்கொள்ளவில்லை போலும். அத்தனை அமைதியில், அலையின் ஓசை தேர்ந்த கலைஞனின் கைகளில் கிடைத்த வாத்திய இசையைப் போல நேர்த்தியாக ஒலித்தது. காற்று தீண்டிய புல்லாங்குழலைப் போல சலனப்பட்டது மனம். அதற்கு மேல் நடக்க முடியவில்லை. ‘இந்த உலகில் ஒருவரையருவர் நேசிக்கும் அன்பர்களே, எல்லோரும் கட்டியணைத்துக்கொள்ளுங்கள்’ என்று உரக்கக் கூவ வேண்டும் போல் இருப்பதாக அவன் சொன்னான். பின், கடலை நோக்கி ஓடிக் கத்தவும் செய்தான். அவனிடம் புதிய உற்சாகம் இருந்தது. நேசம் தந்த புத்துணர்வில் அலைகளுக்கு முன்னால் துள்ளிக் குதித்துக்கொண்டு இருந்த அவனும் ஓர் அலையைப் போலவே ஆகியிருந்தான். இப்படியரு இரவில், இப்படி ஒருவனோடு இவ்வளவு அழகான உணர்வில் திளைத்தபடி எவ்வளவு காலம் வேண்டுமானாலும் இருக்கலாம்… இல்லையா?! இரவு நகர்வதை அன்று நாங்கள் உணரவே இல்லை.

ரயில் பயணமென்றால், பயம் எனக்கு. அவனுடன் பழகுவதற்கு முன், மிகவும் தவிர்க்க முடியாத மூன்றே மூன்று சூழல்களில்தான் ரயிலில் பயணித்திருக்கிறேன். மனச் சோகங்களைக் கிளறிவிடும் வலிமை ரயிலுக்கு உண்டு என்பது என் நம்பிக்கை. ஜன்னலோரமாக உட்கார்ந்திருந்தாலும் வாசலில் நின்றிருந்தாலும், எதுவுமே வேண்டாமென்று கண்கள் மூடிப் படுத்திருந்தாலும்கூட சுதியோடு சேர்ந்திசைக்கும் ரயிலின் ஓசையும், தூளியின் தாலாட்டைப் போன்ற அதன் ஒருங்கிணைந்த அசைவும் காரணமே இன்றி மனதைப் பிசையும். புத்தகம் படித்தோ, பாடல்கள் கேட்டோ, திசை திரும்பவே முடியாது. ஒருமுறை அந்தி சாயும் நேரத்தில் சிவந்து காட்சி தந்த வானத்தின் கோலத்தை ஜன்னல் வழியாகப் பார்க்க நேர்ந்தது. யாரோ பாதியில் விட்டுவிட்டுப் போன ஓவியம் போல முற்றுப்பெறாமல் இருந்த அந்திவானம் என்னுள் பெருந்துக்கத்தைக் கிளறியது. அதன் பின்னணியில் தெரிந்த தூரத்து மலையில், யாரையோ தொலைத்துவிட்டதைப் போன்ற உணர்வு. அதிலிருந்து பார்வையைத் திருப்பவே முடியவில்லை. வழிந்த கண்ணீரைத் துடைக்க முடியாமல், அசையாமல் அமர்ந்திருந்தேன். அந்தக் கணம் கடக்க முடியாததாக இருந்தது. உலக இயக்கம் அங்கேயே தடைபட்டு நின்றுவிட்டதோ என்று அஞ்சினேன். என் நடுக்கத்தைப் பிறர் பார்த்துவிடாமல் இருக்க கைகளைக் கால்களோடு கட்டிக்கொண்டு முகத்தைப் புதைத்துக்கொண்டேன்.

வாழ்வின் வலிகளையும் இழப்புகளையும் அசைபோடச் செய்து, வலிமையான விரக்தியை ரயில் பயணங்கள் உண்டாக்கிவிடுகின்றன என்பதால், யார் வற்புறுத்தி அழைத்தாலும் மறுத்துவிடுவேன். ‘ரயில் பயணங்கள் துயர்மிகு அனுபவத்தைத் தரும்’ என்று நான் சொன்னால் யாராவது நம்புவார்களா? ஆனால் அவன் நம்பினான்.

எந்தப் பயணமென்றாலும் அது ரயிலில் அமைய வேண்டும் அவனுக்கு. இம்முறைகூட வேறு வழியே இல்லாததால்தான் பேருந்தில் சென்றான். ரயிலில் போவதே பெரிய பயண அனுபவம் என்று கூறுவான். ‘உன் துயரை நான் பகிர்ந்துகொள்கிறேன். என்னோடு ரயிலில் வா’ என்று அவன் அழைத்தபோது ஏனோ மறுக்க முடியவில்லை. பயணம் முழுக்க என்னை அரவணைத்தபடியே வந்தான். சிலர் எங்களை வேடிக்கை மனிதர்களைப் போல வியப்புடன் பார்த்தனர். ரயிலின் பெட்டி முழுக்க நடக்கவைத்தான். கதவருகே வெகுநேரம் நிற்கவைத்து, ரயிலின் வேகத்தையும் ஓசையையும் பழக்கப்படுத்தினான். ஒவ்வொரு நிறுத்தத்திலும் இறங்கி நின்றோம். சக பயணிகளிடம் பேசி அவர்களின் கதைகளைக் கேட்கச் செய்தான். குழந்தைகளுடன் விளையாடி இறுக்கம் போக்கினான். இன்னும், ரயிலின் பகல், ரயிலின் இரவு, ரயிலோடு வரும் வானம், உடன் பயணிக்கும் தூரத்து மலைகள் எல்லாவற்றையும் ரசிக்க வேண்டிய விஷயங்களாக்கினான். என் கைகளை அவன் விடவே இல்லை. ரயிலுக்கும் எனக்கும் இருந்த இடைவெளி குறைந்ததை உணர முடிந்தது. நண்பனைப் போல ரயிலைப் பெருமையோடு எனக்கு அறிமுகப்படுத்தினான். பலரது வாழ்வனுபவங்களை தாங்கிச் செல்லும் ரயிலோடு புதிய நெருக்கம் வந்து ஒட்டிக்கொண்டது அவனால்.

புரண்டு படுத்தேன். இன்னும் சூரியன் வரவில்லை. சாம்பல் பூத்த காலைப் பொழுது நீங்காமல் கிறங்கடித்தது. அவனைப்பற்றிய நினைவுகள் தடைபடும் என்பதால் கண்விழிக்கப் பிடிக்கவில்லை. இன்று முழுக்கக்கூட இப்படியே கிடந்து அசைபோடலாம். அவ்வளவு விஷயங்களைச் சுமந்தவன் அவன். ஒவ்வொரு நாளும் என்னைப் புதியவளாகக் கண்டு தன்னைப் புதுப்பித்துக்கொள்வது அவன் வழக்கம். எப்படி நேசித்தாலும் என் அளவுக்கு அன்பு செலுத்த முடிவதில்லை என்பதொன்றே அவன் புகார். ஏன் என்னைத் தேர்ந்தெடுத்தான், நான் ஏன் அவனை ஏற்றுக்கொண்டேன் என்பது பற்றி ஒருநாளும் நாங்கள் பேசிக்கொண்டதில்லை. மனம் முழுக்கத் தேக்கிவைத்திருந்த அவ்வளவு அன்பும் அவனிடம்தான் பீறிட்டு வெளிப்பட்டது. அதைத் தாங்கக்கூடிய வலிமை படைத்தவனாக அவன் இருந்தான். அமைதியைத் தரும் உறவுதான் இன்பத்தையும் தருகிறது. என் தனிமையில் கூட அறிய முடியாத அமைதியை அவன் அண்மையில் உணர்கிறேன். திரட்சியான மேகம் மழைத் துளிகளால் கனத்திருப்பதைப் போல அவனும் அளவற்ற அன்பைச் சுமந்து என் மீது பொழிந்துகொண்டே இருக்கிறான். செழிப்பான மரமாக மழை நீரைப் பருகி, மேகத்துக்கே திருப்பி அனுப்புகிறேன். எங்கள் அன்பு ஒரு சுழற்சி. கொடுத்துக் குறையாத அற்புதம். தொட்டு, தீண்டி, அணைத்து, ஆற்றிக்கொள்ளும் அழகு. இன்று அவன் திரும்ப வேண்டிய நாள். அவன் மனம் எப்போதோ இங்கு வந்து சேர்ந்திருக்கும். என்னைப் போலவே கண்களை மூடி நினைவுகளில் லயித்துப்போயிருப்பான். பேருந்து ஜன்னல் வழியாக அவனைத் தீண்டும் குளிர் காற்றில் என்னை உணர்வான். அதன் படபடப்பில் அவனை எதிர்நோக்கியிருக்கும் என் மனதை அறிவான். தன் தனிமையில் என் தனிமையைக் கண்டுகொள்வான். சுமந்து வரும் ஆயிரமாயிரம் முத்தங்களை இந்த அறை முழுவதும் நிரப்புவான். அந்தக் கதகதப்பில் நான் கண்விழிப்பேன். அவன் வெயிலோடு வருவானா, மழையோடு வருவானா என்பதல்ல என் தேடல். அவன் உடனே வர வேண்டும். அறைக்குள் வீசிய குளிர் காற்றோடு மெல்லிய கதகதப்பும் சேர்ந்துகொண்டது.

அவன் வந்துவிட்டான்.

– 13 Jan 2009

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *