மறுவிசாரணை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 10, 2013
பார்வையிட்டோர்: 11,462 
 

சந்தியில் இருக்கும் தபாற்கந்தோர். அதற்குப் பக்கத்தில் உள்ள மதவடிக் கல்வீடு. அதில் இரண்டு பெட்டைகள். அதில் ஒன்றாக இருக்குமா? அட… அதுகள் “கிளாக்கர்” நாகலிங்கத்தாற்றை மகள்மார்.

அந்தப் பள்ளிக்கூடம். அதன் பின்பக்கத்து முள்ளு வேலியாலை தெரியும் வீட்டிலை ஒருத்தி. சைக்கிள்கூட வைத்திருந்தாள். கிப்பித் தலை. அவளாக இருக்குமா?

அட… அது “ஜேபி”யின்ரை மகள்.

பிறக்கறாசியார் பொன்னம்பலமே நினைவில் வர மறுத்தபோது… மகளை எப்படி நினைத்துப் பார்க்க முடியும்?!

சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி. அதேபோல, தான் உண்டு தன் வேலையுண்டு என்றிருந்தவனை அம்மாவின் கடிதம் உசுப்பிவிட்டு, தற்போது “உணவு செல்லவில்லை சகியே, உறக்கம் கொள்ளவில்லை” என்ற நிலை. நந்தகுமாரன். செல்லமாக நந்தன். ஜேர்மனிக்கு வந்து பத்து வருடங்கள் இருக்குமா? இருக்கும். வசதியாக உள்ளானா? உள்ளான்.

அன்று அம்மாவின் கடிதம் வந்திருந்தது.

“அன்புள்ள நந்தன்!….” என்று ஆரம்பித்து, ஊர்ப் புதினங்கள் கொழும்புப் புதினங்கள் எனச் சுற்றிச் சுழன்று விசயத்துக்கு வந்தாள். “இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இப்பிடியே வாழப்போறாய்? உனக்கும் முப்பது வயதாகுது. காலாகாலத்திலை ஒரு நல்ல இடமாய்ப் பார்த்து கலியாணம் கட்டவேண்டிய நேரம் வந்துவிட்டது. பிறக்கறாசியார் பொன்னம்பலம் தன்னுடைய இரண்டாவது மகளுக்கு உன்னைக் கேட்டு வந்தவர். அவையும் வெள்ளவத்தையில்தான் இருக்கினம். உனக்குச் சம்மதம் என்றால் மேற்கொண்டு கதைக்கலாம்…”

கடிதம் வந்த விசயத்தைச் சொல்லி, சில வேண்டுகோள்களை விடுத்துப் பதிலை எதிர்பார்த்து, அன்பைத் தெரிவித்து முடிந்தது.

“பிறக்கறாசியார் பொன்னம்பலத்தின்ரை மகள்….?!” நினைத்துப் பார்த்தான். மனத்திரையில் பத்து வருடத்துக்கு முந்திய காட்சிகள் பசுமையாகப் படம் விரித்தன.

சந்தியில் இருக்கும் தபாற்கந்தோர். அதற்குப் பக்கத்தில் உள்ள மதவடிக் கல்வீடு. அதில் இரண்டு பெட்டைகள். அதில் ஒன்றாக இருக்குமா? அட… அதுகள் “கிளாக்கர்” நாகலிங்கத்தாற்றை மகள்மார். அந்தப் பள்ளிக்கூடம். அதன் பின்பக்கத்து முள்ளு வேலியாலை தெரியும் வீட்டிலை ஒருத்தி. சைக்கிள்கூட வைத்திருந்தாள். கிப்பித் தலை. அவளாக இருக்குமா? அட… அது “ஜேபி”யின்ரை மகள்.

பிறக்கறாசியார் பொன்னம்பலமே நினைவில் வர மறுத்தபோது… மகளை எப்படி நினைத்துப் பார்க்க முடியும்? அம்மாமீது ஆத்திரமாக வந்தது. கடிதத்தோடு ஒரு போட்டோவாவது கேட்டு வாங்கி அனுப்பியிருக்கலாம். கலியாணம்தானே… இவ்வளவு காலத்துக்குப் பிறகு அம்மாவுக்கு அக்கறை ஏற்பட்டிருக்கிறது. சம்மதம் தெரிவித்துவிடலாமா?! பெட்டை எப்படி இருப்பாள் என்று தெரியாமல் எவ்வாறு சம்மதம் தெரிவிப்பது?

கிளியை எதிர்பார்த்துக் கற்பனைகளில் காதல் சாம்ராஜ்யம் அமைத்துக் கனவு கண்டுகொண்டிருக்கும்போது, மைனா வந்து குதித்துச் சாம்ராஜ்யத்தைச் சிதறடித்துவிட்டால்…. வாழ்க்கையே நரகமாகிவிடும். “போட்டோ அனுப்பினால்தான் முடிவு கூறலாம்” என அம்மாவுக்கு அறிவித்தால் என்ன?! தவறாக நினைத்து விடுவாள். தனது பிள்ளை தன்னிலை நம்பிக்கை இல்லாமல் போட்டோ கேட்கிறானே என்று வருத்தப்படுவாள். பெட்டை எப்படி இருப்பாள் என்று தெரியாமல் பதில் எழுத மனம் ஒப்பவில்லை.

அம்மாவுக்கு தீர விசாரித்துப் பெட்டையைப்பற்றி அறிந்ததன் பின்னர் பதில்போட்டால் என்ன? தாமதமானால் வலிய வந்த சம்பந்தம் தூர விலகிப் போய்விடும். பிறகு, பதில் “லேற்”- அதனால் சம்பந்தம் “லொஸ்ற்”- வாழ்க்கையே “வேஸ்ற்”- அம்மா சொல்லுவாள் நீ எதிலையுமே “லாஸ்ற்”.

நந்தனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. என்னவாவது செய்தாக வேண்டும். அதுவும் மிக விரைவாக. யாராவது ஊர் ஆட்களைத் தேடிப் பிடித்தால்தான் விசாரிக்கலாம். ஜேர்மனியில் வாழும் ஊராரைப் பட்டியல் போட்டான். மிகவும் தூரத்தில் வசிப்பவர்களைத் தள்ளிவிட்டான். அவசரம் என்றால் பிறகு தேடிப் பிடிக்கலாம்.

வசந்தி அக்கா…. நூறு கிலோமீற்றர் தூரத்தில்தான் வசிப்பிடம். குடும்பமாக வாழ்கிறார். விசாரிக்கலாம். வசந்தி அக்காவுக்கு எத்தனை பிள்ளைகளோ தெரியவில்லை. போகும்போது வெறுங்கையுடனா போவது?!

Ööö

வரிசையான வீதியெங்கும் உயர்ந்து கம்பீரமாக நிற்கும் அடுக்கு மாடி வீடுகள். அவற்றுள் ஒன்றின் வாசலில்போய் வீட்டிலக்கத்தைச் சரி பார்த்துக்கொண்டு, வசந்தியின் பெயர் பொறித்த அழைப்பு மணியைத் தேடினான்.

“கணேசன்”

வசந்தியின் கணவன்.

அழுத்தினான்.

சிறிது மௌனத்தின் பின் சுவரில் பதிந்திருந்த சிறிய ஒலிபெருக்கியில் வசந்தி அக்காதான்….

“ஹலோ! ஆரது…”

“நான் நந்தன்….”

“நந்தனோ…? எனக்குத் தெரியேலை…”

“என்ன அக்கா உப்பிடிச் சொல்லுறியள்?! நான் சின்னையா வாத்தியாற்றை மகன்…”

“ஓ…. ஓ…. தெரியும். தெரியும். என்ன திடீரெண்டு இந்தப் பக்கம்…”

“உதை றோட்டிலை நிக்க வைச்சே விசாரிக்கிறது? கதவைத் திறவுங்கோவன்…”

பிரயாணக் களைப்பு. அவசரத்தில் தேனீரைமட்டும் பருகிவிட்டு வெளிக்கிட்டது. வசந்தியின் வீட்டில் சாப்பிடலாம்தானே என்ற எண்ணம். வீட்டிற்கு வரும் விருந்தினர்களை…. அதுவும் பல வருடங்கள் கழித்து வரும் விருந்தினர்களை விழுந்து விழுந்து உபசரிப்பார்கள் என்ற திடமான நம்பிக்கை அவனுக்கு.

சிறிதுநேரம் வசந்தியின் குரலைக் காணவில்லை.

“என்ன அக்கா…. என்ன யோசினை….?!”

“யோசினை இல்லை நந்தன். பயம்…”

“பயமோ…?”

ஆச்சரியத்துடன் கூவினான்.

“எனக்கோ…”

“அவருக்குப் பயம்…. நீர் ரெலிபோன் எடுத்துக்கூடச் சொல்லாமை வந்திட்டீர்….”

“உங்கடை ரெலிபோன் நம்பர் என்னட்டை இல்லை அக்கா…”

“குறை நினையாதையும்…. அவர் இல்லாத நேரத்திலை ஆரையும் வீட்டுக்குள்ளை விடக்கூடாதெண்டு உத்தரவு…. அதுதான் நந்தன். நீர் என்ன நினைப்பீரோ தெரியாது…”

வசந்தியின் குரல் பரிதாபமாக ஒலித்தது.

நாகரீகத்தின் உச்சியில் நிற்கும் ஒரு நாட்டில் இப்படியொரு கணவன். அவருக்கு இப்படியொரு மனைவி, கூண்டுக்கிளியாக…!!

நாடு மாறினாலும் பாசை மாறினாலும் உடைகள் மாறினாலும் உள்ளத்தை மாற்ற விரும்பாத மனிதர்கள்.

“அக்கா! அப்ப நான் போவிட்டு வாறன்…”

“கொஞ்சம் பொறும் நந்தன்…. வீட்டுக்குள்ளைதான் கூப்பிட முடியேலை. என்ன விசயமாய் வந்தனீரெண்டு கேக்கலாமில்லையா?”

“நாலு சுவர்களுள் அடைபட்டுக்கிடக்கும் இவளிடம் சொல்லுவதால் என்ன பயன் கிடைத்துவிடப் போகிறது?” யோசித்தான்.

“விருப்பமில்லாட்டால் வேண்டாம்….”

“இல்லை அக்கா… விசயத்தைச் சொல்லி விசாரிக்கத்தானே விடியவெள்ளண்ண எழும்பி இவ்வளவு தூரம் வந்திருக்கிறன்…. ஆனால் இப்பிடி வாசலிலை நிண்டு கதைக்கிறது புது அனுபவம்…”

“எனக்கு இது பழகிப்போன விதி…. அப்பா அம்மா பெரிசில்லை, காதலன்தான் வேணுமெண்டு நானே என்ரை வாழ்க்கையை அமைச்சுக்கொண்டன். இப்ப பாழாய்ப்போன சந்தேகம்…. அதுக்குப் பயந்து பயந்து வாழவேண்டிக் கிடக்கு….”

“கவலைப்படாதேங்கோ…. காலம் எப்பவும் கஸ்டமாக இருக்காது. அக்கா, எனக்கொரு சம்பந்தம் ஊரிலையிருந்து பேசி வந்தது. பிறக்கறாசியாற்றை மகளாம்…. அவவைப்பற்றி உங்களிட்டை ஏதாலும் விசாரிக்கலாம் எண்டுதான் வந்தனான்…”

“என்னத்தைப்பற்றி விசாரிக்கப் போறீர்? அழகு… குணம்…. படிப்பு… பண்பு… இல்லாட்டில் பணம் காசு…?! நான் சொல்லுறனெண்டு குறை நினைக்காட்டில் ஒண்டு சொல்லுறன்…”

“சொல்லுங்க…”

“உங்கடை தாய் தேப்பன் உங்களுக்கு நல்லதைத்தான் செய்வினம்…. அவையிலை சந்தேகப்படாதையுங்கோ… ஒவ்வொரு மனுசருக்கும் ஒவ்வொரு குறை இருக்கு. ஒருத்தருக்குப் படிப்பு இல்லாட்டில் நல்ல குணம் இருக்கும். பணம் இல்லையெண்டால் நல்ல அழகு இருக்கும். வாழ்க்கைக்கு இதுகளெல்லாம் ஓரளவுக்குத்தான் தேவை… விட்டுக் கொடுத்து வாழுற மனம்தான் முக்கியம்… இண்டைக்கு என்ரை வாழ்க்கையைப் பாருங்கோ… காதலிச்சம்…. படிப்பு “ரியூசன்” எண்டு தாய் தேப்பனை ஏமாத்திக் காதலிச்சம்…. ஓருயிர் ஈருடல் எண்டமாதிரி…. ஆனால் எல்லாம் கொஞ்சநாள் கவர்ச்சி…. இப்ப கவர்ச்சி போய் சந்தேகம் வந்து நான் ஒரு சிறைப்பறவையாய்…. ஓமோம்…. அவருக்கு என்னிலை சந்தேகம்… அடி உதை… குத்து…. நான் ஆசையாகத் தேடிக் கொண்ட வாழ்க்கை. என்ரை “பாஸ்போட்”கூட என்னட்டை இல்லை. அவர்தான் கொண்டு திரியுறார்…. ஓடீடுவனாம்…”

சுவரில் பொருத்தியிருந்த ஒலிபெருக்கியில் வசந்தியின் குரல் விம்மியது.

நந்தனுக்கு என்ன கூறுவதென்று தெரியவில்லை.

“நந்தன்…. விசாரணைகளாலை ஒரு வாழ்க்கையை வளமாக அமைக்க முடியாது. எல்லாத்துக்கும் மனம்தான் முக்கியம். மனம் இருந்தால் மார்க்கம் தானாய்த் தெரியும்…. இப்பிடிச் சொல்லுறதுக்காகக் கோபிக்கிறீரோ…”

“இல்லை அக்கா…. நான் மெனக்கெட்டு வந்ததுக்கு உங்கடை அறிவுரைமூலம் பலன் கிடைச்சிருக்கு…. நான் போவிட்டு வாறன் அக்கா….”

ஒருவரின் அனுபவம் மற்றவருக்குப் படிப்பினையாகிறது.

அம்மாவுக்குச் சம்மதம் தெரிவித்துக் கடிதம் எழுதினான். நிச்சயமாக அம்மா சந்தோசப்படுவாள். அவள் சந்தோசமடைந்தால் அதுவே வாழ்வின் களிப்பிற்கு அஸ்திவாரமாகும்.

அம்மாவின் பதிலுக்காகக் காத்திருந்தான்.

Ööö

“அன்புள்ள நந்தன்,

உனது கடிதம் கிடைத்து மிகவும் சந்தோசம். ஆனால் விதி வேறுவிதமாக அமைந்துவிட்டது.

பெண் வீட்டார் உன்னைப்பற்றி விசாரித்தார்களாம். உனக்குப் உந்த நாட்டுப் புத்தகம் இல்லையாம். சொந்த வீடு இல்லையாம். தொழிற்சாலை வேலை இல்லையாம். ஒரு “கார்”கூடச் சொந்தமாக இல்லையாம்.

அதனால் வேறு இடத்தில் சம்பந்தம் பேசுகிறார்களாம்…….”

கடிதம் தொடர்ந்தது.

“வசந்தி அக்காவைப்போல ஒருத்தியை அவர்கள் சந்திக்கவில்லைப்போலும்.”

நந்தனுக்கு உரத்துச் சிரிக்க வேண்டும்போல் இருந்தது.

(பிரசுரம்: பூவரசு)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *