கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 15, 2012
பார்வையிட்டோர்: 10,104 
 

“டிரிங்க்ஸ் சாப்பிடும்போது கொறிக்க ஏதாவது பண்ணியிருக்கியா?” என்று சன்னமாக விசாரிக்கிறான் பிரபு.

டிரிங்க்ஸ், அந்த வீட்டில் அவ்வப்போது புகும். கிருஷ்ணவேணிக்கு அது ஒவ்வாத ஒரு வழக்கம். அவள் அகராதியில் அதற்கு சாராயம் என்று பெயர்.

“காராசேவும் பக்கோடாவும் வாங்கி வெச்சிருக்கேன்…”

கமறலும் புகையும் அடங்கி குக்கர் அமைதியாகி, புளியோதரையும் தயிர் வடையும் பாதி தயாரான இதரங்களுமாக சமயலறையில் மணம் கூடியது. இருட்டு கவிழ, அலுவலக நண்பர்கள் வந்தார்கள். குளிர்சாதனப் பெட்டியில் ஐஸ் கட்டிகள் உறைந்திருந்தன. தண்ணீர் பாட்டில்கள், ஒன்றிரண்டு சோடாக்கள்… இதற்கெல்லாம் கிருஷ்ணவேணி தேவையில்லை.

மூன்று பேர். வடக்கத்தி பையன்கள். அவசரமாக அறிமுகப்படுத்தி யதில் யார் கெர்க்கர், யார் யாதவ், யார் பானர்ஜி என்று நினைவில் ஒட்டவில்லை. யாராக இருந்தாலும் அவளுக்குப் பிடிக்காத வர்கள். உயரதிகாரி சொன்னார் என்று, அவர் வீட்டுக்கு மது அருந்த வரும் அலுவலகக் கனவான்கள் மேல் அவளுக்கு நல்ல அபிப்பிராயம் இருந்ததில்லை.

பிரபு, “வாங்க நம்ம உள்ள உக்காரலாம்’’ என்றான். அவன் வழக்கமாக அமரும், பால்கனி இருந்த படுக்கை அறைக்கு அவர்களைக் கூட்டிச் சென்றான். கண்ணனைக் கூட்டிக்கொண்டு இவள் இன்னொரு அறைக்குச் சென் றாள். இன்னும் ஒருமணி நேரமோ, இரண்டு மணி நேரமோ… அவர் களுக்கு கிறுகிறுப்பு ஏறி பசிக்க ஆரம் பிக்கும் வரை இங்கே இவனுடன் விளையாட வேண்டும். கதை சொல்ல வேண்டும். இவன் பார்க்கும் போகோவை அவளும் பார்க்க வேண்டும்.

வெளியே குடித்துவிட்டு வீட்டுக்கு வரும் நிலையில்தான் ஆரம்பித்தது. மெள்ள குற்றவுணர்வோடு தயக்கமாக நுழைந்தது ‘பியர்’ என்கிற, பயமுறுத் தாத தகர டப்பா வடிவில் சாதுவாக இருந்த மது. அதன் பிறகு அதிக வீரியம் உள்ள கலவை வந்தது, யாருக்கோ பரிசளிக்க வேண்டும் என்கிற சாக்கில். அடுத்து கறுப்புத் திரவம் அடைத்த கண்ணாடிக் குடுவை. அது விரிவ டைந்து விருந்தோம்பல் என்கிற சாக்கில் சாராயம் சம்மணம் போட்டு வீட்டுக்குள் உட்கார்ந்துவிட்டது. இனி அதை விரட்ட முடியாது.

மாடியில் படுக்கை அறைக்குள் மட்டுமே குடிக்க வேண்டும் என்கிற கட்டுப்பாட்டை மட்டும்தான் அவளால் விதிக்க முடிந்தது. கணக்கிலடங்கா சச்சரவுகளுக்குப் பிறகு பெரிய மனது பண்ணி பிரபு அந்த விண்ணப்பத்துக்கு மட்டும் சரியென்றான். வீட்டின் ஒரு அறைக்குள் அதை அடைத்துவைத் ததில் தானும் தன் குழந்தையும் காப்பாற்றப்படுவதாக உணர்ந்தாள் கிருஷ்ணவேணி.

‘போகோ’விலிருந்து கண்களை விலக்கி குழந்தை, “அப்பா மருந்து சாப்பிடுறாங்களா?” என்றான்.

“ஆமா” என்றாள்.

அவன் அகராதியில் அந்தப் பெயர் தான் சொல்லப்பட்டு இருக்கிறது. கசப்பு மருந்து! அலுவலக நண்பர்கள் வரும் போதெல்லாம் அப்பா மருந்து சாப்பிடுவார் என்ற அளவுக்கு குழந்தைக்கு விவரம் தெரியும்.

பிரபு தன் அலுவலக நண்பர் களுடன் நட்பு பாராட்ட எப்போதுமே மதுபானத்தைத்தான் நாடியிருக் கிறான். ஒன்றாக உட்கார்ந்து குடித்தால் இன்னொருவரின் பரிபூரண நட்பும் நம்பிக்கையும் கிடைக்கிறது என்பது அவனது அலுவலகச் சித்தாந்தம்.

அலுவலகச் சந்திப்புகள், விருந்து கள் என்று என்றாவது ஒரு நாள் சிவந்த கண்களும், முடை சுவாச முமாக வந்தவன், மெள்ள மெள்ள முற்றிலும் மாறிவிட்டான். ‘வெள்ளைக் காரன் அலுவலகம், டிரிங்ஸ் சாப்பிடாவிட்டால் அவமானம்’ என்கிற விநோத அலுவலகக் கோட் பாடுகள் வீட்டுக்குள்ளும் நுழைந்து விட்டன. கொஞ்சம் கொஞ்சமாக வீட்டுக்குள் புழங்க ஆரம்பித்து, வீட்டில் பிரதானமாக விடைப்பாக நிற்கும் தைரியம் பெற்றுவிட்டது. மாடிப்படி ஏறி படுக்கை அறைக்குப் போகும் இடத்தில் அதற்கென்று பிரத்யேக மர அலமாரி ஒன்று நிற் கிறது. உள்பக்கம் மின்சார பல்புகள் பொருத்தி பிரத்யேகமாகச் செய்த கண்ணாடி பதித்த அலங்கார மர பீரோ. விதவிதமான வடிவங்களில் கறுப்பும் கறுஞ்சிவப்புமாக திரவங் களை உள்ளடக்கிய கண்ணாடிக் குடுவைகள். மெலிதான புடவை அணிந்து உள் வனப்பைக் காட்டுவதில் ரகசிய சந்தோஷமடையும் யுவதி மாதிரி மதுக் கவர்ச்சி காட்டும் பீரோ. அதன் முன்புறம் பதித்த சன்னமான கம்பிகளில், மது சாப்பிடும் குவளை களைத் தலைகீழாகத் தொங்க வைப்பதில் அலாதி ஆசை.

“இது உங்ககிட்ட இருக்கா?” என்று வருபவர்கள் வினவுவதும், அந்தப் புட்டியை சேகரித்த விசேட அனுப வங்களை புளகாங்கிதத்தோடு அவன் விவரிப்பதையும் ஒவ்வொரு தடவை யும் பார்க்கிறாள். மது அருந்துவதில் இருந்த குற்றவுணர்வு முற்றிலும் விலகிப்போய் அதன் நூதனமான சுவைகளைப் பிரஸ்தாபிக்கும் வாழ்க்கை யில் வெற்றிபெற்ற கனவான்கள்.

கிருஷ்ணவேணியின் வீடு புகை யிலைகூட போடாத அப்பாவின் கண்டிப்பு ஆக்கிரமித்த வீடு. என்றோ ஒரு நாள் நண்பர்களுடன் சேர்ந்து குடித்துவிட்டு வந்தான் என்று அண் ணனை கன்னத்தில் அறைந்து, திண் ணையில் கிடத்திய வளர்ப்பைக் கண்ட வீடு. அந்த வீட்டின் நியதிகள் பழகியவளுக்கு பிரபு குடிப்பான் என்று தெரிந்ததும் முதலில் அதிர்ச்சியாக இருந்தது.

“எப்பவாவது ஒரு முறை, ரெண்டு பெக்தான். அளவா சாப்பிட்டா ஒண் ணும் ஆகாது, பத்து பேர் உக்காந்து சாப்பிடும்போது நான் பேக்காட்டம் வேடிக்கை பார்க்க முடியாது.” –ஒவ் வொரு காலகட்டத்திலும் நிறைய காரணங்கள் சொன் னான் பிரபு.

“அவருக்கு குடிக் கிற பழக்கம் இருக் குப்பா.”

“இப்பல்லாம் எல்லாரும் குடிக்க றாம்மா. இதெல்லாம் தடுக்க முடி யாது. பெரிய கம்பெனில வேலை பாக்கிறவர். அப்பப்ப குடிக்க வேண்டி யிருக்கும். அளவுக்கு மீறாம பாத் துக்கோ. அவ்வளவுதான்.” இரண்டு பெண்களின் கல்யாணம் தாண்டி, ரிட்டையர் ஆகி, உடல் நலிந்து மனம் களைத்துப் போயிருந்த அப்பாவின் உலகமும் மாறியிருந்தது.

ஆட்டோ உதிரி பாகங்கள் தயாரிக் கும், பாரம்பரிய நிறுவனத்தில் முப்பது வருடங்களாக கணக்கு எழுதி வாழ்க்கையைத் தள்ளிய அவ ருக்கும், அவரின் அலுவலக நண்பர் களுக்கும், வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்தவோ அவர்களுக்குள் நட்பு வளர்க்கவோ எந்த மதுபான மும் தேவையாக இருக்கவில்லையா என்று கிருஷ்ணவேணி யோசித்திருக் கிறாள். அலுவலகங்களும் அவை நடத்தப்படும்விதமும் ஒரு தலைமுறை இடைவெளியில் மாறிவிட்டதா என்ன?

வீட்டில் மது நுழைந்ததன் காரணம், அலுவலக பார்ட்டி ஒன்றை தரிசித்தபோது தெரிந்துபோனது. சீமைச் சாராயம் பெருக்கெடுத்து ஓடிய பார்ட்டி. ஆண்கள் மட்டுமல் லாமல், மேலதிகாரிகளின் மனைவி களும் கறுப்புத் திரவத்தைக் கையில் வைத்துக்கொண்டு தள்ளாடிய அலுவலக பார்ட்டியின் அதிர்ச்சி விலக, ரொம்ப நாட்களானது. பிரபு பெயர்கூட ‘ப்ரப்ஸ்’ என்று மாறி யிருந்தது. பெண்களே குடிக்கும்போது ஜூஸையும் கோக்கையும் உறிஞ்சிக் கொண்டு இருந்தால் என் ஸ்டேட்டஸ் என்னாவது என்று பிரபு கண்ணா லேயே சொன்னான்.

மாடி அறைக் கதவைத் திறந்து கொண்டு சிரிப்பு எதிரொலித்தது. மது அருந்தி முடித்துவிட்டார்கள். சாப்பிட உட்கார்ந்தவர்களில் ஒருவன் பெரிதாக ஆபாச ஏப்பம் விட்டு, உடனே ‘‘ஸாரி’’ என்றான். ஸாரியின் சாராய வாடை தாங்காமல் கொஞ்சம் ஒதுங்கிக்கொண்டாள். சாப் பிடும்போதும் அலுவலக அரசியல் பேசினார்கள். பிரபு சொல்வதற்கு அடிக்கடி சிரித்தார்கள்.

அவர்களின் உரையாடலில் கலந்து கொள்ளாமல் சற்று ஒதுங்கியே நின் றாள். வரும் அந்நியர்களை அறிந்து கொள்ள முயற்சித்ததில்லை. அவர்கள் அத்தனை பேரையும் குடிப் பழக்கம் உள்ளவர்கள் என்கிற பொதுவான கணிப்பில் பாகுபடுத்திவைத்து அதைத் தாண்டி அவர்களைத் தெரிந்துகொள் வதில் ஆர்வம் இருப்பதில்லை.

சாப்பிட்டுவிட்டு மரியாதை நிமித்தம் கொஞ்சம் பேசிவிட்டு, நள்ளிரவை நெருங்கிக்கொண்டு இருந்த கடிகாரம் பார்த்துவிட்டு, “கானா படியா தா பாபி” என்று ஆளுக்கொன்றாக நன்றி வார்த்தைகள் சொல்லி எழுந்து கொள்கிறார்கள் வடக்கத்திய பிரம் மச்சாரிகள். அவர்கள் தங்கியிருக்கும் விடுதியில் விட்டுவிட்டு வருவதாகச் சொல்லிவிட்டு, பிரபு கூடவே போகி றான். சிரிப்பொலி அதிர சாராய கோஷ்டி கேட்டைத் திறந்துகொண்டு வெளியே போவது தெரிகிறது.

மிச்சத்தைத் தனித்தனிப் பாத்திரங் களில் கொட்டி குளிர்பெட்டியில் அடைத்து, உணவு அறையிலிருந்த பாத்திரங்களை சமயலறைக்கு இடம் மாற்றி, எச்சில் பாத்திரங்களில் தண்ணீர் நிரப்பிவைக்கும் வேலை. பதினைந்து நிமிடங்களுக்கு நீடிக்கும் ஆயாசமான வேலை.

வேலையின் சுவாரஸ்யத்தில் குழந்தையின் நினைவு கொஞ்சம் தவறிப்போனது. வீடு நிசப்தமாக இருக்கும் நெருடலில் குழந்தை நினைவுக்கு வந்து, “கண்ணா” என்று கூப்பிட்டவளுக்குப் பதில் குரல் இல்லாமல் வீடு மௌனமாக இருந் தது. “கண்ணா” & குரல் உயர்த்திக் கூப்பிட்டும் பதில் இல்லை. முந்தானை யைப் பிடித்தபடி சுற்றும் குழந்தையின் அரவம் கொஞ்சமும் கேட்காததால், திரும்பத் திரும்ப அவனைக் கூப் பிட்டபடியே மாடிப் படி ஏறிச் சென்றாள். மூடிக் கிடந்த படுக்கை அறையின் கத வைத் திறந்து பார்த்தவளுக்கு கண்ணன் தெரிந்தான். அறையின் மூலையில் பால்கனிக்கு ஒட்டினாற் போல அமர்ந்திருந்தான். தட்டில் விரவியிருந்த முந்திரிப் பருப்புகள் முன்பாக கையில் கண்ணாடிக் குவளையோடும் முகத்தைச் சுளிக்கும் பாவத்தோடும்.

ஓடிப்போய் பார்த்தபோது, கையி லிருந்த கண்ணாடி டம்ளரை இறுக்கமாகப் பற்றியபடி இருந்தான், அம்மா தன் கைகளிலிருந்து அதைப் பிடுங்கப்போவதை எதிர்பார்த்தவன் போல. குனிந்து அவன் கையிலிருந்த குவளையை முகர்ந்து பார்த்த கிருஷ்ண வேணிக்கு குமட்டிக்கொண்டு வந்தது. கறுப்புத் திரவம். உதடுகளைச் சுற்றி ஈரமாக இருந்த முகத்தோடு குழந்தை “அப்பா மருந்து” என்றது.

“இதைச் சாப்பிட்டியா?” கிருஷ்ண வேணி அவனை அழுத்தமாக வினவு கிறாள்.

“கஸ்ப்பு மருந்து” என்கிறான் குழந்தை. முகத்தைச் சுளிக்கிறான்.

சாராயம், மூவரில் யாரோ மிச்சம் வைத்துவிட்டுப் போன எச்சில். அதை விடாப்பிடியாக பிடித்துக்கொண்டு இருந்த கண்ணனைப் பார்த்ததும் கோபம் வெடித்தது அவளுக்குள். முது கில் பளீரென்று அறைந்தாள். “சாப்பிட் டியாடா”? குழந்தை தன்னிச்சையாக கைகளை விடுவித்தது. அவன் கையி லிருந்து கண்ணாடி டம்ளரைப் பறித்து வந்து குளியலறை வாஷ்பேசினுக்குள் கொட்டினாள். அந்த வெண்மையில் கசடு மாதிரி பரவிய அந்த அருவருப்பு திரவம் கரைந்து ஓடும்படி தண்ணீர் குழாயைத் திருப்பி ஊற்றினாள்.

கண்ணனை இழுத்துக்கொண்டு குளியலறைக்குப் போனாள். அவ னைத் தலையில் நெட்டித் தள்ளி “துப்பு துப்பு” என்றாள். “துப்புடா”. குழுந்தை உத்வேகமில்லாமல் “து” என்றது. கை நிறைய தண்ணீர் எடுத்து அவன் வாயை அலம்புகிறாள். “வாயைக் கொப்புளி” என்று வாயில் தண்ணீரைத் திணிக்கிறாள். குழந்தை அவள் படபடப்பின் காரணம் புரியா மல் மலங்க மலங்க விழித்துக்கொண்டு அவள் கோபத்துக்குப் பயந்து அத்தனை யையும் செய்தது.

கண்ணன், கண்ணீர் திரள உட்கார்ந் திருக்கிறான். அவனைப் பார்த்ததும் தண்டித்த குற்ற உணர்வு பற்றிக்கொண்டு பச்சாதாபம் மேலிட, இன்னும் வலி மிகுகிறது. குழந்தை என்ன கண்டது, சாராயத்தையும் குடிப்பழக்கத்தையும்? ஆர்வக் கோளாறில் வாயில் கவிழ்த்துக் கொண்டுவிட்டது. நாளைக்கு மறந்து போகும். அடித்து அதைப் பெரிது பண்ணிவிட்டேனா? அடித்ததன் காரணம் ஆர்வம் அதிகமாகுமா?

“ஸாரிடா.. அம்மா ஸாரி” என்று மன்னிப்பு கேட்கும்போது இன்னும் வலித்தது.

கிருஷ்ணவேணி குழந்தையை கண்ணுக்கு நேராகப் பார்த்து யோசித் தாள். இதை எப்படி எதிர்கொள்வது? கசப்பு என்று இனி அதைத் தொடா மல் இருப்பானா? அதன் ருசி அவனுக் குப் பிடித்துப்போய்விட்டால்? அவன் கண்களில் இருந்த பயமும் வெகுளித் தனமும் அடிப்பது தீர்வில்லை என்றது. எத்தனை நாள் இதை மருந்து என்று சொல்லிக்கொண்டு இருப்பது? இன்னும் ஐந்து வருடங்கள் போனால் அதன் நிஜப் பெயர் விஸ்கி என்பது தெரிந்துகொள்வான். அடுத்த ஐந்தில், அப்பா சாப்பிடுவதை தானும் முயன்று பார்ப்பான். அதற்கடுத்த ஐந்தில், நாலு நண்பர்களை கூட்டி வந்து, “டிரிங்க்ஸ் சாப்பிடும்போது கொறிக்க ஏதாவது பண்ணியிருக்கியா?” என்று வினவ லாம். மதுபானத்தை அலங்காரமாக அடுக்கிவைக்கும் வீட்டில் குடிப்பதன் குற்றவுணர்வு எப்படி இருக்கும்?

“அம்மா சொல்றதைக் கேப்பியாம்.. நீ சமத்து இல்லையா? இதெல்லாம் சாப்பிடக் கூடாது என்ன?’’

அடிக்கிற அம்மா அதற்குள் இளகிவிட்ட தைரியத்தில் குழந்தை, “ஏன்?” என்றான் சன்னமாக.

“உடம்புக்கு நல்லதுல்லடா கண்ணா. வயித்துல புண்ணு வரும்.’’

“அப்பா ஏன் சாப்பிடுறா?”

பளிச்சென்று வந்து விழுந்தது கேள்வி. பதில் சொல்ல முடியாமல் அவனை உற்று நோக்கினாள். என்ன சொல்வது? அவனைப் பார்த்தபடி மௌனமாகவே இருந்தாள். குழந்தையைக் கட்டிக்கொண்டு கதை சொல்லி முடிக்கும்போது நள்ளிரவு தாண்டியிருந்தது. படபடப் பாக ஆரம்பித்த மாலை அமைதியாக, நிறைவாக உறைந்திருந்தது. அம்மாவை கட்டிக்கொண்டு குழந்தை தூங்கி விட்டிருந்தான். நினைவுகள் தேய, கண்ணயர்ந்த இரவின் அமைதியைக் கலைத்து கார் ஓசை கேட்கிறது. பிரபு திரும்பி வந்திருந்தான். இரும்பு கேட் திறக்கும் சத்தம். பின்னர் வீட்டின் முன் கதவு திறந்து மூடும் ஒலி. தொடர் ஓசைகளில் பிரபுவை அவள் மனது தொடர்ந்துகொண்டே வரு கிறது. வீட்டுக்குள் வந்து விளக்கைப் போடுபவனுக்கு அதிர்ச்சிகரமாக இருக்கும். கட்டுக்கடங்கா கோபம் வரும். அவளுக்குத் தெரியும். மது பானங்கள் நிறைந்திருந்த அலமாரியில் கண்ணனின் அழகான புகைப்படம்! அவன் புரிந்துகொள்ளட் டும் என்று குழந்தையைக் கட்டியணைத்துப் படுத்தாள் கிருஷ்ண வேணி!

– 28th மார்ச் 2007

Print Friendly, PDF & Email

3 thoughts on “மருந்து

  1. Very beautiful story. Every man who drinks to maintain dignity and fashion must read this story and stop drinking for the benefit of his family and for our nation.

  2. அருமையான கதை…
    மயில்றகால் அடிக்கும் முயற்சிதான் என்றாலும், பலன் தரக்கூடியதுதான்.

  3. வெள்ளைக் காரன் அலுவலகம், டிரிங்ஸ் சாப்பிடாவிட்டால் அவமானம்’ என்கிற விநோத அலுவலகக் கோட் பாடுகள் வீட்டுக்குள்ளும் நுழைந்து விட்டன.
    இரண்டு பெண்களின் கல்யாணம் தாண்டி, ரிட்டையர் ஆகி, உடல் நலிந்து மனம் களைத்துப் போயிருந்த அப்பாவின் உலகமும் மாறியிருந்தது.
    மது பானங்கள் நிறைந்திருந்த அலமாரியில் கண்ணனின் அழகான புகைப்படம்!
    நல்ல அப்சர்வஷன்.தெளிவான நடை.நல்ல சிறுகதை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *