மன சாட்சி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 11, 2014
பார்வையிட்டோர்: 10,053 
 

அத்தனை சப்தங்களையும் ஒரு சேர எங்கோ இனந் தெரியாததோர் இடத்தில் வைத்துக் கொண்டு அசப்தத்தின் ஒட்டு மொத்தக் குத்தகையில் அக்கிரமம் புரிந்து கொண்டிருந்தது ஒருவித அமானுஷ்யம்… திறந்த நீதிமன்றத்தில் அத்தனை கண்களும் தீர்ப்புக்காகக் காத்துக் கிடந்தன.

நீதிமன்றம் என்றாலே வழமையாகவே குண்டூசி விழுந்தாலும் ட்ரம்மில் விழும் சப்தமாக… அத்தனை அமைதியாக… எங்கே வெளித்தள்ளப்படுகின்ற மூச்சு சப்தமாக வந்து விடுமோ என்ற அச்சத்தில் சப்தங்கள் அத்தனையும் சப்த நாடியாகி அவ்வளவு அமைதியையும் நிசப்தம் நிலவும் சூழலையும் வேறெங்கும் பார்க்க முடியாது.

அதுவும் மேல் நீதிமன்றம் என்றால் சொல்லவே தேவையில்லை.

சரியாக காலை பத்து மணி உட்கார்ந்திருந்த எல்லோரும் எழுந்து

‘மஹாதிகரனய…’ எனும் அதி உச்சமான பொலிஸ் காரனின் குரல் ஒலிக்க தனது க்லொக்கினை அணிந்தவாறு திறந்த நீதிமன்றத்துள் ஜட்ஜ் நுழைய அங்கு நிறைந்து வழிந்து கொண்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களும் பொது மக்களும் இயந்திரத் தனமாய் எழுந்து நிற்க அதிகாலையிலேயே கோயிலுக்குச் சென்று மனமுருகி பக்திப்பரவசத்தில் திளைத்து இன்று தான் சொல்லப் போகும் தீர்ப்பு நீதியைக் காக்க வேண்டுமே என்ற பிரார்த்தனையோடு நெற்றியிலே குங்குமத்தில் பொட்டிட்டு அமைதியே சொரூபமாக வந்த ஜட்ஜ் பெஞ்சில் ஏறி வழமையான தனது கதிரையில் உட்காரவும்

எழுந்து நின்ற அனைவரும் நீதியைத் தலை வணங்கியவாறு ‘ நிசப்தவன்’ எனும் ஆரம்பத்தில் கத்திய அதே பொலிஸ்காரன் மீண்டும் தன் உடம்பில் உள்ள அத்தனை சக்திகளையும் ஒன்று திரட்டிக் கொண்டு சப்தமிட அவரவர் இடங்களில் உட்கார்ந்து கொண்டார்கள்.

இன்று பழீல் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு இதோ கூண்டில ஒட்டு மொத்த பீதியையும் உள்வாங்கிக் கொண்டு தவிப்போடும் படபடப்போடும் என்னாகப் பொகிறதோ எனும் திகிலோடும் நின்று கொண்டிருக்கும் ஜப்பாருக்கு இன்றுதான் தீர்ப்பு.

கொலைக் கேஸ்.

அதுவும் தீர்ப்பு வழஙகப்படும் நாள்… மேல் நீதிமன்றம் நிறைந்திருந்தது. கோர்ட்டின் வலது பக்கத்தில் உள்ள பெஞ்சுகளில் ஒற்றை இரட்டை மூன்று என வெள்ளிகளைக் குத்திக் கொண்டும் எதுவும் குத்தாமலும் மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் சிலரும் கோர்ட் சார்ஜன்களும் ஒரு எஸ் எஸ் பி மற்றும் டிஐஜியும் உட்கார்ந்து கொண்டிருந்தனர்.

அதோ அவர்களுக்குப்; பக்கத்தில் கோர்ட் சூட் போட்டுக் கொண்டு நிபுணத்துவ சான்று வழங்க வந்திருந்த வைத்தியர். இடப்பக்கத்தில் போடப்பட்டிருந்த பெஞ்சுகளில் பூராவும் சனம் உட்கார்ந்து கொண்டிருக்க உட்கார இடமில்லாதவர்கள் நின்று கொண்டிருந்தனர். தமது வழக்குகளுக்காக வந்தவர்கள் தவிர தீர்ப்புக்காக காத்துக் கிடக்கும் ஜப்பாரின் மனைவி பிள்ளைகள்இ தாய் தகப்பன் மற்றும் ஏனைய இரத்த உறவுகள் குருதி கபளீகரம் செய்யப்பட்ட முகங்களோடு இருண்டு போய்க் கிடந்தார்கள்.

தனது பக்கத்து வயல் சொந்தக்காரனான பழீலை கத்தியால் குத்திக் கொன்று சந்தேகத்தின் பேரில் சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஜப்பார் ஆரம்பத்தில் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சரியாக எட்டு மாதங்கள் சரியாக விளக்க மறியலில் இருந்து பின்னர் மேல் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டு சும்மா இப்படியே நொன் சமரி இங்குவரி எனும் பெயரில் ஒரு மூன்று வருஷம் நீதவான் நீதிமன்றத்தில் ஓட அதன் பிறகு சட்டமா அதிபர் திணைக்களத்தினால் அவனுக்கெதிராக செய்யப்பட்ட குற்றப்பகர்வின் படி இலங்கை தண்டனைச் சட்டக் கோவைப்பிரிவு இருநூற்றி தொன்னூற்றியாறின் கீழ் பழீல் என்பவரைக் கத்தியால் குத்தி அவரைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணத்தோடு அவரது மரணத்தை ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு மேல் நீதிமன்றத்தில் கடந்த பதினொரு வருட காலமாக வழக்கின் ட்ரையல் நடந்து கொண்டிருந்தது.

இன்று தீர்ப்பு தினம்.

அரச சார்பில் நான்கு பொலிஸார். சுதந்திரமான சாட்சி என சொல்லப்படும் மூன்று பொதுமக்கள் இறந்தவரது மனைவிமற்றும் இறந்ததாகச் சொல்லப்படும் பழீலின் உடலைப் போஸ்ட் மோர்ட்டம் செய்த ஜூடிசீயல் மெடிக்கல் ஒபீஸர் என மொத்தம் ஒன்பது பேர் சாட்சிகளை வழங்கியிருக்க டிஃபன்ஸ் ட்ரையலில் வழக்கின் எதிராளியான ஜப்பார் குறுக்கு விசாரணைக்கு உட்படுத்தப்படாத குற்றவாளிக் கூண்டிலிருந்து டொக் ஸ்டேட்மன்ட் கொடுத்திருந்தான்.

அவனது டொக் ஸ்டேட்;மன்டும் பதிவு செய்யப்பட்டது.

தவிரவும் இறந்து போன பழீல் தான் இறக்கும் தறுவாயில் தனது மனைவிக்கு ‘தன்னை ஜப்பார்தான் கத்தியால் குத்தினான்’ எனச் சொல்லி விட்டு இறந்ததாகச் சொல்லப்படும் மரண வாக்கு மூலத்தினை அரச தரப்பு சான்றியல் கட்டளைச் சட்டத்தின் பிரிவு முப்பத்திரெண்டு உட்பிரிவு ஒன்றின் கீழ் மார்க் பண்ணியிருந்தது.

கடந்த வாரம் அரச தரப்பு மற்றும் எதிராளி தரப்பில் வாதாடும் சட்டத்தரணி இருபேரினதும் சம்மிங்; அப் எனப்படும் வழக்கின் தொகுப்புரை நடந்திருந்தது.

திறந்த நீதிமன்றத்தில் கறுத்த கோர்டடுகளுக்கு மேலால் க்ளொக் அணிந்த நிறைய சட்டத்தரனிகளின் அநாயசமான மௌனத்தினை விட ஜப்பார் சார்பாக இதுவரை வழக்குப் பேசி வந்த லோயரின் முகம் பயமும் இறுக்கமும் சலனமுமற்று அவ்வப்போது சலனங்களோடும் மாறி மாறி வேஷம் போட்டுக் கொண்டிருந்தாலும் அவரைப் பொறுத்தவரை கொஞ்சம் சிக்கலான வழக்கு இது.

வழக்கில் கொலையை நேரடியாகக் கண்டதாகச் சொல்லப்படும் கண்கண்ட சாட்சியங்கள் எதுவுமில்லாவிட்டாலும் இறந்த பழீல் தனது மரணத்தின் முன் தனது மனைவிக்கு செய்ததாக சொல்லப்படும் மரணவாக்கு மூலம் வழக்கை ரொம்ப சிக்கல் படுத்தியிருப்பதை அவர் வழக்கின் போக்கில் உணராமலில்லை.

அனுபவமுள்ள லோயராச்சே.

ஜப்பாரைக் காப்பாற்ற வேண்டுமே என்ற உணர்விருந்தாலும் தனது இமேஜ் டெமேஜ் ஆகி விடக் கூடாதே என்ற கவலை கொஞ்சம் தூக்கலாகவே அவருக்கு இருந்தது. நீதிபதியின் தீர்ப்புக்காக எழுந்து நின்று கொண்டிருந்த ஜப்பாரின் நரைத்த லோயர் அடிக்கடி வழிந்து கொண்டிருந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டிருந்தும் ஏனைய லோயர்கள் அவரது மனோநிலையை விளங்கிக் கொண்டு சூழ்நிலையின் இறுக்கத்தில் சீரியசாக தொலைந்து போயிருந்தார்கள்.

கடந்த ஒரு வாரகாலமாக வழக்கின் ஒட்டு மொத்த ப்ரோஸிடிங்ஸையும் மிக நுணுக்கமாக வாசித்து வழக்கின் சம்பவம் ப்ளஸ் சூழ்நிலை சம்மந்தப்பட்ட ஏற்கனவே அப்பீல் கோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்புக்கள்… போதாததற்கு இந்திய உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கள் என நிறையப் படித்து நீதிபதி என்ற வகையில் தான் ஏன் குறித்த தீர்ப்பை எழுதினேன் என்பதற்கான காரணங்களையும் உள்ளடக்கியதாக தன்னால் எழுதப்பட்ட நாற்பத்தியேழு பக்கங்கள் கொண்ட தீர்ப்பினை துல்லியமான குரலில் சற்று வேகமாக வாச ஆரம்பித்தார் நீதிபதி.

மாகாண மேல் நீதிமன்றம் எனத் தலைப்பிட்டு அதன் கீழ் வழக்கின் இலக்கமிட்டு அதற்குப் பக்கத்தில் ‘சட்டமா அதிபர் எதிர் அப்துல் ஜப்பார் என டைப் பண்ணப்பட்டு அரச தரப்பில் அரச சட்டத்தரணி… என பெயரிடப்பட்டு எதிராளி சார்பில் சட்டத்தரணி எனப் பெயரிட்டு அன்றைய திகதியிடப்பட்டிருந்த தீர்ப்பு இவ்வாறு ஆரம்பித்திருந்தது.

குறிக்கப்பட்ட வழக்கு எதிரிக்கு எதிராக அவரது பக்கத்து வயல் சொந்தக்காரனான முகம்மது துவான் பழீல் என்பவரை கொலை செய்ததாக இலங்கை தண்டனைச் சட்டக் கோவை பிரிவு இருநூற்றித் தொன்னூற்றி ஆறின் கீழ் சட்டமா அதிபரால் குற்றப் பகர்வுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எதிரி குற்றப்பகர்வுப் பத்திரக் குற்றச்சாட்டுக்கு நிரபராதி எனத் தெரிவித்ததனையடுத்து ஜூரர் அற்ற விளக்கத்தை எதிரி தெரிவு செய்துள்ளார். இந்த வழக்கின் வழக்குத் தொடுனர் தரப்புசாட்சியங்களை மன்று ஆய்வு செய்யும் போது…

என வழக்கின் அத்தனை பாகங்களையும் ஜட்ஜ் பகுதி பகுதியாக பிரிவு பிரிவாக பிரித்து மேய்ந்து கொண்டிருந்தார். அவர் வாசிக்க வாசிக்க அத்தனை வேகமான பேஃன் காற்றிலும் அநேகம் பேருக்கு வியர்த்துக் கொண்டிருந்தது.

தனது நெற்றி வியர்வையை இடைக்கிடை நீதிபதி துடைத்துக் கொண்டார்.

ஜப்பாரைப் பொறுத்தவரை காணி வயல் நிலபுலனென்று நிறைய சொத்துக்கள்… அவன் கல்யாணம் முடித்ததும் முதலாளி வர்க்கத்தின் பட்டியல்காரர்களிடம்….பணத்தக்குப் பஞ்சமில்லை… செல்வாக்குள்ள குடும்பம்…. குறித்த கொலை வழக்கு கூட ஒரு வயல் தகராரில் உருவானதுதான். பழீல் சம்பவம் குறித்த அன்றிரவு கொலை செய்யப்படும் முதல் ஜப்பாருக்கும் பழீலுக்கும் குறித்த வயற்காணி தொடர்பில் பிணக்குகள் எடுத்து ஆளையாள் அடித்துக் கொள்ளும் அளவுக்கு முற்றிப் போன விஷயம் முழு ஊருக்கும் தெரிந்த மெகா சீரியல். அவ்வப்போது பழீலுக்கும் ஜப்பாருக்குமிடையில் பிணக்குகள் வெடிப்பதும் பிரச்சினை எழுவதும் பின் அடங்கிப் போவதுமாக இருந்து கொண்டேயிருந்தது.

பழீலின் மரணம் சம்பவிக்கின்ற அந்த நாட்களில் கூட ஜப்பாரும் பழீலும் ஆளையால் வயலில் வைத்து சண்டை பிடித்திருக்கின்றனர் என்பதெல்லாம் அரச தரப்பு சாட்சியங்கள் கோர்ட்டில் சொன்ன கதைகள்.

இந்த வழக்குக்காக ஜப்பார் ரொம்பவும் செலவளித்து விட்டான். எக்கச்சக்கமான செலவு. கடந்த பதினைந்து வருடகாலத்தில் பிணை எடுப்பதிலிருந்து இன்றைய தீர்ப்புத் தேதி வரை பல இலட்சங்கள் கரைந்து போயிருக்கின்றன. அவனுக்கு வழக்குப் பேசும் லோயர் கூட கொழும்பில் ப்ராக்டிஸ் பண்ணும் ஒரு லீடிங் கவுன்ஸில். ஜப்பாரும் அவனது குடும்பமும் நிறைய செலவளித்துக் கொண்டிருந்தார்கள்.

ஒரேயொரு நோக்கம்.

குறித்த வழக்கின் குற்றச்சாட்டிலிருந்து விடுதலையாகி வெளியே வருவதுதான். தனக்கு மேலே தூக்குக் கயிறு லபக்கென்று கழுத்தினைக் கவ்விக் கொள்ளக் காத்திருக்கும் போது மலையளவு செலவழித்தாலும் கூடப் பரவாயில்லை…. விடுதலை வேண்டும்.

உயிர் வாழும் ஆசை…

காசைத் தண்ணீராய் இரைத்தனர் ஜப்பாரும் அவனது குடும்பமும். எப்படியும் வழக்கினை வென்று விடலாம் என அவனது கொழும்பு லோயர் ஒவ்வொரு தவணையின் போதும் வழங்கிய நம்பிக்கைதான் பயமே இல்லாமல் இத்தனை நாளும் வெளியில் நடமாடிக் கொண்டிருந்தான்.

‘பெரிய லோயர்… எப்படியும் இந்த சிக்கல்ல இருந்து என்னைக் காப்பாத்திடுவாரு…’ எனும் நம்பிக்கை அவனுள் வேரோடியிருந்தது. என்னதான் நம்பிக்கையோடு இருந்தாலும் இன்று தீர்ப்பாச்சே…

என்னவாகப் போகின்றதோ…

வரண்டு போன உதடுகளைத் தன் நுனி நாவாற் தடவி மெல்ல ஈரப்படுத்திக் கொண்டான் ஜப்பார்.

‘இந்தா கூட்டுல இருக்கிறானே… இவந்தாங்க… இந்த ஜப்பார்ங்க… எம்புருஷன அநியாயமாகக் கத்தியால குத்திக் கொன்னான்…. இரவுச் சாப்பாட எடுத்திட்டு இரவு எட்டு மணி போல வயல்ல போய்ப் பார்த்தா… எம் புருஷன் நெலத்துல விழுந்து கெடந்தாரு…கிட்டப் போய்ப் பார்த்தா… அவர்ர நெஞ்சில இருந்தும் வயித்துல இருந்தும் ரத்த ரத்தமாக் கொட்டிட்டு இருந்திச்சு….’

‘ஏங்க… என்னங்கன்னு அழுதேன்… ஒரே ரத்த வெள்ளம்… நானும் பாத்தன்… அந்த இடத்துல என்னையும் எம்புருஷனையும் தவிர வேறு யாரும் இல்லீங்க… எம்புருஷனால பேச முடியல்ல.. ரொம்ப இருட்டா இருந்தது… ஏங்க யாருங்க இப்படிப் பண்ணுனதுன்னு கேட்டன்… அவர் சாக மொதல்ல சொன்ன வார்த்தை ஜ…ப்…..பார்….என்னக் கத்தியால குத்திட்டான்னு… அப்புறம்… அப்புறம்…. என்ட அல்லாஹ்…. என்ன உட்டுட்டுப் போயிட்டாரு…. இவன்தாங்க… இந்தப் பாவிதாங்க… அவர அநியாயமாக் கொன்னது.’

‘ …………….’

‘அன்று வெள்ளன கூட அவரோட இந்தா ஜப்பார் சண்டை புடிச்சிருக்கான். ஆக்கள்தான் அவரப் புரிச்சி விட்டுருக்காங்க… எங்கிட்ட இதப்பத்தி பகல் சொன்னாரு. இந்தப் பிரச்சின இப்ப கிப்ப இல்லங்க. கனநாளா நடக்குது… பாவிப்பய இப்படிப் பண்ணிட்டானே… நீ நல்லாயிருப்பியா….’

என வழக்கு விளக்கத்தின் போது இறந்த பழீலின் மனைவி அழுது கொண்டு ஒப்பாரி வைத்துக் கொண்டு கதறிக் கொண்டு சொன்ன சாட்சியம் வாழ்வை இழந்த நிலையில் தான் தனது பிள்ளைகளின் எதிர்காலத்தை இழந்தவனின் அக்மார்க் துயரம் அடையாளப் படுத்தப்பட்டுக் கொண்டிருந்தது.

அழுகைக்கும் கண்ணீருக்கும் எப்போதுமே பெறுமானம் எதுவும் தராத நீதிமன்றம் அவளது சாட்சியத்தினை மட்டும் மிக முக்கியமான சாட்சியமாக வழக்கினையே தீர்மானிக்கும் மிக முக்கியமான சாட்சியமாக வழக்கினையே தீர்மானிக்கும் சான்றாக கவனத்தில் எடுத்துக் கொண்டது.

இறந்த பழீலுக்கு ஐந்து பிள்ளைகள். குஞ்சும் குருமான்களுமாக… இப்போது ஓரளவு வளர்ந்து விட்டார்கள். பழீலின் மரணத்தின் பின் தனியாளாய் ஒற்றையாய் விடப்பட்ட அவனது விதவை மனைவி இருக்கும் ஒரே வயலையும் விற்று… அந்தப் பணம் கொஞ்ச காலத்தில் கரைந்து விட… வறுமை… பிள்ளைகளின் கல்வி பிழைக்க வழியின்றிப் போனது…. வயிற்றுப்பாட்டுக்கான அன்றாட வாழ்வின் போராட்டம் என நீண்டு நெடி துயர்ந்த அந்தக் குடும்பத்தின் கதை.

அதனைத் தனியாக எழுத வேண்டும்.

‘வழக்கின் நடந்த சம்பவங்களையும் சூழ்நிலைகளையும் கவனத்திற் கொண்டால் இறந்ததாகச் சொல்லப்படும் பழீலின் கொலையை நேரடியாகக் கண்டதாகச் சொல்லப்படும் எந்த விதமான நேரடி சாட்சியங்களையோ கண்கண்ட சாட்சியங்களையோ மன்றில் அரச தரப்பு முன் வைக்க வில்லை…’

நீதிபதி நிறைய வாசியிருந்தார் என்பது அவர் கொஞ்சம் இடைவெளி விட்டதும் தெரிந்தது. அந்த இடைவெளி கூட இயல்பற்றதோர் அமானுஷ்யமாக அங்கு நிலவிய சூழல் அடையாளப்படுத்திக் கொண்டிருந்தது.

‘எனினும் நேரடிச் சான்றுகள் எதுவும் இல்லாத போதும் இந்த மாதிரியான நேரங்களில் இப்படியான வழக்குகள் பெரும்பாலும் சூழ்நிலைச் சான்றுகளின் அடிப்படையில் தீர்க்கப்பட வேண்டியுள்ளது…’ எனப் புரட்டப்பட்டன தீர்ப்பெழுதப்பட்ட பக்கங்கள்.

‘அரச தரப்பில் முன்வைக்கப்பட்ட சாட்சியங்கள் மற்றும் வ-01 மற்றும் வ-02 என அரச தரப்பு சார்பில் அணைத்து அடையாளமிடப்பட்ட கொலை செய்வதற்கு எதிராளியால் பயன்படுத்தப்பட்டதாகச் சொல்லப்படுகின்ற கூர்மையான கத்தி மற்றும் இறந்தவரின் உடலை மரண பரிசோதனைக்குட்படுத்திய வைத்தியரின் போஸ்ட் மோர்ட்டம் அறிக்கை அனைத்தையும் ஒரு சேர எடுத்து நோக்கினால் ஒவ்வொரு சாட்சியினது சான்றுகளும் வேறு சாட்சிகளினால் ஒப்புறுதிப் படுத்தப்படுவதோடு வழக்கின் ஒவ்வொரு சம்பவச் சூழ்நிலைகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாகக் காணப்படுகின்றது.’

‘அடுத்து மிக முக்கியமாக நோக்க வேண்டியது இறந்தவரினால் அவர் இறப்பதற்கு சற்று முன்பு அவரது மனைவிக்கு வழங்கப்பட்ட மரண வாக்கு மூலம் மிகத் தெட்டத் தெளிவாக இறந்தவர் எதிராளி தன்னைக் கத்தியால் குத்தியதாகக் குறிப்பிட்டிருக்கிறார். இறந்தவரின் மனைவி மன்றில் இது தொடர்பில் சாட்சி வழங்குகின்ற போது இறந்தவரினால் கொடுக்கப்பட்டதாகச் சொல்லப்படுகின்ற மரணவாக்கு மூலத்தினை முறியடிக்கும் வகையில் எதிராளி தரப்பினர் மன்று ஏற்றுக் கொள்ளக் கூடிய எந்தவிதமான எதிர்வாதங்களையும் முன்வைக்கத் தவறி விட்டார்கள் என்பதுவும் இங்கு கவனிக்கத் தக்க விடயமாகும்…’

‘எதிராளி தரப்பு விளக்கத்துக்காக வழக்கானது நியமிக்கப்பட்ட போது எதிராளி குற்றவாளிக் கூண்டிலிருந்து டொக் ஸ்டேட்மன்ட் வழங்கினார். இதன் காரணமாக அவரது சாட்சியம் குறுக்கு விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை என்ற விடயம் கவனத்திற் கொள்ள வேண்டிய விடயமாகும். இருந்த போதும் எதிராளி அரச தரப்பால் அவருக்கெதிராக அவரைக் குற்றம் செய்ததாக முன்னிருத்தி வைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் மன்றுக்கு போதிய விளக்கம் தரத் தவறியுள்ளார். இந்த இடத்தில் நான் ரெக்ஸ் எதிர் கொக்ரைன் வழக்கில் லோர்ட் எல்லென் பரோவினால் கொண்ட வரப்பட்ட எல்லென்பரோ டிக்டெத்தை மீளக் குறிப்பிட விரும்புகிறேன். அதன்படி ‘ தான் சந்தேகிக்கப்பட்ட தன்னோடு இணைந்ததாகக் காணப்படும் தனது நடத்தை அல்லது தனது சூழ்நிலை தொடர்பில் எதுவித விளக்கம் தருவதற்கும் குற்றம் சாட்டப்பட்டவர் வழங்க வேண்டுமென்ற எதுவித கட்டுப்பாடும் கிடையாது. ஆனால் இருந்த போதும் அவருக்கெதிராக பிரீமாஃபேசியா எனப்படும் முகத்தோற்றமளவில் அவருக்கெதிராக உள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் சான்றுகள் முன்வைக்கப்பட்டுள்ள விடத்து அது தொடர்பாக சாட்சி வழங்கும் பொறுப்பு எதிராளியின் கையில் இருந்து சந்தேகத்துக்கிடமான சூழ்நிலைகள் காணப்படுமிடத்து அது தொடர்பாக அவர் தனது குற்றமற்ற தன்மையினை நிரூபிக்க போதிய விளக்கம் தராதவிடத்து அது அவருக்கெதிராகப் பயன்படுத்தப்படும்…’

என நெற்றித் தோலில் சுருக்கங்களினை ஓடவிட்ட நீதிபதி சற்று வாசிவதினை நிறுத்திக் கொண்டார். பெரும்பாலும் அவர் எழுதிய தீர்ப்பு அவரால் வாசிக்கப்பட்டு விட்டது என்பதனையும் ஒரு விறுவிறுப்பான த்ரில்லர் படத்தின் அல்லது ரிச்சர் ஹாட்லியின் ஜெஃப்ரி ஆச்சரின் சிட்னி ஷெல்டனின் நம்ம ஊர் சுஜாதாவின் கணேஷ் வஸந்த் போட்டுத் தாக்கும் டிடெக்டிவ் நாவல்களின் க்ளைமக்ஸூக்காக ஒரு மூன்று பக்கத் தாள்கள் ஃபேன் காற்றில் படபடத்துக் கொண்டு ஒருத்தனின் தலைவிதியை நிர்ணயிக்கும் சந்தர்ப்பத்துக்காக காத்துக் கிடக்கின்றன என்பதனை அங்கிருந்த அனைவருக்கும் சொல்லாமலே தெரிந்தது.

அப்படித்தான் வாழ்வின் பல விடயங்கள்.

இப்படித்தான் வாழ்வின் சில கணங்களும் கனங்களும்.

பேயறைந்து மந்திரிச்சி விட்ட நிலையில் குற்றவாளிக் கூண்டில் ஆணியடித்த மாதிரி நின்று கொண்டிருந்தான் ஜப்பார். தனது தலைவிதியை நிர்ணயிக்கப் போகும் அந்தத் தருணத்தின் சிவந்த விழிகள் அவனை ரொம்…பபபப… இம்சை பண்ணியது.

அவனது ரத்த உறவுகளுக்கும்தான்.

உத்தரத்திலும் நான்கு சுவர்களிலும் தொங்கிக் கொண்டிருந்த ஃபேன் காற்றின் சப்தம் மட்டுமே சுதந்திரமாகக் கேட்டுக் கொண்டிருந்தது.

நீதிபதி தமிழில் தான் எழுதிய தீர்ப்பை வாசிக்க வாசிக்க அதனை முதலியார் நீதிபதி என்ன தொனியில் வாசிக்கிறாரோ அதே தொனியில்; சிங்களத்தில் மொழி பெயர்த்துக் கொண்டிருந்தார்.

அவர் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை.

பல வருட அனுபவக் கோர்வையில் இன்றைய தீர்ப்பு அவரைப் பொறுத்தவரை பத்தோடு பதினொன்று. இதற்கு முதல் இப்படி நிறையப் பார்த்தவராச்சே… ஆனாலும் அவருக்குள் ஒரு சிறு சலனம் என்பதனை இதயத் துடிப்பின் ஒலி இரகசியமாகச் சொல்லிக் கொண்டிருந்தது.

‘தவிரவும் இறந்தவர் உடலைப் பரிசோதித்த வைத்தியர் சாட்சியமளிக்கையில் வயிற்றின் மேற் பகுதியிலும்; நெஞ்சின் நடுப்பகுதியிலும் கத்திக் குத்துக் காயம் காணப்பட்டது. வயிற்றின் மேறபகுதிக் கத்திக் குத்துக் காயம் இரண்டு சென்றி மீற்றர் அகலமுடையதாகும். உட்காயங்களைப் பொறுத்தவரையில் வயிற்றுக் குழியில் இரத்தம் தேங்கிக் காணப்பட்டது. ஈரலின் இடது புறம் வெடித்துக் காணப்பட்டது. வெளிக் காயமும் உட்காயமும் பாரதூரமான காயங்களாகும்.

அவை இயற்கையின் சாதாரண போக்கில் மரணத்தை விளைவிக்கக் கூடிய காயங்கள். வயிற்றில் ஏற்படுத்தப்பட்டுள்ள காயம் கத்தி போன்ற கூரான ஆயுதமொன்றினால் ஏற்படுத்தியிருக்க முடியும்….’

தற்போது நீதிபதி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு தனது தீர்ப்பின் இறுதிப் பகுதியினை வாசிக்க ஆரம்பித்தார்.

‘எனவே வழக்கின் இருதரப்பு சாட்சியங்கள் அடையாளமிட்டு அணைக்கப்பட்ட சான்றுப் பொருட்கள் ஆகியனவற்றை ஒரு சேர நோக்கின் எதிராளியானவர் வழக்கில் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டதாகச் சொல்லப்படும் பழீல் என்பவரை கத்தியால் குத்திக் கொலை செய்தமை நியாயமான சந்தேகத்துக்கப்பால் வழக்குத் தொடுனர் எண்பித்துள்ளார் எனத் தீர்ப்பளித்து குறித்த குற்றப்பத்திரத்தில் உள்ள குற்றச்சாட்டுக்கு எதிரியை மன்று குற்றவாளியெனத் தீர்ப்பளிக்கிறது.’

இப்போது மன்றில் மரண அமைதி.

ஜப்பாருக்குள் இழவு வீடு

அக்னி தின்னு கொண்டிருக்கும் அமேசன் காடு.

ஜப்பாரின் கால்களிரண்டினையும் யாரோ பூமிக்குள் இழுத்துச் செல்வது மாதிரி இருந்தது. ஏன்ன செல்லுவது மாதிரி..மாதிரியெல்லாம் இல்லை…யாரோ அவனது கால்களிரண்டையும் பலவந்தமாக பூமிக்குள் இழுத்துக் கொண்டிருந்தார்கள்.

‘நான் கொலையாளி’

மிகப்பயங்கரமான யதார்த்தம் காட்டு மிராண்டித்தனமாய் அவனை வேட்டையாடியது.

‘ ஓ… யா அல்லாஹ்…’

அருகில் பெஞ்சுகளில் உட்கார்ந்திருந்த அவனது மனைவி பிள்ளைகள் ஏனைய உறவுகள் அழுவதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். உள்ளுக்குள்ளே வெடித்துக் கொண்டிருக்கும் சப்தம் ஜப்பாரின் காதுகளுக்குள் ஜனகனமன பாடியது.

தனது தீர்ப்பினை வாசித்த நீதிபதி குற்றவியல் நடபடிக கோவை இருநூற்றி எண்பதின் படி ‘நீர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளீர். உமக்கு மரண தண்டனைத் தீர்ப்புப் பிரகடனம் செய்ய முன்னர் ஏன் மரண தண்டனைத் தீர்ப்பு வழங்கக் கூடாது என்பதற்கு ஏதாவது கூற விரும்புகிறீர்களா என நீதிபதி என்ற முறையில் நான் கேட்கிறேன்.’

என ஜப்பாரைப் பார்த்துக் கேட்க…

ஜப்பார் எதுவுமே பேசவில்லை…

மௌனமாயிருந்த ஜப்பாரிடம் கோர்ட் முதலியார்

‘ ம்… ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா…’ எனக் கேட்க…

இல்லையென்று தலையாட்டிய ஜப்பாரின் கண்களிலிருந்து முதன் முதலில் கண்ணீர் க்ளுக்கென வர ஆரம்பித்திருந்தது.

‘எனவே அதிமேதகு ஜனாதிபதியால் தீர்மானிக்கப்படும் இடத்தில் ஒரு நாளில் சாகும் வரை கழுத்தில் எதிராளியைத் தூக்கிலிடுமாறு இந்த நீதிமன்றம் பணிக்கின்றது.’

என்ற இறுதி வார்த்தைகள் முடிந்தவுடன் மரண தண்டனைத் தீர்ப்பெழுதிய பேனாவைப் படக்கென அதன் கழுத்தெழும்பை முறித்து கீழே போடவும் நீதிமன்றத்தில் எரிந்து கொண்டிருந்த மின் விளக்குகள் அணைக்கப்பட்டு அந்தகார இருட்டு அறிமுகப்படுத்தப்படவும் சுத்திக் கொண்டிருந்த மின்விசிறிகள் தமது சுவாசத்தை தற்காலிகமாக இழக்கவும் சரியாக இருந்தது.

‘நிசப்தவனு…’

‘மீண்டும் நீதிமன்றம் பன்னிரெண்டு மணிக்கு ஆரம்பமாகும்.’

எனப் பொலிஸ்காரன் கத்த சற்றுக் கலங்கிய கண்களோடு மிக அவசரமாகத் தனது பெஞ்சிலிருந்து இறங்கி தனது சேம்பர் நோக்கி நீதிபதி செல்ல கோர்ட் எட்ஜேர்ன் பண்ணப்பட்டது.

‘என்ட ரஹ்மானே… என்ட யா ரப்பே…’ என கோர்ட்டுக்குள் வைத்தே கதற ஆரம்பித்தாள் ஜப்பாரின் மனைவி.

தலையிலும் மாரிலும் அடித்துக் கொண்டு ஜப்பாரின் தாயும் அவனது மாமியும் ஓவென ஒப்பாரி வைத்த போது அந்த நீதிமன்றத்தின் கட்டடத் தொகுதியின் செவிப்பறை சிதைந்திருந்தது.

‘யக்கோ கவுதப கேகஹன்ன…..இது கோர்ட். இப்படியெல்லாம் அழக் கூடாது… இப்படி அழுதால் உள்ள தூக்கிப் போட்டுடுவன்… எல்லாரும் வெளியே போங்க.’ என எச்சரித்த பொலிஸ்காரனின்; வார்த்தைகளின் அதிர்வலைகள் அவர்களது காதுகளை எட்டியதா என்பது கூட சந்தேகம்தான்.

தொடர்ந்தும் அழுகைகள்… கதறல்கள்…. ஒப்பாரிகள்.

யாரை யார் ஆற்றுவார்…

யாரை யார் தேற்றுவார்…

நிறம் மாறிப் போன முகங்களோடு அத்தனை பேரும் அழுது புலம்பிக் கொண்டிருக்கையில் இறுகிய முகத்தோடு எந்தவித சலனமுமின்றி வெறித்தவாறு நின்று கொண்டிருந்த ஜப்பாரின் கைகளுக்கு இப்போது புதிதாக ப்ரிஸன் கார்ட்ஸ் விலங்கு மாட்டியிருந்தார்கள்.

கிட்டத்தட்ட பதினான்கு வருடம் பழீலின் கொலைக் குற்றத்துக்காக ஆரம்பத்தில் சந்தேக நபராகக் கைது செய்யப்பட்டு பின் ஒரு எட்டு மாதம் விளக்க மறியலில் இருந்து மேல் நீதிமன்றத்தினால் பிணையில் பலத்த நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டு நீதவான் நீதிமன்றத்தில் ஒரு மூன்று வருஷம். அப்புறம் மேல் நீதிமன்றத்தினால் குற்றம் சாட்டப்பட்டு சந்தேக நபர்; என்பதிலிருந்து குற்றம் சுமத்தப்பட்டவர்; ஆக ப்ரமோட் ஆகி இங்கு ஒரு பத்து வருஷம் வழக்கு விளக்கம் எடுக்கப்பட்டு… இதோ இன்று தீர்ப்பம் தந்தாகி விட்டது.

இந்தப் பதினைந்து வருடங்களுக்குள்தான் எத்தனை போராட்டம். எவ்வளவு செலவு… எத்தனை எத்தனை பிரார்த்தனைகள்… எத்தனை எத்தனை தூக்கமற்ற இரவுகள்…

விழித்திருப்பவனின் இரவு ரொம்பவும் கொடூரமானது என்பது ஜப்பாருக்கு நன்றாகவே புரிய வைத்தது இந்தக் கொலை வழக்குதான். அந்த இரவுகள் எப்படி என்று அவனிடம் கேட்பதை விட அவனது கரு வளையம் விழுந்து களைத்துப் போன கண்களைப் பாருங்கள். அவை போதும் நியாயமான பகுத்தறிவுள்ள ஒரு மனிதனால் உணர்ந்து கொள்ள.

எல்லாவற்றையும் விட கடந்த பதினைந்து வருட காலம் இந்த வழக்கினால் ஜப்பாருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் சொல்லி மாளாது…. செத்துச் செத்துப் பிழைத்துக் கொண்டிருந்தவனை இந்தா ஒரேயடியாகச் செத்துப் போ என்று தீpர்ப்பாகி விட்டது.

இந்தக் கொலைக் குற்றச்சாட்டிலிருந்து தப்புவதற்காக அவன் செலவழித்த தொகை… இனித்தான் கணக்கெடுத்துப் பார்க்க வேண்டும். கொழும்பிலிருந்து வழக்குப் பேச கவுன்ஸில் கொண்டு வந்ததால் ஒவ்வொரு தவணைக்கும் ஐம்பதாயிரம் ஐம்பதாயிரம் என எத்தனை ஐம்பதாயிரங்கள்.

எண்ணிப் பார்க்க வேண்டும். ஆனால் எண்ணிப் பார்க்கும் மனநிலையில் அவன் இல்லை. கழுத்திலே கத்தியை வைத்து அழுத்திடும் கால எழுத்தை மாற்றியமைத்த இந்தத் தருணத்தில் எதுதான் ஞாபகத்தில் சுழலும்.

கைவிலங்கிடப்பட்ட ஜப்பாரை இன்றே கண்டி போகம்பர சிறைச்சாலைக்கு மாற்றி விடுவார்கள். அப்புறம் வெள்ளைச் சீருடை அணியச் செய்யப்பட்டு மரண தண்டனைக் கைதிகளுக்கான தனிச் ஷெல்லில் சதாவும் கம்பிகளையே எண்ணிக் கொண்டு சுவரில் எதையோ எழுதிக் கொண்டு சுவரைப் பார்த்த வண்ணம் ஒருக்;களித்துப் படுத்தக் கொண்டு… அப்புறம்… அப்புறம்…

‘ ஓ… யா அல்லாஹ்…’

வாய்விட்டு அலறி விட்டான் ஜப்பார்….

அவனைச் சுற்றி நின்று கொண்டிருந்த அவனது மனைவி பிள்ளைகள் இதர இரத்த உறவுகள் பதைத்துப் போய் இன்னும் அருகே வந்து மீண்டும் மீண்டும் அழ ஆரம்பித்தனர்.

கண்களில் ஊறிய கண்ணீரை விரலால் துடைத்துக் கொண்ட ஜப்பாரை ஜெயில் கார்டுகள் கொண்டு செல்ல ஆயத்தமானார்கள்.

விரக்தியும் வெறுப்பும் மட்டுமே மனசில் விநியோகம் செய்யப்பட்டிருந்த ஜப்பார் எல்லாம் முடிந்து போய் விட்டது என்ற கணக்கில் எதுவுமே பேசாமல் ஒரே திக்கில் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்க்கையில் அவனைச் சுற்றி நின்ற உறவுகளுக்கு அச்சத்தை ஊறியது.

ஜப்பார் எல்லாவற்றுக்கும்… அந்தக் கொலை.. பழீலின் கொலை…. என்னுள் எழுந்த ஆத்திரம்…புத்தி தடுமாறி மிருகமான அந்தக் கணம் கத்தக் கூட அவகாசமில்லாத அளவுக்கு கத்தியால் குத்தப்பட்டுக் கீழே விழுந்த பழீலின் கண்களில் கடைசியாய்த் தெரிந்த மரண வலியும் ஏன்டா இப்படிச் செய்தாய் என்ற கேள்வியும்.. பழீலின் மரணத்தின் பின் அவனது மனைவி விதவையாகி நான்கு மாதம் பத்து நாள் இத்தா இருந்து இரு கைகளாலும் மண்ணள்ளி என்னைத் திட்டிய திட்டு… இட்ட சாபம்… அவனது பிள்ளைகள் இன்று அநாதையாகி…

‘ ஓ… யா ரப்பே..’

ஜப்பாரின் பக்கத்தில் வந்த அவனது மனைவியின் தகப்பன் ‘பயப்படாதீங்க மருமகன்… உடனே அப்பீலுக்குப் போவம்…நாளைக்கே அப்பீல் போடுறதா லோயர் சொல்லியிருக்காரு… இந்த லோயரோடு சேர்த்து ரெண்டு ஜனாதிபதி சட்டத்தரணிய நான் புடிக்குறன்… எம்புட்டு செலவானாலும் பரவாயில்ல. அப்பீல் போட்டுட்டு பிணை எடுக்க ட்ரை பண்றதா லோயர் சொல்லியிருக்கார்….நீங்க ஒண்ணும் கவலைப் படாதீங்க… அப்பீல்ல நாம எப்படியும் ஜெயிச்சுடலாம்…..’ என நம்பிக்கை ஊட்டிய மாமாவைத் தீர்க்கமாகப் பார்த்த ஜப்பார்

‘இல்ல மாமா… இந்த வழக்குல இருந்து விடுதலையாகி வெளியே வரணும்னுதான் நானும் ஆசப்பட்டு இத்தின தூரம் போராடிக்கிட்டு இருந்தேன்… ஆனா இப்ப வாழும் ஆசையே எனக்கு விட்டுப் போச்சு… நீங்க ஒண்ணும் அப்பீல் பண்ணத் தேவையில்லை… ஏன்னா நான் முடிவெடுத்திட்டன். நான் வேணும்னே செஞ்ச அநியாயத்துக்கு தண்டனை அனுபவிச்சே ஆகணும் மாமா…’

– ஏப்ரல் 2013

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *