மனைவியின் மனசு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 4, 2018
பார்வையிட்டோர்: 5,625 
 

லண்டன் டாக்டர் எட்வின் தாமஸ் சென்னை வருகை

மே 24 : பிரபல காது, மூக்கு, தொண்டை சிகிச்சை நிபுணர் டாக்டர் எட்வின் தாமஸ் சென்னை அப்பல்லோவில் ஒருவாரம் சிகிச்சை அளிக்கிறார். பிறவி ஊமைகளைத் தவிர மற்றவர்களைப் பேச வைக்கிறார். மே 22 முதல் 29 வரை அப்பல்லோவில் அவரைப் பார்க்கலாம். ரூபாய் 10,000 கட்டி முன்பதிவு செய்துகொள்ள விரும்புவோர் 044-23518669 என்கிற எண்ணுக்குத் தொடர்பு கொள்ளவும்.

விளம்பரத்தை தினசரியில் பார்த்த தியாகராஜன் உடனே சுறுசுறுப்பானான். மனைவி அகிலாவை அவரிடம் காண்பித்து, என்ன செலவானாலும் சரி, அவளுக்கு மறுபடியும் பேசும் சக்தியை திரும்பப்பெற வேண்டும் என்று துடித்தான்.

உடனே அப்பல்லோவைத் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்தான். அடுத்து தன் மாமனாரைத் தொடர்பு கொண்டு விஷயத்தைச் சொன்னான்.

அவரும் சந்தோஷத்துடன் “என்னோட ஒரே பெண்ணுக்கு நான் சாகும்முன் மறுபடியும் பேச்சு வந்தால் நிம்மதியாக இறப்பேன்…” என்றார்.

தியாகராஜன் மத்திய அரசாங்கத்தில், சென்னையில் ஒரு நல்ல வேலையில் இருக்கிறான்.

அவன்தான் மூத்தவன். அடுத்து இரண்டு தங்கைகள். அவனுக்கு பத்து வயதாக இருக்கும்போது அப்பா இறந்துவிட்டார். அதன்பிறகு அம்மாதான் எல்லாம். ஆனால் அம்மா ரொம்ப வெகுளி.

தியாகராஜனுக்கு தன் திருமணத்தின் மூலமாக தன் இரண்டு தங்கைகளுக்கும் நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுத்துவிட வேண்டும் என்கிற எண்ணம்தான் மேலோங்கியிருந்தது. அதற்காக ஒரு பணக்கார இடத்திற்காக காத்திருந்தான்.

அப்போதுதான் சங்கரலிங்கம் என்கிற பெரிய வியாபாரப் புள்ளி தன் ஒரே மகளான அகிலாவுக்கு நல்ல மணமகனைத் தேடிக் கொண்டிருந்தார். அகிலா தன்னுடைய பத்து வயது வரையில் நன்றாகத்தான் பேசிக்கொண்டிருந்தாள். அவளை வாயடி என்றுகூட உறவினர்கள் கிண்டல் செய்வார்கள். ஆனால் ஒரு டைபாய்ட் காய்ச்சலில் திடீரென அவள் ஊமையாகிவிட்டாள். பல டாக்டர்களிடம் காண்பித்தும் பேச்சே வரவில்லை. ஊமை என்பதால் பலர் அவளை மணக்கத் தயங்கினர்.

ஆனால் தியாகராஜன் பணத்திற்காக அவளை மணந்தான். அவனுடைய மாமனாருக்கு ஆண் வாரிசு இல்லை என்பதால், அவர் தியாகராஜனை தன் மகன் போல் பாவித்தார். அடுத்தடுத்து தியாகராஜன் தன் இரண்டு தங்கைகளுக்கும் மாமனாரின் உதவியால் திருமணம் செய்து வைத்தான்.

ஊமை மனைவியுடன் அவனது வாழ்க்கை தொடர்ந்தது. மனைவி ஊமையாக இருப்பது ஒருவகையில் அவனுக்கு நிம்மதியைக் கொடுத்தது. அவன் என்ன கத்தினாலும் அவள் வாயே திறக்கமாட்டாள். என்ன திட்டினாலும் பதில் பேச மாட்டாள்.

கணவன்-மனைவி சண்டைகள் நடக்காத வீடுகள் இல்லை. சில வீடுகளில் கணவனின் குரலைவிட மனைவியின் குரல் ஓங்கி நிற்கும். மனைவியின் ஆத்திரத்தில் வீட்டின் பாத்திரங்கள் பறக்கும். வாய்ச் சண்டை முற்றி சில சமயங்களில் அடிதடியில் முடிந்துவிடும். அதுவே விவாகரத்து வரை சென்று விடும்.

இந்தப் பிரச்னைகள் எதுவும் தியாகராஜன் வாழ்வில் இல்லை. அந்த வகையில் அவன் நிம்மதியாக இருந்தான்.

இருந்தாலும் தன் மனைவியின் குரலைக் கேட்க வேண்டும்… அவள் பேசி பார்க்க வேண்டும் என்கிற ஆசை அவனுக்கு ஏராளமாக இருந்தது. அவளைப் பேச வைப்பதற்காக பல முயற்சிகளை அவன் மேற்கொண்டான். பல டாக்டர்களிடம் சென்று ஆலோசனை கேட்டான். பல சிகிச்சை முறைகளை முயற்சித்தான். சில மந்திரவாதிகளிடமும் பணத்தை இழந்தான்.

பத்து வருடங்களாக பல்வேறு முயற்சிகள் செய்தும் மனிவியை பேச வைக்க முடியவில்லையே என்கிற வேதனையோடு இருந்தபோதுதான் தற்போது டாக்டர் எட்வின் தாமஸ் பற்றி பேப்பரில் பார்த்தான்.

குறிப்பிட்ட நாளில் மனைவி மற்றும் மாமனார் மாமியாருடன் அப்பல்லோ சென்றான்.

அகிலாவை பரிசோதித்த டாக்டர், “தொண்டையில் ஒரு சிறிய ஆப்பரேஷன் செய்தால் போதும், பேச்சு வந்துவிடும். மூன்று லட்சம் செலவாகும்” என்றார்.

தியாகராஜன், “உடனே பணத்தை கட்டி விடுகிறேன் டாக்டர்…என் மனைவிக்கு பேச்சு வந்தால் போதும்…” என்று குதூகலித்தான்.

ஆபீஸில் பி.எப் லோன் போட்டு; சேமிப்பில் இருந்த கையிருப்பையும் சேர்த்து பணத்தைக் கட்டினான்.

அடுத்த மூன்று நாட்களில் ஆப்பரேஷன் வெற்றிகரமாக முடிந்தது. டாக்டர் சொன்னது போலவே ஒரே வாரத்தில் அகிலா பேச ஆரம்பித்தாள். தியாகராஜன் அவள் தன்னைத்தான் முதன் முதலில் “அத்தான்” என்று அழைப்பாள் என்று எதிர்பார்த்தான்.

ஆனால் அவள், “அ ம் மா…” என்றுதான் பேசினாள். அடுத்து “அ ப்பா” என்றாள். மறுநாள்தான் அவனைப் பார்த்து “அ த் தான்” என்று அழைத்தாள்.

தியாகராஜன் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தான். மனைவி பேசுவதைப் பார்த்து பரவசமடைந்தான். தனது முயற்சி வெற்றி பெற்றதை நினைத்து பெருமையடைந்தான்.

டாக்டர் எட்வின் தாமஸ் லண்டன் திரும்பிவிட்டதால், அவருக்கு உதவிய டாக்டர் நடராஜனிடம் தன் நன்றிகளை சொன்னான்.

அகிலா வீட்டிற்கு வந்தாள்.

நாட்கள் செல்லச் செல்ல அவள் சரளமாகப் பேச ஆரம்பித்தாள். பல நேரங்களில் அளவுக்கு அதிகமாகவும் பேசினாள். தியாகராஜனுக்கு சில சமயங்களில் அவளை பேச்சில் வெல்வது கடினமாக இருந்தது. போகப் போக ஒரு கட்டத்தில் கணவனை எதிர்த்துப் பேசவும் துணிந்தாள். அவன் ஒன்று சொல்ல, பதிலுக்கு அவள் இரண்டு சொல்ல அதனால் அவர்களுக்குகுள் சரியான புரிதல் இன்றி அடிக்கடி சண்டைகள் வர ஆரம்பித்தன.

அகிலா ஒருநாள் தி.நகர் ஜிஆர்டி சென்று லேட்டஸ்ட் டிசைனில் ஒரு நெக்லஸ் பார்த்துவிட்டு வந்து, இவனிடம் தனக்கு அந்த நெக்லஸ் வாங்கித்தர வற்புறுத்தினாள்.

“ப்ளீஸ் அகிலா, என்னிடம் இப்போதைக்கு பணம் இல்லை”

“ஆமா… உங்களை கல்யாணம் பண்ணிகிட்டு பத்து வருஷமாச்சு… என்ன சுகத்தைக் கண்டேன்? நல்ல நகைகள் உண்டா? நல்ல புடவைகள் உண்டா? பக்கத்து வீட்டு பாரதியைப் பாருங்க, வாரத்துக்கு ஒரு காஸ்ட்லி புடவை எடுக்குறா… வருஷத்துக்கு ரெண்டு லேட்டஸ்ட் டிசைன் நகை வாங்குறா. அடிக்கடி கணவருடன் காரில் ஸ்டார் ஹோட்டலுக்கு போறா. நீங்க என்ன வாங்கித் தந்தீங்க? வெளில எங்கியாச்சும் ஜாலியா கூட்டிகிட்டு போறீங்களா? பத்து வருஷமா நான் ஊமையா இருந்ததினால எதுவும் உங்களைக் கேட்க முடியல. இப்ப ஒரு நகை வாங்கிக் குடுங்கன்னு கேட்டா .பணம் இல்லேன்னு சொல்றீங்க… சம்பாதிக்கிற காசெல்லாம் என்ன செய்யறீங்க? எல்லாம் என் தலையெழுத்து…”

மனைவியின் ஆவேசப் பேச்சைக்கேட்டு தியாகராஜன் அதிர்ச்சியடைந்தான். என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் சிலை போல் உறைந்தான்.

“என்ன ஒண்ணுமே பேசாம நிக்கறீங்க? நான் கேக்குறதுக்கு பதில் சொல்லுங்க. ஏன் நீங்க இப்ப ஊமையாயிட்டீங்களா?” குரலில் எகத்தாளம், கிண்டல்.

மனைவி இப்படி மோசமாகப் பேசுகிறாளே என்று கவலையடைந்தான் தியாகராஜன். பத்து வருடங்கள் பேச வேண்டியதை பத்து நிமிஷத்தில் பேசிவிட்டாளே என்று வருந்தினான். அவள் ஊமையாக இருந்தபோது எந்தப் பிரச்சனையும் இல்லாமல் வீடு அமைதியாக இருந்தது. ஆனால் பேச ஆரம்பித்ததும் என்னுடைய நிம்மதி எல்லாம் போச்சே… கிளி மாதிரி பேசுவாள் என்றுதானே நினைத்தேன், ஆனால் இப்படிப் பேய் மாதிரி கத்துவாள் என்று கனவிலும் நினைக்கவில்லையே! இனிமேல் போகப் போக என்னவெல்லாம் சொல்லப் போகிறாளோ… நினைத்தால் பயமாக இருக்கிறதே! ஐயோ இனி நான் என்ன செய்வேன் என்று கண் கலங்கினான்.

அவளுடைய பேச்சுக்கு நிரந்தரமாக ஒரு முடிவு கட்ட நினைத்தான்.

நேராக அப்பல்லோவுக்குச் சென்றான். டாக்டர் நடராஜனிடம், “டாக்டர் எட்வின் தாமஸ் மறுபடியும் எப்போது வருவார்?” என்று கேட்டான்.

“எதுக்கு கேக்கறீங்க… உங்க மனைவிதான் இப்ப நல்லா பேசறாங்களே?”

“ஆமா … ஆனா அவ பேச ஆரம்பிச்சதும் என் நிம்மதியே போச்சு டாக்டர். என்னை எதிர்த்து மரியாதையே இல்லாம பேசறா டாக்டர். அதனால அவளை மறுபடியும் ஊமையாக்க முடியுமான்னு அவரிடம் கேட்கணும் டாக்டர்.”

இதைக் கேட்டதும் டாக்டர் நடராஜன் பெரிதாகச் சிரித்தார்.

“மிஸ்டர் தியாகராஜன்…. இதுக்கா இவ்வளவு தூரம் வந்தீங்க? நீங்க நினைக்கிற மாதிரி உங்க மனைவியை மீண்டும் ஊமையாக்க முடியாது…அப்படியே முடிந்தாலும் எந்த ஒரு டாக்டரும் அதைச் செய்யவும் மாட்டார். வீட்டுக்கு வீடு வாசப்படி…. எல்லார் வீட்டிலும் நடக்கிற ஒரு சாதாரண விஷயம் இது. நீங்களாவது முதல் பத்து வருஷம் நிம்மதியாய் என்ஜாய் பண்ணீங்க… நீங்க பெரிய அதிஷ்டசாலி. என்னைப் போன்றவங்களுக்கு அந்தக் கொடுப்பினையும் இல்லை….”

“அப்ப நான் என்னதான் பண்ணுவது டாக்டர்?” குரல் உடைந்தது.

“உங்க மனைவி சொல்றதையெல்லாம் ஒரு காதில் கேட்டு, மறு காது வழியா வெளியே விட்டுருங்க… பதிலே பேசாம இனிமேல் உங்க வாழ்க்கைல அவங்களுக்கு மட்டும் நீங்க ஊமையாயிடுங்க…”

தியாகராஜன் அழுகிற நிலைக்கு வந்துவிட்டான்.

“இதுக்கெல்லாம் இப்ப நீங்க புதுசு. நாளடைவில் இதுவே பழகிடும் தியாகராஜன்… தைரியமா இருங்க.”

தியாகராஜன் பாயாசத்தில் விழுந்த அப்பளம் மாதிரி தொய்ந்துபோய் வெளியேறினான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *