கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 4, 2014
பார்வையிட்டோர்: 24,827 
 

பத்து வயது பேரன் அந்த பேட்டரி காரை அழகாக வளைத்து, வளைத்து ஓட்டுவதை சந்தோஷம் மேலிட ரசித்துக் கொண்டிருந்தார் ராம்பிரசாத்.

“”என்னப்பா பேரனுக்கு இவ்வளவு விலையில் காஸ்ட்லி கார் வாங்கிக் கொடுத்துட்டு அவன் விளையாடுவதை ரசிச்சுட்டு இருக்கிங்களா?”
பக்கத்தில் வந்து நிற்கும் மகன் சிவாவைப் பார்த்து புன்னகைத்தார்.

“”அமெரிக்காவிலிருந்து என் பேரன் வந்திருக்கான். என்னோடு இருக்கிற இந்த ஒரு மாசமும் அவனை சந்தோஷமாக வச்சுக்கணும்னு பார்க்கிறேன்.”

“”அதுக்காக இவ்வளவு விலையில் தேவையாப்பா. இதை எடுத்துட்டும் போக முடியாது. எதுக்குப்பா இவ்வளவு செலவு பண்றீங்க?”

“”ப்ளீஸ்ப்பா. இதிலே தலையிடாதே. என் பேரனுக்காக எவ்வளவு செலவழிச்சாலும் அது எனக்கு ஒரு பொருட்டாகவே தெரியாது. சரி உன்னோட சேவிங்ஸை இந்தியாவில் இன்வெஸ்ட் பண்ணனும்னு சொன்னியே. இடம் வாங்கி போட்டா, பின்னாடி நல்ல விலை போகும். வளசரவாக்கத்தில் பார்ப்போமா?”

“”உங்ககிட்டே பொறுப்பை ஒப்படைச்சுட்டேன். அம்பது லட்சம் வரைக்கும் இன்வெஸ்ட் பண்ணலாம்னு இருக்கேன். அதுக்குத் தகுந்த மாதிரி பாருங்கப்பா”

“”இன்னைக்கு உன் ப்ரெண்ட்ஸை மீட் பண்ணப் போறேன்னு சொன்னியே…”

“”ஆமாம்பா. சாப்பிட்டுப் போகணும். நீங்க இன்னைக்கு பாக்டரிக்குப் போறீங்க இல்லையா.”

“”ஒரு வாரம் லீவு போட்டாச்சு. இன்னைக்கு அவசியம் போகணும். வேலை நிறைய இருக்கு.”

ராம் பிரசாத், “ராம் மேட்சிங் ஒர்க்ஸ்’ என்ற பெயரில் தீப்பெட்டி பாக்டரி நடத்திக் கொண்டிருந்தார். பிஸினஸ் நல்லபடியா நடந்து பணம் கை நிறைய புரள, ஒரே மகனான சிவாவும் அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டனில் பெரிய சாப்ட்வேர் கம்பெனியில் பணிபுரிய, குடும்பத்துடன் ஒரு மாத விடுமுறையில் இந்தியா வந்திருந்தான்.

மகன், மருமகள், பேரன் கணவருக்கு சாப்பாடு பரிமாறிக் கொண்டிருந்தாள் லட்சுமி.

“”சிவா, இந்த தடவையாவது நம்ப குலதெய்வம் கோவிலுக்கு எல்லாருமாக போய் பொங்கல் வச்சு, அபிஷேகம் பண்ணிட்டு வருவோம்பா. என்ன சொல்றே.”

“”அம்மா, என்னை பத்திதான் உனக்கு தெரியுமே. எனக்கு இந்தக் கடவுள் நம்பிக்கையெல்லாம் கிடையாது. நம்ப கடமைகளை ஒழுங்காகச் செய்தால் போதும்னு நினைக்கிறவன். கோவில், பூஜை இதிலெல்லாம் எனக்கு ஈடுபாடு கிடையாது. நான் வரலை. நீங்க தாராளமாக உங்க மருமகள், பேரனை கூட்டிக்குட்டு போய் திருப்தியா சாமி கும்பிட்டு வாங்க.”

“”என்னை சொல்றான் பார்த்தீங்களா?”

“”அத்தை அவரை விடுங்க. அவர் சாமியே கும்பிடறதில்லை. கேட்டா மனசாட்சிக்கு பயந்து நடந்தால் போதும். அடுத்தவரை ஏமாற்றாமல் நாலு பேருக்கு நல்லது செய்தாலே, அந்த கடவுளை கும்பிட்டா மாதிரிதான்னு வேதாந்தம் பேசுவாரு. அவர் வரமாட்டாரு. நாம் போய்ட்டு வரலாம் அத்தை.”
மருமகள் சொல்ல,

“”சிவா, நீ என்ன தான் சொன்னாலும், நம்மை மீறிய ஒரு சக்தி நம்மை வழிநடத்துதுன்னு நம்பறியா இல்லையா அதைத்தான் நாம் கடவுள்னு சொல்றோம். கடவுளை கும்பிடறதாலே, அவன் சன்னிதியில் மனமுருகி நிற்கும்போது கிடைக்கிற ஆத்மதிருப்தி இருக்கே, அது வேறு எதிலும் கிடைக்காதுப்பா. எங்களுக்காக வரக்கூடாதா?”

“”ப்ளீஸ்ப்பா. உங்க உணர்வுகளை மதிக்கிறேன். என்னை கூப்பிடாதீங்க. நீங்க எல்லோரும் போய்ட்டு வாங்க.”

சுவாமிக்கு சார்த்த பட்டுத்துணி, அபிஷேக சாமான்கள், பூஜை பொருட்கள் என எல்லாவற்றையும் டிரைவர் காரில் எடுத்து வைக்க.

“”லெட்சுமி மறக்காம எல்லாத்தையும் எடுத்துக்க, பிரார்த்தனை பணம் உண்டியலில் வச்சிருந்தியே… அதையும் எடுத்து வச்சுக்க.”

“”நாங்க கிளம்பறோம் சிவா. நீ இன்னைக்கு பாக்டரி போய் சுத்தி பார்த்துட்டு வர்றதாக சொன்னியே. போய்ட்டு வா. மானேஜர்கிட்டே சொல்லியிருக்கேன். சுத்திக் காட்டுவாரு.”

“”சரிப்பா. பார்த்துக்கிறேன். நீங்க கிளம்புங்க. எனக்கும் வீட்டில் தனியா இருந்தா பொழுது போகாது. போனமுறை வந்தப்ப, பாக்டரிக்குப் போக நேரமில்லாமல் போச்சு. இன்னைக்கு போய்ட்டு வரேன்.”

“”மதிய சாப்பாடு, நம்ப பாக்டரி காண்டீனில் ஸ்பெஷலாக உனக்கு தயார் பண்ணி தருவாங்க. சாப்பிட்டு பாரு. நாங்க கிளம்பறோம்.”

எல்லோரும் விடை பெற்றுச் சொல்ல, சிவா பாக்டரிக்கு கிளம்ப ஆயத்தமானான்.

“”சார். வாங்க. நீங்க வரப்போறதாக ஐயா சொன்னாரு. நல்லா இருக்கீங்களா.”
வாசலில் வந்து வரவேற்றே மானேஜரைப் பார்த்து புன்னகைத்தான்.

அப்பாவின் அறைக்குள் நுழைந்தவனை, அந்த பெரிய பெருமாள் படம் வரவேற்றது. அப்பாவின் பக்தியை நினைத்து, மனமுருகியவளாக, அவரது நாற்காலியில் அமர்ந்தான்.

“”சார் காபி… கூல்டிரிங்க்ஸ் என்ன சாப்பிடறீங்க?”

“”நோ. தாங்க்ஸ். பாக்டரியில் வேலை நடக்குதா?”

“”ஆமாம் சார். பத்து மணிக்கு வேலை ஆரம்பிச்சாச்சு. எல்லா செக்ஷனிலும் வேலை நடக்குது. மொத்தம் முப்பது பேர் வேலை பார்க்கிறாங்க.”

“”குட்… போய் பார்க்கலாமா?”

அவருடன் நடந்தான் சிவா.

பாதுகாப்பு உகரணங்களுடன் கட்டிடத்தை நல்ல முறையில் கட்டியிருப்பதைப் பார்த்தபடி வேலை நடக்கும் இடத்தைப் பார்வையிட்டான் சிவா.

“”முதலாளியின் மகன் அமெரிக்காவில் இருக்கிறாராம். பாக்டரியைப் பார்க்க வந்திருக்காரு.”

அங்கு வேலை செய்பவர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்ள, புன்னகை மாறாமல் அவர்களை நலம் விசாரித்தபடி வந்தான் சிவா.

“”ரொம்ப நீட்டா இருக்கு. எல்லாவற்றையும் நல்லா மெயிண்டெய்ண் பண்ணியிருக்கீங்க. ஒர்க்கர்ஸுக்கு யூனிபார்ம் கொடுத்து, எல்லா செக்ஷனையும் தனித்தனியாகப் பிரித்து, நல்ல பாதுகாப்பாக அப்பா செய்திருக்காரு.”

“”ஆமாம் சார். ஐயா பாக்டரி விஷயத்தில் அக்கறை எடுத்துச் செய்வாரு.”

“”பாக்கிங் செக்ஷன் தனியா இருக்கா?”

“”ஆமாம் சார். அதோ அந்த பில்டிங்தான் அதிலே பத்து பேர் வேலை பார்க்கிறாங்க.”

“”அப்படியா வாங்க போகலாம்.”

எல்லாவற்றையும் சுற்றிப் பார்த்துவிட்டு, அப்பாவை நினைத்து பெருமைப்பட்டவனாக நடந்தவன், அந்தக் கட்டிடத்தைப் பார்த்தான்.

“”அது என்ன, அந்தப் பக்கம் ஒரு பில்டிங் இருக்கு.”

“”சார். அது காண்டீன் வச்சு நடத்தறோம் இல்லையா… அதுக்கான சாமான்கள் வைக்கிற ஸ்டோர் ரூம்… வெய்யில் அதிகமாயிடுச்சு. வாங்க சார் ரூமுக்குப் போகலாம்.”

“”அப்படித் தெரியலையே. உள்ளே பேச்சு சப்தம் கேட்குது.”

“”யாராவது வேலையாட்கள் வந்திருப்பாங்க… வாங்க சார் போகலாம்.
அவர் தடுமாற்றத்தைப் பார்த்தவன், “”இல்லை. அதையும் பார்த்துட்டுப் போயிடுவோம்.”

“”சார் அப்பாவுக்குத் தெரிஞ்சா… ஏன் ஸ்டோர்ரூமுக்கு அழைச்சுட்டுப் போனேன்னு சப்தம் போடுவாரு. வேண்டாம் சார்.”

“”அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்.”

அவர் சொல்ல, சொல்ல கேட்காமல் அந்தக் கட்டிடத்தில் நுழைந்தான்.
பத்திலிருந்து, பதினைந்து வயதுக்குள் இருக்கும். சிறுவர்கள் இருபது பேர் வரிசையாக் உட்கார்ந்து லேபிள் ஒட்டிக் கொண்டிருக்க மானேஜரைப் பார்த்தான் சிவா.

“”என்ன இது. குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு வச்சுக்கக் கூடாதுன்னு சட்டம் இருக்கு. அப்புறம் எப்படி?”

“”சார். இவங்க நம்ப ஒர்க்கர்ஸோட பிள்ளைகள். அவங்கதான் வருமானத்துக்கு வழி வேணும்னு, ஐயாகிட்டே சொல்லி இங்கே விட்டிருக்காங்க. வெளியே தெரியாது. பயப்பட ஒண்ணுமில்லை சார்.”
அவர்கள் வந்திருப்பதைக் கூட லட்சியம் செய்யாமல், ஈடுபாட்டுடன் வேலை செய்யும் அந்தச் சிறுவர்களைப் பார்த்தான்.

“”தம்பி உனக்கு இந்த வேலை பிடிச்சிருக்கா.”
பத்து வயது நிரம்பிய சிறுவன் அவனை நிமிர்ந்து பார்த்தான்.

“”இங்கே வேலை செஞ்சாதான் எங்காத்தா சுடுசோறு சமைச்சு போடும். இல்லாட்டி கஞ்சிதான்.”

“”சார் எனக்கு வேலை பிடிக்கலை. இருந்தாலும் பொழுதுக்கும் அப்பாவோட வந்து வேலை பார்த்தாதான், சாயிந்திரம் மைதானத்தில் விளையாட அனுப்புவாங்க. எனக்கு விளையாட ரொம்பப் பிடிக்கும் சார்.”

“”நீங்க யாரும் படிக்கலையா?”

“”சார், நான் இரண்டாம் வகுப்பு படிச்சிருக்கேன்.”

“”எனக்குப் படிக்காமலேயே ஏ.பி.சி.டி., வாய்ப்பாடு பத்து வரைக்கும் தெரியும்.”
கிழிந்த டிராயரை ஒட்டுப் போட்டு தைத்துப் போட்டிருந்த அந்தச் சிறுவன் பெருமையாகச் சொல்ல, மௌனமாக அந்த இடத்தை விட்டு வெளியேறினான் சிவா.

“”ஒரு வாரமாக வீட்டில் தங்காம அலைஞ்சுட்டு இருக்கே. இடம் விஷயமாக உன்கிட்டே பேசணும்னு நினைச்சேன். வளசரவாக்கத்தில் மெயின்ரோடை ஒட்டி நாலு கிரவுண்ட் இடம் இருக்கு. நாற்பது லட்சத்துக்குள் பேசி முடிக்கலாம். என்னப்பா சொல்ற. பேசி முடிச்சு உன் பெயரில் ரிஜிஸ்டர் பண்ணிடலாமா?”

“”வேண்டாம்பா, நான் இப்ப இடம் வாங்கிறதாக இல்லே.”

“”ஏன் சிவா, வேறு எதிலும் இன்வெஸ்ட் பண்ணனும்னு நினைச்சிருக்கியா?”

“”ஆமாம்பா. பசங்க படிப்புக்கு உதவட்டும்னு பணத்தை பாங்கில் டெபாசிட் செய்திட்டேன்.”

“”நீ சொல்றது எனக்குப் புரியலையே”

“”ஸாரிப்பா. முதலில் நீங்க என்னை மன்னிக்கணும். உங்ககிட்டே சொல்லாம நிறைய காரியங்கள் செய்திட்டேன்.”

தன்னையே பார்த்தபடி நிற்கும் தந்தையின் அருகில் வருகிறான்.

“”அப்பா, நீங்க கோவிலுக்குப் போன அன்னைக்கு பாக்டரி விசிட்டுக்குப் போனேன். அங்கே வொர்க்கர்ஸோட பிள்ளைகள் நம்ம பாக்டரியில் வேலை செய்யறதைப் பார்த்தேன்.”

அதிர்ந்து அவனைப் பார்க்கிறார்.

“”மானேஜர் எவ்வளவோ தடுக்கப் பார்த்தாரு. அதையும் மீறிப் போய் பார்த்தேன். அவரை நீங்க தப்பா நினைக்கக் கூடாது.”

“”அது வந்து… வேலை செய்யறவங்க ரொம்ப உதவியா இருக்கும்னு சொல்லி கெஞ்சிக் கேட்டதாலே பாவம் பார்த்து அவங்களுக்கு வேலை கொடுத்தேன்.”

“”இருந்தாலும் குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு வச்சுக்கிறது தப்பில்லையாப்பா. உங்க பேரனுக்கு விளையாட ஐயாயிரம் ரூபாயில் விளையாட்டுப் பொருள் வாங்கித் தந்து சந்தோஷப்படற நீங்க, வெறும் ஐநூறு ரூபாய்க்கு உங்க பேரன் வயசுள்ள பிள்ளைகள் மாசம் முழுக்க வேலை செய்யறதை எப்படிப்பா ஏத்துக்கிட்டீங்க. என் அப்பா மேலே நான் எவ்வளவோ மதிப்பும், மரியாதையும் வச்சிருக்கேன். அவர் அந்தக் காரியத்தைச் செய்யலாமா. அதான் அந்தப் பிள்ளைகளோட பேரன்ட்ஸை கூப்பிட்டுப் பேசினேன்.

வறுமையின் காரணமாகவும், படிக்க வசதியில்லாததாலுமே வேலைக்கு அனுப்பினதை ஒத்துக்கிட்டாங்க. நம்ப தொழிலாளர்களோட பிள்ளைகளின் படிப்பு செலவை நான் மனமுவந்து ஏத்துக்கிட்டேன். ஐம்பது லட்ச ரூபாயை பாங்கில் டெபாசிட் செய்து அதில் வரும் வட்டியை வச்சு அந்தப் பிள்ளைகள் படிக்க ஆடிட்டர் மூலமாக ஏற்பாடு பண்ணிட்டேன்.

மானேஜர் உதவியுடன் எல்லா பிள்ளைகளையும் ஸ்கூலில் சேர்த்தாச்சு. அந்த பிள்ளைகள் வாங்கின சம்பளத்தை அவங்கப்பாவுக்குச் சேர்த்துத் தருவதாகச் சொல்லி இருக்கேன். அவங்களும் நன்றி விசுவாசத்தோடு உண்மையாக உழைக்கிறதாகச் சொல்லிச் சந்தோஷப்பட்டாங்க.

இந்த எல்லா ஏற்பாட்டையும் செய்து முடிச்சுட்டு உங்கக்கிட்டே சொல்லணும்னுதான் இதுவரை சொல்லலை.”

அப்பாவின் தோளைத் தொடுகிறான்.

“”நான் செய்தது தப்பன்னு நினைக்கிறீங்களா”

“”இல்லைப்பா. அப்படிச் சொல்லலை. உன் உழைப்பில் சம்பாதிச்ச பணத்தை நாலு பேருக்கு பயன்பட கொடுக்கிறதுக்கும் நல்ல மனசு வேணும்.”

“”ஆமாம்பா… அந்த நல்ல மனசு தான். நீங்க சொல்றீங்களே நம்மை மீறிய சக்தி, கடவுள்ன்னு நான் நம்பறேன். அந்த சக்திதான் என்னை இப்படிச் செய்யச் சொல்லியிருக்கு. அந்தப் பணத்துக்கு கார்டியனாகவும், பிள்ளைகளின் படிப்புக்கு உதவுபவராகவும் உங்க பெயரைத்தான் கொடுத்திருக்கேன். என் அப்பா என்னைக்கும் எல்லாருக்கும் நல்லது செய்பவராகத்தான் இருக்கணும்.”

யூனிபார்ம் போட்டு, கையில் புத்தகப் பையுடன் அந்த இருபது பிள்ளைகளும், பெற்றவர்களுடன் அவர்கள் வீட்டு வாசலில் வந்து நிற்பதைப் பார்க்கிறான் சிவா.

“”என்னப்பா இது, எல்லாரையும் ஸ்கூலில் கொண்டு விடாம, இங்கே ஏன் அழைச்சிட்டு வந்தீங்க?”

“”ஐயா, இன்னைக்கு தான் பிள்ளைங்க முதன்முதலா ஸ்கூலுக்குப் போறாங்க. அதுக்கு முன்னால தெய்வத்தோட ஆசீர்வாதம் வேணுமில்லையா. எங்களையெல்லாம் வாழ வச்சுட்டிருக்கிற, இப்படியொரு தங்கமான பிள்ளையை பெத்த எங்க பெரிய ஐயா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிட்டுப் போகணும்தான் அழைச்சிட்டு வந்தோம்.”

எல்லா பிள்ளைகளும் ஒரு சேர, ராம்பிரசாத்தின் காலில் விழ, உடலும், மனமும் சிலிர்க்க, கோவில் கர்ப்பக் கிருகத்தில் அவர் உணர்ந்த அதே ஆத்ம திருப்தியை அந்த கணம் மனதில் உணர்ந்தவராக, அருகில் நிற்கும் மகனை, கண்களில் நீர் நிறைய பரவசத்துடன் பார்க்கிறார்.

Print Friendly, PDF & Email

1 thought on “மனமே கடவுள்

  1. மிகவும் அருமையான கதை. பணம் படைத்தவர் அனைவரும் தங்களுக்குச் செல்வத்தைத் தந்த இறைவனின் கருணையை உணர்ந்து அதனை இப்படி நல்ல வழியில் செலவிட வேண்டும். ஓம் நம சிவாய!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *