மதிப்பெண்கள்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 27, 2015
பார்வையிட்டோர்: 12,258 
 

தன்னுடன் அலுவலகத்தில் பணி புரியும் சுந்தரத்தை வீட்டுக்கு அழைத்து வந்திருந்தார் தீனதயாளன். இருவரும் வரவேற்பறையில் அமர்ந்து அலுவலக விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். சிறிது நேரத்தில் பேச்சு குடும்ப விஷயத்துக்குத் திசை திரும்பியது. எட்டாவது படிக்கும் தன் மகன் சரியாகவே படிக்கமாட்டேன் என்கிறான் என்று குறைபட்டுக் கொண்டிருந்தார் சுந்தரம். உடனே தன் மகளைப் பற்றி பெருமையாகச் சொல்லத் தொடங்கினார் தீனதயாளன்.

“அஞ்சாவது படிக்கும் என் மக யாமினி படிப்பில் படு சுட்டி… எல்லா சப்ஜெக்ட்டிலும் அவ நூத்துக்கு நூறு மார்க் எப்பவும் வாங்கிடுவா..” என்று தீனதயாளன் சொல்லிக் கொண்டிருந்தபோதே பள்ளிக்கூடத்திலிருந்து வீடு திரும்பினாள் யாமினி.

“டாடி…மன்த்லி எக்ஸாம் மார்க்ஸ் வந்தாச்சு..” என்றபடி தன் புத்தகப் பையில் மார்க் ஷீட்டை தேடத் தொடங்கினாள் யாமினி.

தீனதயாளனுக்கு ‘பக்’கென்று ஆயிற்று. லேசாக முகம் சுளித்தார். தன் மகள் என்ன மார்க் வாங்கியிருப்பாள் என்று தெரிந்திருந்த தீனதயாளன் ‘சுந்தரம் வந்திருக்கும்போதுதானா இவள் மார்க் ஷீட்டைக் கொண்டுவந்து நம் மானத்தை வாங்க வேண்டும்’ என்று அலுத்துக் கொண்டவர், நிலைமையைச் சமாளிக்க “இதோ வந்து விட்டேன், ஒரு நிமிஷம்..”
என்று சுந்தரத்திடம் சொல்லிவிட்டு உள்ளே போனார். போகும் போது, “யாமினி.. நீயும் உள்ளே வா” என்று குரல் கொடுத்துக் கொண்டே போனார்.

யாமினி தன் மார்க் ஷீட்டை தந்தை அமர்ந்திருந்த நாற்காலி அருகில் இருந்த ஸ்டூல் மீது வைத்துவிட்டு உள்ளே ஓடினாள்.

வரவேற்பறையில் தனித்து விடப்பட்ட சுந்தரத்துக்கு யாமினியைப் பற்றித் தீனதயாளன் சொன்னது நினைவுக்கு வந்தது. ஆர்வம் மேலிட, யாமினியின் மார்க் ஷீட்டை எடுத்துப் பார்த்தார்.

கணக்கு-2; விஞ்ஞானம்-8; சமூகம் 12; ஆங்கிலம் 11 என்றெல்லாம் யாமினி வாங்கியிருந்த மார்க்கைப் பார்த்ததுமே திகைத்தார் சுந்தரம். எடுத்த சுவடு தெரியாமல் அந்த பேப்பரை ஸ்டூல் மீது வைத்துவிட்டார்.

கையில் டிபன் தட்டுடன் வந்தார் தீனதயாளன்.

சுந்தரத்துக்கு டிபன் சாப்பிடும்வரை கூடப் பொறுக்க முடியவில்லை. யாமினியின் கம்மியான மார்க் பற்றிக் கேட்டு, ‘தீனதயாளனின் முகம் போகிற போக்கைப் பார்த்து ரசிக்க வேண்டும்’ என்று நினைத்துக் கொண்டார்.

அப்போதுதான் மதிப்பெண்கள் அடங்கிய அந்தத் தாளைப் புதிதாகப் பார்ப்பதுபோல் எடுத்துப் பார்த்தார் சுந்தரம். முகத்தில் பொய்யான வியப்புக் குறியுடன், “என்ன சார் இது…உங்க டாட்டர்தான் எப்பவுமே ப்ர்ஸ்ட் ராங்க்னு சொன்னீங்க.. என் மகனே பரவாயில்லை போலிருக்கிறதே, இவ்வளவு மோசமா மார்க் வாங்கியிருக்காளே” என்றார், குரலில் வலுக்கட்டாயமாக வியப்பை வெளிப்படுத்தியபடி..!

இக்கட்டான இந்த நிலைமையை எப்படிச் சமாளிப்பது என்று ஒரு விநாடி யோசித்த தீனதயாளன் பெரிதாக வாய்விட்டுச் சிரித்தார்.

“ஓ இதுவா..? எப்போதும் எல்லாத்துலேயும் நூறு மார்க் வாங்குவா.. இந்தத் தடவை மன்த்லி டெஸ்டைச் சரியா எழுதலேன்னு சொன்னா.. அதுனால ‘யாமினி ஒவ்வொரு சப்ஜெக்ட்லேயும் நூத்துக்கு எவ்வளவு மார்க் குறைச்சலா வாங்கியிருக்காள்னு குறிப்பிட்டு எழுதி அனுப்புங்க’ ன்னு அவ டீச்சர்கிட்டே நான் தான் சொல்லியிருந்தேன்.. அதைத்தான் அவங்களும் எழுதி அனுப்பியிருக்காங்க..” – என்று தீனதயாளன் வழிய, ‘நல்லாவே சமாளிக்கிறீங்க சார்..’ என்ற அர்த்தமுள்ள புன்னகையை அவர் மீது வீசினார் சுந்தரம் !

– ஆனந்த விகடன் 12-9-1993 இதழில் பிரசுரமான கதை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *