மடப்பள்ளி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 9,525 
 

”மீனாட்சி! ஏழு மணிக்கு அம்பாளுக்கு அர்ச்சனை., மச மச மசன்னு நிக்காம நைவேத்ய வேலைய பாரு. ஆறரைக்கு புளியஞ்சாதமும், சக்கர பொங்கலும் ரெடியா இருக்கணும்”, சிவபால குருக்கள் கட்டளையிட்டுவிட்டுப் போனார்.

”அரிசி வேக வேண்டாமா? இவன் அவசரத்துக்கு நான்தானா கெடைச்சேன்! ஆத்துலேந்து பண்ணி எடுத்துண்டு வர வேண்டியதுதானே!”, வாயிற்குள் முணுமுணுத்துக் கொண்டான் மீனாட்சி (எ) மீனாட்சி சுந்தரம்.

காவி வேஷ்டி, இடுப்பில் கட்டிய துண்டு, அடர்ந்து வளர்ந்த முடி, சிரைக்கப்படாத தாடி, கையில் அகப்பை சகிதமாக சாதத்தைக் கிளறிக் கொண்டிருந்தான் மீனாட்சி. தன் மனதில் என்ன தோன்றுகிறதோ அதை அப்படியே வெளியில் பேசி விடுவான். அவனது வாயிலிருந்து வரும் கேட்க முடியாத வார்த்தைகள் சில சமயம் பிறருக்கு அதிருப்தியை ஏற்படுத்தினாலும், அவனது நேர்த்தியான வேலையும், நேரந்தவறாமையும், அந்த கோவிலில் மட்டுமல்ல., அந்த ஊரிலும் நல்ல பெயரை அவனுக்கு உண்டுபண்ணியிருந்தது.

அந்த கோவில் மடப்பள்ளியில் அவனைத் தவிர வேறு யாரும் நுழைய முடியாது…இன்னும் சொல்லப்போனால் நுழையக் கூடாது. அது அவனது கோட்டை…ராஜாங்கம். அவன்தான் அதில் அரசன்.
நைவேத்யம் அவனால் குறித்த நேரத்தில் தயார் செய்யப்பட்டு சன்னதி வெளி வாசலில் வைக்கப்படும். குருக்கள் வெளியே வந்து நைவேத்யத்தை உள்ளே எடுத்துச் செல்வார்.

மீனாட்சிக்கு சன்னதிக்கு உள்ளே போக உரிமையுண்டு. ஆனால் இன்றுவரை அவன் சன்னதிக்குள் போனதில்லை…இனியும் போகமாட்டான். அது அவன் மனதில் வேரூன்றி விருட்சமாகிவிட்ட வைராக்கியம்.

மயில்கண் வேஷ்டியால் கட்டப்பட்ட பஞ்சகஜம், அங்கவஸ்திரம், நெற்றியிலும் மார்பிலும் திருநீற்றுப்பட்டை, கழுத்தில் ருத்திராட்சம் என சிவஞானப் பழமாக அந்த கோவிலை அலங்கரித்தவர் நீலகண்ட குருக்கள்…மீனாட்சி சுந்தரத்தின் அப்பா. சமஸ்கிருத சாஸ்திரங்கள், சிவாகமங்கள் ஆகியவற்றில் தேர்ந்து தெளிந்தவர். கோவில் வழிபாட்டு முறையிலும், பக்தர்கள் கோவிலில் நடந்துகொள்ள வேண்டிய முறைகளிலும் மிகவும் கண்டிப்பானவர். அவரே ஐந்து மணிக்கு எழுந்து, குளித்துவிட்டு கோவிலுக்குச் சென்று பெருக்கி, தண்ணீரால் கழுவி கோலமிடுவார். அவருக்கு உதவியாக மீனாட்சியும் சில வேலைகள் செய்வான். அவரே மடப்பள்ளிக்குச் சென்று நைவேத்யமும் போடுவார்…வேறு யாரையும் உள்ளே அனுமதிக்கவும் மாட்டார்.

”மீனாட்சி! வெளில சுள்ளி போட்டிருக்கேன்…அள்ளிண்டு வா”

சிறிய துண்டு கட்டிக்கொண்டு, துறுதுறுவென அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருப்பான் மீனாட்சி. அன்றிலிருந்து இன்றுவரை அந்த கோவிலில் ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து ரசித்து வளர்ந்தவன் அவன். குறிப்பாகச் சொல்லப்போனால் மடப்பள்ளி அவனுக்கு பிடித்தமான இடம். அந்த வகையில் அவனுக்கு நிறைய அனுபவ பாத்தியதை உண்டு அந்த கோவிலில். அப்பாவின் ஒவ்வொரு செயலிலும் லயித்துப் போயிருப்பான். அரிசி களைந்து போடுவது, புளிக்காய்ச்சல் பதமாக செய்வது, இளஞ்சூடாக தயிர்சாதம் கலப்பது…என மடப்பள்ளி வேலைகளை இவனுக்கு சொல்லிக்கொடுப்பார். இப்படியே படிப்படியாக வளர்ந்து பதினைந்து வயதிலேயே நைவேத்யம் போட கற்றுக் கொண்டான் மீனாட்சி. மடப்பள்ளி வேலைகளை நுணுக்கமாகவும், வேகமாகவும் கற்றுக் கொண்டானே தவிர சாஸ்திரங்கள், பாடங்கள் இவன் அறிவிற்குள் நுழையவில்லை.

நீலகண்ட குருக்கள் பொழுதுபோக்கிற்காகவும், வருமானத்திற்காகவும் மண்பொம்மைகள் செய்வார். அவரிடம் அச்சு என்று ஒன்றும் கிடையாது. கைவேலைதான். வினாயகர் சதுர்த்தி சீஸனில் பிள்ளையார் பொம்மைகள் செய்து விற்பார். இவனுக்கு அதைக் கற்றுக் கொள்வதிலும் ஆர்வமில்லை.

”அப்பா! கோவில்ல இருக்கற சிவலிங்கம் மாதிரி எனக்கும் ஒன்னு வேணும்….எனக்கு மட்டும்”

மீனாட்சிக்காக பார்த்துப் பார்த்து ஒரு களிமண் சிவலிங்கத்தை செய்து கொடுத்தார், அவன் சிறுபிள்ளையாக இருக்கும்போது. அதை நேரே கொண்டுபோய் மடப்பள்ளியில் உள்ள சாலாப்பரையில் வைத்துக்கொண்டான். தினமும் மலர்களால் அழகுபடுத்தி வழிபட்ட பிறகுதான் நைவேத்ய வேலையைத் தொடங்குவான்.

அந்த சிவலிங்கத்தை அவன் வழிபடும் முறை வித்தியாசமானதாக இருக்கும். அதற்கு அபிஷேகம் கிடையாது…அர்ச்சனை கிடையாது. அவனால் கொய்யப்பட்ட மலர்கள் அந்த சிவலிங்கத்தை அலங்கரிக்கும். அவன் மனதில் தோன்றும் மந்திரங்கள் அந்த சிவலிங்கத்திற்கு மட்டுமே கேட்கும்.

மீனாட்சிக்கு 16 வயதாக இருக்கும்போது, நீலகண்ட குருக்கள் காலமானார். அவருக்குப்பின் முறைப்படி வரவேண்டிய பூஜை உரிமை இவனுக்குத் தரப்படவில்லை.

”இப்போதைக்கு மடப்பள்ளி வேலைய பாரு….சிவபால குருக்கள் மாமாவுக்கு உதவியா இரு….மாசம் 350 ரூபா சம்பளம் தரோம்”, தர்மகர்த்தா சமாதானப்படுத்தினார். ஊர் பெரியவர்களும் சேர்ந்து ஒத்து ஊதினர். தன் அப்பா கட்டிக்காத்த அந்த கோவிலின் பூஜை உரிமை தனக்கே சேரவேண்டும் என்று வாதிட்டான். எடுபடவில்லை.

”ரொம்ப அதிகப் பிரசங்கியான்னா இருக்கு”, இவனை ஓரங்கட்டினர்.

ஊர் பெரியவர் ஒருவரின் சுயநலத்துக்காக சிவபால குருக்கள் நியமிக்கப்பட்டதும், அதனால் தான் வஞ்சிக்கப்பட்டதும் அவனுக்குத் தெரியும். அந்த கோவிலை விட்டுவிடவும் மனசில்லை. அப்பாவையும் அந்த கோவிலையும் தவிர வெளியில் வேறு யாரை தெரியும் அவனுக்கு?

”நான் நைவேத்யம் மட்டும் போடுவேன். சன்னதிக்குள்ள வரமாட்டேன்”, என்று சொல்லிவிட்டு மடப்பள்ளிக்கு வந்துவிட்டான். அந்த வைராக்கியம் இன்றுவரை தொடர்கிறது. அவனைப் பொறுத்தவரை அந்த மடப்பள்ளிதான் கோவில்….அவனது களிமண் சிவலிங்கம்தான் உற்சவமூர்த்தி.

இன்று டவுண் கடைக்குப் போய் தாளிக்க எண்ணெய் வாங்கிக்கொண்டு கோவிலுக்குள் நுழைந்த மீனாட்சிக்குப் பெரிய அதிர்ச்சி. தர்மகர்த்தா, ஊர் பெரியவர்கள் என பத்து பதினைந்து பேர் பிரகாரத்திலும், மடப்பள்ளியிலுமாக…கோவில் பராமரிப்புப் பணிகள் பற்றி வாயால் திட்டம் தீட்டிக் கொண்டிருந்தனர். மடப்பள்ளி திறக்கப்பட்டு உள்ளே பாத்திரங்கள் உருண்டு கிடந்தன. அவனுடைய அந்த களிமண் சிவலிங்கம் கீழே தள்ளப்பட்டு நெட்டுவாக்கில் விரிசல் கண்டிருந்தது. இவனுக்கு கோபம் தலைக்கேறியது.

”என்னடா மடப்பள்ளிய பாத்துக்கற….பாத்திரமெல்லாம் கரிபுடிச்சு கெடக்கு”, என்று ஊர் பெரியவர் சொன்ன அடுத்தகணம் இவனது வாயிலிருந்து புறப்பட்ட வார்த்தைகளை யாராலும் சகித்துக் கொள்ள முடியவில்லை.

”நீ ரொம்ப பேசறே படவா!”, என்று கண்டித்த தர்மகர்த்தாவை அடித்தே விட்டான் மீனாட்சி.

”போடா வெளில…..அனாத பயலே”, இவனை வலுக்கட்டாயமாக வெளியே துரத்திவிட,

”யார் யாரை வெளில போக சொல்றது….நீங்க போங்கடா வெளில….இது எங்க அப்பா பூஜை பண்ணி கட்டிக்காத்த கோவில்….எனக்கும் உரிமை உண்டு இங்க”, என்று சீறி வந்தவனை அடித்து வெளியே துரத்தினர். அவமானத்தால் குறுகிப் போனான். ஊர் பெரியவர்களையும் தர்மகர்த்தாவையும் ‘துரோகிகள்’ என்று திட்டிக்கொண்டே சென்றான். அழுகையால் அவமானத்தைக் கரைக்க முடியவில்லை.

அன்று இரவு அரசமரத்தடியில் படுத்தவனுக்கு தூக்கமே வரவில்லை. அவமானம் தூக்கத்தைத் தின்று கொண்டிருந்தது. இவ்வளவு நடந்த பிறகும் அவனுக்கு அந்த ஊரில் இருக்க விருப்பமில்லை. போராட்டத்தில் முன்னேறி வெற்றிகான எத்தனிக்கும்போது அவனது ஏழ்மை பின்னாலிருந்து குத்தியது. அவனால் இனி என்ன செய்யமுடியும்?

சிலமணி நேர உழற்றலுக்குப் பிறகு திடீரென்று என்ன தோன்றியதோ தெரியவில்லை….சட்டென்று எழுந்து கோவிலை நோக்கி நடக்க ஆரம்பித்தான். கோவில் பூட்டி இருந்தது. சுவரேறிக் குதித்தான். நேரே பிரகாரத்தைத் தாண்டி மடப்பள்ளிக்குள் நுழைந்தான். விரிசல் கண்டிருந்த அவனது களிமண் சிவலிங்கத்தின் மீது நிலவொளியின் கதிர்கள் மடப்பள்ளி சாளரம் வழியாக விழுந்து அதற்கு மேலும் அழகு சேர்த்துக் கொண்டிருந்தது. அதனைத் தொட்டு தூக்கியபோது ஆனந்தத்தில் விழிகளை நீர்த்திரைகள் மறைத்தன. அவன் மனதில் சுமந்து கொண்டிருந்த அவமானங்கள் கண்ணாடி சில்களாய் சிதறிப் போயின. அந்த சிவலிங்கத்தைக் கையில் அணைத்துக் கொண்டு, மீண்டும் சுவரேறிக் குதித்து இருளை ஊடுருவி கால்போன போக்கில் நடக்க ஆரம்பித்தான்.

எங்கு செல்கிறான்? இந்த பயணத்தின் முடிவு என்ன?

அவனுக்கே தெரியாது.

ஆனால் உலகமே இப்போது மடப்பள்ளியாகத் தெரிந்தது அவனுக்கு !

– திரு [thiru_writer@hotmail.com] (மார்ச் 2007)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *