கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 29, 2021
பார்வையிட்டோர்: 3,109 
 

காலை பத்து மணி அம்மா..எனக்கு சாப்பிட என்ன இருக்கு? என்று குரல் கொடுத்துக் கொண்டே வந்தான் மாதவன்,என்னடா இவ்வளவு லேட் ஆகி சாப்பிட்டால் உடம்பு என்னத்துக்கு ஆகும்? கொஞ்சம் நேரத்தோடு எழுந்தால்,அவசரம் இல்லாமல் சாப்பிட்டு வேலைக்கு போகலாம் தானே? ஒவ்வொரு நாளும் லேட் ஆகி போனால் உன்னை ஆபிஸில் யாரும் மதிக்க மாட்டார்கள் என்றாள் நீலவேணி.நீ காலையில் ஆரம்பிக்காதே,எனக்கு சாப்பாடு இருக்கா?இல்லையா? என்றான் மாதவன்.இருக்கு எடுத்து மேசை மீது வைத்திருக்கிறேன் சாப்பிட்டுப் போ என்றாள் நீலவேணி.வேகமாய் போய் அம்மா செய்த உணவை தட்டில் போட்டு சாப்பிட தொடங்கிய மாதவன்,அம்மா தண்ணி அடைக்குது என்றான்.

இப்படி அவசரமாக அள்ளி திணித்தால் அடைக்காமல் வேறு என்ன பன்னும்,கண் முன்னுக்கே தண்ணியிருக்கு,போனைப் பார்த்துக் கொண்டு,என்னத்தை சொல்வது என்று,நீலவேணி டம்ளரில் இருந்த தண்ணியை அவனிடம் நீட்டினாள்.அதையும் வெடுக்கென்று பிடுங்கி,மடக்கென்று குடித்தான் மாதவன்,மெதுவாக குடி என்றாள் நீலவேணி.அவசரமாக கையை கழுவி விட்டு ஓடினான் மாதவன்,இவனை என்னவென்று சொல்வது, இரவு முழுவதும் கொம்யூட்டரில் உட்கார்ந்து,என்னத்தைப் பார்ப்பானோ,ஒழுங்காக தூங்குவது இல்லை காலையில் லேட் ஆகி எழுந்து ஓடவேண்டியது தான்,நான் சொன்னால் இவன் கேட்க்கவும் மாட்டேன்கிறான்,என்று கவலைப் பட்டுக் கொண்டாள் நீலவேணி்.

சிறுவயதிலிருந்த மாதவனை,காலையில் எழுப்புவதற்கு நீலவேணி போராட வேண்டியிருக்கு.பாடசாலை போகும் நாட்களில்,அதட்டி சரி எழுப்பி விடலாம்.தற்போது தலைக்கு மேல் வளர்ந்தப்பிள்ளை வேலைக்கும் போகிறான்,அதட்ட,அடிக்க முடியாதே அப்படியிருந்தும்,ஒவ்வொரு நாளும் நீலவேணி மாதவனிடம் அமைதியாக கூறுவாள்,இரவு ஒன்பது,பத்து மணிக்கு படுத்து விடு அப்போது தான் காலையில் சீக்கிரமாக எழும்பலாம்,உன் பழக்கத்தை மாத்திக்க என்று,கூறும் போது மட்டும் சரி என்று தலையை ஆட்டுவான் மாதவன்,பிறகு செவிடன் காதில் ஊதிய சங்கு மாதிரி தான்,ஒரு நாளும் அதை செய்ய மாட்டான்.சில நேரம் நீலவேணிக்கு கோபம் வந்து கத்துவாள்,ஏன் காலையில் கத்தி ஊரை கூட்டுற என்பான் மாதவன்.

வாரத்தில் ஒரு தடவை வீட்டுக்கு வரும் கண்ணப்பனும்,அதையே தான் கூறுவான்.ஏன் காலையில் இவ்வளவு டென்ஷன்? கத்தாதே என்பான்.உங்களுக்கு என்ன தெரியும்,ஒவ்வொரு நாளும் இவனோடு நான் படும் பாடு என்பாள் நீலவேணி,அப்பா நான் கரெக்ட் டைம்முக்கு,வேலைக்கு போய்விடுகிறேன் என்பான் மாதவன்.ஆமாம் அவசரமாக சாப்பிட்டு,கையை கூட ஒழுங்காக கழுவாமல்,ஓடுவது எனக்கு தானே தெரியும் என்பாள் நீலவேணி, சரி விடு,நாள் போக்கில் சரியாகிவிடும் என்பான் கண்ணப்பன்,ஆமாம் சரியாகி விடும்,இத்தனை வருடமும் பழகாததை,இனி தான் பழகப் போகிறான்,உங்கள் அருமை மகன் என்பாள் நீலவேணி,நம்ப மகன் என்று திருத்துவான் கண்ணப்பன், இதில் மட்டும் குறைச்சல் இல்லை என்பாள் நீலவேணி.

கண்ணப்பன் வெகு தூரத்தில் வேலை செய்வதால்,வெள்ளிகிழமை வீட்டுக்கு வரும் அவன்,திங்கட் கிழமை காலையில் வேலைக்குப் போய்விடுவான்.மற்றைய நாட்கள் எல்லாம் நீலவேணியும்,மாதவனும் தனியாக தான் வீட்டில் இருப்பார்கள்.வசதியான சொந்த வீடு,தண்ணி பிரச்சினை இல்லை,சுத்தமான காற்று,வீட்டை சுற்றி மரங்கள்,இந்த வசதிகளை விட்டுப் போவதற்கு யாருக்கும் மனம் இல்லை,ஆரம்பத்தில் கண்ணப்பன் ஊரில் வேலை செய்தான்,பிறகு பதவி உயர்வோடு மாற்றல் கிடைத்தது,அவன் மட்டும் போய் அவனுடைய உறவினவர் வீட்டில் தங்கி வேலைக்குப் போய்வந்தான்,அதனால் தான் வெள்ளிகிழமை வேலை முடிந்தவுடன் புறப்பட்டு வீட்டிக்கு வந்து சேர்ந்து விடுவான்.

இரண்டு நாட்கள் குடும்பத்தோடு இருந்துவிட்டு,திங்கள் காலையில் வேலைக்குப் புறப்பட்டு போய்விடுவான்.இந்த இரண்டு நாட்களில், மகனைப் பற்றி அம்மா புகார் செய்வதும்,அம்மாவைப் பற்றி மகன் புகார் செய்வதும்,இவர்களை சமாதானம் படுத்தி வைப்பதுவும் நன்றாக தான் இருக்கும் கண்ணப்பனுக்கும்.நீலவேணி கூறுவதும் நியாயமாக தான் இருக்கும்,மாதவனுக்கு இன்னும் விளையாட்டுப் புத்தி,எதிலும் அக்கறை கிடையாது,அதை சொன்னால் நீங்கள் என்னிடம் தான் குறை கண்டுப் பிடிப்பீங்கள்,என்று மாதவன் கோபித்துக் கொள்வான்,நீங்கள் கொடுக்கும் செல்லம் என்று நீலவேணி குறைப் படுவாள்,கண்ணபனுக்கு தர்மசங்கடமான நிலை.

மாதவன் வேலை முடிந்து வந்ததும்,நீலவேணி டீ போட்டு தரவா என்றாள்,வேண்டாம் என்று எரிந்து விழுந்தான்,ஏன் என்ன நடந்தது,என்னிடம் உன் கோபத்தை காட்டுகின்றாய் என்றாள் நீலவேணி,பிறகு புதிதாக வந்திருக்கும் மெனெஜரிடமா காட்ட முடியும்,ஏதோ அந்த ஆள் கம்பனி மாதிரி,ஆயிரம் ரூல்ஸ் போடுகிறான்,நேரத்திற்கு வருனுமாம்,ஆபிஸ் டைமில் போன் பேசக்கூடாதாம்,லன்சிக்குப் போய் லேட் ஆக கூடாதாம்,இந்த வேலையை தூக்கி வீசிவிட்டு வந்திடலாம் போல் இருக்கு என்றான் மாதவன்.

சரி முதலில் கை,கால் கழுவி விட்டு வா,அம்மா டீ போட்டு தருகிறேன் குடித்தப் பிறகு,இதைப் பற்றி பேசலாம் என்றாள் நீலவேணி்.மாதவன் போய் வேறு உடையில் வந்தான், அதற்கிடையில் நீலவேணி சூடாக டீ போட்டு,ஒரு தட்டில் முறுக்கையும் எடுத்துக் கொண்டு வந்தாள்,மாதவன் அமைதியாக முறுக்கை சாப்பிட்டு,டீயை குடித்தான்.இப்ப கூறு உனக்கு என்னப் பிரச்சினை,அந்த புது மெனெஜர் பிரச்சினையா?அல்லது அவர் போடும் ரூல்ஸ் பிரச்சினையா?என்றாள் நீலவேணி,இரண்டும் தான் அந்த ஆளைப் பார்த்தாலே எனக்கு பிடிக்கவில்லை என்றான் மாதவன்.முதலில் இந்த மனப்போக்கை விடு,உன் அப்பா அப்படி இருந்தால் என்ன பன்னுவ என்றாள் நீலவேணி,அவன் அமைதியாக இருந்தான்.ஒருத்தரை பார்த்தவுடன் எந்த முடிவும் எடுக்காதே,நீ வீட்டில் செல்லப் பிள்ளையாக வளர்ந்து இருக்கலாம்,ஒருத்தர் உன்னை கொஞ்சம் அதிகாரம் பன்னினால் பிடிக்க மாட்டேங்குது

நீங்கள் இருவரும் என்னை அப்படி வளர்க்கவில்லையே.ஸ்கூல் காலத்தில் கூட என்னை யாரும் எதுவும் சொன்னதில்லை,இந்த ஆள் யாரு என்று கோபபட்டான் மாதவன்,முதலில் இந்த கோபத்தை விடு,இது உன் முதல் எதிரி,அந்த மெனெஜருக்கு உன் அப்பா வயது இருக்குமா? என்றாள் நீலவேணி,இருக்கும் என்றான் மாதவன்,மரியாதை குறைவாக பேசாதே முதலில் அது என்ன பழக்கம் ஆளு என்று கதைப்பது பிடிக்கின்றதோ,பிடிக்கவில்லயோ வயதுக்கு சரி மரியாதை கொடுத்துப் பழகு என்றாள் நீலவேணி,சரி என்றான் மாதவன்.உன் மீது உள்ள பிழைகளை முதலில் திருத்திக்கொள்,டைம்க்கு வேலைக்குப் போய்பழகு,உனக்கு போன் பார்க்க சம்பளம் கொடுக்கவில்லை,நீ செய்யும் வேலைக்கு தான் சம்பளம் அதை புரிந்துக்கொள், வேலையில் இருக்கும் போது பொறுப்பாக நடந்துக்கொள்ள வேண்டும் என்றாள் நீலவேணி.

உன்மீது பிழையை வைத்துக் கொண்டு,மற்றவர்கள் மீது குற்றம் கண்டு பிடிக்காதே,நீ சரியாக இருந்தால்,யாரும் உன்னில் குற்றம் கண்டுப்பிடிக்க மாட்டார்கள்,அப்படியே ஏதும் குறை கண்டுப் பிடித்தாலும்,நீ எதிர்த்து கேள்வி கேட்க்கலாம் என்றாள் நீலவேணி,மாதவனுக்கு அம்மாவின் பேச்சி நியாயமாகப் பட்டாலும் அதை ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவம் அவனிடம் இல்லை.நீ மகனுக்கு சப்போட் பன்ன மாட்ட,அப்பா வரட்டும் நான் அவரிடம் பேசிக்கிறேன் என்றான் மாதவன்,சரி நீ யாரிடம் பேசினாலும்,உன் பக்கம் நியாயம் இல்லை என்றால்,யாரும் உனக்கு சப்போட் பன்னமாட்டார்கள்,என்று நீலவேணி சிரித்தாள்,நீ சிரிக்காதே எனக்கு கோபமாக வருது என்றான் மாதவன்.

வெள்ளி கிழமை அப்பா வந்ததும்,மாதவன் புகார் சொன்னான், என்னடா உன்னுடைய பிரச்சினை?இன்னும் ஸ்கூல் பசங்க மாதிரி என்றான் கண்ணப்பன்,இப்ப தான் வேலைக்குப் போக ஆரம்பித்திருக்காய்,அதற்கிடையில் மெனெஜரை பிடிக்காமல் போய்விட்டதா?என்றான் கண்ணப்பன்,அவர் எல்லாம் பெர்ஃபெக்ட் ஆக இருக்கனும் என்று நினைக்கிறார்,ஒரு நிமிடம் லேட் ஆகிப் போனாலும் கத்துகிறார்,பைல் எல்லாம் ஒழுங்காக அடுக்கி வைக்க சொல்கிறார்,திகதி போடாவிட்டாலும் முறைக்கிறார்,என்றதும் கண்ணப்பன் சிரித்து விட்டான்,நீங்களும் சிரிக்கிறீங்கள் என்றான் மாதவன்,ஏன் அம்மாவும் சிரித்தாளோ? என்றான் கண்ணப்பன், ஆமாம் என்றான் மாதவன்,ஸ்கூல் காலத்தில் இருந்து உனக்கு சொல்லிக் கொண்டு தான் இருக்கிறோம்,காலையில் நேரத்தோடு எழும்பு,பெட்ஷீடை மடித்துப் போடு,ரூமை கூட்டி சுத்தமாக அவை,டீ குடித்தால் கப்பை கழுவி வை,ஸ்கூல் பேக்கில் புத்தகங்களை ஒழுங்காக அடுக்கி எடுத்துகிட்டுப் போ,ஷூ கலட்டினால் எடுத்து ஷூ ரெக்கில் வை என்று எதையும் கேட்டியா?இன்று அதற்கு எல்லாம் சேர்த்து வைத்து,ஒரு மெனெஜர் வந்து உன் உயிரை எடுக்கிறாரா?என்றான் கண்ணப்பன்,நீங்களும் அம்மா மாதிரி தான் என்றான் மாதவன்.

நாங்கள் சொல்ல வருவதை சரியாகப் புரிந்துக்கொள் மாதவன், அவசரப் பட்டு கோபபடாதே,சின்ன,சின்ன வேலைகளை நீ வீட்டில் பழகியிருந்தால்,இன்னைக்கு அது உனக்கு கஷ்டமாகத் தெரியாது, ஏதோ பிறந்தோம்,எப்படியும் வாழ்ந்து விட்டு போவோம்,என்பது வாழ்க்கை இல்லை,எல்லாவற்றிலும் ஒரு பெர்ஃபெக்ட் இருக்கனும்,இவ்வளவு நாட்களும் அம்மா செய்தார்கள்,ஆபிஸ் போனப் பிறகும்,அவர்களை எதிர் பார்ப்பது முறையில்லை,இனி சரி உன் வேலைகளை நீ செய்துப் பழகு,டைமுக்குப் போய் பழகு அது முக்கியம்,நீ இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்துக்கொள், வேலையில் சோம்பேறித்தனம் கூடாது,ஆபிஸ் டைமில் தேவையில்லாமல் போன் பார்க்காதே,இந்த வேலை வேண்டாம் என்று தூக்கி வீசி விட ஒரு நிமிடம் ஆகாது,நீ சரியாக இல்லை என்றால்,போகும் எல்லா இடங்களிலும் இதே பிரச்சினைகள் ஏற்படும்.எத்தனை வேலை மாறுவாய்,அது சாத்தியப் படாது,நீ விடும் பிழைகளை,நாளை உன் மகனும் விடுவான்,யோசித்து நடந்துக்கொள் என்றான் கண்ணப்பன்,சரி அப்பா என்றான் மாதவன்.சில வாரங்களில் அவனிடம் பல மாற்றங்களை கண்டு கண்ணப்பனும்,நீலவேணியும் சந்தோஷப் பட்டார்கள்.இத்தனை வருடங்களா மாறாதவன்,தற்போது மாறியிருக்கான் என்பது மட்டும் தான் இவர்களுக்கு தெரியும்,தன் மகன் காதல் வலையில் சிக்கிகொண்டான் என்பது தெரிய வாய்பில்லையே.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *