போன்சாய் மனங்கள்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 27, 2013
பார்வையிட்டோர்: 11,147 
 

அதுவரை ஜன்னலில் காத்துக் கொண்டிருந்த ஞாயிறு காலை வெளிச்சம், திரைச்சீலை இழுக்கப்பட்டவுடன் சட்டென ஹாலில் விழுந்து ஒளியும் நிழலுமாக அப்பிக்கொண்டது. மோகனுக்குக் கண் கூசியது. திரும்பி பாத்ரூமுக்குப் போகும்போது ஹாலின் இடப்புற ஓரமாக தூக்கத்தின் சுதந்திரத்தில் படுத்திருந்த வேலைக்காரியின் மேல் தேங்கிய பார்வையை மீட்டு ஃபேனை நிறுத்திவிட்டு முகம் அலம்பப் போனான். ஞாயிற்றுக்கிழமைகளுக்கேயுரிய உப்பிய கண்கள். திரும்பி வந்து செய்தித்தாளைப் புரட்டியபோது வந்து காபி தந்துவிட்டுப் போனாள்.

போன்சாய் மனங்கள்

செல்போன் ஒலியற்று “ட்ர்ர்… ட்ர்ர்…’ என்று அதிர்ந்தது. அசுவாரசியமாக எடுத்தபோது “”குட்மார்னிங் சார், டொமஸ்டிக் சர்வீஸ்ல இருந்து பேசறோம், சமையலுக்கு ஒரு லேடி வேணும்னு கேட்டிருந்தீங்க, ஒரு வயசான தமிழ் லேடி இருக்காங்க, காலை 6 மணியிலிருந்து சாயந்திரம் 7 மணி வரை டியூடி. அனுப்பவா?” என்றான்.

“”அப்படியா? சரி 11 மணிக்குள்ள வரச்சொல்லுங்க, என் வைஃப் பாத்து பேசிட்டாங்கன்னா முடிவு பண்ணிடலாம்” என்று சொல்லிவிட்டு “”மாலு…” என ஓரிருமுறை அழைத்துவிட்டுப் பிறகு படுக்கையறைக்குள் நுழைந்தபோது, மாலினி பொன்தாலி மேல் முதுகில் பின்புறமாக வழிந்திருக்க திரும்பிப் படுத்திருந்தாள். அடுத்த கட்டிலில் தூக்கத்திலிருந்த நான்கு வயதுக் குழந்தை லேசாக வாய் மொட்டு விரித்தபடி. அவளை மட்டும் எழுப்பிவிட்டு திரும்பி வந்து இனி வீட்டில் நல்ல சாப்பாடு கிடைக்கும் என்று திருப்திப் பட்டுக்கொண்டான்.

மாலினி நல்ல வேலையிலிருக்கிறாள். ஐந்து நாள் வேலை. ஆறாம் நாளுக்கும் நீளும் பணிச்சுமை. நல்ல சம்பாத்யம். முன்பு பெற ஏங்கிய எதையுமே இப்போது யோசிக்காமல் பெற முடிந்தாலும் இழந்த பலவற்றுள் சமையற்கலையும் ருசிக்கும் கலையும். சாப்பாட்டை நன்றாக ருசிக்கத் தெரிந்தால் சமையல் தானாக வரும் என்பார் மோகனின் அப்பா. நிதர்சனம். காலைச் சோம்பல்களை அனுபவித்த பின் இன்று வெளியே சுற்ற வேண்டிய கடைகள் குறித்து அவள் சொன்னபோது, சமையலுக்கு சொன்ன ஆள் 11 மணிக்கு வரவிருப்பதை நினைவூட்டினான் மோகன்.

“”ஓ…ஓகே. அப்போ காலம்பற ப்ரெட் டோஸ்ட் சாப்டுட்டு அந்தம்மாவ பத்து நிமிஷம் பாத்துட்டு கிளம்பலாம்” என்றாள். மறுபடி ட்ர்ர் … ட்ர்ர்… அந்த சமையல் மாமி தொலைவிலிருந்து வர வேண்டியிருப்பதால் மதியம் ஒரு மணிக்கு மேல்தான் வருவார் என்று செய்தி வரவே, செல்போனை மாலினி வாங்கி, “”அப்டீன்னா ஒண்ணு பண்ணுங்க. அவங்களை வந்து மத்யானமா சமைச்சு வைக்கச் சொல்லுங்க. சமையல் பிடிச்சிருந்தா நாளைலருந்து தொடர்ந்து பண்ணட்டுமே” என்றாள். மதியச் சாப்பாட்டை வெளியே முடிப்பதும் இரவுச் சாப்பாடு வீட்டில் தயாராவதும் அதன் மூலம் சமையல் தரத்தை அறியமுடிவதும். இவையனைத்துமே ஒரே காய் நகர்த்தலில் நிகழ வைக்கும்படியான நகரத்து வாழ்வின் ஒட்டுமொத்த புத்திசாலித்தனம். கிடைக்கும் நிமிடங்களுக்குள் பலவற்றையும் கசக்கித் திணிக்க அவர்களால் முடியும். அவர்களால்தான் முடியும்.

வழக்கமான ஜீன்ஸ், டாப்ஸ் இல்லாமல் புடவையில் இன்று மாலினி. காப்பிக்கொட்டை கலர் முக்கால் பேண்ட் மற்றும் மஞ்சள் பனியனில் மோகன். கார் சாவியை விரலிடுக்கில் பற்றிய அவனுடைய கையைப் பிடித்து படியிறங்கிவரும் சிட்டு. தூரத்துச் சொந்தம் என்று திருமணம் செய்துகொண்டிருந்தாலும் சுதந்திரத்தின் விளிம்பை அறியாத மாலினிக்கும், அதன் பரப்பை விரிக்க முடியாத மாமனார் மாமியாருக்கும் விழுந்த இடைவெளியை இட்டு நிரப்பவும் முடியாமல், அவர்கள் நெருங்கி வந்து நெருடல்களை நீவி சரிசெய்து கொள்வதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்த முடியாமல் நசுங்கிப் பிதுங்கி மனைவியுடன் வெளியே விழுந்த பல்லாயிரம் நடுத்தரக் குடும்பத்து பிரஜைகளுள் ஒருவன்தான் மோகன். காயங்கள் வலித்தன. நாயை எங்கே அடித்தாலும் காலைத்தான் நொண்டும் என்பார்கள். கட்டுக்கோப்புக்கும் கட்டுப்பாடுகளுக்குமான வேறுபாட்டை அறிந்து கொள்ள ஆர்வமற்ற அவரவர் ஓட்டங்கள், தடைகள். அலுவலகத்திலோ, புது அதிகாரியிடமோ… ஏன்… நெருக்கியடித்து உட்கார்ந்திருக்கும் சக ரயில் பிரயாணிகளிடமோ செய்துகொள்ளும் சமரசங்களைக் கூட வாழ்வில் உடன் பயணப்படுபவர்களிடம் செய்து கொள்ள விரும்பாத பசி மயக்கங்கள், ருசி மயக்கங்கள். மாலினியை தூரத்துச் சொந்தமென்று மனைவியாக்கியபோது சொந்தங்களே தூரமானது. உறவுகள் மனித நாற்றுகள். இடமாற்றிப் பொருந்திக் கொள்ளாவிட்டால் செழித்து வளர்வது களைகளும்தான். செழிப்பின் களையில் களைகள் தெரியா.

வேலைக்காரியிடம், “”அந்தம்மாள் வந்தா. முதல் சமையலாச்சே, ஒரு ஸ்வீட்… இல்லாட்டி ஒரு பாயசம் வைக்கச் சொல்லு” என்றாள். மோகனுக்குப் பாலில் பச்சரிசியை வேகவைத்து அம்மா செய்யும் வெண்கலப் பானை சர்க்கரைப் பொங்கலும் அதற்கு உடன் தொட்டுச் சாப்பிட எலுமிச்சை ஊறுகாயும் வைப்பது நினைவுக்கு வந்தது. இனிப்பு திகட்டாமலிருக்க சற்றே காரம் தொட்டுக் கொள்வது என்பது அவனுடைய தாத்தாவின் பாணி. இது வாழ்க்கைக்கான சூட்சுமமாகவும் கூடத் தோன்றியது அவனுக்கு. வீடு இல்லாவிட்டால் போகிறது. நல்ல சாப்பாடு இனி உண்டு என்று எண்ணிக்கொண்டான்.

சந்தடியற்ற சந்தை ஏது? பெற்றோரோடு சேர்ந்து இருக்க வேண்டும் என்றதற்கு, “”ஏன் இப்ப நான் இல்லையா? என் அம்மா அப்பாவை விட்டுட்டு” என்று குயுக்தியாகக் கேட்பாள். பதில்கள் ஆகுதியில் நெய்யாகி கொழுந்து விட்டு எரியும். அவளுக்கு மற்றவருடைய உலகம் கூட அவளுடைய கோணத்திலிருந்தே துவங்குகிறது. ஆகவே பிரச்னைகளை சந்திப்பதைவிட தவிர்த்து தள்ளிப் போடுவதென்ற தற்காலிக நிம்மதியைத் தேடத் தொடங்கினான், ஆனால் பிரச்னைகளிலிருந்து தூர இருக்க விரும்புகையில் தீர்வுகள் அதைவிடத் தூரமாகிப் போகிறது என்ற அபாயத்தை உணர விரும்பாதவனாகவே இருந்தான். சச்சரவுகள் சமாதானமாகிப் போனது போன்ற பாவனையில் கனன்றுகொண்டிருக்கையிலேயே மோகன் ஆறேழு மாதம் அயர்லாந்து சென்றிருந்தபோது வீட்டில் கள்ளிகள் முளைத்துக்கொண்டன. ஏதேதோ நடந்து விட்டன. மனம் சில முன்முடிவுகளைக் கண்ட பின் காரணத்தைத் தேடி என்ன பயன்?

ஒரு முறை மோகன் ஃபோனில், “”ஏன் அம்மாவோ அப்பாவோ பேசலை? எப்படியிருக்காங்க?” என்றபோது, “”அவங்க சண்டை போட்டுகிட்டு அவரோட தம்பி வீட்டுக்கு போனாங்க, இதுவரை பேச்சே இல்லை, அவருக்கு ஃபோன் பண்ணா அவங்க இங்க ஏற்கெனவே கிளம்பி வந்திருப்பதாகச் சொன்னாங்க, யாரைப் போய் கேட்கறது? அவமானம். அப்பப்போ பெரியம்மாதான் வந்து உதவி பண்றாங்க, இதையெல்லாம் சொல்லி உங்களை வேதனைப்படுத்த வேண்டாம்னுதான் சொல்லலை” என்று வேதனைப்படுத்தினாள்.

மாலினி கெட்டிக்காரிதான் என்றாலும், அவள் எண்ணப் பக்குவங்கள் கனிந்தவை அல்ல. இனி எந்த விசாரணைகளும் அழிந்துவிட்ட கோலத்தை மீட்டுத் தரப்போவதில்லை என்பதை அறிந்து சட்டெனப் பேச்சைத் துண்டித்துக்கொண்டான் கோபமாக. ஆனால் பிறகு பேச்சு தொடரத்தான் வேண்டியிருந்தது. ஊருக்குத் திரும்பி வந்தவனுக்கு குழந்தையைக் கொஞ்சுவதா? மனைவியிடம் பேசிப் புரிய வைப்பதா? பெற்றோருக்காக வருந்துவதா? அலுவலகத்தைத் திருப்தி செய்வதா? என்ற பலமுனைத் தடுமாற்றத்தில் எல்லாவற்றையுமே அதனதன் திருப்திக்காக, ஆனால் தன்னைத் தொலைத்தவனாக செய்து கொண்டிருந்தான். நிழலின் அழுகையாக, அவனுடைய தேடல் பலனற்றுப்போனது. பழைய வீடு மாறி புதுவீட்டிற்கு வந்தார்கள்.

“”ஓகே.. நேரா ஷாப்பிங் மாலுக்குப் போகலாம்” என்ற மாலினியின் குரல் அவனை நிகழுக்கிழுத்தது, அவன் மனம் நல்ல சமையலுக்காக ஏங்கிக் கொண்டிருந்தாலும் இன்று மதியம் ஓட்டல் சாப்பாடுதான் என்பதை அறிந்தபோது துளிர்த்த ஆசையை வெட்டிக் கொண்டான். ஏக்கங்களின் துளிர்களையும் அபிலாஷைகளின் குருத்துக்களையும். கனவுகளின் நீட்சிகளையும், நியாயங்களின் குறுகுறுப்பையும் கூட அவ்வப்போது வெட்டி வெட்டி வெட்டிக் கிட்டத்தட்ட ஒரு போன்சாய் கணவனாகியிருந்தான். அவற்றைக் கூட தன் செüகரியம் கருதியே அனுமதித்துக் கொண்டான் என்பதும் அவனளவில் மூடப்படாமல் கிடந்த உண்மைதான். அவனுக்குப் புல்லாங்குழல் வாசிக்கத் தெரியும் என்பதுகூட ஒரு செய்தி என்கிற அளவில்தான் அவளுக்குத் தெரியும். வெற்று லெüகீகங்களையே துரத்திச் செல்பவர்களுக்கு முரளிகள் கூட துளைபட்ட மூங்கில்கள்தான். அவனுக்கு தற்போதைய வசதியான வாழ்க்கையானது பத்திகள் பிரிக்கப்படாதவொரு நீண்ட கட்டுரையைப் போல ஆயாசமளித்தது. சற்று நேரத்திற்கெல்லாம் விலைகட்டி விற்கப்பட்டுக்கொண்டிருந்த ஷாப்பியின் பகட்டில் அனைவரும் கரையத்தொடங்கியிருந்தனர்,

வீடு திரும்பியபோது ஓய்ச்சலாக தூங்கிவிட்ட குழந்தையோடு மோகனும் சேர்ந்து சோபாவிலேயே தூங்கிப்போனான். காரில் குட்டித் தூக்கம் போட்டெழுந்த சுறுசுறுப்பில் வந்த மாலினி, “”சமையல் லேடி வந்தாளா?” என்று வேலைக்காரியிடம் பேசப்போனாள்.

“”வந்தாங்கம்மா… வந்த பத்து நிமிஷத்துலயே அப்புறமா வர்றேன்னு கிளம்பினாங்க… நீங்க சினிமா பாத்துட்டு வர்றதுக்கு ராத்திரி 8 மணி ஆகும்னு நான் விபரம் சொன்னேன். உடனே சரின்னு எல்லாம் சமைச்சு வெச்சுட்டு போய்ட்டாங்க” என்றாள்,

மாலினி சமையலறைக்கு ஓர் எதிர்பார்ப்புடன் சென்று வியப்புடன் நின்றாள். சமையல் மேடை கழுவிக் கோலமிடப்பட்டிருந்தது. சமையல் அனைத்தும் அதனதன் பாத்திரங்களில் ஒடுங்கி வாசனையால் அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தது. மூடியிருந்த தட்டுக்களை நீக்கி ஒவ்வொன்றாகப் பார்த்தபோது தட்டிலிருந்து உதிர்ந்தன நீர் முத்துக்கள் – சமைத்தவளின் வியர்வையைப்போல. ருசிகளைத் தேக்கியிருந்த சமையல் வாசனை பட்டவுடனே நாசி விரிந்து கொள்ள அடிநாக்கில் எச்சில் சிறுவலியாகச் சுரந்துகொண்டது. நன்கு சுருளப் பொரித்த வெண்டைக்காய்த் துண்டங்களை எடுத்து வாயில் போட்டுக்கொண்டு சுவையை நிதானித்து “ம்ம்ம்…’ என்று சொல்லிக் கொண்டே சமையலறையை விட்டு வெளியே வந்தாள்.

“”எப்பிடியிருக்காங்க அந்தம்மா? சமையல் வேலைக்கு வெச்சுக்கலாமா?” என்று கேட்ட மாலினியிடம் “”வெச்சுக்கலாம்மா, பாவம் வயசான அம்மா. நல்ல வாசமா சமைக்கறாங்க. நல்லவங்களாதான் தெரியறாங்க. சாமியறையில பூவெல்லாம் வச்சாங்க, தண்ணிப் பாத்திரம் இந்த மூலைல வைக்கக் கூடாதுன்னு மாத்தி வெச்சாங்க… அய்யாவோட தாத்தா பாட்டி படத்துக்கு பூ வைக்கச் சொன்னாங்க. அவங்களுக்கு உயரம் எட்டலை. ஷோகேஸ்ல உங்களோட போட்டோ கொழந்தை போட்டோல்லாம் பாத்தாங்க” என்று வீட்டைப் பெருக்கியபடியே ஒப்பித்தாள்.

இரவு சாப்பாட்டுக்கு தூக்கம் கலைந்த கண்களுடன் மோகனும் வரவே சாப்பிட ஆரம்பித்தனர். சாப்பாட்டு மேசைமேல் முறுவலாக வெண்டைக்காய் கறி, மிளகிட்டு சுரைக்காய் கூட்டு, முருங்கைகாய்ச் சாம்பார், கீறப்பட்டு மிதக்கும் பச்சை மிளகாய் ருசி நெடியுடன் தக்காளி ரசம் அணிவகுத்தன. சமையலைச் சிலாகித்தபடியே இருவரும் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது ஃபோன் அடித்தது. மாலினி கையை நக்கிக்கொண்டே சென்று, “”ஆ… நீங்களா? அந்த சமையல் லேடியை ஃபிக்ஸ் பண்ணிடுங்க” என்று ஆரம்பித்தவள் சற்று நிதானித்து “”அடடா, ஏன் வரமாட்டாளாம்? யாரந்த லேடி? வேணும்னா சம்பளம் சேத்து வாங்கிக்கட்டும், நான் வேணா அந்தம்மாகிட்ட பேசறேனே…” என்று பேரம் பேசிக்கொண்டிருந்தாள். அப்போது வேலைக்காரி வந்து மோகனுக்கு சர்க்கரைப் பொங்கல் பரிமாறினாள்.பாலில் வெந்து வெல்லத்தில் ஊறிய இனிப்பு நாக்கில் கரைந்தது. பிறகு அவசரமாக “”ஐயா….மறந்தே போயிட்டேன். பொங்கல் சாப்பிடும்போது கூட தொட்டுகிட்டா நல்லாயிருக்கும்னு சொல்லி இதோ எலுமிச்சை ஊறுகா போட்டுக்க சொன்னாங்க” என்று எண்ணெய் தாளித்த ஊறுகாய் ஜாடியை அவனருகே வைத்தாள். “சுரீல்’… அது ஒரு கண்ணிவெடி போல அந்த நொடியில் மிதிபட்டு வெடித்து அவன் பொறிகளில் எல்லாம் பட்டுச் சிதறின உள்முகமாகவே. வந்தது அம்மாவோ….

அவ்வார்த்தைகளும் அதனோடு அலை வீசிய குற்றஉணர்வும். துக்கமும், சிறுமையும், கையாலாகாத்தனமும் புகை மூள, மனதைப் பொசுக்கியது நிஜத்தின் சுடர். வார்த்தைகள் செவிக்கு முன் நெஞ்சில் பாய்ந்து கனத்து நெளிந்தேறி தொண்டையை அடைத்தது, கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. விருட்டென எழுந்தவன் பாத்ருமுக்குள் சென்று கதவை மூடிக்கொண்டு, முன்நெற்றியில் ஓங்கிக் குத்திக்கொண்டபடி குலுங்கி குலுங்கி அழுதான். விசும்பும் சத்தம்கூட வெளியே கேட்காதபடி.

– ஜூலை 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *