போச்சு போச்சு எல்லாம் போச்சு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 29, 2014
பார்வையிட்டோர்: 10,028 
 

சௌம்யாவிற்கு கோபம் கோபமாய் வந்தது. இன்னிக்கு வசந்த் ஆஃபீஸிலிருந்து வரட்டும். நறுக்குன்னு நாலு வார்த்தை கேட்டிரணும். எத்தனை நாள்தான் பொறுத்துக்கறது. ஸௌமியாவிற்கு முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. எல்லாம் மாலையில் மாமியாரிடம் பேசிய பிறகுதான். அவர்கள் பேசியது எல்லா நாளும் முன்னே பின்னே நடக்கிற அதே பேச்சுதான்.

வழக்கம்போல் இன்றும் மாமியாருக்கு ஃபோன் செய்தாள். வழக்கம் போல் விசாரணைகள்.

மாமியார் : குழந்தைகள் ஸ்கூல் சமர்த்தாய் போனார்களா?

ஸௌமியா: ஆமாம்மா போனார்கள் (மனதிர்க்குள் : பத்தாவது, எட்டாவது படிக்கும் பையன்கள் போகமாட்டார்களா??)

மா: என்ன சமைத்தாய்? என்ன லன்ச் வைத்தாய்?

ஸௌ : எல்லாம் அவர்களுக்கு பிடிச்சதுதான்மா வெச்சிருக்கேன். லெமன் சாதமும் உருளைக்கிழங்கு ஃப்ரையும்.

மா: ஐயோ வசந்த்துக்கு எண்ணை ஆகாதே!!

ஸௌ: தெரியாதாம்மா. அவருக்கு சப்பாத்தி சென்னா, தயிர் சாதம் ஸாலட் வைத்திருக்கிறேன். (ம: எனக்கும் அக்கரை உண்டே)

மா : சாயந்திரம் என்ன பண்ணியிருக்கே? நல்லா வயிறு நிறைய கொடு.

ஸௌ : முகுந்த்துக்கும் நிகிலுக்கும் பிடித்த பைனாப்பிள் கேசரி பண்ணியிருக்கேன். நைட்டுக்கு ஸேவை. (ம : குழந்தைகளுக்கு கொடுத்துவிட்டு, மிச்சத்தை எடுத்து வசந்த் கண்ணில் படாமல் வைக்க வேண்டும். கொஞ்சமும் கன்ட்றோலே கிடையாது)

மா : இன்ஸ்டன்ட் ஸேவை இல்லையே, வீட்டிலேயே பிழிந்ததுதானே? தொட்டுக்க மோர்க்குழம்புதானே?

ஸௌ: ஆமாம்மா. அதுதான் உங்கள் பிள்ளைக்கு பிடிக்கும்னு தெரியாதா? ( ம :அவர் அட்ஜஸ்ட் பண்ணிகொண்டாலும் உங்களிடம் சொல்லமுடியாதே)

அடுத்து ஸௌமியா பற்றிய கேள்விகள்

மா : காலையிலிருந்து நீ என்ன பண்ணினே. இவ்வளவு லேட்டா ஃபோன் பண்ணறியே? லக்ஷ்மி(நாத்தனார்) கரெக்டா பத்து மணிக்கு ஃபோன் பண்ணிடுவா.
ஸௌமியா, காலையிலிருந்து செய்ததையெல்லாம் ஒப்பிப்பாள். ரேஷன், இன்சூரன்ஸ், பேங்க் க்யூவில் நின்றது உள்பட. (ம: லக்ஷ்மி அக்காவின் ஒரே பெண்ணும் படிக்க அமெரிக்கா போயாச்சு. வெளி வேலையெல்லாம் காய்கறி வாங்குவதிலிருந்து மாமாவே பார்த்துக்கொண்டுவிடுவார்)

வசந்தை அஃபீஸ் போய்வறுவது தவிற வேறு வேலைகள் செய்ய விட மாட்டாள். எல்லா வேலைகளாய்யும் ஸௌமியாவே கவனித்துகொள்வாள். பிள்ளைகளின் படிப்பு உள்பட. ஸௌமியாவும் எம்.ஃபில். படித்தவள். வசந்த் ஸாஃப்ட்வேரில் வேலையாய் இருப்பதால் நேரம் காலமில்லாமல் வேலை. அதனால் ஸௌமியா பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டு விட்டு ஃபுல் டைம் ஹோம் மேகராக ஆகிவிட்டாள். ரொம்ப பொறுமையானவள்தான். வசந்த்தும் ஸௌமியாவின் குணமறிந்து அவளைத்தாங்குவான். அவனைப் பெற்றதினாலேயே அவள் மாமியார் மேல் ரொம்பவும் மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறாள். இருந்தாலும் சமையத்தில் வழக்கமான கேள்விகளுக்கு கிண்டர் கார்டன் குழந்தை மாதிரி பதில் சொல்ல அலுத்துவிடும். அதுவும் இன்று வெளி வேலை அதிகம். வெய்யிலும் அதிகம். வந்ததும் வராததுமாய் மாமியாருக்கு ஃபோன் செய்தாள். வழக்கமான கேள்வி பதில்கள்.

“பதினேழு வருடமாய் குடும்பம் நடத்துகிறேன். உங்களுக்கு, குழந்தைகளுக்கு என்ன பிடிக்கும் பிடிக்காதுன்னு இன்னும் தெரியாதா. பார்த்து பார்த்து செய்கிறேன். இருந்தாலும் எனக்காக ஒரு வார்த்தை இல்லை. இவ்வளவு அலுத்து சலித்து வந்தாலும் ஃபோன் பண்ணி பேசுகிறேனே என்று நினைக்க வேண்டாமா? நீ சாப்பிட்டாயா காஃபீ குடித்தாயா என்று ஒரு கேள்வி. நான் என்ன மனுஷியா மெஷினா? உங்கள் அம்மா என்னை என்ன நினைத்துக்கொண்டிருக்கிரார்? ” என்று கேட்டுவிடவேண்டும். வரட்டும் எனக்காத்திருந்தாள். சில நாட்கள் இப்படித்தான் தன்னிரக்கம் மேலோங்க பொரும ஆரம்பித்துவிடுவாள்.

வழக்கமாய் ஒன்பது மணிக்கு மேல் வரும் வசந்த் அன்று ஏழு மணிக்கே வந்துவிட்டான். முதல் ஆச்சரியம். லேசாக மனதில் எங்கோ குளிர் காற்று வீசியது. உள்ளே வரும்போதே முகுந்திடம் அம்மா எங்கேடா என்று கேட்டுக்கொண்டே வந்தான். ஸௌமியா அடுப்படியில் முதுகைக் காட்டிக்கொண்டு நின்றுகொண்டிருந்தாள். லன்ச் பாக்ஸை சிங்கில் போட்டுவிட்டு, ஹை ஸௌ (ஐயா நல்ல மூடில் இருக்கும்போது இப்படித்தான் கூப்பிடுவார்) இன்னிக்கு நீ வைத்திருந்த சென்னா மசாலா சூப்பர். சாலடில் என்ன போட்டியோ, 5 ஸ்டார் ஹோட்டெலில் சாப்பிடுவது போல் இருந்தது. என் கலீக் கஸ்தூரிகூட சொன்னாள், ‘நீங்க கொடுத்து வைத்தவர் வசந்த்’ என்று. “ஐ லவ் யூ டி ஸௌ” என்றுவிட்டு, “எனக்கு ஏழரையிலிருந்து ஒரு மணி நேரம் ஆஃபிஸ் கால் இருக்கிறது. இப்ப காஃபி மட்டும் கொடு அப்புறம் நிதானமா சாப்பிட்டுக்கறேன். ஸௌமியாவிற்கு, பேச நினைத்ததெல்லாம் மறந்து போனது. “போதும். வழியுது தொடைச்சிட்டு ட்ரெஸ்ஸை மாத்துங்க. காஃபீ தறேன்”. வசந்த் குழந்தைகளிடமும் கொஞ்சம் விளையாடிவிட்டு கால் அட்டெண்ட் செய்ய மாடிக்குப் போய்விட்டான்.போச்சு போச்சு கோபமெல்லாம் காற்று போன பலூன் மாதிரி மாயமாய் போச்சு.

அடுத்த நாள் காலையில் பம்பரமாய் சுழன்று எல்லோரையும் அனுப்பி விட்டு, பாவம் அம்மாவும், அந்த காலத்தில் இப்ப மாதிரி மிக்சி க்ரைண்டர் இல்லாமல் வெளி வேலை செய்துவிட்டு வரும் ஆண்களுக்கு வாய்க்கு ருசியாய் வக்கணையாய் சமைத்துப் போடுவதிலேயே காலத்தை கழித்தவர்கள். அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள். இப்படி அன்பாய் ஒரு பிள்ளையை எனக்கு கணவனாய் கொடுத்ததிர்க்கு என்ன செய்தாலும் தகும், அவர்களையும் யார் இதெல்லாம் கேட்பார்கள் என்று நினைத்துக்கொண்டே, பத்து மணிக்கு மாமியாரின் நம்பரை டையல் செய்து, ” அம்மா எப்படி இருக்கீங்க? இன்னிக்கு என்ன சமைத்தீர்கள்? அப்பா சாப்பிட்டாச்சா? நீங்க சாப்பிட்டாச்சா?…….” இப்படியேதான் பதினேழு வருடமும் போனது, மீதமும் இப்படித்தான் போகும் என்பது ஸௌமியாவுக்கும் தெரியும் உங்களுக்கும் தெரியும்.

– ஆகஸ்ட் 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *