பொய்மையும் வாய்மையிடத்து

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 8, 2021
பார்வையிட்டோர்: 3,721 
 

அலுவலகம் முடிந்து வீட்டை வந்தடைந்ததும் வீட்டின் வெளியே வைத்திருந்த பூவை எடுத்துக்கொண்டு உள்ளே நுழையும் போதே ஜெஸி.. .. ஜெஸி…..என்று கத்திக்கொண்டு சாப்பாட்டு பையயை தூக்கி எறிந்த சிவா பரபரப்பாக காணப்பட்டான்.

கே டி வியில் பதினஞ்சு முறை பார்த்து இத்துப்போன ஏதோ ஒரு பழைய படம் சத்தமாக ஓடிக்கொண்டிருந்தது… பார்க்க யாருமே இல்லாமல் ஓடிக்கொண்டிருந்த டிவியின் ரிமோட்டை தேடலானான், டிவி பார்க்கலேன்னா நிப்பாட்டி தொலைய வேண்டியதான தியேட்டரிலும் இந்த படம் இப்படி ஆளில்லாமல்தான் ஓடியிருக்கும் போல அதான் எத்தனை முறை பார்த்தாலும் உடனே பெயர் நியாபகத்துக்கு வருவதில்லை என்று முணு முணுத்துக்கொண்டே டி வி சத்தத்தை குறைத்து தன்ணுன்னுடைய சத்தத்தை உயர்த்தி மீண்டும்…. ஜெஸி…. ஜெஸி…… என்று கத்தினான்,

என்னடா சிவா சீக்கிரம் வந்துட்டே … என்று கேட்டுக்கொண்டே உள்ளே இருந்து வெளியே வந்த மனைவி தூக்கி எறியப்பட்டிருந்த சாப்பாட்டு பையை எடுக்க முற்பட்டாள் ….

சிவாவின் மனைவி ஜெஸி சிவா கூப்பிட்ட சத்தம் கேட்டு வெளியே வாந்தாள் என தவராகக்கூட புரிய வேண்டாம் தொலைக்காட்சியின் சத்தம் எப்படி காணாமல் போனது என்ற மாபெரும் சந்தேகத்தினால்தான் வெளியே வந்தாள் இதில் இருந்தே புரிந்து கொள்ளலாம் அவர்கள் எவ்வளவு அருமையான ஜாடிக்கேத்த மூடி என்று..

டிவி பார்க்கலேனா நிப்பாட்டி தொலைய வேண்டியதான மின்சார கட்டணமாவது மிச்சமாகும் இப்போ வர்ற பில்லை பார்த்துட்டு சினேகாவும் ப்ரசன்னாவும்மே முழிச்சிகிட்டு இருக்காங்க….. நம்ம எம்மாத்தரம்….

சில நேரம் ஆணோ அல்லது பெண்ணோ தனிமையில் இருக்கும் போது ஏதாவது ஓன்று டிவியில் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும் அப்பத்தான் அனைவரும் நம் அருகிலேயே இருக்கிரறார்கள் என்ற உணர்வோடு அந்த வீட்டுக்குள்ள இருக்க முடியும் என்ற தத்துவம் சிவாவுக்கு ஏனோ புரியவில்லை.

ஹாங்….. என்ன கேட்ட….. சீக்கிரம் வந்திட்டியாவா?…..போன் பன்னி சொல்லலையா உனக்கு….. ட்ரெய்ன்ல டிக்கெட் கிடைக்கல பஸ்ஸுல புக் பண்ணிட்டேன் பத்துமணிக்கு பஸ்சு….வார கடைசி நாள் போக்கு வரத்து ஜாஸ்தியா இருக்கும் எட்டு மணிக்கெல்லாம் கெளம்புனாதான் கோயம்பேடு போயி சேர சரியா இருக்கும்மின்னு….

சிவா அவசரமாக உடை மாற்றி குளிப்பதற்கு ஆயத்தமானான், ஒரு சின்ன அமைதி அங்கு நிலவியது…….புருஷன் கேட்டததற்கு பதில் ஏதும் சொல்ல முடியாமல் உதட்டை பிதுக்கி ஹோம் ஒர்க் ஏன் பண்ணலன்னு கேட்ட அப்பாவ பார்த்து பதில் சொல்ல முடியாம முழிக்கிற குழந்த மாதிரி நின்று கொண்டிருந்தாள் மனைவி ….

இன்னைக்கென்ன ஏழு மணிக்கெல்லாம் தூக்கம்?.. ப்ராக்டிஸ் ஜாஸ்தியா… இப்போதைக்கு டோர்னமெண்ட் ஏதுமில்லையே…. இல்ல உடம்பு சரியில்லையா ?…. கேட்டான் சிவா..

கிரவுண்டுக்கு போயிட்டு மூணு நாளைக்கு விளையாட முடியாதுன்னு சொல்லிட்டு வந்துட்டேன்… எல்லாம் வழக்கமான வயித்து வலிதான் அதான் கொஞ்ச நேரம் படுத்திருந்தேன் என்றாள் மனைவி…..

சரி துணியெல்லாம் பேக் பண்ண சொன்னனே பண்ணிட்டியா?…..இல்ல இனிமேதான் பண்ணனும் என்ற மனைவியை பார்த்து கோவமான சிவா… என்னைக்குதான் நான் சொல்லுறத கேட்டுருக்கே….. இன்னிக்கு செய்யுறதுக்கு.. என் புத்திய செருப்பால அடிக்கணும்… போ அந்த பேக்கையாவது எடுத்து குடு என்றதும்..

என்ன பொல்லாத துணிய பேக்கிங் பண்ணனும்?….ரெண்டு டிரஸ் வைக்கணும் இப்போ வச்சிட்டா போச்சி… போயி ஒரு நைட் தங்கிட்டு வர்றதுக்கா இந்த குதி குதிக்கிற?…. நீ போ குளிச்சிட்டு வா… நான் பேக்கிங் பண்ணி தொலைக்கிறேன்… என்று சலித்துக்கொண்ட மனைவி அடுத்த வேலைக்கு ஆயத்தமானாள்…. குளித்து உடை மாத்திவிட்டு…. இந்த வீட்டுல ஒரு பொருளை வச்சா வச்ச இடத்துல இருக்காது….. எல்லாம் தலையெழுத்து என்ற புருஷனை பார்த்து….

பர்ஸும் வாட்சும் தான தேடுற? …. இந்தா பிடி…. வீட்டுக்குள்ளே நுழையும் போதே எல்லாத்தையும் விசிறி அடிக்க வேண்டியது…. விசிரி அடிச்ச இடத்துல தேடாம… கண்ட இடத்துல தேட வேண்டியது, அப்புறம் குய்யோ முறையோனு கத்த வேண்டியது… இதே ரோதனையா போச்சி உன்னோட என்றாள் மனைவி.

பர்ஸையும் வாட்சையும் வாங்கிக்கொண்டு ஒன்றும் பேசாமல் போய் சாமி படத்துக்கு முன் நின்று வணங்கினான்… ஏசுநாதர், வேளாங்கண்ணி தாய் படங்கள் ஒரு புறம் இருக்க, மறுபுறம் முருகன் வள்ளி தெய்வானையோடு இருக்க பிள்ளையார் நடுவிலே அமர்ந்திருந்தார் சாலமன் பாப்பையா போல… பார பச்சம் பார்க்காம எல்லோருக்கும் பொதுவா ஒரு கும்பிடு போட்டுவிட்டு, ஜீசஸ் முன்பாக இருந்த புனித நீரை மோதிர விரலால் தொட்டு நெத்தியில் ஒரு சிலுவையை போட்டுக்கொண்டு அதே விரலால் விபூதியை எடுத்து பூசிக்கொண்டு திரும்பிய சிவா… சே…. சாயங்காலம் ஆச்சுன்னா சாமி படங்களுக்கு ஒரு பூவை போட்டு ஒரு மெழுகுவத்தியோ, விளக்கோ ஏத்தி வச்சா நல்லாருக்குமென்கிற அறிவெல்லாம் கொஞ்சம் கூட கிடையாது… என்று புலம்பிய புருஷனை பார்த்து….

அறிவு உனக்குதான்டா இல்ல….. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் சொன்னேன் வயிறு வலி…மூணுநாளைக்கு விளையாட முடியாதுன்னு….. துரைக்கு எல்லாத்தையும் விளக்கமா சொல்லணும்….பச்சபுள்ளன்னு நெனப்பு….. என்றால் மனைவி

மனைவி ஜெஸி சொல்லுவதை காதில் வாங்கி கொண்டதாக தெரியவில்லை சிவா…. ஊருக்கு எடுத்து செல்லும் பேகில் எல்லாம் சரியாக இருக்கா என பார்த்துவிட்டு வேண்டா வெறுப்பாய் ஒரு கட்டிப்பிடி வைத்தியம் செய்தான் அவளு எதுவுமே நடக்காத மாதிரி கணவனின் நெஞ்சிலே சாய்ந்து கொண்டாள் ….. வெக்கம் கெட்ட செம்மங்க கட்டி பிடிச்சதும்…. எலியும் பூனையுமாய் இருந்ததுக இப்போ புருசனும் பொண்டாட்டியுமாய் மாறிடுதுங்க….

சரி கிளம்புறேன் நீ மாத்திரை போட்டுக்கோ சும்மா சும்மா போடாதே வலி ஜாஸ்தி இருந்தா மட்டும் போடு என்றான் சிவா…

ஓகே…..நீ… நாஞ்சொன்னத மறந்திடாத … இந்த முற கண்டிப்பா வேலைய முடிச்சிட்டுதான் வரணும், போன்ல எவ்வளோவோ பேசியும் முடிக்க முடியல, இத முடிச்சாதான் நம்ம வழிய பார்க்க முடியும்
அப்புறம் அவங்கள பாத்தேன் ஆட்டுக்குட்டியை பாத்தேன்னு காச விரயம் பண்ணிக்கிட்டு வராத…. நமக்கு என்ன வேலையா போறமோ அதுமேலதான் குறியா இருக்கணும்… இது முடியலேனா நமக்குள்ள பிரச்சனை முத்தத்தான் செய்யும் நான் உன் கூட நிரந்தரமா இருக்கனுன்னா நான் சொல்லுறத கேளு என்று பயமுறுத்தினாள் மனைவி.

புருஷனுக்கும் பூம் பூம் மாட்டுக்கும் என்ன வித்தியாசமின்னு கேட்டா…… பூம் பூம் மாடு தலைய மட்டும் ஆட்டுமாம்….. புருசன் தலையோட சேத்து மாவும் ஆட்டுவானாம்… இங்கே சிவாவுக்கு தலைய ஆட்ட மட்டும் உத்தரவு தரப்பட்டது…. சரின்னுட்டு புறப்பட்டான்…

சிவா…. சாப்பாடு வேண்டாமா… ?..
வேண்டாம்…. எப்படியும் அவுட்டர்ல போயி ஒரு கடையில போடத்தான் போறான்…. அங்க பாத்துக்கிறேன் என்று திரும்பி பார்க்காமல் நடையை கட்டினான்…..

பஸ்ஸில் ஏறி அமர்ந்ததும் மனைவிக்கு தகவல் சொல்ல வேண்டும் என தோணவில்லை….. அண்ணனுக்கு போன் போட்டு புறப்பட்டு விட்டதாகவும் அப்பாவிடம் சொல்லவும் சொன்னான்.

ஒரு சாதாரணமான நடுத்தர விவசாய குடும்பத்தில் பிறந்த சிவாவின் சொந்த ஊர் மதுரை அப்பாவும் ஒரு அண்ணன், அண்ணி மற்றும் இரு குழந்தைகள் இருக்கின்றனர் சிவாவின் அம்மா அவனது சிறு வயதிலேயே இறந்துவிட்டார்.

சிவாவிற்கு … ICF ரயில் பெட்டி இணைப்பு தொழில்சாலை சென்னையில் கூடை பந்து விளையாட்டின் மூலமாக ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் பணியில் அமர்ந்தான், பத்தாம் வகுப்பில் தோல்வியுற்றதும் அப்பா எவ்வளோவோ வற்புறுத்தியும் தொடர்ந்து படிக்க விருப்பமில்லாமல் வேலைக்கு ஏதாவது போகிறேன் என்றவனை… ஒரு ஜோசியக்காரரிடம் கூட்டிப்போக அவர் சிவாவின் ஜாதகத்தை பார்த்து….கலைவாணி இந்த பையனின் ஜாதகத்தில் குடியிருக்கிறாள்… ஆஹா…. ஓஹோ….என்று சொல்ல…. ஒரு வழியாக படிப்பை தொடர்ந்தான்…. பத்தாவது தேறியதும் ஏற்கனவே நன்கு கூடை பந்து ஆடக்கூடிய சிவா படிப்புடன் விளையாட்டு துறையில் முன்னேற வேண்டும் என்பதற்காக பிளஸ் டூ மற்றும் டிகிரி சேர்த்து ஐந்தாண்டுகள் சென்னையில் படித்தான்… படிக்கும் போதே தமிழ்நாடு மாநில அணி மற்றும் மெட்ராஸ் யூனிவர்சிட்டி அணிகளில் ஆடியதால் படிப்பு முடிந்ததும், வேலையும் கிடைத்தது.

ஜெஸி சென்னையில் மூன்று சகோதரிகளுடன் பிறந்து வளர்ந்த பெண், எத்திராஜ் கல்லூரி BA வரலாறு, கூடை பந்து வீராங்கனை, தமிழ்நாடு கூடை பந்து மகளீர் அணி கேப்டனா இருந்தவள், அப்பா சின்ன வயசுலேயே தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு வந்து மளிகை கடை வச்சி இன்னைக்கு ஓரளவுக்கு முன்னேறி இருக்காரு முன்னேற்றம் என்றால் ஒரு ஐந்து வேலை ஆட்கள் அவர் கடையில் இருக்கிறார்கள் அவ்வளவுதான்.

சிவாவுக்கும் ஜெஸிக்கும் நாளு வயசு வித்தியாசம் ஆல் இந்தியா ரயில்வேஸ் அணி சீனியர் நேஷனல் பிரிப்பரேஷன் கேம்ப் ஆண், பெண் இரு அணிகளுக்கும் ஒன்றாகவே நடந்த போது சிவா ICF ரயில் இணைப்பு பெட்டி தொழில்சாலை அணியிலிருந்து தேர்வாகி, ரயில்வேஸ் அணிக்கு கேப்டனாக இருந்தான்.

ஜெஸிக்கு தெற்கு ரயில்வேஸ் ஸ்போர்ட்ஸ் கோட்டா வேலை, அந்த கேம்பிலதான் ரெண்டுபேருக்கும் முதல் சந்திப்பு, ஜெஸி சிவாவோட விளையாட்ட ரசித்தாள், சிவா அவளையே ரசித்தான், சிவா த்ரீ பாயிண்ட் போட்ட மாதிரி டக்கென்று தன்னோட காதலை சொல்லிவிட்டான்.

ஜெஸிக்கும் சந்தோசமாக இருந்தது, அப்போதுதான் அவளும் தன்னை அறியாமலே விரும்பியிருக்கிறாள் என்பது தெரிய வந்தது. சிவா இந்து, ஜெஸி கிறிஸ்துவம், ரெண்டு வீட்டிலேயும் பிரச்சனை, கடைசியில் மூன்று வருடங்களுக்கு முன் நண்பர்கள் துணையுடன் பதிவு திருமணம், ரெண்டு பேரும் வீட்டை பற்றி கவலை படவில்லை, ரெண்டு பேருமே வேளையில் இருக்கும் தைரியம், சிவா ஜெஸி வீட்டிற்கும், ஜெஸி சிவா வீட்டிற்கும் போவதில்லை ஆனால் இருவரும் அவரவர் வீட்டுக்கு செல்வதுண்டு, ஜெஸியோட அப்பா மட்டும் மகளோட இன்னும் பேசவில்லை.

சிவா வீட்டில் அப்படி அல்ல அனைவரும் பேசுவார்கள், மருமகளை அழைத்து வரவும் சொன்னார்கள் திருமணத்திற்கு யாருமே சம்மதிக்கவில்லை என்பதால் ஜெஸி சிவாவுடன் ஊருக்கு செல்வதில்லை. இவ்வாறாக மூன்று ஆண்டுகள் ஓடிவிட்டன, சிவாவிற்கு சீக்கிரம் தந்தை ஆக வேண்டும் என ஆசை ஆனால் ஜெஸியோ முதலில் வீடு வாங்க வேண்டும் அதன் பிறகுதான் குழந்தை குட்டியெல்லாம் என்று முடிவாக இருக்கிறாள்.

தற்போது ஒரு வீடு விலைக்கு வந்திருக்கிறது அதை எப்படியாவது வங்கியில் கடன் வாங்கியாவது வாங்கிவிட வேண்டும் என துடியா துடிக்கிறாள், ஆனாலும் முன் பணம் செலுத்த பத்து லட்சம் இல்லாததால் சிவாவை சொந்த ஊரில் அப்பாவின் பெயரில் இருக்கும் கொஞ்ச விவசாய நிலம் ஒரு வீடு இதில் ஏதாவது ஒன்றை வித்து காசாக்கி வரவேண்டும் என கடந்த ஆறு மாதமாக ஒரே சண்டை.

புது வீடு வாங்கும் பேச்சு வரும் வரை இருவரும் சந்தோஷமாகத்தான் இருந்தார்கள், அப்பாவிடம் சொத்து கேக்கும் எண்ணம் சிவாவிடம் இல்லை என்றாலும் சில தலையணை மந்திரம் மனதை மாற்றி விடுகின்றது, இது பற்றி பல முறை அப்பா மற்றும் அண்ணனிடமும் ஜாடை மாடையாக பேசியாகிவிட்டது, அவர்களும் ஏதோ சாக்கு போக்கு கூறிவந்தனர், நேரடியாக சென்றால்தான் வேலை நடக்கும் என்று புண்ணியவதி ஜெஸியின் யோசனைப்படி சிவா ஊருக்கு புறப்பட்டான்..

கடந்த ஆறு மாதத்தில் பல பிரச்சனைகள், பல சண்டைகள் ஒவ்வொரு முறையும் எனக்கும் அரசாங்க வீடு கிடைக்கும் நான் போகிறேன் விவாகரத்து பண்ணிக்கிடலாம் என பொட்டியை தூக்கிகிட்டு புறப்படும் போதெல்லாம் காலில் விலாத குறையாக சமாதானம் செய்தாகிவிட்டது….

தற்போது வேறு வழி இல்லாமல் ஊருக்கு செல்ல வேண்டிய நிலை மனதில் பல எண்ணங்கள் ஓட தூங்கிப்போன சிவா மதுரை…. மதுரை…. மதுரையெல்லாம் இறங்கு என்ற சத்தம் கேட்டு.. முகத்தை தொடைத்துக்கொண்டு உடமைகளை எடுத்துக்கொண்டு இறங்கி ஒரு டவுன் பஸ் பிடித்து மதுரைக்கும் திருமங்கலத்திற்கும் இடையில் இருக்கும் தன் வீட்டுக்கு வந்தடைந்தான்.

அப்பா வீட்டு முன்பாகவே மரத்தடியில் கயிற்று கட்டிலில் அமர்ந்திருந்தார் அவர்களுக்கிருந்த ஒரு ஏக்கர் நிலத்தில் ஒரு பக்கம் கத்தரிக்காயும் ஒரு பக்கம் தக்காளியும் விதைக்கப்பட்டிருந்தது வீடும் விவசாய நிலத்துக்குள் அடங்கியே இருந்தது, அப்பாவை பார்த்து காலை தொட்டு கும்பிட்டவனை நல்லாயிருப்பா என்று மனமாற வாழ்த்தினார் அந்த அப்பா என்ற அறுபதுகளை கடந்த முதியவர், மகன் என்ன வவிசயமாக வந்திருக்கிறான் என்ற விவரம் தெரியாத அப்பாவி மனிதர்.

அதற்குள் அண்ணியும் குழந்தைகளும் வெளியே வந்தனர், அண்ணியிடம் நலம் விசாரிக்கும் போதே தோட்டத்தில் தண்ணி பாய்ச்சி கொண்டிருந்த அண்ணனும் வந்துவிட்டான், அப்பாவிற்கு ஒரு கண் அறுவை சிகிச்சை செய்து கருப்பு கண்ணாடி அணிந்திருந்தார் விவரம் அறிந்து எனக்கு ஏன் சொல்லவில்லை என கேட்டதும்… நீ பாவம் அங்க வேலையில இருக்க அந்த பொண்ண தனியா விட்டுட்டு வரனும் இங்கதான் பிள்ளைங்க இருக்காங்கல்ல எதும் அவசரம் இல்ல அதான் சொல்லவில்லை என்றார் அப்பா.. சரி குளிச்சிட்டு சாப்பிட வாங்க என்றாள் அண்ணி வாங்கி வந்த பண்டங்களை அண்ணியிடம் கொடுத்துவிட்டு குழந்தைகளை கொஞ்சிவிட்டு ஒரு வழியாக குளித்து, சாப்பிட்டு முடித்த பின் மரத்தடியில் அப்பாவிடம் வந்து அமர்ந்தான்

சாப்பிட்டியாடா சிவா…
சாப்பிட்டேம்பா… கூறிவிட்டு… நாம் வளர்ந்த இந்த இடத்துல எவ்வளுவு சந்தோசமான வாழ்க்கை வாழ்ந்திருக்கிறோம் இப்பவும் இந்த இடம் பார்க்கவே அருமையாக இருக்கிறதே, இந்த இடத்தையா விக்க சொல்லப்போறோம் இது எப்படி துவங்குவது என்று எண்ணிக்கொண்டிருக்கும் போதே…

மருமகளையும் கூட்டிட்டு வந்திருக்கலாமில்ல.. சிவா என்றார் அப்பா…. இல்லப்பா இப்போ கொஞ்சம் வேலை ஜாஸ்தி அவளுக்கு அடுத்த முறை கண்டிப்பா கூட்டிகிட்டு வருகிறேன்…

அப்படியாப்பா… புரியுதுப்பா… புரியுதுப்பா…. மருமகளுக்கு இன்னும் கோவம் தீரல போல…… நான் என்ன கல்யாணம் வேண்டான்னா சொன்னேப்பா … அவுக ஏதோ வேற சாமி கும்புடுறவக, நீயும் அதத்தான் கும்புடனுமின்னாக, நானு சாமில என்னருக்கு பிள்ளைக ஆசை பட்டுடாக முடிச்சி வெச்சிருவோமுன்னுதான் சொன்னே அப்புறம் அந்த பேச்சு அப்படியே நின்னு போச்சி நீங்களும் வேலை பாக்கிற தைரியத்தில கல்யாணத்த முடிச்சிக்கிட்டேக நான் ஒரு கோட்டிக்காரப்பய அப்பவே சரின்னுருக்கணும், சரி நல்லா இருக்கீகள்ல அது போதும் என கலங்கிய கண்களை கருப்பு கண்ணாடியை விலக்கிவிட்டு லேசாக துடைத்துக்கொண்டார்..

அதற்குள் அண்ணன் அங்கே வந்தான்….
அப்புறம் சிவா வேலையெல்லாம் நல்லா போகுதா… ஏதோ முக்கியமான விஷயமா பேசணுமின்னு போன்ல சொன்னியே சொல்லு என்றான் அண்ணன்…

அது… அது… அது வந்து அப்பாவும் நீயும்தான் எனக்கு கொஞ்சம் உதவி செய்யனும்.. என்ன சொல்லு… அப்பா கேட்டார்… இல்லப்பா ஒருவீடு ஒன்னு விலைக்கு வந்திருக்கு ஒரு பத்து ரூபா குறையுது… விளையாட்டிலேயே இருந்ததால ஊர் ஊரா சுத்தி கையிருப்புன்னு எதுவும் இல்ல அதான் இருக்குற நிலத்துல பாதி வித்து பணமா குடுத்தேங்கன்னா கொஞ்சும் அந்த வீட்டை கிரயம் பண்ணீரலாம்…. எப்போவோ பண்ணபோறதை இப்போவே பண்ணிட்டா கொஞ்சம் செட்டிலாக சிரம படமாட்டேன்…..என்றான் சிவா..
அருகில் இருந்த அண்ணன் வெறித்து எதையோ பார்த்துக்கொண்டு அமைதியாக இருந்தான்….

எல்லாம் கேட்டுவிட்டு இழுத்து ஒரு பெருமூச்சை விட்டார்…. சிறு அமைதிக்கு பிறகு பேச ஆரம்பித்தார் அப்பா… நீ சொல்லுறதெல்லாம் சரிதாம்பா… ஆனா என்ன பத்தியும் உன் அண்ணன பத்தியும் கொஞ்சம் யோசன பண்ணிப்பாரு.. சரி எங்க ரெண்டுபேரையும் விடு… அந்தா அங்க விளையாடுதுக பாரு வெவரம் தெரியாத சின்ன பிள்ளைக அதுகள பத்தியாவது கொஞ்சம் நெனச்சி பாரு… உனக்கு என்ன குறை உன் பொஞ்சாதியும் வேலைக்கு போறா.

எங்களோட வாழ்வாதாரமே இதுலதான் அடங்கிக்கிடக்கு இருக்குற கொஞ்ச நிலத்துல எட்டுவழிச்சாலைனு சொல்லி கொஞ்சம் புடிங்கிக்கிட்டான்… விவசாயத்துக்கு மரியாதை இல்லாம போச்சி… நீ பொடிப்பயலா இருக்கும்போதே உன்காத்தலுக்கு என்ன அவசரமோ மகராசி போய் சேந்துட்டா…. உனக்கு மூணு வயசு உன் அண்ணனுக்கு பதினோரு வயசு…

ஊரே சேந்து வந்து சொல்லுச்சு ஏலே காளியப்பா இன்னொரு தாரத்தை கட்டிக்கோ உணக்குக்கென்ன வயசா போயிடிச்சின்னாக …. கோடி ரூபா கொடுத்தாலும் இன்னொருத்தி வேண்டாம்ன்னு, வர்றவ என் புள்ளைகள என்ன பாடு படுத்துவாளோனு வைராக்கியமா இருந்து புட்டேன்… நீ சின்ன பயலா இருக்கியேன்னு நான் பாத்துக்கிடுதேன்ப்பான்னு பள்ளிக்கூடத்துக்கு போறதையும் நிறுத்துதுப்புட்டான் உங்க அண்ணன் …

நீ வெளியூர்ல போயி படிக்கணுமுன்னதும் அஞ்சு வருசத்துக்கு படிக்க இந்த நிலத்தை அடமானம் வச்சுதான் படிக்க வச்சிருக்கு, நீயும் வேலைக்கு போயி சல்லி காசு குடுக்கல .. இந்தா உங்கண்ணங்காரந்தான் வேகாத வெயில்ல விவசாயம் பாத்து கொஞ்சம் கொஞ்சமா அந்த கடனெல்லாம் அடச்சிக்கிட்ருக்கான்….

நான் கூட தம்பிகிட்ட கொஞ்சம் பணம் கிணம் கேளேண்டான்னு சொன்னப்போ வேண்டாம்பா சின்னப்பய சந்தோசமா இருக்கட்டும் அப்படின்னுட்டான்… உங்காத்தாக்காரி மட்டும் அல்ப ஆயிசுல போகலேன்னா உங்கண்ணனையும் உன்னமாரி பெரிய படிப்பெல்லாம் படிக்க வச்சிருப்பேன்.

ஆத்தா இல்லாம வளர்ற பிள்ளையாச்சேன்னு எல்லா கஷ்டத்தையும் நாங்களே வச்சிகிட்டோம்…. சரி இன்னைக்காவது இங்க உள்ள நிலவரம் உனக்கு தெரியட்டுமே அப்படிகிறதுக்குத்தான் சொல்லுறேன்…. சரி அதை விடு உங்க அண்ணிக்காரி ஒன்னும் நம்ம சொந்தம் கிடையாது…. சொத்தை பிரிச்சி கொடுத்துட்டமின்னா நான் இங்க ஆறு மாசம் அங்க ஆறுமாசம் அப்டிங்கிறதெல்லாம் நடக்காது…. என் சின்ன மருமகளை நான் பாத்ததுகூட இல்ல… அவகிட்ட போயி எப்படி பச்சைத்தண்ணி கேக்கிறது… நான் சாகுற வரைக்கும் வீடும் நிலமும் என் பேருல இருந்தாதான் எனக்கு ஒரு வா காப்பித்தண்ணி கெடைக்கும்…

எல்லாம் கேட்ட சிவா….சற்று கோவமாகவே… என்னப்பா கதை விடுறீங்க… விவசாயமில்ல… நிலம் அடமானத்தில் இருக்கு… வட்டி கட்டுறோம் என்றெல்லாம்.. இந்தா கண்ணு முன்னால விளைஞ்சி நிக்கிதுதே எங்க போகுது… உங்களுக்கு பிடிக்காத பொண்ண கட்டிக்கிட்டேன்னு ஒதுக்கிவிட பாக்குறீங்களா… அதெல்லாம் நடக்காது… எனக்குன்னு என்னத்த கொடுத்தேங்க இந்த நிலத்தில இருந்து….. நீங்க சொல்லுற பொய்யெல்லாம் நம்ப மாட்டேன்… எனக்கு சொத்தை பிரித்து கொடுங்கள் என்றான் காட்டமாக…

இதுவரை பொறுமையாக இருந்த அண்ணன் பேச ஆரம்பித்தான்…. என்ன தம்பி பேசுற அப்பா உனக்கு ஒன்னும் செய்யலையா… இன்னிக்கும் படிச்சு ஒரு வேலையில இருக்கேன்னா அதுக்கு அப்பாதான காரணம்…. நீ பத்தாவது பெயில் ஆனதும் படிக்க மாட்டேன்னு சொல்லும்போது உன்ன அப்படியே விட்டிருக்கணும் இன்னைக்கு எங்கூட நின்னு வேகாத வெயில்ல கஷ்ட பட்டுக்கிட்டு இருந்திருப்பே, ஆனா அப்பா மூத்த பயதான் படிக்களை சின்ன பயலாவது படிக்கட்டுமேன்னு புத்தி சொல்லி படிக்க வச்சாரு… இன்னைக்கு அவரு சொல்லுறது எல்லாம் உனக்கு பொய்யாக படுத்து…

இதை கேட்ட சிவாவோ…. ஹ்ம்… இப்பதானே புரியுது நீயும் ஒரு கூட்டுன்னு… தம்பி வெளியூர்ல இருக்கான் தனியா சொத்தை அமுக்கிடலாமுன்னு நெனைக்கே… அப்பா என்ன புத்தி சொன்னாரு…. என் ஜாதகம் நல்லா இருந்தது ஜோசியரு சொன்னாரு இவனுக்கு நல்லா படிப்பு வரும் இந்த பையன் பெரிய ஆளா வருவான் அப்படின்னு, நானும் நல்லா படிச்சேன், இன்னைக்கு நல்ல வேலையில இருக்கேன் என்றான்

உன்ன மாதிரி ஆளுங்களுக்கெல்லாம் அப்பாங்க சொல்லுற உண்மையை விட ஜோசியரு மாதிரி மூணாவது மனுசன்
சொல்லுற பொய்த்தாண்டா புடிக்கும்…அப்பா பொய் சொல்லுறாரு, பொய் சொல்லுறாருனு சொல்லுறியே… அப்பா இப்ப வரை சொன்ன எல்லா உண்மைகளும் அவரு சொன்ன ஒரே ஒரு பொய்ய காப்பாத்தணும் அப்டிங்கிறதுக்குதான்டா… அந்த பொய்ய மெய்யாக்குறதுக்குத்தான் வீடு நிலம் எல்லாத்தையும் அடகு வச்சி உன்ன படிக்க வச்சாரு… நீ நம்பிக்கிட்டு இருக்கியே ஜோசியரு அந்த ஜோசியரை நீ நல்லா படிப்பே உன் நாக்குல சரஸ்வதி குடியிருக்கா அப்படின்னு பொய் சொல்ல சொன்னதே அப்பாதாண்ட வெங்காயம்…

சிவாவுக்கு தூக்கி வாரிப்போட்டது

சிவா புரியாதவனாக விழித்தான்….

அண்ணன் தொடர்ந்தான், உன்ன ஜோசியர்கிட்ட கூட்டிக்கிட்டு போறதுக்கு முதல் நாளே நானும் அப்பாவும் உன் ஜாதகத்தை எடுத்துக்கிட்டு அந்த ஜோசியருகிட்ட காட்டினோம்… உன் ஜாதகத்தை பார்த்த ஜோசியர் இந்த பையனுக்கு படிப்பே வராது ஏதாவது தொழில் பண்ண வைங்க, அவன் பொழப்பு ஓடிரும் அப்படின்னாரு… இத கேட்ட அப்பா, சாமி அவன் ஜாதகத்தில எப்பிடி வேண்டுமானாலும் இருந்துட்டு போகட்டும்… நாளைக்கு என் மகனை உங்ககிட்ட கூட்டிக்கிட்டு வருவேன்… நீ நல்லா படிப்பேப்பா அப்படின்னு ஒரு வார்த்தை மட்டும் சொல்லுங்க இந்த உபகாரம் மட்டும் எனக்கு நீங்க பண்ணிட்டேங்கன்னா….உங்கள வாழ்நாள் முழுதும் மறக்க மாட்டேன் அப்படினு சொன்னாரு.

அதுக்கு ஜோசியரு…. என்னய ஒரு நல்ல காரியம் பண்ண சொல்லுறீங்க… மறுப்பேனா…. கவலை படமா போங்க நாளைக்கு பையனோட வாங்க பேஷா பண்ணிடலாம் அப்படின்னாரு.

ஆக அது வரைக்கும் தான் உண்மை அதுக்கப்பறம் என்ன நடந்துச்சு அப்படிங்கிறது உனக்கே தெரியும்… என்று சொல்லு விட்டு அப்பாவை பார்த்தான் அவர் கருப்பு கண்ணாடியை கழட்டிவிட்டு கண்களை துடைத்து க்கொண்டிருந்தார்…

இதையெல்லாம் கேட்ட சிவாவின் கண்களில் கண்ணீர் வரத்துவங்கியது…….மெல்ல அழத்தொடங்கிய…… சிவா…. தன்னையும் அறியாமல் சாஷ்டாங்கமாக அப்பாவின் காலில் விழுந்து அப்பா என்னை மன்னித்து விடுங்கள் என்று கதறினான்.. அருகில் இருந்த அண்ணனும் கண் கலங்க துவங்கினான் அங்கே ஒரு பாசப்போராட்டமே நடந்து கொண்டிருந்தது…. தூரத்தில் இருந்து அண்ணியும் குழந்தைகளும் பார்த்து க்கொண்டிருந்தனர் அனைவரும் நிம்மதி அடைந்தனர்.

சிவா இனி இதுபற்றி பேசப்போவதில்லை என முடிவு செய்தான்…. மனைவியின் அழைப்பு வந்ததும்… மணி அடித்ததும் நல்ல சகுனம் என தோன்றியது…

போனை எடுத்து பேச துவங்கினான்…. ஹாங்… எல்லாம் நல்ல படியாக முடிஞ்சது நாளை காலையில வந்துடுவேன் என்று அழைப்ப துண்டித்தான்…

சாயங்காலம் ஆனதும் ஊருக்கு புறப்பட்ட சிவாவிற்கு மனைவி சொன்னது நினைவிற்கு வந்தது…. அவங்கள பாத்தேன்…. ஆட்டு குட்டிய பார்த்தேன்னு காச விரயம் பண்ணிட்டு வந்துறாதடா…… டா…. ஊருக்கு போனதும் முதல்ல… இந்த டாவை மாத்தணும்…. மறுபடியும் விவசாய நிலத்தை விப்பது பற்றி பேசினாள் அவளையும் மாத்தணும்…

பர்சில் இருந்து பத்தாயிரம் எடுத்தான் வாங்க மறுத்த அப்பாவின் கைகளில் திணித்தான்…எவன் சொன்னது சொந்த பந்தங்களுக்கு செலவு செய்வதை விரயம் என்று எண்ணிக்கொண்டு, பணத்தை கொடுக்கும்போது மனைவியை நாளு சாத்து சாத்துவது போல நினைத்தும் கொண்டான். விடை பெற்று புறப்பட்டான்… கிடைத்த பஸ்ஸில் ஏறி அமர்ந்து நிம்மதி பெருமூச்சு விட்டான்

அங்கே மனைவி நல்ல செய்திக்காக காத்திருப்பாள்… காத்திருக்கட்டும்… கவலைப்படாதே கண்னே நல்ல செய்தியோடுதான் அத்தான் வருகிறேன் என்று எண்ணிக்கொண்டான்… மறந்து போனான்.

அப்பாவின் முயற்சிகள் நினைவுக்கு வந்து தாக்கிய, அவர் பட்ட கஷ்டங்களை புரிந்து கொண்டோம் என்ற சந்தோசம் எட்டி பார்த்தது… அப்பா எவ்வளவு நல்ல முடிவை எடுத்திருக்கிறார்கள் என்னுடைய படிப்பிற்காக சும்மாவா சொன்னான் வள்ளுவன்…..

“பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்த்த
நன்மை பயக்கும் எனின்”….

அப்பா படிக்காத மேதைதான்…படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு, பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு…

எண்ணிக்கொண்டே தூங்கி போனான், காலையில் சென்னை…. ஆட்டோ பிடித்து வீடு வந்தடைந்தான்…. மனைவி மகிழ்ச்சியுடன் வரவேற்றாள்… என்னாடா ஆச்சி என்றாள்…. முதல்ல இந்த டாவை நிறுத்து என்றான்… ஒன்னும் ஆகல…கண்களை விற்று ஓவியம் வாங்க எனக்கு இஷ்ட்டமில்லை… உனக்கு என் கூட இருக்கணும்னா இருக்கலாம்…. இல்லேன்னா…. உன்னோட பேக்கிங் நானே பண்ணிகுடுக்கிறேன் என்று சொல்லிவிட்டு பதிலுக்கு எதிர்பாராமல் அலுவலகம் புறப்பட்டான்…மகிழ்ச்சியுடன்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *