பொம்மைகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 3, 2013
பார்வையிட்டோர்: 11,677 
 

அந்தக் கூடத்தில் யாரும் எதிர்பார்க்கவில்லைத்தான். சுமதிகுமாரின் சேட் கொலறை கொத்தாய்ப் பிடித்தவளாய் பளார், பளார் என கன்னங்களில் அடித்து விட்டு சீ நீ எல்லாம் ஒரு ஆம்பிளை போதாக்குறைக்கு என்ரை தம்பி வேறை. என கத்தியவளாய் வெறுப்பாய் அவனை பின்பக்கமாய் தள்ளி விட்டு சேட்கொலறில் இருந்து கையை விடுவித்துக் கொண்டாள்.

கூடம் சலனமற்று இருந்தது. குண்டூசி விழும் சத்தம் கேட்குமளவுக்கு, சுமதியின் பிள்ளைகள் இருவரும் தாயின் இந்த திடீர் தாக்குதலால் பயந்தவர்களாய் செற்றி மூலைக்குள் ஒருவரை ஒருவர் அணைத்தவாறு மிரளும் விழிகளுடன் ஒழிந்து கொண்டார்கள். அவர்கள் இவ்வளவு நாளும் பார்த்து வந்த அம்மா திடீர் என இப்படி உருமாறி இருப்பது கூடுதலான பயத்தை வரவழைத்தது ஏதோ உண்மைதான். சுமதி எப்போதுமே அன்பானவள். நேர்மை நியாயம் பார்பவள். சீலன் பெண்பார்க்க போனபோது அவனுக்கு உடனேயே சுமதியை பிடித்து விட்டது. அதற்கு காரணம் அவளின் மென்மையான பார்வையும், அதிர்ந்து கதையாமல் வெளிவந்த வார்த்தைகளும்தான். சீலனுக்குக் கூட சுமதியின் இந்த திடீர் தாக்குதல் சற்று அதிர்ச்சியாகத்தான் இருந்தது. அவனும் தன் கன்னத்தை கைகளால் தடவிப்பார்க்க தவறவில்லை.

சுமதிதான் மௌனம் கலைத்தாள். குமார் நீ உன்ரை மனசிலை என்ன நினைச்சுக்கொண்டிருக்கிறாய்.? பொம்பிளையள் எண்டா என்ன அவ்வளவு இளக்காரமாய் போட்டினமே உன்ரை மனசிலை நானும் பொம்பிளைதான், உன்னைப் பெத்த அம்மாவும் பொம்பிளைதான். பொம்பிளையள் எண்டா சமைச்சுப்போடவும் படுக்கை விரிக்கவும், பிள்ளைப்பெறவும்தான் இந்த பாளாய்ப் போன கடவுள் படைச்சான் எண்டே நினைச்சாய்.? நாங்களும் உங்களைப்போல உயிர் உள்ள மனிச ஜென்மம் தாண்டா.

சாரு என்ன பாவம் செய்தாள் உன்னை கட்ட? வெடிங்டேயும் அதுகுமாய், நாங்கள் வந்து நிக்கிறம் எண்டுமில்லை, வெளியிலை உன்ரை சினேகிதங்களோடை ஊர்சுத்திப்போட்டு வந்து அவருக்கு சாப்பாடு வாய்க்கு இதம் பதமாய் இல்லையாம். அதுக்கு சாப்பாட்டுக்கோப்பையை தட்டிவிட உனக்கு எப்பிடி மனசு வருகுது? சரி தட்டித்தான் விட்டாய் . பிறகேன் சாருவிலை கைவச்சனி. அக்கா அதென்ன புருசனுக்கு எதிர்த்து வாய் காட்டுறது? அதுதான் அடிச்சனான். என்ன உள்ளதைச் சொன்னா வாய் காட்டுறதெண்டு நீயாய் ஒரு கற்பிதம் வைச்சிருக்கிறியோ? இப்பிடி எத்தினை பேர் வெளிக்கிட்டிருக்கிறியள்? சரி சாரு கேட்டதிலை அப்பிடி என்ன தப்பு? நாங்களும் இந்தச் சாப்பாட்டைத்தானே சாப்பிட்டனாங்கள். அது உமக்கு வாய்காட்டினதாய் தெரிஞ்சதோ?

சாரு உன்னை நம்பி வந்த பிள்ளை. தாய் தேப்பனோ, சகோதரமோ இஞ்சை இல்லை. கேக்கிறதுக்கு ஆக்கள் இல்லை எண்டு நினைச்சியோ? சாப்பாடு உமக்கு ரேஸ்ற் இல்லையோ? நீயே சமைச்சு சாப்பிடு. அப்பதான் உனக்கு புத்தி வரும் என்றவளாய் மேசையில் இருந்த சாப்பாட்டு டிஸ்களை எடுத்து அதனுள் இருந்த சாப்பாடுகளை ஒன்றாய்ப் போட்டு பிறிச்சில் வைத்துவிட்டு கழுவத்தொடங்கினாள். குசுனிக்குள் கழுவும் சத்தம் கேட்டு சாரு மெல்ல வந்தாள். என்ன சுமதி அக்கா நீங்கள் போய்விடுங்கோ நான் கழுவுறன் என்றவளை கையமர்த்தி விட்டு தானே கழுவிக் கொண்டிருந்தாள். சாரு குசுனியை கூட்டத்தொடங்கினாள். கூட்டிக்கொண்டிருந்த சாருவிடம் இருந்து தும்புத்தடியை பறித்து வைத்தாள் சுமதி. குமாரே கூட்டட்டும். அவன்தானே சாப்பாட்டை தட்டி விட்டது. சாரு நீர் போய்ப்படும் எனக் கூறிவிட்டு குமாரைக் கூப்பிட்டு கூட்டச்சொல்லி கட்டளை பிறப்பித்தாள். குமாரோ மகுடிக்கு மயங்கிய பாம்பு போல் கூட்டத்தொடங்கினான். சாரு சுமதியின் பிள்ளைகளை அணைத்துச்சென்று பல்துலக்கிவிட்டு படுக்கைக்கு தயாரானாள். சீலனுக்கும் தலைஅணை, போர்வை கொடுத்தாள். கழுவி முடித்த சுமதி கைகளைத் துடைத்தபடி குமார் பசிச்சா நீயே சமைச்சு சாப்பிடு. சாரு சமைச்ச சாப்பாடு இண்டைக்கு நீ தொடப்படாது எனக் கூறியவளை அக்கா என விழித்தான்.

என்னை அக்கா எண்டு கூப்பிடாதை. பொம்பிளையளை மட்டமாய் நினைக்கிற நீ எனக்கு தம்பியும் இல்லை, நான் உனக்கு அக்காவும் இல்லை. நாங்கள் என்ன களிமண்ணுகள் என நினைச்சியளே? நீங்கள் நினைச்சமாதிரி பினைஞ்சு உருட்டி பொம்மைகளாய்ச் செய்து விளையாடிப்போட்டு எறிஞ்சு உடைக்க. உங்களை மாதிரியே இந்த உலகத்தை ரசிச்சு வாழப்பிறந்தனாங்கள். எங்களுக்கும் உணர்வுகள், உணர்ச்சிகள் எல்லாம் இருக்கு. நீங்கள் இரு எண்டிறதுக்கும், எழும்பு எண்டிறதுக்கும் சமை எண்டிறதுக்கும் நாங்கள் ஒண்டும் றிமோட் கொன்றோளோடை பிறக்கேலை. அதை முதல்லை புரிஞ்சு கொள். நீயே சமைச்சு சாப்பிடு அப்பதான் உனக்கு சாருவின்ரை அருமை புரியும். இனி உனக்கு இதுக்கு மேலை புத்தி சொல்ல வேணும் எண்டு நான் நினைக்கேலை. நீயே உன்னை திருத்திக்கொள்ளுவாய் என நினைக்கிறன். என ஒரு பிரசங்கமே வைத்து விட்டு படுக்கைக்கு சென்றாள்.

கோலுக்குள் இருந்த செற்றியில் படுத்திருந்த சீலன் இவை எல்லாவற்றையும் நன்றாக காது கொடுத்து கேட்கத்தவறவில்லை. அவனை குற்ற உணர்வு தைக்கத்தொடங்கியது. அவன் மனசோ நெருஞ்சி முட்கள் தைத்தது போல் ரணப்பட்டது.நானும் இந்த ஏழு வருடதிருமண வாழ்வில் இதைத்தானே சுமதிக்கு செய்து கொண்டிருக்கிறன் என நினைத்தவனாய் மிகவும் வேதனைப்பட்டான். ஆனால் ஒருநாளும் இப்படி தன்னுடன் நடந்து கொண்டதில்லை. ஆனால் என்ன ஒரு கிழமைக்கு முகம் கொடுத்து கதைக்கவே மாட்டாள். அப்பிடி தண்டனை தந்தும் கூட நான் திருந்தேலையே என மிகவும் வேதனைப்பட்டான். சுமதிக்கு தான் இழைத்த கொடுமைகளை நினைத்து, நினைத்து அனலில் இட்ட புழுவாய்த் துடித்தான். நித்திரை கண்களை தழுவ மறந்தது.

மீண்டும், மீண்டும் அசரீரியாக சுமதி கூறிய வார்த்தைகள் அந்த அறை முழுவதும் ஒலிப்பதாக இருந்தது. பொம்பிளையள் எண்டால் சமைச்சுப்போடவும் படுக்கை விரிக்கவும், பிள்ளைப்பெறவும்தான் இந்த பாளாய்ப் போன கடவுள் எங்களைப் படைச்சானெண்டே நினைச்சாய்? நாங்கள் என்ன களிமண்ணுகளே? நீங்கள் நினைச்சமாதிரி பிசைஞ்சு, உருட்டி பொம்மைகள் செய்து விளையாடி ரசிச்சுட்டு எறிஞ்சு உடைக்க. உங்களை மாதிரியே இந்த உலகத்தை ரசிச்சு வாழப்பிறந்தனாங்கள். எங்களுக்கும் உணர்ச்சிகள் , உணர்வுகள் இருக்கு. நீங்கள் இரு எண்டிறதுக்கும் எழும்பெண்டிறதுக்கும் நாங்கள் ஒண்டும் றிமோட் கொன்றோளோடை பிறக்கேலை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *