கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 12, 2022
பார்வையிட்டோர்: 9,487 
 

பாஸ்கரின் குடும்பம் சற்றேரக்குறைய பாபநாசம் பட சுயம்புலிங்கத்தின் குடும்பம் போலத்தான். அவர்களுக்குள் இருக்கும் அந்த பாசம், பிடிப்பு, மகிழ்ச்சி, கட்டுக்கோப்பு, எல்லாமே சுயம்புலிங்கத்தின் குடும்பம் போலத்தான் இருக்கும். என்ன?, குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை ரெண்டு பேர் கூட. பாஸ்கர், அவன் மனைவி கனகா அவனுடைய அப்பா தணிகாச்சலம், அம்மா பாக்கியலட்சுமி, இரண்டு பெண் பிள்ளைகள் தாரணி, மீனா. பெரியவள் ப்ளஸ் டூ வும், சின்னவள் டென்த் ம் படிக்கிறார்கள். ஆக மொத்தம் ஆறு பேர். பாஸ்கரின் அப்பா ஓய்வு பெற்ற ஆசிரியர். சிக்கனமாக வாழ்ந்து ஜெயித்தவர். பாஸ்கரின் மனைவி கனகா இல்லத்தரசி. பாஸ்கர் பி.டி.ஓ. ஆபீஸில் கிளார்க் உத்தியோகம். ஆக இவனுடைய சம்பளம், அப்பாவின் பென்ஷன், ப்ளஸ் அவர் ரிடையர் ஆனதில் கிடைத்த பதினைந்து லட்சங்களை வங்கியில் டெபாஸிட் பண்ணதில் கிடைக்கும் வட்டி, இவைதான் குடும்பத்தின் மொத்த வருவாய்.

காலை 7-00 மணி. அந்தக் குடும்பத்திற்கான டீ டைம். உணவு வேளைகளில் கூட அவரவர் வசதிக்கேற்ப தனித்தனியாக வந்து சாப்பிட்டுவிட்டு போய்விடுவார்கள். ஆனால் காலை டீ டைமை மட்டும் யாரும் மிஸ் பண்ணமாட்டார்கள். முதலில் தாத்தா பாட்டி வந்து ஹாலில் உட்காருவார்கள். அடுத்து கையில் தினமணியுடன் பாஸ்கர் வந்து உட்காருவான். மூன்றாவதாக அந்த வீட்டு செல்லக் குட்டிகள் இரண்டும் வந்து உட்காரும். கடைசியாக டீ ட்ரேயுடன் பாஸ்கரின் மனைவி கனகா வந்து எல்லாருக்கும் டீ கிளாஸை கொடுத்து விட்டு உட்காருவாள். பேச்சு ஆரம்பிக்கும். அரட்டைக் கச்சேரி. அரசியல் , சினிமா, கிசு கிசு, நாட்டு நடப்பு எல்லா சங்கதிகளும் மிதி படும். ரெண்டு குட்டிகள் உட்பட எல்லாரும் பேசுவார்கள் வயசு வித்தியாசமின்றி.

“ ஏண்டா பாஸ்கரா! நம்ம வீட்டில டிவி கெட்டுப்போயி தூக்கிப் போட்டு நாலு மாசமாச்சி. வேற டிவி வாங்கற உத்தேசமிருக்கா?. இல்லே காமராஜர் மாதிரி ஆகட்டும் பார்க்கலாம்னு தள்ளி போடப் போறியா?.

“கொஞ்சம் வெயிட் பண்ணுங்கப்பா பார்க்கிறேன்.”

“உனக்கென்னடா டியூட்டிமேல பொழுது போயிடுது. என் பேத்திங்களுக்கு ஸ்கூலு, ஃப்ரண்ட்ஸ்னு சுலுவா பொழுது போயிடுது. உன் பொண்டாட்டிக்குக் கூட மதியம் தாண்டி ரெண்டு மணி வரைக்கும் சமையல் கட்டுல நேரம் போயிடுது. எனுக்கும் உங்கம்மாவுக்கும்தான் பொழுதே போறதில்ல. டிவி இருந்தா சீரியல், சினிமா, நியூஸ், ன்னு பொழுத ஓட்டிடுவோம். சீக்கிறமா பார்றா கண்ணூ. பணம் இல்லைன்னா சொல்லு டெபாஸிட்ல இருந்து கொஞ்சம் எடுத்துக்கலாம்.”

“ அதெல்லாம் இல்லப்பா. பணம் பிரச்சினை இல்லை. பார்த்துக்கிட்டுத்தான் இருக்கேன்பா. நேத்து கூட போயி விசாரிச்சிட்டுத்தான் வந்தேன். இன்னும் பேரம் படியல.” –

“பேரமா?, இது என்ன சந்தைமேட்டு வியாபாரமாடா?.”

“இதோ பாருங்கப்பா. மூணு ப்ராண்ட் டிவிய விசாரிச்சிட்டு வந்திருக்கேன். 42 இன்ச் சாம்சங்—17499/- ரூபாய். எல்ஜி—16999/- ,ஸோனி—19,999/- அப்படீன்னு ரேட்டு சொல்லிட்டான். நானு ஸோனி டிவிய 17999/- க்கு பேசியிருக்கேன்.”

“என்ன?, ரெண்டாயிரம் ரூபா தள்ளுபடியா?. ஷ்யூரா அந்த ரேட்டுக்கு படியவே மாட்டான். அவனுக்கு அதில லாபமே ரெண்டு, மூணு பர்ஸண்ட்டேஜ்தான் இருக்கும்டா. நிச்சயமா நடக்காதுப்பா.” “கையில கேஷோட போயி அதே ரேட்டுக்கு வாங்கறனா இல்லையா பாருங்க. “

“மாமா! அவரு வாங்கிடுவாரு மாமா. பேரம் பேசாம எந்த பொருளை வாங்கியிருக்கிறாரு சொல்லுங்க. அப்பல்லாம் அப்படியில்லை. சொன்ன விலையை குடுத்துட்டு அவன் குடுத்ததை வாங்கிட்டு வந்து நிப்பாரு. ரெண்டு வருஷத்துக்கு மேல அவரு அப்படியில்லை ரொம்பவே மாறிட்டாரு. பேரம் பேசாம வாங்கறதில்லை. எவ்வளவு தூரம் அடிச்சி பேசி வாங்கியிருக்காரு?.” –இது கனகா. அவள் முகத்தில் பெருமை வழிந்தது.

பாஸ்கரின் இயல்பு அது. பேரம் பேசாமல் எதையும் வாங்க மாட்டான் என்பது வீட்டிலுள்ள எல்லோருக்கும் தெரியும். கடன் சொல்லாம கையில ரொக்கத்தை வெச்சிக்கிட்டு பேசினால் எதையும் அடிச்சி வாங்க முடியும் என்பது அவனுடைய நம்பிக்கை. அப்படியே வாங்கிக்கிட்டும் வந்திடுவான். கெட்டிக்காரனா ஆயிட்டான். பாஸ்கர் கெட்டிக்காரன் என்பதில் கனகாவுக்கு மட்டுமில்லை, வீட்டிலுள்ள எல்லோருக்குமே பெருமைதான்.

“சரி..சரி..உன் வீட்டுக்காரன் கெட்டிதான். அது எங்களுக்கு தெரியாதா?.சின்ன வயசிலயிருந்து எவ்வளவு பார்த்துக்கிட்டு இருக்கோம்?. எப்படிப்பட்ட ஆளு. என்னன்ன குசும்பு பண்ணியிருக்கான்?. அதெல்லாம் எங்களுக்குத்தான தெரியும்?. ”—- பேத்திங்க ரெண்டு பேரும் ஓடி வந்து தாத்தாவை கட்டிக் கொண்டார்கள்.

“சொல்லுங்க சொல்லுங்க.. தாத்தா. எங்கப்பாவைப் பத்தி சொல்லுங்க.”—தாத்தா சிரித்தார்.

“இரு இரு உங்கப்பனுடைய திருவிளையாடல்கள் கொஞ்சமா நஞ்சமா? சேம்பிளுக்கு ஒரேயொரு சங்கதியை மட்டும் சொல்றேன் கேளுங்க. அப்ப உங்கப்பன் மூன்றாவதோ நாலாவதோ படிக்கிறான். அப்பல்லாம் அத்தையையும், உங்க அப்பனையும் நான் வாரத்துக்கு ஒரு தடவையாவது ஓட்டலுக்கு கூட்டிப் போவேன். பல சமயங்கள்ல கையில காசு கம்மியா இருந்தால் உங்கப்பனுக்குத் தெரியாம உங்க அத்தையை மட்டும் கூட்டிப் போறதுண்டு. ஏன் அப்படீன்னா, குழந்தையில இருந்தே உங்கப்பன் நல்லா சாப்பிடுவான். கூழா இருந்தாலும் அவனுக்கு வயிறு முட்ட இருக்கணும். குழந்தையிலேயே குண்டா இருப்பான். உங்க அத்தை அப்படியில்ல. சவலை போன குழந்தை சரியாகவே சாப்பிட மாட்டாள். ஒவ்வொரு பருக்கையாக கொரித்துக் கொண்டிருப்பாள். ஏன் இன்னைக்கு கூட அவ அப்படித்தானே சாப்பிடுகிறாள். அதனாலதான் உங்க அத்தையை கூடுதலா ஓட்டலுக்கு கூட்டிப் போறதுண்டு.”

“நீங்க பண்ணது பெரிய தப்பு தாத்தா. ஓரவஞ்சனை.” “இல்லம்மா. சவலை போன குழந்தைக்கு மிச்சமா கொஞ்சம் ஊட்டி விட்றது பெத்தவங்க குணந்தானம்மா. இதை விடுங்க, உங்கப்பன் என்ன பண்ணான்னு கேளுங்க.”—-அப்போது பாஸ்கர் குறுக்கிட்டான்.

“அட ஏம்பா இத்தையெல்லாம் பிள்ளைங்க கிட்ட சொல்லிக்கிட்டு.”—

“நீங்க சொல்லுங்க தாத்தா.”

“ஒரு நாள் உங்க அத்தையை கூப்பிட்டு ரகசியமாக கண்ணே! தம்பிக்குத் தெரியாம தெருக் கோடியில போய் நில்லு நான் வர்றேன் ஓட்டலுக்குப் போகலாம். என்று சொல்லி அனுப்பிவிட்டு கிளம்பினேன். இதை எப்படியோ உங்கப்பன் மோப்பம் புடிச்சிட்டான் போல. இது எங்களுக்கு தெரியாது. நாங்கபாட்டுக்கு நேரா உடுப்பி ஓட்டலுக்கு போயி உள்ளே கோடியில போய் உட்கார்ந்தோம். பாஸ்கரா! அப்புறம் நீ என்ன பண்ணேன்னு மீதிய நீயே சொல்றா.”— பாஸ்கரன் லஜ்ஜையாய் சிரித்தான்.

“பின்னே? என்னை விட்டுட்டு இவங்க மட்டும் ஓட்டலுக்குப் போனால் விட்ருவேனா?.”

“ இரு இரு அப்ப இவனுக்கு என்ன வயசு தெரியுமா?, எட்டு முடிஞ்சி ஒன்பதாவது வயசு நடக்கிறது. அந்த வயசிலேயே என்னா தைரியம்னு பாருங்க. உம் நீ மேலே சொல்லுப்பா”

“நானும் இவங்க பின்னாலேயே போய் ஓட்டலுக்குள் நுழைஞ்சி கமானமா அவங்க பார்வையில படாதபடி கல்லாவுக்கு பக்கத்திலேயே உட்கார்ந்து கொண்டேன். நான் இந்தக் கோடி, அவங்க அந்தக் கோடி. கொஞ்ச நேரத்தில அவங்களுக்கு பரிமாறுகிற சர்வர் அங்கே பரிமாறி முடிச்சிட்டு என் டேபிள் கிட்ட வந்தான். நாங்க அந்த ஓட்டலுக்கு அடிக்கடி போறதால எல்லாருக்கும் எங்களைத் தெரியும்.”

“டேய் இன்னாடா உங்கப்பாவும், அக்காவும் அங்க சாப்பிட்றாங்க நீ இங்க உட்கார்ந்திருக்க?.”

“எனுக்கு இங்கதான் புடிச்சது அதான் இங்க உக்காந்துக்கினேன்.”

“சரி..சரி.. இன்னா சாப்பிட்ற?.”

“அவங்களுக்கு இன்னா வெச்ச?.”

“ரெண்டு இட்லி ஒரு செட்டு பூரி கிழங்கு.”

“அதையே எனுக்கும் வையி.”— கொண்டு வந்து வைத்த டிபனை அவங்களை பார்த்துக் கொண்டே அவசர அவசரமாக சாப்பிட்டேன். சாப்பிட்டு முடிச்சி கை கழுவ வாஷ் பேஸின் கிட்ட போறப்ப சர்வர் அப்பாகிட்ட சாப்பிட்ட பில்லை கொடுக்கிறான். அதுக்குள்ள நான் கையை கழுவிவிட்டேன். அந்நேரத்துக்கு அப்பா சர்வரை கூப்பிட்டு பில் அமெளண்ட் அதிகமா இருக்கிறதைப் பத்தி கேக்கறாரு. நான் ஓட்றதுக்கு தயாராயிட்டேன். அப்பதான் சர்வர் கையை நீட்டி என்னைக் காட்டினான், என்னை பார்த்ததும் டாய்! என்று அவர் கத்த நான் எடுத்தேன் ஓட்டம்.” – தாத்தா பேத்திகளையும், மருமகளையும் பார்த்து சிரித்தார்.

“இப்ப உங்க மூணு பேருக்கும் இவன் எப்படிப் பட்ட ஆள்னு புரிஞ்சிதா?.”—பாஸ்கர் குறுக்கிட்டான்.

“நீங்க மட்டும் லேசுபட்ட ஆளா?. வீட்டுக்கு வந்து என்னை என்ன பண்ணீங்க?.தாரணி, மீனா ரெண்டு பேரும் கேளுங்க. மத்தியான வெய்யிலிலே என் கைகளையும், கால்களையும் கட்டி நடுத்தெருவுல உட்கார வெச்சிட்டாரு. மே மாத வெய்யில். கீழே கொதிக்குது, போற வர்ற தெரு ஆளுங்க, குழந்தையை காய்கிற வெய்யிலிலே உட்கார வெச்சிட்டு, என்னாய்யா அநியாயம் இது என்று என் கட்டை அவிழ்க்க வந்தால், இவரு சத்தம் போட்டாரு. யாராவது கட்டை அவிழ்த்தீங்க உதை உங்களுக்கு இல்லை அவனுக்குதான்னு சொல்லிட்டார், அய்யய்யோ யாரும் கட்டை அவுக்காதீங்க..கட்டை அவுக்காதீங்கன்னு கத்தினேன். கடைசியில கொஞ்ச நேரம் காயவெச்சிட்டு அப்புறமா அவரே வந்து அவிழ்த்து விட்டுட்டார்.”

“தாத்தா! கடைசியில அப்பாதான் ஜெயிச்சிட்டார். நீங்க தோத்துட்டீங்க.”—கை கொட்டி சிரித்தார்கள்.

“எப்படீ?”

“கடைசியில அவரு நினைச்சதை சாதிச்சிக்கிட்டாருதானே.?.”

மறுநாள் மாலை நான்கு மணிக்கெல்லாம் அதை ஃபிக்ஸ் பண்ற ஆளோடு ஸோனி 42 இன்ச் ஃப்ளாட் டிவி வீட்டிற்கு வந்து இறங்கி விட்டது. பாஸ்கர் வரவில்லை. அவர் பில்லை செட்டில் பண்ணிட்டு வர்றேன்னு சொன்னாருங்க என்றான் வந்த ஆள். வந்தவன் மளமளவென்று காரியத்தில் இறங்கினான். ஒரு மணி நேரத்தில் அந்த வீட்டு ஹாலில் பிரதான மூலையில் டிவி யை பொருத்தியாச்சி. டிவியில ஜோதிகா எவரியதுன்னு கர்ஜிக்கிறாள். எல்லாரும் ஹால்ல டிவி முன்னாலதான் இருந்தாங்க. எல்லோருடைய முகங்களிலும் சந்தோஷம். தாத்தா பாட்டிக்கு கூடுதல் சந்தோஷம்.

“என்னா விலைக்கு வாங்கினான்னு தெரியலையே.“—தாத்தா.

சின்ன ஸ்கிரீன்ல பார்த்திருந்தவங்களுக்கு [NTT1] [NTT2] இப்ப பெரிய ஸ்கிரீனில் காட்சிகளைப் பார்ப்பதில் கொள்ளை மகிழ்ச்சி. ஏழு மணி சுமாருக்கு பாஸ்கர் வந்து சேர்ந்தான். எல்லாரும் ஓடி போய் பிலு பிலுவென்று பிடித்துக் கொண்டார்கள். என்ன விலைக்கு வாங்கினான் என்று ஒவ்வொருத்தருக்கும் தெரியணும். இந்த பேரத்தில பாஸ்கர் ஜெயிச்சானா இல்லையான்னு தெரியணும்.

“விடுவேனா? நேத்து நான் சொன்ன அதே 17,999/- க்குத்தான் வாங்கினேன். இன்னமோ முடியாதுன்னீங்களேப்பா, பார்த்தீங்களா?.” “எப்படிடா ரெண்டாயிரம் ரூபா குறைச்சான். நம்பவே முடியலைடா. இதுக்கு மேல அவன் லாபம் வேற இருக்கு. அதில அவ்வளவு லாபமா இருக்கு?.”

“அப்பா வியாபாரத்தில எப்பவும் கடன்ல வாங்கினா ஒரு ரேட்டுத்தான், நெட் கேஷ்ன்னா ஒரு ரேட்டுத்தான்.”

ரெண்டு நாள் கழிச்சி எதிர் வீட்டுக்காரர் உள்ளூர்ல வாங்காம காஞ்சிபுரம் போய் அதே ஸோனி 42 இன்ச் டிவியை 19,999/- க்கு வாங்கி வந்து ஃபிக்ஸ் பண்ணதைப் பார்த்துவிட்டு அன்றைக்கெல்லாம் பாஸ்கர் வீடே குதூகலமாக கும்மியடித்துக் கொண்டிருந்தது. கனகாவுக்கு கூடுதல் சந்தோஷம்.

“அந்த ஆளு ஒரு உம்மனா மூஞ்சி மாமா. கெட்டிக்காரத்தனம் போறாது.இவரு மாதிரி பேரம் பேச வாய் சாலாக்கு வேணும் மாமா. தரவசு போறாது. வாயுள்ள பிள்ளைதான பிழைக்கும்?. “

”தாத்தா எங்கப்பாவை ஜெயிக்க யாராலயும் முடியாது.”—தாத்தாவும், பாட்டியும் சந்தோஷமாக தலையாட்டினார்கள்.

மறுநாள் மதியம் ரெண்டு மணியிருக்கும் அன்றைக்கு டிவியை ஃபிக்ஸ் பண்ண வந்த அதே ஆள் வந்து நின்றான். வீட்டில் தாத்தா பாட்டியும், மருமகள் கனகாவும் மட்டும்தான் இருந்தார்கள். பேத்திகள் இரண்டு பேரும் ஸ்கூல் போயிட்டாங்க. பாஸ்கர் ஆபீஸ் போயிட்டான். இதோடு மாலை ஆறு மணிக்கு மேலதான் வருவான். டிவி திரையில் ஏதோ ஒரு சீரியல் ஓடிக் கொண்டிருக்கிறது. வழக்கம் போல கதாநாயகி அழுதுக் கொண்டிருக்கிறாள். அன்னிக்கு டிவி ஃபிக்ஸ் பண்ண வந்த ஆள் வந்தான்.

“சாரு, டிவி பில்லை வாங்காம வந்துட்டாருங்க. அதான் முதலாளி குடுத்துட்டு வரச் சொன்னாரு. ஞாபகமா ஐயாகிட்ட குடுத்துடுங்க.”— தாத்தாதான் பில்லை வாங்கினார். போய் ஆற அமர உட்கார்ந்து பில்லை பிரித்தவர் அதிர்ந்தார்.

“கனகா!…கனகா!…”— அவர் போட்ட கூச்சலில் கனகா ஓடி வந்தாள்.

“பார்த்தியாமா உன் வீட்டுக்காரன் செஞ்ச வேலையை. டிவி வாங்கின பில்லை பாரு. 19,999/- க்கு டிவியை வாங்கிட்டு 17,999/- க்கு பேரம் பேசி வாங்கினேன்னு நம்ம கிட்ட புளுகி இருக்கான்மா. ராஸ்கோலு. இன்னான்னா கதை விட்டான்?.கடனுக்குப் போனால் ஒரு ரேட்டு, நெட் கேஷ்னா ஒரு ரேட்டு அட அட.”— கனகா பில்லைப் பார்த்த அப்புறமும் அவநம்பிக்கையாகவே இருந்தாள்.

“அவசரப்பட வேண்டாம் அவர் வரட்டும் மாமா கேட்போம்.”

மாலை பாஸ்கரின் வீடு ஆழம் எல்லாரும் காணா அமைதியில் இருந்தது. புதுசாக வந்த டிவி கூட ஆஃப் செய்யப்பட்டு அமைதியாக இருந்தது. பாஸ்கரை ஹாலில் பிடித்து உட்கார வைத்து விட்டார்கள். சுற்றிலும் குடும்ப உறுப்பினர்கள் உட்கார்ந்துவிட்டனர். தாத்தா அவனிடம் பில்லை நீட்டினார். சுற்றிலும் எல்லோரும் அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பில்லை பார்த்ததும் அவன் முகம் அஷ்டகோணலாக முறுக்கிக் கொண்டது. தாத்தா ஆரம்பித்தார்.

“டேய் பாஸ்கரா! ஏன்டா இப்படி செஞ்சே?. இதுதான் முதல் தடவையா இல்லே எப்பவுமே நீ இப்படித்தானா?. சொல்றா.” —- பாஸ்கர் எல்லாரையும் ஒரு பார்வை பார்த்தான். கனகா அவனை எரித்து விடுவது போல முறைத்துக் கொண்டிருக்கிறாள்.

“எல்லாரும் என்னை மன்னிச்சிடுங்க. நான் பேரம் பேசி வாங்கல. டிவிக்கெல்லாம் பேரம் பேசி வாங்க முடியாதுன்னு தெரியும்.”—-

“அடப் பாவி”—தாத்தா பாட்டி முதற்கோண்டு எல்லாருமே பிரமை பிடிச்சது போல வாயைப் பிளந்து விட்டார்கள்.

“அப்புறம் எதுக்குடா பொய் சொன்ன?. எங்களுக்கு ஒண்ணும் புரியலையே.”

“உண்மை விலையை சொல்லியிருந்தால் கனகா கரிச்சி கொட்டியிருப்பாள்.”

“இம்மாம் விலைக்கு ஏன் வாங்கி வந்தீங்க?. இப்படியா துப்பு கெட்ட மனுசனா இருப்ப?. சொன்ன விலைக்கு அப்படியேவா வாங்கி வருவே?. விலைய குறைச்சி கேக்கிறதில்ல. ஊர்ல உலகத்தில ஆம்பளைங்க எம்மாம் தரவசாக இருக்காங்க?. ஹும். அவ்வளவு தரவசுவான ஆம்பளைக்கு நான் எங்க போறது?. ” – இப்படிப் பட்ட ஏச்சுகள் எங்களுக்குள் பலதடவை நடந்திருக்கிறது. அவள் ஏச்சுக்குப் பயந்து இப்படி பண்ண ஆரம்பிச்சேன். ஃப்ரண்ட் ஆத்ரேயன்தான் ஐடியா சொன்னான். ஒருதரம் கனகா சந்தோஷத்திற்காக முதலில் காய்கறியிலதான் பேரம் பேசி விலையை குறைச்சி வாங்கினதாக சொன்னேன். அவ முகத்தில அவ்வளவு திருப்தி. அப்புறம் அதையே பழக்கமா வெச்சிக்கிட்டேன். சின்னச் சின்ன பொய், அதில கிடைக்கும் சந்தோஷங்கள். இப்ப கூட நான் ரெண்டாயிரம் ரூபாய் பேரம் பேசி வாங்கினேன்னு சொன்னதுக்கு நீங்க எல்லாரும் எவ்வளவு சந்தோஷப் பட்டீங்க. அந்த சந்தோஷம் எனக்கு புடிக்கும்பா. ”

“த்தூ! அப்ப இதுக்கு முன்னே நீ பேரம் பேசி வாங்கினதெல்லாம்?.”

“நான் என்னைக்கும் பேரம் பேசி பொருட்களை வாங்கியதில்லை.”- கனகா சீறினாள்.

“ச்சீ! இன்னா மனுஷன் நீங்க. இப்படியா உடம்பு முழுக்க பொய்யா இருக்கும்.”

“சரி…சரி..விடும்மா. நீ மெச்சிக்கணும்னுதான் விலையை குறைச்சிருக்கான். இதனால யாருக்கும் பாதிப்பு இல்லையே.”

“சே! எவ்வளவு காலம் நாங்கள்லாம் ஏமாந்திருக்கிறோம்டா?. நீ பண்ண தப்புக்கு என்னென்ன சால்ஜாப்பு, வியாக்கியானம் சொல்றடா. குழந்தையில இருந்து இன்னைய வரைக்கும் நீ மாறவே இல்லடா.“—பாஸ்கர் அப்பாவைப் தீர்க்கமாகப் பார்த்தான்.

“ அப்பா நான் உங்களை ஒண்ணு கேட்கிறேன். மறைக்காம மனசாட்சிப்படி நேர்மையா உண்மை பேசணும்.”

“என்ன?.”

“என்னை மாதிரி நீங்க என்னைக்கும் அம்மா மெச்சிக்கணும்னு அம்மாகிட்ட விலையை குறைச்சி சொன்னதில்லையா?. உண்மை பேசணும்.”—சடாரென்று பாட்டி குறுக்கிட்டாள்.

“அதை அங்க ஏன்டா கேக்கற?, என்னைக் கேளு. எனுக்குத்தான நிஜம் தெரியும். அவரு எட்டடி பாய்ஞ்சாரு நீ குட்டி பதினாறு அடி பாயறே.”—சொல்லிவிட்டு கெக்கெக்கே என்று சிரிக்க ஆரம்பித்தாள்.

– நன்றி: தினமணி கதிர் 13-06-2021 இதழ்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *