பெண்டாட்டிதாசன்

0
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 30, 2013
பார்வையிட்டோர்: 8,811 
 

இந்தப்பயல் இப்பிடி மாறுவான்னு நான் கனவுல கூட நெனச்சிப் பாக்கல்ல. இந்தக் கருவாலிக்குட்டி வந்து, என்ன மாயம் பண்ணினாளோ? இவன் இப்பிடியாகிட்டானே?” என்று கூறுவது கணவனின் இரண்டாவது அக்காவின் குரல் என்று கமலாவுக்குத் தெரிந்தது.

அறையிலிருந்தவள் காதை வெளியே கவனப்படுத்தினாள்.

“”அதானே சரக்கு இப்பிடி இருக்கிறப்பவே இந்த ஆட்டம் ஆடறான்னா, கொஞ்சம் வெள்ள சொள்ளையா இருந்திருந்தா, பயல கைலப் பிடிச்சிருக்க முடியாது போல இருக்குது?” என்றது மூத்த அண்ணியின் குரல்.

“”அக்கா, உள்ள கேட்டுட்டிருப்பா. அவன் வந்ததும் ஏதாவது குசுகுசுக்கப் போய் அப்புறம் திட்டப் போறான். வாய மூடிக்கிட்டு சும்மா இருங்க” என்றாள் மூன்றாவது அண்ணி.

பெண்டாட்டிதாசன்கமலாவின் கண்கள் நிறைந்தன. சொந்தக்காரர்கள் எல்லோரும் சேர்ந்து அப்பா, அம்மா, தம்பி, தங்கை எல்லோரிடமுமிருந்து அவளைப் பிரித்து இந்த வீட்டுக்கு அனுப்பி வைத்து ஐந்தே நாட்கள்தாம் ஆகின்றன. ஆனால் அதற்குள் எத்தனையோ யுகம் போல் இங்குள்ள யாரையுமே புரிந்து கொள்ள முடியவில்லை. சிலநேரங்களில் இனிக்க இனிக்கப் பேசுகிறார்கள். சிலநேரங்களில் விரோதி போல் பார்க்கிறார்கள்.

கமலா கறுப்பு என்பது மறுக்கமுடியாத உண்மை. “பெண்ணு கறுப்பா இருந்தாலும் மூக்கும் முழியுமா மகாலெச்சுமி போல இருக்கிறா… இது போதும்’ என்று பெண் பார்க்க வந்தவர்கள் அவள் காதுகளில் விழும்படி பேசித்தான் கல்யாணம் நடந்தது. கறுப்பு என்பது இதுவரையிலும் குறைவாகத் தெரியவில்லை. இப்பொழுது என்ன குற்றம் கண்டு பேசுகிறார்கள் என்பது புரியவில்லை.

திருமணமான மறுநாள் காலையிலேயே எழுந்து குளித்து மாமியார் கால்களில் விழுந்து வணங்கிக் கொண்டு சமையலறைக்குள் நுழையப் போகும் போது,””வேண்டாம்மா நீ அறைல போய் இரு. நானும் என் பெண்ணுங்களும் இருக்கோம். ரெண்டு நாள் கூடப் போகட்டும்” என்றார்கள்.

“”இல்ல அத்தை, பாத்திரங்களையாவது கழுவுறேன்”

“”வேண்டாம் மோளே, ரெண்டுநாள் கழியட்டும். இப்பவே உன்னை வேலை வாங்கினா பாக்கிறவங்க ஒருமாதிரிப் பேசுவாங்க” என்று மூத்த அண்ணியும் சொல்லவே திரும்பினாள்.

அறைக்குள் வந்தும் இருப்புக் கொள்ளவில்லை. ஐந்து நிமிடங்கள் கடந்திருக்கும்.

“”இன்னும் மகாராணி எழல்லியா?” என்றது இரண்டாவது அண்ணி.

“”அவா எழுந்திரிச்சாச்சிது, நாங்கதான் ரெண்டுநாள் போட்டும்ன்னு சொன்னோம்” என்றார் மாமியார்.

“”என்னால ஒண்ணும் ஆவாதம்மா. எனக்குக் கழியல்ல. என்ன எதுக்கும் கூப்பிடாத. அப்புறம் இப்பமே எளக்கம் வச்சிக் குடுத்து பிறகு தலைல ஏறிடப் போறா”

“”என்னடி சியாமளா, எப்பிடி இப்பிடிப் பேசத் தோணுச்சிது? நீ உன் புருசன் வீட்டுல போனதும் வேலை செஞ்சியாக்கும்?” என்றாள் மூத்தவள் லீலா.

“”எனக்கொண்ணும் இல்லம்மா. நாங்க நாலு நாளு நிப்போம். அப்புறம் போய்ட்டே இருப்போம். அம்மாதான் கெட்டி அழணும். அதான் சொன்னேன்..” என்றவள் அகன்றாள்.

தூங்கும் கணவனைப் பார்த்தபடி, அடுக்களைப் பக்கம் தயங்கிப் போனாள்.

“”அவா பேசறத மனசுல வச்சிருக்காத. அவா எப்பவுமே வெளிப்படையாப் பேசுவா. நீ போ” என்றாள் லீலா.

மனநிறைவாக இருந்தது. புகுந்தவீடு என்பது புத்தம் புதியவீடு. அவர்களும் மனிதர்கள் என்றாலும் புத்தம் புதியவர்கள். தண்ணீருடன் எண்ணெய் கலந்தது போல் ஆகுமோ? தண்ணீரும் தண்ணீரும் கலந்தது போலாகுமா? என்பதை உணர்வது வரை வாழ்க்கை ஒரு புதிர்.

தண்ணீரும் தண்ணீரும் போல் எல்லோருடனும் சகிப்புத் தன்மையுடன் கலந்து வாழத் தீர்மானித்தாள். ஆனால் இரண்டு நாட்களிலேயே முணுமுணுக்கத் தொடங்கிவிட்டனர். ஏன், எதற்கு? என்று புரியவில்லை.

முன்தினம் மூவரும் பேசிக் கொண்டிருந்தனர்.

“”ஆளப் பாத்தா பசுபோல. மனசுல ஒரே குசும்பு” என்றாள் சியாமளா.

“”ஏன் அப்பிடிச் சொல்லுறீங்க அண்ணி?” என்று கேட்டாள்.

“”அவன எங்கக்கிட்டேருந்து பிரிக்க நெனச்சிட்டே… அப்புறம் காரணம் தெரியணுமாக்கும்? அவன் புது மோகத்துல நாலுநாள் உங்கிட்டக் குழைவான். அப்புறம் பாரு” என்றாள் சரசு, கணவனின் மூன்றாவது சகோதரி.

வேறு எதுவும் பேசாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டனர். மனதுக்குச் சங்கடமாக இருந்தது. அழுதபடி நகர்ந்தாள்.

இன்று காலையில் அவன் வேலைக்குப் போனதிலிருந்து கச்சேரி ஆரம்பித்துவிட்டது. மதியம் சாப்பிடப் பிடிக்காமல், என்ன குற்றம் செய்தோம்? என்று குழம்பியபடி கட்டிலிலேயே கிடந்தாள்.

மாமியார் வந்து உணவு உண்ண அழைத்தாள்.

“”அத்தை, நான் என்ன தப்பு செஞ்சேன்னு கொஞ்சம் சொல்லுங்களேன்” என்று கையைப் பிடித்துக் கெஞ்சினாள்.

“”மருமோளக் கூப்பிடாத. சோறக் கொண்டு போய் அவ வாயிலே ஊட்டு” என்றாள் சியாமளா ஆத்திரத்துடன்.

“”என்னமோம்மா. எனக்கு ஒண்ணும் புரியல்ல, ஆனா நாலு நாள்ல எம்மவன் இப்பிடி மாறுவான்னும் நெனைக்கல்ல” என்றாள் மாமியார்.

“”சத்தியமா அத்தை நான் யாரப்பத்தியும் அவியக்கிட்ட ஒண்ணும் சொல்லல்ல..”

“”அவக்கிட்ட போய்க் கெஞ்சிட்டு நிக்கிறா அம்மா. நீ எங்கள ஊருக்கு அனுப்பிட்டு மருமோளுக்கிட்டப் போய்க் கெஞ்சு” என்றாள் சரசு.

“”என்னத்த மக்களே சொல்லுறெ? அவளும் ஒரு பெண்ணுதானே? அவா ஏதாவது சொல்லியிருந்தாக் கூட அவன் புத்தி எங்கப் போச்சுது?” என்றாள் மாமியார் மகளிடம்.

“”வரட்டும்… வரட்டும்… அவங்கிட்டயும் நறுக்குன்னு நாலுவார்த்தக் கேட்டுட்டுத்தான் போவோம்” என்றாள் சியாமளா.

கட்டிலில் கிடந்தவள் அப்படியே தூங்கிப் போய், மாலையில்தான் விழிப்பு வந்தது.

“”பட்டப்பகல்ல ஒரு பொட்டச்சி இப்பிடித் தூங்கினா, உருப்பட்டாப்புலதான் வீடு?” என்ற சரசுவின் குரல் வெளியே கேட்டது.

“”வீட்டு வேலய இழுத்துப் போட்டுச் செய்ய நாம இருக்கிறோமே… மகாராணி தூங்கத்தான் செய்வாங்க”

“”சும்மா இருங்கடியே… தூங்கிட்டுப் போட்டு. வீட்டுல வெட்டிமுறிக்கிற வேலையா இருக்குது? உங்கப் பேச்சுனால மத்தியானம் சாப்பிடக்கூட இல்ல” என்றாள் மாமியார்.

“”கொழுப்புன்னு சொல்லு. நாம யாரும் சாப்பிடாதன்னு சொன்னமா? நீ கூடக் கூப்பிட்டியே?”

“”அவா சாப்பிடல்லேன்னு அம்மைக்கும் சோறு இறங்கல்ல” என்று பரிகசித்தாள் சரசு.

“”ஊரான் பெண்ணு நம்மள நம்பி வந்திருக்கா. கொஞ்சம் அப்பிடி இப்பிடி இருக்கத்தான் செய்யும். போங்க போய் வேலயப் பாருங்க” என்றாள் மாமியார்.

“”உன்னாலதான் அவா சீரழியப் போறா” என்றபடி பேச்சு முடிந்தது.

கமலா மணியைப் பார்த்தாள். ஐந்தரை. வீட்டைப் பெருக்க வேண்டும். கணவன் வருமுன் முகம் கழுவி வேகமாக எழுந்து அடுக்களைக் கதவின் பின் இருந்த விளக்குமாற்றை எடுத்து வந்து பெருக்கத் தொடங்கினாள்.

“”அம்மா பாரேன் இந்தக் கூத்தை. நான் தூத்த இடத்தத் திருப்பித் தூத்திறா” என்று சத்தம் போட்டாள் சரசு.

“”அண்ணி தெரியாம தூங்கிட்டேன். தெரியாம எழுந்திரிச்சிட்டேன்” என்ன பேசுவதென்று புரியாமல் குழறினாள்.

“”ஆமாம்மா. தெரியாமத்தான் நடக்குது. அவன் வாற சமயத்துல தூரு… தூரு… நல்லாத் தூரு. நான் வேணுன்னா வெளிலேருந்து கொஞ்சம் தூசி எடுத்துப் போடறேன். நீ தூரு” என்றாள் சியாமளா.

வெட்கமாகவும் அழுகையாகவும் வந்தது.

“”போடி சியாமி, அவளப் போட்டு விரட்டிட்டு” என்ற லீலா,””அவா குணம் அப்பிடி. நீ போ கமலா. முகம் கழுவு” என்றாள்.

மதியம் உண்ணாதது சற்றுச் சோர்வாகத்தான் இருந்தது. வாசலில் செருப்புச் சத்தம் கேட்டது. அறையிலிருந்து எட்டிப் பார்த்தாள். சுந்தரம்தான். அவன் கையிலிருந்த பையை வாங்கினாள்.

அக்காக்கள் மூவரும் அவன் வந்ததைக் கவனிக்காதது போல் டி.வி.யைப் பார்த்தனர்.

“” என்னக்கா டீ எல்லாம் குடிச்சிட்டீங்களா” என்று கேட்டான் சுந்தரம்.

“”உம் உம்” என்றாள் சியாமளா.

அவன் முகம் கழுவிவர, துண்டு எடுத்துக் கொடுத்தாள். துடைத்தபடி, “”அக்காங்க முகமெல்லாம் ஒருமாதிரி இருக்குது ஏன்?” என்று கேட்டான்.

“”ஒண்ணுமில்லியே உங்கத் தோணலாயிருக்கும்”

“”உன் முகம்கூட ஒரு மாதிரி இருக்குதே?” என்றான்.

“”போங்க ஏதாவது சொல்லிக்கிட்டு” என்று சிரித்தாள்.

உள்ளே போய் டீ கொண்டு வந்து நீட்டினாள்.

“”நீ குடிச்சியா?”

“” நீங்க குடிங்க. நான் குடிக்கிறேன்” என்றாள்.

“”இதப்பாரு, நான் வெளில நாலு இடம் போய்ட்டு வாறவன். ஒவ்வொண்ணையும் நான் வந்த பிறகுதான்னு வச்சிக்கிட்டியன்னா வெளில போற நானும் நிம்மதியா இருக்க முடியாது. கொஞ்சம் பிந்திட்டுதுன்னா நீயும் நிம்மதியா இருக்க மாட்டே. அதனால் எதையும் என்னை எதிர்பார்க்காமச் செய், என்ன?”

தலையசைத்தாள். அவன் அன்பு மனதிற்கு இதமாக இருந்தது. டீயைக் குடித்தபடி, “”வீட்டில் அக்காக்களோட சத்தமே இல்லியே? என்ன நடந்தது?” என்று கேட்டான்.

தான் எதையாவது சொல்லி, அது பிரச்னையாகிவிடக் கூடாது எனக் கருதியவள் பதில் பேசாமல் அடுக்களைக்குச் சென்றாள்.

வெளியே வந்தான்.

“”என்னக்கா அமைதியா இருக்கிறீங்க?”

“”நாங்க ஊருக்கு நாளைக்குப் போறோம்டே” என்றாள் சரசு.

“”பத்துநாள் இருந்துக்கிட்டு வாறோம்ன்னு அத்தான்களை அனுப்பினீங்க? இப்ப என்ன திடீர்ன்னு?”

“”இப்பப் பட்டதெல்லாம் போதாதா? பெண்டாட்டின்னா இப்பிடித்தான் இருக்கணும். டேய்… இந்த மாயப்பொடி போடற வேலை எல்லாம் எங்களுக்குத் தெரியாதுடே”

“”என்னக்கா பேச்சு ஒருமாதிரியா இருக்குது? நான் என்ன செய்தேன்? அவாதான் என்ன செய்தா?”

“”நீ என்னத்தலப் பேசல்ல? பெண்ணு கெட்டி எத்தன நாளுதான் ஆச்சிது? இந்தக் கருவாலிக் குட்டிக்கே இந்தத் துள்ளு துள்ளுதியே, கொஞ்சம் லெச்சணமா இருந்தா… எங்கள எல்லாம் மதிப்பியா?” என்று பொரிந்தாள் சியாமளா.

“”என்னம்மா இது இவங்க ஏன் இப்பிடி நாகரிகமே இல்லாமல் பேசறாங்க?” என்று தாயிடம் கேட்டான்.

“”ஆமாண்டா நாங்கல்லாம் நாகரிகமே இல்லாத காட்டுமிராண்டிங்க. நீயும் உன் தங்கமான பெண்டாட்டியுந்தான் நாகரீகமானவங்க. அக்கா, இந்தப் பயல்கிட்ட இந்த வீட்டுல இனி நான் இருக்கமாட்டேன். இப்பவே புறப்படப் போறேன். நீங்களும் வாறியளா?” என்று கேட்டாள் சியாமளா.

அவன் திகைத்தான். அவர்களை எப்படி சமாளிப்பது?அவர்களுக்கு என்ன குழப்பம்? என்று புரியவில்லை.

“”ஏய் கமலா இங்க வா” என்று கத்தினான்.

அவள் மிரண்டபடி வந்தாள்.

“”இங்க என்ன எழவு நடந்துதுன்னு ஒழுங்காச் சொல்லு. இவங்க மூணுபேரும் எனக்கு மூத்தவங்க. எனக்கு அம்மா மாதிரி. நீ அவங்ககிட்ட என்னமாதிரி நடந்துக்கிட்ட?” என்று அதட்டினான்.

“”சத்தியமா நான் ஒண்ணும் செய்யலீங்க” என்று நடுங்கினாள்.

“”அம்மா என்னதான் நடந்துது?” என்று தாயிடம் கேட்டான்.

“”அம்மா என்னத்துக்குல? நானே சொல்லுறேன். கல்யாணமான மறுநாளு என்ன நடந்துதுன்னு யோசிச்சிப்பாரு” என்றாள்.

“”மறந்துட்டுது. நீயே சொல்லுக்கா”

“”எனக்குக் கேவலமா இருக்குது மோளே” என்றாள் அம்மா.

“”ஆமாம்மா நாங்க ஏதாவுது சொன்னா உனக்குக் கேவலம். உன் மோனை மட்டும் விட்டுக் குடுக்காத” என்றாள் சியாமளா.

“”என்ன நடந்துதுன்னு எனக்கும் தெரியட்டுமே, சொல்லுக்கா?”

“”உனக்க வீட்டு கண்ணாடிப் பெட்டில ஒரு புலிப்பொம்மை இருந்துது இல்லியாடே. அது இப்ப எங்கே?”

அவனுக்கு “திக்’கென்றது. திருமணத்திற்கு வந்த அன்றே அக்காவின் இளைய பெண் அந்தப் பொம்மையை எடுக்கப் போனாள். உடைஞ்சிடும்னு சொல்லி எடுத்து மேலே வைத்தான். அந்தப் பொம்மை வேண்டும் என்று இரவு முழுவதும் அவள் அழுது கொண்டே இருந்தாள்.

திருமணமான மறுநாள் கமலாவைப் பார்க்க அவள் அக்கா வந்தாள். வந்தவளுடன் இரண்டு வயது மகனும் வந்தான். பையனை எடுக்கக் கைநீட்டினான். அவன் வர மறுத்தபோது கண்ணாடிப் பெட்டியின் முன் கொண்டு வந்து ஒவ்வொன்றாகக் காட்ட, அவன் கைநீட்டி எடுத்தது புலி பொம்மையைத்தான்.

திருப்பி வாங்க முடியவில்லை. வாங்கினால் அழுகை. அவனிடமே கொடுக்கும்படியாகிவிட்டது.

“”என்னடே சத்தமே இல்ல. என் பிள்ள கைல எடுத்த உடனே உன் பொருள் உடைஞ்சிடும், நாசமாயிடும் ஆனா எம்பிள்ளையை விட உனக்கு நேத்து வந்த இவளோட அக்காப்பிள்ளை உசத்தி பாத்தியா?” என்றாள் குரல் கம்ம.

“”அக்கா சத்தியமா மனசுல ஒண்ணையும் வச்சிச் சொல்லல்ல. நீ என் அக்கா. அவா நம்ம பிள்ளை. உரிமையோட என்ன வேணும்ன்னாலும் சொல்லலாம், செய்யலாம். ஆனா, அந்தப் பிள்ள அப்பிடியில்ல. நம்மள ஒரு பொம்மைக்குக் கூடத் துப்பில்லாதவன்னு கேவலமாட்டு நெனைக்க மாட்டாங்களா?”

“”ஆமாண்டே அந்த உரிமைலத்தான் எம்பிள்ளைய நீ விரட்டி விட்ட?” என்றாள் சியாமளா ஆத்திரத்துடன்.

“”இது என்ன புதுக்கதை?”

“”என் வேதன உனக்குக் கதையாத் தெரியுதா?”

“”அக்கா நான் உன் தம்பி. என்ன தப்பு செய்தாலும் நாலு போடு போட்டு சொல்லுறத விட்டுட்டு இப்பிடிப் பேசினா எப்பிடி?”

“”ரொம்ப நடிக்காதடே?”

“”அப்பிடியே இருக்கட்டு. விசயத்தச் சொல்லு”

“”என் பய அன்னைக்கு ஆய் இருந்துட்டு வந்தப்ப நாங்க பொம்பளைங்க எல்லாம் அடுப்பங்கடைல கைவேலையா இருந்தோம். நீ அதுக்குக் காலு கழுவி விட்டியாடே?”

திருமணத்திற்கு முன் இதை எல்லாம் செய்வதில் கூச்சம் பார்த்ததில்லை. அக்கா பிள்ளைகளை அவன் கவனிப்பதைப் பார்ப்பவர்கள், “”சுந்தரத்துக்குப் பிள்ளை பிறந்தா அவனே எல்லாத்தையும் கவனிச்சிக்கிடுவான். அவன் பெண்டாட்டி குடுத்து வச்சவா” என்பார்கள்.

அன்று கமலாவின் தோழிப் பெண்கள் வந்திருந்தார்கள். எல்லோருக்கும் முன்னால் குழந்தையின் கால்களைக் கழுவிவிடக் கூச்சமாக இருந்தது. எதற்கும் சந்தர்ப்பங்கள் உண்டு என்பதை இந்த அக்காக்களிடம் விளக்கிக் கூறினால் புரியாது. இவர்களை சமாதானப்படுத்தினால் போதும் என்று நினைத்தான். அவனுக்கு ஒன்று புரிந்தது. திருமணத்தின் முன் ஏதாவது பெரிய தப்பு செய்தால் கூட உடன்பிறப்புக்கள் அதை அறியாமல் செய்துவிட்டான் என்று கருதுகிறார்கள். திருமணத்தின் பின் உப்புப் பெறாத காரியத்தையும் பெரிதாக எடுத்துக் கொண்டு மனைவியின் தூண்டுதலால் நடப்பதாகப் பெரிதுபடுத்துகிறார்கள்.

“”இன்னைக்கு என்ன நடுந்துதுடே?”

“”என்னக்கா?”

“”புதுசா சாணை பிடிச்ச அருவாமணை கைலப்பட்டு என்கைல ரத்தம் கறகறாண்ணு பாயுது அக்கா. எல்லாம் மருந்து வச்சிக்கிட்டிருந்தாங்க. நீ என்னல செய்துக்கிட்டிருந்த? மாமனார் விருந்துக்கு எடுத்துத் தந்த ரெடிமேடு சட்டைல இருந்த குண்டூசியப் பிடுங்கி எடுத்த பெண்டாட்டிக் கைல குண்டூசிப்பட்டுட்டுதுன்னு அவா வெரலைப் பிடிச்சு சூப்பிக்கிட்டிருந்த… என்னைவிட உனக்குப் பெண்டாட்டி தானே முக்கியம்?” என்று கண்களைக் கசக்கினாள் சரசு.

“”தப்புத்தாங்க்கா… எல்லாமே என் தப்புத்தான் ஏதோ தெரியாமச் செய்துட்டேன். இனி உங்கத் தம்பியாட்டே எப்பவும் இருப்பேன்”

அவர்கள் முகத்தில் கொஞ்சம் தெளிவு தெரிந்தது.

“”அக்கா, நான் உங்கத்தம்பி. என்கிட்ட எப்ப எதைச் சொல்லவும், செய்விக்கவும் உங்களுக்கு உரிமை உண்டு. ஆனா அதுலயும் கொஞ்சம் விதிவிலக்கு உண்டு. என்னை மதிக்கிறவங்க முன்னால நீங்க உங்க அதிகாரத்தைப் பிரகடனப்படுத்திப் பெரியவங்க ஆகிறதுக்காக, என்னைச் சிறுமைப்படுத்தினால் நான் ஓரளவுதான் பொறுக்கமுடியும்” என்று சொல்ல நினைத்ததை மென்று விழுங்கியபடி திரும்பி அறைக்குள் நுழைந்தான்.

அறையினுள் சிணுங்கிக் கொண்டிருந்த கமலாவுக்கு ஆறுதல் சொல்ல, தன்னைத் தயாராக்கிக் கொண்டான்.

– குளச்சல் செ.வரதராஜன் (நவம்பர் 2011)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *