பூவம்மாவின் குழந்தை

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 15, 2021
பார்வையிட்டோர்: 3,823 
 

(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

இறுகத் தார் பாய்ந்த வேட்டியில் மரத் துரள்களும் மண் தூள்களும் இரண்டறக் கலந்த செம்மண் கோலத்தில் குடிசைக்கு வந்த கன்னையா, கழுத்தில் தொங்கிய கோடரியைக் கீழே வைத்துவிட்டு, குடிசைக்கு முன்னால், வேலிகாத்தான் முட்செடிகள் மொய்த்த இடத்தருகே இருந்த மண் பானையில் இருந்த நீரை, கையாலேயே மொண்டு கால் கைகளைக் கழுவிக் கொண்டே, பாதி திறந்திருந்த குடிசைக்குள் நோட்டம் விட்டபடி, “டேய் ராமா. டேய் ராமா.” என்றான்.

ராமன் திருப்பிக் குரல் கொடுக்கவில்லை. வெய்யில் அடிக்கிற மாலைப் பொழுதில், தந்தை வந்து விடுவார் என்ற அனுமானத்தோடு எங்கெல்லாமோ விளையாடிவிட்டு, அங்கே வந்து திண்ணையில், இரண்டு முழங்கால்களையும் பின்னர்ல் மடித்துப் போட்டுக் கொண்டு, இரண்டிற்கும் இடையே உள்ள இடைவெளியில் தவமிருப்பதுபோல் உட்கார்ந்திருக்கும் அந்த ஏழு வயதுப் புயலுக்கு என்ன வந்து விட்டது? வீட்டுக்குள்ளே படுத்துக் கிடக்கிறானா கையில் காலில் அடிபட்டு, அப்பா பார்த்தால் அடிப்பார் என்று பயந்து குடிசைக்குப் பின்னால் நிற்கிறானா?

மகனுக்காக வாங்கி மடியில் கட்டியிருந்த ஆழாக்கு அரிசிப் பொடியும் அரையாழாக்கு உடச்ச கடலையும் கொண்ட மிக்ஸ்சர் பொட்டலத்தை ஒரு கையால் பிடித்துக் கொண்டே கன்னையா குடிசைக்குள் வந்தான். அங்கே, பையனின் நோட்டுப் புத்தகங்கள் சிதறிக் கிடந்தன.

கன்னையாவுக்குக் கொஞ்சம் பயம் பிடித்துக் கொண்டது. வெளியே வந்தான். அக்கம் பக்கத்துக் குடிசைகளைப் பார்த்தான். அப்போதுதான், ஆண்களும் பெண்களுமாக வேலையிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் கேட்டுப் பிரயோசனமில்லை.

கன்னய்யா, மீண்டும் குடிசைக்கு வந்தான். கை கால் கழுவிய மண்பாணையின் நிழலையே வெறித்துப் பார்த்தான்.

அவனுக்குப் பயம் பிடித்துக் கொண்டது. யாராவது நரபலிச் சாமியார் வந்திருப்பானோ.

தொலைதூரத்தில் தெரிந்த சுடுகாட்டில், சில பையன்களின் தலைகள் தெரிந்தன. கன்னையா ஒட்டமும் நடையுமாக அங்கே பாய்ந்தபோது, அங்கே நின்ற பையன்கள் அவனைப் பார்த்து ஒடி வந்தார்கள்.

“ராமனைப் பார்த்தீங்களாட்ா?”

“அதச் சொல்லத்தான் ஒடி வாறோம்.”

“சொல்லுங்கடா. சிக்கிரமாச் சொல்லுங்கடா.”

“ராமன அவனோட அம்மா வந்து துரக்கிக்கினு போனாங்க.”

“யாரு?”

“அதான் ஒங்களோட பழைய சம்சாரம்.”

“எப்போடா வந்தாள்?”

“மத்யானமா ராமன் ஸ்கூல்ல இருந்து வீட்டுக்கு வந்தப்போ அவனோட அம்மா வந்தது. ராமனத் தூக்கிக்கினு போச்கது.”

“அவன் சும்மா இருந்தானா?”

“இல்ல. திமிறினான். அம்மா வாயில குத்தினான். வயித்துல உதச்சான். அப்பா அப்பான்னு அயுதான்.”

கன்னய்யா குடிசைக்குள் ஒடினான். பரணில் சொருகி வைத்த பிச்சுவாக்கத்தியை இடுப்பில் சொருகிக் கொண்டான். ஏழு கிலோமீட்டர் தொலைவில் உள்ள இன்னொரு சேரிப் பகுதியை நோக்கி ஓடினான்.

பத்து வருடங்களுக்கு முன்பு, பூவம்மாவைப் பிடித்த கையை இப்போது நெறித்துக் கொண்டான்.

டெய்லர் கந்தரத்தை நினைக்க நினைக்கப் பற்கள் தானாகக் கடித்துக் கொண்டன.

அவனோடு ஓடிப்போன நாய் இப்போது ஏன் வந்தாள்? என்ன தைரியத்தில் பையனைத் துரக்கிப் போனாள்?

அய்ந்து வருடத்திற்கு முன்பு, டெய்லர் கந்தரத்திற்குப் பெண் பார்த்ததே இவன்தான். அவசரக் கைமாற்று நூறு ரூபாய் கொடுத்ததும் இவன்தான். அவன் மனைவி, தன்னை ‘அண்ணாத்த அண்ணாத்த என்று வார்த்தைக்கு வார்த்தை சொல்லும்போது, சொந்த சகோதரன்போல அவளைப் பார்த்து, பாசத்தால் பாகானவனும் இவன்தான். இரண்டு வருடத்திற்கு முன்பு, டெய்லர் கந்தரம் ஊரில் வீடு கட்டியபோது, அந்த வீட்டிற்கு ஒரு குத்துவிளக்கை வாங்கி வைத்தவனும் இவன்தான்.

அந்த விளக்கையே அணைக்கிறவள் மாதிரி, பூவம்மா அந்த வீட்டுக்கு ஒடி விட்டாள். சுந்தரத்தின் மனைவிக்கும் துரோகம், இவனுக்கும் துரோகம்.

கன்னய்யா குரங்குக் குல்லாய் மாதிரி நுனி சிறுத்து அடி பெருத்த செங்கல் மகுடத்தைச் சூட்டிய அந்த வீட்டுக்குள் நுழைந்தான். நுழைந்ததும், தன்னையறியாமலே, வலது கால் தரையை மிதித்த வேகத்தில், பூமியே குலுங்குவது போல் இருந்தது. ஏதோ ஒரு ஆபாசமான மாத நாவலைப் படித்துக் கொண்டிருந்த பூவம்மா, அவனைப் பார்த்ததும், கண்கள் நிலை குத்த, வலது கையின் பெருவிரலும், சிறு விரலும் ஒன்றை ஒன்று அழுத்த, சிறிது நேரம் அப்படியே பார்த்துக் கொண்டிருந்தவள். பிறகு இடது கையை தரையில் ஊன்றிக் கொண்டுபோய் உடம்பை மேலே நிமிர்த்தவும் முடியாமல், கீழே வீழ்த்தவும் முடியாமல், கையை காலாக, ஒற்றைக்கால் மிருகம் போல் அவனைப் பார்த்தாள்.

டெய்லரின் ஒரிஜினல் மனைவி பாப்பம்மாள், குப்புறப் படுத்துக் கிடந்தாள்.

பூவம்மா, மீண்டும் எழுந்திரிக்கப் போவதைக் கண்டதும் கன்னய்யா அதட்டினான்.

“அப்படியே இருந்த இடத்துல இருடி. இல்ல. நான் ஜெயிலுக்குப் போவ வேண்டியிருக்கும்.”

பூவம்மாளின் அருகே, நீர்த் திட்டங்கள் இரு கன்னக் கதுப்பிலும் கரையாய்ப் படிந்திருக்க, விழியோரத்தில் ஈரப் பசை, இமை இரண்டையும் ஒட்டும்படி பிடித்திருக்க, தொண்டையைச் சொறிந்து கொண்டே, சூன்யமாகப் பார்த்துக் கொண்டிருந்த ஏழு வயதுச் சிறுவன் ராமன், அகர வேகத்தில் ஒடி வந்து கன்னையாவின் கால்களைக் கட்டிக் கொண்டான். மோவாய், தந்தையின் முட்டிக் கால்களில் தொட்டு நிற்க, முட்டிக் கால்களுக்கு மேலே நீட்டிய தலையை அங்குமிங்குமாக ஆட்டினான்.

டெய்லரின் மனைவி, கண்களைத் திறந்து கழுத்தை வளைத்துப் பார்த்தாள். பிறகு, திடீரென்று எழுந்து, அந்த நிலையிலும் தன் மாராப்புச் சேலையைச் சரியாக்கிக் கொண்டு, சிறிது நேரம் அவனையே மெளனமாகப் பார்த்தாள். முப்பது வயதிருக்கும். பூஞ்சை உடம்பு நிஜக் கருப்பு. திடீரென்று அவள் கத்தினாள்.

‘அடுத்துக் கெடுத்த துரோகியின் வீடு இது அண்ணாத்தே இங்கேயா அண்ணாத்தே வந்து நிக்கிற என்னால ஒன்னை உட்காருன்னு சொல்ல முடியலியே அண்ணாத்த சொல்ல முடியலியே! என் மனசே இந்தப் பாடு படும்போது, ஒன் மனக என்ன பாடு படுதோ. நான் சண்டாளி அண்ணாத்தே எனக்குச் சந்தேகம் வந்தப்பவே ஒங்கிட்ட சொல்லியிருக்கணும். புருசனைக் காட்டிக் கொடுக்கக் கூடாதுன்னு நெனச்சு கட்சில என்னையே காட்டிக் கொடுத்துட்டேன். ஒன் மனசு கஷ்டப்படக் கூடாதுன்னு நெனச்சு இப்போ ஒனக்கும் எனக்குமா கஷ்டத்த குடுத்திட்டேன் அண்ணாத்தே. நான் யார் கிட்ட சொல்ல? சொன்னாலும் தீருற குறையா?”

கன்னையா, அவளை வெறித்து வெறித்துப் பார்த்தான். பிறகு, நாவல் புத்தகத்தைப் பிரித்து, பாதி முகத்தை மூடிக் கொண்டிருந்த பூவம்மாவைப் பார்த்தான். மகனைத் துரக்கி வலது தோளில் அனைத்தபோது, அந்தச் சிறுவன் காலை உதறினான். பிச்சுவா பட்டதால் பயல் உதறுவதைப் புரிந்துகொண்ட கன்னையா, சிறுவனை வலது கைக்குப் பதிலாக, இடது கை அணை போட இடது தோளுக்குக் கொண்டு வந்து போட்டான். சிறுவன், தன் மோவாயைக் கன்னையாவின் தோள் பட்டையில் அழுந்திப் பதித்து, கண்களை மூடிக் கொண்டான். கன்னையா வெளியே நடக்கப் போனான்.

டெய்லரின் மனைவி அவனை வழி மறித்தாள்.

“அண்ணாத்தே. தயவு செஞ்சி இந்தக் கழுதையை கட்டிக்கிட்டுப் போ அண்ணாத்தே. அப்படிப் பாக்காத, எனக்குப் பயமா இருக்கு. ஒன்ன இவளோட குடித்தனம் பண்ணுன்னு சொன்னா. என் வாய் அழுவிடும். அப்படி நீ குடித்தனம் பண்ணினால் நீ அழுவிப் பூடுவ. நான் அப்படிச் சொல்லல. ஆனால் இவள் இங்கே வந்ததிலிருந்து என் புருஷன் என்னை தினம் அடி அடின்னு அடிச்சி மிதிமிதின்னு மிதிச்சுப் போடறான்.”

அவள் விம்மினாள்.

கன்னய்யா, முதல் தடவையாகப் பேசினான். புருவத்திற்குக் கீழே இருந்த இரண்டு ரத்தக் கட்டிகள் தெறித்து விடும்படி கத்தினான்.

“என்னை என்ன செய்யச் சொல்ற நான் இன்னாதான் பண்ண முடியும் ஒண்ணே ஒண்னு பண்ணலாம் என் மவனை எந்த மவராசன் கையக் காலாவது பிடிச்சு அனாதை ஆசிரமத்துல அடச்சிட்டு, நான் துரக்குப் போட்டுச் சாவலாம். வேற என்னத்த பண்ண முடியும்?”

“இவள இங்க இருந்து முடியப் பிடிச்சி இஸ்துக்கினு போ. வெளில கொண்டு போயி என்னா வேனுமானாலும் பண்ணு. கொல்லனுமினாலும் கொல்லு. அண்ணாத்தே, இந்தக் கயிதய கழுத்தப் பிடிச்சி வெளில தள்ளு அண்ணாத்தே.”

கன்னிய்யா பல்லைக் கடித்துக் கொண்டே பதிலளித்தான்.

“இவள் கழுத்தப் பிடிக்க எனக்கு ரைட் இல்ல. அதுல கிடக்கிறத வாணுமுன்னால் கேக்கலாம். பூவம்மா ஒன்னத்தான் ராசாத்தி. ஒன் கயுத்துல கிடக்கிற தாலிய மரியாதியா கழட்டிக் கொடுக்கிறியா மவராசி! புண்ணியவதி கொடுத்திடும்மா. ஏதோ நாலு பேரு தீர்மானிச்சாங்களேன்னு போட்டேன். நான் போட்ட கயிறு ஒனக்கு சுருக்குக் கயிறா பூட்டுது. பரவால்ல. இப்போ அதை கழட்டிக் கொடுப்பியாம். ரெண்டு குண்டுமனி தங்கத்துக்காவ கேக்கல. நம்ம நாட்ல தாலிக்கு இன்னும் மதிப்பிருக்கு. அதனாலதான் கேக்கறேன். குடுக்கிறியா புண்ணியவதி”

பூவம்மாள் கழுத்துப் பக்கம் கைகளைக் கொண்டு போகவில்லை.

“கழட்டுடி தாலிய தேவடியாளுக்கு எதுக்குடி தாலி அதக் கழட்டுறியா. இல்ல, கழுத்தோட சேத்துத் தாலிய எடுத்துக்கணுமா? உம் சீக்கிரம்”

பூவம்மாள் தன்னை நோக்கி இரண்டி நடந்த கன்னய்யாவைப் பார்த்துக் கொண்டே, தாலிக் கயிற்றைக் கழட்டி அவனிடம் நீட்டினாள். அவன் அதட்டினான்,

“தரையில வைடி”

வைத்தாள்.

கன்னய்யா அந்தத் தாலிக் கயிற்றை எடுத்து, தலையைச் கற்றி மூன்று தடவை கொண்டு வந்துவிட்டு, பிறகு அதன்மேல் காறித் துப்பிவிட்டு, வீட்டுக்கு வெளியே எறிந்தான். அது எச்சிலையை நக்கிக் கொண்டிருந்த நாயின் மூக்கில் போய் விழுந்தது.

டெய்லர் மனைவி கேவிக் கொண்டே பேசினாள்.

“இவள் கொண்டையப் பிடிச்சு எங்கேயாவது இழுத்துப் போட்டுட்டுப் போயிடு அண்ணாத்தே இவள் என்னைக்கு வந்தாளோ அப்போ பிடிச்சு உதை திங்கறேன் அண்ணாத்தே. இந்தா பாரு என் முதுகில. அவன் சூடு வச்சிருக்கிறத. தோ பாரு கழுத்து பிஞ்சி இருக்கிறதை. ஒனக்குப் புண்ணியம் உண்டு அண்ணாத்தேட இந்தத் துத்தேறி முண்டயைக் கண் காணாத இடத்துல விட்டுட்டுப் பூடு.”

கன்னய்யா பதிலேதும் சொல்லாமல் பையனோடு அந்தக் குடிசையிலிருந்து வெளியேறப் போனான். திடீரென்று, யாரோ மோதுவதுபோல் தோன்றவே, திரும்பிப் பார்த்தான்.

டெய்லர் சுந்தரம், அவனை முறைத்துப் பார்த்துக்கொண்டே, வாசலின் ஒரு பக்கம் சாய்ந்துகொண்டு, வலது கையை நீட்டி, அவனை வழி மறித்தான். இதற்குள், பூவம்மா ஒடிவந்து கத்தினான்.

“என் கொயந்த. என் கொயந்த… என் கொயந்தயத் துரக்கிக்கினு போறான். கொயந்தய வாங்குங்க. கொயந்த இல்லாம என்னால இருக்க முடியாது. கொயந்த. அய்யோ. குயந்த.”

டெய்லர் கந்தரம் நீட்டிய கையை மடக்காமலே, “கொயந்தய இங்கே விட்டுட்டுப் போ. இல்லே, நீ எங்கேயும் போக முடியாது” என்றான்.

கன்னய்யா பதில் பேசவில்லை. இடுப்பில் சொருகியிருந்த பிச்சுவாவை எடுத்து வலது கையில் பிடிப்பக்கத்தைப் பிடித்துக் கொண்டே, “கைய எடுக்கிறியா, இல்லே, இதால எடுக்கணுமா?” என்றான்.

இதை எதிர்பாராத சுந்தரம், வெளியே ஒடினான். ஒடியவன், ஒரு பெரிய கல்லோடு திரும்பி வந்தான். கல்லாலும், கத்தியாலும் ஒருவரை ஒருவர் குறி பார்த்தபோது, டெய்லரின் கட்டிய பெண் டாட்டியும் கட்டாத பெண்டாட்டியும் கன்னய்யாவின் தோளில் கிடந்த ராமனும் பயத்துடன் கூச்சலிட்டார்கள். அவர்கள் கூச்சல் அக்கம் பக்கத்துக்காரர்களை கூட்டி விட்டது. கூலி வேலைக்குப் போய்விட்டு, திரும்பி வந்தவர்கள், தத்தம் வீடுகளுக்குப் போகாமலே, அங்கே கூடிவிட்டார்கள். எப்படியோ விவகாரத்தை கிரகித்துக் கொண்ட ஒரு இளைஞன், கன்னய்யாவுக்குச் சவாலிட்டான்.

“ஏண்டா, ஊர்விட்டு ஊர் வந்தா அடிக்க வந்தே நீ, அவன் மேலே கத்திய நீட்டுறது எங்க மேல நீட்டுறதுக்குச் சமானம். இந்த ஏரியாக்காரனுகள பொட்டைன்னு நினைச்சியா?”

ஒரு நடுத்தர வயதுக்காரர் அந்த இளைஞனை அடக்கினார்.

“சும்மா கிடடா. அவன் பெண்டாட்டியப் பறிகொடுத்த பேஜாருல நிக்கிறான். இதுல ஏரியா மானம் எங்க வந்திருக்கு: நம்ம வீட்டுப் பொண்ணுங்களை யாராவது கூட்டிக்கினு போனால் நாம சும்மா இருப்பமா குடும்ப விஷயத்துல ஊரைக் கட்டித் தோரணம் போடப்படாது. இந்தாப்பா, அவதான் உன்னை உதறித் தள்ளிட்டு வந்துட்டாளே, ஒனக்கு வேற பொண்ணா கிடையாது அவளப் போயி ஏன் கூப்பிட வந்தே”

கன்னய்யா, அமைதியாகப் பேசினான். “நான் அவளைக் கூப்பிட வரலை. என் பையனைத் துரக்கிட்டு வந்துட்டாள். அவ்னை எடுத்துப் போக வந்தேன்.ஒங்க டெய்லரு என்னையக் கைய வச்சு அளவெடுக்கப் பாக்காரு. சோறுபோட்ட மனுசன சாப்பிட்ட பெரிய மனுசன். திருடுபோன என் குழந்தையைத் துரக்கிட்டு போறேன். அவ்வளவுதான் விஷயம்.”

பூவம்மா, ஒரு மூலையில் நின்று கத்தினாள். ‘என் கொயந்தயக் கொடுக்க முடியாது. முடியாதுன்னா முடியாது.”

டெய்லர் கந்தரத்தின் மனைவி – பழைய சட்டைபோல் நைந்திருந்த அவள் – கத்த முடியாமல் கத்தினாள். “அப்படின்னா நீ ஓடிவந்தியே, அப்பவே கொயந்தயக் கொண்டு வந்திருக்கணும். ஆசையில கொயந்தய விட்டுட்டே தாய்க்காரி செய்ற வேலயா?”

கூட்டத்தில், பழைய பஞ்சாயத்துத் தலைவர், பஞ்சாயத்துப் பேசினார். ‘எதுக்கு வீண் பேச்சு? இந்தப் பையங்கிட்ட கேப்போம். யார்கிட்ட இருக்கணுமுன்னு நினைக்கானோ, அவங்ககிட்ட இருக்கட்டும். இதுக்குப் போய்க் கத்தி எதுக்கு, கல் எதுக்கு அவனை இறக்கி விடப்பா.”

கன்னய்யா, தோளில் கிடந்தவனை இறக்கப் போனான். அந்தச் சிறுவன், அவனை நண்டு மாதிரி பிடித்துக் கொண்டு, அட்டை மாதிரி ஒட்டிக் கொண்டான். கன்னய்யா, அவனை வலுக்கட்டாயமாய் விலக்கி, தரையில் நிறுத்தியபோது, மீண்டும் அவன் கால்களைக் கட்டிக் கொண்டான். யாரும் கேட்குமுன்னாலேயே, “அப்பாதான் வேணும். அப்பாதான் வேனும்” என்றான்.

“சரி. அப்பாகிட்டயே இருப்பா என்றார் பஞ்சாயத்து.

பூவம்மா, இப்போது கூட்டத்திற்கு மத்தியில் வந்து நின்று கொண்டு அழுத்தமாகப் பேசினாள். ‘அப்பாகிட்ட இருக்கணுமுன்னு பஞ்சாயத்து செய்துட்டால், கொயந்த அவர்கிட்ட இருக்க முடியாது.” பூவம்மா கன்னையாவின் எதிரே வந்து நின்று சொன்னாள்: ‘எட்டு வருஷத்துக்கு முன்னாடி ஒரு நாள் பின்னி மில்லுக்கு காலையிலேயே வேலையில சேருறதுக்கு சைக்கிள்ல போனியே ஞாபகம் இருக்கா அன்னிக்கு நல்ல மழை. ஞாபகம் இருக்கா? திண்ணையில் படுத்திருந்த இவர வீட்டுக்குள்ள படுக்கச் சொன்னியே. ஞாபகம் இருக்கா? நீ காலையில நாலு மணிக்கெல்லாம். வண்டி பூட்டினு பூட்டியே, ஞாபகம் இருக்கா? இந்தக் கொயந்த.”

கூட்டத்தில் பெண்கள், காதுகளைப் பொத்திக்கொண்ட போது, ஆண்கள் பற்களைக் கடித்தார்கள். கன்னய்யாவைப் பரிதாபமாகப் பார்த்தார்கள்.

கன்னய்யாவும் ஞாபகப்படுத்திப் பார்த்தான். அவள் சொல்லும் தடயங்கள், நெஞ்சில் பாரவண்டிச் சக்கரம் பதிவது போல் தடங்களை ஏற்படுத்தின.

கூட்டத்தில், அவன் மீது அனுதாபத்துடன் உபதேசங்கள் விழுந்தன. “அடுத்தவன் பிள்ளை ஒனக்கு வாண்டாப்பா”

“வெட்கங்கெட்ட மூதேவி பேசுறத பாரு. நீ போப்பா. ஏதோ ஒன் போதாத காலம். இவள் நாயை விடக் கேவலமாப் போகப் போறாள் பாரு.”

கன்னய்யா, நெஞ்சமே கண்ணாம்புக் கால்வாயாக, நெற்றி நரம்புகள், முன்னும் பின்னுமாகத் பின்னிக்கொள்ள, கூட்டத்தைப் பரிதாபமாகப் பார்த்தான். பிறகு கால்களைக் கட்டியபடியே, அதன் இடுக்கில் முகம்போட்டுக் கிடந்த சிறுவனின் கரத்தை விலக்கி, சபையின் முன்னால் நிறுத்தி விட்டு மெல்ல நகரப் போனான்.

அதற்குள் அந்தச் சிறுவன் அவன் பின்னால் ஓடினான். கழன்ற நிஜாரை கழட்டிப் போட்டுவிட்டு, கன்னய்யாவின் கையைப் பிடித்து கொண்டு, அதைத் தன் முதுகோடு சேர்த்து இணைத்துக் கொண்டு, விறைப்பாக நின்றான்.

கன்னய்யா அந்தச் சிறுவனையே பார்த்தான்.

ஏழு வருடமாகக் கண்ணுக்குக் கண்ணாக வளர்த்த பிள்ளை. இரவில் வீடு திரும்பும் போதெல்லாம், அப்பா என்று சொல்லி அரவணைத்த மகன். பெற்றால்தான் பிள்ளையா? இந்த லோலாயி டெய்லரோடும் அதிக நாள் வாழ மாட்டாள். இவளிடம் குழந்தையும் பலியாகனுமா? முடியாது. இவன் என் பிள்ளையா இல்லாட்டியும் இவனுக்கு அப்பன் நான்தான். குயில் முட்டையைக் காகம் அடை காக்கலியா? பெத்தேனோ இல்லியோ, இவன் என் பிள்ளை. இவனைச் சீரழிய விடப்படாது.

கன்னய்யா அந்தச் சிறுவனை மெளனமாகத் தோளில் போட்டுக் கொண்டான். அனைவரும் அசைவற்று நின்றபோது, அவன் மட்டும் குழந்தையோடு அசைந்து அசைந்து நடந்தான். சிறிது துரரம் கடந்ததும், மடியிலிருந்த அரிசிப் பொரி கடலையை பையனின் வாயில் போட்டான்.

பையன் சிரித்தான்.

– குமுதம், 15-3-80

– ஈச்சம்பாய் (சிறுகதைத் தொகுப்பு), முதல் பதிப்பு: டிசம்பர் 1998, ஏகலைவன் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *