பூர்வீக வீடு – ஒரு பக்க கதை

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 31, 2020
பார்வையிட்டோர்: 10,288 
 

தயாளன் எனக்கு ஷேர் மார்க்கெட் டிரேடிங் செய்யும் போது பழக்கம்.

சமீப காலமாய் அவரைப் பார்க்க முடிவதில்லை.ஷேர் மார்கட் பற்றி சரியாக தெரியாமல் இன்ட்டிரா டிரேட் செய்து நன்றாக சம்பாதிக்கலாம் என்று ஆசைப் பட்டு,நிறைய கடன் வாங்கி தற்போது சிக்கலில் இருப்பதாக கேள்விப் பட்டேன்.

நான் எப்போதாவது தான் டிரேட் செய்வேன். மார்க்கட் வீக்காக இருந்தால் அந்தப் பக்கமே போக மாட்டேன்.அதனால் கொஞ்சம் சேஃப் ஆக இருக்கிறேன்.நான் அப்படி இருப்பது தயாளனுக்கு ரொம்ப பிடிக்கும்.என்னிடம் ஏதாவது ஆலோசனை கேட்டுக் கொண்டே இருப்பார்.கல்லூரி படிக்கும் அவரின் இரண்டு பெண் பிள்ளைகளின் படிப்பு சம்பந்தமாக, எந்த பேங்க்கில் வட்டி குறைவாக உள்ளது? இப்படி ஏதாவது கேட்டுக் கொண்டே இருப்பார்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று போன் செய்தார்.உங்களைப் பார்க்க வேண்டும் முக்கியமான விஷயம் பேசனும் என்றார். சரி என்று அவரை உடனே வரச்சொன்னேன்.

ஆள் ரொம்பவே தளர்ந்திருந்தார்.

பார்த்து ரொம்ப நாளாச்சு எப்படி இருக்கீங்க ?என்றேன்

எங்க சார் நிறைய கடன் ஆகிடுச்சு வெளிய தலைகாட்ட முடியல.வீட்டுக்கே வந்து மிரட்றாங்க.மனைவியும் பிள்ளைகளும் பயப்படுறாங்க.நான் இந்த இக்கட்டான சூழ்நிலையிலே இருந்து மீள நீங்கதான் சார் எப்படியாவது ஒரு நல்ல ஐடியா சொல்லனும் என்றார்.

பதட்டபடாதீங்க தயாளன்.முதல்ல உட்காருங்க. உங்களுடைய முழு பயோ டேட்டா தெரிஞ்சாத் தானே என்னால உதவ முடியும்.சொல்லுங்க.

சார் எனக்கு எங்க தாத்தா,அப்பா சம்பாதிச்ச சொத்து நிறைய இருந்தது.

அதனாலதான் நான் எந்த வேலைக்கும் போகாம அதுல இருந்து வருகிற வருமானத்துல என்னோட செலவுகள பார்த்துகிட்டு இருந்தேன்.

ஒரு கட்டத்துல வருமானம் எல்லாம் குறைஞ்சு ஒவ்வொரு சொத்தா வித்துதான் என்னோட பொண்ணுகளோட படிப்பு, வாங்கின கடனுக்கு வட்டி,மத்த செலவுகளை எல்லாம் பார்த்துகிட்டு இருந்தேன்.

இப்போ நாங்க குடிஇருக்கிற பூர்வீகவீடு மட்டும்தான் இருக்கு.என் பிள்ளைகளுக்கு கல்யாணம் பன்னனும்.என்ன செய்யலாம் என்றார்.

வேற வழியில்ல தயாளன் அந்த வீட்டை வித்துதான் உங்க கடனை அடைக்கனும்.

அது எப்படி சார் எங்க அப்பா,எங்க தாத்தா வாழ்ந்த வீடு பூர்வீக வீடுசார்.

அதை வித்தா எங்க கௌரவம் என்னாகிறது.

இவ்வளவு நாளா அவங்க சொத்த வித்து தானே வாழ்ந்தீங்க.அப்பல்லாம் கௌரவம் பார்க்கலியா? நீங்க ஏதாவது வேலைக்குப் போய் உழைத்து சம்பாரிச்சு இருந்தீங்கன்னா உங்க பூர்வீக சொத்தை காப்பாத்தி இருக்கலாம். பரவாயில்ல இப்பவும் உங்கள உங்க பூர்வீக சொத்து தான் காப்பாத்த போகுது.

எப்படி சார்?

நீங்க உங்க வீட்டை வித்து உங்க கடனையும் அடைச்சுட்டு, உங்க பொண்ணு கல்யாணத்தையும் முடித்து மீதி பணத்துல அவுட்டர்ல ஒரு வீடு வாங்கிடலாம். நீங்களும் ஏதாவது தொழில் ஆரம்ப்பிக்கலாம்.உங்க வீடு இருக்கிற இடம் அப்படி.நிச்சயம் நல்ல விலைக்குப் போகும்.

உங்களை காப்பாத்துறதுக்கு தான் இந்த பூர்வீக வீட்டை உங்க தாத்தா கட்டினதா நினைச்சுக்கோங்க.

நீண்ட யோசனைக்குப்பின் புறப்பட்டுச் சென்ற தயாளன்

இரண்டு மாதத்திற்குபின் அவர் மகள் கல்யாணப் பத்திரிகை யோடு என்னைப் பார்க்க வந்தார்.

அவருடைய பூர்வீக வீடு அவரை காப்பாற்றியது.அவர் உழைப்பதற்கும் பிள்ளையார்சுழி போட்டிருக்கு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *