கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 10, 2013
பார்வையிட்டோர்: 12,848 
 

சென்னைக்கு வந்து 10 வருடங்களாயிற்று. கோகுல் இப்போது முழுக்க முழுக்க சென்னைவாசியாகிவிட்டான். அபார்ட்மென்ட் வீடு. மனைவி கிருஷ்ணவேணிக்கு போதுமான நகைகள். மகன் ஸ்ரீராம் மெட்ரிக்குலேஷனில் செவன்த் படிக்கிறான். கண்ணை மூடி கண்ணைத் திறப்பதற்குள் இந்த 10 வருடம் எப்படி ஓடியது என்றே தெரியவில்லை.

படித்து முடித்தவுடன் ஓட ஆரம்பித்த ஓட்டம்… இப்போதுதான் சற்று நிதானத்துக்கு வந்திருக்கிறது. வேலை…வேலை… என்று வேலைக்காக அலைந்து திரிந்த சில வருடங்கள்…, கல்யாணம்… கல்யாணம்… என்று கல்யாண பரபரப்பில் சில வருடங்கள்.

இடையில் அப்பாவின் மரணம். இப்போதுதான் கொஞ்சம் இளைப்பாற கோகுலுக்கு நேரம் கிடைத்திருக்கிறது.

புள்ளி கோடுநல்லவேளை கணபதி மாமா அட்வைஸ் படி கம்ப்யூட்டர் கிராபிக்ஸ், 3 டி அனிமேஷன் என லொட்டு லொசுக்கு மென்பொருளையெல்லாம் படித்து வைத்ததின் விளைவு, இன்றைய அமைதியான வாழ்க்கை.

அவன் அலுவலகம் மிகப் பெரியது. அவன் நிறுவனம் பிரபல ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு டிசைனிங் செய்து கொடுப்பதில் பெயர் பெற்ற நிறுவனம். அதில் கோகுலுக்கு மிகப் பெரிய பங்களிப்பு உண்டு. ஆம் கோகுல் கம்ப்யூட்டர் முன் அமர்ந்தால் 1 மணி நேரத்தில் ஒரு டிசைன் உருவாகி விடும். அபார சுறுசுறுப்பு… நிறைய கற்பனை வளம். இதுவே கோகுலின் தனித்தன்மை.

இந்த பெருமிதத்துடன் அவன் தன் கம்ப்யூட்டரை ஆஃப் செய்தான். இன்று சீக்கிரமாக கிளம்ப வேண்டும். காலையிலேயே 1 மணி நேர பெர்மிஷன் எழுதி கொடுத்திருந்தான். அம்மா இன்று ஊரிலிருந்து வருகின்றார்கள். அப்பாவின் மரணத்துக்கு பிறகு அம்மாவினால் ரொம்ப காலம் தனித்து வாழ முடியவில்லை.

வீரவநல்லுர்தான் கோகுலின் சொந்த ஊர். நெசவாளர்கள் நிறைந்திருக்கும் ஒரு பகுதியில் அவன் வீடு. அகன்ற சாலை. அவன் வீட்டின் முன் பெரிய முற்றம். அந்த முற்றம் முழுவதும் 2 பக்கெட்டில் சாணநீர் தெளிக்க அம்மா காலை 5 மணிக்கே தயாராகி விடுவார். பொறுமையாக சாணம் தெளித்து, முற்றம் நிறைய கோலம் போட்டு அம்மா பூரிப்புடன் வீட்டிற்குள் வர ஒன்றரை மணி நேரம் ஆகிவிடும்.

மார்கழி, தை மாதங்களில் பூசணிப் பூக்கள் சொருகிய சாணி உருண்டைகளை கோலத்தின் மீது வைத்து அம்மா அழகு பார்ப்பாள்.

இதற்கு தேவையான சாணங்களை வீரவநல்லூர் வீதியில் எங்கே பார்த்தாலும் அதை சேகரித்து கொடுக்க வேண்டிய வேலை கோகுலுக்கு உண்டு.

மற்றபடி அம்மாவின் வாழ்க்கை சமையலறையில்தான். வற்றல்கள் மட்டும் கோகுல் வீட்டில் எப்போதுமே விதம்விதமாக ஸ்டாக் இருந்து கொண்டே இருக்கும். சீனியவரைக்காய் வத்தல், வெங்காய வத்தல், பாகற்காய் வத்தல், குறுத்தக்காளி வத்தல் அடேயப்பா… சிக்கனமாய் செலவு செய்து, பெரிய விருந்து சுவையாக படைப்பதில் கோகுலின் அம்மா கில்லாடி… அப்பா காலமான பிறகு அம்மாவின் வாழ்க்கையில் பெரிய விரக்தி ஏற்பட்டாலும், சமையலிலும், கோலத்திலும் இன்னும் தன் ஆளுமையை அவள் இழந்து விட வில்லை.

அவளுக்கும் வயதாகிவிட்டது. இனி தனித்து வாழ்வது சிரமம் என்று புரிந்து கொண்டாள். போன பொங்கலுக்கு ஊருக்கு போன போது அம்மாவே கோகுலிடம் கேட்டாள்.

“”நானும் உங் கூடவே மெட்ராசுக்கு வந்துரட்டுமா… இந்த வீட்டை வேணா வித்திருவோம். கடைசிக்காலம் உன் வீட்டுலேயே கழியட்டும்…”

அம்மாவின் வார்த்தைகளுக்கு கோகுலுக்கு முழு அர்த்தமும் தெரியவில்லை. ஆனால் சந்தோஷப்பட்டான்.

“”வீட்டை விக்கிறது பத்தி அப்புறம் யோசிப்போம். நீ இப்பவே வேணும்னாலும் எங்கூட சென்னைக்கு வா…”

அம்மா உடனே கிளம்பவில்லை. கோடையில் வருவதாகச் சொன்னாள். அம்மாவுக்கு வேண்டிய ஒரு சில தட்டு முட்டு சாமான்களுடன் வந்து கொண்டிருக்கிறாள்.

இரவு நேர தனிமையான இரயில் பயணத்திற்கு அம்மா பயந்த காரணத்தினால் விடிகாலை 5 மணிக்கு நெல்லையிலிருந்து புறப்பட்டு வந்து கொண்டிருக்கிறாள். மாலை 5 மணிக்கு இரயில் வந்து விடும். இப்போது கிளம்பினால்தான் சரியாக இருக்கும்.

கோகுல் எம்.டி.யிடம் சொல்லிவிட்டு 4 மணிக்கு அலுவலகத்தை விட்டு புறப்பட்டான். அம்மாவையும் அழைத்து வர வேண்டும் என்பதற்காக அவன் பைக்கை தவிர்த்து, ஆட்டோவில் பயணமானான்.

எழும்பூர் ரயில் நிலையத்தில் நுழையும்போது மணி 4.30 ஆகிவிட்டது. பரபரப்பாக பிளாட்பார்ம் டிக்கெட் வாங்கி விட்டு, உள்ளே சென்றான். ரயில் ஏற்கெனவே வந்து கால்மணி நேரம் ஆகிவிட்டது.

பிளாட்பார பெஞ்சில் அம்மா அங்கே உட்கார்ந்து இருக்கிறாள்.

போர்ட்டர் உதவியுடன் லக்கேஜ்களை ஏற்றிக் கொண்டு ஆட்டோவில் பயணப்பட்டான். அம்மா சென்னையை மிரட்சியுடன் பார்த்துக்கொண்டே வந்தாள். சினிமாவில் மட்டுமே சென்னையை பார்த்த அம்மா, இப்போதுதான் நேரடியாக சென்னையை பார்க்கிறாள். கோயிலை கண்ட இடத்திலெல்லாம் அம்மா கும்பிட்டு கொண்டாள்.

ராயல் அப்பார்மென்டில் ஆட்டோ நுழைந்தது. “”இவ்வளவு பெரிய வீடா…” அம்மா ஆச்சரியமாக கேட்டாள். அவள் அபார்ட்மென்டை இப்போதுதான் பார்க்கிறாள். “”அம்மா இதுக்கு பேரு வீடு இல்லை… அபார்மென்ட்… அடுக்குமாடி குடியிருப்பு. இதுக்குள்ள 200 வீடு இருக்கு. நம்ம ஊர்ல முன்வாசல், பின் வாசல்ன்னு ரெண்டா பிரிச்சு போர்ஷனை வாடகைக்கு விடுவாங்கல்ல…அது மாதிரிதான் இதுவும். அம்மாவின் உற்சாகம் வடிய ஆரம்பித்தது.

“”ஏன்டா, நம்ம வீட்டை விட பெரிய வீடுன்னு சொன்னியே…”

ஆமாம்மா… நம்ம வீடு 1200 சதுரஅடிதான். இது 1750 சதுரஅடி.

அம்மாவுக்கு கோகுல் சொன்ன சதுர அடிக் கணக்கு புரியவில்லை.

அம்மாவை லிப்டில் ஏற்றி வீட்டுக்குள் வருவதற்குள் கோகுலுக்கு வியர்த்து விட்டது. சரி வீட்டுக்குள் வந்து பார்த்தால் அம்மா சந்தோஷமாகிவிடுவாள் என்று கோகுல் தன்னைச் சமாதானப்படுத்திக்கொண்டான்.

வாசலுக்கு வந்தவுடன் அம்மா இந்த கேள்வியைக் கேட்பாள் என்று கோகுல் எதிர்பார்க்கவில்லை.

“”இதுதான்… வாசலா… காலையில் கோலம் போட முடியாது போல இருக்கே…”

“”அம்மா… இங்கயெல்லாம் யாருமே தினசரி கோலம் போட மாட்டாங்க… ஒரு வருஷப் பிறப்பு, பொங்கல்னா சிறிசா ஒரு ரங்கோலி போட்டுக்கலாம் அவ்வளவுதான்… வா… நீ உள்ளே வந்து பாரு…”

அம்மாவை வீட்டிற்குள் உற்சாகமாய் அழைத்து சென்றான்.

மழைக்காலத்தில் வீதியில் சர்வஜாக்கிரதையாக நடந்து செல்பவனைப் போல, அம்மா டைல்ஸ் தரையில் நடந்தாள்.

சில நாட்களில் அம்மாவின் நடையே மாறிப்போனது. பட்டணம் அவளை பயமுறுத்தத்தான் செய்தது. இந்த புதிய வாழ்க்கை அவளுக்கு நிறையச் சிரமங்களை தந்தாலும் பொறுத்துக் கொண்டாள். சகிக்கவே முடியாத சில விஷயங்களுக்கு மட்டும் என்னிடம் ஆலோசனை கேட்பாள். கிராமங்களில் ஒரு பழமொழி சொல்வார்களே, கழுதைக்கு வாக்கப்பட்டாச்சு… அது மாதிரி அம்மா பட்டணத்து வாழ்க்கையைக் கொஞ்சம் கொஞ்சமாக பழக ஆரம்பித்தாள்.

சரி, ஆசைப்பட்டபடியே அம்மாவும் தன்னோடு வந்துவிட்டாள். இனி நீண்டதொரு சமவெளி பயணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தவனுக்கு அலுவலகத்தில் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.

“”கோகுல்… உங்க கேரியர்லேயே இப்படி நடக்கிறது இதுதான் ஃபர்ஸ்ட் டைம். நீங்க போட்டுக் கொடுத்த டிசைன்ûஸ எந்த கம்பெனியும் இது வரைக்கும் திருப்பி அனுப்புனதில்லை. ஒரு சில கரெக்ஷன்ஸ் வேணா வந்திருக்கலாம். அதனாலதான் இந்த புராஜக்ட்டை உங்க கிட்ட கொடுத்தேன். நீங்க போட்ட 300 டிசைன்ûஸயும் திருப்பி அனுப்பிட்டாங்க. நார்த்ல இருந்து ரிட்டர்ன் அனுப்பினாலும் நான் ஷாக் ஆக மாட்டேன். சவுத்லேயிருந்து ரிட்டன் வந்திருக்கு. அதுவும் இந்த கம்பெனிக்கு இப்பதான் நாம ஃபர்ஸ்ட் டைமா அப்ரோச் பண்றோம் என்னாச்சு கோகுல்… என்ன பண்ண போறீங்க…

எம்.டி.யின் சூடான வார்த்தைகள் கோகுலுக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. கோகுல் என்றால் அந்த அலுவலகத்தில் ஒரு பெரிய இமேஜ் இருந்தது. அந்த இமேஜ் கேள்விக்குறியாகி விடுமோ என்ற கவலை மனசுக்குள் தொற்றிக் கொண்டது.

இரண்டு நாளைக்குள் அந்த கம்பெனியின் ஆர்டரைப் பிடித்தே தீர வேண்டும். வெறியோடு கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்தான். அலுவலகத்தில் தொடங்கிய பணியை வீட்டிலும் தொடர்ந்தான். அவன் அறையினுள் உள்ள கம்ப்யூட்டரில் முழ்கி போயிருந்தான்.

“”பந்து விளையாட வாப்பா…” என்ற நச்சரித்த ராமை ஓர் அதட்டல் போட்டு துரத்தி விட்டான்.

இரவு உணவோடு கிருஷ்ணவேணி அவன் அறைக்குள் நுழைந்தாள். மாலையில் கொண்டு வந்த காபி அப்படியே இருந்தது. அவன் முக இறுக்கங்களைப் பார்த்த கிருஷ்ணவேணி ஏதாவது ஆறுதலாக பேசுவோமே என பேச ஆரம்பித்தாள்.

“”ஏங்க… ஆபீஸ்ல எதனாச்சும் பிரச்னையா..?”

கோகுலிடமிருந்து பதில் இல்லை.

“”உங்களைத்தானே கேட்கேன்…”

“”உனக்கு சொன்னா புரியாது… போ… போய் படு… என்னை டிஸ்டர்ப் பண்ணாதே…”

கோகுல் கம்ப்யூட்டரில் இருந்து முகத்தை திருப்பாமலே பதில் சொன்னான்.

இதற்கு மேல் பேசினால் கோகுல் பிராண்டி விடுவான் என கிருஷ்ணவேணிக்கு தெரியும்.

“”கோகுல், அம்மா ஒண்ணு கேட்பேன்… நீ கோபப்படக்கூடாது…

நம்ம ஊர்ல இருக்கிற மாதிரி கழிவறை இந்த அபார்மென்ட்ல பொதுவா எங்கியாவது இருக்கா…”

“”ஏம்மா… என்னைப்படுத்துற… பழகிக்கோம்மா… எல்லாம் சரியாயிடும்… டாய்லெட்டுக்காக வெளியே போனா அது என்னை கேவலப்படுத்துற மாதிரி இருக்கும்மா…”

“”அய்யய்யோ… அப்படியெல்லாம் இல்லைடா… பக்கத்துல எங்கியாவது இருந்தா வசதியா இருக்குமேன்னு நினைச்சேன்… அவ்வளவுதான் வேற ஒண்ணுமில்லை… நீ ஒண்ணும் தப்பா எடுத்துகிடாதடா…”

“”ஏம்மா இந்த வீடு உனக்கு வசதியாயில்லையா…”

“”ச்சே… ச்சே… நான் அப்படி சொல்லலைடா… இந்த வீட்டுல எல்லா வசதியும் இருக்குடா… ஆனாலும் ஏதோ ஒண்ணு குறையுதடா… சரி பரவாயில்லை இருக்கட்டும். நீ ஆபீஸ்லேயிருந்து நாளைக்கு வரும்போது ஒரு நோட்டும் பென்சிலும் வாங்கிட்டு வருவியா…”

“”இந்தா இப்பவே தாரேன்…”

மேஜை டிராயரில் போன வருஷத்து டைரி ஒண்ணு காலியாக இருந்தது. அதையும் பென்சிலையும் எடுத்துக் கொடுத்தான். அம்மா வாங்கிக்கொண்டு மெüனமாகச் சென்றுவிட்டாள்.

மற்ற நாட்களைவிட இன்றைக்கு கோகுலுக்கு பரபரப்பும் படபடப்பும் அதிகமாகவே இருந்தது. ஆம். எந்த கம்பெனி கோகுலின் டிசைன்களை திருப்பி அனுப்பியதோ, அதே கம்பெனிக்கு 2 நாள் அவகாசத்திற்குள் வேறு டிசைன்களை அனுப்பி வைத்து, அவர்களின் பதிலை இன்று எதிர்பார்த்து காத்திருந்தான் கோகுல்.

இந்த முறையும் அவனது நம்பிக்கைகள் தவிடு பொடியாகின. எம்.டி. கோகுலை வறுத்து எடுத்துவிட்டார். பெரிய அவமானமாகிவிட்டது. அந்த கம்பெனி மீது கோபம் கோபமாக வந்தது. ரசனை கெட்ட மனிதர்களாக இருப்பார்களா… அல்லது வேண்டுமென்றே செய்கிறார்களோ… இதற்கு மேல் என்ன செய்து விட முடியும்.

பரிகாரம் காண புதிய சிந்தனைகள் எதுவுமே தோன்றவில்லை. இடி விழுந்தாற்போல தன் சேரில் போய் அமர்ந்தவனுக்கு மற்றொரு அடி கிருஷ்ணவேணியின் போனில்…

“”ஏங்க…உங்க அம்மா திடீர்னு நெஞ்சு வலின்னாங்க… ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போறேன்… நீங்க சீக்கிரம் வாங்க…”

அவ்வளவுதான். காலுக்கு கீழே உள்ள பூமி நழுவுவதைப் போல் தோன்றியது. தடதடவென புறப்பட்டான். இவன் வேகத்தை விட காலனின் வேகம் அதிகமாவே இருந்தது. கோகுல் மருத்துவமனையில் நுழையும் போதே அம்மாவை ஆம்புலன்ஸில் ஏற்றிக் கொண்டிருந்தார்கள். உயிரற்ற சடலமாக…

எல்லாம் கண நேரத்தில் முடிந்துவிட்டது. 2 நாட்கள் தன்னைச்சுற்றி என்ன நடக்கிறது என்பது உறைக்காமலே கோகுல் நடைபிணமாக வாழ்ந்தான். யார் யாரோ வந்தார்கள்… யார் யாரோ…சென்றார்கள். கடைசி விருந்தினராக கணபதி மாமா கிளம்ப தயாராகிக் கொண்டிருக்கும் போதுதான் செல்போன் சிணுங்கியது. அழைத்தது எம்.டி. “”கோகுல் உங்க பொசிஷன் எனக்கு புரியுது, ஆனால் கம்பெனிக்கு ரொம்ப அவசரம். இந்த புராஜக்ட்டை வேற யார் கிட்டயாவது கொடுத்துரட்டுமா?”

எம்.டி.யின் இந்த கேள்வி கோகுலுக்கு மிகுந்த அவமானத்தை தந்தது. ஆத்திரத்தை அடக்கிக் கொண்டான்.

“”சார், 2 நாள் டைம் கொடுங்க, முடிச்சு காட்டுகிறேன்”

கோபத்தில் இப்படி பேசி விட்டாலும் கோகுலுக்கு அது சாத்தியமா என்பது தெரியவில்லை. மன உளைச்சலுடன் மொட்டை மாடிக்கு சென்றான். நொடியில் தனது கற்பனை வளம் முழுவதுமாக வற்றிப் போனதாக உணர்ந்தான். தன் மூளை உழைப்பை நிர்வாகம் ஒட்டுமொத்தமாக உறிஞ்சி விட்டது போல தோன்றியது.

அந்த அச்சத்திலேயே கம்ப்யூட்டர் முன் உட்காராமல் வீட்டிற்குள் முடங்கி கிடந்தான். எந்த அறையில் போய் உட்கார்ந்திருந்தாலும் அலுவலக நினைப்புதான் ஆதிக்கம் செலுத்தியது.

“ச்சே… அம்மா இறந்த 2 நாளைக்குள், அதை மறந்துவிட்டு அலுவலகம் பற்றி யோசித்துக் கொண்டிருப்பது தவறு’ என்று நினைத்து தன் நினைவோட்டங்களை அம்மா பக்கம் திருப்ப விரும்பினான்.

நேராக அம்மாவின் அறைக்கு சென்றான். அம்மா கடைசியாக தங்கியிருந்த அறை. அந்த அறை முழுவதும் அம்மாவின் ஆன்மா உலவுவதை போல ஒரு பிரமையை தந்தது. வெகு சுத்தமாக வைத்திருந்தாள்.

வீரவநல்லூர் வீட்டில் அம்மா எப்படி வீட்டினை வைத்திருந்தாளோ, அதேபோல் அந்த அறையை வைத்திருந்தாள். பெட்டில் தலையணைமேல் ஒரு நாள் இரவில் அவன் அம்மாவிடம் கொடுத்த பழைய டைரியும் ஒரு பென்சிலும் இருந்தது.

அம்மாவுக்கு டைரி எழுதும் பழக்கம் கிடையாது என்பது கோகுலுக்கு தெரியும். பின் இதில் என்ன எழுதியிருப்பாள். ஒரு ஆர்வத்துடன் டைரியை திறந்தான்.

அம்மா ஒவ்வொரு பக்கத்திலும் பென்சிலால் அழகான கோலங்களை வரைந்திருக்கிறாள். அதற்கு பக்கத்திலேயே 24 புள்ளிக்கோலம் என்று குறிப்புகளையும் எழுதி வைத்திருந்தாள்.

யாருக்குப் பயன்படும் என்று நினைத்து அம்மா இதையெல்லாம் பொறுமையாக வரைந்து நேரத்தை செலவழித்திருக்கிறாள்… அம்மாவின் அறியாமையை நினைத்து மனதிற்குள் சிரித்துக் கொண்டே டைரியை மூடப் போனவனுக்கு மனதிற்குள் பொறி தட்டியது. பரபரப்பாக பக்கங்களைப் புரட்டினான். வேகம் வேகமாக கம்யூட்டர் இருக்கும் அறைக்கு ஒடினான். இரண்டு வாரங்களுக்கு பிறகு…

எம்.டி. அறையில் கோகுல் நெளிந்து கொண்டிருந்தான். ஆம், எம்.டி. அப்படி பேசிக் கொண்டிருக்கிறார்.

“”கோகுல்… எப்படி இது சாத்தியமாச்சு… இவ்வளவு பிரமாதமான டிசைன்ஸ் நானே இது வரைக்கும் பார்த்தது இல்லை. அந்த கம்பெனியிலேயிருந்து இன்னும் ஆயிரம் டிசைன்ஸ் வேணும்னு கேட்டிருக்காங்க… ஆறு மாசம் டைம் எடுத்துக்கோங்க… பிரமாதமா டிசைன்ஸ் போடுங்க… உங்களுக்கு இன்கிரிமென்ட், அலவன்ஸ் எல்லாமே 2 மடங்கா ஏத்தியாச்சு… இன்னிக்கே ஒர்க்கை ஸ்டார்ட் பண்ணுங்க… ஆறு மாசத்துல முடிச்சிடலாமா… இல்லை இன்னும் கூடுதலா டைம் வேணுமா…”

கோகுல் அடக்கமாக சொன்னான்.

“”இல்லை சார் 3 மாசத்துலேயே முடிச்சிடலாம்”

“”வாட்? 3 மாசத்துலயா? அது எப்படி முடியும்?”

“”முடியும் சார்”

புன்முறுவலோடு கோகுல் விடைபெற்றுச் சென்றான். அவன் கையில் அம்மாவின் டைரி இருந்தது.

– டிசம்பர் 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *