புரியாத கணக்கு…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 29, 2022
பார்வையிட்டோர்: 4,885 
 

இரண்டு முறை விடாமல் அடித்த அழைப்பு மணி நித்யாவுக்கு எரிச்சலூட்டியது..

‘இந்த பலராமனுக்கு நேரம் காலம் கெடையாது…சரியான பிடுங்கல்.’

அழைப்பு மணியை வைத்தே யாரென்று சொல்லிவிடலாம்..

பலராமன் தான்..!!!!

வேறுயார் மதியம் மூன்று மணிக்கு விடாமல் காலிங்பெல்லை அமுக்க முடியும்..??

‘இருங்க..பல்ராம்..எத்தன தடவ சொல்லியிருக்கேன் காலிங்பெல் மேலேயே கைவச்சிட்டு.. ஒருதடவ அமுக்கிட்டு எடுக்கத் தெரியாது…??”

“பாப்பாவா…?? கோவிச்சுக்காத…எனக்கு அதெல்லாம் புரியவே மாட்டேங்குது.!! அம்மா இல்ல…??? வரச் சொல்லு…!!”

“பல்ராம்…அம்மா தூங்குறாங்க..இரண்டு நாளா உடம்பே சரியில்ல…தொந்தரவு பண்ணாத…”

“என்ன ஆச்சு.. நல்லாத்தானே இருந்தாங்க…! பத்து நிமிசம் தான்.போயிடுவேன்…”

“உனக்கு எத்தன தடவ சொன்னாலும் புரியாது… உனக்கு அம்மாவ விட்டா வேற ஆளே இல்லையா.. போய் வேறே யாரையாவது கேளு…”

சத்தம் கேட்டு தேவகியே எழுந்து வந்தாள்…

“ஏண்டி..நித்யா..அவன வெரட்ற…?? எப்பவும் வரவன்தானே…! நீ உள்ள வா பலராம்…அவ கெடக்கா…!”

“ஆனாலும் நீ அவனுக்கு ரொம்பத்தான் எடம் குடுத்து வச்சிருக்க…நீ என்ன அவன் வச்ச கணக்குப்பிள்ளையா.??? எங்கேடோ கெட்டு போங்க…!!!”

பலராமன் எதையுமே காதில் போட்டுக் கொள்ளாமல் கேட்டைத் திறந்து வழக்கம்போல முன் வராண்டாவில் உட்கார்ந்து கொண்டு சாவகாசமாய் கொண்டுவந்த சாயம் போய் நைந்து போன பையை பிரித்தான்.

“பலராமா..!! இதோ அஞ்சு நிமிஷத்தில் முகம் கழுவிட்டு வரேன்.. எல்லாத்தையும் எடுத்து ரெடியா வை…”

***

பலராமனை எல்லோரும் பால்கார பலராமன் என்றுதான் கூப்பிடுவார்கள்…

பசு மாடும் வைத்துக் கொள்ளவில்லை.. பாலும் கறந்து கொடுப்பதில்லை…

அவனுக்கும் பாலுக்குமான உறவு வேறுமாதிரி…!

அவன் சுமார் நூறு வீடுகளுக்கு மேல் ஆவின் பால் பூத்திலிருந்நு பால் பேக்கட்டுகளை வாங்கி விநியோகம் செய்பவன்..

ஆரம்பத்தில் பாட்டிலில் வந்த பால் பின்னர் பேக்கட்டுகளில் மாறியதும் பலராமன் மாதிரி நிறைய பேர் காலையில் மூன்று மணிக்கே பூத் வாசலில் கால்கடுக்க நின்று வீடு வீடாகச் சென்று வினியோகம் செய்வது நகரவாசிகளுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்..!

ஆயிரக்கணக்காண குடும்பத்தலைவர்கள் கையெடுத்து கும்பிடும் தெய்வங்கள் இவர்கள்…!

அவர்களின் காலைத் தூக்கத்துக்கு வேட்டு விழாமல் காப்பாத்தும் தேவர்கள்…!

பலராமன்…!

பெயருக்கும் அவனுக்கும் கொஞ்சமும் சம்பந்தமில்லை…

இப்போது அவனுக்கு ஐம்பது வயதுக்கு மேல் இருக்கும்…

ஒடிசலான தேகம். அங்கங்கே நரைத்து வாரப்படாத தலைமுடி…

சவரம் செய்து பலநாளான முகம்…

சதா பரபரப்பாக காணப்படும் பலராமனை தெரியாத குழந்தை கூட அந்த தெருவில் இருக்க முடியாது…

“பல்ராம்..ஒரு நிமிஷம்…”

“நிக்க நேரமில்லம்மா…சாங்காலம் வரேனே..!”

வேலை நேரத்தில் அவனிடம் பேச்சுக் குடுத்தால் தொலைந்தோம்.. அம்பானி ரேஞ்சுக்கு அலட்டுவான்..

கருமமே கண்ணான பலராமனுக்கும் தேவகிக்கும் ஏதோ பூர்வ ஜன்ம பந்தம் இருந்திருக்க வேண்டும்..

தேவகி இந்திரா நகரில் சொந்த வீடு வாங்கிக் கொண்டு வந்து முப்பது வருஷமாகிவிட்டது…

பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்றவள்…

கணவர் பாலகிருஷ்ணன் பாரத வங்கியில் உயர் பதவி வகிப்பவர்..

ஆரம்பத்தில் ஊர் ஊராகச் செல்ல வேண்டியிருந்ததால் தேவகி வேலைக்குப் போக முடியவில்லை..

இரண்டு பெண்களும் பெரியவர்கள் ஆனபின் வேலை வெட்டியில்லாமல் வீட்டிலிருக்கப் பிடிக்கவில்லை..

இரண்டு மூன்று தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் பகுதி நேர வாலன்ட்டியராகப் போக ஆரம்பித்தாள்..

வீட்டிலும் சும்மா இருக்க மாட்டாள்..யாருக்கு எந்த உதவி தேவையானாலும் இழுத்து போட்டுக் கொண்டு செய்வாள்..

அப்படித்தான் அவளுக்கும் பலராமனுக்கும் ஏற்பட்ட பந்தம்..விட்ட குறை…தொட்ட குறை…

***

“வாப்பா..பலராமா…ஒடம்பு கொஞ்சம் அசதியா இருந்துதா..அப்படியே படுத்ததில் அசந்து தூங்கிட்டேன் போலிருக்கு.”

“அம்மா.. எனக்கும் உங்கள தொந்தரவு பண்ண சங்கட்டமாதான் இருக்குது..பாப்பா கூட சத்தம் போட்டிச்சு..

ஆனா நீங்க பாத்து சொன்னாதான் எனக்கு நிம்மதியா இருக்குதும்மா…

உங்ககிட்ட வந்தப்புறம் ஒரு சின்ன பிரச்சன கூட வந்ததில்ல…!!”

அப்படி என்ன செய்துவிட்டாள் தேவகி..???

***

பலராமன் அந்த ஏரியாவில் சுமார் நூறு வீடுகளுக்கு மேல் கஸ்டமரை வைத்திருக்கிறான்…

இருபது வருடமாய் பலராமன் அந்த தெருவின் ஆஸ்த்தான பால்காரன்.

யாருக்கும் மறுத்து பேசத் தெரியாத சுபாவம்..

சுமார் நூறு பாலட்டைகளுக்கு குறையாமல் இருக்கும்..

பதப்படுத்தியது.., நிலைப்படுத்தப்பட்டது , கொழுப்பு நீக்கியது, கீரீம் உள்ளது ‌ என்று விதவிதமான நிறங்களில் பிரித்து தனித்தனி கவரில் போட்டு வைத்திருப்பான்…

ஆயிரக் கணக்கில் ரூபாய் புரளும்..

அவன் தேவகியிடம் வந்து சேர்ந்ததே ஒரு கதை… அவள் வீட்டிலும் அவன்தான் பால் சப்ளை..

பலராமன் இரண்டு நாளாய் பால் போட வரவில்லை..வேறு ஒரு பையனிடம் கொடுத்து விட்டான்..

உடம்பு சரியில்லை என்று கேள்வி பட்டாள் தேவகி…

அடுத்த நாள் வந்தபோது கண்ணெல்லாம் சிவந்து இருந்தது..

தேவகியிடம் சொல்லி அழுதான்..

அவன் பால் போடும் வீட்டில் ஒரு வயதானவர்.. ரொம்பவும் கறார் பேர்வழி… கூட்டுக் குடும்பம்..

குறைந்தது ஒரு மாதத்திற்கு மூவாயிரம் ரூபாய்க்காவது பால் வாங்குவார்.. நிறைய மறதி…

பலராமனுக்கு அவ்வளவு சாமர்த்தியம் போதாதா அல்லது மனிதர்கள் மேல் அத்தனை நம்பிக்கையோ தெரியாது.

பணத்தை வாங்கிப் போட்டுக் கொள்ளுவானே தவிர எண்ணமாட்டான்..

பணத்தை எண்ணும்போது தான் மூவாயிரம் ரூபாய் குறைவது தெரிந்தது.

வயதானவர் குடுக்க மறந்து விட்டார் என்று பலராமனுக்கு நினவு வந்தது..

கொடுத்து விட்டதாக ஒரேடியாக சாதித்து விட்டார் முதியவர்..

பலராமன் விக்கித்துப் போனான்..
மூவாயிரத்துக்கு எங்கே போவது..!!

அவனுடைய குடும்பக் கதை இன்னும் பரிதாபமானது..

பெண்டாட்டி ஒரு வாயில்லா பூச்சி.. ஒரு பிள்ளையும் சரியில்லை..

வேலை வெட்டி இல்லாமல் அப்பா வாங்கும் சம்பளத்தை பறித்துக் கொண்டு போவதிலேயே குறியாய் இருப்பார்கள்..

***

தேவகி எத்தனையோமுறை அவனிடம் சொல்லி அலுத்து விட்டாள்..

“பலராமா..பணத்த சம்பாதிக்க தெரிஞ்சா மட்டும் பத்தாது. அது நல்லவிதமா செலவழிக்கவும் தெரியணும்..

பசங்க கேக்கும்போதெல்லாம் குடுத்து கெடுத்து வச்சிருக்க..!!

உன்னைப் பாரு..பஞ்சத்தில அடிபட்ட பரதேசி மாதிரி..தலையில எண்ணெய் உண்டா..துவச்சு போட்ட வேட்டி சட்ட உண்டா..??

வேளாவேளக்கி சாப்பிடுறியான்னே சந்தேகமா இருக்கு..

நேரம் காலம் தெரியாம வீடுவீடாபோயி பால்பாக்கெட்டு போட்டு என்ன சுகத்த கண்ட…??பொழைக்கத்தெரியாதவனா இருக்கியே பலராமா…!

ஒரு வாரம் கழித்து பழைய சுருசுருப்புடன் வந்தான் பலராமன்..

“பல்ராம்.. பணம் கெடச்சுதா..??”

“அதெல்லாம் வராது அம்மா..!!”

“அம்மா நீங்க எனக்கு ஒரு உதவி செய்யணும்…”

“சொல்லு பலராம்…!!”

“நீங்க இனிமே எனக்கு கணக்கு பாத்து இந்த நோட்டுல எழுதிக் குடுக்கணும்.வாய்வார்த்தையா பேசியே நம்பிக்க துரோகம் பண்ணிட்டாரே அந்த மனுசன்…

அப்பப்போ வாங்கின பணத்த கரெக்ட்டா இதில எழுதி காமிச்சா வம்பே இல்ல பாருங்க…!!”

“இரு வரேன்….!!!”

தேவகி போய் ஒரு கால்குலேட்டரை கொண்டு வந்தாள்…

மொத்தம் கூட்டி சரிபார்ப்பதிலேயே ஒரு மணி நேரம் போயிற்று..

இத்தனை நாளும் மனதாலேயே கூட்டி ஒரு தவறும் வராமல்..?? எப்படித்தான் முடிந்தது அவனால்..??

படிப்புக்கும் புத்திசாலித்தனத்துக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை…

“அம்மா..ரொம்ப டாங்ஸ்..இனிமே மாசாமாசம் நீங்க சரி பாத்து குடுத்துட்டீங்கன்னா எனக்கு பிராப்ளமே இல்லை…!!”

போகக் கிளம்பியவனை ..’

“ஒரு நிமிஷம்…”

என்று கூறி நிறுத்தினாள் தேவகி…

சுடச்சுட ஒரு டம்ளர் காப்பியுடன் வந்தாள்..

கையில் கொஞ்சம் ரூபாய் நோட்டுகள்..

“இதப் பிடி பலராம்…!!”

“என்னம்மா இது…???”

“மூவாயிரம் ரூபா..சும்மா தரல .எப்போ வேணா எப்படி வேணா திருப்பிக் கொடு !!”

வாங்கவே முடியாது என்றவனைக் கட்டாயப்படுத்தி கையில் ரூபாயைத் திணித்தாள்…

அன்று தொடர்ந்த பந்தம்..

***

அன்றைக்கு பலராமன் முகமே சரியில்லை..கண்ணெல்லாம் சிவந்து, முகம் வாடிப்போய் பரிதாபமாய் இருந்தான்..

“என்ன பலராம்..என்னவோ மாதிரி இருக்கியே..வீட்டில பிரச்சனையா..??”

“ஆமாம்மா.. மூத்தவன் ஒரு பொண்ண தீடீர்னு சொல்லாம கொள்ளாம வீட்டுக்கு கூட்டிக்கிட்டுப் வந்து ‘இவதான் எம்பொண்டாட்டி..தாலி கட்டிட்டேன்..நம்ப வீட்ல தான் இருப்பா’ ங்குறான்..

பத்தாததுக்கு ‘வீட்ட வித்து எம்பாகத்த பிரிச்சு குடு..இல்லாட்டி வீட்ட விட்டு போயிடு .இது தாத்தா அம்மாவுக்கு குடுத்த வீடு ‘ன்னு நேத்து ஒரே ரவுசு பண்ணிட்டான்..”

தேவகிக்கு ஆத்திரமாய் வந்தது..

சம்பளம் மொத்தத்தையும் வாங்கிக் கொண்டு அப்பாவை வீட்டை விட்டு துரத்தும் மகனை எப்படி பலராமன் இத்தனை நாள் சகித்துக் கொண்டு வாழ்ந்தான்..

இவன்தான் கர்மயோகி…

இது மாதிரி பலராமன்களுக்கு என்றைக்கு விடியல்…?

***

அப்புறம் கொஞ்ச நாள் பலராமன் பால்போட வரவேயில்லை…

தேவகிக்கு உடம்பு ரொம்பவே மோசமானது.. ஆஸ்பத்திரியில் சேர்க்க வேண்டிய கட்டாயம்…

என்னன்னவோ பரிசோதனைகள்.. ஒரு மாதத்தில் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாகி வீடுவந்து சேர்ந்ததென்னமோ அவளது உடல் மட்டும்தான்..

குடும்பமே அதிர்ச்சியிலிருந்து மீள நிறைய நாளாயிற்று..

இப்போதெல்லாம் பால் போடுவதற்கு பலராமன் வருவதில்லை..

”பல்ராம் எங்கப்பா…?? ஆளையே காணமே…”

“உங்களுக்குத் தெரியாதா..அவரு போயி ஒரு மாசம் போல் ஆவுதே..!! நெஞ்சுவலின்னு படுத்தவர்தான்..எம்பேரு கன்னியப்பன்.. நான்தான் அவருக்கு பதிலா..

அடுத்த மாசம் பால்கார்டு வாங்கித்தரேன்.. அவர மாதிரியே என்னையும் நம்பலாம்…”

நித்யா ஒரு வினாடி அப்படியே திகைத்துப்போய் நின்றுவிட்டாள்..!!

சில கணக்குகளுக்கு பார்த்து உடனேயே விடை தெரிந்து விடும்…

சில கணக்குகளுக்கு இரண்டு மூன்று முறை அடித்து, திருத்தி எழுதினால்தான் விடை சரியாக வரும்..

சில கணக்குகளுக்கு கடைசிவரை விடைதெரியாமல் முழிப்போம்…

ஆனால் சில சமயங்களில் எத்தனை முறை படித்தாலும் புரியாத கணக்கும் உண்டு..

ஆம் ..தேவகிக்கும் பலராமனுக்கும் இடையே இருந்த பந்தமும் ஒரு புரியாத கணக்குதான்..!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *