புன்னகையால் நிரப்பப்படும் புரியாத வெற்றிடங்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 30, 2012
பார்வையிட்டோர்: 8,102 
 

என் அப்பா கொஞ்சம் சிக்கலானவர், சில சமயம் அதிசயமாய் தோற்றமளிப்பார். பல சமயம் கோமாளிபோல் தோற்றமளிப்பார், சில சமயம் பேக்குபோல் பேசுவார். பல சமயம் நம்மை பேக்குகளாக்கிவிடுவார். வெளிப்புறத் தோற்றம் சகிக்கும்படி இருக்காது. அவர் வார்த்தைகளின் அர்த்தங்கள் புரியும்படியும் இருக்காது ஏன் என்று துருவிக் கேட்டால். அந்த வார்த்தை அர்த்தத்தின் சொரூபங்கள் தாங்கும்படியும் இருக்காது, அவர் பேச்சு புதிரானது சில வேளை புரியும், பலவேளை புரியாது, நமக்கு புரியவில்லை என்பதற்காக எப்படியாவது புரிய வைத்துவிட வேண்டும் என்று மல்லுக்கட்டி பேசி புரிய வைக்க மாட்டார், ஒரு புன்னகை செய்வார். புரிந்தது போல் நாம்தான் தலையாட்டிக் கொள்ள வேண்டும், அது அவர் கவலையல்ல நம் தலையெழுத்து,

வெற்றிக்காக நாம் அனைத்தையுமே இழக்க தயாராயிருக்கிறோம், வெற்றிதான் நமக்கு எல்லாம், அதில்தான் சந்தோக்ஷம், கொக்கரிப்பு. ஆனந்தம். வாழ்க்கை. பெண்டாட்டி. பிள்ளைகுட்டி. ஆட்டுக்குட்டி. எல்லாமே, ஒரு தோல்வியே நம்மை சாவு அடி அடித்து விடுகிறது. நிராயுதபாணியாக்கி துவளச் செய்துவிடுகிறது. என் அப்பா என் கண் முன்னே பலமுறை தோற்றிருக்கிறார். அவர் துவண்டு போய் நான் பார்த்ததில்லை. அவர் தோல்விகளை விரும்பித்தான் ஏற்றுக் கொண்டார் என்று தோன்றுகிறது. ஒவ்வொரு தோல்விக்கு பின்னும் அவர் வெற்றியாளனின் புன்னகையை உதிர்த்தபடி இருந்தார்.
இவர்தான் என் அப்பா என்று எவரிடமாவது நான் காட்டினால். அவரைப் பார்த்தவர்கள் என்னிடமிருந்து கொஞ்சம் தள்ளி நிற்பார்கள். இதனால் கொஞ்சம் அவமான உணர்வுகூட எனக்கு வந்ததுண்டு.

அவர் சவரம் செய்து கொள்ள மாட்டார். முடி வெட்டிக் கொள்ள மாட்டார். மாற்று உடை என்று உபரியாய் ஒரு உடையும் வைத்துக் கொள்ள மாட்டார். அந்த உடை தற்கொலை செய்து கொள்ளும்போது வேறு உடை வாங்குவார். தினம் துவைப்பார். சோப்பு போட மாட்டார். அழுக்காக பார்த்து போனால் போகட்டுமென்று போனால்தான் உண்டு. தலை சீவவும் மாட்டார். அந்த அடர்த்தியான கூந்தலுக்கு ஒரு சொட்டு எண்ணை காட்டவும் மாட்டார். கண்ணாடி முன் நின்று முகம் பார்க்கவும் மாட்டார். அவர் முகம் எப்படி இருக்குமென்று அவருக்கு தெரியுமா என்றுகூட தெரியவில்லை.

நினைக்கவே அச்சமாக இருக்கிறது. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் உங்கள் முகம் எப்படி இருக்குமென்றே தெரியாமல் உங்களால் இருக்க முடியுமா? காட்டு விலங்கு கூட கதிகலங்கிக் போய்விடும், அதுகூட குளத்து நீர்ப் பரப்பில் தன் முகம் பார்த்துக் கொள்ளும்

பள்ளிக்கூடத்தில் முதலில் சேர்க்க அப்பாக்கள் தான் வர வேண்டுமாமே, என் அப்பா என்னை பள்ளியில் சேர்க்க என்னை அழைத்துக் கொண்டு பள்ளி வாசல் முன்பாக நின்றார். எனக்கு இப்பொழுது முப்பது வயது. இப்பொழுது நினைத்தால் கூட தொடைகள் வெட்கத்தில் ஆடுகிறது.

“யோவ்… இது ஸ்கூல்யா… வீட்டுப் பக்கமா போய் பிச்சைகேளு.” என்று தலைமையாசிரியர் அப்பாவை துரத்தினார்.

அவர் நின்றிருந்த திருக்கோலம் அப்படி. என் வீதிப் பிள்ளைகள் பயமே இல்லாமல் சத்தம் போட்டு சிரித்தார்கள். அன்றைக்குத்தான் அவர்கள் சேர்ந்திருக்கிறார்கள். அவர்களின் அப்பாக்கள் படிய வாரிய தலைகளுடன், கசங்காத சுத்த உடைகளுடன், மெல்லிய பவுடர் பூச்சுடன் பிள்ளைகளின் பெயர் சொல்லியபடி தலைமையாசிரியர் முன்பாக நிற்கிறார்கள்.

என் அப்பா நீண்ட முடியை கொண்டை போட்டுக் கொண்டு கீழே ஒரு அழுக்கு வேட்டி மேலே ஒரு அழுக்கு வேட்டியை போர்த்திக் கொண்டு நிற்கிறார். தலை வாரிக்கொண்டு வந்த அப்பாக்களெல்லாம் என் அப்பாவை பார்த்து சிரித்தபடி நிற்கிறார்கள்.

“அட போய்யா…” என்று அந்த தலைமை ஆசிரியர் மீண்டும் துரத்தவும் எனக்கு கண்ணில் நீர் வரப் பார்க்கிறது. அசிங்கமான அப்பாவினால் அவமானமும், ஸ்கூல் சேர முடியாதோ என்ற பயமும் எனக்கு வேதனை தருகிறது. அப்பாக்களில் ஒருவர் என் அப்பாவிற்காக சிபாரிசு செய்து என்னை பள்ளியில் சேர்க்கிறார்.

என் வகுப்பறையில் அப்பா என்னை விட வந்தார். அந்த வாத்தியர் என் அப்பாவை பார்க்கிறார். இவர் யார் என்று என்னிடம் கேட்கிறார். நான் மவுனமாக என் அப்பாவைப் பார்க்கிறேன். அவர் என்னை புன்னகையால் பார்க்கிறார். திரும்பவும் வாத்தியார் கேட்கிறார். நான் மவுனமாக இருக்கிறேன்.

அப்பாதான் சொன்னார் “நான் இவனோட அப்பா”

வாத்தியார் ஒரு சிரிப்பு சிரிக்கிறார். பிள்ளைகள் சிரிக்கிறார்கள்.

“மேல போட்டிருக்கியே அது பேரு என்ன?” அப்பாவை அந்த வாத்தியர் கேட்கிறார்.

என் அப்பா வாத்தியாருக்கும் ஒரு புன்னகை தருகிறார்.

“கீழே போட்டிருக்கியே அது பேரு என்ன?” திரும்பவும் வாத்தியார் கேட்கிறார்.

அதற்கும் என் அப்பா சிரித்தபடி இருக்கிறார். எந்த கேள்விக்கும் அப்பா பதில் சொல்லத் தயாராயில்லை. வாத்தியாரும் விடுவதாய் இல்லை.

“நீ பொறக்கும் போதே இதே துணியோடதான் பொறந்தியா..?” என்று அவர் கேட்கிறார்.

“இல்லை. பனிக்கொடம் ஒடைஞ்சி அந்த தண்ணி ஒடம்பு எல்லாம் போத்திகிட்டு பொறந்தேன். மண் பானை ஒடைச்சி அந்த தண்ணிய ஒடம்பு பூராவும் போத்திகிட்டு போய் சேருவேன். உங்களுக்கு மண் பானை உடைக்கிற காலத்திலே இதோ நீங்க போட்டுட்டு இருக்கிங்களே இந்த வேட்டி, இந்த சொக்காய், இந்த டவுசர் எல்லாத்தையும் அவுத்துடுவாங்க. அதுவரையுலும் அதை போட்டுக் கிட்டே இருங்க. புள்ளைங்களுக்கு சொல்லிக்குடுத்துட்டு இருங்க. சுத்தம் சோறு போடும்னு” என்று சிரிப்பு மாறாமலேயே சொல்லி, என்னிடம் “நல்லா படிக்கணுண்டா கண்ணு” என்று சொல்லி போய்விட்டார்,

“உன் அப்பா பயித்தியமா?” என்று வாத்தியர் பள்ளி விடும்போது என்னிடம் கேட்டார். என் வீதிப் பிள்ளைகள் ஏகத்திற்கும் சிரித்தார்கள். என் அம்மாவிடம் வந்து அழுதேன். என் அம்மாவிற்கும் கண்ணில் சொட்டு நீர் வந்தது.

“இந்த சனியனுக்கு சொல்லி. சொல்லி அலுத்து போச்சி, நாகரிகம்னா என்னனு தெரியாத ஜடம். இந்த பீடையோட எத்தனை நாளைக்கு மாரடிக்கிறது,” என்று என் அம்மா சத்தம் போட்டு கத்தியபோது அப்பா புன்னகையோடு என் தலை தடவினார், நான் அவர் கையை தட்டிவிட்டேன்.

கொஞ்சம் விவரம் வந்த போது என் அம்மாவிடம் கேட்டேன். “எப்படிம்மா இந்த ஆளை கல்யாணம் பண்ணிகிட்டே? அழுக்கு புடிச்சவன…”

கல்யாணத்திற்கு முன் என் அப்பா நல்லவிதமாகத்தான் இருந்ததாக அவள் சொன்னாலும் என்னால் நம்ப முடியவில்லை. அழகானவர்தானாம். கூர்மையான மூக்கும் சிவப்பான தோலும் பார்த்து நன்றாக இருப்பதாக நினைத்துத்தான் இவரை கல்யாணம் செய்து கொண்டாளாம். அகலமான நெற்றியும் அதில் விபூதி சந்தனமுமாகத்தான் இருப்பாராம். நல்ல உயரமானவர். பருத்த மார்பு. உதடும் பல்லும் சிரிக்கும் போது பிடுங்கித் தின்னலாம்போல இருக்குமாம். வசதியான என் அம்மா. ‘இவரைத்தான் கட்டிப்பேன்’ என்று அடம் பிடித்துத்தான் கட்டிக் கொண்டாளாம், “பிறகு ஏன் இப்படி புழுத்து நாறுதுன்னே தெரியல எனக்கு…” என்று அம்மா சொல்லி சொல்லி அழுகிறாள்.

பக்கத்து வீட்டு பாட்டி குசுகுசுவென ஒரு விசயத்தையும் சொன்னாள். நான் கல்யாணத்திற்கு முன்பே கருத்தரிச்சவனாம். “உன் அப்பனோட அழகை பாத்து உன்ன சுமந்துகிட்டா. அதுக்கு அப்புறமாதான் உன் அப்பன அவ கட்டிகிட்டா. அடேங்கப்பா எத்தன அழகு தெரியுமா?”

அன்றைக்கு அப்பா அழகாய் இருந்ததற்காக மயங்கிய என் அம்மா இன்றைக்கு அப்பா இருக்கும் அழகிற்கு மயக்கமே போட்டு விடுவாள். அம்மாவை நினைத்தால் பாவமாய்த்தான் இருக்கிறது,

என் அப்பாவின் அலங்கோலத்தை என் சினேகிதர் முன்னால் என்னால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. மனைவி என்று சொல்லிக்கொண்டு, இந்த அப்பாவை மற்ற பெண்கள் முன் அம்மா எப்படி காட்டுவாள்? எப்படி கூனிக் குறுகி நின்றிருப்பாள்? கல்யாணமாகி ஆறே மாதத்தில் ஒரு ஜாண் தாடியும் ஒரு வண்டி அழுக்குமாக அப்பா இருந்தாராம்,

என் அப்பாவின் அசிங்கத்தின் மேல் ஏற்பட்ட வெறுப்பின் காரணமாகத்தான் நான் அலங்காரத்திற்கு கொஞ்சம் அதிகமாகவே நேரம் செலவிட்டேன். தினமும் சவரம் செய்தேன். மீசை உட்பட, ஒட்ட முடி வெட்டி. வாசனை எண்ணை தடவினேன். படிய வாரினேன். முகத்திற்கு லோக்ஷன் போட்டேன். லிப்ஸ்டிக் மட்டும் தான் போட்டுக் கொள்ளவில்லை. அவ்வளவு மேக் அப். விலையுயர்ந்த ஆடைகளை வாங்கி உடுத்தினேன். வாசனைத் திரவியங்களை மேலே பீய்ச்சிக் கொண்டேன். உயர் ஜாதித்தோல் செருப்புக்களை மெருகு போட்டு அணிந்தேன்.

என் இரண்டு வயது பெண் என் கைப்பிடித்தபடி தெருவில் சந்தோக்ஷமாக நடந்து வரும். எவர் கேட்டாலும் ‘என் அப்பா’ என்று என்னை காட்டும். அதற்கு அவமானமில்லை. நான் அத்தனை அழகான சுத்தமான அப்பா. என்னை இறுக்கமாய் கட்டிக் கொண்டு கன்னத்தில் எச்சில் பட முத்தமிடும். நாக்கினால் வருடும். இப்படி ஒரு சந்தோக்ஷத்தை என் அப்பா எனக்கு தந்ததேயில்லை. நான் முத்தமிட்டிருந்தால் நாற்றமடித்திருக்கும். நாக்கில் மயிர் குத்தி ரத்தம் வந்திருக்கும்.

என் பத்தாவது வயதில் அழுக்கு சண்டை காரணமாக அப்பாவும் அம்மாவும் பிரிந்தது நினைவிருக்கிறது. தூங்கும்போது அரிவாள் மனையால் அப்பாவின் குடுமியை அம்மா அறுத்தாள். காலையில் அதைப்பற்றி ஒன்றுமே பேசாமல் இருக்க அம்மாவிற்கு கோபமாய் வந்தது.

“எதை அறுத்தலும் கோவம் வராது உனக்கு. ஒருநாள் நெஜமாவே அறுத்திடறேன் பாரு அதை.” என்று அம்மா சத்தம் போட்டாள்.

“அறுத்திடு… எனக்கு நக்ஷடமில்லே…”;

“எனக்கு மட்டும் என்னய்யா நக்ஷடம்.” என்று அம்மா கத்த

“கல்யாணத்துக்கு முன்னாடி எதுக்கு தேடிட்டு வந்தியோ அது நக்ஷடம்…” என்று அப்பா சிரித்தபடி சொல்ல. அம்மா கையில் சுருட்டி வைத்திருந்த பாயால் ஏகத்திற்குத் திட்டியபடி அடிக்க ஆரம்பித்தாள்.

“வெளிய போடா, என்ன கேடு கெட்டவன்னு நெனைச்சியா? கட்டிக்கிட்ட தோக்ஷத்துக்கு சோறு போடறேன். அலைஞ்சிகிட்டு இல்லே நானு. புள்ள முன்னாடியே இத்தனை கேவலமா பேசறியே. வெளிய போடா! நீயில்லாமயும் இருப்பேன். அதுக்கு தான் உன்ன வீட்டோட வச்சிருக்கேன்னு நினைச்சியா? புள்ளைக்கு அப்பன் வேணுமேன்னு வச்சிருந்தேன். என் புள்ளை அப்பன் இல்லாமலேயே வளரட்டும். வெளிய போடா” என்று என் அப்பாவை வெளியே தள்ளிவிட்டு அடுப்படியில் உட்கார்ந்து அழுதாள்.

அம்மா அடித்த அடியில் அந்த கோரைப்பாய் பிய்ந்து போயிற்று. அப்பாவின் கண்ணில் பாய் பட்டு கண்களை மூடியபடி அவர் வெளியே போய்விட்டார். திரும்ப வரவேயில்லை. அவர் வெளியேறும் போது அவர் கண்கள் சிவந்து நீர் கலங்கியிருந்ததை கண்டேன். அவர் அழுதிருக்க மாட்டார். கண்ணில் பாய் குத்தியிருக்க வேண்டும். புன்னகை தவிர வேறு ஒரு விசயமும் அவருக்கு தெரியாது. வேறு தெருவில் தனியாக அவர் இருந்தார். என் அப்பாவை பெற்ற தாத்தா பாட்டி வீட்டிற்கும் அவர் போகவில்லை. என் தாத்தாவும் பாட்டியும் அழுதபடி கூப்பிட்டும் போகவில்லை என்று அருண் அம்மா என் அம்மாவிடம் சொன்னாள். அம்மா “எக்கேடாவது கெடட்டும் அந்த சனியன். எனக்கென்ன…” என்று அவளிடம் சொல்லிவிட்டாள்,

அழுக்கான அப்பாவாக இருந்தாலும் அப்பாவின் அன்பு தேவையாகத்தான் இருந்தது என்பது அவர் போன பிறகுதான் தெரிந்தது, அவர் மேல் கால்போட்டு தூங்கினேனே. ஒரு அழுக்கு துணி மூட்டைமேல் கால்போட்டு தூங்கியது போல். அந்த அழுக்கு மூட்டை எனக்கு இப்பொழுது தேவையாக இருந்தது. எத்தனை அழுக்காய் இருந்தாலும் அப்பாவின் சிரிப்பு பார்க்க சந்தோசமாய் இருக்கும். அதை பார்க்காமல் என்னால் இருக்க முடியவில்லை.

அம்மா என்னை பள்ளிக்குக் கூட்டிப்போவது எனக்கு இப்பொழுது பிடிக்கவில்லை. அப்பா அதட்டி உடை உடுத்தி விட்டதில்லை. தவறு செய்தால் திட்டியதும் இல்லை. சிரித்தபடி தவறை திருத்துவது எனக்கு பிடித்திருக்கிறது. அம்மா அதட்டினாள். எல்லாவற்றிற்கும் திட்டினாள். அடித்தாள். அப்பா அடித்து ஒருநாளும் என் முதுகு வலித்ததில்லை. அப்பாவிடம் இதமான ஏதோ ஒன்று இருக்கிறது. அது இப்போது இல்லை. அது வேண்டுமாய் இருந்தது. முரட்டுகைகளால் என் கால்களை அவர் அமுக்கும் அந்த சுகத்தில் தூங்கிய எனக்கு, என் கால்களுக்கு அப்பா இல்லாமல் தூக்கம் வரவில்லை. அவர் மயிர் கோதுவதும், என் காதுகளுக்கு அவர் சொல்லும் கதைகளும் தேவையாய் இருந்தது. அவர் மேல் இருந்த வெறுப்பு வெறும் பொய் தான் என்ற எனக்கு தோன்றியது. பத்து வயதுப் பையன் அப்பா இல்லாமல் படும்பாடு வேதனையானது. அப்பாவின் மேலான என் அன்பு வழியத் தொடங்கியது.

பக்கத்திலேயே இருந்த அப்பா இப்பொழுது கனவில் மட்டும் தான் வருகிறார். பல நாட்களாகியும் பார்க்க வரவேயில்லை. பக்கத்து வீதியில் தான் இருக்கிறார். ஆனாலும் வரவில்லை.

“நான் அப்பாவை பார்க்கணும்…” என்று அம்மாவிடம் சொன்னதும் எனக்கும் அதே பிய்ந்த பாயில் அடி விழுந்தது. அழுதபடி உறங்கினேன். அப்பா இருக்கும் நாட்களில் வேண்டும் என்று கேட்டதை அம்மாவிற்கு தெரியாமல் வாங்கித் தந்தார். இது வேண்டும் என்ற அப்பா இருக்கும் நாட்களில் எதற்காகவும் நான் அழுதபடி உறங்கியதில்லை. இப்பொழுது அப்பாவே வேண்டுமென்று அழுகிறேன்.

அப்பா இப்பொழுது என்னை அவர் பக்கமாக வா வா என்று இழுக்கிறார். அவர் புன்னகை இழுக்கிறது. பள்ளிவிட்டதும் அம்மாவிற்கு சொல்லாமல் கொள்ளாமல் அவர் வீட்டின் முன்பாக நின்றேன். அருண். வீட்டைக் காண்பித்தான்.

அப்பா பார்த்ததும் “உள்ளே வா” என்று கூப்பிட்டு இறுக்கிக் கொண்டார். எனக்கு அழுகை வந்தது. அப்பாவோ புன்னகை செய்தார்.

“அம்மா நல்லாயிருக்காளா?” என்றார். தின்பதற்குத் தந்தார். தினமும் பள்ளி விட்டதும் அங்கே போனேன். கேள்விப்பட்ட அம்மா திரும்பவும் அடித்தாள். “அங்கே போனா கொன்னுடுவேன்” என்று மிரட்டினாள். அம்மாவுக்குத் தெரியாமல் யாருக்கும் தெரியாமல் போய் வந்தேன்.

கொஞ்ச மாதத்தில் அம்மாவின் வயிறு பெரிதாகத் தொடங்கியது. அம்மா கர்பமாயிருப்பதாய் எதிர்த்த வீட்டு பாட்டி சொன்னாள். அம்மா இரவில் அழுதாள். என்னை ஒருநாள் இரவு அப்பாவின் வீட்டிற்கு கூட்டிச்சென்று அப்பாவிடமும் அழுதாள். அப்பா அம்மாவின் வயிற்றை தடவிப் பார்த்தார். புன்னகை செய்தார், “வீட்டுக்கு வாய்யா…” என்று அம்மா அப்பாவின் முடியைப் பிடித்து இழுத்தாள். அரிவாள் மனையால் அறுத்த முடி ஏற்றக் குறைச்சலாக வளர்ந்திருந்தது. அவர் அதை வெட்டவும் இல்லை. மொட்டை அடிக்கவும் இல்லை. அப்படியே விட்டிருந்தர். அம்மா திரும்பவும் தாடி பிடித்து இழுத்தாள். அப்பா புன்னகை செய்தார். பேச்சேதும் பேசவில்லை. அம்மாவோடு அப்பா கிளம்பி வீட்டுக்கு வந்துவிட்டார்.

அழுக்குதான் என்றாலும் நல்ல அப்பா என்பது எனக்கு அப்பபொழுதுதான் புரிந்தது. அம்மா என் தங்கையை பெற்றெடுத்தாள். என்னை “அங்கே போனா கொன்னுடுவேன்” என்று சொன்ன அம்மா எனக்குத் தெரியாமல் அங்கே போய் பார்த்து வந்திருக்கிறாள் என்ற விசயம் பிறகுதான் தெரிந்தது. பிரிந்திருக்கும் பொழுதுதான் என் அம்மாவிற்கு கூட அப்பாவை வெகுவாக பிடித்திருந்திருக்கிறது.

பிள்ளை பெறும்வரைதான் அம்மா சும்மாயிருந்தாள். பிறகு மீண்டும் யுத்தம் ஆரம்பமாகிவிட்டது. அப்பாவை நாகரிக புருக்ஷனாய் மாற்ற அம்மா படாதபாடு பட்டாள். அப்பா மாறவேயில்லை. தினமும் கூச்சலும் ஒப்பாரியும் அதிகமானது. ஒரே வீட்டில் இருந்தாலும் அம்மாவும் அப்பாவும் ஒதுங்கியே வாழந்தார்கள். முகம் பார்த்து பேசிக்கொள்ளவோ, சிரிக்கவோ இல்லை. சண்டையிட்டுக் கொள்வதை கூட பிறகு இருவரும் நிறுத்திக் கொண்டார்கள்.

என் அப்பாவை இந்த கேள்வி நான் கேட்டபோது எனக்கு வயது பதினேழு. “ஏம்ப்பா… இந்த ஜடைய வெட்டி தாடிய சவரம் பண்ணி நல்ல உடுப்பு போட்டுக்கோயேன்”

அப்பா சிரித்தார், “ஆயுசு பூராம் இப்படியே இருக்கிறதா வேண்டுதல். அதான் அப்படி”

“சுத்தபத்தமா இருக்க மாட்டேன்னு கூட வேண்டிக்குவாங்களா என்ன?”

“ஏன்… தெனமும்தான் குளிக்கிறேன். தொவைக்கிறேன். என் சுத்தத்துக்கு என்ன கொறைச்சல்”

“எங்க குளிக்கிறிங்க? ஏரியில அந்த மாடு எருமைகளோட சேர்ந்து குளிக்கறிங்க. அந்த அழுக்கு தண்ணியில குளிச்சா எப்படி ஒடம்பு சுத்தமாகும்? துணி வெளுக்கும்… சொல்லுங்க. தலைக்கு அந்த களிமண்ணை போட்டு போட்டு எப்படி செம்பட்டை காக்கா மாதிரி ஆயிடுச்சி பாருங்க. தலை ஒடம்பெல்லாம் பனைமரம் மாதிரி சொர சொரன்னு வேற ஆயிடுச்சி. நீங்க செய்யறது பேரு குளிக்கிறது இல்லே. அழுக்கு பண்ணிக்கிறது, வீட்டுலயோ கெணத்துலயோ போயி சோப்பு போட்டு குளிக்கிறதுக்கு என்ன?”

அப்பா வெறுமனே புன்னகைப்பார். என் கேள்விக்கான பதில் அந்த சிரிப்பில் இருக்கிறது. எனக்கு அந்த பதில் புரியாது. அல்லது அந்த பதிலை சொல்ல அப்பாவிற்கு பிடிக்கவில்லை. அதற்காகத்தான் அந்த புன்னகை. ,
என் அப்பாவின் திடம் எனக்கு வியப்பளிக்கும், “சனியன் புடிச்ச, பீடை புடிச்ச, அசிங்கம் புடிச்ச கம்மனாட்டி. நாகரிகம் தெரியாத நாறப் பொணம்” என்று என் அம்மாவிடம் திட்டு வாங்கிக் கொண்டிருக்கும் போதும் சலனமில்லாமல் அப்பாவால் சாப்பாட்டை ருசித்து சாப்பிட முடிகிறது. இது மனதிடமா இல்லை சொரனையற்றத் தனமா?

என் தங்கையின் திருமணம் என் அப்பாவின் திருக்கோலத்தால் தள்ளிப் போய்க் கொண்டிருக்க என் அப்பாவை வீட்டை விட்டு வெளியேற்றும் பொறுப்பை என் அம்மா என்னிடம் ஒப்படைத்திருந்தாள். என் தங்கையை பெண் பார்க்க வந்தவர்கள் எல்லோரும் என் அப்பாவின் கோலம் கண்டு “அப்பாவை பிடிக்கலே.” என்று ஒரேபோல சொல்லிக்கொண்டிருந்தார்கள். இந்த வயதில் அவரை யாருக்கும் நாங்கள் கல்யாணம் செய்து கொடுப்பதாய் கூறவில்லை. பெண் பிடிச்சிருக்கான்னு கேட்டா அப்பாவை பிடிக்கலை என்று கூறுகிறார்கள்.

“நீங்க வாழ்க்கையில உருப்படணும்னா உங்க அப்பன் இங்க இருக்கக்கூடாது. உனக்கு கோடி புண்ணியமா போகும். என்ன செய்வியோ தெரியாது. உங்க அப்பன எங்கயாவது கண்காணாத தூரத்தில விட்டுட்டு வந்துடு” என்று அம்மா என்னை தினத்திற்கும் வதைத்தாள்.

அம்மாவின் பேச்சு சரிதானென்று எனக்கும்கூட தோன்றியது. தங்கைக்குக் கல்யாணமாகி எனக்கு கல்யாணமாவது அப்பா இருந்தால் நடக்கிற காரியமல்ல. அப்பா தேசாந்திரம் போயிட்டார்னு சொல்லிட்டா ஏதாவது ஒரு மாப்பிள்ளை தங்கையை கல்யாணம் கட்டிக்கிடுவான். அதற்கு பிறகுதானே நான் என் திருமணத்தைப் பற்றியே யோசிக்க முடியும். ஆனாலும் பெற்ற தகப்பனை எப்படி வெளியே போன்னு சொல்லுவது என்று மனசு இரட்டையாய் தவித்தது.

அப்பா கோமாளிதான் என்றாலும் அவரிடமே இதற்கான யோசனையை கேட்பதென்று முடிவேடுத்து. கேட்டேன்.
“அப்பா உங்ககிட்டே ஒண்ணு கேக்கணும். ஒரு பிரச்சினை. ரெண்டே ரெண்டு முடிவு. ஏதாவது ஒண்ணை செய்யணும். உங்க கிட்டே கேக்கறேன் ஒரு முடிவு சொல்லுங்க”

“என்ன பிரச்சினைனு சொல்லு”

“அத சொல்லமாட்டேன், வருத்தப்படுவிங்க?”

“பிரச்சினையே சொல்லாம முடிவு கேக்கறையே. சரிவிடு. ஒரு அற்புதமான மந்திரக் கோடு இருக்கு. அந்த கோடு உன் பிரச்சினைக்கு முடிவு சொல்லும்”

“சொல்லுங்க…”

“நீ என்ன செய்யற. தரையில நீட்டா ஒரு கோடு போட்டுக்க. ஒரு சின்ன கல்லை கையில எடுத்துக்க. அந்த கோட்டு நடுவில நீ நின்னுக்க. சரியா…? கல்ல தூக்கி மேல போடு. கோட்டுக்கு இந்த பக்கம் ஒரு முடிவு. அந்த பக்கம் ஒரு முடிவு. எந்தப்பக்கம் கல் விழுதோ அதான் தீர்வு. அதுபடி செய்…”

இதனால்தான் கோமாளி அப்பா என்பது. மண்டை நிறைய மூளை இருக்கிறது. கல்போட்டு முடிவு எடுக்க வேண்டுமாம் இந்த கோமாளிக்கு.

“முட்டாள் தனமா இருக்கேப்பா, கல்லோட முடிவு எப்படி நம்ம முடிவு ஆகும்? கல் எந்த பக்கம் வேணுன்னாலும் விழுமே. ஒரு வேளை அது நமக்கு பாதகமான முடிவா இருந்தா?”

“அதான் சாதுர்யம். ஒரு பிரச்சினைக்கு ரெண்டு தீர்வுதான் இருக்கும். ரெண்டுல எதை செய்யிறதுன்னு குழப்பமாயிருந்தா கல்ல தூக்கி மேல போடற ஒரு கண நேரத்தில உனக்கு ஒரு இம்மி அதிகம் புடிச்ச முடிவ உன் மூளை எடுக்கும். கை அந்த பக்கம் தானா ஒரு இம்மி தள்ளி கல்லை போடும். அது கல்லோட முடிவு இல்லை. உன்னோட முடிவுதான். கோட்டைப் போடு…” அப்பா சொன்னார்.

நான் அவர் முன்பாகவே ஒரு கோட்டை. வாசல் முன்பாக போட்டேன். அப்பாவை வெளியே போகச்சொல்ல தந்திரம் தேடிக்கொண்டிருக்கும் மகன். அவர் முகத்தை சகித்துக் கொள்ளாத மனைவி. கல்யாண ஆசையில் அப்பாவைத் துறக்கத் தயாராகிவிட்ட மகள் எல்லோரும் ஒரு பக்கம். இவர்கள் யோக்கியமானவர்கள் தானா..? ஒரு கணம் யோசித்தேன். கோட்டை இன்னும் அழுத்தமாய் தரையில் போட்டேன். மனைவி, பிள்ளை, மகள் எவர் பொருட்டும் தன்னை மாற்றிக் கொள்ளாத அழுக்கு தகப்பன் ஒரு பக்கம். அவர் யோக்கியமானவரா..? யோசித்தேன். கோட்டில் நின்று கல் போட்டேன்.

கல் கிழே விழந்தது. அப்பா என் முகத்தைப் பார்த்தார். நான் கல்லைப் பார்த்ததேன்.

“என்ன… பதில் கிடைச்சிடுச்சி இல்லையா?” அப்பா கேட்டார்.

“கெடைச்சிடுச்சி.”

“இப்ப சொல்லு… என்ன பிரச்சினை. என்ன செய்யப் போற…?”

“அப்பா. தங்கச்சியோட கல்யாணம் தள்ளிப் போய்கிட்டே இருக்கு. அதுக்கு காரணம் நீங்கதான்னு அம்மா சொல்றாங்க…”

“அம்மா மட்டும்தான் சொல்லறாளா..?”

“இல்லேப்பா… நான் அப்படி நெனைக்கலே…”

“சரி என்ன செய்ய சொல்லுச்சி அந்த கல்லு..?”

“நீங்க வீட்டை விட்டு வெளிய போகறது நல்லதுன்னு”

“சந்தோசம், அந்த கல்லு சொல்லிச்சா. நீ சொல்லறியா? கல்லுக்கு ஏதுப்பா உயிரு. கல் ஒரு சாக்கு. கோடு ஒரு கணக்கு. நீ முடிவெடித்திருக்கே. நல்லது” சொன்ன அப்பா போய்கொண்டே இருந்தார்.

“இல்லேப்பா… போகாதிங்கப்பா…” என்று நான் அவர் கை பிடித்து தடுத்தேன். அப்பா சிரித்தார். அந்தப் புன்னகை உள்ளுக்குள் எதையோ புதைத்து வைத்திருந்தது. “மகனே…” என்று அந்த புன்னகை விம்மியபடி எதையோ கூறுகிறது. அவர் சொல்ல வந்த அந்த வார்த்தைகளை தன் புன்னகையால் மறைத்திருக்கிறார். அவர் தன் புன்னகையால் இப்படித்தான் எதை எதையோ மறைத்திருக்கிறார். அந்த புன்னகையின் உள்ளே ஒளிந்திருக்கும் ரகசியங்கள் அறிய வேண்டுமென ஒரு பிள்ளையாய் எனக்கு ஆர்வப் படபடப்பு இருந்தாலும் கல்யாணம் என்ற போதை வஸ்து அதை மூடிவிட்டது.

தங்கையின் திருமணம் சொல்லி வைத்தாற்ப்போல் உடனடியாக அப்பா இல்லாமலே நடந்தது. அதன் பிறகும் அப்பா வரவில்லை. அம்மாவும் ரகசியமாய் அப்பாவிடம் போகவில்லை. அவர்களுக்கு வயதாகி விட்டிருந்தது.

அப்பா வேறு வீதியில் வேறு வீட்டில். நானும் அம்மாவும் ஒரே வீட்டில். ஆனாலும் நான் அப்பாவிடம்தான் அதிகமாக பிரிவினைக்குப் பின்னும் பேசிக் கொண்டிருக்கிறேன். ஒரே வீட்டில் இருந்தாலும் அதிக நேரம் ஒன்றாய் இருந்தாலும் எப்பொழுதாவது பார்க்கும் அப்பாவிடம் பேசும் நேரம் அம்மாவிடம் பேசுவதில்லை. அம்மாவிற்கும் எனக்குமான பேச்சு குறைந்து போயிருந்தது. அப்பாவைப் பார்த்தால் மணிக் கணக்கில் பேசினேன். அம்மாவோடு மனஸ்தாபம் இருந்தது. அப்பாவிடம் கேட்டேன் “ஏன் இப்படி…?”

அப்பா சொன்னார். “மனுச உறவு தூரத்தையும் நெருக்கத்தையும் வச்சி அளக்கிறதுக்கு துணி இல்லே. ஊத்தெடுக்கிற உணர்வுகளை ஆதாரமா வச்சி வர்றது அன்பு. அதை எடைபோட்டு அளக்க உலகத்திலே எங்கயும் தராசு இல்லே. வாழ்வோட சூட்சுமத்தை பாரேன். நீயும் அம்மாவும் ஒரே வீட்டுலே இருக்கிங்க. ஆனா பாசம் கொறைஞ்சிருக்கு. நீயும் நானும் வேற வேற வீட்டுல இருக்கிறோம். என் கிட்டே வந்து அநியாயத்துக்கு ஒட்டிகிட்டு இருக்கிறே”

“ரெண்டு பேரையும் ஏதோ ஒரு கயிறு கட்டியிருக்கு. இப்ப ஒரு உண்மைய சொல்லட்டுமா… உன் அம்மாவுக்கு இப்ப இந்த நிமிசம் உன்மேல இருக்கிற பாசத்தைவிட என் மேல இருக்கிற பாசம் தான் அதிகமாய் இருக்கும். வேணுமின்னா கேட்டு பாரேன்”

“என்னப்பா சொல்லிறீங்க…”

“நெசமாத்தான், நான் உங்களை விட்டு பிரிஞ்சிட்டதா நினைக்கிறது தப்பு. நான் பிரியவேயில்லை. உங்களோடதான் வாழ்ந்துகிட்டு இருக்கேன். இது ஒரு தினுசான அளவு. பிரிவு அதிகமானா ரொம்ப நெருங்கின அன்பிருக்கும். நெருக்கம் அதிகமாக அதிகமாக பாசம் கொறைஞ்சிகிட்டே இருக்கும்”

அப்பா சொல்வதும் உண்மைதான் போல் பட்டது, ஒரே வீட்டில் நானும் அம்மாவும் இரு துருவங்களாய் நேரெதிராய் இருப்பது போல் பட்டது. அதுவும் பிடித்த ஒருத்தியை நான் திருமணம் செய்து கொள்ள உத்தேசித்திருப்பதாய் அம்மாவிற்கு தெரிந்ததும் அவளுக்கும் எனக்கும் நடுவே சுவர் ஒன்று குருத்தாய் முளைக்க ஆரம்பித்துவிட்டது. வாக்குவாதம் சண்டையாய் மாறி தடிமனாகி உறவு தள்ளாட ஆரம்பித்துவிட்டது. அப்பாவை நாடினேன்.

“அப்பா… வாழ்க்கையே வெறுத்து போச்சிப்பா! அம்மாவோட தெனத்துக்கும் வாக்குவாதம். வேதனை தாங்காம ஒருநாள் நல்லா குடிக்கப்போறேன் பாருங்க”

“குடி… குடி, ஒடம்புக்கு ரொம்ப நல்லது”

“அதோட நிறுத்தப் போறதில்லே. கஞ்சாவும் சிகரேட்டும் புடிக்கப்போறேன்”

“புடிக்கலாமே. கஞ்சாவில எத்தனை ஞானமிருக்கு தெரியுமா? அத்தனை சாமியாருக்கும் சொர்க்கத்தை பக்கத்தில கொண்டு வர்றது சாமியா? இல்லே அந்த கஞ்சாதான்”

“இப்படி போனா பொம்பள சகவாசத்திலே சீரழியப் போறேன். இது பரவாயில்லையா?”

“போயேன். என்ன இருக்கு தப்பு செய்யறதுன்னு ஆயிட்டா அதில என்ன அளவிருக்கு. எத்தனை பெரிய தப்பும் செய்யலாம்”

“என்னப்பா… தகப்பன் மாதிரி பேசல நீங்க. எக்கேடாவது கெடுன்னு ஒரு தகப்பன் புள்ளைகிட்டே பேசற பேச்சா இது…”

“நீ பேசினது தகப்பன்கிட்டே பேசற பேச்சா? சொல்லு. கண்டதையும் செய்வேன்ணு ஒரு பையன் பெத்தவன்கிட்டே சொல்லிட்டா செய்வான். சொல்லறவன் செய்யமாட்டான்”

“ஆனா இப்ப எனக்கு இருக்கிற வேதனையில யோக்கியமா இருந்து என்னத்த கண்டோம். தப்பு செஞ்சி அழிஞ்சி போவோம்னு தோணுதுப்பா”

“அப்படின்னா அந்த தப்பு செய்…அதான் நல்லது”

“என்னப்பா இது…?” கோமாளி அப்பனின் கோமாளித்தனத்தை புரிந்து கொள்ள முடியாமல் கேட்டேன்.

“இந்த தப்பு சரியெல்லாம் மனுசனா ஏற்படுத்திகிட்டது. தேவலோகத்திலே இருந்து வந்தது இல்லே. உன்னையும், உன்னை சுத்தி இருக்கிறவங்களையும் வேதனைப் படுத்தாம சந்தோசமா வச்சிகிடற எந்த விசயத்தையும் நீ செய்யலாம் தப்பில்லே. செய்யறதுக்கு முன்னாடியே அது தப்புன்னு தெரிஞ்சி ஏன் செய்ணும்?”

“எல்லோரையும் சந்தோசமா வச்சிக்கிடற ஒழுக்கம் ஒண்ணு இருக்கா?”

“இருக்கு. ஒரு விசயத்தை செய்ய உன் மனசு கூசாம. அடுத்த எல்லோரோட முகமும் சுளிக்காம இருந்தா அந்த விசயம் ஒழுக்கமான விசயம்தான்”

“தெனத்துக்கு ஒரு தப்ப செஞ்சி பழகினவனுக்கு அந்த தப்ப செய்யும்போது மனசு கூசாதேப்பா பழகிப் போயிடுமே… ஊரே கூசாம செய்யற தப்பு ஒழுக்கமாயிடுமா…?”

“ஊரே ஒரு விசயத்தை முக மலர்ச்சியோட செஞ்சா அது பேர் தப்பு இல்லே. ஒழுக்கம்”

“பாதிபேர் சரிங்கறாங்க. பாதிபேர் தப்புங்கறாங்களே…”

அப்பா புன்னகை புரிந்தார். புரியாத புன்னகை. என் வேதனை தெரிந்துதான் சிரிக்கிறாரா? இப்ப பாருங்க சொல்லுவார் தத்துவம்.

“அதான் மகனே யதார்த்தம். தனக்கு யோக்கியனா இருக்கிறவன் அடுத்தவனுக்கு அயோக்கியனாய் இருப்பான். அடுத்தவனுக்கு யோக்கியனாக இருக்கிறவன் தனக்குத் தானே அயோக்கியனாயிடுவான்”

அப்பா விசயம் தெரிந்தவர் போல் இதை சொல்லிவிட்டார். எனக்குப் புரியவில்லை. இது எத்தனை பேருக்கு புரியுமோ தெரியவில்லை. அதனால் தான் அப்பா வார்த்தையில்லாமல் எல்லாவற்றையும் புன்னகையால் நிரப்பிவிடுகிறாரோ?

“அப்பா என் பிரச்னை அது இல்லேப்பா… அம்மாவோட தெனத்துக்கம் சண்டை…”

“சரி நேரா விசயத்த பேசுவோம், உனக்கும் அம்மாவுக்கும் பிரச்சினை. அம்மாவ சமாதானம் செய்யலாம்னு பார்த்தா உனக்கும் அவளுக்கும், அதான் அந்த அவளுக்கும் சண்டை. அவளை சமாதானம் செய்தா உனக்கும் அம்மாவுக்கும் சண்டை. அம்மாவ சமாதானம் செஞ்சி அவள வெட்டிக்கிடறதா. இல்லே அவள கல்யாணம் பண்ணி அம்மாவ வெட்டிகிடறதா…இதானே பிரச்சினை?

“உங்களுக்கு தெரியுமாப்பா அவள…?”

“ம், நல்லா தெரியும், நல்லா இருக்கா. நீ கல்யாணம் செஞ்சிக்கோ,”

“அம்மா செத்துடுவேன்னு பயமுறுத்தறாப்பா…”

“சும்மா, அடுத்தவன சாவடிப்பா. தான் சாகமாட்டா”

“அவ வயசானவப்பா. பாவம் அம்மாவ காப்பாத்தறது பிள்ளை தர்மமில்லையா?”

அப்பா திரும்ப கேட்டார் “புடிச்ச பொண்ண கல்யாணம் கட்டிகாம போறது தர்மமாயிடுமா? ரெண்டு தர்மம் மோதிக்கிற போது ஒரு தர்மம் தான் வாழும். இன்னொன்னு சாகும். இது தான் தர்ம யுத்தம். தர்மசங்கடம்,” அப்பா மீண்டும் புன்னகைத்தார்,

“அவஸ்தைப்படாதே…” என்று ஒருகோடு வாசலில் கிழித்தார். நடுவே நிற்க வைத்து கையில் கல் கொடுத்தார்.

“லூசு மாதிரி செய்யாதேப்பா… போனமுறை போட்ட கல்லு உன் தலைமேல விழுந்துச்சி. இந்த முறை அம்மா தலைமேல விழணுமா?”

“இதான் முடிவு பண்ணிட்டியே. அப்புறம் என்ன?”

அப்பா முன்னிலையில் அம்மாவுக்கு தெரியாமல் கல்யாணமாயிற்று. அம்மா காட்டுக் கூச்சல் போட்டு கத்த ஆரம்பித்தாள். பின்பு அழ ஆரம்பித்தாள். இப்பொழுதுதான் அவளுக்கு அவள் புருசன் நினைவே வந்திருக்கிறது. எங்களுக்காகத்தான் ஒப்பற்ற அவள் புருசனை வீதிக்கு துரத்திவிட்டு தியாகியாய் வாழ்ந்தாளாம். நான் படுபாதகம் செய்துவிட்டு கட்டிக் கொண்டேனாம். பாவப்பட்டவனாம். நான் நன்றாக இருக்க மாட்டேனாம். என் சந்ததி அழிந்து போகுமாம். நாசமாக போய் விடுவேனாம். புழு புழுத்து சாவேனாம். மண் வாரி வானத்தில் தூற்றி சபிக்கிறாள். இதுதான் என் அம்மா, எனக்கு தந்த ஆசிர்வாதம். அழுதுவிட்டேன். பத்து மாதம் வயிற்றில் வைத்திருந்தவளா சந்ததி அழிந்து போகும் என்று சபிக்கிறாள்?

அப்பாவிடம் சென்று அழுதேன். “அது சாபமில்லை மகனே. உன்மேல் உள்ள அக்கறை. அன்பு அதுதான் சாபம் மாதிரி வேசம் போட்டுகிட்டு வருது” என்று அந்த பாழாய்ப் போன புன்னகையோடு சொல்கிறார்.

“பாசமிருந்தா நாசமா போயிடுவேன்னு சொல்லுவாளா? வீட்ட விட்டு வெளியே தொரத்துவாளா?”

“நீ நாசமாபோயிட்டா அவதான் அழுவா. எல்லா விசயத்தையும் சட்டுன்னு தெரியுற ரூபத்திலேயே பாக்காதே. அதனோட நிஜ ரூபம் அப்படி இருக்காது. பாசம் சாபம் மாதிரி வேசம் கட்டிட்டு வந்து நின்னா, சாபத்த பாக்கக் கூடாது. அதுக்க பின்னாடி ஒழிஞ்சிட்டு இருக்கே. அந்த திருட்டு பாசம் அதைத்தான் பாக்கணும். அம்மாவோட சாபத்துக்கு பின்னாடி உண்மையான ஒரு பாசம் இருக்கின்றத நீ தெரிஞ்சிக்குவே. அது வரையில பொறுமையா இரு”

பின்னர் காலம் கருத்தரித்து என் மனைவியும் ஈன்றெடுத்தாள். அந்த கிழவன் மகா அயோக்கியனாகத்தான் இருக்கவேண்டும். அந்த புன்னகை மகா கோரமானதாகத்தான் இருக்கவேண்டும். என்ன குரூரம் பாருங்கள். அந்த கிழவன் தன் மனைவியோடு சேர நடத்திய நாடகம் தான், என்னை இன்னொருத்தியோடு கட்டிவிட்டது. என்னையும் அவளையும் சேர்த்து விட்டு அதன் மூலம் என்னையும் அம்மாவையும் பிரித்து, அம்மாவோடு சேர நடத்திய திருட்டுத்தனம்தான் என் அப்பானின் பித்தலாட்டம்.

அம்மா என் பிள்ளையை பார்க்க வந்து இத்தனையும் சொல்லிவிட்டாள். கொஞ்சிக் கொண்டே என் அப்பாவின் இன்னும் கொஞ்சம் யோக்யதைகளையும் பேத்திக்கு சொன்னாள். என் அப்பாவும் என்னைப் போல இன்னொரு ஜாதிக்காரி பின்னாடி சுத்திகிட்டு இருந்தாராம். மொறைப்பொண்ணு நான் இருக்கும் போது இன்னொருத்திய கட்டிக்க விடுவேணான்னு அடம்பிடிச்சி கட்டிகிட்டாளாம். அம்மா பிடித்த அடம் என்னவென்பதை எதிர்த்த வீட்டு பாட்டி சொன்னாளே. அம்மா அப்பாவை வலையில் வீழ்த்திய கதை அபாரமானதுதான். அந்த புன்னகைக்குப் பின்னே இத்தனை பித்தலாட்டங்கள் ஒழிந்திருக்கிறது. தர்மத்தைப் பற்றியும் ஒழுக்கத்தைப் பற்றியும் அந்த புன்னகைதான் தாறுமாறாக போதிக்கிறது. இப்பொழுது கேட்டால் எந்த இஞ்சிப் புன்னகை செய்கிறார் என்று பார்க்கிறேன். வந்தார். கேட்டேன், கோபத்தோடுதான்

“அப்பா… அம்மாவையும் என்னையும் பிரிச்சிட்டு நீங்க ரெண்டு பேரும் சேரத்தானே எங்க ரண்டு பேருக்கும் கல்யாணம் செஞ்சி வச்சிங்க?”

புன்னகைத்தார்.

“நீங்க வேற ஜாதி பொண்ண விருமபினது உண்மையா இல்லையா..? சாகசமா காய் நகர்த்தி அம்மாவோட சேந்திட்டிங்க. அத நான் வேணான்னு சொல்லல. அம்மா என்னையும் அவளையும் கூட்டிட்டு வாங்கன்னு சொல்லியும் வேணான்னிங்களாமே ஏன்?”

புன்னகைத்தார். புன்னகைத்தார்… புன்னகைத்துக் கொண்டே இருந்தார். சாப்பிடாமல் நாள் முழுதும் புன்னகைத்தார். புன்னகை வரண்டு போயிற்று,

“அப்பா. இப்ப எதுக்கு சாப்பிடாம இருக்கிங்க? சொல்லுங்க. குடும்பம் ஒண்ணாகும் போது நீங்க உங்க வித்தைய காண்பிச்சி திரும்பவும் பிரிச்சிடாதிங்க. அப்ப ஜெயிச்சிட்டிங்க… இப்ப முடியாது,”

என்றைக்குமே அப்படி செய்யாதவர் அதிர்ந்து சிரித்தார். “நானா..? ஜெயிச்சிட்டேனா..?” அப்பா இடி இடியென சிரித்தார், “யாருமே எப்பவுமே முழுசா ஜெயிக்க முடியாத மாதிரிதான் வாழ்க்கை இருக்கும். பொறுத்துத்தான் பாரேன். நான் ஜெயிச்சேனா தோத்தேனான்னு. நாங்க ரெண்டு பேரும் ஒண்ணாயிருந்து சந்தோசமாயிருப்போம்னு நீ சொல்ற. அது உண்மையில்ல. சண்டையும் நரகமும் தான் இருக்கும். நீயும் வந்துட்டா குடும்பம் இன்னும் சந்தோசமா இருக்கும்னு சொல்லற. அதுவும் உண்மையா இருக்காது. நீயும் நரகத்திலே மாட்டிப்பே. அவ தன்னோட பாசத்த நெருப்பு மாதிரி காண்பிப்பா. அவளுக்கு அப்படித்தான் அன்பு செய்யத் தெரியும். நான் இன்னொருத்திய கல்யாணம் கட்டிக்க நெனைச்சது உண்மை. அதை நான் மறைக்கல. எல்லாருக்கும் தெரியும். உனக்கு இப்ப தான் தெரிஞ்சிருக்கு”

“இவ என் மாமன் பொண்ணு. கட்டிகிடற மொறையிருக்கு. எனக்கு புடிச்சவ இவ வீட்டுக்கு எதிர் வீட்டில இருந்தா. அங்க போய் நான் எனக்கு புடிச்சவள பாத்து ஆசைய வளத்துகிட்டேன். இவ என்ன பாத்து ஆசைய வளத்துகிட்டா. இவ புத்தி விபரீத புத்தி. என் வயச பயன்படுத்தி என்ன குப்புற தள்ளிட்டா…”

“ஊரைக் கூட்டாத குறை. வயித்திலே வளர்ர புள்ளைக்கு வழி சொல்லுன்னு அவ அப்பனும் ஆத்தாளும் வந்து நிக்கறாங்க. ஒரு நாள் தப்புன்னாலும் தப்புதான். ஒரு மாச புள்ளைன்னாலும் புள்ளைதான். கல்யாணம் கட்டிக்க வேண்டியதா போச்சி. ஆனா அவ சொன்னது தப்பு. அவ கர்ப்பமில்லே. வெறும் நாடகம். இப்படித்தான் அவ என் மேல இருக்கிற பாசத்தை இத்தனை கடுமையா காண்பிச்சா. பொய் சொல்லியாவது… எந்த பொய் சொல்லியாவது கட்டிகிணுங்கற அந்த வெறிதான் அவ காட்டற பாசம். என் விதி பாரு இவள நான் கட்டிகிட்டேன். ஆனா அவ கட்டிக்காம கன்னியாவே இருந்திட்டா. வீணாப் போச்சி அவ வாழ்க்கை. பேத்தியே இல்லாத பாட்டி அவ.

எதுத்த வீட்டுல என் கை பிடிக்கலாமுன்னு காத்துகிட்டு இருந்தவ தெனத்துக்கும் என்ன பாத்து அழுதுகிட்டு இருக்கும் போது, நான் பொண்டாட்டியோட சந்தோசமா எப்படி கிடப்பேன். இந்த அழகுதானே அவள என்கிட்டே இழுத்திச்சி இனி இப்படி ஒரு அழகு வேணான்னு தான் நான் என்னை அலங்கோலமாக்கிகிட்டேன். நான் எத்தனை அலங்கோலமா இருந்தேன்னு எனக்கே தெரியக்கூடாதுன்னுதான் கண்ணாடியில முகம் பாக்கறதையும் நிறுத்தினேன்.

என்னையே நெனைச்சி அவ தன்னை எரிச்சிகிடறது தப்புன்னு சொல்லத்தான் இந்த பரதேசிக் கோலம். எதித்த வீட்டில இருக்கிறாலே அந்த பாட்டி அவதான். அவ முன்னாடி நானும் உன் அம்மாவும் சந்தோசமாயிருக்க முடியுமா? அவ வேதனை என்னை எரிச்சது. அதான் என் வேதனை.”

“உன்னையும் அம்மாவையும் பிரிச்சேன். சேர்ந்தே இருந்திருந்தா உன் மனைவியும் இல்லே. உன் மகளும் இல்லே. ஒரு தொப்புள் கொடி உறவும் இருந்திருக்காது. இங்க இப்ப எதனால வந்து சேந்தா? இந்த பிரிவாலதான். ஆனா நானும் அவளும் ஒரே வீட்டிலே இப்ப பிரிஞ்சி கிடக்கிறது உனக்குத் தெரியுமா? நான் உன் அம்மாவுக்கு தான் தாலி கட்டினேன்… அந்த முடிச்சோட தழும்பு எங்க இருக்குன்னு எவ கழுத்திலே இருக்குன்னு தெரியுமா? யாராலையும் வாழ்க்கைய முழுசா ஜெயிக்கக முடியாதுப்பா. அதுதான் விளையாட்டு”

அம்மா எதிர்வீட்டு பாட்டியோடு அத்தனை சிநேகமாய் இருக்கிறாளே. அம்மாவுக்கு தெரியாதோ? கிழவர்களான பிறகு என்ன விகல்பம் என்று அம்மாவிடம் கேட்டேன்

“அம்மா ஒரு வேற ஒருத்திய அப்பா கட்டிக்க நெனைச்சாருன்னு சொன்னையே அது யாருன்ன தெரியுமாம்மா?”

அம்மா என் பிள்ளையை கொஞ்சியபடியே சொன்னாள். “ஏன் தெரியாது… அந்த எதுத்த வீட்டுக்காரிதானே! கக்ஷடமாத்தான் போச்சி. அதுக்காக முறைய விட்டுத் தரமுடியுமா? மாமன் பையன் மாமன் பொண்ணைத்தானே கட்டிக்கிடணும். நானும் எத்தனையோ சொல்லிப் பாத்துட்டேன். அவ வேற யாரையும் கட்டிக்க மாட்டேன்னிட்டா”

“அப்பா மேல சந்தேகம் வரலையா?”

“அப்பா மேல சந்தேகம் உண்டுதான். அவமேல சந்தேகம் வரலை. உங்க அப்பனுக்கும் அவளுக்கும் நடுவில நான் வந்தது பெருத்த வேதனையா போச்சி. பொண்டாட்டி சரியில்லேன்னா வேற எடம் பாப்பாருன்னுதான் நான் தராத வேதனை தந்தேன்… அவ வீட்டு முன்னாடியே குடி வந்தேன். அவ கடைசி வரையிலும் உத்தமிதான்”

அப்பா இத்தனையும் கேட்டுக் கொண்டு தன் நரைத்த தாடியை தடவிக் கொண்டு இருந்தார். நான் அவரை பார்த்தேன். அந்த பார்வையில் ஒரு கேள்வி இருந்தது. அதற்கு அவர் புன்னகைத்தார். அந்த புன்னகையில் ஒரு பதிலும் கொஞ்சம் நெருப்பும் இருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *