புத்தி பெற்றவர்கள்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 18, 2021
பார்வையிட்டோர்: 3,286 
 

வாசலில் உள்ள பெயர் பலகையை, ஒரு முறைக்கு இரு முறை நன்றாக உற்றுப் பார்த்து படித்து மனத்தைத் திடப்படுத்திக்கொண்டுதான் வசுமதி அந்த வீட்டு அழைப்பு மணியை அழுத்தினாள்.

ஐந்து நிமிடத்தில்…..

நாற்பது வயது மதிக்கத்தக்க தணிகாசலம் கதவைத் திறந்து இவளைக் குழப்பமாகப் பார்த்தார்.

“நீ… நீங்கதானே நிர்மல் – விமல் கம்பெனி மேலாளர்..?” இவள் சற்றுத் தடுமாற்றத்துடனேயேக் கேட்டாள்.

“ஆமாம் !” – என்ற இவர் இன்னும் புரியாமல் அவளைப் பார்த்தார்.

“”உங்க கம்பெனியில் வேலை செய்யிற அன்புச்செல்வன் மனைவி நான். பேர் வசுமதி !”இவள் தன்னை அவருக்கு அறிமுகப்படுத்திக் கொண்டாள்.

வாசல் கதவைச் சரியாகத் திறக்காமல், படியை விட்டு கீழே இறங்காத தணிகாசலம்…

“என்ன விசயம்…? ..” அங்கிருந்தே கேட்டார்.

“நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்…உதவி ….” என்றாள்.

“உள்ளாற வாங்க…”திரும்பினார்.

வீட்டின் முகப்பிலிருக்கும் தன் தனியறைக்குள் நுழைந்தார்.

அந்த அறையே அவர் அலுவலக அறை போல் ஆடம்பரமாக இருந்தது.

வியப்பு திகைப்பாய்ப் பார்த்தாள்.

“நீங்க நினைக்கிறது சாரி. அலுவலக வேலை, வெளி வேலைன்னு நான் அதிகம் பேர்களைச் சந்திக்கிறதுனால இதை என் தனி அறையாய் ஏற்பாடு பண்ணி இருக்கேன். உட்காருங்க…”சோபாவைக் காட்டினார்.

வசுமதிக்கு அவர் முன் அமர தயக்கம். நின்றாள்.

“பரவாயில்லே. உட்காருங்க…”

அமர்ந்தாள்.

“என்ன விசயம் சொல்லுங்க…? ”

“நீங்க மனசு வைச்சி எனக்கு ஒரு காரியம் செய்யனும்……”

“என்ன ..? ”

“இங்கிருந்து கன்னியாக்குமரிக் கிளைக்கு ஒரு மாற்றல் வேணும்…? ”

இவர் இதை எதிர்பார்க்கவில்லை.

“யாருக்கு…?” ஏறிட்டார்.

“என் கணவருக்கு..! ”

“ஏன்…? ”

“ஒருத்தியால என் வாழ்க்கையே நாசமாகிடும் போலிருக்கு…”சொல்லும்போதே வசுமதிக்குத் தொண்டை அடைத்தது.

“புரியல…? ! ”

“எங்க வீட்டுக்கும் பக்கத்து வீடு. பேர் மாலா. திருமணமாகாதவள். சின்னப் பெண் கல்லூரி படிக்கிறாள். பக்கத்துப் பக்கத்து வீடு பேச்சு பழக்கம் என்கிறதுனால எங்க வீட்டுக்கு அடிக்கடி வருவாள். என் வீட்டுக்காரர், நானெல்லாம் அவளிடம் சகஜமா பேசுவோம், பழகுவோம். என் வீட்டுக்காரருக்கு அவளுக்கும் தொடர்பிருக்குன்னு ஒரு மாசத்துக்கு முன்னாடிதான் கண்டுபிடிச்சேன். கையும் மெய்யுமாய் என் வீட்டு கட்டிலிலேயே பிடிச்சேன். அவள் எதிர்காலத்தை உத்தேசித்து ஆத்திரம், அவமானம் காட்டி ரகளை செய்யாமல் ரெண்டு பேரையும் கண்டிச்சி விட்டேன்.

ஆனாலும் பழக்கம் தொடருது. ரெண்டு பேர் கிட்டேயும் தனித்தனியாய் நல்லது கேட்டது சொல்லி திருத்த முயற்சி செய்தேன். முடியல. மனசு வெறுத்து தற்கொலை வரை மனசு துணிஞ்சுச்சு. ஆனா… என் இரண்டு குழந்தைகள் மனக்கண்ணில் வந்து மனசு மாறிச்சு.

இவுங்களைப் பிரிச்சி சரி செய்ய என்ன வழின்னு யோசிச்சேன். மாற்றல் வாங்கி கண்காணா தூரம் போய்ட்டால் கைபேசியிலதானே பேசமுடியும்..? தொடர்பு விட்டுப்போகும். இந்த பேச்சுப் பழக்கமும் தொடர்பு இல்லாததினால் காலப் போக்குல மாறிப்போகும். இல்லே….நான் ஆளைக் கண்டிச்சி திருத்திடலாம்ன்னு நம்பிக்கை இருக்கு சார். மாற்றல் நீங்க மனசு வச்சா முடியும் சார்.” முடித்தாள்.

தணிகாசலத்துக்கு இது சாதாரண காரியம். ஆனாலும் அவளை உற்றுப் பார்த்தார்.

“என்கிட்ட வந்து உதவி கேட்கிறதை விட…. அந்த பொண்ணோட அப்பா அம்மாகிட்ட சொல்லி அவளைக் கண்டிக்கலாமே..!” என்றார்.

”அது அம்மா அப்பாவுக்கு ஒரே பொண்ணு. செல்லம் சார். பாவம் மனசு நோகும். கண்டிக்க அண்ணன், தம்பிகளும் இல்லே. இதுதான் சரியான வழி…?” என்றாள்.

“இதிலும் ஓட்டை இருக்கு வசுமதி. கை பேசி வசதி. திடீர்ன்னு ஒரு நாள் தாலிகட்டி வந்து நின்றால் இந்த முயற்சியும் பாழ். நீ பாதிக்கப் படுவே.”

“முதல் சம்சாரம் சம்மதமில்லாமல் அப்படி நடந்தால் கண்டிப்பா அவருக்கு சிறை சார். துணிந்து போலீஸ் நிலையத்துல புகார் கொடுப்பேன். அவர் வேலைக்கும் ஆபத்து. மனுசனுக்கும் சிறை.” என்றாள்.

‘ ஆள் தெளிவாய் இருக்கிறாள் ! ‘ – தணிகாசத்திற்குப் புரிந்தது.

“அப்பறம்…இன்னொரு உண்மை. உண்மையிலேயே அவளும் என் புருசனும் உயிருக்குயிராய்க் காதலிக்கலே. அவளுக்கு வயசு கோளாறு. இவருக்கு ஆண்களுக்கே உள்ள சபலம். ரெண்டு பேரையும் பிரிச்சிப் போட்டா சரியாய் போயிடும் சார். ”

“அதாவது….. அன்புச்செல்வனுக்கு மாற்றல் கொடுத்தால் எல்லாம் சரியாகிடும். அப்படித்தானே..!? ”

“ஆமாம் சார்..”

“இந்தக் காரியம் பண்ண நான் உன்கிட்ட ஒன்னு எதிர்பார்க்கலாமா…? ”

“என்ன ? பணமா சார்…? ”

“அது தேவை இல்லே…”

“அப்புறம்…? ”

“இப்போ என் வீட்டுல யாருமில்லே. மனைவி, பிள்ளைகள் அவள் தாய் வீட்டிற்குப் போயிருக்காங்க. நான் மட்டும்தான் இருக்கேன். புரியுதா…? ”

புரிந்தது.!!

சட்டென்று அவளுக்குள் நெருப்புப் பற்றி திகுதிகுவென்று எரிந்தது.

“ஒருவாட்டி இருந்தா போதும். அடிக்கடி தொல்லை பண்ண மாட்டேன்.” எழுந்தார்.

அவ்வளவுதான் !

வசுமதியும் படக்கென்று எழுந்தாள்.

“நில்லுடா ! நீ கூப்பிட்டா வர்றதுக்கு நான் ஒன்னும் தப்பான பெண்ணில்லே. நல்ல குடும்பத்துல பொறந்தவள். எனக்கு கற்பு பெரிசு. என்னை உன்கிட்ட காவு கொடுத்து என் கணவனை மீட்கிறதை விட அவர் அப்படியே இருக்கிறது மேல்.” உரக்கச் சொல்லிவிட்டு பத்ரகாளியாக வெளியேறினாள்.

தணிகாசலம் அப்படியே உறைந்தார்.

குப்பென்று வியர்வை கொப்பளிக்க மயக்கம் வந்தது.

வீட்டிற்குள் போய் விழுந்தும் வசுமதிக்கு மனசு தாளவில்லை.

‘பொறுக்கி ! அயோக்கிய ராஸ்கல் ! என்ன நினைப்பு நினைத்து விட்டான் !! ‘ கட்டிலில் குப்புறப் படுத்து விம்மினாள்.

அன்புச்செல்வன் அறைக்குள் நுழைந்து அவள் தலையை மெல்ல தொட்டான்.

திடுக்கிட்டு நிமிர்ந்தாள்.

“மன்னிச்சுக்கோ. நீ ஏதோ ஒரு முடிவுல போறேன்னு எதிர்க்க வந்த என்னைக் கவனிக்காமல் போனதிலிருந்தே தெரிஞ்சு உனக்குத் தெரியாமல் உன் பின்னால் வந்தேன். அவன் பேச்சு உன் பேச்செல்லாம் வாசல்ல நின்னு கேட்டேன். எமனிடம் போய் பிச்சைக் கேட்டது போல் என்னால உனக்கு இந்த கஷ்டம். இனி மாலா என்ன…ரம்பா, ஊர்வசி, திலோத்தமைன்னு எவள் வந்தாலும் உன்னைத் தவிர இவளையும் ஏறெடுத்துப் பார்க்க மாட்டேன். இது சத்தியம் !” சொல்லி இறுக்கி அணைத்தான்.

வசுமதிக்கு மளமளவென்று ஆனந்தக் கண்ணீர். கணவன் மார்பில் சாய்ந்தாள்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *