புது பொண்டாட்டி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 4, 2022
பார்வையிட்டோர்: 3,438 
 

மாரியப்பனுக்கு தன் மனைவியை புரிந்து கொள்ளவே முடியவில்லை. என்ன சொன்னாலும் சண்டைக்கு வருகிறாள். அவன் அம்மாவையே எதிர்த்து பேசுகிறாள்.

அம்மாவின் வாய்க்கு அந்த தெருவே பயப்படும், அப்படிப்பட்ட அம்மா மருமகளை கண்டு விட்டாள் அமைதியாகி விடுவாள்.

அப்பன் அந்த பக்கமே வருவதில்லை. ஆட்டோ ஓட்டுவது இராத்திரி தள்ளாடி தள்ளாடி வந்து சத்தமில்லாமல் நல்ல பிள்ளையாய் வந்து படுத்து தூங்கி விடுவது. காலை ஏழு மணிக்குள் ஆட்டோவை எடுத்து பறந்து விடுவது இப்படி தப்பித்து கொள்கிறார்.

இவன்தான் ருக்மிணியிடம் மாட்டி கொள்கிறான். சடார், புடார் என்று பேசுகிறாள். இவளுக்கு நம்மை கட்டி வந்ததில் விருப்பமில்லையோ என்னும் எண்ணம் கூட அடிக்கடி வந்து இம்சைபடுத்துகிறது.

உண்மையில உனக்கு என் மேல அன்பு இருக்கா? கேட்க நினைப்பான். ஆனால் நேரடியாக கேட்க பயம். அவள் முதலிலேயே சள்..புள் என்று விழுகிறாள்

ருக்மிணியை கட்டி வந்து ஒரு வருசம்தான் ஆகிறது. தூரத்து சொந்தம், அவன் அம்மா எங்கோ கல்யாணத்துக்கு போனவள், அங்கு வந்த ருக்மிணியை பார்த்து அங்கேயே சட்டு புட்டென்று பேசி முடித்து,, பதினைந்து நாட்களுக்குள் மாரியப்பனை தாலி கட்ட வைத்து இழுத்து கொண்டு வந்து விட்டாள்.

அதனால் அவளை பற்றி என்னவென்றே தெரியாமல் திகைத்தான். அவளும் அவனிடம் பழைய கதை எல்லாம் பேசுவதே இல்லை. ஆனால் அவள் நாக்கு, அது நாக்கா இல்லை..

இவனும் ஆட்டோதான் ஓட்டிக்கொண்டு இருக்கிறான். இருந்தாலும் புது பொண்டாட்டி ஆச்சே, அடிக்கடி வந்து கொஞ்சுவான். அவளோ தன் நாக்கை சுழட்ட ஆரம்பித்தால் ஆட்டோ சும்மா நின்னாலும் பரவாயில்லை ஸ்டேண்டிலேயே போட்டு விடலாம், என்று நினைத்து பறந்து விடுவான்.

எல்லாம் இரண்டு மூன்று மணி நேரம்தான், மீண்டும் ருக்மிணி ஞாபகம் வந்து விடும், பக்கத்து ஆட்டோவிடம் சொல்லி வீட்டுக்கு வந்து விடுவான்.

வந்த பாவத்திற்கு இரண்டு மூன்று குடம் தண்ணியை சுமக்க விட்டு விடுவாள், இல்லை என்றால் ஏதோ ஒரு சாக்காட்டில் சண்டை பிடிக்க ஆரம்பித்து விடுவாள்.

அன்று ருக்மிணி எங்கோ வெளியில் சென்றிருந்தாள். மாரியப்பனின் அம்மா டவுன் பஸ் ஏறி இரண்டு மூன்று ஸ்டாப்பிங் தள்ளி உறவுக்காரனின் கல்யாணத்துக்கு போயிருந்தாள். அம்மாவின் சொந்தம், கல்யாணம், அக்கா பொண்ணுக்கு. அக்கா இவளின் பெரியப்பா பெண்

கல்யாண வீட்டில் திடீரென கச முச என்று சத்தம். என்ன என்னவென்று விசாரிக்க, கல்யாண பெண் அணிந்திருந்த கம்மல் “காலோ” “அரை பவுனோ” இருக்கலாம், அது எங்கோ தவறி விழுந்து விட்டதா, இல்லை தொலைந்து விட்டதா என்று தெரியவில்லை.

அந்த நேரத்தில் மாரியப்பனின் அம்மாதான் பக்கத்தில் இருந்திருக்கிறாள். அவளிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டு விட்டார்கள். அப்புறம் எப்படியோ அது கிடைத்து விட்டது.

ஆனால் மாரியப்பனின் அம்மாவுக்கு மனம் சலித்து விட்டது, சே..கொஞ்ச நேரத்தில் என்னை சந்தேகப்பட்டுட்டாங்களே,

இந்த எண்ணத்திலேயே அதற்கு மேல் அந்த கல்யாணத்தில் இருக்க விருப்பமில்லாமல் வீட்டுக்கு வந்தவள், அப்படியே சுருண்டு படுத்து விட்டாள்.

இரண்டு மணி நேரம் ஆகியிருக்கும், வீட்டுக்குள் வந்த ருக்மிணி, தன் மாமியார் சுருண்டு படுத்திருப்பதை பார்த்தாள்.

கிழவி எப்பவும் இப்படி சுருண்டு படுக்காதே, அதுவும் இந்த நேரத்துல. மனசுக்குள் சுருக்கென ஏதோ பட, இந்தா..என்னாத்துக்கு இப்படி சுருண்டு படுத்துகினே..

ம்..ஓன்னூமில்லை…

இந்த என்னாத்துக்கு இழுக்கறே, எங்கியாச்சும் போய்க்கினி வந்தியா.

நெளிந்தாள், எங்க பெரியம்மா பொண்ணு மக கல்யாணம் போயாந்தேன்.

அதுக்கு இன்னாத்துக்கு இப்படி வந்து கவுந்துக்கினிருக்கே?

ம்..ஒண்ணுமில்லை,

உடம்பு கிடம்பு ஜூரமடிக்கா,

அதெல்லாம் ஒண்ணுமில்லை..இழுத்தாள்.

அப்பொழுதுதான் உள்ளே வந்த மாரியப்பனின் தகப்பன் என்னா..மயிலு, கல்யாண வூட்டுல என்னமோ நடந்துச்சாமா?

இந்தா நீ கம்முனு கிட , ஒண்ணும் நடக்கலை,

ருக்மினி ராங்கியானாள், இந்தா கிழவி என்னா நடந்துச்சு, என்னாத்து இப்படி கவுந்து கிடக்கறேன்னு சொல்ல மாட்டேங்கறே

மாரியப்பனின் தகப்பன் ருக்மிணியிடம் அதான் ஏதோ கம்மலை காணொமாம், இவளாண்ட புடுச்சு கேள்வி கேட்டிருக்கானுங்க

இந்தா கிழவி எந்திரி, எந்திரி, சட்டென்று மாமியாரை பிடித்து எழுப்பினாள்.

என்னாத்துக்கு எழுப்பறே, விடு.. என்னை மாமியார் முரண்டு பிடித்தாள்.

மாமா நீ ஆட்டோவை இட்டாந்திருக்கியா?

ஆமா புள்ளே, வெளியே நிக்குது.

இந்தா கிழவி இப்ப நீ வர்ரியா இல்லையா, இதா மாமாவ் என்னை அந்த கல்யாணத்துக்கு கூட்டிக்கிணு போ.. சரக்கென்று ஆட்டோவில் ஏறிக்கொண்டாள்.

மாரியப்பனின் தகப்பனுக்கு பயம், என்ன இவள் சின்ன பொண்ணு, இவள் பாட்டுக்கு அங்கு போய், .திகைத்து நிற்க..

இந்தா என்னாத்துக்கு முழிச்சிக்கினி நிக்கறே, இப்ப நீ வாறியா இல்லை, நானே ஆட்டோவை எடுத்துட்டு போகட்டா..

அவ்வளவுதான் விழுந்தடித்து ஆட்டோவை எடுத்து கல்யாணவூட்டுக்கு பறந்தான் மாரியப்பனின் தந்தை.

அங்கு நடந்ததை மாரியப்பனின் தந்தை தன் பொண்டாட்டியிடமும், மாரியப்பனிடமும் இப்படி விவரித்தான்.

என்னா கேள்வி கேக்கறா உன் பொண்டாட்டி, “உங்க வூட்டு சோத்தைதான் என் மாமியார் சாப்பிட்டுகிட்டிருக்காளா?, அவளை என்ன ஒண்ணுமில்லாத ஆயான்னு நினைச்சு கேள்வி கேட்டிருக்கிங்களா?

அவ அக்காவை பார்த்து கேட்ட கேள்வியில அவங்க எல்லாருக்கும் என்ன பேசறதுன்னே தெரியலை, அவ கிட்டே எல்லாரும் மன்னிப்பு கேட்டாங்க, அப்ப அவ சொன்னா பாரு

எங்கிட்ட என்னாத்துக்கு மன்னிப்பு,? மாமியாரு மானஸ்தி, மான ரோசத்துக்கு பயந்து வூட்டுல கவுந்து கிடக்கு, உனக்கு உண்மையில நீ செஞ்சது தப்புன்னு நினைச்சா, வூட்டுக்கு வந்து மன்னிப்பு அதுகிட்ட கேளு, அப்படி இப்படின்னு போட்ட போடுல அங்க இருக்கற எல்லாரும் அரண்டு போயிட்டாங்க..

நம்ம சொந்தக்காரனுங்க எல்லாரும் என்னமா பேசறா நம்ம மாரியப்பன் பொண்டாட்டின்னு ஒரே பேச்சு பேசிக்கினிருந்தாங்க.

கேட்க கேட்க மாரியப்பனுக்கு சந்தோசம் தாங்கவில்லை. அவ நாக்கை சுழட்டி பேசட்டுமே, அப்படி பேசுனாத்தானே, நானும் எங்க அப்பனும், ஆத்தாளும் கம்முனு இருப்போம், இப்படி பெருமையாய் நினைத்து கொண்டான்.

அவளுக்கு நம்ம குடும்பத்து மேல அவ்வளோ பாசமில்லன்னா ஒத்தையா போய் சண்டை போடுவாளா?

ருக்மினி என்னதான் அவனை பேசினாலும் இனி கோபமோ, சங்கடமோ படக்கூடாது என்று நினைத்து கொண்டான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *