புதிய பயணம்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 19, 2016
பார்வையிட்டோர்: 10,482 
 

“இப்படி ஒரு வாழ்க்கை வாழ்ந்ததற்கு பதில் செத்து போயிருக்கலாம்?” என்று அவன் சோபாவில் உட்கார்ந்தபடியே யோசித்து யோசித்து உறங்கிப்போனான்.

“என்னங்க… ரூம்ல போய் படுக்குறீங்களா?” என்று அவன் மனைவி சரோஜா எழுப்பினாள்.

“இல்ல.. வேணாம்மா..”

“ஜூஸ் ஏதாவது கலக்கி தரட்டுமா?”

“சரி.. அப்படியே.. அந்த டிவி கன்ட்ரோலை எடுத்து கொடு..”

“இந்தாங்க”.. கொடுத்துவிட்டு ஜூஸ் கரைக்க சென்றாள்.

அவன் டிவியை இயக்கி.. ஒவ்வொரு சேனலாக மாற்றிக்கொண்டே இருந்தான். எதிலும் மனசு நிலைக்கவில்லை.

கண்கள் டிவியை பார்த்தாலும் அவனது எண்ணங்கள் சென்னை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களைப் போல நிலைகொள்ளாமல் தத்தளித்தது. அவன் நினைவலைகள் கரையிலிருந்து கடலுக்கு செல்லும் அலைகள் போல பின்னோக்கி சென்றது.

சரோஜாவும், அவனும் காதலித்து வீட்டை மீறி திருமணம் செய்துகொண்டவர்கள். அவன் செக் வரை படித்துவிட்டு கூரியர் நிறுவனத்தில் டெலிவரி பிரிவில் வேலை செய்கிறான்.

ஆனால் சரோஜா வியாபார நிர்வாகத்தில் டிப்ளோமா முடித்துவிட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறாள்.

கொஞ்சங்காலமாகவே அவனுக்கு தன் மனைவி தன்னைவிட அதிகமாக சம்பாதிக்கிறாள் என்ற தாழ்வுமனப்பான்மை இருந்தது.

அது அவனுள் சாத்தானாக விசுவரூபம் எடுத்து வெடித்தது ஒருநாள்.

“சரோ.. ஏன் லேட்.. இப்ப மணி என்ன தெரியுமா?”

“புதுசா ஒரு ப்ராஜெக்ட் வந்திருக்கு.. இன்னும் ரெண்டு நாள்ல முடிச்சாகணும்.. அதமுடிச்சா, எனக்கு பதவி உயர்வு கிடைக்கும்.. சம்பளமும் முன்னூறு வெள்ளி ஏறும்..”

சம்பளம் அதிகமாகும் என்ற வார்த்தையை கேட்டவுடன் அவனால் ஜீரணிக்கமுடியவில்லை.

உடனே, “நீ ப்ராஜெக்ட் செஞ்சிட்டு வரீயா.. இல்ல பாய் ஃபிரெண்டோட ஊர் சுத்திட்டு வரீயா..”

அதிர்ச்சியுடன், “என்ன சொல்றீங்க.. என்னய சந்தேகப்படுறீங்களா?”

“ஆமா.. சந்தேகம்தான்.. ரெண்டு நாளைக்கி முன்னால டெலிவரிக்கு போறப்ப ஒன்னையும், மனோகரையும் அந்த ரெஸ்டாரன்ட்ல பார்த்தேன். அவனோட நீ சிரிச்சி சிரிச்சி பேசிகிட்டிருந்தே..”

“அப்போ என்னய வேவு பாக்குறீங்களா?”

“பேச்ச மாத்தாதே.. கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு.. ஆமாவா இல்லையா?”

“ஆமா, சாப்பிடப் போனோம் இதுல என்ன தப்பு”

“நீ செய்றது எனக்கு பிடிக்கல.. உடனே வேலைய ரிசைன் பண்ணு”

“ஆர் யூ ஓக்கே! இதவிட நல்ல வேல கெடைக்கிறது ரொம்ப கஷ்டம்”

“அதெல்லாம் எனக்கு தெரியாது.. ஒரு வாரம் டைம் தாரேன்.. அதுக்குள்ள வேலைய விடணும்” என்று கத்திவிட்டு.. கோபமாக வீட்டைவிட்டு வெளியேறி தன் பைக்கை எடுத்துக்கொண்டு வேகமாக புறப்பட்டான்.

எங்கே போவதென்று புரியாமல் மனம்போன போக்கில் சென்றான், திடீரென “டமால்”னு சத்தம்.. மயக்கமாகிப் போனான்.

கண்விழித்துப் பார்த்தான்.. மருத்துவமனை படுக்கையில் தலை, காலில் கட்டோடு கிடந்தான்.

“என்னங்க.. கடவுள் புண்ணியம் கொஞ்சம் காயத்தோடு உயிர் பொழச்சீங்க”

அப்போதுதான்.. அவனுக்கு கார்மீது மோதியது நினைவுக்கு வந்தது. பின் வீட்டிற்கு வந்து ஒரு வாரம் ஆகிவிட்டது.

“இந்தாங்க.. ஜூஸ் குடிங்க..”

வாங்கியபபடியே, “சரோ, நீ எனக்காக ஒரு வாரமா வேலைக்குப் போகாம.. என்னய ரொம்ப நல்லா கவனிச்சிகிட்ட..” என கண்கலங்கினான்.

“எனக்கு வேலையைவிட நீங்கதான் முக்கியம்”

“அப்போ ஒன்னோட ப்ராஜெக்ட்..”

“இது இல்லேன்னா.. அடுத்த ப்ராஜெக்ட் கண்டிப்பா செய்வேன்”

“சரோ, இப்ப என்னால ஓரளவுக்கு நடக்கமுடியும்.. நாளையிலிருந்து வேலைக்குப்போ”

மறுநாள், இரவு 8மணி.. சரோவுக்கு போன் செய்தான்.. நாட் ரீச்சிடு என்று பதில் வந்தது. சிறிது நேரங்கழித்து சரோ வந்தாள்.

“ஏன் இவ்வளவு லேட்..”

ஆத்திரத்துடன், “திரும்பவும் ஒங்க சந்தேகப்புத்தியை ஆரம்பிச்சிட்டீங்களா? வரும்போது எம்ஆர்டி ஒருமணி நேரம் நின்னுடுச்சி.. போன்ல சிக்னல் வேற கெடைக்கல..”

“இல்ல சரோ, ஏதாவது சமைச்சு வைக்கவானு கேட்கத்தான் போன்ல ட்ரை பண்ணினேன், ஆனா லைன் கெடைக்கல”

“சாரிங்க.. நான்தான் தப்பா புரிஞ்சிகிட்டேன்”

இப்ப அவன் மனசு சந்தோஷ வானில் புதிய பறவையாய் சிறகடித்துப் பறந்தது. வாழ்க்கையின் புதிய பயணம் தொடங்கியது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *