புகழின் விலை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 2, 2021
பார்வையிட்டோர்: 3,104 
 

“குழந்தையின் முகம் பௌர்ணமி சந்திரன்மாதிரி எவ்வளவு அழகா, உருண்டையா இருக்கு!” என்று பார்த்தவர்களெல்லாரும் பிரமிக்க, அந்தப் பெயரை எனக்கு வைத்தார்கள்.

இப்போது நினைத்துப் பார்க்கையில், பிறந்ததிலிருந்தே பிறரது பாராட்டுக்காகவே நான் வளர்க்கப்பட்டேன் என்றுதான் தோன்றுகிறது.

நான்கு வயதிலேயே கேட்ட பாடல்களை அப்படியே பாடிக் காட்டுவேனாம். குரல் வேறு இனிமையாக இருந்து தொலைத்ததா, முறையாக இசை பயில அனுப்பினார் என் தந்தை. எல்லாம் அம்மாவின் நச்சரிப்பு தாங்காமல்தான்.

“இப்போ எதுக்கு பாட்டும் கூத்தும்? படிச்சு, ஒரு டிகிரி வாங்கறமாதிரி ஆகுமா?” என்று அப்பா சொல்லிப் பார்த்தாராம். அவரே என்னிடம் ஒருமுறை கூறியிருக்கிறார்.

“டி.வியில இப்போல்லாம் பாட்டுப் போட்டி வெக்கறாங்க, சின்னக் குழந்தைகளுக்குக்கூட. இவளுக்கு இருக்கிற குரலுக்கும் சங்கீத ஞானத்துக்கும்! பரிசு என்ன தெரியுமா?” என்று சவால் விட்டாள் அம்மா.

அப்போதே, தங்கள் பெண் அப்படி ஒரு போட்டியில் வெற்றி பெற்று, பல லட்சம் பெறுமான வீடு தங்களுக்குச் சொந்தமாகப்போகிறது என்ற கனவில் ஆழ்ந்தார்கள் இருவரும்.

பத்து வயதில் எனக்கு இதெல்லாம் புரியவில்லை. வித விதமான ஆடைகள் அணிய முடிகிறதே, போட்டிக்கு முன்னாலும், முடிந்த பிறகும் எல்லாரும் கொஞ்சுகிறார்களே என்று கர்வமாக இருந்தது. பள்ளிக்கூடத்திலும் நான் போட்டியின் இறுதிச்சுற்றை அடைந்துவிட்டதைப் பெருமையுடன் பொதுக்கூட்டத்தில் அறிவித்தார்கள். எல்லா ஆசிரியைகளும் மாணவிகளும் கைதட்டினதை மறக்க முடியுமா!

“பூர்ணிமாவைப் பாட்டுக் கிளாசிலே சேர்க்கணும்னு நான் சொன்னப்போ என்னமோ யோசிச்சீங்களே! இப்போ பாத்தீங்களா?” எனக்குப் பரிசாகக் கிடைத்த அபார்ட்மெண்டுக்குள் நுழையும்போது அம்மா அப்பாவை இடித்துக் கேட்டாள்.

அப்பா அசட்டுச்சிரிப்புச் சிரித்தார், தன் தோல்வியை ஒப்புக்கொள்வதுபோல். அதற்குப்பின், எல்லாமே அம்மாவின் விருப்பப்படிதான் நடந்தது.

இசைத்துறையில் முன்னணியில் இருந்த ஜகதாம்பாளிடம் என்னை அனுப்பினார்கள். மேடைக் கச்சேரி செய்யும்போதெல்லாம் நானும் என் குருவிற்குச் சற்றுப் பின்னால் அமர்ந்து, முகத்தில் எந்தவித உணர்ச்சியும் காட்டாமல், உடலும் அசையாமல் தாளம் போடுவேன்.

அது பாவாடை- சட்டை மட்டும் அணிந்திருந்த பருவம். உடன் பாடும் அளவுக்கு நான் வளர்ந்திருக்கவில்லை. பள்ளி விடுமுறை நாட்களில், அவர்கள் வீட்டிலேயே தங்குவேன்.

பாடும்போது, டீச்சருக்கு அடிக்கடி இருமல் வரும்.

“ஜகதா மாமி! தண்ணி கொண்டு வரட்டுமா?”

என்னைப் பார்த்து ஆதுரத்துடன் சிரித்தாள் மாமி. தானே எழுந்து உள்ளே போய், ஒரு கிளாஸ் நிறைய ஏதோ மருந்தை ஊற்றிக் கொண்டுவந்தார்கள்.

சிறிது குடித்ததும், குரலில் மீண்டும் இனிமை.

வீடு திரும்பியதும், அப்பாவிடம் சொன்னேன், “ஜகதா மாமிக்கு உடம்பு சரியில்லேப்பா. ரொம்ப இருமறாங்க. அடிக்கடி மருந்து குடிக்கறாங்க. கிளாஸிலே!”

அப்பாவின் முகத்தில் கவலையின் ரேகை.

`அப்பா, நல்ல அப்பா! டீச்சர் நல்லா இருக்கணும்னு எவ்வளவு அக்கறை!’ என்று நான் நினைத்துக்கொண்டேன்.

“நான் கச்சேரிக்காக ஒரு மாசம் வெளியூருக்குப் போறேன், பூர்ணிமா. பாட்டு கிளாஸ் கிடையாது. நீ தினமும் பிராக்டீஸ் பண்ணணும். என்ன?”

`பாடு! பாடு! இல்லாட்டி, சாரீரம் பேசாது!’ என்று காலை நான்கு மணிக்கே என்னை எழுப்பி, ஓயாமல் விரட்டும் அம்மாவைவிட எனக்கு மாமியைத்தான் பிடிக்கும்.

ஒரு மாதம் மாமியைப் பார்க்க முடியாதா! அழுகை வந்தது.

“அதெல்லாம் அவ பாடுவா. நான் பாத்துக்கறேன்,” என்று அம்மா அதிகாரமாகக் கூறியபோது என் அழுகை பலத்தது. இந்த அழுகை எனக்காக.

சாயங்கால வேளைகளில் மற்ற குழந்தைகள் எல்லாரும் சிரித்து விளையாட, நான் மட்டும் மணிக்கணக்கில் பாடியாக வேண்டும். கைதிகளுக்குக் காவல் இருப்பதுபோல் அம்மா அருகிலேயே உட்கார்ந்திருப்பாள்.

எப்போதாவது, அம்மா கடைகண்ணிகளுக்குப் போயிருக்கும்போது, `தப்பித்தோம்’ என்று நானும் விளையாட ஓடுவேன்.

ஒரு முறை, என்னைக் கையும் களவுமாகப் பிடித்ததோடு நிற்கவில்லை அம்மா. என்னுடன் விளையாடிய மற்ற சிறுமிகளை மிரட்டினாள், “இனிமே நீங்க அவளோட விளையாடினா, தெரியும் சேதி!” என்று.

ஒரு நீண்ட பிரசங்கம் தொடர்ந்தது. “இன்னும் கொஞ்ச வருஷத்திலே பூர்ணிமா பெரிய, பெரிய சபாக்களில கச்சேரி செய்யப்போறா, அவ டீச்சர்மாதிரி. அகல ஜரிகைபோட்ட பெரிய பட்டுப்புடைவை கட்டிக்கிட்டு, தலை நிறைய பூவோட! ஒவ்வொரு கச்சேரிக்கும் புதுசு புதுசா புடவை கட்டுவா. ஒங்களைப்போல விளையாட்டிலே நேரத்தை வீணடிச்சா, அதெல்லாம் கிடைக்குமா?”

எனக்கும் அந்தக் கனவு பிடித்துத்தான் இருந்தது.

அதையும் மீறி, எப்போதாவது விளையாடப் போனால், “எங்ககூட நீ விளையாடினா, ஒங்கம்மா எங்களைத்தான் திட்டுவாங்க. வேணாம்பா,” என்று என்னை ஒதுக்கிவிடுவார்கள்.

அப்போதெல்லாம் எனக்கு அம்மாவின்மேல் ஆத்திரமாக இருக்கும். ஆனால், அது நிலைக்காது.

அம்மாவின் முயற்சி இல்லாவிட்டால், பன்னிரண்டு வயதுக்குள் சினிமாவில் பின்னணி பாடச் சந்தர்ப்பம் கிடைத்திருக்குமா?

ஆரம்பத்தில் சற்று கஷ்டமாகத்தான் இருந்தது.

“என்னம்மா, இப்படி அழுத்தி, அழுத்திப் பாடறே? இது மேடைக் கச்சேரி இல்லே. பாட்டுன்னா என்னான்னே தெரியாதவங்களும் ரசிக்க வேணாமா? மேலாகப் பாடு,” என்று நான் கற்ற பாணியை மாற்றினார்கள் இசை அமைப்பாளர்கள்.

ஜகதா மாமிக்கு இசையைப்பற்றித் தெரிந்த அளவு இவர்களுக்குத் தெரிந்திருக்குமா?

அம்மாவிடம் என் சந்தேகத்தைத் தெரிவித்தேன்.

“அவங்க சொல்றபடிதான் பாடிட்டுப் போயேன்!” என்று வழிகாட்டினாள். “யாருக்கு நிறைய பணம் கிடைச்சிருக்கு? யோசிச்சுப்பாரு!”

ஒரு நாளைக்கு நான்கு இடங்களில் என் குரலைப் பதிவு செய்தபோது, அம்மாவுக்கு நன்றி சொல்லத் தோன்றியது.

இப்போதெல்லாம் நான் ஜகதா மாமியிடம் பாட்டு கற்கப் போவதில்லை. தெரிந்தவரை போதும். மாமியின் வழியில் பாடினால், சினிமா வாய்ப்புப் போய்விடும் என்ற பயம் வேறு உள்ளூர இருந்தது.

மாமிக்கே இப்போது கச்சேரிகள் குறைந்துவிட்டன. ரொம்ப இருமலாம்.

சில வருடங்களுக்குப்பின், மாமியின் உடல்நிலை மோசமாகிவிட்டது என்று கேள்விப்பட்டு, மரியாதைக்காகப் பார்க்கப் போனேன்.

“வாடி!” என்று வாயார வரவேற்றாள் மாமி. “ரொம்ப பெரிய மனுஷியாகிட்டேபோல! ரேடியோவிலும், டிவியிலும் எப்பவும் ஒன் குரல்தான்!”

குரலில் பொறாமை இல்லை – என் சக பின்னணிப் பாடகர்களைப்போல. உண்மையான மகிழ்ச்சியும் பெருமையும் தொனித்தன.

நான் சூள் கொட்டினேன்.

“ஒங்கப்பா அம்மாவுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குமே?”

“துபாய், மலேசியா, சிங்கப்பூர்னு மேடையில பாட கூட்டிட்டுப் போறாங்க, மாமி. எனக்குத் துணை போகணும்னு அப்பா வேலையை விட்டுட்டார். ஆனா..,” நிறுத்தினேன்.

“ஒங்கம்மாவுக்குத்தான் நீ பிரபலமான பாடகியாகணும்னு ரொம்ப ஆசை”.

மெள்ளக் கூறினேன். “அம்மா போய் அஞ்சு வருஷமாயிடுச்சு, மாமி”.

“அடடா! சின்ன வயசுதானே அவங்களுக்கு! என்ன ஆச்சு?”

“போயிட்டாங்க. அவ்வளவுதான். எப்படிச் செத்தா என்ன?” கடுமையாக வந்த என் குரல் மாமிக்கு மட்டுமல்ல, எனக்கும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

தினமும் நான் குற்ற உணர்வால் வெந்துபோவது என்னுடன் இருக்கட்டும்.

எனக்காகத்தானே அம்மா தன்னைத்தானே மாய்த்துக்கொண்டாள்!

நான் பள்ளிப்படிப்பை முடிக்கும் வயது அப்போது.

எனக்கு அடிக்கடி வாய்ப்பு கிடைக்க வழிசெய்வதாக அம்மாவிடம் ஆசைகாட்டிய ஒரு பாடலாசிரியர் முதலில் மரியாதையாகத்தான் நடந்துகொண்டானாம்.

தனிமையில் அவனைப்பற்றி விளக்கிவிட்டு, “அவன் பக்கமே தலைவெச்சுக்கூடப் படுக்காதே, பூர்ணிமா!” என்று அழுதபடி, ஆணித்தரமாக அறிவு புகட்டிய அம்மா மறுநாள் காலை எழுந்திருக்கவில்லை. கட்டிலின் கீழ் காலியான தூக்க மாத்திரைப் புட்டி.

வெளியில் விஷயம் பரவுவதற்குள் அம்மாவின் இறுதிக்கடனை முடித்தார் அப்பா.

அம்மா அழுததன் காரணம் பிறகுதான் புரிந்தது எனக்கு.

அம்மா அவனுக்கு இணங்கி நடந்திருக்க வேண்டும். இறுதியில், கணவருக்குத் துரோகம் செய்துவிட்டோமே என்று குமைந்து, சாவை நாடியிருக்கிறாள்.

ஒரு விம்மல் வெளிப்பட்டது என்னிடமிருந்து.

“என்ன, பூர்ணிமா? நீ இப்படி வருத்தப்பட்டுக்கிட்டே இருந்தா எப்படி? இன்னிக்கு நீ பேரும் புகழுமா இருக்கிறதைப் பாத்து அம்மா எங்கேயிருந்தாலும் சந்தோஷமாத்தான் இருக்கப்போறாங்க!”

மாமியின் பேச்சு எனக்கு ஆறுதல் அளிக்கவில்லை.

ஒவ்வொரு முறையும் அப்பாவுடன் என்னை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, அம்மா பின்தங்கியதன் ரகசியம் புரிந்தது.

`ஏம்பா அம்மாவும் நம்பகூட வீட்டுக்கு வரதில்ல?’ என்று அப்பாவைக் கேட்டபோதெல்லாம், `யாராவது கொண்டு விட்டுடுவாங்க,’ என்பார் அப்பா, அலட்சியமாக. அவர் என்று அம்மாவை மீறியிருக்கிறார்!

பேச்சை மாற்ற, “மாமி. எனக்கும் ஒங்கமாதிரி அடிக்கடி இருமல் வருது,” என்று ஏதோ சொன்னேன்.

“நான்தான் குடிச்சுச் சீரழிஞ்சு போனேன். நீயாவது ஒடம்பைப் பாத்துக்க, பூர்ணிமா. ஒங்கிட்ட இருக்கிறது அபூர்வமான வித்தை. சாமி குடுத்த வரம்,” என்று ஏதேதோ சொன்னார்கள் ஜகதா மாமி.

எனக்கு ஒன்றுதான் புரிந்தது. அம்மாவை அழித்த இந்தப் பாட்டு எனக்கு வேண்டாம். இனி கோயில்களில்தான் பாடப்போகிறேன். இறைவன் கொடுத்ததை அவனுக்கே அர்ப்பணம் செய்யப்போகிறேன்.

அதற்கு முன்னால், நான் செய்யவேண்டிய முக்கியமான வேலை ஒன்று பாக்கி இருக்கிறது.

அம்மாவுக்கு அவன் செய்த கொடுமையை எனக்கே செய்ததாகக் கூறி, “மீ டூ” என்று, நாடறிய அவன் பெயரை நாறடிக்கப்போகிறேன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *