பீஃனிக்ஸ் பறவை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 26, 2017
பார்வையிட்டோர்: 10,893 
 

நான் திருகோணமலை சர்வதேச விமான நிலையத்திலிருந்து வெளிக்கிட்டு அர்லாண்டா விமான நிலையத்தில் வந்திறங்கினேன். இதற்குமுன் நான் வெளிநாட்டுக்கு பிரயாணம் செய்தவளல்ல. விமானக் கூடத்தில் இருந்த ஜனத்திரளில் என் மகனுடைய முகத்தைத் தேடியபோது எனக்கு பயம் பிடித்துக்கொண்டது.

ஸ்டோக்ஹோமில் நான் வந்திறங்கிய வருடம் 2018. என் மகன் என்னை விட்டு பிரிந்து ஸ்வீடனுக்கு படிக்கப்போன வரும் 1998. அப்ப அவனுகு வயது 15. என்னால் நம்பவே முடியவில்லை. இருபது வருடங்கள் என் ஒரே மகனைப் பிரிந்து வாழ்ந்திருக்கிறேன். இப்போது அவனுக்கு வயது 35; மணமாகி ஆறு வயதில் ஒரு மகனும் உண்டு.

நான் கண்களை நாலா பக்கமும் சுழட்டி தேடியபடியே வந்தேன் காணவில்லை. என்னைப் பிரியும் போது அவன் குழந்தைதான்; மீசை கூட அரும்பவில்லை. விடும்போது ஏர்போர்ட்டில் என்னைக் கட்டிப்பிடித்து கசக்கி அழுஅழுவென்று அழுதான். என் மனம் என்ன பாடுபட்டது! அப்போது அவர் இருந்தார். இப்ப அவரும் போய்விட்டார். நானும் வேலையிலிருந்து ஓய்வெடுத்து விட்டேன். என் மகன் எத்தனைதரம் டெலிபோனில் கதைத்தான்; எவ்வளவு கடிதங்கள். “அம்மா! நீங்கள் அங்கையிலிருந்து என்ன செய்யப் போறியாள்; இஞ்ச எங்களோடை வந்திடுங்கோ; உங்களுக்கு ஒரு குறையும் வராமல் பார்ப்போம்” என்று கெஞ்சியபடியே இருந்தான். எனக்கும் வேறு யார் இருக்கிறார்கள்? பிறந்த மண்ணைவிட்டு ஒரேயடியாக புறப்பட்டு விட்டேன்.

ஓர் இளம் கணவனும் மனைவியும் என்னை உற்றுப் பார்த்தபடியே கடந்து போனார்கள். என் மகனுடைய கண்கள் எப்படி இருக்கும்? குழந்தையாக இருந்தபோது மடியிலே கிடத்தி மணிக்கணக்காக அவன் கண்களையே பார்த்தபடி இருப்பேன். மகாபாரதத்தில் வரு ம அர்ஜுன் என்ற பேரையே அவனுக்கு வைத்திருந்தேன். என் மகன் என்னிடம் “உள்ள குப்பையெல்லாம் கொண்டு வர வேண்டாம். தேவையானதை மாத்திரம் கொண்டு வாங்கோ; இஞ்ச வைக்கவும் இடமில்லை” என்று பத்துத் தடவையாவது சொல்லியிருந்தான். அதனாலே வாழ்நாள் முழுக்க சேகரித்ததெல்லாவற்றையும் மனமின்றி துறந்துவிட்டு இரண்டேரெண்டு சூட்கேசுடன் வந்திறங்கினேன். என்னுடைய துணிமணிகள், புத்தகங்கள், இவர் ஞாபகமாக சில பொருள்கள், அவ்வளவுதான்.

தள்ளு வண்டியைத் தள்ளுவது கூட கஷ்டமாக எனக்குப் பட்டது. ஒரு சூட்கேஸ் நழுவி கீழே விழுந்தபடி இருந்தது. எங்கே போனான் இவன்? எனக்கு பதட்டமாக வந்தது. ஐந்து வருடமாக இவனும் பாவம்; என்ன கஷ்டப்பட்டு விட்டான்? ஸ்வீடன் நாடு மற்ற நாடுகள் போல அல்ல. ஜனத்தொகை விஷயத்தில் சரியான கண்டிப்பு. அவர்கள் ஜனத்தொகை 110 லட்சம். அந்தத் தொகை இந்தத்தானத்தை தாண்டாமல் வெகு கவனமாகப் பார்த்துக் கொண்டார்கள். பெரும் போராட்டத்திற்கு பிறகுதான் எனக்கு நிரந்தர குடியுரிமை கொடுத்தார்களாம்!

‘அம்மா’ என்ற குரல் கேட்டது. தமிழ்க் குரல்தான். தேனாக அது என் காதில் வந்து விழுந்தது. என் மகன்தான் ஓடோடி வந்து கொண்டிருந்தான். என்ன கண்கள்! ஆறடிக்கும் மேலே உயரமாக வளர்ந்து விட்டான். புதர்போல கட்டுக்கடங்காமல் இருக்கும் தலைமயிரை அடக்கி வாரி அழகாக விட்டிருந்தான். ஒரு டீ சேர்ட்டும் ஜ“ன்ஜும் அணிந்திருந்தான். அவனுக்கு குளிரே இல்லை. என்னைத் தொட்டுத் தொட்டு பார்த்துவிட்டு அப்படியே ஆகாயத்தில் தூக்கிவிட்டான். மெத்தென்று வெல்வெட் போல இருந்த அவனுடைய தேகம் இப்ப வஜ்ரமாக இருந்தது. பின்னாலேயே அவள் நின்றாள். பெயர் ஸ்வென்கா. முதன்முறையாக பார்க்கிறேன். இவனைப் போல அவளும் உயரம்தான். இயற்கையான சிரிப்பு அவளுக்கு இருந்தது. பொன் நிறத்தில் தலைமயிர். அசப்பில் பார்த்தால் சினிமாவில் நடிக்கக் கூடிய அழகோடு தென்பட்டாள். நான் அதிசயப்பட்டது அவளுடைய இடையைப் பார்த்துத்தான். ஒரு கைப்பிடிக்குள் அடங்கும். நீண்ட வழுவழுவென்ற கைகள் என்றாலும் உருண்டு திரண்டு வலுவாக இருந்தன.

‘மொர்மோ, மொர்மோ’ என்று என் பேரன் கையை இழுத்தான். அவனை ஆசையுடன் தூக்கி முகர்ந்தேன். முகத்தைச் சுழித்தான். ‘ஹோர்கன்’ என்று பேர் வைத்திருந்தார்கள்; வாயில் வராத பேர்.

நாங்கள் கதைத்துக்கொண்டு நிற்கும்போதே என்மருமகள் சிட்டுப்போல ஓடிப்போய் காரை எடுத்து வந்தாள். குதித்து இறங்கி கிலோ சூட்கேசுகளை பூவைத் தூக்குவதுபோல பட்பட்டென்று ஒன்றைக் கையால் தூக்கி காரிலே வைத்தாள்.

ஸ்வென்காதான் ஓட்டினாள். அர்ஜுன் ஒரு பக்கத்தில் இருந்து என் கைகளைப் பிடித்தபடி வந்தான். மற்றப் பக்கத்தில் என் பேரன். என் கண்களில் நீர் பனித்தது. முடிந்துபோன இருபது வருடங்கள் இனி திரும்பவும் வரப் போவதில்லை.

கார் சின்னதாக அடக்கமாக இருந்தது. முற்றிலும் சூரிய சக்தியிலேயே இயங்கிய அது ‘குங்ஸ்காடன்’ பிரதான ரோட்டிலே போய்க் கொண்டிருந்தது. ஒலி நாடாவில் உலகப் புகழ்பெற்ற ‘இங்வார் கார்ல்ஸன்’ பாடிய ‘ஸ்வாலா, ஸ்வாலா’ என்னும் பாடல் பைரவி ராகத்தின் சாயலில் ஒலித்துக் கொண்டிருந்தது. பெட்ரோல், டீசல் வாகனங்கள் போய் இப்ப எவ்வளவோ காலம். சாலையின் இரு மருங்கிலும் அடர்த்தியான மரங்கள். பாதையெல்லாம் வழித்துத் துடைத்ததுபோல நல்ல துப்புரவாக இருந்தது.

நான் வியந்த இன்னொரு காட்சி வழியிலே விளம்பர போர்டுகள் ஒன்றும் இல்லாததுதான். அர்ஜுனிடம் அது பற்றி விசாரித்தேன். அரசாங்கம் விளம்பரங்களையெல்லாம் பத்து வருடங்களாக ஒழித்து விட்டதாக அவன் சொன்னான். அதனால் பொருள்கள் மக்களுக்கு இருபது வீதம் மலிவாகவே கிடைக்கிறதாம். வர்த்தகத் துறை தொடர்ந்து மஞ்சள் பக்கங்கள் மூலம் விளம்பரங்களை இலவசமாக செய்வதற்கு அரசு எல்லா வசதிகளையும் செய்து கொடுத்திருக்கிறதாம். ‘இந்தப் புத்தி ஏன் மனுசனுக்கு முன்பே தோன்றவில்லை’ என்று நான் நினைத்துக் கொண்டேன்.

வீடு வந்து சேர்ந்தோம். வீடும் மரச்கோலைகளினூடே ஆடம்பரமின்றி அடக்கமாக இருந்தது. என் மகன் தன் இடுப்பிலிருந்த ‘ஐ.டீ. பெல்ட்டிலிருந்து’ ஒரு மெல்லிய நீளமான பிளாஸ்டிக் குச்சியை இழுத்தான். கதவிடுக்கில் அதை உரசி கதவைத் திறந்து கொண்டான்.

நான் வந்து சேர்ந்த உடனேயே அர்ஜுன் செய்த முதல் காரியம் என் சார்பாக ஒரு ஐ.டீ.பெல்ட்டுக்கு விண்ணப்பம் செய்ததுதான். இதுதான் இங்கே எனக்கு அதிசயத்திலும் அதிசயம். இது பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன்; படித்துமிருக்கிறேன். ஆனால் நேரில் பார்த்தபோதுதான் அதன் உண்மையான தாக்கம் புரிந்தது. கர்ணனின் கவசகுண்டலம் போல இந்த ஐ.டீ. பெல்ட்டை எல்லோரும் கட்டியபடியே திரிவார்கள், படுக்கும் நேரம் தவிர. ஐந்து வயதுக் குழந்தையிலிருந்து அறுபது வயதுக் கிழவர் வரை இதைக் கட்டாமல் ஒருவரும் வெளிக்கிடுவதில்லை.

இங்கே காசு, கிரெடிட் கார்ட் எல்லாம் முற்றாக ஒழிந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. காசையோ, கிரெடிட் கார்டையோ கண்டால் அதை ஆவலுடன் வாங்கித் தொட்டு தொட்டு பார்க்கிறார்கள். ‘எங்கள் நாட்டில் எதற்கும் நாங்கள் கிரெடிட் கார்ட்தான் பாலிக்கிறோம்’ என்று சொன்னால் நம்ப மறுக்கிறார்கள். ஒரு மனித உயிர் பிறந்தவுடனேயே அதன் டீ.என்.ஏயையும், கைரேகையையும் ராட்சஸ கம்ப்யூட்டர்களில் பதிந்து ஒரு ஐ.டீ.நம்பர் கொடுத்துவிடுவார்கள். அதன்பிறகு அந்த மனிதன் இறக்கும்வரை அவனைப் பற்றிய சகல விபரங்களும் அந்த நம்பரில் பதிவாகி விடும்.

என்னுடைய அடையாள அட்டை வந்தபோதுதான் நான் அதன் மகாத்மியத்தை உணர்ந்தேன். எங்கே போனாலும் என் அடையாளத்தை நிரூபிக்க இதைக் கொடுத்தால் போதும். அவர்கள் அதை கம்ப்யூட்டர் முனையில் சொருகினால் என்னுடைய சாதகம் பூராவும் தெரிந்துவிடும். வீட்டுக் கதவு, அலுவலகக் கதவு, கார்க் கதவு இப்படி எந்தக் கதவு திறப்பதற்கும் இதை ப்ரோகிராம் பண்ணி வைத்துக் கொள்ளலாம். ஒருவர் கார்டை இன்னொருவர் பாவிக்க முடியாது; கைரேகை காட்டி கொடுத்துவிடும். ஆனால் இதனுடைய முக்கியமான தாக்கம் என்னவென்றால் இது வந்தபிறகு அநேகமான வங்கிகளை இழுத்து மூட வேண்டி வந்ததுதான்.

பாதைக் கடையிலே ஒரு ‘புல்புல்’ ஐஸ் கிரீம் வாங்கினாலும் சரி, இரண்டு மாடிக் கட்டிடம் வாங்கினாலும் சரி உங்கள் அட்டையை கம்ப்யூட்டர் முனையில் சொருக வேண்டியதுதான். உங்கள் கணக்கிலிருந்து அவர்கள் கணக்குக்கு பணம் மாறிவிடும். வங்கிகள் அனேகமாக வெளிநாட்டினருக்கும், வணிகத்துக்கும் மட்டுமே பயன்பட்டன. தவணைமுறையில் பணம் கட்டுவதற்குக்கூட ஒருமுறை ஆணை கொடுத்து விட்டால் போதும் மாதாமாதம் பணம் மாறியபடியே இருக்கும்.

இதைவிட இன்னும் இரண்டு விசேஷங்கள் இந்த அடையாள பெல்ட்டில் இருந்தன. எந்தக் காடு, மலை, மேட்டிலிருந்தும் டெலிபோன் பண்ணவும், கிடைக்கவும் வசதி இருக்கிறது. ஒரு முனையில் முணு முணுத்தாலே போதும். மறுபக்கத்தில் துல்லியமாகக் கேட்டுவிடும். உலகின் எந்த மூலை முடுக்கிலிருந்தும் தொடர்பு கொள்ளலாம். அடுத்த விசேஷம், இந்தக் கார்டை வைத்து ஒருவர் தன் இருப்பிடத்தை கனகச்சிதமாக சட்டிலைட் மூலம் கணித்துவிடலாம். ஒரு ஐந்து வயதுக் குழந்தையை ஸ்வீடனில் கண்காணாத ஒரு பகுதியில் கொண்டு போய் விட்டாலும் அது இந்தக் கார்டை வைத்து வீடு தேடி வந்துவிடம். இங்கேயெல்லாம் தொலைந்து போவது என்பது மிகவும் கஷ்டமான காரியம். ட்யூசன் வைத்தால்கூட முடியாது.

இப்பொழுது எங்களுடையதும் முன்னேறிய நாடுதான். ஆனால் இவர்களைப் பார்த்தால் நாங்கள் இன்னும் இருபது வருடம் பின்தங்கிவிட்டது போலத்தான் எனக்குப் பட்டது. கண்ணால் பார்ப்பதெல்லாமே புதினமாக இருந்தது. சடுதியாக இந்தச் சூழ்நிலையை என்னால் சரிக்கட்ட முடியவில்லை. என் மகன் என்னுடைய வசதியில் மிகுந்த அக்கறையோடுதான் இருந்தான். இருந்தாலும் சின்னச் சின்ன விஷயங்கள்கூட என்னைத் தடுமாற வைத்தன.

இவர்களுடைய ஆதாரசக்தி சூரியன்தான். ஒரு வீட்டிலே பிடிக்கும் சூரியசக்தி அந்த வீட்டிற்கு போதுமானதாக இருக்கிறது. தண்­ர் போதியது இருந்தாலும் சுழல் பாவிப்பு முறைதான்; மீதமான நீர் தோட்டத்துக்கு போய்விடும். சொட்டு நீர்முறையில் புல்லும், பூச்செடிகளும், மரங்களும் செழிப்பாக இருக்கின்றன. இருந்தாலும் எனக்கு ஒரே தண்ணியை திருப்பித் திருப்பி குடிக்கிறோம் என்று தெரிந்ததும் முதலில் கொஞ்சம் அருவருப்பாகத்தான் இருந்தது.

என்னை உண்மையில் திடுக்கிட வைத்த விஷயம் குளிக்கும் முறைதான். ‘கதிற்றோன்’ கதிர் அலைகளில் குளிப்பது எனக்கு சங்கடமாக இருந்தது. என்ன இருந்தாலும் நிறையத் தண்­ரில் சோசோவென்று குளிர்ந்து, நனைந்து, சோப் போட்டு குளிப்பதுபோல வருமா? இது குளித்ததுபோலவே இருக்காது. என் பேரன் சொல்கிறான் கதிரியக்கத்தில் குளிப்பது எங்களுக்கு மிகவும் நல்லதாம்; பக்டீரியாக் கிருமிகள் உடனுக்குடன் செத்துவிடுகின்றன; சருமம் புது ஊட்டச் சக்தி பெறுகிறது; தண்­ரும் மிச்சப்படுகிறதாம். ஆனால் குளித்தது போலவே இல்லையே?

மற்றது, சாப்பாட்டு முறைகள். சமையல் அடுப்பென்பதே கிடையாதே. எல்லாம் கதிரியக்கத்தில் சமைத்ததுதான். அதுவும் கம்ப்யூட்டரில் முதலிலேயே ப்ரோகிராம் பண்ணியபடி. சாப்பாடு சப்பென்றிருக்கிறது. ஆனால் எல்லாம் அளவுடன் செய்த சத்துள்ள உணவாம். ஆசைக்கு ஒரு கோப்பி கூடப் போட வழியில்லை. அதுவும் கம்ப்யூட்டர் போட்டதுதான். ஒருமுறை, நல்ல பாலும் சீனியும் போட்டு இஞ்சி கலந்த கடுங்கோப்பியொன்று குடிக்க ஆசையாக இருந்தது. கம்ப்யூட்டரை திருப்பித் திருப்பி நாலைந்து தடவை ப்ரோகிராம் பண்ணிப் பார்த்தேன்; சரிவரவில்லை. அலுத்துப் போய் அப்படியே விட்டுவிட்டேன்.

இது எல்லாத்துக்கும் ஈடுகட்டுவதுபோல என் பேரன் இருந்தான். அவன் முகத்தை பார்த்துக் கொண்டே இருக்கலாம். ஆசை தீராது, சின்ன வயதில் என் மகன் இருந்ததுபோல அச்சாக இருப்பான். வந்த நாளில் இருந்தே என்னோடு ஒட்டிவிட்டான். எப்பவும் அவனுக்கு ஏதாவது கதை சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்.

“மொர்மோ, மொர்மோ! சொல்லு மொர்மோ” என்றான் ஒருநாள் என் பேரன். “ஹோர்கன்” என்ற அவன் பேரை நான் எவ்வளவு முயற்சி செய்து சரியாக உச்சரித்தாலும் சிரித்துவிடுவான். ஆனபடியால் இனிமேல் நான் அவனை ‘சொக்கன்’ என்றே கூப்பிடுவதாக ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டோம். அவனும் சம்மதித்தான். இவன் எனக்கு சொக்குப் பொடி போட்டுவிட்டதால் சொக்கன் பொருத்தமாகத்தான் இருந்தது.

அவனுடைய கண்களும் என் மகனுடையது போலவே அகன்று இருக்கும். தலைமயிர் தாயினுடையதைப்போல் தங்க நிறம். அவனுடைய சருமம் கடைந்தெடுத்த வெண்ணெய் என்பார்களே அப்படி இருக்கும். பார்க்கும்போதெல்லாம் வாரிக் கொஞ்ச வேண்டும்போல ஆசை தூண்டும். ஆனால் இடம் கொடுக்க மாட்டான். லஞ்சம் கொடுத்தால்தான் உண்டு.

இங்கே பள்ளிகள் வாரத்திற்க ஒரு முறைதான். மற்ற நேரங்களில் கம்ப்யூட்டர் மூலமாக பாடங்களை படித்து விடுவார்கள். கம்ப்யூட்டர் மூலமாகவே ஆசிரியரும் தொடர்பு கொண்டு வீட்டுப் பாடங்களை கொடுப்பார். லெமிங் என்ற மிருகம் பற்றி ஒரு ப்ரொஜெக்ட் எழுதவேணும் என்றான் சொக்கன். என்னிடம் அதுபற்றி சொல்லும்படி தொந்தரவு செய்து கொண்டேயிருந்தான். “நீ கம்ப்யூட்டரைப் பார், பிறகு புத்தகத்தை படி. அதற்குப் பிறகு நான் சொல்லித் தருகிறேன்” என்றேன். “இல்லை, மெர்மோ! நீ சொல். கதைபோல சொல்; நான் பிறகு எழுதுகிறேன். ப்ளீஸ்” என்றான், கண்களை அகல மருட்டி, இதற்கு மறுப்பு சொல்ல என் இதயம் இடம் கொடுக்குமா?

“லெமிங் ஒரு அப்பாவிப் பிராணி. ஸ்வீடன் நோர்வே போன்ற நாடுகளில் மிகுந்து காணப்படும். ஐந்து அங்குல நீளம்தான் இருக்கும். கட்டைக்கால், உருண்டையான தலை, சாம்பல் நிறம், இப்படியாக பார்ப்பதற்கு ‘ஐயோ’ என்று இருக்கும். புல், பூண்டு, தாவரம் எல்லாம் சாப்பிடும். எவ்வளவு குட்டிகள் போடும், தெரியுமோ? ஒரு வருடத்திற்கு பத்து குட்டிகள் வரை ஈனும்.

“ஆனால், பாவம் அவைக்கு பெரிய சோதனை. மூன்று நாலுவருடங்களில் அவைகளுடைய பெருக்கம் நாடு தாங்காது. சாப்பாடு போதாமல் போய்விடும். அப்ப அவையெல்லாம் கூட்டம் கூட்டமாகச் சேர்ந்துபோய் அப்படியே கடலில் மூஷ்கிச் செத்துப்போகும்.”

“ஐயோ, பாவம்! மொர்மோ, எல்லாம் செத்துப் போகுமா?” என்றான் ஹோர்கன். அவன் கண்கள் இப்ப கொஞ்சம் கலங்கி விட்டன.

“கடலுக்குப் போன எல்லாம் செத்துப் போகும். மிஞ்சியிருக்கிறவை மறுபடியும் பெருக ஆரம்பிக்கும். நாலு வருடங்களில் பழையபடி நாடு தாங்காது. அப்படியே அவையும் போய் கடலில் விழுந்து விடும். இப்படியே இது தொடரும்.”

சொக்கன் கொஞ்சநேரம் யோசித்தபடியே இருந்தான். நான் கதையை மாற்ற எண்ணி சொன்னேன். “எங்கள் ஊரில் பெரும் புலவர் ஒருத்தர் இருந்தார். அவருக்கு லெமிங் என்றால் உயிர். அவர் அதைப் பற்றி பாடி இருக்கிறார். நீ அதை எழுதினால் ப்ரொஜெக்டில் உனக்குத்தான் அதிக மதிப்பெண் கிடைக்கும்” என்றேன்.

ஆர்வத்தோடு “சீக்கிரம் சொல், மொர்மோ” என்றான்.

சீ ஓ, என் லெமிங்குகளே, ஆயிரக் கணக்கில் கூட்டம் சேர்த்து
குதித்துக் குதித்து எங்கே செல்கிறீர்கள்?
வைத்த சாமானை எடுக்க போவதுபோல் வழிமேல் குறிவைத்து
ஓடுகிறீர்களே, ஏன்?
போகும் வழியில் உள்ள புல், பூண்டு தாவரம் எல்லாம்
வதம் செய்து விரைகிறீர்களே என்ன அவசரம்?
அரைநொடியும் ஆறாமல் வயல்வெளி தாண்டி
ஆற்றையும், குளத்தையும் நீந்திக் கடந்து
ஓடிக் கொண்டிருக்கிறீர்களே கொஞ்சம்
உங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ளக் கூடாதா?
கடலை நீங்கள் அடைந்ததும் கால்கள் துவள
நீந்தி நீந்தி மாய்ந்துகொள்ளப் போகிறீர்களே!
வரும் சந்ததிகளுக்கு வழிவிடும் தியாகிகளே!
சற்று நில்லுங்கள் உங்கள் முகங்களை நான்
இன்னொரு முறை பார்த்துக் கொள்கிறேன், நினைவில் வைக்க.

சொக்கன் யோசித்தபடியே இருந்தான். அவனுடைய சிறிய வதனம் வாடிவிட்டது.

“மொர்மோ, ஏன் இந்த லெமிங்குகள் இப்படி சாக வேணும்?”

“இவை அபூர்வமான பிராணிகள். தங்கள் சந்ததிகளுக்கு வழிவிட தங்களையே அழித்துக் கொள்ளுகின்றன. எவ்வளவு தியாக மனப்பான்மை?”

“மொர்மோ, வேறு மிருகங்கள் அல்லது பறவைகள் இப்படி இருக்கா?

“எனக்கு தெரிந்த மட்டில் மிருகம் கிடையாது. ஆனால் கிரேக்க புராணங்களில் ஒரு கற்பனைப் பறவை உண்டு; பெயர் பீஃனிக்ஸ். அரேபியாவின் பாலைவனங்களில் இது காணப்படும். ஒரே ஒரு பறவைதான்; இதற்கு துணையும் இல்லை; முட்டையும் இல்லை. ஐந்நூறு வருடங்கள் வரை ஜ“விக்கும். அதற்குப் பிறகு தானே சுள்ளிகள் பொறுக்கி அடுக்கி சூரிய வெப்பத்தில் பற்ற வைத்து அந்த சிதையில் விழுந்து தன்னை மாய்த்து சாம்பலாகிவிடும். அதற்கு பிறகு அந்த சாம்பலில் இருந்து இன்னொரு பீஃனிக்ஸ் பறவை தோன்றி இன்னொரு ஐந்நூறு வருடங்கள் வாழுமாம்.”

“என்ன மொர்மோ, எல்லாம் இப்படி செத்துப் போகிற கதை சொல்கிறாய்!” என்று அலுத்துக் கொண்டான்.

“என் குட்டிப் பேரனே, பிறக்கும் உயிர்கள் எல்லாம் ஒரு நாளைக்கு இறக்கத்தானே வேண்டும். அதுவும் இந்த உயிர்கள் எவ்வளவு உயர்ந்தவை. இவை தங்கள் சந்ததி வளர்வதற்காக தங்களையே மாய்த்துக் கொள்கின்றன. பழசு போனால்தான் புதியது வரும்.”

என் பேரன் கொஞ்ச நேரம் முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டிருந்தான். பிறகு “ஹால் காவ்ரன்! நீ பழசு, போ” என்று சொல்லி என் கன்னத்தில் தன் சின்னக் கையால் இடித்துவிட்டு ஓடிப் போனான்.

நான் சொன்ன கதையின் உண்மையை சோதிக்கும் படியான ஒரு திடுக்கிடும் சம்பவம் சீக்கிரத்திலேயே நடந்தது. உலகிலேயே மிகவும் முன்னேறிய நாடு ஸ்வீடன். அமெரிக்காவும், ஜப்பானும்கூட சில விஷயங்களில் பத்து வருடங்கள் பின் தங்கி விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அதற்கு கருணை மரணம் (Euthansia) ஒரு உதாரணம். ஆற்றொணாக் கொடுநோயினால் துன்புறுபவர்களும், தீராதவியாதி வந்தவர்களும், கருணை மரணத்துக்கு விண்ணப்பிக்க ஸ்வீடனில் சலுகை உண்டு. அது எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆனால் உலகத்திலே எங்கும் காணாத ஒரு ஆச்சரியமான வழக்கம் கடந்த சில வருடங்களாக அரசாங்கத்தின் முழு ஆதரவோடும் இங்கே நடந்து கொண்டிருந்தது.

எனக்கு இந்த நாடு பிடித்துவிட்டது. என்ன மாதிரி சுற்றுச்சூழலை பேணிகிறார்கள்? எப்படி துரிதமாக விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளை தங்கள் மேம்பாட்டுக்கு பயன்படுத்துகிறார்கள்? ஆனாலும், சில விஷயங்களை என்னால் ஜ“ரணிக்க முடியவில்லையே! பக்கத்து வீட்டிலே ஒரு பிறந்த தின கொண்டாட்டம் நடந்தது. முதன்முறையாக எனக்கும் சேர்த்து ஒரு அழைப்பு வந்திருந்தது. அது என்ன மாதிரி கொண்டடாட்டமென்று யாராவது முன்பே எனக்கு எச்சரிக்கைசெய்திருக்கலாம். அப்படியானால் நான் போவதைத் தவிர்த்து இருப்பேன்.

ஹென்னிங்ஸன் அவருடைய பெயர். எழுபது வயதுக் கிழவர். அவருக்குத்தான் பிறந்த தினம். இருபதுபேர் மட்டில் வந்திருந்தார்கள். பெரிய கேக்கில் ஏழு மெழுகுவர்த்திகள் கொழுத்தி வைக்கப்பட்டிருந்தன. எல்லோரும் பாட்டுப் பாடி, வழக்கம்போல கேக் வெட்டி சாப்பிட்டு, அதற்குப் பிறகு அதிவிசேஷமான சாம்பெய்ன் மது அருந்தி வெண்ணெய் கட்டியும் சாப்பிட்டோம். பிற்பாடு ஹென்னிங்ஸன் ஒரு சிற்றுரை ஆற்றினார். அதில் தான் எழுபது ஆண்டுப்பிராயம் அடைந்து விட்டதாகவும், பூரண ஆரோக்கியத்துடன் நிறைந்த வாழ்வு வாழ்ந்ததாகவும், இனிமேல் கருணை மரணத்தை தழுவ முடிவு செய்ததாகவும் சொன்னார். எல்லோரும் எழுந்து நின்று கைதட்டி தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தார்கள். ஒருவர் கண்களிலும் நீரில்லை. அவருடைய சொந்தப்பிள்ளைகள்கூடகவலைப்பட்டதாகத் தெரியவில்லை. எனக்கு அந்தக் காட்சி மனசைப் பிழிந்தது.

வழக்கமாக வந்த விருந்தினர்தான் பரிசுகள் தருவது வழக்கம் இங்கே பிரியாவிடை முகமாக கிழவர்தான் பரிசுகள் கொடுத்தார். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று பரிசளித்தார். முன்பின் தெரியாத எனக்குக்கூட மூன்றாம் குஸ்ராவ் மன்னர் காலத்திய நாணம் ஒன்றை தந்தார். குஸ்ராவ் மன்னர் பில்லாத நாயணம் அது என்று பின்னால் தெரிந்து கொண்டேன். விருந்தின் முடிவில் இரண்டு டாக்டர் தயாராக இருந்த ஒரு வாகனத்தில் ஏற்றிச் சென்றார்கள்.

அன்றிரவு எனக்கு தூக்கம் வரவில்லை. முழு ஆரோக்கியத்துடனும், புத்தி சுவாதீனத்துடனும் உள்ள ஒருவர் இப்படிப்பட்ட முடிவு எடுப்பது சரிதானா? அரசு கூட இதை ஆதரிக்கிறதே! அரசாங்கத்தின் வாதமோ ஆணித்தரமாக இருந்தது. ஸ்வீடனில் இப்போது சராசரி வயது ஐம்பதுக்கு மேல் போய்விட்டது. இளைஞர் சமுதாயம் வெகுவாக குறைந்துவிட்டது. ஆனபடியால் அரசு எழுபது வயதிற்க மேற்பட்டவர்கள் இப்படி விண்ணப்பம் செய்வதை வரவேற்கிறது. ஒருவர் இறந்தவுடன் அவருடைய எண் கம்புயூட்டரிலிருந்து நீக்கப்படுகிறது. உடனே அந்த இடத்தை ஒரு புதிதாகப் பிறக்கும் குழந்தை நிரப்பிவிடுகிறது. ஹென்னிங்ஸன் ஒரு விஞ்ஞானி. அவர் கண்டுபிடித்த சித்தாந்தங்கள் இன்றும் பாடப்புத்தகங்களில் இருக்கிறதாம். அவர் சாகவேண்டி அப்படி என்ன அவசியம்? எனக்கு இது மிகவும் அநியாயமாகபட்டது. எங்கள் இதிகாசங்களில் பிராயோபவேசம் என்று சொல்லியிருக்கிறது. பாரதப்போர் முடிவில் வில்லுக்கு அதிபதியான விதுரன் என்ன செய்தார்? காட்டிலேபோய் தர்ப்பைமீது படுத்து பிராயோபவேசம் செய்துகொண்டார். ஏன், சந்திர வம்சத்து மன்னர் யயாதி செய்தது என்ன? எவ்வளவு சுகம் அனுபவித்தாலும் யயாதிக்கு போதவில்லை. கெஞ்சிக்கூத்தாடி மகனிடம் இளமையை கடன் வாங்கிக் கொண்டார். இன்னொரு மூச்சு அனுபவிக்க வேண்டும் என்று ஆசை. பிறகு ஒரு ஆயிரம் வருடங்கள் அனுபவித்தார். அப்படியும் போதவில்லையாம். கடைசியிலே எல்லாவற்றையும் துறந்து காட்டிற்கு போய் உயிரைவிட்டார்.

இரவு இரண்டு மணி. வெளியே பார்த்தேன். சூரியனுடைய கதிர்கள் கீழ்வானத்தில் பரவிக் கிடந்தன. அப்படியே உறங்கி விட்டேன். இந்த சம்பவம் பெரிய தாக்கத்தை என்னுள் ஏற்படுத்தி விட்டது. ஆனால் மகனோ, என் மருமகள் ஸ்வென்காவோ இதை பெரிதுபடுத்தவில்லை. என் மருமகள் போல ஒரு பெண் இந்த உலகத்தில் கிடைப்பது அபூர்வம். எப்பவும் அவளுக்கு சிரித்தபடியிருக்கும் கண்கள். ஆனால் சில சில்லறை விஷயங்கள்தான் எனக்குப் பிடிபடுவதில்லை. சொக்கன் பதியென்று ஓடிவந்து சாப்பாடு கேட்பான். ஸ்வென்கா கம்புயூட்டர் நம்பரை மட்டுமே சொல்லுவாள். பாவம், அவனே செய்து சாப்பிட வேண்டுமாம். தங்கள் வேலைகளை தாங்களே செய்யவேண்டும் என்பதில் மிகவும் பிடிவாதமாக இருந்தாள்.

மூன்று நாள் சென்று ஹென்னிங்ஸனுடைய சாம்பலை ஒரு மரப்பேழையில் வைத்து கொண்டு வந்து பக்கத்து வீட்டில் கொடுத்தார்கள். அதை தோட்டத்திலே ஒரு நல்ல இடமாகப் பார்த்து அவர்கள் புதைத்து அதன் மேல் ஒரு ‘பேர்ச்’ செடியையும் நட்டார்கள். வில்லியம் கிறிஸ்ரர் ஹென்னிங்ஸன் என்ற விஞ்ஞானி தானாகவே ‘பேர்ச்’ செடிக்கு உரமாகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.

எங்களுடைய வீட்டைப்பற்றி நான் ஒன்றுமே சொல்லவில்லை. ஸ்வீடனில் தொண்ணூறு வீதம் வீடுகள் எங்கள் வீட்டைப்போலவே இருக்கின்றன. நடுவீட்டில் வரவேற்பறையும், சமையல், சாப்பாட்டு அறைகளும், ஜிம் (தேகப்பியாசம்) அறையும் இருக்கும். மேலே படுக்கை, குளியல் அறைகள். எல்லோருக்கும் கம்புயூட்டர் மூலமாகவே நடைபெறும்.

ஸ்வென்கா முகம் சுழித்தோ, மனம்வருந்தி அழுதோ நான் கண்டது கிடையாது. முன்பே கூறியபடி அவளுக்கு எப்பவும் மலர்ந்த முகம்தான். தற்செயலாக அவள் ஒருமுறை அழுததை நான் பார்க்க நேரிட்டது. எனக்கு அடிவயிற்றை என்னவோ செய்தது.

ஒருநாள் வழக்கம் போல மூன்றுபேரும் கீழேயுள்ள ஜிம்மில் எரோபிக்ஸ் ஒரு மணித்தியாலம்வரை செய்துவிட்டு வந்தார்கள். மரக்காலணிகளுடன் அவர்கள் நடந்து வந்தபோது. ‘டக், டக்’ என்று வடிவாகத்தான் இருந்தது. என் மகனைப் பார்த்தேன். என்ன அழகாக இருக்கிறான். அந்தக் கண்களுடைய ஒளி என்ன சுபாவமாக வீசுகிறது. ஸ்வென்கா ‘லியோரார்ட்’ உடுப்பில் உயராமாக தோன்றினாள். என் கண்ணே பட்டுவிடும் போல இருந்தது. சிறுதுளி வியர்வை பிரகாசிக்க அப்ஸரஸ் போலத்தான் வந்தாள். அவளுக்கு ஆறுவயதுப் பையன் இருப்பதாகச் சொன்னால் யாராவது நம்புவார்களா? கனநீர் பற்றி ஆராய்ச்சி செய்கிறாளே என்று எண்ணுவேன்.

இவளுடைய இடை என்ன இப்படி இருக்கிறது. பதினேழு வயசுப் பெண்போல? ஒரு நாள் நான் கேட்டுவிட்டேன். அவள் சிரித்துவிட்டு சொன்னதைக் கேட்ட நான்தான் அதிர்ச்சியடைந்தேன். அர்ஜுன்கூட எனக்கு இதுவரை இதைப்பற்றி சொல்லவில்லையே!

என் மகனுக்கு 29 வயது நடக்கும்போது இவர்கள் மணம்செய்து கொண்டார்கள். முதலில் என்னமாதிரி குழந்தைவேணும் என்று தீர்மானித்துக் கொண்டார்களாம். இவள் தங்கநிறத் தலைமயில் வேண்டும் என்றாள்; அர்ஜுனோ பெரிய நீலக்கண்கள் கொண்ட ஒரு ஆண்மகவு என்றானாம். கருவங்கியிலே போய் தங்கள் கருக்களைக் கொடுத்தார்கள். அவர்கள் லபோரட்டரியில் கருக்களை இணைத்து கம்புயூட்டர் மூலம் கணித்து சிசு எதிர்காலத்தில் எப்படி பரிமளிக்கும் என்று கூறிவிடுவார்கள். இவர்கள் போய் சிசுக்களைக் காட்டினார்களாம். நோய், நொடி இல்லாத ஆரோக்கியமான நிலையில் தங்கத்தலைமயிரும், நீலக்கண்களும் கொண்ட ஒரு ஆண்சிசுவை இவர்கள் தெரிவு செய்தார்களாம்.

அதற்கு பிறகு இரண்டு மாதம் சிசு லபோரட்டரியிலேயே வளர்ந்தது. பிறகுதான் சங்கடம். செவிலித்தாயைத் தேட வேண்டும். ரஸ்யாவில் இருந்து ஏழைப்பட்டாளம் இதற்காகவே வருவார்கள். ஒரு பிள்ளையை ஐந்து மாதம் வரை சுமப்பதற்கு சுவை கூலி கேட்பார்கள். ஐந்துமாத முடிவில் பிள்ளையை சிசேரியன் முறையில் வெளியே கொண்டு வந்துவிடுவார்கள். பிறகும் இன்னொரு இரண்டு மாதம் குழந்தை சூட்டுப் பேழையில் வளரும். அதற்குப் பிறகுதான் குழந்தையை கையிலே தூக்கி கொடுப்பார்கள். அப்படித்தான் ஹோர்கன் பிறந்ததாக அவள் கூறினாள்.

“அப்ப, நீ பெறவே இல்லையா?” என்று கேட்டேன், அதிர்ந்துபோய்.

“ஹோர்கன் உங்கள் மகனுடைய கருவும், என்னுடைய கருவும் சேர்ந்து உண்டான பிள்ளை. முழுக்க முழுக்க எங்கள் பிள்ளை; ரஸ்யாக்காரி வெறும் சுவை கூலிக்காரிதான். அவளுக்கு நாங்கள் ஒப்பந்தப்படி ஐந்து மாதங்களுக்கு 20000 யூரோடொலர் கொடுத்தோம். அவளுக்கு இது பெரிய காசு; இரண்டு வருடத்திற்கு போதுமானது” என்றாள். ஸ்வென்காவின் உடம்பின் லாவண்யம் எனக்கு அப்போதுதான் முற்றிலும் புரிந்தது.

அன்று ஜிம்மிலிருந்து வந்து கம்புயூட்டரில் அன்றைய முக்கிய செய்திகளைப் படித்தாள். இங்கே பத்திரிகைகள் வீட்டுக்கு வருவது கிடையாது. சந்தா கட்டிவிட்டால் வேண்டிய செய்திகளை வீட்டிலேயே பார்த்துக் கொள்ளலாம். எவ்வளவு பேப்பர் மீதமாகிறது?

அடுத்து, கம்புயூட்டரில் வந்த ஈமெயில் கடிதங்களை படித்துவிட்டு திடீரென்று அழத் தொடங்கிவிட்டாள். அர்ஜுன் ஓடிவந்தான். அவனும் பார்த்துவிட்டு திகைத்துப்போய் சிறிது நேரம் நின்றான். பிறகு ஸ்வென்காவைத் தேற்றினான். அவளுடைய அழுகை அடக்க முடியாமல் நீண்டுகொண்டே போனது.

விஷயம் இதுதான். இவர்கள் இரண்டாவது பிள்ளை பெறுவதற்கு போட்ட மனுவை அரசாங்கம் நிராகரித்துவிட்டது. அது ஒரு பெண் குழந்தையாம்; உயரம் ஐந்து அடி எட்டு அங்குலம். கறுப்பு தலை மயிரும், கபிலநிறக் கண்களுமாக இருக்குமாம். கரு உற்பத்தியான நாளிலிருந்து மூன்று வருடமாகிவிட்டதாம். “எப்போ இவர்கள் அனுமதி தரப்போகிறார்கள்? இது என்ன அநியாயம்! என் சிநேகிதிகள் எல்லோருக்கும் கிடைத்துவிட்டதே! எனக்கு மட்டும் ஏன் இப்படி? இதைக் கேட்பாரில்லையா?” என்று விம்மி விம்மி அழுதாள்.

அர்ஜுன் அவளைத் தேற்றி எல்லாவற்றையும் விளக்கினாள். கம்புயூட்டரில் அவர்கள் விண்ணப்பம் இருக்கிறது. ஒவ்வொரு பிறப்பும், இறப்பும் அங்கே பதிவாகிறது. கம்புயூட்டர் இவற்றை கணக்குப் பண்ணிக்கொண்டே வரும், அவர்கள் முறை வந்ததும் அனுமதி தானாகவே கிடைத்துவிடுமென்று ஆறுதல் கூறினான். எனக்கு ஸ்வென்காவை பார்க்கப் பாவமாக இருந்தது. அவளுடைய நெஞ்சுக்குள் இப்படியான ஒரு தீராக கவலை இருக்கும் விஷயம் எனக்கு அன்றுவரை தெரியாது.

இது நடந்து பிறகு ஒரு குளிர் காலத்தையும் நான் முற்றிலும் பார்த்துவிட்டேன். குளிர் காலத்தையும் நான் முற்றிலும் பார்த்துவிட்டேன். குளிர்காலத்தை நினைத்து மிகவும் பயந்துகொண்டே இருந்தேன். ஆனால் தப்பிவிட்டேன். வீட்டை சூரிய சக்தியை பயன்படுத்தி தகுந்த வெப்பநிலையில் வைத்திருந்தார்கள். அத்துடன், நான் இப்பவெல்லாம் ஏரோபிக்ஸ”ம் செய்ய பழகிக்கொண்டேன். என்னுடைய குரு வேறு யார்? சொக்கன்தான். நல்ல ஆரோக்கியமக இருக்க முடிகிறது. சுவாமிக்கும் காற்று மிகவும் சுத்தம். காற்றுச் சூழலைப் பேணுவதற்கு அதிக முக்யத்வம் கொடுக்கிறார்கள். இயற்கையோடு ஒட்டிய வாழ்க்கை. எனக்கு சந்தோஷமாக இருந்தது.

ஒருநாள் கம்புயூட்டரில் எனக்கு ஒரு செய்திவந்தது. நான் ஆச்சரியப்பட்டு விட்டேன். அதுதான் எனக்கு முதன்முறை அப்படிச் செய்தி வருவது. விட்டமின் ‘டீ’ சத்துக் காணாது என்றும், புரதச்சத்தைக் குறைக்கும்படியுந்தான் செய்தி. எனக்கு வியப்புத் தாங்கவில்லை. என் மகன்தான் விளக்கினான். “கம்புயூட்டர், நாங்கள் சாப்பிடுவதைக் கணித்தபடியே இருக்கிறது. அத்துடன் மாதா மாதம் எங்கள் இரத்தம், சிறுநீர், இரத்த அமுக்கம், இதயத்துடிப்பு முதலிய கணிப்புகளை கம்புயூட்டரில் பதிவு செய்து கொண்டே வருகிறோமல்லவா? இவற்றையெல்லாம் கம்புயூட்டர் கிரகித்து அப்பப்போ நோய் வருவதைத் தடுக்க குறிப்புகள் கொடுத்த வண்ணமே இருக்கும். இங்கேயெல்லாம் வருமுன் தடுப்பதில் அரசாங்கம் மிகவும் எச்சரிக்கையாக செயல்படுகிறது” என்றான்.

ஒருமுறை அர்ஜுன், ஸ்வென்காவையும், என்னையும் கருவங்கிக்கு கூட்டிச் சென்றான். அங்கே சேமித்து வைத்த இவர்களுடைய ‘கருநிலை சிசுக்களை’ கம்புயூட்டரில் போட்டுப் பார்க்க அனுமதிகிடைத்தது. எல்லாமாக பதினேழு பெண் கருக்கள் தயார் நிலையில் இருந்தன. ஸ்வென்கா, தான் தெரிவு செய்த பெண் குழந்தைக்கு ‘காமாட்சி’ என்ற பேரைப் பதிவு செய்திருந்தாள். அது என்னுடைய தாயாருடைய பெயர். என் மனம் நெகிழ்ந்தது. அந்தப் பதினேழு குழந்தைகளிலும் காமாட்சிதான் கண்ணைப் பறிக்கும் அழகியாக இருந்தாள். இருபத்தொரு வயது வரைக்கும் கம்புயூட்டரில் அவளுடைய பரிணாம வளர்ச்சியை அவதானித்துக் கொண்டே வந்தோம். விதவிதமன தலை அலங்காரம் செய்து, வெவ்வேறு உடைகளில் அவளைக் கண் குளிரப் பார்த்தோம். டென்னிஸ் போன்ற விளையாட்டுகளில் அவள் வீராங்கனையாக விளங்குவாளாம்; மனிதவியல் போன்ற பாடங்களில் அவளுக்கு இயற்கையான திறமை இருக்குமாம். அப்படியே கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்தோம். ஸ்வென்காவின் கண்களில் நீர்த் துளி. எனக்கே அழுகையாக வந்தது.

அப்போது ஸ்வென்கா ஒரு செய்தி சொன்னாள். இப்போதெல்லாம் செவிலித் தாய்மார் மிகவும் மலிவாகக் கிடைக்கிறார்களாம். ரஸ்யா, லட்டின் அமெரிக்கா, அரபு நாடுகளில் இருந்தெல்லாம் பெண்கள் வந்து குவிந்தபடியே இருக்கிறார்கள். சூரியசக்தியின் உபயோகம் உலகத்தில் வேகமாகப் பரவி விட்டதால் அரபு நாடுகளில் எண்ணெய் விலை போகாமல் வறுமை பீடித்து விட்டதாம். அங்கேயெல்லாம் செவிலிப் பெண்களுக்கு பஞ்சமில்லை; ஸ்வீடன் அரசாங்கத்தின் அனுமதியில்தான் பஞ்சமாம்.

அப்ப என் மகன் இன்னொரு ஆச்சரியமான தகவலையும் சொன்னான். ஸ்விடனில் அநேகமாக எல்லோரும் செவிலித் தாய் முறையைத்தான் கையாளுகிறார்கள். குழந்தைகளையும் சிசேரியன் முறையில்தான் பிறக்க வைக்கிறார்கள். இதுதான் தாய்க்கும் சேய்க்கும் சிறந்த முறை என்று கருதப்படுகிறது. இப்பொழுது அமெரிக்க, ஜப்பான் போன்ற இடங்களில் இருந்துகூட சில பெண்கள் வருகிறார்கள். ஒப்பந்தம் இல்லாமல் இலவசமாகவே பிள்ளையைச் சுமக்க அவர்கள் சம்மதிக்கிறார்களாம். ஆனால், பிள்ளை இயற்கை முறையில்தான் பிறக்க வேண்டுமாம்; சிசேரியன் ஆகாதாம். அவர்களக்கு பிள்ளை பெறும் அனுபவத்தை உண்மையிலேயே அனுபவிக்க ஆசை. ஓர் அமெரிக்க பெண்மணி தான் நிஜமாகவே பிள்ளை பெற்ற அனுபவத்தை புத்தகமாக எழுதி நிறையப் பணம் சம்பாதித்து விட்டாளாம்.

“இந்தியா, சீனா, ஸ்ரீலங்கா போன்ற இடங்களிலிருந்து செவிலித் தாய்மார் கிடைக்க மாட்டார்களா?” என்று கேட்டேன், நான்.

“அவையெல்லாம் முன்னேறிய நாடுகள். அங்கேயிருந்தெல்லாம் மலிவாகக் கிடைக்க மாட்டார்கள்,” என்றான் அர்ஜுன்.

நாங்கள் திரும்பி வரும்போது நான் இதே யோசனையாக இருந்தேன். நான் என் மகனை வயிற்றிலே பத்து மாதம் சுமந்ததை நினைத்துப் பார்த்தேன். அப்போது எனக்கு வயது முப்பது. மணமுடித்து ஐந்து வருடங்கள். கணக்கில்லாத விரதங்கள் அநுஷ்டித்து, தவமிருந்து 1983ம் ஆண்டு ஆடி மாதக் கலவரத்தில் அவனைப் பெற்றேன். அது எவ்வளவு கஷ்டமான காலம்! தெஹ’வளை ஆஸ்பத்திரியில் என்மகன் பிறந்த இரண்டாவது நாளே கலவரம் தொடங்கிவிட்டது. அந்த வார்டில் நான் ஒருத்தி மாத்திரமே தமிழ். பயந்து நடுங்கிக் கொண்டு இருந்தேன். மூன்றாம் நாள் இரவு நர்ஸ்மார் என்னைச் சுட்டிக்காட்டி எதோ பேசிக் கொண்டிருந்தார். எனக்குப் பயம் பிடித்துவிட்டது. அன்று இரவே ஒருவருக்கும் தெரியாமல் பிள்ளையையும் எடுத்துக்கொண்டு ஓடிவிட்டேன். இன்று கூட அதை நினைக்கும்போது எனக்கு குலை நடுங்கும். அன்று அதை எப்படிச் செய்தேனோ தெரியாது?

பத்து மாதம் சுமப்பது என்பது கதையாகி விட்டது. இப்போது ஐந்து மாதம் என்று ஆகிவிட்டது. விஞ்ஞானிகள் இன்னும் தொடர்ந்து வேலை செய்கிறார்கள். இந்த ஐந்து மாதம்கூட மேலும் சுருங்கி மூன்று மாதம்கூட ஆகலாம்; ஒரு வேளை ஒரேயடியாக பிள்ளைப் பேறே தேவையில்லாமல் போகலாம். விஞ்ஞானம் போகிற போக்கில் என்ன நடக்கும் என்று யாரால் கூற முடியும்?

கார் பல வெறுமையான கட்டிடங்களை தாண்டி போய்க் கொண்டிருந்தது. புதிதாகக் கட்டிடங்கள் கட்டுவது எப்பவோ நின்றுபோன ஒரு காரியம். ஆக, செப்பனிடும் வேலைகள்தான் இப்பவெல்லாம் செய்கிறார்கள். பழைய கட்டிடங்களை என்ன செய்வது என்று அரசாங்கம் இன்னும் முடிவு எடுக்கவில்லை. முந்தின வங்கிக் கட்டிடங்கள், பள்ளிக்கூடங்கள், அலுவலகங்கள் எல்லாம் சீந்துவாரின்றிக் கிடந்தன. ஆஸ்பத்திரிகள்கூட குறைந்து விட்டனவாம். எல்லோரும் வீட்டிலிருந்தே அலுவலக வேலைகளைப் பார்க்கிறார்கள்; வாரத்தில் ஒரு முறைதான் போய் வருகிறார்கள்.

வங்கிகள் பத்திலே ஒன்பது மூடிவிட்டன. காலியான கட்டிடங்களை சமுதாய நலச் சங்கங்களுக்க விட்டுவிட்டார்கள். அனாதைகளே கிடையாது, ஆனபடியால் அனாதை ஆச்சிரமங்களும் இல்லை. முன்பு போல கூன், குருடு, செவிடாகவும் ஒருத்தரும் பிறப்பதில்லை; ஜனத்தொகையும் கூடப் போவதில்லை. ஒரே வழி, கட்டிடங்களையெல்லாம் இடித்துப் பூங்காக்களாக மாற்றுவதுதான்; அதுதான் அரசாங்கம் இது பற்றி தீவிரமாக சிந்தித்து கொண்டு வருகிறதாம். மனிதன் முன்னேற, முன்னேற பிரச்சினைகளும் புதிதாகத் தோன்றிய வண்ணம் இருக்கின்றன.

ஸ்வென்கா இயற்கையிலேயே ஒரு குதூகலமான பெண். ஆனபடியால் பெண் குழந்தை இல்லாத குறையைப் பெரிது படுத்தி எப்பவும் மனதைப்போட்டு வருத்திக் கொள்பவல்ல. இருந்தாலும் சில வேளைகளில் இந்த சோகம் அவளை மிகவும் பாரத்துடன் தாக்கும். அந்த சமயங்களில் ஸ்வென்கா சிறிது ஆடிவிடுவாள். மற்றும்படி தன்னுடைய ஆராய்ச்சியிலும், குடும்பத்தை பராமரிப்பதிலுமே கவனமாக இருந்தாள்.

ஆனாலும் ஸ்வென்கா தன் போராட்டத்தை தளர்த்தவில்லை; தன்னுடைய விண்ணப்பத்தைப் பற்றி அரசாங்கத்துக்கு திருப்பித் திருப்பி நினைவூட்டிக் கொண்டே இருந்தாள். ஆறு வருடங்களாக தன் கோரிக்கை கவனிப்பாரற்று கிடப்பதை வெகு தயவாக பத்து வயது நிரம்பி விட்டது. நாங்கள் எல்லோரும் முற்றிலும் நம்பிக்கை இழந்து விட்டோம்; ஆனால் ஸ்வென்கா அயரவில்லை. அப்பொழுதுதான் ஸ்வென்காவுக்கு மாத்திரமல்ல, இன்னும் எத்தனையோ இளம் தம்பதியருக்கும் விமோசனம் அளிக்கும் வகையில் ஒரு புதிய சட்டம் பிறந்தது.

சட்டம் இதுதான்; எழுபது வயதுக்கு மேலான ஒருவர் கருணை மரணத்தை தழுவுவாராயின் அவர் தன்னால் ஏற்படும் காலி ஸ்தானத்தை தனக்கு நெருங்கிய ரத்த உறவுள்ள ஒருவருக்கு அளிக்கலாம், அவ்வளவுதான். இந்தச் செய்தி அறிக்கையை தொலைக்காட்சியில் திருப்பித் திருப்பிக் காட்டினார்கள். இளம் தம்பதியரும், இளையதலைமுறையினரும் கூட்டம் கூட்டமாக நின்று இந்தச் சட்டத்தை வரவேற்று கொண்டாடினார்கள். சில பார்களிலே இலவச சாம்பெய்ன் வழங்கி குடித்து இரவு முழுக்க ஆடி மகிழ்ந்தார்கள். இந்தச் சட்டம் இவ்வளவு பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று அரசாங்கம் கூட எதிர்பார்க்கவில்லை.

இது நடந்த வருடம் 2022. இந்த வருடத்தில் இன்னொரு முக்கியமான சம்பவம் நிகழ்ந்தது. இருநூறு வருடங்களாகத் தொடர்ந்த முடியாட்சி ஒழிந்து கிறிஸ்டீனா ராணி முடி துறந்ததும் இந்த வருடம்தான். சில வாரங்களில் என்னுடைய பிறந்தநாள் வந்தது. நான் இப்பவெல்லாம் சொக்கனுடன் கொஞ்சம் கொஞ்சமாக ஸ்வீடிஷ் மொழியில் பேசக்கற்றுக் கொண்டேன். அவன் ‘ஹால் காவ்ரன்’ என்றால் நானும் திருப்பி ‘ஹால் காவ்ரன்’ என்று சொல்லி விடுவேன். எங்களுக்குள் எவ்வளவோ ரகஸ்யங்கள். என் மகன் சிறுவயதில் எப்படி இருந்தானோ அப்படியே இவனும் அச்சாக இருந்தான். சொக்கன்தான் சொன்னான், இன்றைக்கு எனக்கு ‘பெரிய விருந்து’ என்று. நான்தான் முட்டாள்போல அதை முற்றிலும் கிரகிக்க தவறி விட்டேன்.

அன்று இரவு எங்கள் வீட்டில் ஓர் இருபது பேர் மட்டில் கூடிவிட்டார்கள். பெரிய வட்டமான கேக். ஏழு மெழுகுவர்த்திகள் அதை அலங்கரித்தன; ரிப்பன் கட்டியபடி பக்கத்திலே ஒரு கத்தி. நான் என்னிடம் இருந்த சேலைகளில் மிகவும் உயர்ந்ததைக் கட்டிக் கொண்டேன். கண்ணாடியில் பார்த்தேன், எழுபது வயதுபோல் தோற்றமே இல்லை. எனக்கு என் கணவருடைய ஞாபகம் வந்து கண் கலங்கியது.

நான் அறைக்குள் காலடி வைத்ததும் எல்லோரும் எழுந்து நின்று கைதட்டி ஆரவாரித்து என்னை வரவேற்றார்கள். கேக்கை வெட்டினேன். விருந்தினர்கள் ஒவ்வொரு துண்டு எடுத்துக் கொண்டார்கள். அதன் பிறகு சாம்பெய்னும், வெண்ணெய்க் கட்டியும் பரிமாறப்பட்டது.

அப்பொழுதுதான் என் மகனுடைய கண்களைப் பார்த்தேன். அந்தக் கண்களின் ஆழத்தை என்னால் என்றும் காணவே முடியாது. சிறுபிள்ளையாக மடியில் கிடத்தி அவன் கண்களையே நான் பார்த்துக் கொண்டிருந்தது எனக்கு ஞாபகத்துக்கு வந்தது. என் அன்பு மகனே, உன் கண்கள் என்ன சொல்கின்றன? என் கால்கள் துவண்டன.

என் சிற்றுரையை வழங்க நான் விருந்தினர்களை நோக்கி மெதுவாக நடந்தேன்

– 1995, வம்ச விருத்தி, மித்ரா வெளியீடு, முதல் பதிப்பு 1996

நன்றி: http://www.projectmadurai.org

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *