பிள்ளையார் சுழி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 2, 2020
பார்வையிட்டோர்: 4,105 
 

(இதற்கு முந்தைய ‘சமையல் அறை’ கதையைப் படித்தபின், இதைப் படித்தால் புரிதல் எளிது)

எழுத்தாளர் லக்ஷ்மியின் படைப்பான ‘நாயக்கர் மக்களை’ ஏற்றுக்கொண்ட மதுரம் சித்தி, அகிலனின் ‘பாவை விளக்கு’ நாவலை ஏற்கவில்லை.

அந்த நாவலில் படரவிடப் பட்டிருந்த பொய்மை, உண்மையில் ஒரு மானசீகக் கசடு என்பதாக சித்தியின் மூளையால் கண்டுகொள்ள முடியவில்லை. ஆனால் அவரின் உள்ளம் அதைத் தெரிந்து கொண்டது. சித்தி வசுமதி ராமசாமியை மிகவும் சிலாகித்தார்; ஆனால் சரோஜா ராமமூர்த்தியை எழுதத் தெரியவில்லை என்றார்.

ஷேக்ஸ்பியரின் ஒதெல்லோவையும், ஹேம்லேட்டையும் நான் என் அப்பா மாதிரியே நடித்துக் காட்டி சித்திக்கு விவரித்துச் சொல்லிக் கொண்டிருந்தேன். ஒதெல்லோ சித்தியின் மனதைப் பாதித்தது. சார்லஸ் டிக்கன்ஸின் பால்ய கால வறுமையை, எனக்கு நேர்ந்த வறுமை மாதிரி சொல்லிக் கொண்டிருந்த என் சொற்கள் சித்தியை நெகிழச் செய்தது.

இந்தத் தடங்களில் சென்று கொண்டிருந்த மதுரம் சித்தியோட என் உறவு தவிர்க்க முடியாத நிறுத்தத்திற்கு உள்ளாக வேண்டி வந்தது.

ஆம். நான் விருப்பப்பட்ட மாதிரி பெங்களூர் வாழ்க்கைக்கு இடம் பெயரும் அதிர்ஷ்டம் எனக்குக் கிடைத்தது. மதுரம் சித்திக்கு இது உள்ளூர துயரத்தைத் தந்தது எனக்குத் தெரியத்தான் செய்தது. ஆனால் என்னை பெங்களூர் வாழ்க்கைக்கு மாற்றிக் கொள்வதில் எனக்குள் சில வலுவான காரணங்களும், திட்டங்களும் இருந்தன.

பெங்களூர் செல்லும்முன் சித்தியிடம் விடை பெற்றுக்கொள்ள அவர்களின் வீட்டிற்குப் போயிருந்தேன். “இந்தச் சித்தியை மறந்துடாத… முடிஞ்சா அப்பப்ப லெட்டர் போடு” என்று சுருக்கமாகக் கூறி சித்தி விடை கொடுத்தார்.

நான் பெங்களூருக்கு ரயில் ஏறினேன்.

குறிப்பிட்ட சில சமூகத்தினர் மட்டுமே பெரும்பான்மையாகப் புழங்கிக் கொண்டிருந்த திருநெல்வேலி என்ற சின்ன கொட்டடியில் இருந்து, ஜாதி மத சுவர்களுக்குள் அடங்காத விண் வெளியாய் விரிந்து கிடந்த பெங்களூர் மண்ணில் சில அந்தரங்க வரை படங்களுடன் கால் பதித்தேன்.

எனக்கான ஆக்ஸிஜன் பெங்களூர் மண்ணில் ஏராளமாக நிறைந்திருந்தது. அந்த ஆக்ஸிஜனை நெஞ்சு விரிய சுவாசித்துக்கொண்டு அந்த மண்ணிலேயே வேர் பரப்பி வளரலாம் என்று ஆசையுடன் நினைத்தால் – விதி என்னை அப்படி விடவில்லை.

ஓங்கி உதைக்கப்பட்ட கால் பந்தாக மீண்டும் நான் திருநெல்வேலி என்ற கொட்டடியில் வந்து விழுந்தேன். (பின்னாளில் நான் அதே பெங்களூரில் கால் ஊன்றிக்கொண்டு கோலோச்சியது தனிக்கதை).

பெங்களூர் போன முகல் சில வாரங்களுக்கு நான் மதுரம் சித்திக்கு இரண்டொரு கடிதங்கள் எழுதினேன். அதன்பின் எழுதவில்லை. ஏனென்றால் நான் எழுதிய அந்தக் கடிதங்களுக்கு சித்தி எனக்குப் பதில் போடவில்லை. சித்தி பதில் போடமாட்டார் என்பது எனக்குத் தெரியும். அத்தனை சுதந்திரம் அவருக்கு சிவராமன் சித்தப்பாவிடம் இருந்து கிடைப்பது சாத்தியக் குறைவானது.

திரும்பி வந்த சில நாட்களில் மதுரம் சித்தியைப் பார்க்க சிறிய குற்ற உணர்ச்சியுடன் போனேன். வீராப்பாக பெங்களூர் போகிறேன் என்று போனவன் திரும்பி வந்தது எனக்கு சோர்வையே அளித்தது. எனினும் மீண்டும் எங்களுடைய சந்திப்பும் பேச்சும் அந்தச் சமையல் அறையில் அதே பெஞ்சில் தொடங்கிவிட்டது. இதில் குறிப்பிட்டுச் சொல்லும் படியான வித்தியாசம் என்னவென்றால், என்னுடைய தோற்றம்.

பெங்களூர் செல்வதற்கு முன், நான் சிறு பையன் போல் இருந்தேன். அங்கிருந்து திரும்பி வந்தபோது புதிதாகக் கல்யாணம் ஆகி புதுப் பெண்டாட்டியுடன் குடித்தனம் பண்ணிக் கொண்டிருக்கும் புது மாப்பிள்ளை மாதிரி என் தோற்றமே பளபளவென பாலீஷ் போட்டாற்போல மாறி விட்டிருந்தது. ஒருவேளை கர்நாடகாவின் காவித் தண்ணீரோ என்னவோ! உடலின் உயரமும் விருட்டென உயர்ந்திருந்தது.

மதுரம் சித்தி என்னைப் பார்த்ததும் கொஞ்சம் ஆச்சர்யப் பட்டுத்தான் போனார். கொஞ்சம் தயங்கிவிட்டுச் சொன்னார், “பெங்களூர்ல நீ இருக்கிறதப் பத்தி இங்க ஊர்ல ஒரு மாதிரியா பேச்சு வந்திச்சி…” இதற்கு நான் சித்திக்கு பதில் சொல்லவில்லை. சித்தியும் என்னிடமிருந்து பதிலை எதிர் பார்க்கவில்லை.

சில ஆரம்பத் தயக்கங்களுக்குப் பின், எங்கள் இருவரின் பேச்சு சகஜமான நிலைக்கு வந்துவிட்டது. நான் பெங்களூரில் இருந்த நாட்களில் என் அப்பாவின் வாசிப்புகளிலும், மதுரம் சித்தியின் வாசிப்புகளிலும் சிறிது அதிர்வுகளும் பதட்டங்களும் ஏற்பட்டிருந்தன.

அதற்குக் காரணம், ஆனந்த விகடனில் அப்போது வரத் தொடங்கி இருந்த ஜெயகாந்தனின் கதைகள். அந்தக் கால கட்டத்தில், தமிழ்நாட்டு வாசகர்களின் மத்தியிலேயே ஜெயகாந்தனின் கதைகள் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருந்தன. அவரது கதைகள் குறித்த வாதங்களும் பிரதி வாதங்களும் நடைபெற்ற வண்ணம் இருந்தன.

தமிழக கம்யூனிஸ்ட் கட்சி பெரும் கொண்டாட்டத்தில் திளைத்துக் கொண்டிருந்தது. அவர்களின் கட்சிப் பாசறையில் இருந்து ஊர் புகழும் ஒரு எழுத்தாளன் உருவாகி இருந்தான். அதே எழுத்தாளன் பின்னாட்களில் ‘ஜெயஜெய சங்கர’ என்று வேறொரு மடத்திற்கு குடி பெயர்ந்து விட்டது வேறு கதை.

அடித்தட்டு மக்களின் அன்றாட வாழ்க்கையின் சில மூலைகளையும், நிலைகளையும் பற்றி ஜெயகாந்தன் பணக்காரத் தோரணையில் எழுதிக் கொண்டிருந்தார். பணக்கார தோரணைகளுக்கு எப்போதுமே பிரமையான வலிமை உண்டு. அந்த வலிமையான பிரமைக்கு தமிழ்நாட்டின் வாசக தளம் ஆட்பட்டிருந்தது. மதுரம் சித்தியும் அதற்கு விதி விலக்கு இல்லை. ‘நாமும் கதை எழுதிப் பார்த்தால் என்ன?’ என சித்தியை ஜெயகாந்தனின் எழுத்துக்களைப் பற்றிய பிரமை யோசனை செய்ய வைத்து விட்டது.

சமையல் அறையின் சுவரில் தொங்கவிடப் பட்டிருந்த மாதக் காலண்டரில் கிழிக்கப்பட்ட நீள ஷீட்களை இரண்டாக மடித்து வைத்துக்கொண்டு, அதன் பின் பக்கம் சித்தி கதை எழுதிப் பார்க்க ஆரம்பித்து விட்டார்.

அப்படி எழுதி எழுதிப் பார்த்த முடிவு பெறாத அரைகுறையான சிறு கதைகள் சித்தியின் சமையல் அலமாரியில் நிறையவே சேர்ந்து கொண்டிருந்தன. அவற்றை எல்லாம் சித்தி அவ்வப்போது எனக்குப் படிக்கத் தந்தார். நானும் ரொம்ப ஆசையுடன் அந்தக் கதைகளைப் படித்துப் பார்த்தேன். சித்தியின் எழுத்துக்கள் எனக்கு எந்த பிரமிப்பையும் தந்து விடவில்லை.

ஆனால் ஒருவித நெகிழ்ச்சியையும் உவகையையும் கொடுத்திருந்தன. சித்தி அடுத்த கட்டத்திற்கு வந்திருக்கிறார் என்பது எனக்கு நன்றாகவே புரிந்தது. தமிழில் வாசிப்பிற்கான பிள்ளையார் சுழியை ‘தமிழக ஜெயகாந்தன் பிரமை’ எனக்குள் போட்டுவிட்டது. அதனால் இந்தக் கட்டம் எனக்கும் குறிப்பிடும் படியானது.

“படிச்சிப் பாரேன், படிச்சிப் பாரேன்” என்று மதுரம் சித்தி என்னை வற்புறுத்திக் கொண்டே இருந்ததில் நான் ஜெயகாந்தனை சித்திக்காக படிக்கத் தொடங்கினேன்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *